ஜடாயு தர்சனம்; பஞ்சவடீ வாசம்

jatayu_with_ram_sita_at_panchevati
126. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் உத்தரவின்படி பஞ்சவடிக்கு வருகிறார். வழியில் ஜடாயு என்ற கழுகு அரசர் அவர்களை பார்த்து “நான் உன் தந்தை தசரதரின் நண்பன். இங்கு உங்களுக்கு அருகில் இருந்துகொண்டு முடிந்த உதவிகளைச் செய்கிறேன். சீதை தனியாக இருக்கும்போது அவளை பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறுகிறார். ராமரும் மகிழ்ந்து அவரோடு பேசிவிட்டு, பஞ்சவடீ வந்து சேருகிறார். லக்ஷ்மணன், ராமர் காட்டிய இடத்தில் ஒரு அழகான பர்ணசாலை கட்டுகிறான். வாஸ்து சாந்தி செய்தபின் அங்கு குடிபுகுந்து மூவரும் ஜடாயுவின் துணையோடு சுகமாய் வசித்தார்கள்.
[ஜடாயு தர்சனம்; பஞ்சவடி வாசம்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள்

24-gurus-of-shree-dattatreya

ஸ்ரீமத்பாகவதத்தின்  உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள்

மஹாபெரியவாளைப் பத்தி எல்லாரும் அவா, அவா அனுபவங்களை பகிர்ந்துக்கும் போது, நமக்கு இந்த மாதிரி ஒரு பாக்கியம் கிடைக்கலையே,  ஒரு பொள்ளாச்சி ஜெயம் பாட்டி மாதிரியோ, ஒரு தியாகுத் தாத்தா மாதிரியோ, நாம மஹாபெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணி, அவாளோட நெருங்கியிருந்து, அவாளை அனுபவிக்கலையே அப்டீன்னு, ரொம்ப குறையா வர்றது. ஆனா அதுக்கு என்ன பண்றது? 

அதுக்கு நான் ஒரு சமாதானம் சொல்றேன். ஸ்ரீமத் பாகவதத்துல, 11வது ஸ்கந்தத்துல உத்தவ கீதைன்னு ஒண்ணு வர்றது. கிருஷ்ண பரமாத்மா 125 வருஷம் இந்த பூமியில தர்ம சம்ஸ்தாபனம் பண்ணிட்டு, வைகுண்டத்துக்குப் போகப் போறார். அப்போ உத்தவர் போய் நமஸ்காரம் பண்ணி, சரணாகதி பண்ணி, எனக்குப் புரியற மாதிரி உபதேசம் பண்ணுங்கோ, அப்டீன்னு கேட்கறார். அந்த உத்தவருக்குக் கிருஷ்ணர் பண்ண உபதேசங்கள் உத்தவ கீதைன்னு சொல்றா. அதுக்கு தனியான ஒரு ஏத்தம்.

இந்த மாதிரி நாம எல்லாம், நம்முடைய சின்ன வயசுல, மஹாபெரியவா, சிவன்சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் எல்லாம் பழுத்த பழமா இருக்கும்போது, அவா பண்ண உபதேசங்கள கேட்டு இருக்கோம். அது நம்ம காதுல விழுந்திருக்கு. அதுக்கு உத்தவ கீதை மாதிரி ஒரு தனி ஏத்தம், அப்டீன்னு சமாதானப் படுத்திபோம்.

இன்னொன்னு, நாம எல்லாம் பெரியவா கிட்ட நெருங்கிப் பழகி இருந்தாக்கூட, ஒரு கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் மாதிரியோ, இல்ல மேட்டூர் ஸ்வாமிகள் மாதிரியோ பணிவா கைங்கர்யம் பண்ணியிருப்போமான்னு தெரியல. நம்ம அம்மா அப்பாக்கிட்ட எப்படி நடந்துக்கறோம்? அப்படி அவாளோடப் பெருமையைப் புரிஞ்சா நடந்துக்கறோம்? பெரியவா கிட்ட அபசாரம் கூடப் பண்ணியிருக்கலாம், அது இல்லாம பொழச்சுதேன்னு ஒரு சமாதானம் பண்ணிக்கலாம்.

அந்த உத்தவ கீதைல, முதல்ல கிருஷ்ணர்  உத்தவர்கிட்ட, சொல்றார். எங்களுடைய பூர்வீகர்கள், கூடஸ்த்தர்களான, யது மகாராஜா, தத்தாத்ரேய மகா யோகிக் கிட்ட, “நீங்கள் பேரானந்தத்துல இருக்கேளே, அதோட ரஹஸ்யம் என்ன?” அப்டீன்னு கேட்ட போது, தத்தாத்ரேய மஹா யோகி, 24 குருமார்களப் பத்தி சொல்றா, அப்டீன்னு அந்த 24 குருக்கள் னு ஒரு விஷயம் வர்றது. இதை ஸ்வாமிகள், ரொம்ப அழகா சொல்வார்.

இந்த 11வது ஸ்கந்தம் முழுக்க, சன்யாசிகள் கேட்கணும்னு சொல்லி, மஹாபெரியவா ஸ்வாமிகள் கிட்ட பிரவசனம் கேட்கும்போது, இந்த 11வது ஸ்கந்தம் வரும்போது, மத்த சன்யாசிகள் எல்லாரையும் வரச் சொல்லு, என்று சொல்வாராம். அவ்வளவு அது விசேஷம்.

யது மகாராஜன், தத்தாத்ரேய மஹா யோகியப் பார்க்கும்போது நமஸ்காரம் பண்ணிக் கேட்கறான். “நீங்க பலிஷ்டரா இருக்கேள், healthyஆ இருக்கேள். ரொம்ப புத்திமானாவும் இருக்கேள். ஆனா ஒரு கார்யம் பண்றது இல்ல. ஆனா நீங்க எங்களை மாதிரியெல்லாம் இந்த சம்சார தாபத்துல தவிக்காம பேரானந்தத்துல இருக்கேள். ஒரு காட்டுத்தீயில எல்லா மிருகங்களும் அவஸ்தை படும்போது, ஒரு யானை மட்டும் தப்பிச்சுப் போய் கங்கையோட ஒரு மடுவுல, ஜலத்துகுள்ள இருந்தா எவ்வளவு ஆனந்தமா இருக்குமோ, அந்த மாதிரி நீங்க இருக்கேள். துக்கக் கலப்பில்லாத ஆனந்தத்துல இருக்கேள். அது எப்படீன்னு எங்களுக்குச் சொல்லிக் கொடுங்கோ”, அப்டீன்னு கேட்கறார்.

இந்த துக்கக் கலப்பிலாத ஆனந்தம், அப்டீங்கிறது, அந்த வார்த்தைய சொல்லும்போது,

“ததானோ மந்தாரஸ்தபக பரிபாடீம் நகருசா

வஹன்தீப்தா: சோ’ணாங்குலிபடல சாம்பேயகலிகாம் |

அசோகோல்லாஸம் ந:ப்ரசுரயது காமாக்ஷி சரண:

விகாஸீ வாஸந்த: ஸமய இவ தே ச’ர்வதயிதே ||

அப்டீன்னு மூகபஞ்சசதி பாதாரவிந்த சதகத்துல, 66வது ஸ்லோகம் ஞாபகம் வரது.

