Categories
Govinda Damodara Swamigal

மோக்ஷமென்னும் மாடிக்கு பக்தி மார்கத்தின் ஏணிப்படிகள்

மஹாபெரியவா, வீழிநாதன் மாமா கிட்ட ஒரு தடவை, “நாம சூரியனை நோக்கி போயிண்டு இருந்தா நிழல், நம்மைத் தொடர்ந்து வரும். அந்த மாதிரி சாஸ்த்ரத்துல இருக்கிற ஒரு லக்ஷியத்தை வெச்சுண்டு, நாம அதை நோக்கிப் போயிண்டே இருந்தோம்னா, பணம், புகழ், பதவி எல்லாம், தானா நம்ம பின்னாடி வரும்.” அப்டீன்னு சொல்லியிருக்கா. இதை வந்து வீழிநாதன் மாமா, “நான் பல பிரசங்கங்கள்ல இதைச் சொல்லிடறது. ஒரு வாட்டி, கொல்லா சத்திரத்துல, பெரியவாளும் இருந்தா, வித்வான்களும் இருந்தா. அங்க நான் இதை சொன்னேன். அப்போ, பெரியவா, “நான் அப்படி சொல்லலியே”, அப்டீன்னா. நான் “காக்கிநாடால இருந்து ராமச்சந்திரபுரம் போகும் போது, பெரியவா பல்லக்குல வந்துண்டு இருந்தேள். நான் பக்கத்துல வரும்போது சொன்னேள்”,  அப்டீங்கறேன். பெரியவா, “நான் அப்படி சொல்லலையே”, அப்டீங்கறாளாம். இவர் சொன்னாராம். “இந்த மாதிரி அர்த்தம் எனக்குத் தோணாது. எனக்கு சொல்றதுக்குப் பெரியவாளை தவிர யாரும் இல்லை. பெரியவாதான் சொல்லியிருக்கணும்”, அப்டீன்ன உடனே, பெரியவா சிரிச்சுண்டு, “நான் என்ன சொன்னேன்னா, லக்ஷியத்தை நோக்கி நாம போயிண்டு இருந்தோம்னா, பணம், பதவி, புகழ் இந்த மூணும் வேண்டாம், வேண்டாம்னாலும் துரத்திண்டு வரும், அப்டீன்னு சொன்னேன். அந்த emphasisஐ நீ  விட்டுட்டியே” அப்டீன்னு சொன்னாளாம்.

அந்த மாதிரி, போன generation ல வரைக்கும் லக்ஷத்துல ஒருத்தராவது அந்த மாதிரி விவேகத்தோடு இருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடிய வாத்தியார்கள், வைத்தியம் பாக்கறவா, வைதீகத்துல இருந்தவா. அவா எல்லாம் நாம கஷ்டப்படரவாளுக்கு உபகாரம் பண்ணனும்னு, ஒரு வைத்தியர், முடிஞ்ச பணத்தை கொடுங்கோ, அப்டீன்னு வைத்தியம் பண்ணுவார். அப்படி பண்ணினாலும், அவருடைய வாழ்க்கைக்குத் தேவையான அளவுக்கு, ஒரு இருக்க இடமோ, சாப்பாடோ, பிள்ளைகள் படிப்போ, குழந்தைகளுக்குக் கல்யாணமோ எல்லாம் நடந்த போது, இந்த பெரியவா சொல்ற வார்த்தை, “நாம லக்ஷியத்துல பார்த்து போயிண்டே இருந்தா பணம், பதவி, புகழ் எல்லாம் தானா நம்மைத் தேடி வரும்”, அப்டீங்கிறதை நாம கேட்டு வியக்கறோம். அவ்வளவுதான். ஆனா அவா அதை, அனுபவிச்சிருப்பா. அந்த தரிசனம் அவாளுக்குக் கிடைச்சிருக்கும். போன generationல இந்த மாதிரி தியாக புத்தியோட இருக்கறவா இருந்தா.

