Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை(10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 58)
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம்.

एको वारिजबान्धवः क्षितिनभो व्याप्तं तमोमण्डलं
भित्वा लोचनगोचरोऽपि भवति त्वं कोटिसूर्यप्रभः ।
वेद्यः किन्न भवस्यहो घनतरं कीदृग्भवेन्मत्तम-
स्तत्सर्वं व्यपनीय मे पशुपते साक्षात् प्रसन्नो भव ॥ ५८॥

ஏகோ வாரிஜபா³ந்த⁴வ꞉ க்ஷிதினபோ⁴ வ்யாப்தம்ʼ தமோமண்ட³லம்ʼ
பி⁴த்வா லோசனகோ³சரோ(அ)பி ப⁴வதி த்வம்ʼ கோடிஸூர்யப்ரப⁴꞉ .
வேத்³ய꞉ கின்ன ப⁴வஸ்யஹோ க⁴னதரம்ʼ கீத்³ருʼக்³ப⁴வேன்மத்தம:
ஸ்தத்ஸர்வம்ʼ வ்யபனீய மே பஶுபதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ ப⁴வ ..

இது 58வது ஸ்லோகம். ரொம்ப அழகா இருக்கு. ஹே பஶுபதே. ‘ஏக: வாரிஜ-பா3ந்த4வ:’ – வாரிஜ: ன்னா ஜலத்தில் பிறக்கும் தாமரை. ‘வாரிஜ-பாந்தவ:’ – அப்படினா தாமரைக்கு பந்துவான சூரியன்.

ஒரு சூரியன் ‘க்ஷிதிநபோ4-வ்யாப்தம்’ – பூமியிலும், ஆகாசத்திலும் கவிழ்ந்துகொண்டிருக்கும் ‘தமோ மண்ட3லம்’ – இருள் படலத்தை இருட்டை, ‘பி4த்வா’ – பிளந்துகொண்டு ‘லோசன-கோ3சலோபி ப3வதி’ – கண்ணுக்கு காணப்படுபவனாக ஆகிறான்.
கண்ணு முன்னால சூரியனை நாம தினமும் பாக்கறோம். ராத்திரியெல்லாம் இருட்டா இருக்கு, ஆகாசமெல்லாம் இருட்டா இருக்கு, பூமியெல்லாம் இருட்டா இருக்கு. எல்லாத்தையும் பிளந்துண்டு சூரியன் வந்தவுடனே பளிச்சுனு கண்ணுக்கு தெரியறது. உலகமே ஒளிமயமாயிடறது .

இவர் சொல்றார். ஹே பஶுபதே ‘த்வம்’ – கோடி சூர்யப்ரப4:’ – நீங்கள் கோடி சூரியப் பிரகாசம் பொருந்தினவர். அப்படின்னு மஹான்கள் சொல்றா, வேதத்தில் சொல்றது. அப்படியிருந்தும், ‘வேத்3ய: கிம் ந பவதி’ – ஏன் என் கண்ணுக்குத் தெரியல. அதமாதிரி, கோடி சூரியப் பிரகாசம், அப்படிங்கறது ஒரு செய்தியாதான் இருக்கு. எனக்கு ஏன் அது அனுபவமா ஆகலை? ‘அஹோ மத் தம: கீத்³ருʼக்³’ – அப்ப என்னுடைய, அஞ்ஞானம் அப்படிங்கிற இருள் எவ்வளவு கடுமையா இருக்கணும். அவ்வளவு, ‘க⁴னதரம்’ – அவ்வளவு அடர்த்தியான இருள்.
ஒரு சூரியனே இருளை பிளந்து தரிசனம் கொடுக்குறாங்கறபோது, நீ கோடி சூரியப் பிரகாசம், ஆனா, நீ என் கண்ணுக்குத்தெரியல. அப்படினா, என்னுடைய, அஞ்ஞானம்ங்கிற இருட்டு அவ்வளவு ‘க⁴னதரமா’. அவ்வளவு, அடர்த்தியா இருக்கு.
ஆனால், ‘ஸ்தத்ஸர்வம்ʼ வ்யபனீய’ – அந்த இருள் அனைத்தையும் போக்கி, ‘மே ஸாக்ஷாத்’ – என் கண்ணெதிரில். ‘ப்ரஸன்ன: பவ’ – நீங்கள் காட்சிகொடுக்கவேண்டும். அப்படின்னு, ஒரு அழகான ப்ரார்த்தனை.

ஆசார்யாள் எந்த தெய்வத்தை, ப்ரார்த்தனை பண்ணும்போதும், ‘புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ:’ (पुरस्तान्ममास्तां पुरारेस्तनूजः) – என் கண்ணுமுன்னாடி இந்த முருகப்பெருமான் காட்சிதரவேண்டும் அப்படின்னு, கேட்பார். அந்த ஸ்வாமியும் அவருக்கு, தரிசனம் கொடுப்பார். ‘புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி:’ – என் கண்ணுமுன்னாடி இந்த ஹனுமார் தோன்றவேண்டும் அப்படின்னு, சொல்லி அவருக்கு ஹனுமார் தரிசனம் கொடுத்தார்.

ஆசார்யாளோட சங்கரபாஷ்யம் போன்ற, பிரம்மஶூத்ரம் பாஷ்யம் போன்ற, ஞான கிரந்தங்கள்ல, பக்தி இருக்கும் அப்படின்னு, நான் பேசிருக்கேன். இன்னைக்கு இந்த ஸ்லோகத்தை படிக்கும் போது இந்தமாதிரி பக்தி கிரந்தங்கள்ல ஆசார்யாள், ஞானத்தை வேண்டறார். பக்தி மூலமாவே, பிரார்த்தனை மூலமாவே, அந்த ‘ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி’ ன்னு சொல்றமாதிரி, கோடி சூரியப் பிரகாசம்ங்கிறது, ஞானத்தினால ஏற்படற ஒரு தரிசனம். ஆத்மாதான் கோடி சூரியப் பிரகாசம்.
‘அந்த ஆத்மா’, – ஆத்மா உணர்வதற்க்கு ஆத்ம விசாரம் பண்ணணுங்கறது, மாஹான்களுடைய கொள்கை.

ஆத்ம விசாரம் அப்படினா, ரமணர், ஞாபகம் வர்றது. இன்னைக்கு, ரமண பகவானோட ஆராதனை. அவரை, த்யானம் பண்ணுவோம். ரமணர் ஆத்ம விசாரம் சொன்னார். சில படிச்சவாளுக்கு, கபாலி ஶாஶ்த்ரி, காவ்ய கண்ட கணபதி முனிக்கெல்லாம், சொன்னார்.
ஆனா, இந்த ‘ரமண பெரிய புராணம்’ – அவருடைய பக்தர்களோட சரித்திரத்தை படிச்சா, எனக்கென்னமோ, ரமணர், ரொம்ப அனுக்கிரஹம்தான் பண்ணிருக்கார். ஏன்னா, அவரே, சின்ன குழந்தையில, அவருக்கு, ஒரு நாளில, பளிச்சுனு ஞானம், வந்துட்டுதுன்னு சொல்றா. ஆனால், அதுக்கு முன்னாடி, அவர், மதுரையில, ஸ்வாமி கோவில போயி 63 நாயன்மார்கள் முன்னாடி நிண்ணுண்டு, கண் ஜலம் விட்டு, உங்களுக்கெல்லாம் பரமேஶ்வரன், தரிசனம் கிடைச்சிருக்கு, உங்களுக்கு கிடைச்ச அனுக்கிரஹம், எனக்கு கிடைக்காதான்னு கதறிருக்கார். அதுக்கு பூர்வ புண்ணியம் இருக்கு.

அப்படி, அவருடைய, தாபம் இருந்ததனால, அருணாசலேஸ்வரர் கூப்பிட்டார். ஓடிவந்து அப்பான்னு, அருணாசலேஸ்வரரை கட்டிண்டார். அதுக்கு அப்புறம், ஞானசூரியனா, உட்காந்துண்டுருந்தார். அவர்கிட்ட, வந்தவாளுக்கெல்லாம், அவர், அந்தந்த ஜீவனுடைய, பரிபாகத்துக்கு தகுந்தமாறி, அவாளை, வழிநடத்தினார். நிறையபேர், அவரை, சரணாகதி பண்ணி, ஒரு லக்ஷ்மிங்கிற பசுமாடு, அவா அம்மா, அவாள்ளெல்லாம் ஞானத்துக்கா வந்தா? அவரை வந்து சரணடைஞ்சுட்டா. அவ்வளவுதான். அவாளுக்கெல்லாம், ஞானம் கொடுத்தார் அவர்.

T.K. ஸுந்தரேஶ்வர ஐயர், மஹான்னுதான் சொல்லணும். அவர், முதல் நாள், பகவானை வந்து தரிசனம் பண்ணும்போது, எல்லாரும் தமிழ்ல, பாசுரங்கள் பாடிண்டுருக்கா. உனக்கு தெரிஞ்சது பாடேன்னவுடனே, ‘மற்றுப் பற்று எனக்கு இன்றி’ – அப்படிங்கற தேவாரத்தை பாடறார். ‘நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு ‘‘நா நமச்சிவாயவே’’, அப்படின்னு, நாக்கு ‘‘நமச்சிவாய’ ன்னு, சொல்லிண்டே இருக்கணும். பகவானுக்கு அவ்வளவு சந்தோஷம். ஆஹாஹான்னு!, கொண்டாடி, இதையே உபதேசமா, வெச்சுக்கோ, அப்படின்னு, நிறைய ஜபம் பண்ண வைக்கிறார்.
அடிக்கடி, தரிசனம் பண்ணிடுருக்கார். ஒரு நாளைக்கு, எல்லாரும் எல்லாம், கொண்டுவாரேள்ளே!! நான் ஒண்ணுமே, கொண்டுவரல்லியே பகவானே!! னு சொல்லும்போது, நீ உன்னையே கொண்டு வந்திருக்கியேங்கிறார் பகவான். நிறைய கைங்கரியம் பண்றார். எழுதறது, ரமணருடைய தம்பி அந்த ஆஸ்ரமத்தை பாத்துக்கிறார். அவருக்கு, உறுதுணையாக இருக்கணும் அப்படின்னு, ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அந்த ஆஸ்ரமரத்துக்கு வேண்டிய support எல்லாம் பண்றார், இந்த ஸுந்தரேஶ்வர ஐயர்.

ஓரு நாளைக்கு, எனக்கு, ஸ்வாமி தரிசனம் கிடைக்கணும், அப்படின்னு, என்ன மாதிரி! உனக்கு, தரிசனம் வேணும்? அப்படின்னு கேக்கறார், பகவான். ராமரா!, பாக்கணும்கிறார். அப்படின்னவுடனே, ரெண்டு மணி நேரம், அந்த பட்டாபிஷேக கோலத்தில், ராமரையும், சீதா தேவியையும், லக்ஷ்மணஸ்வாமியையும், பரத, சத்ருக்ன, ஹனுமார், எல்லாரையும், ரமணர்கிட்ட தரிசனம் பண்றார்.
இந்த ஸுந்தரேஶ்வர ஐயர்தான், ‘‘ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய’’ – அப்படின்னு அந்த மஹா மந்திரத்தை, அனுக்கிரஹம் பண்ணினவர் பக்தர்களுக்கு.

அப்படி ரொம்ப எளிமையா இருந்து, ஞானமார்க்கத்தில, பகவான் சொன்னதை கேட்டிருக்கார். ஆனா, தன்னை, பகவானுக்கு, ஒப்புகொடுத்து, ஒரு சரணாகதி பண்ணி, பக்தரா இருந்து, வேற பற்றில்லாமல், பகவானையே நம்பி, அவர் ஞானம் அடைஞ்சார்.
இப்படி, எத்தனையோ பேர், ராமணருடைய அனுக்கிரஹத்துனால, ஞானம் அடைஞ்சா. அவாளுக்கெல்லாம் குரு அனுக்கிரஹமே, போறுமா இருந்தது. வேற ஒரு சாதனையும், வேண்டியதில்லை.
ஸம்ஸ்க்ருத ஸ்லோகம், இருக்கு, அதைக்கூட ரமணரே, தமிழில் எழுதிருக்கார். நல்ல தென்றல் வீச ஆரம்பிச்சுட்டா, அப்புறம், விசிறிக்கு!, என்ன வேலை?, அந்த மாதிரி, மஹானுடைய, ஸங்கம் கிடைச்சிட்டதுன்னா, அப்புறம், சாதனைகள் எல்லாம் ஒரு பேச்சுக்குதான், அப்படிங்கற மாதிரி, ஒரு ஸ்லோகம், இருக்கு.
தினமும் சந்தியாவந்தனம் பண்றோம். அதுல காயத்ரி மந்த்ரம் இருக்கு. அதுல, ‘‘பர்க்கோதேவ:ன்னு’’ வரும் – பர்க்கோதேவ:ங்கிறது, பரமேஸ்வரனுக்கு, ஒரு பேர். அதனால, இந்த காயத்ரி மந்த்ரம் ஜபிக்கிறதே, பரமேஸ்வரன்கிட்ட பக்தி, அப்படின்னு சொல்வா!.

அந்த மாதிரி, சூரியனுக்கும், ஆதாரமாக, கோடி சூரியப் பிரகாசமாக என் புத்தியை துலக்கும், அந்த பரம்பொருள், அதோட அனுக்கிரஹம் வேணும், அப்படின்னு, தினம் வேண்டிக்கணும், அப்படின்னு, இந்த காயத்ரி ஜபம்கிறது, தினம் கடமையாக, பண்ணறதுனால, கர்மாவும் ஆறது. அது, சித்த சுத்தியும், ஞானத்தை கொடுக்கும்கிற பலனும் இருக்கு. ஆனா, இந்த மாதிரி, சிவ பக்தியாகவும், வச்சுக்கெல்லாம். அப்படி, பக்தி, ஞானங்கறதெல்லாம், வார்த்தைகள்தான். விசாரம், சரணாகதி, அப்படிங்கறதெல்லாம், வார்த்தைகள்தான்.
அந்த ஒரு தாபம். பகவானே, இந்த ஜன்மாவும், சாப்பிட்டு, தூங்கி, வீணா போயிடுமா!! எப்ப நான், உங்களை, தரிசனம் பண்ணுவேன்? அப்படிங்கிற, தான் தூண்டிவிடுறார்.

இந்த ஸ்லோகத்துல, ஒரு சூரியனே கண்ணுக்கு, தெரியறானே, நீங்கள் என்னுடைய அஞ்ஞானத்தை போக்கி என் முன்னால தரிசனம் தரவேண்டாமா?, அப்படின்னு ஒரு, எவ்வளவு நைச்சியமா ப்ரார்த்தனை, பண்றார். என்னுடைய அறியாமை அவ்வளவு, அடர்த்தியா இருக்கு, சிவபெருமானே!, அதை போக்கி, நீங்கள், எனக்கு காட்சி தரவேண்டும். அப்படின்னு, ஒரு ப்ரார்த்தனை.
இந்த பாவம் வந்துட்டதுன்னா, அந்த பக்தியே, படிப்படியா, ஞான வைராக்கியத்தை கொடுத்து, மேலான உயர் வர, உயர்நலமான மோக்ஷத்தையும் கொடுக்கும்.

அதனால் தான், ஆசார்யாள், அவ்வளவு பெரிய ஞானியா இருந்து, அவ்வளவு, வேதாந்தம் பேசினாலும், இந்த மாதிரி, பக்தி கிரந்தங்களை அனுக்கிரஹம் பண்ணி கொடுத்துருக்கார். இது மூலமாவே, நமக்கு அந்த தாபம் ஏற்பட்டா, அதுவே, ஒரு விதமான ஆத்மவிசாரம்தானே.

மூக பஞ்ச சதிலயும் இதே மாதிரி ஒரு ப்ரார்த்தனை இருக்கு.

மனோகே³ஹே மோஹோத்³ப⁴வதிமிரபூர்ணே மம முஹு:
த³ரித்³ராணிகுர்வந்தி³னகரஸஹஸ்ராணி கிரணை: ।
வித⁴த்தாம் காமாக்ஷி ப்ரஸ்ருʼமரதமோவஞ்சனசண:
க்ஷணார்த⁴ம் ஸான்னித்⁴யம் சரணமணிதீ³போ ஜனனி தே ॥ 26 ॥

என்னுடைய மனமாகிய வீட்டில், ‘மோஹோத்³ப⁴வதிமிரபூர்ணே’ – மோஹத்தினால, ஏற்பட்ட அஃஞானம், பூர்ணமா இருக்கு, அதனாலதான், நான் இன்னும் உன்னுடைய, பாதத்தை தர்ஶ்னம் பண்ணலை. உன்னுடைய பாதமோ, ஆயிரம் ஸுர்யர்களுக்கும், மேலான ஒளியோட விளங்குகிறது. அதோட, ஒரு கீத்து, ஒரு க்ஷ்ணம்!, என்னோட மனஸுல வந்துட்டதுன்னா, இந்த இருட்டைல்லாம், போயிடுமே, அம்மா!. உன் பாத தர்ஶ்னம் கொடு, அப்படின்னு, ப்ரார்த்தனை பண்ணுறார். இதே மாதிரி ஒரு ஸ்லோகம். அந்த மாதிரி ஸ்லோகங்களை சொல்லி ஸ்வாமிகிட்ட ப்ரார்த்தனை பண்ணிப்போம்.

ஏகோ வாரிஜபா³ந்த⁴வ꞉ க்ஷிதினபோ⁴ வ்யாப்தம்ʼ தமோமண்ட³லம்ʼ
பி⁴த்வா லோசனகோ³சரோ(அ)பி ப⁴வதி த்வம்ʼ கோடிஸூர்யப்ரப⁴꞉ .
வேத்³ய꞉ கின்ன ப⁴வஸ்யஹோ க⁴னதரம்ʼ கீத்³ருʼக்³ப⁴வேன்மத்தம:
ஸ்தத்ஸர்வம்ʼ வ்யபனீய மே பஶுபதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ ப⁴வ ..

நம:பார்வதி பதயே!!! ஹர! ஹர! மஹாதேவ !!!

Series Navigation<< சிவானந்தலஹரி 57வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 59வது ஸ்லோகம் பொருளுரை >>

5 replies on “சிவானந்தலஹரி 58வது ஸ்லோகம் பொருளுரை”

எப்படி சிவானந்த லஹரி பக்தி ஸ்லோகத்தில் ஆரம்பித்து, ரமண பகவான் ஈஸ்வரனோட ஐய்க்யம் ஆர பாவத்தைச் சொல்லி, பின் மூல பஞ்ச சதி யிள் அம்பாள் பாதத்தை சரணடைந்தால் அவல் கடாக்ஷம் அடையப் பெறலாம் என ரொம்ப கோர்வையாக அழகா பொருள்பட பாமரருக்கும் புரியும்படி எளிய விளக்கம்! பக்தி அற்றவனுக்கும்.பக்தி வரும். என்பதில் ஐயமில்லை.!!
சௌந்தர்ய.லஹரி எப்படி அழகு பெட்டகமா அம்பாளை வர்ணிக்கிறது சிவானந்தலஹரீ
பக்திப் பெட்டகம்!
நம் ஆசார்யாள் எழுதின ரெண்டுமே ரெண்டு கண்கள்!!

ஜய ஜய சங்கரா…

நம சிவாய நம சிவாய
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
ஆதி ஆசார்யாள்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் ஸ்வரூபம் அவர் நம்மை போன்றவர்களுக்காக தம்மை தாழ்த்திக்கொண்டு பக்தி ஸ்தோத்ரங்கள் செய்துள்ளார்.
இன்று இந்த சிவானந்த லஹரி ஸ்தோத்ரம் பரமேஸ்வரனை பக்தியின் மூலம் தரிசனம் செய்யும் ஆசையை வரைந்துள்ளார். எவ்வளவு அழகாக சூரியனின் ப்ரகாசத்தையும் அதனால் உலகம் இருள் நீங்கப்பெற்று விடியல் காண்பதும் அது போல நம் கர்மங்கள் கழிந்து ஈஷ்வர தரிசனம் பெற அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டால் கர்மங்கள் தொலைந்து கோடி சூர்ய ப்ரகாசமான பரமேஸ்வரனை தரிசிக்க வழி வகுத்துள்ளார். மூக பஞ்சசதி ஸ்லோகம் உவமை மிக பொருத்தம்.
ரமண பெரிய புராணம் படித்து வரும் நிலையில் இன்று ஸ்ரீ ரமணரையும்,
Sri. T. K. S அவர்களைப் பற்றி விளக்கம் தந்தது மிக சந்தோஷம். ரமணர் ஆத்ம விசாரணைக்கு அடிப்படையாக பக்தியை உயர்வாக சொல்லி இருக்கிறார்.
பக்தி,சரணாகதி நீங்கள் கூறியது போல் அந்த உணர்வுகளுக்கும் அதனால் எழும் தாபத்திற்கும் உருவமாக அமைந்துள்ள வார்த்தைகள். இவைகள் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமாக பரிமளிக்கும். இந்த பக்தியிலும், தியான நிலையிலும் வெளிப்படும் சொற்றொடர்களை பக்தி ரசம் கொண்டவர்கள் அனுபவிப்பதே ஓர் அனுபவம்.
வழக்கம் போல பக்தி லஹரியில் திளைக்க வைத்ததற்கு வாழ்த்துக்கள்
🙏🙏🌹🌹

அத்புதமான பொருள் செறிந்த ஸ்லோகம் இது! அஞ்ஞானம் என்ற இருளை ஞான சூரியன் வந்துதான் தீர்க்க வேண்டும்.
ஒரே ஒரு சூரியன் எப்படி லோகம் அனைத்தின் இருளைப் போக்குகிறதோ, அது போல் நம் அஞ்ஞானம் எனும் அறியாமையை
ஒளி மயமான பரமேஸ்வரனின் அருள் ஒன்றே தீர்க்க முடியும் ! எப்பேர்ப்பட்ட இருளும், தங்கள் அனுகிரகத் தால் ஒளிமயமாகிவிடும் அல்லவா? அப்படிப்பட்ட அனுகிரகத்தை எனக்கு அருள வேண்டும் என ஆசார்யாள் மனமுருக பிரார்த்தனை செய்கிறார் !
ஆசார்யாள் பரமேஸ்வர் அவதாரம். நமக்கு பக்தி ஊட்டவே எடுத்த அவதாரம் ! நம் எப்படி பக்தி செய்யவேண்டும் என்பதை இப்படிச் சொல்கிறார் !
மூக பஞ்ச சதி ஸ்லோகத்தில் இதே கருத்தை வலியுறுத்துவதாக சொன்ன மேற்கோள் அருமை !
ஜய ஜய சங்கரா…

பாலக வெங்கட்ரமணன்… மதுரையில, ஸ்வாமி கோவில போயி 63 நாயன்மார்கள் முன்னாடி நிண்ணுண்டு, கண் ஜலம் விட்டு, உங்களுக்கெல்லாம் பரமேஶ்வரன், தரிசனம் கிடைச்சிருக்கு, உங்களுக்கு, கிடைச்ச அனுக்கிரஹம், எனக்கு கிடைக்காதான்னு கதறிருக்கார். … *_இந்த வரிகள் ஸத்யப்ரமாணம்_*
அண்ணாமலையார்,
“பாலக வெங்கட்ரமணனை” ஆட்கொண்டு பகவான் ரமண மஹரிஷியாக அருளச்செய்தார்.

_அழுதேன் நின்பால் அன்பாய் மனமாய் அழல் சேர்ந்த மெழுகேயன்னார்_ ….
…….
ஆனால் *வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே….*

_மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே_
_மணிவாசக பெருமான் திருவாசகத்தில் உருகினார். அடைந்தார்._

பொய்கையாழ்வாரும்  
   
*_பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி … அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்-_* முதல்திருவந்தாதியில் உருகும் பக்தியை வெளிப்படுத்துகிறார். …
_இந்த புண்ணிய பூமியின் மஹான்களின் வரலாறு…. நம்மைக் கரம்பிடித்து கரை சேர்க்க ப்ரார்த்திப்போம்_🙏🙏

இன்றைக்கு மயிலையே கையிலமாகிய கபாலீஶ்வரர் ஸூர்ய ப்ரபையில் ஜொலிக்கிறார். தரிஶனம் செய்யும்போது
ப⁴வதி த்வம்ʼ கோடிஸூர்யப்ரப⁴꞉ . எனும் இந்த ஶிவானந்தலஹரியின் 58 வது ஶ்லோகத்தின் அர்த்தபாவம் கண்முன்னே விகஸித்தது. நமஸ்காரங்கள் 🌞🌻

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.