அம்மா, உன்னோட பாதத்தில் நக காந்தி மந்தாரப் புஷ்பம் போல இருக்கு, விரல்கள் சம்பகப் புஷ்பம் போல செக்கச்செவேல்னு இருக்கு. இதெல்லாம் பார்த்தால் பாதம்கிற வசந்த ருது வந்த உடனே இந்த மலர்கள் எல்லாம் மலர்ந்துடுத்துன்னு தெரியறது. அசோகோல்லாசம், உன் பாதமாகிய வசந்த ருது, அசோகப் புஷ்பங்களையும் மலரச் செய்யட்டும், அப்டீன்னு ஒரு அர்த்தம். அசோகோல்லாசம் அப்டீங்கிறத்துக்கு, சோகமே இல்லாத துக்கக் கலப்பில்லாத ஆனந்தம், என் மனசுல, உன்னுடைய பாதம் துக்கக் கலப்பில்லாத ஆனந்தத்தை தரட்டும், அப்டீன்னு அர்த்தம். இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார், “துக்கக் கலப்பில்லாத ஆனந்தம்கறது, ஞானம் ஏற்பட்டாதான் கிடைக்கும். அந்த மாதிரி அம்பாளுடைய சரணத் தியானம் ஞானத்தை கொடுக்கும்னு கவி இவ்வளவு அழகா சொல்றார்” அப்டீம்பார்.

அந்த தத்தாத்ரேய மஹா யோகி “எனக்கு ஞானம் இருக்கு, அதனால்தான் நான் ஆனந்தத்துல இருக்கேன்”, அப்டீன்னு சொல்லலை. அவர் சொல்றார், “எனக்கு 24 குருமார்கள். அவாகிட்டயிருந்து நான் படிப்பினை தெரிஞ்சுண்டேன்”, அப்டீன்னு சொல்றார். அந்த மாதிரி உலகத்துல பார்த்த இடத்துல இருந்தெல்லாம் ஒரு படிப்பினை தெரிஞ்சுகணும்னாலே, எவ்வளவு பணிவு வேணும்! அந்த humilityங்கிறதே, ego இல்லாம ஒவ்வொண்ணுத்துல இருந்தும் ஒண்ணு தெரிஞ்சிக்கணும்கிற அந்த குணமே, பாதி ஆத்ம ஞானம்.

மஹாபெரியவா ஒருவாட்டி காசிக்குப் போயிருந்தபோது, பண்டிதர்கள் சில பேர் வந்து, “உங்களை என்ன ஜகத்குருங்கிறாளே, நாங்க எல்லாம் உங்களை குருன்னு நினைக்கலையே எப்படி நீங்க ஜகத்குருவா இருக்க முடியும்?” அப்டீன்னு கேட்கறா. பெரியவா “இல்லை இல்லை, நீங்க தப்பா புரிஞ்சுண்டு இருக்கேள், நான் ஜகத்துக்கே குரு கிடையாது. இந்த ஜகத்தே எனக்கு குரு. இங்க பாருங்கோ ஒரு குருவிக் கூடு இருக்கு. அந்த குருவிக்கு ஒரு கிரியா சக்தி இருக்கு. இவ்வளவு அழகா ஒரு கூடு கட்டறது. இந்த மாதிரி நம்மால பண்ணமுடியுமோ? குருவி கிட்டேர்ந்து அத கத்துண்டேன். இப்படி எல்லாத்துகிட்டருந்தும் நான் விஷயங்கள் கத்துக்கறேன். அதுனால இந்த ஜகத் எனக்கு குரு”, அப்டீன்னு சொல்றா, அவா நமஸ்காரம் பண்ணி “மன்னிச்சுடுங்கோ, உங்களோட பெருமை  தெரியாம கர்வமா பேசிட்டோம், நீங்கதான் ஜகத்குரு” அப்டீன்னு சொல்லிட்டுப் போறா. அப்படி எல்லாத்துலருந்தும் ஒண்ணு தெரிஞ்சுக்கலாம்ங்கிறதை சொன்ன உடனே, மஹாபெரியவாதான் ஞாபகம் வர்றது. இந்த தத்தாத்ரேய மஹா யோகியும் அந்த மாதிரி சொல்றார்.

 1. அந்த இருபத்து நாலுல முதல்ல என்னனா பூமி. “ஜனனி ப்ரித்வி, காமதுக்ஸ்தே, ஜனகோ தேவஹ சகல தயாளோ” அப்டீன்னு மைத்ரீம் பஜத ல பெரியவா சொல்லியிருக்கார் இல்லையா, அந்த ஜனனி, பூமி தேவி, பூமித்தாய். பூமியை வெட்டறோம், குண்டு வெச்சு வெடிக்கறோம், என்னென்னவோ பாடு படுத்தறோம், ஆனா பூமி எல்லாத்தையும் பொறுத்துண்டு, நமக்கு தானியங்களையும், மரங்களையும், இன்னும் தங்கம், வெள்ளிங்கிற எல்லா செல்வங்களையும், கொடுக்கறா. அப்பேற்பட்ட அந்த குணத்தை பூமிகிட்டயிருந்து கத்துக்கணும். கஷ்டத்தை பொறுத்துக்கணும், நம்மள கஷ்டப் படுத்தறவாளுக்கும் நாம நன்மை செய்யணும்.இத கேட்கும்போது எனக்கு தியாகு தாத்தா ஒண்ணு சொல்வார். அது ஞாபகம் வர்றது. சின்ன வயசுல பெரியவா ஆட்கொண்டு அழைச்சுண்டு போயி அவரை பதினைஞ்சு வருஷம்  தன்கிட்ட service பண்ண வெச்சு, அப்புறம் நீ கிரஹதாச்ரமதுல போகணும், அதுனால வேலைக்கு போ அப்டீன்னு அனுப்பிடறார். இப்படி நெருங்கி பழகி, பெரியவாளோட பக்தி, வைராக்கியம் எல்லாம் தெரிஞ்சவர் அவர். அவர் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் கழிச்சு, பெரியவாகிட்ட வரும்போது பெரியவா, அவருடைய மனைவிகிட்ட தனியா பிரசாதம் கொடுக்கறா. இது,  இவருக்கு ஏதோ மாறுபாடா மனசுல பட்டு கோபம் வந்துடுத்து. எல்லா சன்யாசிகளும் இப்படிதான், அப்டீன்னு feel பண்ணி, அவர்  பஸ் ஸ்டாப் போகும்போது, திட்டிண்டே வரார். மனசு வேறுபாடு வந்துடுத்து, பெரியவாகிட்டயே போகல. அப்புறம் எல்லாம் சரியாகி ஒரு வருஷம் கழிச்சு இதெல்லாம் மறந்தே போயிடறது அவருக்கு. பெரியவாகிட்ட வரார், அப்போ பெரியவா சொல்றார், இவனுக்கு ஜாதகத்துல த்வீகளத்ர தோஷம் இருக்கு. அதாவது , மனைவி காலமாகி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிற தோஷம் இருக்கு. அந்த மாதிரி இவன் கஷ்டப்படக் கூடாதேங்கிறதுக்காக, நான் இவன் மனைவிக்கு ஒரு பிரசாதம் கொடுத்தேன், இவன் அவ்வளவு கோச்சுண்டுட்டான் என்கிட்டே, இங்கேயிருந்து பஸ் ஸ்டாப் போறவரைக்கும் எனக்கு சஹஸ்ரநாமம் அர்ச்சனை பண்ணியிருக்கான், அதாவது என்னை திட்டியிருக்கான், அப்டீன்னு சிரிச்சுண்டே சொல்றா பெரியவா. அப்பறம் இவர் feel பண்ணி நமஸ்காரம் பண்றார். இது முப்பத்தைஞ்சு வயசுல. அப்புறம் தொண்ணூறு வயசு வரைக்கும் பெரியவா அவருக்கு அவ்வளவு கருணை காண்பிச்சிருக்கா. இன்னொருத்தர் இந்த மாதிரி நம்மள தப்பா நினைச்சா,  நமக்கு எவ்வளவு கோபம் வரும். அத பெரியவா பொறுத்துண்டாங்கிறது இல்ல, அதுக்கப்றமும் அப்படி  அனுக்ரகம் பண்ணியிருக்கா. இந்த மாதிரி ரொம்ப பூமியாட்டம் பொறுமையா இருக்கணும்ங்கிறத தெரிஞ்சுண்டேன் அப்டீங்கிறார், தத்தாத்ரேய யோகி. இது முதல் குரு.
 1. அப்பறம் வாயு. வாயு ஒரு மல்லிகைப் பூ தோட்டத்து வழியா போனா அது மல்லிகை பூ வாசனை அடிக்கிறது, அடுத்து ரோஜா தோட்டத்து வழியா போனா ரோஜா வாசனை அடிக்கிறது, வேற துர்நாற்றம் னா அதுவும் வந்துடறது. வாயு எதுக்காகவோ கவலை படறதோ. என்னோட மல்லிகை பூ வாசனை போயிடுத்தே, அப்டீன்னு கவலை படறதோ. அந்த மாதிரி நாம எல்லாரோடையும் பழகலாம், அவாளுடைய குணங்கள் நம்ம மேல படக் கூடாது. ஒரு நாள் AC, அடுத்த நாள் கொசுக்கடி எல்லாம் பொறுத்துக்கணும். ACல பற்று வெச்சாதானே கொசுக்கடி ரொம்ப கஷ்டமா இருக்கும். அந்த மாதிரி, எதுலயும் பற்று வைக்கக் கூடாதுன்னு வாயுவ பார்த்து கத்துண்டேன். அப்டீன்னு சொல்றார்.
 2. அடுத்தது, ஆகாசம். வாயு உடம்பு மேல படறது, நாம feel பண்றோம், உள்ளுக்குள்ள மூச்சுக்காத்தா போய்ட்டு வரது. அதே மாதிரிதான் ஆகாசமும். நாம நிமிர்ந்து பார்த்தா வானத்துல தெரியறது ஆகாசம்னு நினைக்கிறோம், ஆகாசம்ங்கிறது, சர்வவியாபி. எங்கும் இருக்கு. நமக்கு உள்ளும் புறமும் இருக்கு. அதே மாதிரிதான் பகவானும். பகவான் எங்கும் நிறைஞ்சிருக்கார். ஆனா, ஆகாசங்கிறது எதுலயும் ஈஷிக்கிறது இல்ல. அந்த மாதிரி உலகத்துல எதுலயும் பற்று வைக்காம பகவத் பஜனம் பண்ணிண்டே இருக்கணும், அப்டீன்னு ஆகாசத்துக்கிட்டயிருந்து கத்துண்டேன். அப்படி பஜனம் பண்ணினா ஆகாச ரூபமாக, பிரம்ம ஸ்வரூபமா ஆயிடலாம் அப்டீன்னு ஸ்வாமிகள் சொல்றார்.
 3. அடுத்தது ஜலம். ஆத்தங்கரையில, குளத்துல எங்க ஜலத்தப் பார்த்தாலும், மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அந்த மாதிரி பாக்கறதுக்கு, பழகறதுக்கு ரொம்ப இனிமையா இருக்கணும் நாம, அப்டீன்னு கத்துண்டேன். சிலபேர் எப்ப பார்த்தாலும், கோச்சுண்டே இருப்பா, ரொம்ப வள்ளு வள்ளுன்னு விழுவா, இல்ல வருத்தப்பட்டுண்டே இருப்பா. எப்பப்பாத்தாலும் ரொம்ப moodyயா இருப்பா, அப்படி இருக்கக் கூடாது. ரொம்ப உல்லாசமா இருக்கணும், எல்லாருக்கும் சந்தோஷத்தை கொடுக்கணும். நம்மகிட்ட வந்து பேசினா பழகினா அவாளுக்கு ஆனந்தம் ஏற்படனும். இன்னொன்னு, ஜலத்தை குடிச்சா தாக சாந்தி ஏற்படறது. ஏதாவது முடிஞ்ச உபகாரம் பண்ணி அதன் மூலமா அது மூலமா மத்தவாளுக்கு தாப சாந்தி ஏற்படுத்தனும். அதே மாதிரி நம்மக்கிட்ட வந்து பழகினா, அவாளுக்கு, பகவானுடைய நாமங்களையும், மஹாபெரியவாளுடைய சரித்ரம், சிவன் சாருடைய சரித்ரம், ஸ்வாமிகளுடைய சரித்ரம், பகவானுடைய சரித்ரம் இதையெல்லாம் சொல்லி, அவாளுக்கு தாப சாந்தி ஏற்படுத்தனும், நம்மோட பழகறதுனால அவா தூய்மை அடையனும். ஜலத்தை வெச்சு குளிச்சா தூய்மை அடையற மாதிரி, அவா, நம்மோட பழகறதுனால நல்ல விஷயங்கள் தெரிஞ்சு, மனசு தூய்மை அடையும்படியா நாம நடந்துக்கணும்.
 4. அடுத்தது நெருப்பு. நெருப்பு, எதை போட்டாலும் ஜீரணம் பண்ணிடறது. அதே மாதிரி, யாராத்துல சாப்ட்டாலும், எதை சாப்ட்டாலும் ஜீரணம் பண்ற அளவுக்கு நமக்கு தபஸ் ஜாஸ்த்தியா இருக்கணும். அப்டீன்னு சொல்றது, இங்கே ஸ்வாமிகள் சொல்றார், சிவன்சார் மாதிரி, சிவன் சார் எங்க வேணா, எது வேணா சாப்டுவார். கிம்போக்தவ்யம், கிமபோக்தவ்யம் அப்டீன்னு எங்க வேணா சாப்டுவார். ஒரு எரியற தீக்குச்சியை ஈரமா இருக்கற விறகுக்கட்டை மேல போட்டா, அணைஞ்சு போயிடும். ஆனா காட்டுத்தீயில பச்சை மரமெல்லாம் கூட பஸ்மம் ஆயிடும். அந்த மாதிரி நாம பத்து காயத்ரிதான் பண்றோம்னா, இங்க சாப்பிடலாமா, அங்க சாப்பிடலாமானுதான் பாக்கணும். பரம பக்தனா இருந்துட்டா, சிவன்சார் மாதிரி, ஞானாக்னி எல்லாத்தையும் எரிச்சுடும். அப்டீன்னு சொல்றார் ஸ்வாமிகள்.
 5. அடுத்தது சந்திரன். சந்திரன் வளர்றது, தேயறது. அதுல சந்திரன் தேயறது இல்ல. அதோட பிறைகள் தானே, அதோட கலைகள் தானே தேய்ஞ்சு வளரர்து. அந்த மாதிரி இந்த உடம்பு, ஒவ்வொரு பருவத்துல, இளமை பருவத்துல, முதுமை பருவத்துல மாறறது. அதே மாதிரி ஸ்தூலமாறது, ஒல்லியாறது, குண்டாறது எல்லாம் இந்த உடம்புக்கு தானே தவிர, உள்ள இருக்கிற ஆத்மாக்கு இல்ல, அப்டீன்னு தெரிஞ்சுக்கணும் அப்டீன்னு சொல்றார். இது இந்த காலத்துல ரொம்ப முக்யமான உபதேசம்னு தோன்றது. இங்க இருக்கற இருபத்துநாலுமே சன்யாசிகளுக்கு மட்டும் இல்ல. எல்லாருக்குமே இதுல ஒரு பாடம் இருக்கு. அந்த மாதிரி இந்த காலத்துல உடம்போட பருமன், ஒல்லிய பத்தி எல்லாரும் எவ்வளவு கவலைப்படறா. உடம்பு வாகுன்னு ஒன்னு இருக்கு. இவ்வளவு கவலைப்பட வேண்டாம், அப்டீன்னு சந்திரன்கிட்டயிருந்து தெரிஞ்சுக்கலாம்.
 6. சூரிய பகவான். நிஜ சூரியன் ஆகாசத்துல இருக்கு. ஒரு டப்பு ஜலத்துல, சூரியன், பிரதிபலிக்கிறது. அந்த டப்பு ஜலத்தைக் கொட்டிட்டா இங்க இருக்கிற சூரியன் மறைஞ்சுடுமே தவிர, நிஜ சூரியனுக்கு ஏதாவது ஆபத்து உண்டோ? அந்த மாதிரி பரமாத்மா அகண்டமானவர். அவர் எல்லா ஜீவராசிகளிலும் துளிதுளியா தெரியறார். இங்க இருக்கிற எல்லா ஜீவராசிகளும் அழிஞ்சாலும் சரி, பகவான் அவ்யயம், அழியாத வஸ்து, அப்டீன்னு சூரியனை பாத்து தெரிஞ்சுக்கணும், அப்டீன்னு சொல்றார். வேற ஒரு இடத்துல இருந்து ஸ்வாமிகள் சொல்வார். சூரியன் ஜலத்தை இழுக்கறான். வேற எங்கயோ கொண்டு போயி விடறான். அந்த ஜலத்தை வந்து சூரியன் என்னோட ஜலம் அப்டீன்னு சொல்றானோ? அந்த மாதிரி நாம சம்பாதிக்கிறோம், யாரோ அத எடுத்துண்டு போயி செலவு பண்றா, யாரோ சம்பாதிக்கிறா, யாரோ செலவு பண்றா அப்டீனுட்டு அத பத்தி ரொம்ப சர்ச்சை பண்ணிண்டு சிரமப் படக் கூடாது. அப்டீன்னு சூரியன வெச்சு ஒண்ணு சொல்லுவார்.
 7. அடுத்தது, மாடப் புறா. ஆண் புறாவும் பெண் புறாவும் சேர்ந்து இரை தேடப் போச்சு, அப்டீன்னு ஒருகதை ஆரம்பிக்கிறது. இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார், இந்த காலத்து மாதிரி. Husband and wife சேர்ந்து வேலைக்குப் போறாலோல்யோ, அப்படி சொல்வார், அப்படி இரை தேடிண்டு வந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கறது, குஞ்சுகள் அதை சாப்பிட்டு, ரொம்ப சந்தோஷப் படறது. ஒரு வேடன், இந்த ரெண்டு புறாவும் இரை தேடப் போயிருந்தபோது, அந்த குஞ்சுகளை வலையிலப் பிடிச்சுடறான். பெண் புறா, இத பாத்த உடனே வருத்தப் பட்டு துக்கம் தாங்காம தானும் போயி அந்த வலையில விழுந்துடறது, என் குழந்தைகள் இல்லாம நான் என்ன பண்ணுவேன் அப்டீன்னு. ஆண் புறாவும் இதை பார்த்துட்டு என்னுடைய மனைவி, குழந்தைகள் இல்லாம நான் என்ன பண்ணுவேன், அப்டீனுட்டு அதுவும் போயி வலையில விழுந்துடறது. இந்த கதையில இருந்து என்ன தெரிஞ்சுக்கணும்? ஸ்வாமிகள் ரொம்ப அழகா ஒரு, practical உபமானம் சொல்லிபுரிய வைக்கிறார். இல்லேன்னா இது வந்து தியாகம் தானே, ஜீவ காருண்யம், இதுல என்ன தப்புன்னு நமக்குத் தோணும். ஆனா ஸ்வாமிகள் சொல்றார், இப்ப வந்து குழந்தைகள் foreign போயிடறா. அடுத்தது  மாட்டுப் பொண்ணு உண்டாயிருக்கா, இல்ல பையனுக்கு சமைக்கத் தெரியல, அப்டீன்னு சொல்லி பின்னாடியே அம்மாவும் போறா. அம்மா போன உடனே இவரும் சரின்னு, அவ பின்னாடி போயிடறார், அங்க போனா ஒரு தர்ப்பணம் உண்டா, திவசம் உண்டா. ஸ்வதர்மங்கள் ஒண்ணுமே கடைபிடிக்க முடியாம ஆத்மா வீணா போயிடறது. ஸ்வாமிகள், இந்த மாடப்புறா கதையில இருந்து இதைத் தெரிஞ்சுக்கணும், நம்ம தர்மத்தை விடாம நாம காப்பாத்தணும், அப்டீன்னு சொல்லியிருக்கார். நான் கொஞ்ச நாள் foreign போயிருந்தேன். எங்க அப்பாவைக்  கூப்பிட்டேன். எங்க அப்பா கட்டாயம் வரமாட்டேன்னுட்டார். எங்கப்பா கிளம்பலைனா எங்கம்மா கிளம்ப மாட்டா. ரெண்டு பேரும் வராம இருந்ததுனாலயே நான் திரும்பி வந்தேன். அப்படி நம்முடைய ஸ்வதர்மம் ரொம்ப முக்கியம், அப்டீங்கிறது மகான்கள் எல்லாம்  follow பண்ணியிருக்கா.
 8. அடுத்தது மலைப்பாம்பு. மலைப்பாம்பு அசையாம இருக்கும். அது நாலஞ்சு நாள் பட்டினி கிடக்கும், திடீர்னு ஒரு பெரிய மிருகம் வந்ததுனா அத சாப்டுக்கும், அத வந்து ஒருமாசம் ஜீரணம் பண்ணும். அப்படி, சாப்பாடுக்கு, உலக சுகங்களுக்கு நீ பரபரக்கவே வேண்டாம், அது வரும்போது வரும். அப்டீன்னு வைராக்கியத்தோட இருக்கணும், கிடைச்ச போது அனுபவிக்கணும், கிடைக்காதபோது அத பத்தி நினைக்கக் கூடாது. அப்டீன்னு மலைப்பாம்பு பார்த்துக் கத்துண்டேன். அப்டீன்னு சொல்றார்.
 9. அடுத்தது கடல். கடற்கரைக்குப் போனா நமக்கு என்ன கிடைக்கறது. கிளிஞ்சல் தான் கிடைக்கறது. கடலுக்கு உள்ள ரத்தினங்கள் இருக்கு. அந்த மாதிரி உலகத்துக்கு நம்ம மனசுக்குள்ள இருக்கிற ஞானவைராக்யத்த வெளிபடுத்தக் கூடாது. இவன் பெரிய சன்யாசியா அப்டீன்னு கேலி பண்ணி நல்ல வழியிலிருந்து நம்மள கெடுத்துடுவா. அதனால, ரத்தினமான நம்ம மனச வந்து அம்பாள் சரணத்துல ஒளிச்சு வைக்கணும். அத வந்து ஜனங்களுக்கு காண்பிக்கக் கூடாது. கிளிஞ்சல தான் கடல் காண்பிக்கறது. அதுமாதிரி நாம வெளியில எல்லாரைப் போலவும் இருந்துட்டுப் போயிடணும், அப்டீன்னு சொல்வார். இந்த மூகபஞ்சசதி ஆர்யா சதகத்துல
  குஸுமசர கர்வ சம்பத் கோஷக்ருஹம் பாதி காஞ்சி தேசகதம் |
  ஸ்தாபிதம் அஸ்மின் கதமபி கோபிதம் அந்தர் மயா மனோ ரத்னம் ||
  என்னோட மனோரத்தினத்தை அம்பாளோட சரணம்கிற பெட்டியில பத்திரமா வெச்சுட்டேன், அப்டீன்னு சொல்வார்.  இந்த மூகபஞ்சசதி படிக்கிறயோல்யோ அதனால மனோரத்தினம். இதை ஜாக்கிரதயா வெச்சுக்கணும். அப்டீன்னு சொல்வார்.
 1. அடுத்தது விட்டில் பூச்சி. விட்டில் பூச்சி நெருப்பை பழம்னு நினைச்சு போயி அதுல பட்டு செத்துப் போயிடும். அந்த மாதிரி கண்ணுக்குக் கவர்ச்சியான விஷயங்கள் எல்லாம் பார்த்து, பத்தினி, புத்ராள், வஸ்திரங்கள், இந்த மாதிரி attractionல போயி உயிரை விட்டுறக் கூடாது.
 2. அடுத்தது யானை. யானைக்கு வந்து தொடற உணர்ச்சி ரொம்ப ஜாஸ்தி போல இருக்கு. அதுல வந்து அதுக்கு ஆசை ஜாஸ்தியா இருக்கறதுனால, ஒரு பெண் யானையை இந்த பக்கம் நிறுத்தி, அந்த பக்கம் காட்டுல இருக்கிற ஆண் யானை வந்து , இந்த பெண் யானையை பார்த்த உடனே, நடுவுல ஒரு குழி பண்ணி வெச்சுடுவா. இந்த குழியில விழுந்துடும்.ஆண் யானையை பிடிச்சுண்டு போயிடுவா. அந்த மாதிரி இந்த தொடற உணர்ச்சிக்கு வசப் பட்டு மாட்டிக்கக் கூடாது.
 3. மான். மானுக்கு வந்து பாட்டு கேட்கறது பிடிக்கும் போல இருக்கு. வேடன் வந்து பாட்டு பாடுவான். அந்த பாட்ட வந்து மான் கேட்டுண்டு அப்படியே நிக்குமாம் .வேடன் வந்து அம்பு போட்டு அடிச்சுடுவானாம். கிராமிய கீதத்துல ஆசை இருக்கக் கூடாது. ஸ்வாமிகள் சொல்வார். சினிமா பாட்டுல மனசு வெச்சா வீணா போயிடும் அப்டீன்னு சொல்றார்.
 4. அடுத்தது தேனீ. தேனீ பூவிலேர்ந்து தேன் எடுக்கிறது, அதுவும் சாப்பிடறது இல்ல. யாராவது தேனை எடுக்க வந்தா அவாளை கொட்டறது. லோபிகள், கருமிகள் பணத்தை அவா சேர்த்து வெச்சுக்கறா. அவாளும் செலவு பண்றது இல்ல. மத்தவாளுக்கும் செலவு பண்றது இல்ல. இப்படி இருக்கக் கூடாது, அப்டீன்னு தெரிஞ்சுண்டேன்.
 5. அந்த மாதிரி தேனை இன்னொருத்தன் எடுத்துண்டு போறான். அந்த தேனை எடுக்கிறவன்  ஒரு குரு. அப்டீங்கிறார். அந்த மாதிரி, நீ பணத்தை சேர்த்து வெச்சாலும் சரி, யாராவது ஒருத்தன்  வந்து  ஒரு நாளைக்கு revolver அ காண்பிச்சு எல்லாத்தையும் எடுத்துண்டு போயிடுவான். அப்டீன்னு ஸ்வாமிகள் சொல்வார். இல்லேன்னா ஒரு நாளைக்கு, எமன் வந்துட்டான்னா, எவ்வளவு சேர்த்து வெச்சு என்ன பிரயோஜனம், அந்த மாதிரி பணத்தை சேர்த்து வைக்கக் கூடாது, அத யாராவதுதான் தூக்கிண்டு போகப் போறா, அப்டீன்னு சொல்லி,  தான தர்மங்கள் பண்ணனும். பணத்தை சேர்த்து வெக்கறதுல ஆசை வெக்கக் கூடாதுன்னு, தெரிஞ்சுண்டேன். அப்டீன்னு சொல்றார்.
 1. அப்புறம் மீன். மீன் தூண்டில்ல ஒரு புழு இருக்கு. அதை திங்கறதுக்கு ஆசை பட்டுண்டு, உயிரை விட்டுறது. அந்த மாதிரி, நாக்கு சபலம் கூடாது, இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார்., உன்னை உப்பு குறைச்சலாப் போடுங்கறேன், நீ கூடப் போட்டுருக்கியேன்னு சண்டை போடுவான், தட்டை விட்டெறிவான், அப்டீன்னு சொல்வார். நான் நினச்சுண்டேன், எனக்கு வந்து உப்பு கூட போடுங்கறேன், குறைச்சலாப் போடறியேன்னு தானே நாம சண்டை போடறோம், அப்டீன்னு நினைச்சுண்டேன்.
 2. அப்புறம் குரர பக்ஷின்னு ஒண்ணு. இந்த பக்ஷி வந்து, மாமிசத் துண்ட எடுத்துண்டு போகும்போது, அதைவிட பெரிய பக்ஷிகள், கழுகு, பருந்து அதெலாம் வந்து அதை அடிக்கிறதாம், அது fight பண்ணிண்டே இருக்கு. சண்டைபோடறது. ஆனா ஒரு கட்டத்துல அந்த மாமிசத்தைப் போட்டுட்டு போயி மரக்கிளையில உட்கார்ந்துடறது. அது வரைக்கும் அடி வாங்கறது, அப்புறம் நிம்மதியா இருக்கு. இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்றார். retire ஆன உடனே கொஞ்சம் பணம் வரும். உறவுக் காரா எல்லாம் அதுக்காக, பிடுங்கிண்டு இருப்பா. அத ஏதாவதொரு ஸ்வாமி காரியமா வெச்சிருக்கேன், அப்டீன்னு சொல்லிட்டானா நிம்மதியா இருக்கலாம். அப்டீன்னு சொல்றார்.
 3. அப்புறம் பிங்கலைன்னு ஒரு வேசி. அவளுக்கு பகவத் அனுக்ருஹத்னால வைராக்யம் வரது. அப்போ அவ சொல்றா. ஆசைதான் துக்கத்துக்குக் காரணம். வைராக்கியம் தான் சுகத்தை கொடுக்கும். அப்டீன்னு சொல்றா. அதுனால நாம ஆசையா விட்டாதான் நிம்மதி அப்டீன்னு அவளை பார்த்து கத்துண்டேன். அப்டீன்னு சொல்றார்.
 4. ஒரு குழந்தை, ஒரு குரு. அதாவது ரொம்ப சின்னக் குழந்தை. அப்டீன்னு ஸ்வாமிகள் சொல்றார். அது வந்து, இவா நம்மளைக் கொஞ்சினா, அப்டீன்னு அவா மேலொரு விருப்பம், இவா நம்ம தொட்டிலை தட்டி விட்டுட்டா. அதனால நாம அடி பட்டுண்டுட்டோம் அப்டீன்னு அவா மேல ஒரு வெறுப்போ அப்படியெல்லாம் இருக்கதோல்யோ. அந்த மாதிரி இந்த உலகத்துல வந்து குழந்தை போல உல்லாசமா இருக்கணும். விருப்பு வெறுப்பு வெச்சுண்டு கஷ்டப் படக் கூடாதுன்னு கத்துண்டேன், அப்டீன்னு சொல்றார். நான் நினைச்சுப்பேன். அந்த மாதிரி இருந்தவா, மஹாபெரியவா, சிவன்சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். மஹாபெரியவாளுடைய அந்த வாழ்க்கை, ஸ்வாமிகளோட அந்த வாழ்க்கை, அந்த வாழ்க்கையோட 75 வருஷத்தோட அனுபவங்களும், அது எங்க, எவ்வளவு டீல் பண்ணியிருக்கா அவா எல்லாம். ஆனா அவளோட அந்த பேச்சும் சிரிப்பும் பார்த்தா, என்னமா குழந்தையா இருக்கா அவா. என்ன ஒரு பாக்கியம், அப்டீன்னு வியப்பாக இருக்கும். பகவத் பஜனம்கிறது இத கொடுக்கும்னா, நாமும் பஜனம் பண்ணலாமேன்னு நமக்கு அதுல ஆசை வர்றது. அப்படி பேரானாந்தத்துல திளைச்சு அது ததும்பி வழிஞ்சுண்டுருக்கும். குழந்தை மாதிரி சந்தோஷமா இருந்தா. ஒரு விஷயத்துல கவலை இல்லாம இருந்தா. அதை நினைச்சு நினைச்சு பாக்கறேன் நான்.
 5. அடுத்தது ஒரு பெண் குழந்தை. அவளோட கார்யத்துல இருந்து ஒண்ணு கத்துண்டேன் அப்டீங்கிறார். அந்த பொண்ண வந்து கல்யாணம் பேசியிருக்கா. வர பக்ஷத்துலருந்து சில பேர் வந்திருக்காளாம் ஆத்துக்கு. இவ கையில நிறைய வளையல் போட்டுண்டு இருக்கா. நெல்லு குத்தறா. இவ நினைசுக்கறாளாம். தினம் தினம் நெல்லு குத்திதான் அரிசி பண்ணி இவா சாப்பிடறா. அன்னாடம் காச்சின்னு நினச்சுப்பா. அப்டீன்னு சொல்லி, அந்த பொண்ணு வந்து ரெண்டு கையில இருந்தும் ரெண்டு ரெண்டு வளையல மட்டும் வெச்சுண்டு மத்த எல்லா வளையலையும் கழட்டி வெச்சுடறா. அப்புறம் நிறைய வளையல் இருந்தா எட்டாத்துக்கு கேட்கும். ரெண்டு வளையல் இருந்தாகூட இங்க வந்தவாளுக்குக் கேட்கும், அப்டீன்னுட்டு, ஒரு வளையல வந்து, முழங்கைலயும் இன்னொரு வளையல மணிக்கட்டுலயும் இடிச்சுக்காத மாதிரி நகர்த்தி வெச்சுண்டாளாம். இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்றார். இந்த காலத்துல மன்றம் வெச்சு பஜனம் பண்றோம்னு நினைச்சுக்கறா. ஆனா ஓயாத சண்டைதான் போடறா. நிறைய பேர் வேண்டாம். atleast ஸ்ருதி போடறதுக்கு ஒருத்தர் வேண்டாமா. தனியா பாடறதுக்கு ரொம்ப ஸ்ரமம். அப்டீன்னு சொல்லிண்டு இன்னும் ஒருத்தர சேர்த்துக்கறா. இவர் என்ன பண்ணுவார், இன்னிக்கு ஏகாதசி. நீ ஏழு மணிக்கு வா. நாம பாண்டுரங்கன் கோவில்ல பஜனம் பண்ணுவோம், அப்டீன்னு சொல்லியிருப்பார். அவன் ஒன்பதரைக்கு வருவான், இன்னொருத்தன். அப்போ, என்னடா late. சரி வா ஒரு அரை மணியாவது பஜன பண்ணுவோம் அப்டீன்னு சொல்லுவார். அதை ஏன் கேட்கற, அப்டீன்னு அவன் officer ஐ பத்தி திட்ட ஆரம்பிப்பான். பதினொரு மணி ஆயிடும். அந்த மாதிரி நிறைய பேர் இருந்தா கலகம். ரெண்டு பேர் இருந்தா கூட வீண் பேச்சா போயிடும். பகவத் பஜனம் ஏகாந்தத்துல பண்ணனும், அப்டீன்னு ஸ்வாமிகள் சொல்வார். அவர் அந்த மாதிரி பண்ணியிருக்கார். நிறைய பண்ணியிருக்கார். நான் அத பார்த்து ரசிச்சிருக்கேன். கார்த்தால ஆறு மணிக்கு  ஆரம்பிச்சா மத்யானம் ஒரு மணி வரைக்கும் புஸ்த்தகத்தை வெச்சு படிச்சுண்டு இருப்பார். அவருக்கும் அந்த வால்மீகிக்கும்தான் அந்த சங்கம். அதுதான் சத்சங்கம். கண் ஜலம் வரும், எப்படி சந்தோஷப் படறார் அப்டீன்னு பார்த்திருக்கேன்.
 6. அடுத்தது பாம்பு ஒரு குரு. பாம்பு தனக்கா வீடு கட்டறது இல்ல. அது கரையான் புத்துல போயி இருந்துக்குமாம். அந்த மாதிரி சொந்த வீடு கட்டணும், அப்டீன்னு இந்த வீடு கட்டறது ஒரு ஸ்ரமம். அப்டீன்னு பாகவதத்துல சொல்லியிருக்கு அப்டீங்கிறார், ஸ்வாமிகள். ஏனா ஜனங்கள் அத ரசிப்பாளோ அப்டீன்னு, இந்த காலத்துல வந்து இந்த ரெண்டாவது வீடு அதுக்கு EMI அப்டீன்னு சொல்லியே எல்லோரும் மாட்டிக்கிறா. ஒருத்தர் கட்டின வீட்டுல போயி வசிச்சுட்டா, ஒரு ரெண்டு மூணு வருஷம் project ஆ வீடு கட்டறது வீடு கட்டறதுன்னு அத பத்தி கவலைகள், அத பத்தி அந்த கடன் தொல்லைகள் அப்டீங்கிற ஒரு கவலை இல்லாம இருக்கும்.
 7. அடுத்தது ஒரு பாணத்தை ஒருத்தன் கூர் பண்றானாம். அவன் ஒரு குரு. அங்க ராஜா பவனி போறார். ரொம்ப வைபவமா அந்த ராஜா பவனி போறார். இவன் இந்த பாணத்தைக் கூர் பண்ணிண்டு இருக்கான், அத முடிச்ச பின்ன, என்னடா ராஜா போறார் பாக்கலையா அப்டீன்னா, அவன் பாக்கவே இல்லையே அப்டீங்கிறானாம். அவ்வளவு ஏகாகிரச் சித்தத்தோட அவன் வேலை பண்ணிண்டு இருக்கான். அந்த மாதிரி நாம பகவான்கிட்ட மனச வைக்கணும். இந்த இடத்துல ரொம்ப useful ஆ ஸ்வாமிகள் ஒண்ணு சொல்றார். நம்பாத்துல டிவி போடாதன்னு சொன்னா கேட்பா. பக்கத்தாத்துல டிவி சத்தம் கேட்கறதே. அதுனால நாம மனசு வெச்சு இந்த இராமாயண, பாகவதத்த படிக்கறதுக்கு கத்துண்டோமோ பொழச்சோம். இல்லேன்னா இந்த காலத்துல படிக்கவே முடியாது. அப்டீங்கிறார். அப்படி பகவத் பஜனம் பண்ணும் போது லயிச்சு போகணும், அப்டீன்னு இந்த பாணத்தைக் கூர் பண்றவன்கிட்டயிருந்து கத்துண்டேன், அப்டீன்னு சொல்றார்.
 8. அடுத்தது சிலந்தி. சிலந்தி தன்னோட உடம்புல இருந்தே திரவத்தை உற்பத்தி பண்ணி, அத வெச்சு ஒரு வலை பின்னி, அந்த வலையில கொஞ்ச நாள் விளையாடிட்டு, அப்புறம் அத தனக்குள்ளயே இழுத்துக்கறது. அதே மாதிரி பகவானும்,தனக்குள்ள இருந்தே சாமக்ரியைகள் வெச்சுண்டு, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் பண்றார். விளையாடறார். அலகிலா விளையாட்டுடையான் அப்டீன்னு அந்த பகவானோட பெருமையை நினைச்சுப் பாக்கணும்.அப்டீன்னு சொல்றார்.
 9. கடைசில 24 வது குரு குளவி. இந்த குளவி ஒரு புழுவக் கொட்டிட்டுப் போன உடனே அந்த புழு, குளவி வந்து கொட்டுமோ கொட்டுமொன்னு நினைச்சு அதுவும் குளவி ஆயிடும். அது மாதிரி யத் பாவம் தத் பவதி, எதை நாம நினைச்சுண்டு இருக்கோமோ அதே மாதிரி ஆயிடுவோம். அந்த மாதிரி பகவத் பஜனம் பண்ணோம்னா நமக்கு பகவானோட சாயுஜ்யம் கிடைக்கும். அப்டீன்னு ஸ்வாமிகள் சொல்றார்.

இதுக்கெல்லாம் மேல நம்முடைய உடம்பே ஒரு குரு. அப்டீன்னு சொல்லி முடிக்கிறார். இந்த உடம்பு வந்து வயசான பின்ன, ஒவ்வொரு part படுத்தறது, கை நாம சொன்னா கேட்க மாட்டேன்கிறது. கால் நாம சொன்னா கேட்க மாட்டேன்கிறது. இதுக்காக நாம வந்து கைய வெறுக்கறோமோ, காலை வெறுக்கறோமோ. உன்ன பொறந்த நாளில இருந்து எண்ணைய் தேய்ச்சு விட்டேன், சோப்பு போட்டு குளிப்பாட்டினேன். நான் சொன்னா கேட்க மாட்டேன்ங்கிறயேன்னு உடம்ப நாம வந்து தண்டிக்கறோமோ. அப்படி  பண்றது இல்ல. அப்படி இருக்கிறச்ச,  இந்த உடம்பே நீ சொல்றத கேட்க மாட்டேன்கிற போது, பிள்ளையும் பேரனும் சொன்னா கேட்க மாட்டேன்கிறான்னு ஏன் நீ தவிக்கிற, அப்டீன்னு சொல்றார் ஸ்வாமிகள். அப்டீன்னு,  உடம்புகிட்ட இருந்தே ஒரு பாடம் கத்துக்கறேன்.

அப்படி அந்த தத்தாத்ரேய மஹாயோகி யது மஹா ராஜாகிட்ட சொன்னதை கிருஷ்ண  பகவான் உத்தவருக்கு சொன்னார். இன்னிக்கு நாம கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் மூலமா அதை தெரிஞ்சுண்டோம்.

ஜானகி காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம

உத்தவ கீதையில் வரும் 24 குருக்கள் (30 min Audio)

Share

அகஸ்தியர் விஷ்ணுதனுஸ் அளித்தார்

agasthya-rama-ramayan-desibantu125. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியரை தரிசிக்கிறார். அகஸ்தியர் அவர்களை மிகுந்த அன்போடு வரவேற்று உபசரித்து, அவர்களுக்கு உணவு அளிக்கிறார். பின் அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணு பகவானின் வில்லையும் அம்புறாதூணியையும் அளித்து “எப்படி இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டுள்ளானோ, அது போல ராமா, வெற்றியின் பொருட்டு நீ இந்த விஷ்ணு தனுசை ஏற்றுக்  கொள். ” என்று வாழ்த்துகிறார். மேலும் ஸீதாதேவியின் கற்பை மெச்சி கொண்டாடுகிறார்.
[அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணு தனுஸ் அளித்தார்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

அகஸ்தியர் மஹிமை

1-ockzdeure51oa3b6odlbjw124. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியில், அகஸ்த்ய முனிவரின் மஹிமையை அவர்களுக்கு சொல்கிறார். அகஸ்தியர், வாதாபி இல்வலன் போன்ற ராக்ஷசர்களை அழித்ததும், விந்திய மலையின் கர்வத்தை அடக்கியதும், தென் திசைக்கே அகஸ்தியர் அபயம் அளித்ததும் கூறி “மிகுதியுள்ள வனவாசத்தை அகத்தியருக்கு தொண்டு செய்து இனிமையாக கழிப்போம்” என்று கூறுகிறார்.
[அகஸ்தியர் மஹிமை]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

ரிஷிகளோடு பத்து வருடங்கள்

rama sita lakshmana
123. ராமர் சீதையோடும் லக்ஷ்மணனோடும் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் பல முனிவர்களின் ஆஸ்ரமங்களில் இனிதே கழிக்கிறார். ஓரிடம் போகும் வழியில் ஒரு ஏரியின் உள்ளிருந்து இனிமையான சங்கீதமும் நாட்டிய சப்தமும் கேட்கிறது. ராமர் அருகிலிருந்த தர்மப்ருத் என்ற முனிவரிடம் என்ன இந்த ஆச்சர்யம் என்று கேட்கிறார். தர்மப்ருத் “மாண்டகர்னி என்ற முனிவர் தவத்தை கலைக்க இந்திரன் ஐந்து அப்சரஸ் ஸ்திரீகளை அனுப்பினான். அந்த முனிவர் தன் தவத்தால் இளமையை வரவழைத்துக் கொண்டு இந்த ஏரியின் உள்ளே ஒரு மாளிகை அமைத்து அங்கு அவர்களோடு சுகித்து வருகிறார்’ என்று சொல்கிறார். ராமர் வாசல் வழியே வந்தும் மாண்டகர்னி முனிவர் மதன பரவசத்தால் ராமரை தரிசிக்க முடியவில்லை.
[ரிஷிகளோடு பத்து வருடங்கள்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

ஸீதா ராம ஸம்பாஷணை

sita rama

122. சீதை ராமரிடம், “நீங்கள் பொய் பேச மாட்டீர்கள். பிறன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டீர்கள். ஆனால் ராக்ஷசர்களைக் கொல்வேன் என்று ரிஷிகளிடம் வாக்களித்தீர்கள். நம்மிடம் எந்த தவறும் செய்யாத ராக்ஷசர்களை ஏன் கொல்ல வேண்டும்? காட்டில் தபஸ்விகளாக இருந்து விடலாமே” என்று கேட்கிறாள். ராமர் “ஜனகர் மகளான நீ கேட்பது சரி தான். ஆனால் தபஸ்விகளான இந்த ரிஷிகள் என்னிடம் அபயம் கேட்டார்கள். நான் ரிஷிகளை என்னைச் சேர்ந்தவர்களாக நினைக்கிறேன். அதனால் ராக்ஷசர்களைக் கொன்று அவர்களின் துன்பத்தைப் போக்குவதாக வாக்களித்தேன். எனவே உயிரைக் கொடுத்தாவது அந்த வாக்கை காப்பேன்.” என்று பதில் கூறுகிறார்.
[ஸீதா ராம ஸம்பாஷணை]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

சுதீக்ஷ்ணர் ஆஸ்ரமத்தில் ராமர்

Yagnavalkya

121. ஸ்ரீராமர், சீதாதேவியோடும் லக்ஷ்மணரோடும் சுதீக்ஷ்ணரின் ஆஸ்ரமத்தில் அன்றிரவுப் பொழுதை இனிமையாக கழிக்கிறார். மறுநாள் வைகறைப் பொழுதில் துயில் விழித்து, அருகில் உள்ள குளத்தில், மலர்களின் மணம் வீசும் குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்கிறார்கள். அனுஷ்டனங்களை முடித்துவிட்டு முனிவரிடம் விடை பெறுகிறார்கள். வணங்கிய ராமரை முனிவர் எழுப்பிக் கட்டி அணைத்து அன்பு பாராட்டி பிற முனிவர்களின் ஆஸ்ரமங்களையும் அவற்றை சூழ்ந்திருக்கும் இயற்கை அழகையும் விரிவாக புகழ்ந்து, ‘நலமாக சென்று வா. மீண்டும் ஒருமுறை இங்கு திரும்பி வா’ என்று கூறி விடை அளிக்கிறார்.
[சுதீக்ஷ்ணரின் அனுக்ரஹம்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

முனிவர்களுக்கு அபயம்

sage-sutikshana-rama-ramayan-desibantu

120. ராமர், சரபங்கர் ஆஸ்ரமத்திலிருந்து கிளம்புகிறார். தண்டக வனத்து முனிவர்கள் ராமரிடம் வந்து ராக்ஷசர்களால் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கூறி தங்களை காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள். ரிஷிகள் காமத்தையும் கோபத்தையும் தவத்தினால் கடந்து செல்ல முயன்று வருவதால், சாபம் கொடுக்க விரும்பாமல் க்ஷத்ரியரான ராமரிடம் முறையிடுகிறார்கள்.  ராமர் அவர்கள் பிரார்த்தனையை ஆணையாக ஏற்று, அவர்களுக்கு அரக்கர்களிடமிருந்து அபயம் அளிக்கிறார். பின்னர் ராமர் சுதீக்ஷ்ணர் என்ற முனிவரை சென்று வணங்குகிறார். சுதீக்ஷ்ணர் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்.
[தண்டகவனத்து முனிவர்களுக்கு அபயம்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

சரபங்கர் தர்சனம்

images~02

119. ராமர் சரபங்கர் ஆஸ்ரமத்தை தேடி வருகிறார். அருகில் செல்லும் போது, ராம லக்ஷ்மணர்கள், அங்கு இந்திரன் முனிவர்களுடன் வந்திருப்பதை பார்த்து வியக்கிறார்கள். சரபங்கர், ராமரை வரவேற்று உபசரித்து ‘ராம! இந்திரன் என்னை பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்ல வந்திருந்தான். பிரியமான அதிதியான நீ வருவதை அறிந்து, உன்னை பார்க்க காத்திருக்கிறேன். என் புண்யங்களை உனக்கு அர்பணிக்கிறேன்.’ என்று கூறி விடை பெறுகிறார். தானே ஒரு அக்னி குண்டத்தை அமைத்து அதில் இறங்குகிறார். பூத உடலை உகுத்துவிட்டு, ஒரு தெய்வீக ஒளி உருவம் அடைந்து, பிரம்ம லோகத்தை அடைகிறார். பிரம்மா அங்கு அவரை அன்புடன் வரவேற்கிறார்.
[சரபங்கர் தர்சனம்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share

விராத வதம்

viradha vadham

118. தண்டக வனத்தில் திடீர் என்று விராதன் என்ற ஒரு கோரமான அரக்கன் வந்து சீதையை கவர்ந்து செல்கிறான். ராமரும் லக்ஷ்மணரும் அவனுடன் யுத்தம் செய்து அவனை கீழே வீழ்த்துகிறார்கள். விராதன் ராமரை யார் என்று அறிந்து ‘ராம! நான் ஒரு கந்தர்வனாக இருந்தேன். குபேரனின் சாபத்தால் அரக்கன் ஆகிவிட்டேன். உன் தயவால் நான் இன்று சாப விமோசனம் அடைந்தேன். என்னை எந்த ஒரு ஆயுதத்தாலும் கொல்ல முடியாது. என் உடலை ஒரு குழி வெட்டி புதைத்து விடுங்கள். அதன் மூலம் எனக்கு நல்ல கதி ஏற்படும். அருகில் சரபங்கர் என்று ஒரு முனிவர் உள்ளார். அவரைச் சென்று தர்சனம் செய்யுங்கள்” என்று கூறி உயிரை விடுகிறான்.
[விராத வதம்]

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Share