அதே மாதிரி, நல்ல குழந்தைகள் இருந்தா படிப்பு சொல்லித்தரணும், அப்டீன்னு எவ்வளவோ பேர், படிப்பு சொல்லித்தந்து அதனால அவாளுக்கும் ஒரு பெருமையும், நல்லாசிரியர் போன்ற பதவிகளும், பட்டங்களும், வாழ்க்கையை நடத்த வேண்டிய தேவையான பணமும் எல்லாம் வந்த காலம் உண்டு. இப்ப நமக்கு அந்த பண்றதுக்கே பயமா இருக்கு. சிவன் சாரும், இந்த காலத்தில் இரக்கம், அன்பு இதெல்லாம் பாத்துதான் பண்ணனும், அப்டீன்னு சொல்லி இருக்கார். ஒரு விவேகமா நடந்துகிறதுக்கு, அவ்வளவு risk எடுக்க வேண்டியிருக்கு, அவ்வளவு பயப்பட வேண்டியிருக்கு. காலம் அந்த மாதிரி இருக்கு.

நான் இதைக் கேட்டபோது, “ஸ்வாமிகள்  ராமாயண, பாகவதப் பிரவசனம் பண்றேன். பணம் கூட்டத்தை பத்தி எனக்கு அக்கறை இல்லை” அப்டீன்னு பண்ணிண்டு இருந்தார். சூரியனைப் பார்த்துப் போனா, நிழல் கூட வரும், அப்டீங்கிற மாதிரி, இந்த பணம், பதவி, புகழ் எல்லாம் அவருக்கும் வந்தது. ஆனா  “வெயிலுக்கு உதவா உடம்பின் வெறுநிழல் போல் கையிற் பொருளும் உதவாது காணும்கடை வழிக்கே” அப்டீன்னு அருணகிரிநாதர் சொல்ற மாதிரி, இந்த பணம், பதவி எல்லாம் நிழல் மாதிரிதான், அப்டீன்னு அதை அவர் துச்சமா நினைச்சு, பகவான் தான் சூரியன் மாதிரி, எனக்கு அதுதான் லக்ஷ்யம், அப்டீன்னு ஸ்வாமிகள் போயிண்டே இருந்தார். அப்ப அவருக்கு பகவானே கிடைச்சார்”, அப்டீன்னு (ஸ்வாமிகள் ஆராதனை பற்றிய போன கட்டுரையில்) ஒரு வார்த்தையில முடிச்சுட்டேன்.

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை

அப்பறம் ஸ்ரீ சுந்தர்குமார் அந்த பாகவதம் மூணாவது ஸ்கந்தம், இருபத்தைந்தாவது அத்யாயத்துல இருந்து சில ஸ்லோகங்கள் சொல்லி, மஹான்களுடைய லக்ஷணங்கள், அது ஸ்வாமிகளுக்கு எப்படி பொருந்தறது, அப்டீன்னு சொன்னார். அதை திரும்பவும் கேட்டபோது, அந்த நான்கு ஸ்லோகங்களில் ஸ்வாமிகள், “பகவானையே நான் பேசிண்டு இருக்கப் போறேன், பணம், புகழ் எனக்கு ஒரு பொருட்டல்ல”, அப்டீன்னு தீர்மானம் பண்ணினது, ஒரு first step தான். அதுக்கப்புறம் அவர் எப்படி படிப்படியா உயர்ந்து அவர் பகவானை அடைஞ்சார் அப்டீன்னு இந்த ஸ்லோகத்துல இருக்கிற ஒரு ஒரு குணத்தையும் எடுத்தா, அந்த படிகளை சொல்ற மாதிரி தோன்றது.

मय्यनन्येन भावेन भक्तिं कुर्वन्ति ये दृढाम्  மயி அனந்யேன பாவேன பக்திம் குர்வந்தி யே த்ருடாம் அப்டீன்னு “பகவானைத் தவிர வேற எதுலயும் மனசு வெக்காம பக்தி பண்ண போறேன்” அப்டீன்னு, அவர் முடிவு பண்ணார். அப்படி அவர் பண்ண ஆரம்பிச்சு, கொஞ்ச நாள்லயே அவருக்கு பணக்கஷ்டம். பணம் சேரலை. அவர் சேரவும் விடலை. ஆனா, பாக்கறவா எல்லாம், நாம அவருக்கு help பண்றோம்னு நினைச்சுண்டு, “இந்த மாதிரி பணத்தை நீங்க ரசிக்க மாட்டேங்கறேள். இந்த மாதிரி எல்லாம் இருந்தா நடக்காது” அப்டீன்னு அவரை வந்து “முட்டாள்தனமா இருக்கு, உங்க கார்யங்கள். புத்தி இல்லாத behaviour” அப்டீன்னெல்லாம் கூட கடுமையா பேசியிருக்கா. ஆனா ஸ்வாமிகள் तितिक्षवः திதீக்ஷவ: அப்டீன்னு, தீதீஷான்னா, மான அவமானத்தையோ, வெயில் மழையையோ எந்த கஷ்டத்தையும் பொறுத்துக்கறதுக்கு திதீக்ஷைன்னு பேரு. அப்படி ஸ்வாமிகள் materialists சொல்ற வார்த்தைகள் எல்லாம், “ராமாயணத்துல ராக்ஷசிகள் சீதா தேவிகிட்ட சொல்ற மாதிரி. இதெல்லாம் நான் காதுல வாங்க மாட்டேன்” அப்டீன்னு அதை ஒரு அவமானமா நினைக்காம அதை அவர் பொறுத்துண்டு இருந்துட்டார்.

कारुणिकाः காருணிகா: ஆனா அதே ஜனங்களே கூட திரும்ப வந்து, தன்னுடைய கஷ்டங்களை அவர்கிட்ட சொல்லும்போது, “பகவான் இருக்கார், உன் கஷ்டம் சரியாயிடும்” அப்டீன்னு அவர் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி இருக்கார். “இது எதுக்குப் பண்றேள்”னு நான் கேட்பேன். “உங்களுக்கே பாராயணம் இருக்கு. யார் யாரோ வந்துண்டே இருக்கா”. நான் அப்ப bachelor. அதனால எனக்கு கஷ்டம் ஒண்ணும் சொல்லிக்கறத்துக்கு அவ்வளவு  இல்லை போல இருக்கு. அதனால மத்தவா எல்லாம் வந்து சொல்லிண்டு இருக்கும்போது நான் கேட்பேன். ஸ்வாமிகள் பாகவத்ததுல இருந்து ஒரு ஸ்லோகம் எடுத்துக் காண்பிச்சார். “ஆஷு துஷ்யதி ஜனார்தன:” யார் பகவான் பேரால ஆறுதல் சொல்றாளோ, அவாகிட்ட பகவான் வெகு சீக்கிரத்தில் திருப்தி அடைந்து அனுக்ரஹம் பண்ணுவார்”னு இருக்கு. அதனாலதான் சொல்றேன், அப்டீன்னு சொன்னார்.

அடுத்தது सुहृदः सर्वदेहिनाम् ஸுஹ்ருத: ஸர்வதேஹினாம் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிற மாதிரி எல்லா உயிர்களிடத்தும் அன்போட, கருணையோட இருக்கறது. இந்த மாதிரி ஆறுதல் சொல்றது, அவர் வரவாளோட statusஐ பார்த்து சொன்னாரானு பார்த்தா, நான் அங்க உட்கார்ந்து இருக்கும்போது பாத்துருக்கேன். அழகா இருந்தாலும் சரி, அவலக்ஷணமா இருந்தாலும் சரி, படிச்சவனா இருந்தாலும் சரி, பாமரனா இருந்தாலும் சரி, ஏழையா இருந்தாலும் சரி, பணக்காரனா இருந்தாலும் சரி, யார் வந்தாலும் அவாளுக்கு, அவாளுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி,  பிள்ளைகள், friends எல்லாம் விட ரொம்ப ஸுஹ்ருத்தாக (well wisher) மாறி ஸ்வாமிகள் அவாளுக்கு ஷேமத்தை சொல்வார். அவா அதை கேட்டு ரொம்ப பெரிய நன்மைகளை அடைவா. நான் அதை நிறைய பார்த்து இருக்கேன்.

அடுத்தது, अजातशत्रवः அஜாதசத்ரவ: அவாளுக்கு சத்ருவே கிடையாது. இந்த மாதிரி எல்லார்கிட்டயும் கருணையோடு இருந்து இருந்து, அவாளுக்கு யார் மேலயும் த்வேஷமே வர்றது இல்ல. மத்தவா மேல இருக்கிற  தப்புகள் தெரியும். “ஸ்வ தோஷ பர தோஷ வித்” அப்டீன்னு அவாளுக்கு மத்தவா மேல இருக்கிற தோஷங்கள் தெரியும், ஆனா அதை பொருட் படுத்தறது இல்ல. நூறு தப்பு தன்னிடத்தில பண்ணிணாலும் பொறுத்துக்கறது. அவா ஒண்ணு, தான் சொன்னதை கேட்டு நடந்துண்டா, ஒரு பாராயணம் பண்ணா, அவாளை encourage பண்றது. அப்டீன்னு,வெச்சிருந்தார்.

அடுத்தது शान्ताः சாந்தா: சாந்தம்கிற குணத்துக்கு, சுவாமிகள் தான். epitome of சாந்தம். சாந்தம்னா மனசு அடங்கினவானு அர்த்தம். அவருக்கு கோபமே வராது. எவ்வளவு provoke, irritate பண்ணினாலும், அவருக்கு கோபமே வராது.

साधवः साधुभूषणाः ஸாதவ: ஸாது பூஷணா: அந்த நாகப்பட்டினத்துல ஒரு வாட்டி போயி அவர் பிரவசனம் பண்ணி இருக்கார். அடுத்த வாட்டி போகும்போது, யாரோ, “நீங்க இவ்வளவு அற்புதமா ராமாயணம் சொல்றேள். குடுமி வெச்சுக்க வேண்டாமா?” அப்டீன்னு, ஒரு slip எழுதி அனுப்பிச்சிருக்கா. கூட வந்த  ராகவ ஐயங்கார், “இதெல்லாம் நீ விட்டு தள்ளு. நீ வேலைக்கெல்லாம் போறே”, அப்டீன்ன உடனே, ஸ்வாமிகள் “அவர் கேட்டது நியாயம்” அப்டீன்னு அடுத்த நாளே குடுமி வெச்சுண்டுட்டார். இப்படி அந்த ஸாதவ: ஸாது பூஷணா: அப்டீன்னா, ஒழுக்கம், ஆசாரம் எல்லாத்தையும் follow பண்ணனும்னு, அவர் எல்லா ஆசாரங்களையும் ஒண்ணு ஒண்ணா எடுத்துண்டுட்டார். தர்ம சாஸ்திரங்கள்ள சொன்னதை எல்லாம், “நாம இந்த வழியில இருக்கோம், நாம ஒழுக்கமாக இல்லேன்னா, ராமாயணத்தை யாராவது கேலி பேசிடுவா, அப்டீன்னு, ஒழுக்கமா இருக்கணும், அந்த தர்ம சாஸ்திரங்கள்ல சொன்னது முடிஞ்சது எல்லாம் follow பண்ணனும், சந்தியாவந்தனம், பிரம்மயக்ஞம், குடுமி, பஞ்சகச்சம், இப்படி எல்லாவற்றையும் strict ஆ follow பண்ண ஆரம்பிச்சார்.

मय्यनन्येन भावेन भक्तिं कुर्वन्ति ये दृढाम्  மயி அனந்யேன பாவேன பக்திம் குர்வந்தி யே த்ருடாம் வேற எதுலயும் மனசு வெக்காம திருடமான பக்தி பண்றது, அப்டீன்னு முடிவு பண்ணி ஸ்வாமிகள், பெரியவாகிட்ட உத்தரவு வாங்கிண்டு, வேலையை resign பண்ணிட்டு, வெளியில வந்துட்டார். ராமாயண பாகவதமே படிச்சுண்டு இருந்தார்.  मत्कृते त्यक्तकर्माण: லௌகீக கார்யங்கள், கல்யாணங்கள் போறது, paper படிக்கறது இப்படி எல்லாத்தையும் விட்டுட்டார்

त्यक्तस्वजनबान्धवाः த்யக்த ஸ்வஜன பாந்தவா: அவருக்கு ஆரம்பத்துல அக்கா, அத்திம்பேர் கூட வந்து இருந்தா, அப்பா அவரோட இருந்து கடைசி காலத்துல காலமானார். மனைவி, குழந்தைகள் எல்லாரையும் அவர் பொறுப்போட கடன் வாங்கி படிக்க வெச்சு, சாப்பாடு போட்டு, மருந்துகள் வாங்கிக் கொடுத்து இப்படி பாத்துண்டார். ஆனா அவாள பத்தின கவலையை பகவான்கிட்ட விட்டுட்டார். அப்படி பார்த்தா, நாங்க எல்லாருமே, அங்க வந்தவா எல்லாருமே பந்துக்கள்தான், ஆனா யார்கிட்டயும் அவருக்குப் பற்று கிடையாது.

मदाश्रयाः மதாஷ்ரையா: தெய்வத்தை மட்டுமே ஆஸ்ரயிச்சு இருந்தா அவா. அந்த மாதிரி ஸ்வாமிகள், யாரையும் நம்பி இல்லை. தானும், தன்னை சேர்ந்த அந்த குழந்தைகள் எல்லாம்  கூட, குருவாயூரப்பன் நமக்கு சாப்பாடு போடறான், அப்டீங்கிற ஒரு நம்பிக்கையோட, யார்கிட்டயும் எந்த ஒரு coffee க்கு கூட ஒரு அஞ்சு ரூபா கேட்காத மாதிரி வளர்த்து இருந்தார்.

कथा मृष्टाः शृण्वन्ति कथयन्ति च கதா ம்ருஷ்டா: ஸ்ருந்வந்தி கதயந்தி ச என்னுடைய கதைகள் ல ரொம்ப பிரியமா இருப்பா. அந்த தெய்வம்னு ஒண்ணு இருக்குங்கிறதை நிஜமாவே உணர்ந்து, மந்திரத்துல மாங்காய் விழும்னா அவருக்கு விழுந்தது. ராமாயணம் படிப்பார். யாரையும் ஸ்தோத்திரம் பண்ண மாட்டார். சபா செகரட்டரி எல்லாம் அனுசரிச்சு போகணும், அவாளோட சௌகர்யா சௌர்யங்கள் பாக்கணும் அப்படியெல்லாம் எதுவுமே, வெச்சுக்காம, நான் பகவானுடைய கதைகளை படிப்பேன், கேட்பேன், சொல்லுவேன். இது மட்டுமே பண்ணிண்டு இருப்பேன், அப்டீன்னு இருந்த ஒருத்தர். அவருக்கும், அப்புறம் அவரை சேர்ந்த எல்லாருக்கும் சாப்பாடு, துணிமணி எளிய தேவைகளை எல்லாம் பகவான் பூர்த்தி பண்ணிண்டு இருந்தார். வந்தவா எல்லாம், நமஸ்காரம் பண்ணி தான், அவர்கிட்ட பணத்தை கொடுத்துட்டு போனா. ஒருத்தராவது அவர் thanks சொல்லனும்னு எதிர்பார்க்கலை. அப்படி நினைக்கறதே தப்பு அப்டீன்னு புரிஞ்சுண்டு இருந்தா. அப்படி ஸ்வாமிகளுக்கு கண்கூடா பகவான் நம்மளை காப்பாத்தறார்னு, அப்டீங்கிறது தெரிஞ்சதுனால, அவர் இந்த ராமாயணத்தையும் பாகவதத்தையும் சொல்லும்போது,  அதில் அந்த சத்யத்தோட த்வனி இருக்கும். பகவான் காப்பாத்துவார் அப்டீன்னு சொல்றது பலிக்கும். “சுக்ரீவன், நான் கனவுல நினைக்காத ராஜ்யமும், என் மனைவியும் எனக்கு திரும்ப  கிடைச்சா”, அப்டீன்னு சொல்லும்போது,  “ஸ்வாமிகள் ராமர் அனுக்ரஹத்துனால எல்லாம் கிடைக்கும்”, அப்டீன்னு சொல்வார். அது அவருடைய தரிசனம். அவருடைய அனுபவத்துல இருந்து சொல்ற வார்த்தை. அதோட power ஏ தனியா இருந்தது.

तपन्ति विविधास्तापा: नैतान्मद्गतचेतसः தபந்தி விவிதாஸ்தாபா: நைதான் மத்கதசேதஸ: இதுதான் ஸ்வாமிகளுடைய வாழ்க்கைக்கு ஒரு இலக்கணமா அமைஞ்சுது. இன்னிக்கு ஒரு இலக்கியமா நினைச்சு நினைச்சு அதுல இருந்து படிச்சு, பாடம் கத்துக்கிற மாதிரி இருக்கு. विविधास्तापा: விவிதாஸ்தாபா: பலவிதமான தாபங்கள். அவருக்கு, உடம்புல பிரஷர், sugar, ஹார்ட் trouble இன்னும் piles, இருக்கிற எல்லா வியாதியும் உடம்புல இருந்தது. family sideலயும் அவருக்கு கஷ்டங்கள் இருந்தது. குழந்தைகளுக்கு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஸ்ரமம் இருந்தது. பணத்துல கஷ்டம் இருந்தது. இந்த கலிகாலத்துல 1950 ல இருந்து   1985 வரைக்கும் கடன் வாங்கிண்டு, வட்டிக்கு வட்டி கட்டிண்டு இருந்தார், அப்டீன்னா நம்ப முடியுமா! அப்படி அவர் இருந்தார். அவர் சொல்லுவார். இந்த பணக் கஷ்டம் 1986க்கு அப்புறம் தீர்ந்தது. இல்லேன்னா எல்லாருக்குமே ரொம்ப ஸ்ரமமா போயிருக்கும்.  பகவான் அதை ஒண்ணை மாத்தினார், பாக்கி எல்லாம் அப்படி இருந்துண்டே இருந்தது, அப்டீம்பார். மூகபஞ்சசதில

आकाङ्क्ष्यमाणफलदानविचक्षणायाः

कामाक्षि तावककटाक्षककामधेनोः ।

सम्पर्क एव कथमम्ब विमुक्तपाश-

बन्धाः स्फुटं तनुभृतः पशुतां त्यजन्ति ॥

ஆகாம்க்ஷ்யமாணபலதானவிசக்ஷணாயா: |
காமாக்ஷி தாவககடாக்ஷக-காமதேனோ: |
ஸம்பர்க ஏவ கதமம்ப விமுக்தபாஶ-
பந்தா: ஸ்புடம் தனுப்ருத: பஶுதாம் த்யஜந்தி ||

அப்டீன்னு ஒரு ஸ்லோகம். அதுல “அம்மா காமாக்ஷி, கேட்ட வரங்களை எல்லாம் கொடுக்கக் கூடிய காமதேனுவா உன்னுடைய கடாக்ஷம் இருக்கு. ஆனா அந்த பசுவுடைய ஸங்கம் கிடைச்சுடுத்துன்னா, சிலருக்கு பசுத் தன்மையே போயிடறது. பசு, பதி, பாசம் அப்டீன்னு சொல்றது இல்லையா. அந்த மாதிரி, பசுத்தன்மை, பாசங்கள் எல்லாம் விட்டு அவா, பகவானாவே ஆயிடறா. அப்டீன்னு ரெண்டாவது வரி. முதல் வரில கேட்ட வரங்கள் கிடைக்கும்னு இருக்கு. ஸ்வாமிகள் “இந்த முதல் வரி,  இந்த பணத்துனால ரொம்ப வந்து மனக்லேசம், சுத்தி இருக்கிறவாளுக்கு போகணுமேங்கிறதுனால அந்த முதல் வரியும் பலிச்சுது. ரெண்டாவது வரில அந்த வைராக்கியம் கிடைக்கும்கிறதும் எனக்கு பலிச்சுது” அப்டீன்னு சொல்வார். அப்படி  பலவிதமான தாபங்கள் ஸ்வாமிகளுக்கு வாழ்க்கையில இருந்தது नैतान तपन्ति நைதான் தபந்தி ஆனா இதெல்லாம் அவாளை  கஷ்டப்படுத்தறது இல்லை. ஏன்னா मद्गतचेतसः மத்கதசேதஸ: அவா மனசை முழுக்க எடுத்து என்கிட்ட வெச்சுட்டா. அந்த கதைகள் மூலமாகவும், ரூபத்தியானத்து மூலமாகவும், நாம ஸ்மரணத்து மூலமாகவும் மனசை முழுக்க எடுத்து என்கிட்ட வெச்சதுனால, அவாளுக்கு அந்த தாபங்கள் இருக்கு, ஆனா அது அவாளை ஒண்ணுமே பண்ணலை. இது நாம ஸ்வாமிகள் கிட்ட ஐம்பது வருஷம் பார்த்தோம்.

सर्वसङ्गविवर्जिताः ஸர்வஸங்கவிவர்ஜிதா: இவர்கள் எல்லா சங்கத்தையும் விட்டவர்களாக, இருக்கிறார்கள். இந்த மாதிரி, ஸ்வாமிகள் ஸந்யாசம் வாங்கிண்டார். பிரவசனம் பண்றதை விட்டுட்டுடார். எல்லா சங்கத்தையும் விட்டுட்டு பகவானிடத்தில் லயிச்சு இருந்தார்.

ஸ்வாமிகளை புரிஞ்சுக்கறது கஷ்டம். ஏன்னா நாம எல்லாரையும் இந்த காலத்துல மஹான்னு, நினைக்கிறோம். ஒரு தியாகம் பண்ணி பகவானுக்காக கொஞ்ச நாள், உழைக்கறா. அப்புறம், கொஞ்சம் புகழ் வந்த உடனே, ஒரு கோயில் கட்டறேன், அப்டீன்னு காசு collect பண்ண ஆரம்பிச்சுடறா. இல்ல ஒரு மடம் வெச்சுக்கறேங்கிறா. இல்ல ஒரு சங்கத்துல ப்ரெசிடென்ட், செகரட்ரி அப்டீன்னு பேர் போட்டுக்கறா. எல்லாருக்கும் அந்த ego வோட நமைச்சல் இருக்கு. அதுக்கு ஏதாவது ஒண்ணு, இந்த உலகத்துல பண்றா. இந்த உலகத்துல இருக்கிற மனுஷர்களை, கண்ணால் காண்கின்ற உலகத்தை ரொம்ப சத்யமா நம்பி, இதுல புகழ், பணம் கௌரவம், இதை எதிர்பார்த்து, அவா தெய்வ கார்யங்கள் எல்லாம் பண்றா. அப்படி இல்லாம, நமக்குக் கண்ணுக்குத் தெரியாத அந்த தெய்வத்தையே தன்னுடையக்  கண்ணால பார்த்து, அந்த குருவாயூரப்பனுக்குப் பூஜை பண்ணி, அவருடைய கதைகளைப் பேசி, அப்படி வாழ்ந்த ஒரு மஹான் நம்ம ஸ்வாமிகள்.

அப்பேற்பட்ட மஹான்களோட சங்கம்தான் நாம விரும்பணும் सङ्गस्तेष्वथ ते प्रार्थ्यः ஸங்கஸ்தேஷு அத  தே ப்ரார்த்ய: தேவஹூதி கிட்ட கபில முனிவர் சொல்றார். இப்பேற்பட்ட மகான்களோட சங்கத்தைதான் நீ ஆசை படனும். ஏன்னா, सङ्गदोषहरा हि ते ஸங்கதோஷ ஹரா ஹி தே நம்முடைய பாசங்களை அடியோடு வெட்டக் கூடிய சக்தி அவாளுக்குதான் இருக்கு.

அதை அவா, எப்படி பண்ணுவான்னா, அவா என்னுடைய கதைகளை சொல்லுவா. அது ஒரு ரசாயனம் மாதிரி, ஒரு மருந்து மாதிரி. அது மனசுல வொர்க் பண்ணி, तज्जोषनात् आशु अपवर्ग वर्त्मनि श्रद्धा रति: भक्ति: अनुक्रमिष्यति தஜ்ஜோஷநாத் ஆஷு அபவர்க வர்த்மனி ஷ்ரத்தா ரதி: பக்தி: அனுக்ரமிஷ்யதி மோக்ஷ வடிவமான பகவான்கிட்ட, இந்த सतां प्रसङ्गात् मम वीर्यसंविद: भवन्ति हृत् कर्ण रसायना: कथा: சதாம் பிரசங்காத் மம வீர்ய சம்வித: பவந்தி ஹ்ருத் கர்ண ரஸாயனா: கதா: என்னுடைய வீர்யத்தையும், பிரபாவத்தையும், ஔதார்யத்தையும். என்னுடைய குணங்களை எல்லாம் பேசக் கூடிய அந்த  கதைகளை இப்பேற்பட்ட மஹான்கள் கிட்ட கேட்டா , அது காது மூலமா மனசுக்குள்ள போயி ஒரு chemical reaction பண்றது அது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, आशु ஆசு, வெகு விரைவில், வெகு விரைவில் ங்கிறதுக்கு, ஒரு முயற்சியும் இல்லாம, இந்த மஹான்களை பார்த்து அவாளுடைய கதைகளை கேட்டாலே போறும். श्रद्धा रति: भक्ति: अनुक्रमिष्यति ஷ்ரத்தா ரதி: பக்தி: அனுக்ரமிஷ்யதி என்னிடத்துல உனக்கு பக்தியும், ஆசையும், நம்பிக்கையும் அதெல்லாம் தானா வளரும், அப்டீன்னு சொல்லி,

பகவான், மோக்ஷம் அடையறதுக்கு, உலக பாசங்களில் இருந்து விடுபடறதுக்கு, கபில முனிவரா அவதாரம் பண்ணின போது, தன்னுடைய அம்மா தேவ ஹூதிக்கு சொன்ன வார்த்தைகள், ஸ்வாமிகளுடைய வாழ்கைக்கு விளக்கமாக இருக்கு. ஸ்வாமிகள் அந்த பகவானுடைய கதைகளை சொன்னார். பணத்துல ஆசை இல்லாம, அப்டீங்கிறது மட்டும் இல்லை. அது ஆரம்பம். அங்கே இருந்து இத்தனை கொள்கைகளும் வெச்சுண்டு, விவேகி, சாது, முற்றின விவேகி, தெய்வசாது இத்தனைப் படிகளும் தாண்டி, ஞானியான மஹா பெரியவாளும், துறவியான சிவன் சாரும் மஹான்னு போற்றக் கூடிய நிலைமையை அடைஞ்சார். அவாளை நமஸ்காரம் பண்ணுவோம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா…

மோக்ஷமென்னும் மாடிக்கு பக்தி மார்கத்தின் ஏணிப்படிகள் (18 min audio of the above speech)

2 replies on “மோக்ஷமென்னும் மாடிக்கு பக்தி மார்கத்தின் ஏணிப்படிகள்”

This is a treasure. Excellent. Words are inadequate. Amazing to read and relish. All by His grace. Detailed comment were made in the other related blog and so I minimise my comments here. Prayers to HH Mahaperiava to keep you in this perspective and prosper for ever. Be blessed with Santhushti.

ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு அநேக கோடி வந்தனங்கள் 🙏 🙏
தினமும் மஹா பெரியவாளையும், ஸ்ரீ சிவன் சாரையும் மனதில் நிறுத்தி வணங்கிக் கொண்டிருந்தேன். தற்போது ஸ்ரீ ஸ்வாமிகளையும் மனதில் ஓர் அரை நிமிடம் தியானிக்க அம்பாள் காமாக்ஷி அருள்புரிந்து உள்ளார்.
ஸ்ரீ சுவாமிகளின் பக்தி நெறிமுறையில் வாழ்ந்த வாழ்க்கை,பக்தி நெறி பாதையில் செல்வோருக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
விவேகமும், வைராக்கியமும் ஒருங்கே பெற்று திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“என்ன பேறு பெற்றோமோ? இப்படி பட்ட ஒரு உத்தமமான மஹானை அறிந்து, போற்றி வணங்க!”

எத்தனை பாண்டியத்தியம் இருந்தும் பெயருக்கும், புகழுக்கும், பணத்திற்கும் ஆசை இல்லாமல் விவேகத்துடனும், விநயத்துடனும் வாழ்ந்தார்.
ஸ்ரீ சாரைப் பற்றியும் சமீப காலமாக தான் அறிய நேர்ந்தது.

இன்னும் சொல்லப்போனால் சுவாமிகளைப் பற்றி ஸ்ரீ சுந்தர் குமார் மாமா பிரவசனத்தில் முதல் அறிமுகம் கிடைத்தது, அதன் பிறகே ஸ்ரீ சிவன் சாரைப் பற்றி “sage of Kanchi” மூலமாக அறிந்தேன்.
ஸ்ரீ ஸ்வாமிகளைப் பற்றி சென்ற ஒரு வருடமாக தான் ஓரளவு முழுமையாக அறிய நேர்ந்தது.
ஆயினும் பெரும் பாக்கியம் தங்கள் மூலமாக ஸ்வாமிகளை தினம் ஸ்மரிக்க ஓர் பெரும் அனுக்ரஹம்.
எந்த ஒரு நேரத்திலும் அவரது திருவுருவை மனக்கண்ணில் நினைத்தால் சாந்தம் கிடைக்கிறது.
தங்கள் ஸுக்ருதத்தினால், பூவோடு சேர்ந்த நாரைப் போல என் போன்றோர்க்கு அந்த மணம் கிடைக்கின்றது.
ஸ்ரீ ஸ்வாமிகள் ஆசியைப் பெற, என்றும் அவர் சரணங்களில் ஷரணம்
🙏🙏🙇🙇

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.