ஸுப்ரமண்ய புஜங்கம் பன்னிரண்டாவது ஸ்லோகம் (8 min audio file. Same as the script above)
நேற்றைய ஸ்லோகம்,
पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग-स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् ।
नमस्यामहं तारकारे तवोरः स्वभक्तावने सर्वदा सानुरागम् ॥ ११॥
புளிந்தேச கன்யாகநாபோக துங்க
ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம் |
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் ||
தன்னுடைய பக்தர்களைக் காப்பாத்தணுங்கற விஷயத்துல ஸ்வாமிக்கு இருக்கற அந்த ஆசை, உள்ளுக்குள்ள இருக்கற ஆசை, வெளியில அவருடைய மார்புல செக்கச் சேவேல்னு தெரியறதுன்னு சொன்னார். இன்னிக்கி பன்னிரண்டு திருக்கரங்களைப் பற்றி ஒரு ஸ்லோகம்.
विधौ कॢप्तदण्डान् स्वलीलाधृताण्डा-
न्निरस्तेभशुण्डान् द्विषत्कालदण्डान् ।
हतेन्द्रारिषण्डाञ्जगत्राणशौण्डान्
सदा ते प्रचण्डान् श्रये बाहुदण्डान् ॥ १२॥
விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான் |
ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண செளண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் ||
பாஹு-ன்னா கைகள், முருகப் பெருமானுக்கு நல்ல நீளமான பன்னிரு கைகள். அதைப் பத்தி இந்த ஸ்லோகம்.
‘வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்’ – அப்படீன்னு மஹான்கள் எல்லாம் பாடியிருக்கா. அந்த கரங்களைk கொண்டு என்னைக் கை தூக்கிவிடு, என் கையை பிடிச்சுக்கோ கராவலம்பம்-னா கையைப் பிடிச்சிண்டு ஆபத்துலேர்ந்து நம்மளை காப்பாத்தறது. அந்த மாதிரி அருணகிரிநாதர்கூட
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக …… மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள …… இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட …… முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது …… பெறவேணும்
சிறப்பான வீரலக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்கள்-னு பாடறார். அப்புறம் முழு ரூபத்தையும் வர்ணனை பண்ணி, இடப்புறமும், வலப்புறமும் தெய்வானை, வள்ளியம்மையோடு எனக்குக் காட்சி தரவேண்டும்-ன்னு அந்த ஒரு அழகான பாட்டு.
இந்த ஸ்லோகத்தோட அர்த்தம் சொல்றேன். விதெளக்லுப்த தண்டான் – விதி-ன்னா ப்ரம்மா, விதெள-ன்னா ப்ரம்மாவிடத்தில், தண்டம்-ன்னா தண்டனை, க்லுப்த தண்டான்-னா தண்டனை கொடுத்தார். முருகப் பெருமான் தன் கைகளால் அவர் தலையில குட்டினார், அவர் ப்ரணவத்துக்கு அர்த்தம் தெரியாது-ன்னு சொன்ன போது. அந்தக் கைகள்-னு சொல்றார். ப்ரம்மாவுக்கு தண்டனை கொடுத்த கைகள்.
‘ஸ்வலீலாத்ருதாண்டான்’ அண்டங்களை எல்லாம் விளையாட்டாக ‘ஸ்வலீலா’ வெறும் விளையாட்டாக அண்டங்களை எல்லாம் தாங்கி கொண்டு இருக்கிறார். ‘த்ருத அண்டான்’
நிரஸ்தேபசுண்டான்’ , இப:-ன்னா யானை, இபசுண்டம்-னா யானையோட தும்பிக்கையை, நிரஸ்த: யானையோட தும்பிக்கையை பிடிச்சு அதோட திமிரை அடக்கினார், மதத்தை அடக்கினார்-ன்னு இங்க வர்றது. ஒரு புராணத்துல, வள்ளியம்மை பயந்துண்டு, யானையை பார்த்தவுடனே முருகனை வந்து கட்டிக்கறா. அதற்கப்புறம், கணபதி யானையா வந்தபோது அவருடைய கோபத்தை அவராலேயே அடக்க முடியலைன்னும், முருகப் பெருமான் தான் அதன் தும்பிக்கையைப் பிடிச்சு அதனுடைய மதத்தை அடக்கினார்னும் இருக்காம். அதனால ‘நிரஸ்தேபசுண்டான்’ யானையினுடைய தும்பிக்கையைப் பிடிச்சு அதனுடைய மதத்தை அடக்கின அந்த கைகள்,
‘த்விஷத்காலதண்டான்’ எமனுக்கு சத்ருவா இருந்து எமனையே துவம்சம் பண்ற கைகள்-னு சொல்றார். மார்க்கண்டேயனை சிவபெருமான் எமன் கிட்டயிருந்து காப்பதினார்-ங்கற கதை எல்லாருக்கும் தெரிஞ்சியிருக்கும். ஒரு புராணத்துல முருகப் பெருமானை கொண்டு அந்த எமனை விரட்டினார்-னு இருக்காம். அதனால எமனக்கும் சத்ருவாக அவனை அடக்கின கைகள்னு இதுக்கு சாஸ்த்ரிகள் அர்த்தம் சொல்லியிருக்கார்.
‘ஹதேந்த்ராரிஷண்டான்’ இந்திரனுக்கு அரி – இந்திரனுக்கு எதிரிகளான சூரபத்மன் முதலிய அசுரர்களை ‘ஹத:’ வதம் பண்ணினார்.
‘ஜகத்ராண செளண்டான்’ இந்த கரங்கள் உலகங்களை எல்லாம் காப்பாத்தறதுல ரொம்ப சாமர்த்தியத்தோட, ரொம்ப சக்தி வாய்ந்த கைகளா இருக்கு.
‘ப்ரசண்டான்’ இந்த கைகள் எதிரிகளுக்கு ரொம்ப பயங்கரமா இருக்கு, அவர் கையில வேலை எடுத்தார்னா எல்லாம் பயந்து ஓடறா. அப்படி பயத்தை கொடுக்கக்கூடியதாக உள்ள ‘பாஹுதண்டான்’ உன்னுடைய தண்டம்-ன்னா நீண்டு தொங்கி கொண்டு இருக்கக் கூடிய, பன்னிரு கைகளையும் ‘சதா ஆச்ரயே’ நான் எப்பொழுதும் நம்பி இருக்கிறேன். நான் அவைகளை பற்றுக்கோடாக கொண்டிருக்கிறேன்-ன்னு , இந்த அழகான ஸ்லோகம்.
இந்த வள்ளி தேவியை பத்தி சொல்லும் போது, இங்க ஒரு புராண வரலாறு கொடுத்திருக்கார். விஷ்ணு பகவான் ஒரு ரிஷியாக இருந்த போது ஒரு மானை பார்த்தார். அந்த மான் ஒரு குழந்தையை ஈன்றுட்டு போனதாகவும், அந்த குழந்தை, வல்லி-ன்னா கொடின்னு அர்த்தம். கொடிகளுக்கு நடுவுல கிடந்த போது புளிந்தன்-ங்கற வேடன் வந்து அந்த குழந்தையைப் பார்த்த உடனே எடுத்து “எனக்கு பிள்ளைகள் இருக்கா. ஆனா பெண் குழந்தைகள் இல்ல, எனக்குக் கிடைச்ச லக்ஷ்மி”-ன்னு எடுத்துண்டு போய் வளர்த்தாகவும், முதல்ல ரெண்டு பெண்கள் முருகப் பெருமானுக்காக தேவலோகத்துல தபஸ் பண்றா. அவா சுந்தரவல்லி, ஆனந்தவல்லி அப்படீன்னு. அதுல சுந்தரவல்லி, இந்திரனுக்கு பெண்ணாக பிறந்தாள். ஸ்வாமி ஸூரசம்ஹாரம் பண்ணின உடனே, இந்திரனே தேவசேனையை முருகருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறான். ஆனந்தவல்லிங்கிறவ இந்த பூமியில தினைப் புனத்துல பெண்ணா பிறக்கிறாள். முருகப் பெருமான் இவா சுந்தரவல்லியாகவும் , ஆனந்தவல்லியாகவும் இருந்த போதே ஷடக்ஷரி மந்த்ரோபதேசம் பண்ணினார், அது இந்த மாதிரி பிறந்தபோதும் அவாளுக்கு ஞாபகம் இருந்தது. அதனால அந்த ஷடக்ஷரியை ஜபிச்சிண்டு தினைப்புனத்துல, இதை பறவைகள் எல்லாம் ஓட்டிண்டு இருந்த போது, நாரதர் முருகப் பெருமான் கிட்ட இந்த வள்ளியோட அழகை சொல்றார். உடனே முருகப் பெருமான் தேடி வந்து இந்த வள்ளியை கல்யாணம் பண்ணிக்கறார்-ங்கற வ்ருத்தாங்களும் இங்கே தேதியூர் சாஸ்திரிகள் விளக்கமா எழுதி இருக்கார். அப்படி சொல்லிண்டு வரும் போது, யானையா கணபதி வந்தார். முருகப் பெருமான், அவரோட மதத்தை அடக்கினார். ‘நிரஸ்தேபசுண்டான்’ ன்னு சொல்லும் போது அந்த வ்ருத்தாந்தத்தை சொல்லியிருக்கார்.
நாளைக்கு ஆறு முகங்களை பத்தி ஒரு ஸ்லோகம். அதை பார்ப்போம்.
வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா