ஸுப்ரமண்ய புஜங்கம் இரண்டாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script below)
நேற்றைக்கு ஸுப்ரமண்ய புஜங்கதுல இருந்து முதல் ஸ்லோகம்.
सदा बालरूपाऽपि विघ्नाद्रिहन्त्री
महादन्तिवक्त्राऽपि पञ्चास्यमान्या ।
विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे
विधत्तां श्रियं काऽपि कल्याणमूर्तिः ||
ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா |
விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்திஹி ||
அப்படீங்கிற ஸ்லோகத்தை எடுத்து, அதோட அர்த்தத்தை பார்த்தோம். இன்னைக்கு, ரெண்டாவது ஸ்லோகம். ஸ்லோகத்தை படிக்கிறேன்.
न जानामि शब्दं न जानामि चार्थं
न जानामि पद्यं न जानामि गद्यम् ।
चिदेका षडास्या हृदि द्योतते मे
मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ।।2।।
ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் |
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் ||
ஆசார்யாளுக்கு தன்னுடைய முகத்துலேர்ந்து வெளிப்பட்ட முதல் ஸ்லோகத்தை கேட்டு, “ஆஹா நான் எவ்வளவு ஸாஹஸத்தோட, தைரியத்தோடு உங்களை ஸ்தோத்ரம் பண்றேன் ன்னு வந்து நிக்கறேனே, எனக்கு ஒண்ணுமே தெரியாதே! இப்படி ஒரு ஸ்லோகம் என் வாக்கில் வந்துதே” ன்னு ஆச்சர்யப் பட்டு சொல்றார், “நான் உங்களை ஸ்தோத்ரம் பண்ண போறேன், ஆனா இது நான் பண்றது கிடையாது. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ ன்னு சொல்றா மாதிரி, உங்களுடைய அருளால் எனக்கு இந்த வாக்கு வர்றது. நான் இதைக் கொண்டு உங்களை ஸ்தோத்ரிக்கிறேன்” ன்னு சொல்றார். அதை இந்த ஸ்லோகத்துல சொல்றார்.
‘ந ஜானாமி சப்தம்’ எனக்கு ஒரு பதத்தைக் கூட சரியான பொருள் தெரிஞ்சு பேச தெரியாது. ‘ந ஜானாமி சார்த்தம்’ இது இன்ன அர்த்தம்-ன்னு தெரியாது. எனக்கு vocabulary-யும் இல்லை, semantics ம் தெரியாது. வார்த்தைகளுக்கு சரியான அர்த்தங்களும் சொல்ல தெரியாது. ‘ந ஜானாமி பத்யம்’ எனக்கு ஒரு கவிதை எழுதறதுக்கும் தெரியாது. யாப்பிலக்கணம் னா என்ன, என்ன rules, எவ்வளோ அக்ஷரங்கள் இருக்கணும், எவ்வளோ பாதத்துல இருக்கணும், ஹ்ரஸ்வம் னா குறில், தீர்க்கம் னா நெடில், இதெல்லாம் எப்படி அமையணும், தளை தட்டாம இருக்கணும். அப்படியெல்லாம் rules, அது ஸம்ஸ்க்ருத்துலேயும் இருக்கு. அதுலேர்ந்து தான் தமிழ்லயும் வந்து இருக்கு, அந்த rules எல்லாமும் எனக்கு தெரியாது.”
“சரி, கவிதை எழுத தெரியாது, ஏதோ prose மாதிரி, ‘கத்யம்’னா prose, ஸம்ஸ்ருதத்துல சூர்ணிகைன்னு சொல்றா. தண்டாகாரமா, line-ஆ சொல்லிண்டே போறது. ஷ்யாமளா தண்டகம் மாதிரி, அப்படி ஏதாவது சொல்ல தெரியுமான்னா, அது கூட எனக்கு சொல்லத் தெரியாது. எழுத்தே தெரியாதுங்கிற போது வார்த்தைகளே தெரியாதுங்கிற போது நான் எப்படி உங்களை ஸ்தோத்திரிக்க முடியும்?” ன்னு சொல்லிட்டு,
“ஆனால் என்னுடைய மனசுல, ‘மே ஹ்ருதி’ என்னுடைய ஹ்ருதயத்தில், ‘சிதேகா ஷடாஸ்யா’ ஒரு ஆறுமுகங்களோடு கூடின ஒரு ‘சித்’, ஒரு ஒளி, ‘த்யோததே’ பிரகாசிக்கறது. ஆறுமுகங்களோடு கூடின ஒரு ஒளி, ரொம்ப நிகரற்ற ஒரு தேஜஸோட என் மனசுல பிரகாசிக்கறது. அதுனால ‘முகாத்’ என்னுடைய வாக்கில் இருந்து, முகத்தில் இருந்து, ‘கிரஸ்சாபி சித்ரம்’ ரொம்ப ஆஸ்ச்சரியமான வார்த்தைகள் எல்லாம் ‘நிஸ்ஸரந்தே’ வெளியில வந்து அருவி மாதிரி கொட்டறது”, அப்படீன்னு சொல்றார்.
மஹான்கள் எல்லாருக்குமே வாக் எங்கிறது பகவான் கொடுத்தது, அப்படீங்கிறதை அவா ரொம்ப feel பண்றா, நிறைய அருட்கவிகள் அந்த மாதிரி சொல்றா, இது humility, ஆனா தெய்வம் நினைக்கிலேன்னா இந்த மாதிரி அருமையான வாக்கு வந்து விழ முடியுமா? வால்மீகியே தன்னுடைய காவியத்தை ரசனம் பண்ணிட்டு சொல்றார்…
तदुपगतसमाससन्धियोगं सममधुरोपनतार्थवाक्यबद्धम् ।
रघुवरचरितं मुनिप्रणीतं दशशिरसश्च वधं निशामयध्वम् ।।
தது3பக3த ஸமாஸ ஸன்தி4 யோக3ம் ஸம்மது4ரோபநதார்த2 வாக்ய ப3த்3த4ம்|
ரகு4வர சரிதம் முநிப்ரணீதம் த3ஸஸிரஸஶ்ச வத4ம் நிஸாமயத்4வம்||
இதுல இருக்கக்கூடிய ஸமாஸங்கள், ஸந்திகள் இதெல்லாம் ரொம்ப மதுரமா இருக்கு, இதுல ராவண வதம், ராமரோட சரித்திரம், சீதையோட சரிதம், ‘ஸீதாயா: சரிதம் மஹத்’ எல்லாம் இருக்கு. இதை ‘நிஷாமய’ எல்லாரும் பாருங்கோன்னு சொல்றார், கேளுங்கோன்னு சொல்லலை. அப்படி நேரா பார்க்கற மாதிரி இந்த காவ்யம் அமைஞ்சு இருக்கு, அப்படீன்னு வால்மீகியே வியக்கறார்.
மூக கவி நிறைய இந்த மாதிரி சொல்லி இருக்கார். என்னைப் போன்ற ஊமைகளையும் சர்வக்ஞனா அம்பாள் பண்ணிடுவா. அப்படீன்னு
आरम्भलेशसमये तव वीक्षणस्स
कामाक्षि मूकमपि वीक्षणमात्रनम्रम् ।
सर्वज्ञता सकललोकसमक्षमेव
कीर्तिस्वयंवरणमाल्यवती वृणीते ॥
ஆரம்பலேஷஸமயே தவ வீக்ஷணஸ்ய
காமாக்ஷி மூகமபி வீக்ஷணமாத்ரநம்ரம் |
ஸர்வஜ்ஞதா ஸகலலோகஸமக்ஷமேவ
கீர்திஸ்வயம்வரணமால்யவதீ வ்ருணீதே ||
உன்னுடைய கடாக்ஷம் ஒருத்தன் மீது பட ஆரம்பிச்சாலே ‘ஆரப்பலேஷஸமயே தவ வீக்ஷணஸ்ய’ அவன் ஊமையா இருந்தாலும், அவன் சர்வக்ஞனாகி, உலகத்தில் கீர்த்தியோடு விளங்குவான் ன்னு சொல்றார், தன்னுடைய அனுபவத்தை சொல்றார்.
முருகப்பெருமானோட அருளால வாக்கு வந்ததுனா இன்னும் அருணகிரிநாதர் இருக்கார். அருணகிரி, உடம்பு வியாதி வந்து, ரொம்ப நொந்து போய், திருவண்ணாமலையில கோபுரத்துல இருந்து விழுந்து தற்கொலை பண்ணிக்கனும்னு நினைச்ச போது, பகவான் அவரை கையில தாங்கி உயிரைக் காப்பாற்றி “சும்மா இரு சொல் அற” ன்னு உபதேசம் பண்றார். அவர் அந்த மண்டபத்துலேயே, உக்காந்துண்டு ஒரு கார்யமும் பண்ணாமல், ஒரு பேச்சும் பேசாமல், அந்த முருகப் பெருமானுடைய தரிசனத்தையும், அந்த முருக நாமத்தையுமே த்யானம் பண்ணிண்டு, பன்னிரண்டு வருஷம் தபஸ் பண்ணினார் ன்னு சொல்லுவா. அப்ப முருகப் பெருமான் திரும்பவும் தரிசனம் கொடுத்து “அருணகிரி முத்து முத்தா என்னை பாடு”ன்னு சொல்றார்.
முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்
அப்படீன்னு ஆரம்பிச்சு சந்தத்தமிழ்ல, அருணகிரி ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடறார். அந்த மாதிரி, இந்த ஸ்லோகத்துல தெரிஞ்சிக்க வேண்டியது என்னென்னா, முருகப் பெருமானுடைய அருள் இருந்தா பாண்டித்யம் வரும். நல்ல வாக்கும் வரும்கிறது தெரியறது.
அதே மாதிரி முத்துஸ்வாமி தீக்ஷிதர். சிதம்பரநாத் யோகிங்கிறவர் இவருடைய அப்பாகிட்ட கேட்டு, இந்த முத்துஸ்வாமியை காசிக்கு கூட்டிண்டு போய், ஸ்ரீவித்யை எல்லாம் சொல்லிக் கொடுக்கறார். பல வருஷங்கள் முத்துஸ்வாமி அவருக்கு service பண்ணிண்டு இருக்கார். ஒரு நாளைக்கு அந்த சிதம்பரநாத் யோகி “நான் அம்பாள் கிட்ட போக போறேன், நீ ஊருக்கு போ. உனக்கு மந்த்ர சித்தி ஆயிடுத்து” ங்கறார், இவருக்கு ஆஸ்ச்சர்யமா இருக்கு. “எனக்கு எப்படி மந்தர சித்தி ஆச்சு? எனக்கு தெரியலேயே-ன்னா போது, என்னோட வான்னு சொல்லி, கங்கைக்கு கூட்டிண்டு போறார். ‘நான் போயிடுவேன். நீ கங்கைக்குள்ள இறங்கி, கங்கா மாதா என்ன கொடுக்கிறாளோ அதை எடுத்துக்கோ” ன்னு சொல்றார். இவர் உள்ள போய் இறங்கி கங்கைகுள்ள கையை வைக்கறார், அதுல ஒரு வீணை வர்றது. அதுல ராம நாமம் பொறிச்சு இருக்கு, அந்த வீணை இன்னைக்கும் அவா குடும்பத்துல இருக்கு. பிற்பாடு அந்த யோகி கங்கைல இறங்கி கங்கைகுள்ளவே போயிடுறார். ஜல சமாதி ஆயிடறார். முத்துஸ்வாமி வீணையை எடுத்துண்டு, குரு சித்தி ஆயிட்டாரேன்னு வருத்தத்தோடு இருக்கார். குருவுக்கு அதிஷ்டானம் அமைத்து விட்டு, தன் ஊர், எட்டயபுரத்துக்கு வந்து சேருகிறார்.
அப்பறம் அவர் ஒரு தடவை திருத்தணி போறார். மலையேறிப் போய் ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு, மலை இறங்கி திரும்ப வரும் போது, ஒரு கிழவர் முத்துஸ்வாமின்னு கூப்பிடறார், திரும்பிப் பார்த்த உடனே, இந்தான்னு ஒரு கல்கண்டை வாயில் குடுக்கறார். அந்த கல்கண்டை இவர் சாப்பிட்ட உடனே முருகனோடு தரிசனம் கிடைக்கிறது. அப்போ ஆரம்பிச்சு ‘ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி’ அப்படீன்னு ஒரு க்ருதி பண்றார். அப்படி அந்த முதல் கருதி. அப்பறம் எட்டு விபக்தியிலயும் முருகன் மேல க்ருதிகள் பண்றார். அப்புறம், தேசம் முழுக்க எல்லா க்ஷேத்ரத்துலேயும் போய், எல்லா ஸ்வாமியையும், அற்புதமான ஸம்ஸ்க்ருதத்துல, அழகழகான ராகங்கள்ல க்ருதிகள் பண்ணி இருக்கார். மஹாபெரியவாளுக்கு, ஸ்வாமிகளுக்கெல்லாம் முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ருதிகள்னா தேன். ஏன்னா, அவாளுக்கு ஸம்ஸ்க்ருதமும் பிடிக்கும், சங்கீதமும் பிடிக்கும், “முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ருதிகள் பாடுங்கோ”, அப்படீன்னு கேட்டு கேட்டு ஸ்வாமிகள் பாடச் சொல்லுவார். அந்த முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு இனிமையான வாக்கு, பாண்டித்யம் முருகபெருமான் கொடுத்தார்.
அப்படி “அந்த முருகனுடைய அருளால் நான் இந்த, சுப்ரமண்யரை ஸ்தோத்ரம் பண்ணப் போறேன், புஜங்கத்தை பாட போறேன்”, ன்னு ஆச்சார்யாள் சொல்றார். எல்லா வார்த்தைகளுக்கு பொருள் பகவான் போட்டது, ‘ஹிமம் ‘ அப்படீன்னா பனி, ‘கிரி’, அப்படீன்னா மலை, ‘ஹிமகிரி’ அப்படீன்னா Himalayas, அங்கே வடக்கே இருக்கிற அந்த பனி மலைக்கு அந்த வார்த்தை. ‘ஹிமகிரிதனயா’ ன்னா, பார்வதி தேவி, அம்பாள், அப்படி ஒவ்வொரு வார்த்தையை சொன்ன உடனே, அந்தந்த விஷயம் நமக்கு ஞாபகம் வரதில்லையா? ‘ஹிமம் ‘ன்னா பனி ஞாபகம் வரது, ‘கிரி-ன்னா மலை ஞாபகம் வரது, ஹிமகிரி ஹிமவான்னா வடக்குல இருக்கிற ஒரு பெரிய பனி மலை ஞாபகம் வரது, ‘ஹிமகிரிதனயா’-ன்னா அம்பாள் ஞாபகம் வரது. இப்படி வார்த்தைகளுக்கு பொருள்கள்-ங்கிறது பகவான் போட்டது, அப்படீன்னு சாஸ்த்ரத்துல இருக்கு.
அதோட ஒவ்வொரு காலத்துல பொருள் கொஞ்சம், கொஞ்சம் மாறுகிறது, connotation அப்படீன்னு சொல்லுவா. இந்த இடத்துல இந்த பொருள் எடுத்துக்கணும், அப்படிங்கிறது, அது அழகா அமையணும். மஹான்களோட வாக்கு தான் என்றைக்கு எடுத்தாலும் அந்த மாதிரி சந்தோஷப் படும் படியா, எல்லா காலத்துலேயும் மங்களகரமான அர்த்தங்களே வரும் படியான வாக்கு, மஹான்களுக்கு இறையருளால் கிடைச்ச வாக்குல தான் அந்த மாதிரி இருக்கும். அப்பேற்பட்ட இந்த ஸுப்ரமண்ய புஜங்கம். இந்த ஸ்லோகத்தை இன்னோரு வாட்டி படிச்சு முடிக்கறேன்.
“ஹ்ருதய கமலமாகிய குஹையில வசிக்ககூடிய முருகப்பெருமானுடைய அருளால், நான் இந்த ஸ்லோகத்தை பண்ணி, இந்த ஸ்லோகத்துடைய கர்த்தா, அப்படீங்கிற கீர்த்தி எனக்கு வர போறது. ஆனா, எதிர்ல நிற்கிற இந்த ஸ்வாமிதான் என்னை பேச வைக்கிறார்”, அப்படீன்னு சங்கரரும் ஆஸ்ச்சர்ய படறார், இதை கேட்கறவாளும் ஆஸ்ச்சர்ய படறா. இன்னைக்கும் நாம ஆஸ்ச்சர்யபட்டு இந்த ஸ்லோகத்தை படிச்சிண்டு இருக்கோம். அப்பேற்ப்பட்ட முருகனுடைய அருள். இந்த ஸ்லோகத்துல ஆசார்யாளோட வினயம், முருகபெருமானுடைய அருள் ரெண்டும் வெளிப்படறது.
न जानामि शब्दं न जानामि चार्थं
न जानामि पद्यं न जानामि गद्यम् ।
चिदेका षडास्या हृदि द्योतते मे
मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ।।2।।
நாளைக்கு ‘மயூராதிரூடம்’ என்கிற ஸ்லோகத்தை பார்க்கலாம்.
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரோ ஹரா.
One reply on “ஸுப்ரமண்ய புஜங்கம் – இரண்டாவது ஸ்லோகம் – அறுமுக குமர சரணம் என அருள்பாடி”
பரத கண்டம் முழுவதும் திக் விஜயம் செய்து, எல்லா பரமதங்களையும் நிராகரணம் செய்து, அத்வைத வேதாந்தத்தை நிலைநாட்டி, ஜகதாசார்யாள் என்று கௌரவம் ஏற்படும்படி நாம் நினைத்து நினைத்து ஆச்சர்யப்படும்படியாக எத்தனையோ ஸாதனைகளை செய்திருக்கிறார் ஆசார்யாள்!
அப்படிப்பட்டவர் “எனக்கு எதுவும் தெரியாது! எல்லாம் உன் அருளாலே” என்று விநயமாக சொல்கிறார்.
“வித்யா விநய ஸம்பன்ன” என்றபடி வித்யையின் பரிபூர்ண மூர்த்தியாயும் விநயத்தின் பரிபூர்ண மூர்த்தியாயும் ஒருத்தரே இருந்தாரென்றால் அது நம் ஆசார்யாள் தான். நாம் அவருடைய நிஜ சிஷ்யாளானால் இந்தப் பாடத்தைத்தான் கற்றுக் கொள்ளணும்.” என்கிறார் மஹாபெரியவா.
ஸெளந்தர்ய லஹரியிலும் “த்வதீயாபி: வாக்பி: தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்” – “உனக்கே ஸொந்தமான வாக்கினால் உனக்கு ஏற்பட்ட ஸ்துதி இது. நான் ஒன்றுமே பண்ணவில்லை. உன்னுடையதே இது” என்று அர்ப்பணம் செய்கிறார்.