நேற்றைய கதையில் ஆசார்யாள் சொன்ன வழியில், பஜ கோவிந்தத்தில் இருக்கிற மாதிரி, உலக விஷயங்கள்ல பற்று வைக்காமல், உலக சுகங்களை துச்சமா நினைச்சு, அவற்றை துறந்து, பகவானுடைய பக்தி பண்ணி, வழிபாடு பண்ணி, பஜ கோவிந்தம் அப்படீன்னு சொன்னார். மகாபெரியவா அதையே வாழ்ந்து காண்பிச்சு, அதையே உலகத்துக்கு உபதேசமாவும் சொல்லிண்டு இருந்தா, தன்னோட வாழ்நாள் முழுக்க அதை பண்ணிண்டு இருந்தா, அப்படீன்னும் சொன்னேன்.
ஒண்ணு ஞாபகம் வரது, மஹாபெரியவா சித்தி (siddhi) ஆகறத்துக்கு முன்னாடி கொஞ்சம் ஒரு வருஷம் ரெண்டு வருஷம், weakஆக இருந்தாலும், சித்தி (siddhi) ஆன அன்னிக்கு கார்த்தால, ரொம்ப உத்சாகமா பேசிண்டு, எல்லாரையும் வரச் சொல்லி விசாரிச்சு ஆசீர்வாதம் பண்ணிண்டு இருந்தாளாம். அன்னிக்கு மேச்சேரி பட்டு சாஸ்திரிகள் வந்த போது, அவருக்கு ஆசீர்வாதம் பண்ணி, “நம்ம மடத்து வாத்தியார்” அப்படீன்னு அன்பா பேசி, அவர் கிட்ட “எல்லாரும் க்ஷேமமா இருங்கோ” அப்படீன்னு சொல்லி இருக்கா. அப்பறம், புது பெரியவாளும், பால பெரியவாளும் வந்து நமஸ்காரம் பண்ண போது, ஆசீர்வாதம் பண்ணி, “பூஜை பண்ணிண்டே இரு” அப்படீன்னு சொல்லி இருக்கா. அந்த சந்திரமௌலீஸ்வரர் பூஜைங்கிறது எவ்ளோ புனிதமான கடமைங்கிறது, தன்னோட வாழ்வின் கடைசி நாள்ல பெரியவா சொல்லி இருக்காங்கிறதில் இருந்து தெரியறது. அப்பேற்பட்ட பெரியவளுடைய பக்தியை பத்தி நேத்தி பேசிண்டு இருந்தேன்.
இன்னைக்கு எதேர்சையா ஒரு காகிதம் கிடைச்சுது. கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் கிட்ட நான் ஆச்சார்யாளோட சங்கர பாஷ்யம் புஸ்தகம் வாங்கிண்டு போய் கொடுத்து இருக்கேன். நான் இந்த மாதிரி ஏதாவது பண்ணிண்டு இருப்பேன். ஒரு தரம், சங்க்ஷேப தர்ம சாஸ்த்ராம் அப்படிங்கிற புஸ்தகத்தை, மடத்துல இருந்து வாங்கிண்டு போய் கொடுத்தேன். ஸ்வாமிகளுக்கு எவ்வளோ இதுலெல்லாம் knowledge இருக்கு authority இருக்குங்கிறதுக்கு ஒரு உதாரணம் – அந்த சங்க்ஷேப தர்ம சாஸ்திரத்துல, அட்டை படத்துல, ராம பட்டாபிஷேகம் போட்டு இருந்தா. அதை கண்களில் ஒத்திண்டார். ஒரு நிமிஷத்துல அப்படியே தேடி ஒரு ஸ்லோகத்தை எடுத்தார், அதுல ‘ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமா’ அப்படீன்னு இருபத்தியொரு ஆவர்த்தி சொன்னா பிரம்மஹத்யாதி தோஷங்கள் போகும், அப்படீங்கிற ஸ்லோகத்தை எடுத்து காட்டி, “நீ இதுல நம்பிக்கை வை, மற்றது எல்லாம், முடிஞ்ச அளவுக்கு பண்ணு, மத்ததுக்கெல்லாம் காலம் அனுகூலமா இல்லை” அப்படீன்னு சொன்னார். இதை நான் பொதுவா எல்லாருக்கும் சொல்லலை. எனக்கு அவ்வளவு தான் உடம்பு health, என்னுடைய situationனுக்கு ஸ்வாமிகள் சொன்ன adviceன்னுதான் வெச்சுக்கணும். மந்த அதிகாரி எங்கிற மாதிரி.
ஆசார்யாளோட கீதா பாஷ்யத்தை ஸ்வாமிகள் கிட்ட கொடுத்தேன். அதே மாதிரி இந்த கீதா பாஷ்யத்தை எடுத்து, அவர் ஒரு நிமிஷத்துல பிரிச்சு ஒரு ஸ்லோகத்தை எடுத்தார், “இதை எழுதிக்கோ” அப்படீன்னு சொன்னார். சங்கர சரிதம் சொல்லும்போது, கீதா பாஷ்யதில் இருந்து ஒரு ஸ்லோகமாவது சொல்ல வேண்டாமா! அதனால இன்னைக்கு இந்த paper கிடைச்ச உடனே இது பகவத் சங்கல்பம் இதை பகிர்ந்துபோம் அப்படீன்னு நினைச்சேன்.
பதினொன்னாவது அத்யாயம் – பகவான் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தர்ஸனம் கொடுத்து, அப்பறம் அவன் “பயமா இருக்கு எனக்கு, நீ எப்பவும் போல எனக்கு நாலு கைகளோட எனக்கு தர்சனம் கொடு”, அப்படீன்னு கேட்கறான். அதே மாதிரி கிருஷ்னர் முன் போல தர்சனம் கொடுத்துட்டு, சில ஸ்லோகங்கள் சொல்றார். அதுல இந்த பதினொன்னாவது அத்யாயத்தோட கடைசி ஸ்லோகம், இந்த அம்பத்தி அஞ்சாவது ஸ்லோகத்துக்கு சங்கர பாஷ்யத்தை ஸ்வாமிகள் “இது தான் உனக்கு, எழுதிக்கோ”ன்னு சொல்லி இருக்கார். அது இன்னைக்கு கிடைச்சுது.
मत्कर्मकृत् मत्परमः मद्भक्तः सङ्गवर्जितः |
निर्वैरः सर्वभूतेषु यः सः माम् एति पाण्डव ||
अधुना सर्वस्य गीताशास्त्रस्य सारभूतः अर्थः निःश्रेयसार्थः अनुष्ठेयत्वेन समुच्चित्य उच्यते —
मत्कर्मकृत् मदर्थं कर्म मत्कर्म, तत् करोतीति मत्कर्मकृत् । मत्परमः — करोति भृत्यः स्वामिकर्म, न तु आत्मनः परमा प्रेत्य गन्तव्या गतिरिति स्वामिनं प्रतिपद्यते ; अयं तु मत्कर्मकृत् मामेव परमां गतिं प्रतिपद्यते इति मत्परमः, अहं परमः परा गतिः यस्य सोऽयं मत्परमः । तथा मद्भक्तः मामेव सर्वप्रकारैः सर्वात्मना सर्वोत्साहेन भजते इति मद्भक्तः । सङ्गवर्जितः धनपुत्रमित्रकलत्रबन्धुवर्गेषु सङ्गवर्जितः सङ्गः प्रीतिः स्नेहः तद्वर्जितः । निर्वैरः निर्गतवैरः सर्वभूतेषु शत्रुभावरहितः आत्मनः अत्यन्तापकारप्रवृत्तेष्वपि । यः ईदृशः मद्भक्तः सः माम् एति, अहमेव तस्य परा गतिः, न अन्या गतिः काचित् भवति । अयं तव उपदेशः इष्टः मया उपदिष्टः हे पाण्डव इति ॥
மத்கர்மகருத் மத்பரம: மத்பக்த: ஸங்கவர்ஜித: |
நிர்வைர: ஸர்வபூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ ||
இதுக்கு ஆச்சார்யாள் சொல்ல ஆரம்பிக்கும் போது, ‘அதுனா’ இப்பொழுது, ‘ஸர்வஸ்ய கீதா சாஸ்த்ரஸ்ய ஸார பூதஹ”, கீதா சாஸ்த்ரத்தின், கீதைல இருக்கிற எல்லா சாஸ்த்ரங்களுக்கும் ஸாரபூதமான விஷயம் இது அப்படீங்கிறார். ‘அர்த்த நிஷ்ஸ்ரேயஸார்த்தஹ’ மிகவும் பெரிய நன்மையை செய்யக்கூடிய, ஸ்ரேயஸை கொடுக்கக்கூடிய அர்த்தம் இது, ‘அநுஷ்டேவயத்வேன’ பண்ணகூடிய கார்யம், மத்தது எல்லாம், ஞானம்ங்கிறது பின்னால வறது, அனுஷ்டிக்கக் கூடிய ‘ஸமுச்சித்ய உச்யதே’ அர்ஜுனன் கிட்ட “என்ன நீ பண்ணனும்னு சொல்லிடறார் பகவான் அர்ஜுனன் அப்படீன்னு சொல்றார். அதுக்கு ஒவ்வோரு பதமா எடுத்துண்டு ஆச்சார்யாள் பாஷ்யம் படிக்கிறேன் நான்.
‘மத் கர்மக்ருத்’ – மதர்த்தம் கர்ம மத்கர்ம, தத் கரோதி இதி மத் கர்மக்ருத்’ என்னுடைய கார்யத்தை செய்பவன்,
‘மத் பரமஹ’ – ‘கரோதி ப்ருத்யஹ ஸ்வாமி கர்ம’ ஒரு வேலைக்காரன் தன்னுடைய யஜமானனுடைய கார்யத்தை பண்ணுகிறான், ‘நது ஆத்மனஹ பரமா ப்ரேத்யா கந்தவ்யா கதிரிதி ஸ்வாமினம் ப்ரதிபத்யதே’ தான் வாழ்வின் முடிவில் அடைய வேண்டிய ஒரு பரமாகதி, பெரிய முடிவான விஷயம் தன்னுடைய எஜமானன் அப்படீன்னு நினைக்கிறது இல்லை, கொடுத்த காசுக்கு வேலை பார்க்கிறான். ஆனால் பக்தனோ ‘அயம்து மத் கர்மக்ருத்’ என்னுடைய கார்யத்தை பண்ணக்கூடிய என்னுடைய பக்தன், ‘மாம் ஏவ பரமாம் கதிம் ப்ரதிபத்யதே’ அடையவேண்டிய லக்ஷ்யமாக ‘இதி மத் பரமஹ’ என்பதால் ‘மத் பரமஹ’ அப்படீன்னு சொல்றார். ‘அஹம் பரமஹ பராகதிஹி யஸ்ய ஸஹ அயம் மத் பரமஹ’ எவன் பகவானை அடைய வேண்டிய லக்ஷியம் என்பதை உணர்ந்து கொண்டு இருக்கிறானோ அவன் ‘மத் பரமஹ’
‘ததா மத்பக்த:’ இந்த ‘மத்பக்தஹ’ ங்கிற பதத்துக்கு அடுத்தது வ்யாக்யானம் சொல்றார், ‘மாம் ஏவ ஸர்வ ப்ரகாரைஹி ஸர்வாத்மனா ஸர்வோத்தஸாஹேன ச பஜதே இதி மத் பக்தஹ’ என்னையே எல்லா விதத்திலும் எல்லா காலங்களிலும் ‘ஸர்வோத்தஸாஹேன’ அவனுக்கு இருக்குகிற எல்லா உத்ஸாகத்தோடயும் energyயோடவும் ‘மாம் பஜதே’ என்னுடைய பஜனத்தை பண்றான், அவன் என்னை வழிபடுகிறான் ‘இதி மத் பக்த:’ அதானல் இவன் என்னுடைய பக்தன்.
‘ஸங்க வர்ஜிதஹ’ பற்றுகள் விலகியவன், ‘தன, புத்ர, மித்ர, களத்ர, பந்து, போகேஷு ஸங்க வர்ஜிதஹ, ப்ரீதி ஸ்னேஹ வர்ஜிதஹ’ எவன் பணத்துலயும், புத்ரர்கள், நண்பர்கள், மனைவி, பந்து, போகங்களில் எல்லாம் பற்றை விட்டார்களோ அவர்கள் ‘ஸங்க வர்ஜிதஹ’,
‘நிர்வைரஹ ஸர்வபூதேஷு’ நிர்கத வைரஹ, ஷத்ருபாவ ரஹிதஹ’ எவன் ‘ஆத்மநஹ அத்யந்த அபகார ப்ரவ்ருதேஷு அபி’ எவன் தன்னிடம் மிகவும் அபகாரம், கெடுதல் பண்ணுபவனிடம் கூட, ‘ஷத்ருபாவ ரஹிதஹ’ அவனை எதிரியாக நினைக்காமல், அவன் மேல் கொஞ்சம் கூட த்வேஷம் இல்லாமல் இருக்கிறானோ அவன் ‘நிர்வைரஹ ஸர்வபூதேஷு’
‘யஹ ஈத்ருஷஹ’ இப்படி இருக்கிறானோ ‘ஸஹ மாமேதி’ அவன் என்னை அடைவான். ‘அஹம் ஏவ தஸ்ய பராகதிஹி’ நான் தான் அவனுடைய முடிவான அடைய வேண்டிய இடம், ‘ந அன்ய காசித் பவதி’ வேறு எதுமே நோக்கம் இல்லை, வாழ்க்கையுடைய நோக்கமே பகவானை அடையணும் என்று அதுக்கு இந்த பக்தி பண்ணிண்டு இருக்கான்.
‘அயம் தவ உபதேஷஹ மயா உபதிஷ்டஹ ஹே பாண்டவ இதி’ இது என்னால் உனக்கு உபதேசிக்க பட்டது, அப்படீன்னு இந்த ஸ்லோகத்துக்கு ஆச்சார்யாள் பாஷ்யம்.
இந்த பக்கம் என் கையில இன்னிக்கு கிடைச்சது இதை படிக்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. இது நம்ம ஆசார்யாளோட ஹ்ருதயம். இதை கீதா பாஷ்யத்துல பக்தி யோகத்துல வரும் போது சொல்றார். இதையே அவருடைய ஸ்தோத்ரங்களிலேயும் நிறைய சொல்லி இருக்கார் அப்படீன்னு எனக்கு ஞாபகம் வந்தது. திரும்பவும் இன்னைக்கும் சில ஆச்சார்யாள் ஸ்லோகங்கள் சொல்றேன், எனக்கு தெரிஞ்சது ஸ்தோத்ரங்கள் தான் அதனால, அதுலயே நான் இருந்ததுண்டு இருக்கேன். இன்னும் கதை அடுத்த stepக்கே move ஆக மாட்டேங்கிறேன் ன்னு நினைக்கிறேன். சிவானந்த லஹரில இருபத்திஒன்பதாவது ஸ்லோகம்,
त्वत्पादाम्बुजमर्चयामि परमं त्वां चिन्तयाम्यन्वहं
त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो।
वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्िचरं प्रार्थितां
शंभो लोकगुरो मदीयमनसः सौख्योपदेशं कुरु।।
த்வத்பாதாம்புஜமர்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யந்வஹம்
த்வாமீஷம் ஷரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ |
வீக்ஷாம் மே திஷ சாக்ஷுஷீம் ஸகருணாம் திவ்யைஸ் சிரம் ப்ரார்திதாம்
ஷம்போ லோககுரோ மதீயமநஸ: ஸௌக்யோபதேஷம் குரு৷৷
அப்படீன்னு ‘த்வத்பாதாம்புஜம் அர்சயாமி பரமம்’ உன்னுடைய பாத தாமரைகளை அர்ச்சனை பண்ணுகிறேன், பரமம், உயர்ந்ததான உன்னுடைய பாதங்களை அர்ச்சனை பண்ணுகிறேன், ‘த்வாம் சிந்தயாமி அன்வஹம்’ உன்னையே சிந்தனம் பண்றேன், ‘த்வாம் ஈஷம் சரணம் வ்ரஜாமி’, என்னுடைய தலைவனாக உன்னையே நினைத்து உன்னையே சரணடைகிறேன், ‘வசஸா த்வாமேவ யாசே விபோ’ நீ எனக்கு பெரியவன். என் வாக்கால் உன்னையே வேண்டுகிறேன், ‘வீக்ஷம் மே திஷ சாக்ஷுஷிம்’ உன்னுடைய கடாக்ஷத்தை என் மேல் காண்பி, ‘ஸகருணாம்’ கருணையோடு கூடிய உன் கடாக்ஷத்தை என்மேல் விழச் செய், ‘திவ்யை: சிரம் பிரார்த்திதாம்’ தேவர்களும் அந்த கடாக்ஷத்தை பிராத்தனை பண்ணுகிறார்கள், ‘சம்போ’ மங்கலங்களை இருப்பிடமாக கொண்டவனே, ‘லோக குரோ’ உலகத்துக்கே நீதான் குரு, ‘மதீய மனஸஹ சௌக்கியோபதேசம் குரு’ என் மனதுக்கு சௌக்யமான உபதேசத்தை செய், அப்படீன்னு கேட்கறார்.
அதே மாதிரி எண்பத்தி ஒண்ணாவது ஸ்லோகத்துல
कंचित्कालमुमामहेश भवतः पादारविन्दार्चनैः
कंचिद्ध्यानसमाधिभिश्च नतिभिः कंचित्कथाकर्णनैः।
कंचित्कंचिदवेक्षणैश्च नुतिभिः कंचिद्दशामीदृशीं
यः प्राप्नोति मुदा त्वदर्पितमना जीवन्स मुक्तः खलु
கம்சித்காலமுமாமஹேஷ பவத: பாதாரவிந்தார்சநை:
கம்சித்த்யாநஸமாதிபிஷ்ச நதிபி: கம்சித்கதாகர்ணநை: |
கம்சித்கம்சிதவேக்ஷணைஷ்ச நுதிபி: கம்சித்தஷாமீதரிஷீம்
ய: ப்ராப்நோதி முதா த்வதர்பிதமநா ஜீவந்ஸ முக்த: கலு ||
‘உமாமஹேச’ ‘கஞ்சித்காலம் பவத: பாதாரவிந்தார்சநை:’ கொஞ்ச காலம் உன் பாதங்களை அர்ச்சனை பண்ணுவதாலும், ‘த்யாநஸமாதிபிஷ்ச நதிபி’ உன்னை த்யானம் பண்ணுவதுலேயும், நமஸ்காரம் பண்ணுவதுலேயும், ‘கஞ்சித்கதா வர்ணனைஹி’
உன்னுடைய கதைகளை பேசுவதிலும், ‘கம்சித்கம்சிதவேக்ஷணைஷ்ச நுதிபி:’ உன்னை ஸ்தோத்ரம் பண்றதுலேயும், உன்னை பார்க்கறதுலேயும், ‘கம்சித்தஷாமீதரிஷீம்’ இப்படி என்னுடைய காலம் போகுமானால், ‘ய: ப்ராப்நோதி முதா த்வதர்பிதமநா’ எவன் தன்னுடைய வாழ்க்கையை இப்படி செலவழிக்கிறானோ ‘ஜீவந்ஸ முக்த: கலு’ அவன் இந்த உலகத்தில இருக்கும்போதே முக்தி அடைந்தவன் அல்லவா.
ஞானத்துனால வரக்கூடிய ஜீவன்முக்தி அவனுக்கு, பக்தியினாலே வந்துடுத்து, அப்படின்னு சொல்றார். அதுமாதிரி, உயர்ந்த பக்தனும் ஞானியும் ஒண்ணுதான், அப்படின்னு ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்துல அடிச்சு சொல்றார்.
அதே மாதிரி சௌந்தர்யலஹரி எடுந்துண்டா, ஒரு ஸ்லோகம் இருக்கு
जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविरचना
गतिः प्रादक्षिण्यक्रमणमशनाद्याहुतिविधिः।
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पणदृशा
सपर्यापर्यायस्तव भवतु यन्मे विलसितम्।।
ஜபோ ஜல்ப: ஷில்பம் ஸகலமபி முத்ராவிரசநா
கதி: ப்ராதக்ஷிண்யக்ரமணமஷநாத்யாஹுதிவிதி: |
ப்ரணாம: ஸம்வேஷ: ஸுகமகிலமாத்மார்பணதரிஷா
ஸபர்யாபர்யாயஸ்தவ பவது யந்மே விலஸிதம் ||
‘ஜபோ ஜல்ப:’ நான் வாயத் திறந்து ஜல்பம்ன்னா உளரறதுன்னு அர்த்தம், நான் பேசறதெல்லாமே உன்னை குறித்த ஜபமா நெனைச்சுக்கோ அம்மா, ‘ஷில்பம் ஸகலமபி முத்ராவிரசநா’ நான் கைகளால் அசைச்சு பண்ற எல்லாமே உனக்கு பண்ற முத்திரைன்னு வெச்சுக்கோ, ‘கதி: ப்ராதக்ஷிண்யக்ரமணம்’, நான் நடந்துண்டே இருக்கேன், ஊரெல்லாம் சுத்தறேன், அதெல்லாம் உனக்கு பண்ற பிரதக்ஷிணம்ன்னு வெச்சுக்கோ, ‘அஷநாத்யாஹுதிவிதி:’ நான் சாப்பிடறதெல்லாம் உனக்கு பண்ற ஆஹுதின்னு வெச்சுக்கோ, ‘ப்ரணாம: ஸம்வேஷ:’ நான் படுத்து தூங்கறது உனக்கு நமஸ்கராம்ன்னு வெச்சுக்கோ ‘ஸுகமகிலமாத்மார்பணதரிஷா’ நான் ஆத்மார்பண புத்தியோட இருக்கறதானால, நான் அனுபவிக்கறதெல்லாம் உனக்கு பண்ற பூஜை, ‘ஸபர்யாபர்யாய: தவ பவது யந்மே விலஸிதம்’ நான் பண்றதெல்லாம் உன்னுடைய பூஜையாக அமையட்டும், அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்.
எவ்வளவு பணிவா இந்த பிரார்த்தனை பண்றார் எங்கறத்துக்கு, தன்னை எவ்வளவு குறைச்சலா நினைக்கறார், இந்த தயவு வேணும் அப்டின்னு கேட்கறதுக்கு, எவ்வளவு தன்னை சின்னவனா நினைக்கிறார், குழந்தைன்னு நினைக்கிறார் எங்கறத்துக்கு ஒரு ஸ்லோகம்
दृशा द्राघीयस्या दरदलितनीलोत्पलरुचा
दवीयांसं दीनं स्नपय कृपया मामपि शिवे।
अनेनायं धन्यो भवति न च ते हानिरियता
वने वा हर्म्ये वा समकरनिपातो हिमकरः।।
தருஷா த்ராகீயஸ்யா தரதலிதநீலோத்பலருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய கருபயா மாமபி ஷிவே |
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகரநிபாதோ ஹிமகர: ||
சந்திரன் பால் நிலா, வரும்போது, ஆகாசத்துலேர்ந்து நிலவு கொட்டறதுன்னா, அது வந்து நான் நல்ல மாளிகை மேல தான் கொட்டுவேன், காடு மேல எல்லாம் முள்செடி மேல எல்லாம் நான் கொட்ட மாட்டேன்னு சொல்றதோ? அந்த மாதிரி உன்னுடைய பார்வை நிலவு போல குளிர்ச்சியா இருக்கு, ‘த்ராகீயஸ்யா’ ரொம்ப தீர்க்கமான உன்னுடய பார்வை, அதாவது விஸ்வத்துக்கே அம்பாள் தான் அம்மா, அம்மா வந்து எப்போதும் தன் குழந்தைகளை தன்னுடைய கண் பார்வைல வெச்சுப்பா, அந்த மாதிரி இந்த உலகத்தில இருக்கறதுல எல்லாமே உன் கண் பார்வைல இருக்கு. விஸ்வம்கறது inifiniteஆ போயிண்டே இருக்கு, அப்படி உன்னுடைய பார்வையும் அவ்வளவு தீர்க்கமான இருக்கு. அந்த உன்னுடைய பார்வை, ‘தரதலிதநீலோத்பலருசா’ நீலோத்பல புஷ்பம் போல இருக்கு, கொஞ்சம் மலர்ந்த நீலோத்பல புஷ்பம் போல இருக்கு, கருணையினால் தான் கண்கள் கொஞ்சம் தொறந்திருக்கும், நன்னா தொறந்து பார்த்தா கோபத்துனால. கண்ணை மூடிண்டு இருந்தா, த்யானம் பண்ணிண்டு இருக்கான்னு அர்த்தம், கொஞ்சம் கண்ணை தொறந்து பார்க்கும் போது தான் அந்த கருணை இருக்கும், அப்பேற்ப்பட்ட அந்த கருணையான உன்னுடைய பார்வையை, அந்த பார்வையால், ‘ஸ்நபய கருபயா மாமபி ஷிவே ‘ நிலா வெளிச்சத்தால், என்னையும் குளிப்பாட்டு அப்படிங்கறார். ‘மாமபி ஷிவே’ என்னையும் குளிப்பாட்டு, நான் லாயகில்லேதான், நான் deserving கிடையாது, இருந்தாலும் உன்னுடைய க்ருபைன்னு ஒன்னு இருக்கே, அதனால, நீ வந்து, அதுக்கு தான் comparison சொல்றார், நிலா வந்து, நான் வந்து காட்டில விழமாட்டேன், நாட்டுல வந்து மாளிகை மேல தான் கொட்டுவேன்னு சொல்றதா, அந்த மாதிரி நீ தயவுபண்ணு, அதுனால உனக்கு ஒரு குறையும் வராது. நான் பிழைச்சு போவேன்’ அப்படின்னு கேட்கறார்.
அது மாதிரி, சுப்ரமணிய புஜங்கத்ல ஒரு ஸ்லோகம் இருக்கு,
रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे मनोहारिलावण्यपीयूषपूर्णे।
मनःषट्पदो मे भवक्लेशतप्तः सदा मोदतां स्कन्द ते पादपद्मे।।
ரணத்தம்ஸகே மஞ்ஜுலேத்யந்தஷோணே
மநோஹாரிலாவண்யபீயூஷபூர்ணே |
மந:ஷட்பதோ மே பவக்லேஷதப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே ||
அப்படின்னு, என்னுடைய மனசாகிய வண்டு, ஷட்பதம் அப்படின்னு, மனசுக்கு பேர். ஆறு குணங்கள் கொண்ட மனமாகிய, என்னுடய மனமாகிய வண்டு, உன்னுடய பாதபத்மங்களில், ஸதா ரமிக்கட்டும் அப்படின்னு சொல்றார், தாமரைங்கறது குளத்துல இருக்கும், குளத்துல ஹம்சங்களும் இருக்கும், ஹம்சங்கள் தாமரை பக்கத்துல இருக்கறதுங்கறது ஒரு கவித்துவமான ஒரு வர்ணனை, அந்த காலத்துல நிறைய இருந்திருக்கும்.
இந்த இடத்துல ‘ரணத்தம்ஸகே’ அது வந்து ஸப்திக்கறது,
‘மஞ்ஜுலேத்யந்தஷோணே’ சேக்கசெவேல்ன்னு ரொம்ப அழகா மிருதுவாக இருக்கு.
‘மநோஹாரிலாவண்யபீயூஷம்’ மனத்தை கொள்ளை கொள்ளும் அழகு என்ற தேன் இருக்கு
இந்த தாமரைல, இதுல என்னுடைய மனமாகிய வண்டு ‘ஸதா மோததாம்’, எப்போதும் ரமிச்சுண்டு சந்தோஷமா இருக்கட்டும் அப்படின்னு சொல்றார், அப்படி இருந்தா எனக்கு இந்த உலகக்கவலைகள் எல்லாம் ஒண்ணுமே பண்ணாது, அப்படின்னு சொல்றார்,
இந்த இடத்துல இந்த ஹம்சபக்ஷிகள் எங்கறது பரமஹம்சர்கள் தான். அவா தான் அப்படி எப்பவும் ரமிக்கறா, எங்களுக்கு தெரியலை. நாங்க வந்து பாலைவனத்துல போய் தேனை தேடற மாதிரி, நாங்க அங்க இங்க அலையறோம், உன் பாதத்துல ரமிக்கும்படியா அனுக்ரஹம் பண்ணு, அப்படின்னு பிரார்த்தனை பண்றார். இதுல இன்னொரு ஸ்லோகம் இருக்கு,
कुमारेशसूनो गुह स्कन्द सेनापते शक्तिपाणे मयूराधिरूढ।
पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन् प्रभो तारकारे सदा रक्ष मां त्वम्।।
குமாரேஷஸூநோ குஹ ஸ்கந்த ஸேநா-
பதே ஷக்திபாணே மயூராதிரூட |
புலிந்தாத்மஜாகாந்த பக்தார்திஹாரிந்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் த்வம் ||
அப்படின்னு, இதுல முருகனுடைய பதினோரு நாமாவளிகளைச் சொல்லி, ‘ஸதா ரக்ஷ மாம் த்வம்’ என்னை காப்பாத்துன்னு வேண்டிக்கறார். இந்த ஸ்லோகத்துக்கு தேதியூர் சுப்ரமணிய சாஸ்த்ரிகள்ன்னு ஒரு பெரிய மஹான் இருந்தார், அவர் அர்த்தம் பண்ணும்போது, இந்த பதினோரு நாமாவளிகள், அஞ்சு கர்மேந்த்ரியங்கள், அஞ்சு ஞானேந்திரியங்கள், மனசு, இந்த பதினோரு elementsயும் control பண்றதுக்கு, நாரதர் பண்ணின ஒரு உபநிஷத்ல மந்த்ரங்களா குடுத்திருக்கு, அதை ஆச்சார்யாள் கருணையினால ஒரு ஸ்லோகமா நமக்கு குடுத்து, எல்லாரும் பாராயணம் பண்ணும்படியா சொல்லிக் குடுத்துட்டார், அப்படின்னு சொல்றார்.
இந்த சுப்ரமணிய புஜங்கத்தை எடுத்ததுனால, நான் சங்கர விஜயம் கதை சொல்றேன்னு பேரு, அதனால, ஒண்ணு சொல்லிடறேன். ஒரு தடவை யாரோ ஒரு மந்திரவாதி, ஆச்சார்யாள் துர்மதங்களை எல்லாம் கண்டனம் பண்றதுனால, அவர் மேல ஆபிசாரம் பண்ணிடறான். அவருக்கு உடம்பு வந்துடறது, அப்போ அவர் திருசெந்தூர்ல வந்து இந்த சுப்ரமண்ய புஜங்கத்தை சொல்லி, அவா பன்னீர் இலைல வெச்சு குடுக்கற அந்த விபூதியை வாங்கி இட்டுண்டார். அவருக்கு உடம்பு சரியாச்சு ன்னு சொல்வா. அதனால இந்த சுப்ரமண்ய புஜங்கம் உடம்பு வியாதிக்கும், மனோ வியாதிக்கும் மருந்து, அப்படின்னு சொல்லுவா. அதுக்கு வந்து சான்றாக இந்த ஸ்லோகத்துலேயே, ஒரு ஸ்லோகம் இருக்கு.
अपस्मारकुष्ठक्षयार्शःप्रमेहज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते।।
அபஸ்மாரகுஷ்டக்ஷயார்ஷ-ப்ரமேஹ-
ஜ்வரோந்மாதகுல்மாதிரோகா மஹாந்த: |
பிஷாசாஷ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்ரவந்தே ||
உன்னுடைய அந்த பன்னீர் இலைல வெச்சு குடுக்கற விபூதியை பார்த்தாலே இந்த அபஸ்மாரம், குஷ்டம், குல்மம், பிசாசங்கள் எல்லாம் ஓடியே போயிடுமே, அதை இட்டுண்டா அது அவனுக்கு எவ்வளவு பெரிய ரக்ஷைன்னு, சொல்லவும் வேண்டுமா அப்படின்னு ஒரு ஸ்லோகம் இருக்கு.
இந்த சுப்ரமண்ய புஜங்கத்தை ஸ்வாமிகள், நிறைய பேருக்கு சொல்லி, நித்யம் பாராயணம் பண்ணுங்கோ அப்படின்னு, நிறைய பேர் பண்ணிண்டு இருக்கா.
भुजङ्गाख्यवृत्तेन क्लृप्तं स्तवं यः पठेद्भक्तियुक्तो गुहं संप्रणम्य।
स पुत्रान्कलत्रं धनं दीर्घमायु र्लभेत्स्कन्दसायुज्यमन्ते नरः सः।।
புஜங்காக்யவரித்தேந க்லுப்தம் ஸ்தவம் ய:
படேத்பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய |
ஸ புத்ராந்கலத்ரம் தநம் தீர்கமாயு:
லபேத்ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நர: ஸ: ||
இந்த ஸ்லோகம், திருசெந்தூர் கடற்கரைல போய் அந்த ஸ்வாமியை தர்ஸனம் பண்ணவுடனே, அந்த கடல் அலைகள் எப்படி வர்றதோ அந்த மாதிரி ஒரு மெட்டுல இருக்கு, மேலும் சுப்ரமண்ய ஸ்வாமிங்கறது, பாம்பு வடிவமாக நிறைய கோவில்ல பூஜை பண்ணுவா, சுப்ரமண்யான்னு கர்நாடகால ஒரு ஸ்தலம் இருக்கு, அங்கே வந்து பாம்பையே தான் சுப்ரமண்யரா வணங்கறா. அப்படி அந்த பாம்பும் ஞாபகம் வரது அவருக்கு, அதனால புஜங்க வ்ருத்தத்ல இருக்கு இந்த ஸ்தோத்ரம், இதை சொல்லும்போதே ஒரு பாம்பு அசைஞ்சு வர மாதிரியும், கடல் அலைகள் பொங்கி வர்ற மாதிரியும் ஒரு meterல இந்த ஸ்லோகம் பண்ணிருக்கார்.
புஜங்காக்யவருத்தேந க்லுப்தம் ஸ்தவம் ய:
படேத்ப க்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய |
ஸ புத்ராந்கலத்ரம் தநம் தீர்கமாயு:
லபேத்ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நர: ஸ: ||
அப்படின்னு யார் இந்த ஸ்லோகங்களை படிக்கிறார்களோ, அவாளுக்கு, பிள்ளைகளும், மனைவி, தனம், தீர்காயுசு, எல்லாம் கிடைக்கும். முடிவில் அவர்கள் முருகனின் திருவடிகளை அடைவார்கள், அப்படின்னு ஒரு ஸ்லோகம்.
இன்னிக்கு இந்த சுப்ரமண்ய புஜங்கம் எடுத்ததுனால ரொம்ப ரஸமான ஒரு ஸ்லோகம் இதுல இருக்கு, அதை சொல்லாம விட மனஸ் இல்லை. அந்த ஒண்ணும் சொல்றேன்,
इहायाहि वत्सेति हस्तान्प्रसार्याह्वयत्यादराच्छंकरे मातुरङ्कात्।
समुत्पत्य तातं श्रयन्तं कुमारं हराश्लिष्टगात्रं भजे बालमूर्तिम्।।
‘இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தாந்ப்ரஸார்ய’ – இஹாயாஹி இங்க வாடா குழந்தே, அப்படின்னு ‘முருகா இங்கே வா’ வத்ஸ ‘குழந்தே இங்க வா’, ஹஸ்தாந்ப்ரஸார்ய ‘ரெண்டு கைகளை நீட்டி, ஆதரவோடு பரமேஸ்வரன், ‘ஆஹ்வ்யதி’, கூப்பிடுகிறார், ஆதாரத், ஆதரவோடு கூப்பிடும் சங்கரே ‘மாதுரங்காத்’, அம்மாவோட மடியில, பார்வதி தேவியோட மடியில இருக்கற முருகனை, சங்கரர் கூப்பிடறார். ‘ஸமுத்பத்ய தாதம் ஷ்ரயந்தம் குமாரம்’ உடனே துள்ளி அப்பாவோட மடிக்கு போகக்கூடிய அந்த குமாரனை, அந்த முருகப்பெருமானை, ‘ஹராஷ்லிஷ்டகாத்ரம்’ உடனே பரமேஸ்வரன் அவரை அள்ளி அணைச்சுகறாராம், ‘பஜே பாலமூர்த்திம்’ இந்த குழந்தையை நான் நினைக்கிறேன், வணங்குகிறேன், வழிபடுகிறேன், அப்படின்னு சொல்றார். ஒரு அழகான ஒரு ஸ்லோகம். இந்த சுப்ரமண்ய புஜங்க ஸ்லோகங்கள் முப்பத்தி மூணுமே அழகுதான் , ஏதோ இன்னிக்கு ஒரு நாலு சொன்னேன். இதோட பூர்த்தி பண்ணிக்கறேன், நாளைக்கு திரும்பவும் சங்கர சரித்ரமே continue பண்ணுவோம்.
சங்கர பாஷ்யத்தில் பக்திநெறி (21 min audio in tamil. same as the script above)
ஜானகீ காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம