Categories
Stothra Parayanam Audio

மணி மந்திர ஔஷதம் எனப்படும் அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு பாடல்கள் + ஒலிப்பதிவு


அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை:
1. சீர்பாத வகுப்பு  தமிழில் உள்ள முருகன் துதிகளிலேயே மிக மிக அழகானது இதுவே என்று எனக்கு தோன்றுகிறது. அருள் நெறியிற் சேர்த்து ஞானம் அளிக்கும்.
2. தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகமும் சித்திக்கும்.
3. வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது. பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது.


சீர்பாத வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு ஒலிப்பதிவு (Audio of seer pada vaguppu, devendira sanga vaguppu, vel vaguppu)


சீர்பாத வகுப்பு

உததியிடை கடவு மரகத வருண குலதுரக

உபலலித கனகரத சதகோடி சூரியர்கள்

உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை

உகமுடிவின் இருளகல ஒருஜோதி வீசுவதும்

உடலுமுடல் உயிரும் நிலைபெறுதல் பொருளென உலகம்

ஒருவி வரு மநுபவன சிவயோக சாதனையில்

ஒழுகுமவர் பிறிது பரவசமழிய விழிசெருகி

உணர்வுவிழி கொடு நியதி தமதூடு நாடுவதும்

உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்

உழலுவன பர சமயகலை ஆரவாரமற

        உரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ

உளபடியை உணருமவர் அநுபூதி ஆனதுவும்

        உறவுமுறை மனைவி மகவெனும் அலையில்  எனதிதய

உருவுடைய மலினபவ ஜலராசி ஏறவிடும்

        உறுபுணையும் அறிமுகமும் உயரமரர் மணிமுடியில்

உறைவதுவும் உலைவிலதும் அடியேன் மனோரதமும்

        இதழி வெகுமுக ககனநதி அறுகு தறுகணர

இமகிரண தருண உடுபதிசேர் ஜடாமவுலி

        இறைமகிழ உடை மணியொடணி ஸகல மணிகலென

இமயமயில் தழுவுமொரு திருமார்பில் ஆடுவதும்

        இமயவர்கள் நகரில் இறைகுடிபுகுத நிருதர் வயிறு

எரிபுகுத உரகர்பதி அபிஷேகம் ஆயிரமும்

        எழுபிலமும் நெறுநெறென முறிய வடகுவடிடிய

இளையதளர் நடைபழகி விளையாடல் கூருவதும்

        இனியகனி கடலைபயறு ஒடியல் பொரி அமுதுசெயும்

இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன்

        இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற

எழுபுவியை ஒருநொடியில் வலமாக ஓடுவதும்

        எறுழி புலி கரடி அரி கரி கடமை வருடை உழை

இரலை மரை இரவுபகல் இரைதேர் கடாடவியில்

        எயினரிடும் இதணதனில் இளகுதினை கிளிகடிய

இனிதுபயில் சிறுமிவளர் புனமீதுலாவுவதும்

        முதலவினை முடிவில்இரு பிறைஎயிறு கயிறுகொடு

முதுவடவை விழிசுழல வருகாலதூதர் கெட

        முடுகுவதும் அருள்நெறியில் உதவுவதும் நினையுமவை

முடியவருவதும் அடியர் பகைகோடி சாடுவதும்

        மொகுமொகென மதுபமுரல் குரவுவிளவினது குறு

முறியுமலர் வகுளதள முழுநீல தீவரமும்

        முருகுகமழ்வதும் அகிலமுதன்மை தருவதும் விரத

முனிவர் கருதரிய தவமுயல்வார் தபோபலமும்

        முருக சரவண மகளிர் அறுவர் முலைநுகரும் அறு

முககுமர சரணம் என அருள்பாடி ஆடிமிக

        மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழிஅருவி

முழுகுவதும் வருகவென அறைகூவி ஆளுவதும்

        முடியவழி வழியடிமை எனுமுரிமை அடிமை முழு

துலகறிய மழலைமொழி கொடுபாடும் ஆசுகவி

        முதலமொழிவன நிபுண மதுபமுகரித மவுன

முகுளபரிமள நிகில கவிமாலை சூடுவதும்

        மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய

மடுநடுவில் வெருவி ஒருவிசை ஆதிமூலமென

        வருகருணை வரதன் இகல்இரணியனை நுதியுகிரின்

வகிருமடல் அரி வடிவு குறளாகி மாபலியை

        வலியசிறையிட வெளியின் முகடுகிழிபட முடிய

வளருமுகில் நிருதன் இருபதுவாகுபூதரமும்

        மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில்

மருகன் நிசிசரர் தளமும்வரு தாரகாஸுரனும்

        மடியமலை பிளவுபட மகரஜல நிதிகுறுகி

மறுகிமுறையிட முனியும் வடிவேலன் நீலகிரி

        மருவுகுருபதி யுவதி பவதி பகவதி மதுர

வசனி பயிரவி கவுரி உமையாள் த்ரிசூலதரி

        வனஜை மதுபதி அமலை விஜயை திரிபுரை புனிதை

வனிதை அபிநவை அநகை அபிராமநாயகிதன்

        மதலைமலை கிழவன் அநுபவன் அபயன் உபயசதுர்

மறையின் முதல் நடு முடிவின் மணநாறு சீறடியே.


 தேவேந்திர சங்க வகுப்பு

தரணியில் அரணிய முரண்இர ணியன்உடல் தனைநக நுதிகொடு

            சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி

தமருக பரிபுர ஒலிகொடு நடம்நவில் சரணிய சதுர்மறை

            தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை

சரிவளை விரிஜடை எரிபுரை வடிவினள் சததள முகுளித

            தாமாங்குசம் என்றிரு தாளாந்தர அம்பிகை

தருபதி ஸுரரொடு சருவிய அஸுரர்கள் தடமணி முடிபொடி

            தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி

இரணகி ரணமட மயில்ம்ருக மதபுள கிதவிள முலைஇள

            நீர்தாங்கி நுடங்கிய நூல்போன்ற மருங்கினள்

இறுகிய சிறுபிறை எயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்

            யான் ஏங்குதல் கண்டெதிர் தான்ஏன்று கொளும்குயில்

இடுபலி கொடுதிரி இரவலர் இடர்கெட விடுமன கரதல

            ஏகாம்பரை இந்திரை மோஹாங்க ஸுமங்கலை

எழுதிய படமென இருளறு சுடரடி இணைதொழு மவுநிகள்

            ஏகாந்த ஸுகம்தரு பாசாங்குச ஸுந்தரி

கரணமும் மரணமும் மலமொடும் உடல்படு கடுவினை கெடநினை

            காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்

கனல்எரி கணபண குணமணி அணிபணி கனவளை மரகத

            காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்

கனைகழல் நினையலர் உயிர்அவி பயிரவி கவுரி கமலைகுழை

            காதார்ந்த செழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு

கரைபொழி திருமுக கருணையில் உலகெழு கடல்நிலை பெறவளர்

            காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்

அரணெடு வடவரை அடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்

            வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன் குஹன்

அறுமுகன் ஒருபதொ டிருபுயன் அபிநவன் அழகிய குறமகள்

            தார்வேய்ந்த புயன் பகையாம் மாந்தர்கள் அந்தகன்

அடல்மிகு கடதட விகடித மதகளிறநவரதமும்அக

            லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்

அதிபதி எனவரு பொருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்

            ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர ஸங்கமே.


வேல் வகுப்பு

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன்

எனதுளத்திலுறை கருத்தன் மயில்நடத்து குஹன் வேலே

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன்

எனதுளத்திலுறை கருத்தன் மயில்நடத்து குஹன் வேலே

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல்

சிவத்தஇதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன்

எனதுளத்திலுறை கருத்தன் மயில்நடத்து குஹன் வேலே

பனைக்கைமுக படக்கரட மதத்தவள கஜக்கடவுள்

பதத்திடு நிகளத்துமுளை தெறிக்க வரமாகும்     (திருத்தணியில்)

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு கவிப்புலவன்

இசைக்குருகி வரைக்குகையை இடித்துவழி காணும் (திருத்தணியில்)

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர்

உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்   (திருத்தணியில்)

ஸுரர்க்கும் முனிவரர்க்கும் மகபதிக்கும் விதிதனக்கும்

அரிதனக்கும் நரர்தமக்கும் உறும்இடுக்கண் வினைசாடும் (திருத்தணி)

சுடர்ப்பரிதி ஒளிப்ப நிலவொழுக்கு மதிஒளிப்ப

அலைஅடக்குதழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப்பிரபை வீசும் (திருத்தணி)

துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கின்

அவர்குலத்தை முதலறக்களையும் எனக்கொர் துணையாகும் (திருத்)

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை

அறுத்தெறிய உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் (திருத்தணியில்)

தருக்கிநமன் முறுக்கவரின் எருக்குமதி தரித்தமுடி

படைத்தவிறல் படைத்தஇறை கழற்கு நிகராகும் (திருத்தணியில்)

தலத்திலுள கணத்தொகுதி களிப்பின் உணவழைப்பதென

மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்க வளைவாகும் (திருத்தணியில்)

தனித்துவழி நடக்கும் எனதிடத்தும் ஒருவலத்தும்

இருபுறத்தும் அருகடுத் திரவுபகற் துணையதாகும் (திருத்தணியில்)

சலத்துவருமரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர்

சிவத்ததொடை எனச்சிகையில்விருப்பமொடு சூடும்  (திருத்தணியில்)

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்துடையும்

உடைப்படைய அடைத்துதிர நிறைத்து விளையாடும் (திருத்தணி)

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென

முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர ஓடும்    (திருத்தணியில்)

சினத்தவுணர் எதிர்த்த ரணகளத்தில்வெகு குறைத்தலைகள்

சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்   (திருத்தணியில்)

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன்

எனதுளத்திலுறை கருத்தன் மயில்நடத்து குஹன் வேலே

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன்

எனதுளத்திலுறை கருத்தன் மயில்நடத்து குஹன் வேலே

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன்

எனதுளத்திலுறை கருத்தன் மயில்நடத்து குஹன் வேலே

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலைவிருத்தன்

எனதுளத்திலுறை கருத்தன் மயில்நடத்து குஹன் வேலே

One reply on “மணி மந்திர ஔஷதம் எனப்படும் அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு பாடல்கள் + ஒலிப்பதிவு”

Aneka Namaskarangal for your divine seva anna. My humble prayers for you at the lotus feet of Sadgurunathar🙏💐Periyava Charanam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.