நேற்றைய தினம், ஆதி சங்கர பகவத் பாதாள் பூமியில பிறந்தது, காலடியில சிவகுரு, ஆர்யாம்பாங்கிற தம்பதிக்கு, குழந்தையாக தக்ஷிணாமூர்த்தியே பூமியில அவதாரம் பண்ணியிருந்தார், ரொம்ப மேதாவியா இருந்ததுனால அவருக்கு, அஞ்சு வயசுலயே பூணல் போட்டுட்டா, அப்படீன்னு சொன்னேன். இந்த வசந்த ருதுல பகவத் பாதாளோட அவதாரம். விவேக சூடாமணியில ஒரு ஸ்லோகம் இருக்கு.
शान्ता महान्तो निवसन्ति सन्तो वसन्तवल् लोकहितं चरन्तः |
तीर्णाः स्वयं भीमभवार्णवं जनान् अहेतुनान्यान् अपि तारयन्तः ||
சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ வஸந்தவல் – லோகஹிதம் சரந்த : |
தீர்ணா : ஸ்வயம் பீம – பவார்ணவம் ஜநாந் அஹேதுநாsந்யாநபி தாரயந்த : ||
அப்படீன்னு வசந்த ருது மாதிரி சாந்தர்களும், மஹான்களாகவும் இருக்கக் கூடியவா, பூமியில அவதாரம் பண்றா. அவா உலகத்துல, சுத்தி வந்ததுண்டு இருக்கா. அவா வசந்தத்தை போல, லோக ஹிதத்துக்காகவே, அவதாரம் பண்ணியிருக்கா. ஒரு வாழைமரம், ஒரு பசுமாடு, இதெல்லாம், முழு life ம் ஜனங்களோட நன்மைக்காகவே இருக்கிற மாதிரி, மஹான்கள், ஒவ்வொரு கார்யம் பண்றதும் நமக்கு க்ஷேமமா இருக்கு. வசந்தம் வந்துடுதுன்னா, மாம்பழம், பலாப்பழம் போன்ற நல்ல நல்ல, பழங்கள் கிடைக்கறது. நல்ல பூக்கள், கிடைக்கறது. மல்லிகைப் பூ நிறைய கிடைக்கறது. கொஞ்சம், வெயில் அடிச்சாலும், நல்ல இனிமையான வஸ்துக்கள் எல்லாம் கிடைக்கறது. இந்த பனிக்காலத்துல ரொம்ப உறைஞ்சு போயிருந்த எல்லாம் திரும்ப உயிரோட வந்து ரொம்ப செழிப்பாக பச்சை பசேல்னு, எங்கும், சந்தோஷம் பரவறது. அந்த மாதிரி மஹான்கள் வந்தாலே, எங்கும் சந்தோஷம்.
அந்த மாதிரி, மஹான்களுக்கு, நடுவுல ஒரு சூரியனைப் போல “அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ பவ சங்கர தேசிக மே சரணம்” என்பது போல, மற்ற மஹான்கள் எல்லாம் நக்ஷத்ரம் மாதிரி, சந்திரன் மாதிரி, சுக்ரன் மாதிரி இருக்கா. ஆதி சங்கர பகவத் பாதாள், வந்த போது, சூரியன் வந்த மாதிரி இருந்ததாம். அப்பேற்பட்ட, மஹத்தான ஒரு ஜோதி.
அந்த ஆதி சங்கர பகவத் பாதாளுக்கு, அஞ்சு வயசுல பூணல் போட்டா எங்கிறதை சொல்லும் போது பெரியவா, சொல்றா, “நம் குழந்தைகளுக்கு காலா காலத்துல பூணல் போடணும், நாம அந்த கடமையை தவற விடக் கூடாது”, அப்படீன்னு, அதை ரொம்ப stress பண்ணி சொல்லியிருக்கா. அதுல, என்ன சொல்றான்னா, பூணல்ங்கிறது எதுக்குன்னா, ஒரு குழந்தைக்கு காமம் உள்ள வரதுக்கு முன்னாடி காயத்ரி உள்ள வந்துடணும். அவா சின்ன வயசுலயே பூணல் போட்டு நிறைய காயத்ரி ஆவ்ருத்தி பண்ணினானா “மனனாத் த்ராயதே இதி மந்த்ர:” அப்படின்னு ஜபிக்கறதுனால அவாளை காயத்ரி காப்பாத்தும். பிராமணன் காயத்ரி ஜபம் நித்ய கர்மா பண்றது, optional கிடையாது. சந்த்யாவந்தனம் பண்ணனும்ங்கிறது, அது நித்ய கடமை. பண்ணலேன்னா, பாபம் வரும். அதனால பூணல் போடறதை ரொம்ப delay பண்ணிண்டே போனா ஒரு பெரிய பாபம் வரும். காலா காலத்துல பூணல் போடணும். அப்படீன்னு சொல்லியிருக்கா.
இந்த காலத்துல கொஞ்சம் சீக்கிரமே குழந்தைகளுக்கு, பூணல் போடறதை பார்க்கிறோம். ஆனா பெரியவா, சொன்ன இன்னொரு point -பூணலை ஆடம்பர function ஆக ஆக்கக் கூடாது. இது ஒரு கல்யாணம் மாதிரி செலவுல கொண்டு போயி விட்டுடறா, அப்படிங்கிறா. அதை நாம follow பண்றோமான்னு தெரியலை. பூணல் வைதீக கார்யம். இதுல ஆடம்பரதுக்கே, இடமில்லை. அப்படீன்னு சொல்றா.
அப்படி, ஆதி சங்கரருக்கு, அஞ்சு வயசுல பூணல் போடறா. அப்புறம், அவருடைய தகப்பனார், பகவான் கிட்ட, போயி சேர்ந்துடறார். சங்கரர், வேத அத்யயனம் பண்றார். பிக்ஷாசரணம் அப்படீன்னு, அந்த காலத்துல வேத அத்யயனம் பண்றவா, அந்த பிரம்மச்சாரி குழந்தைகள், நாலு ஆத்துல போயி, பிக்ஷை வாங்கி அதை குரு கிட்ட கொடுத்து, குரு என்ன சாப்பாடு போடறாரோ, அதை சாப்பிட்டுண்டு, அப்படித் தான் படிக்கணும்னுவெச்சுருந்தா. ராஜாவாத்து பிள்ளையா இருந்தாலும் சரி, ஏழை பிராம்மணன் ஆத்து பிள்ளையா இருந்தாலும் சரி, அவனுக்கு அடக்கம் வரணும். அவனுடைய கர்வம் போகணும் எங்கிறதுக்காக, விநயம் வரணும் எங்கிறதுக்காக, பிக்ஷை வாங்கி சாப்பிட்டு படிக்கணும்னு, வெச்சுருந்தா.
அப்படி ஆதி சங்கர பகவத் பாதாள் பிக்ஷாசரணம் பண்ணிண்டு இருக்கார். அப்போ, ஒரு நாளைக்கு காலம்பற, ஒரு தெருவுல போகும்போது, அங்க ரொம்ப ஏழ்மையில் ஒரு குடும்பம் இருக்கு. ஒரு தம்பதி, இருக்கா. அந்த வீட்டு வாசல்ல, போயி நின்னுண்டு, ” பவதி பிக்ஷந்தேஹி” அப்படீன்னு கேட்கறார். அந்த அம்மா உள்ள இருந்து எட்டிப் பார்க்கறா. வீட்டுல ஒரு குந்துமணி அரிசி கூட இல்ல. சாப்பாடு, ஒண்ணுமே இல்ல. ரெண்டு நாளா பட்டினி அவா. அன்னிக்கு த்வாதசி. ஆனா அவாளுக்கு, என்னிக்குமே ஏகாதசி. அவ உள்ள வந்து தேடிப் பாக்கறா. ஒண்ணுமே இல்ல. வெளியிலே வரா. வெட்கப் பட்டுண்டு உள்ள போறா. அப்புறம், இவரோட, அந்த தேஜஸை பார்த்து “பகவானே இறங்கி வந்திருக்காறோ எங்கிற அளவுக்கு, அப்படி தேஜஸா இந்த குழந்தை வந்து நிக்கறது. ‘பவதி பிக்ஷந்தேஹி’, ன்னு கேட்கறது”ன்னு, திரும்பியும், வாசல்ல, வரா. இவர், ரெண்டாம்,வாட்டி, ‘பவதி பிக்ஷந்தேஹி’ன்னு சொல்றார். மறுபடி அந்த அம்மா, உள்ள போயி, தேடி பாக்கறா. ஒரு பொறையில ஒரு அழுகின நெல்லிக்காய் இருக்கு. அந்த நெல்லிக்காயை போடறதா அப்படீன்னு, உள்ள போயிடறா. அப்புறம், திரும்பவும், “ஒண்ணும் போடலைன்னு இருக்க வேண்டாம்” னு நினைக்கறா. அவர் மூன்றாம் தடவை, “பவதி பிக்ஷந்தேஹி” ன்னு கேட்கறார். மூணு வாட்டி, கேட்கறது, சம்ப்ரதாயம். அந்த அம்மா, வெட்கப் பட்டுண்டே அந்த நெல்லிக்காயை அவருடைய கப்பறையில போடறா. போட்ட உடனே, ஆதி சங்கரருக்கு, மனசு, இளகறது.
இவா இவ்வளவு வறுமையில் இருக்காளேன்னு. அப்படீன்னு, லக்ஷ்மிதேவியை குறித்து, ஒரு ஸ்தோத்ரம் பண்றார். கனகதாரா ஸ்தோத்ரம்னு பேரு. ” அங்கம் ஹரே: புலக பூஷண மாச்ரயந்தி ” அப்படீன்னு ஆரம்பிச்சு, ஒரு பதினெட்டு ஸ்லோகங்கள். ரொம்ப அழகான ஸ்லோகங்கள். இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடறார். அப்போ, லக்ஷ்மிதேவி சொல்றாளாம், “இவாளுக்கு நிறைய கர்மவினை பாக்கியிருக்கு. அதனால, இவாளுக்கு, சம்பத்தை கொடுக்க முடியாது”ன்னு, சொன்னாளாம். அப்போ, “அம்மா! வினைங்கிறது இருக்கட்டும். நான் பிரார்த்தனை பண்றேனே, எனக்காக நீ கருணை பண்ண வேண்டாமா”,
दद्याद् दयानुपवनो द्रविणाम्बुधाराम् अस्मिन्नकिञ्चनविहङ्गशिशौ विषण्णे ।
दुष्कर्मघर्ममपनीय चिराय दूरं नारायणप्रणयिनीनयनाम्बुवाहः ॥
தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்பு தாராம்
அஸ்மிந்நகிஞ்சன விஹங்க சிசௌ விஷண்ணே
துஷ்கர்ம தர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயனீ நயனாம்புவாஹ:
உன்னுடைய கடாக்ஷத்தை இவா பக்கம் திருப்பு. “தயானுபவனஹ” தயை என்கிற காற்றினால், உந்தப்பட்டு, கர்மாங்கிறது rule. ஆனா உனக்கு தயைங்கிறது ஒண்ணு இருக்கே. நான் பிரார்த்தனை பண்றேனே, தயவு பண்ணு”, அப்படீன்னு, வேண்டிக்கறார். “தயானு பவனோ த்ரிவிணாம்புதாராம்,” “இவாளுக்கு, செல்வமாகிய மழையை கொட்டு”, அப்படீன்னு பிரார்த்தனை பண்றார்.
அந்த “அஸ்மின் அகிஞ்சன விஹங்க சிசௌ” ஒரு சாதகப் பக்ஷி,ன்னு ஓண்ணு மழை நீரை மட்டும் தான், சாப்பிடுமாம். அதுக்கு, தொண்டையில் ஒரு ஓட்டை இருக்குமாம். அதனால, ஜலத்தை, மத்த பக்ஷிகள், மாதிரி குடிச்சா, தொண்டை ஓட்டை வழியா அந்த ஜலம், வந்துடும். மழையின் போதுஅது ஆகாசத்தை பார்த்துண்டு நிற்குமாம். மழைஜலம் நேரே தொண்டைல விழுமாம். அது தான் அதுக்கு தாக சாந்தி. அப்படி “இவாளோட கர்மத்துனால இவளோட கையில வர பணமெல்லாம் செலவாகி, இவா பரம ஏழைகளா இருக்கா, நீ தயவு பண்ணினா, செல்வ மழையா கொட்டினா அப்பறம் அவா கஷ்டம் தீர்ந்துடுமே” அப்படின்னு வேண்டிண்டாராம், அப்போ லக்ஷ்மி தேவி கனக தாரையா ஒரு முகூர்த்த காலம், தங்க நெல்லிக்கனியா அவா ஆத்து மித்ததுல மழை பெய்ய வைக்கறா. அப்படி அம்பாளோட அனுக்கிரஹம், ஆதி சங்கரரோட பிரார்த்தனை.
இன்னிக்கும், இந்த கனகதாரா ஸ்தோத்ரத்தை பாராயணம் பண்ணினா, ஏழ்மை விலகும் அப்படிங்கிறது நிச்சயமா தெரியறது. மஹா பெரியவா அனுபவங்கள்ல லக்ஷ்மிநாராயண சர்மானு, ஒரு மாமா, அவர் வந்து சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு இருக்கார், அவர் அவ்வளோ சொல்றார். “ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டுட்டு ரெண்டு வேளை ஜலத்தை குடிச்சிண்டு இருப்பேன், அப்படி குடும்பம் கஷ்ட பட்டோம்” அவர் பெரியவா சொல்லி கனகதாரா ஸ்தோத்ரத்தை படிச்சு, “த்யாகராய நகரில் ஒரு தெருல இருக்கற எல்லா வீட்டையையுமே நான் வாங்கிட்டேன்”ங்கிறார். அவ்வளோ செல்வம் வந்தது அவருக்கு. அப்படி இன்னிக்கும் கனகதாரா ஸ்தோத்ர பாராயணம் செல்வத்தை கொடுக்கிறது.
அதுல மஹா பெரியவா என்ன சொல்றான்னா, “இந்த அம்மா மத்தவாளுக்கு கொடுக்கணும்ங்கிற எண்ணத்தோட இருந்தாளோல்யோ, அதனால அம்பாள் அவளுக்கு செல்வதை கொடுத்தா. நம்மட்ட இல்லனாலும் அந்த கடைசி நெல்லி கனியும் ப்ரஹ்மச்சாரிக்கு போடணும்னு மனசு இருந்ததே, அந்த மாதிரி கொடுக்கிற மனசு இருக்கறவாளுக்கு, இந்த கனக தாரை இன்னிக்கும் செல்வத்தை கொடுக்கும்”. இதுல இன்னொரு ஸ்லோகம்
सम्पत्कराणि सकलेन्द्रियनन्दनानि साम्राज्यदाननिरतानि सरोरुहाक्षि ।
त्वद्वन्दनानि दुरितोद्धरणोद्यतानि मामेव मातरनिशं कलयन्तु मान्ये ॥
ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனானி
ஸாம்ராஜ்யதான நிரதானி ஸரோருஹாக்ஷி |
த்வத்வந்தனானி துரிதோத்தரணோத்யதானி
மாமேவ மாத ரநிசம் கலயந்து மான்யே ||
அப்படின்னு ஒரு ஸ்லோகம். அம்மா இந்த உனக்கு பண்ணுகிற நமஸ்காரம் என்ன பண்ணனும்னா, ‘சம்பத்கராணி’ சம்பத்தை கொடுக்கும், ‘சகல இந்திரிய நந்தனானி’ இந்திரியங்களுக்கு எல்லாம் போகமான விஷயங்களெல்லாம் கொடுக்கும். ‘சாம்ராஜ்யதான நிரதானி’ சாம்ராஜ்யங்களையும் கொடுக்கும், ‘சரோருஹாக்ஷி த்வத் வந்தனானி’ உனக்கு பண்ற நமஸ்காரம் என்ன தான் பண்ணாது?ன்னு சொல்றார்.
‘மாம்ஏவ மாதரநிஷம் கலயந்து மான்யே’ன்னு இருக்கு, மஹா பெரியவா ‘மாம்ஏவ மாதரநிஷம் கலயந்து நான்யே’ அப்படின்னு ஒரு பாடம் சொல்லி, “எனக்கு இந்த நமஸ்காரம் ஒண்ணே போறும், எனக்கு வேற எதுவுமே வேண்டாம்”, ‘ந அன்யே’ சம்பத்து, சகல சாம்ராஜ்ய போகம் எல்லாம் ஒண்ணுமே வேண்டாம். உன்னை நமஸ்காரம் பண்ற கார்யம், அது எனக்கு பிடித்து இருக்கு, அதை ஒண்ணே கொடுன்னு கேட்டாராம் ஆதி சங்கரர். தனக்கு கேட்கும்போது ‘நான்யே’ கேட்டார், அந்த அம்மாவுக்கு கேட்கும்போது ‘மான்யே’ கேட்டுண்டார் அப்படின்னு சொல்லுவா. “அப்படி பணிவா ஒரு குருவுக்கோ, ஒரு தெய்வத்துக்கோ நமஸ்காரம் பண்றதுல இருக்க சந்தோஷம், வேற எதுலேயும் கிடைக்காது” அப்படின்னு பெரியவா சொல்லி இருக்கா.
அந்த மாதிரி அனுக்கிரஹம் பண்ணினார், அப்பறம் அவா அம்மா விதந்துவா இருக்கா. இவர் பாத்துண்டு இருக்கார். மனசுல ஆனா சன்யாசம் எண்ணம் வந்துடறது. ஏக புத்திரனாக இருக்கறதுனால அம்மாவை எப்படி convince பண்றது, எப்படி இந்த விஷயத்தை சொல்றது, அப்படின்னு யோசிச்சிண்டு இருக்கார். அவா ஆத்துலேர்ந்து கொஞ்சம் தள்ளிப்போனா ஒரு furlongல, பூர்ணா நதின்னு ஒண்ணு போயிண்டு இருக்கு. அந்த அம்மா தினம் போய் அந்த நதியில ஸ்நானம் பண்ணுவா. வயசாக வயசாக “என்னால அவ்வளவு தூரம் போக முடியிலப்பா சங்கரா” அப்படின்னு சொல்றா. ஒரு புண்ய தினம் வறது, கைசிக ஏகாதசிக்குகூட, “ஆத்துல போய் ஸ்நானம் பண்ணாம, இங்க குளிச்சிண்டு இருக்கேன்” அப்படின்னு சொன்னாளாம். அவர் “ஓர் நிமிஷம் இரும்மான்னு சொல்லி” அந்த பூர்ணா நதியை “இந்த பக்கமா வா”ன்னு சொன்னாராம் ஆதி சங்கரர், அன்னியிலேருந்து அந்த நதி இவா ஆத்து பக்கமா திரும்பி போயிண்டு இருக்கு. இன்னிக்கும் அது காலடி க்ஷேத்திரத்துக்கு போனால் அதை பார்க்கலாம்.
இந்த மாதிரி இவருடைய மஹிமையை கேள்விப்பட்டு, அந்த ஊர் ராஜா வந்து இவரை நமஸ்காரம் பண்றார். நமஸ்காரம் பண்ணின போது, உங்களுக்கு ஏதாவது பண்ணனும்ன்ன உடனே, “இந்த கிருஷ்ணர் கோவிலை நன்னா கட்டுங்கோ” னு சொன்னவுடன், அந்த கிருஷ்ணர் கோவிலை அந்த ராஜா நன்னா கட்டி கொடுத்தான். இப்படி ஆதி சங்கரர் அவதாரத்தோட முதல் கும்பாபிஷேகம். அப்படி பாரத தேசம் முழுக்க போய், ஒவ்வொரு க்ஷேத்ரத்துலேயும், அந்த தெய்வங்களுக்கே சாந்நித்தியதை கொடுத்து பெருமை படுத்தினவர், அதை இந்த சின்ன வயசுலேயே ஆரம்பிச்சுடறார்.
அப்பறம் சன்யாசம் வாங்கிற அந்த காட்சி. ஒரு நாளைக்கு ஆதி சங்கர பாவத்பாதாள் அம்மாவை கூட்டிண்டு பூர்ணா நதில ஸ்நானம் பண்ண கூட்டிண்டு போறார். பூர்ணா நதில ஸ்நானம் பண்றதுக்காக ரெண்டு பேருமா போறா. சங்கரர் அந்த நதில இறங்கறார். எட்டு வயசு குழந்தை, இறங்கின உடனே காலை ஒரு முதலை பிடிச்சுண்டுடறது, “அம்மா என்னை முதலை பிடிச்சுண்டுடுத்து, அம்மா அம்மா”ங்கிறார், “ஐயோ குழந்தை நீ போனா நான் என்ன பண்ணுவேன், என்னடா குழந்தை இந்த மாதிரி கஷ்டபடறியே, அம்மே பகவதி ” அப்படின்னு அழறா. அப்போ ஆதி சங்கரர் சொல்றார் “அம்மா, இந்த ஜென்மத்துல எட்டு வயசு தான் போட்டிருக்கு போல இருக்கு, நான் வந்து ஆபத் சன்யாசம் வாங்கிக்கிறேன், சன்யாசம் வாங்கிண்டா, இருபத்தியொரு தலைமுறை கரையேறும்னு சொல்லி இருக்கு. நான் சன்யாசம் வாங்கிண்டேன்னா நீயும் கரையேறிடுவ, ஏதோ ஒரு புண்ய வசத்துனால சன்யாசம் வாங்கிண்டா, அடுத்த ஜென்மாவா இன்னும் கொஞ்சம் ஆயுசு கொஞ்சம் கிடைச்சாலும் கிடைக்கும்” அப்படின்னு சொன்ன உடனே, அவா அம்மா “எப்படியாவது உயிரோடு இருந்தா போதும்பா குழந்தை, நீ என்ன வேணும்னா பண்ணு”ன்னு சொல்றா. சொன்ன உடனே, இவர் ப்ரைஷ மந்த்ரத்தை உச்சாரணம் பண்ணி, சன்யாசம் வாங்கிண்டுடறார். இவர் சன்யாசம் வாங்கிண்ட உடனே அந்த முதலை காலை விட்டுடறது.
அந்த முதலை ஒரு கந்தர்வன், அவன் குடிச்சுட்டு பெண்களோட காமத்துல ஆடிண்டு கிடந்தான், அப்போ துர்வாச மஹரிஷி வந்தார், அவர் கோபிஷ்டர், அவர் தபஸ்லேயும் பெரியவர், கோபத்துலேயும் பெரியவர், அவர் இவனை பார்த்த உடனே “முதலை மாதிரி, பெரியவாள மதிக்காம இருக்கியே, முதலையா போ”ன்னு சாபம் கொடுத்துடறார், அப்பறம் அவன் பிரார்த்தனை பண்ணிக்கிறான், அப்போ “பரமேஸ்வரனோட காலை போய் நீ பிடிச்சேன்னா உனக்கு சாபவிமோசனம்”னு சொன்னார், “நான் எங்கே இங்க தண்ணில கிடக்கிறேன், நான் எப்படி பரமேஸ்வரனோட காலை பிடிப்பேன்”னா, “அவரே வருவார். நீ அப்போ அவரோட காலை பிடிச்சுக்கோ”ன்னு சொல்றார். ஆதி சங்கரர் வந்தார், அவர் காலை பிடிச்ச உடனே அந்த கந்தர்வன், சாப விமோசனம் ஆகி, சங்கரரை நமஸ்காரம் பண்ணிட்டு அவனோட உலகத்துக்கு அவன் போயிடறான்.
படி ஏறி மேல வந்த உடனே அம்மா சொல்றா “வாடா குழந்தை, உயிரோட வந்தியே, நான் எவ்வளோ கவலை பட்டுட்டேன், வா ஆத்துக்கு போலாம், உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்கணும்” அப்படின்னு சொன்னாளாம். அப்போ ஆதி சங்கரர் சொன்னாராம், “இல்லை அம்மா , இனிமே இந்த உலகத்துல எல்லாரும் எனக்கு தாயார். சாந்தம் தான் என்னுடைய மனைவி, நான் இனிமே இந்த உலகத்தோட குழந்தை, ஆத்துக்கு வர முடியாதம்மா”, அப்படின்னு சொன்னாராம். “என்னை இப்படி தனியா விட்டுட்டு போறியே, அப்படின்ன உடனே, “நீ கவலை படாதே அம்மா, உன்னுடைய கடைசி காலத்துல நான் வந்து, உன்னை என் மடில போட்டுடுண்டு, உனக்கு முக்தி குடுப்பேன்”, அப்படின்னு வார்த்தை குடுத்துட்டு, ஆதி சங்கரர், கிளம்பி போறார். நர்மதா நதிக்கரைல போய், கோவிந்த பகவத் பாதர்ன்னு தன்னுடய, ஆசார்யனை தேடிப் போய், அவர தரிசனம் பண்ணி, அவர் கிட்ட, க்ரமமா சன்யாஸம் வாங்கிக்கறார். அதெல்லாம் நாளைக்கு பார்ப்போம்.
நம்முடைய மஹா பெரியவா சன்யாஸம் வாங்கிண்டது, ரொம்ப ஆச்சரியமான ஒரு சம்பவம். மஹா பெரியவா, “what life has taught me” அப்படின்னு ஒரு article, Bhavan’s journalல கேட்ட போது, குடுத்துருக்கார். அதுல இந்த கனகதாரை மாதிரி, பொன்னுசாமின்னு சொல்லிண்டு ஒருத்தன் வறான். இவர் கையில நிறைய தங்க வளையல் போட்டுண்டிருக்கார், ரெண்டு கையிலயும் நல்லதா வளையல் போட்டுண்டிருக்கார். நம்ம மஹா பெரியவாளுக்கு அஞ்சு வயசு இருக்கும்போது, இந்த பொன்னுசாமி வந்து, “உங்க ஆத்துல சொன்னா, repair க்கு இந்த வளையலை குடு”ன்னு கேட்டவுடனே, ரெண்டு தங்க வளையலையும் கழட்டி அந்த பொன்னுசாமி கிட்ட பெரியவா குடுத்துட்டார். அவன் எடுத்துண்டு போயே போயிட்டான். அந்த மாதிரி பெரியவாளும், இந்த குடுக்கற காரியத்தை அஞ்சு வயசுலேயே ஆரம்பிச்சுட்டா, நூறு வயசு வரைக்கும் எங்க போயி அவர் உட்கார்ந்தாலும், கணக்கில்லாதா செல்வம் அவர் கிட்ட வரும், அதெல்லாத்தையும் அவர் வந்து எல்லாருக்கும் குடுத்துடுவார். பணக்காராள்ளாம் வந்து வைப்பா, ஏழைகளுக்கு குடுத்துடுவார்.
ஒரு இடத்தில உட்கார்ந்தார்ன்னா, அங்க வந்து சேரக்கூடிய எந்த வஸ்துவையும், அடுத்த இடத்துக்கு எடுத்துண்டு போகமாட்டார். அதை அங்கேயே விட்டுட்டு போகணும்னு rule, ஒரு பழத்தை கூட அடுத்த நாளைக்கு இருக்கட்டும், அங்க கிடைக்குமோ கிடைக்காதோன்னு கூட இருக்கற பார்ஷதர்கள் சொல்றதுக்கு விடமாட்டார். “அது கிடைக்கும், நாளைக்கு என்ன குடுக்கணும்ங்கறது அம்பாளுக்கு தெரியும். அவள் குடுப்பாள், கிளம்பு” அவ்வளவு தான், இப்படி மஹா பெரியவா , எத்தனையோ தான தர்மங்கள் பண்ணிருக்கார், அவா encourage பண்ணினதுனால தான் நம்முடைய வேதமதத்தில இவ்வளவு பெரிய ஒரு மறுமலர்ச்சி, வளர்ச்சி ஏற்பட்டது. எத்தனையோ கலைஞர்களுக்கும், பண்டிதர்களுக்கும் பெரியவா குடுத்ததுனாலே தான், நாம இதை பண்ணலாம் எங்கிற நம்பிக்கை வந்து, எல்லாரும் வேதம் படிக்கறதோ, ராமாயண பாகவதம் படிக்கறதோ எல்லாம் பண்ணினா. அதுனால, நம்மவரைக்கும் இன்னிக்கும் அந்த புஸ்தகங்களெல்லாம் மிஞ்சியிருக்கு.
அப்படி பெரியவாளுக்கு பதிமூணு வயசு இருக்கும்போது, அந்த சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள், அறுபத்தியாராவது பீடாதிபதி, இந்த ஸ்வாமிநாதன கூப்பிட்டு பேசி, “இவரை எனக்கப்புறம் மடத்துல பீடாதிபதியா வையுங்கோ” அப்படிங்கற எண்ணத்தை ரெண்டு பேர் கிட்ட சொல்லிருக்கார். அந்த ஆசார்யாள் அப்போ, காஞ்சிபுரத்லேர்ந்து ஒரு முப்பது kilometer கலவைன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு, அந்த கலவைல இருந்துண்டிருக்கா, ஆச்சார்யாளுக்கு, நம்ப ஸ்வாமிநாதன், மஹா பெரியவாளுடைய பெரியம்மா பிள்ளை, அம்மாவோட அக்கா பிள்ளை லக்ஷ்மிகாந்தன்ங்றவர் service பண்ணிண்டிருக்கார், ரிக் வேதம் படிச்சவர். அந்த ஆச்சார்யாளுக்கு, வைசூரி வந்துடறது, அம்மை போட்டுடறது. அப்போ அவருக்கு தன்னோட காலம் நெருங்கிடுத்து, சித்தியாகப் போறோம்ன்னு சொல்லி, இந்த லக்ஷ்மிகாந்தனுக்கு சன்யாஸ தீக்ஷை குடுத்து, அவரை அடுத்த ஆச்சார்யாளா பண்ணி, ஸ்ரீமன் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அப்படின்னு தீக்ஷா நாமம் குடுத்து, சன்யாஸம் குடுக்கறார். இந்த லக்ஷ்மிகாந்தன், அந்த ஆச்சார்யாளுக்கு அவரும் நிறைய service பண்ணிருக்கார், “வேண்டாம்பா உனக்கு உடம்புக்கு வந்துட போறது”ன்னு சொன்னாலும் , “இல்லை இல்லை, எனக்கு குரு சேவை தான் முக்கியம்”ன்னு தன்னுடய குருவிற்கு, physicalaவும் service பண்ணதுனால, அம்பாளுடைய சங்கல்பம், அவருக்கும் அந்த வைசூரி போட்டு, அவரும் பீடத்துக்கு வந்த எட்டு நாள்ல சித்தியாயிடறார்.
அப்போ நம்ம மஹா பெரியவாள அவசரமா அழைச்சிண்டுபோய், அவருக்கு சன்யாஸம் குடுத்து, பீடாதிபதியா ஆக்கறா. அதுக்கு நடுல இந்த மாதிரி, “இந்த குழந்தையை அனுப்புங்கோ”ன்னு தனியாக கூட்டிண்டு போயிடறா. இவர் கிட்ட அந்த வண்டி ஓட்டிண்டு வர மேஸ்தரி சொல்றார், “இனிமே நீ ஆத்துக்கு போகமுடியாதுப்பா, நீ சன்யாஸி ஆகப் போறே. இந்த மடத்துல மடாதிபதி ஆகப்போறே”, அப்படின்னு சொன்னவுடனே, இவர், “எனக்கு வேற ஒண்ணுமே தெரியாது, ராம ராம ராம ராமான்னு சொல்லிண்டுருந்தேன்”, அப்படினு பெரியவா சொல்லிருக்கார், அப்படி அந்த வயசுலேர்ந்து ராம நாமத்துல பக்தி.
இவர் வந்து சேர்ந்தவுடனே, அப்பறம் அப்பா அம்மா வறா, அப்பா அம்மா கிட்ட, “மடத்துல பெரியவா எல்லாம் சொல்றா, மடாதிபதி வேணும், இந்த குழந்தையை தான் ஆச்சார்யாள் சொல்லிண்டிருந்தார், அதனால நீங்க மடத்துக்கு குடுக்கணும்”னு கேட்டபோது, அப்பா அம்மா தவிக்கறா. “சன்யாஸியா போறதா, எப்படி மனசு வரும்?”னு சொன்னபோது, மஹா பெரியவாளே “அப்பா, இது தெய்வ சங்கல்பம். குருநாதர் ஆசீர்வாதத்துல என்னால முடியும்னு நினைக்கறேன்ப்பா, ஆசிர்வாதம் பண்ணுங்கோ”, அம்மாகிட்டயும், “அம்மா ஆசிர்வாதம் பண்ணுமா”ன்னு சொல்றார்.
அவம்மா ரொம்ப விவேகி, அதை பின்னாடி ஒரு தடவை மஹா பெரியவா reveal பண்ணிருக்கார். அப்பா அம்மாவை பார்த்திருப்பார், அம்மா சரின்னு கண்ணு காமிச்சிருப்பாள். அவர் சரிப்பா, சரின்னு பெரியவா கிட்டல்லாம் சொல்லிட்டு வந்திருப்பார். அது தான் கடைசி தடவை, அவப்பா அம்மா மஹா பெரியவாளை பார்த்தது. அப்புறம் சன்யாஸம், அப்புறம் பீடாதிபதியா பட்டாபிஷேகம், அப்புறம் அவர் மகேந்திரமமங்கலத்துல தனியா மூணு வருஷம் இருந்து, பண்டிதர்களை எல்லாம் வரவழைச்சு, சாஸ்திரங்கள் எல்லாம் கத்துண்டார், பெரியவா. அப்புறம் திருவானக்காவில ஒரு தாடங்க பிரதிஷ்டை பண்ணார், அப்படி திக்விஜயத்தை ஆரம்பிச்சசுட்டார்.
நாளைக்கு, கோவிந்த பகவத் பாதர் கிட்ட உத்தரவு வாங்கிண்டு, சங்கர பகவத் பாதர் காசில போய், ப்ரஸ்தானஸ்த்ரய பாஷ்யங்கள் எழுதினது, அதெல்லாம் பார்ப்போம்.
சங்கரர் சன்யாசம் ஏற்றார் (20 min audio in tamil. same as the script above)
ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…
3 replies on “ஸ்ரீ சங்கர சரிதம் – நான்காம் பகுதி – சங்கரர் சன்யாசம்; மகாபெரியவா சன்யாசம்”
VERY SURPRISE “SANKARASARITHAM”
பகவத் பாதர் சன்யாசம் பெரியவா சன்யாசம் இரண்டையும் அழகாக இணைத்துப் பொருத்தமாக சங்கர ஜெயந்தி மஹோற்சவ ப் பதிவாக வெளிக் கொணர்ந்ததுஎன்பது பாராட்டுக்குரியது! அழகான நடை, கண்களில் நீர் வரவழைக்கும் எழுத்து!
இருவரும் பரமேஸ்வரா அவதாரம் என்பது துல்யமாக உணர வைக்கும் பதிவு!
ஜய ஜய சங்கரா….
ஆதி சங்கரர் சனியாசம் கொண்டதற்கு ஒரு கந்தர்வன் முதலை ரூபத்தில் வந்ததாக சங்கர சரிதம் கூறுகிறது. மகாபெரியவா தான் ஆதி சங்கரர் என்பதைக் கோடிட்டுக் காட்டிய ஒர் சம்பவம் உண்டு! காசி கங்கா ஸ்நானம் செய்யும்போது ஒர் முதலை பெரியவாளை சுற்றி வந்தது. பெரியவா எந்த பாதிப்பும் இல்லாமல் ஸ்நானம் செய்தார். அங்கு இருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு மேலே ஏறி விட்டனர். எசையநூர் கோகிலா பாட்டி பெரியவா எங்கு சென்றாலும் கூட செல்வது வழக்கம் . மேலே கரையில் நின்று ” வாங்கோ மேலே பெரியவா முதலை..முதலை” என கத்தியும் அவர் பாட்டில் ஸ்நானம் செய்தார்!
இரவு வந்ததும் பெரியவாளைக் கேட்க வேண்டுமென செல்லும்போதே ” என்ன முதலைன்னு கத்தியும் நான் ஏன் வரலைன்னு கேட்கப் போறேள் அதானே” என்று பாட்டி கிட்டே கேட்டாளாம். ” ஆமாம் பெரியவா எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா” என்று பாட்டி சொல்ல, பெரியவா சொன்ன பதில் அவர் சாக்ஷாத் ஆதி சங்கரர் பிரத்யக்ஷ பரமேஸ்வரன் என்று புரிந்தது! அப்படி என்ன சொன்னார்? ” நீங்க அப்போ கந்தர்வன் முதலையா வந்ததைப் பார்க்கலை இல்லையா” என்று ! பாட்டி வியப்பின் எல்லையில் உறைந்து விட்டாள்! ஜய ஜய சங்கரா.. .