Categories
Subramanya Bhujangam

ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினைந்தாவது ஸ்லோகம் – அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே


ஸுப்ரமண்ய புஜங்கம் பதினைந்தாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script above)

ஸுப்ரமண்ய புஜங்கத்துல இன்னிக்கு பதினைந்தாவது ஸ்லோகம். முருகப்பெ ருமானுடைய கடாக்ஷ வீக்ஷணத்தின் மஹிமையை பத்தி ஒரு ஸ்லோகம்.

विशालेषु कर्णान्तदीर्घेष्वजस्रं

दयास्यन्दिषु द्वादशस्वीक्षणेषु ।

मयीषत्कटाक्षः सकृत्पातितश्चे-

द्भवेत्ते दयाशील का नाम हानिः ॥ १५॥

விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ்வஜஸ்ரம்

தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு |

மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்

பவேத்தே தயாசீல கா நாமஹானி ||

ன்னு ஒரு ஸ்லோகம். ‘ஹே தயாஷீல’, ஹே தயவே வடிவான ஸுப்ரமண்ய மூர்த்தியே, ‘விசாலேஷு’ உனக்கு பன்னிரண்டு கண்கள் இருக்கு. அதெல்லாம் விசாலமான கண்கள். எவ்வளவு விசாலமாக இருக்குன்னா ‘கர்ணாந்த தீர்க்கேஷு’ காது வரைக்கும் நீண்டிருக்கு உன் கண்கள். அதுல ‘அஜஸ்ரம்’ எப்பொழுதும் ‘தயாஸ்யந்திஷு’ தயை நிரமபி வழிந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய கடாக்ஷத்துலேருந்து கருணை பெருகி விழுந்துண்டே இருக்குங்கறார், ‘த்வாதசஸு வீக்ஷணேஷு’, உன்னுடைய பன்னிரண்டு கண்கள்லேர்ந்து, ஒரு கொஞ்சம் ‘ஈஷத் கடாக்ஷ:’ கொஞ்சம் உன் பார்வையை, கடைக்கண் பார்வையை ‘மயி’ என்னிடத்தில் ‘ஸக்ருத்’ ஒரே ஒரு தடவை, ‘பாதித:’ விழப் பண்ணினேனா, ஒரு தடவை கண்ணெடுத்து நீ என்னை பார்த்தாயேயானால், எனக்கு எல்லாமே கிடைச்சுடும். முருகா உனக்கு அதனால என்ன குறை வந்துடப் போறது? அப்படீன்னு சொல்றார். ‘பவேத்தே தயாசீல கா நாமஹானி’ உனக்கு இதுனால ஒரு ஹானியும் வராதே. அதனால கொஞ்சம் தயவு பண்ணு’ முருகா ன்னு கேட்கறார்.

முருகா, உனக்கு பன்னிரண்டு கண்கள் இருக்கு. எல்லா தெய்வங்களை விட அதிகமான கண்கள் உனக்குத் தான் இருக்கு. அதுவும் எல்லா கண்களும் விசாலமா காது வரை நீண்டு இருக்கு. அப்படி இருக்கும் போது, ஒரு கண்ணால, அது கூட முழு கண் இல்ல, கடைகண்ணால என்னை ஒரு பார்வை பார்த்தேயானால் நான் பிழைச்சு போயிடுவேன். உனக்கு அதனால ஒரு குறையும் இல்லையே அப்படீன்னு சொல்றார்.

பகவான் பூர்ண வடிவினர். அதனால ஒரு ஜீவனுக்கு அவர் அனுக்ரஹம் பண்ணதால ஒண்ணும் குறை ஏற்பட போறதில்லை . சௌந்தர்யலஹரில ‘த்ருசா த்ராகீயஸ்யா’ என்கிற ஸ்லோகத்துல கூட சங்கரர் ‘அம்மா, உன்னுடைய கடாக்ஷத்தை என் மேலே காட்டு. எனக்கு யோக்கியதை இல்லை தான். ஆனா உனக்கு அதுல ஒண்ணும் நஷ்டம் இல்லையே! சந்திர கிரணம் காட்டுலேயும், மாளிகையிலேயும் ஒரே மாதிரி தானே விழறது. அது மாதிரி தகுதி இல்லாத என் மேலும் உன் கடாக்ஷம் பட்டுதுன்னா ஏதோ நான் பிழைச்சு போவேன். உனக்கு ஒண்ணும் இதுல நஷ்டம் இல்ல. அதுனால ‘தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாம்பி சிவே’ ரொம்ப தைன்யமா இருக்கக் கூடிய என் மேலேயும் கடாக்ஷம் பண்ணும்மா’ ன்னு கேட்ட மாதிரி, இங்கேயும் அதே மாதிரி கேட்கறார். ‘உன்னுடைய பன்னிரண்டு கண்கள்ல ஏதாவது ஒரு கண்லேயிருந்து ஒரு கடைக்கண் பார்வையை நீ என் மேல விழப்பண்ணு’ ன்னு சொல்றார்.

தேதியூர் சாஸ்த்ரிகள் எவ்வளவு படிச்சவர் எங்கறதுக்கு இங்கே மஹாபாரதத்துலேர்ந்து ஒரு ஸ்லோகம் quote பண்ணியிருக்கார். பன்னிரண்டு கல்யாண குணங்கள் ப்ரம்ம நிஷ்டர்கள் கிட்ட இருக்கு. அதையெல்லாம் பக்தர்களுக்கும் முருகனுடைய பன்னிரண்டு கண்கள் கொடுக்கும்ன்னு சொல்றார். மோக்ஷ சாதனமான ஆத்மஞானம், சத்யவசனம், மனோநிக்ரஹம், வேதாந்த விசாரம், பொறாமை இன்மை, அதர்மத்தில் லஜ்ஜை, சீதோஷணாதிகளை ஸஹிப்பது, குணமுள்ள இடத்தில தோஷாரோபணம் செய்யாமல் இருப்பது, யாகம், ஸத்பாத்ர தானம், இந்த்ரிய நிக்ரஹம், சத்கர்மாவில் தைரியம், இந்த பன்னிரண்டு விதமான ப்ரம்ம நிஷ்டர்களுடைய கல்யாண குணங்களை தன் பக்தரிடத்தில் முருகப்பெருமான் வர்ஷிப்பார், அப்படீன்னு சொல்லி இந்த பன்னிரண்டு கண்களால் பன்னிரண்டு அனுக்கிரஹம் பண்ணுவார்-ன்னு பொருத்தமா ஒரு ஸ்லோகத்தை எடுத்து சொல்லி இருக்கார்.

நேத்திக்கு முருகனுடைய மந்தஸ்மிதம்-ன உடனே காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்தைப் பத்தி மூகபஞ்சசதியில இருந்து பார்த்தோம். அதேமாதிரி மூக கவி காமாக்ஷி கடாக்ஷத்தைப் பத்தியும் நூறு ஸ்லோகம் பண்ணியிருக்கார். அதுல ஒண்ணு, ரெண்டு ஸ்லோகம் சொல்றேன். இதே மாதிரி என் மேல உன் கடாக்ஷத்தை விழப்பண்ணக் கூடாதான்னு கேட்கற மாதிரி ஒரு ஸ்லோகம் இருக்கு.

मातः क्षणं स्नपय मां तव वीक्षितेन

मन्दाक्षितेन सुजनैरपरोक्षितेन ।

कामाक्षि कर्मतिमिरोत्करभास्करेण

श्रेयस्करेण मधुपद्युतितस्करेण ॥

மாத: க்ஷணம் ஸ்னபய மாம் தவ வீக்ஷிதேன

மந்தாக்ஷிதேன ஸுஜனைரபரோக்ஷிதேன |

காமாக்ஷி கர்மதிமிரோத்கரபாஸ்கரேண

ச்ரேயஸ்கரேண மதுபத்யுதிதஸ்கரேண ||

ன்னு ஒரு ஸ்லோகம், ‘மாத:’, அம்மா ‘க்ஷணம் ஸ்நபய மாம் தவ வீக்ஷிதேன’, உன்னுடைய கடாக்ஷத்துனால என்னை ஒரு க்ஷணம், நனைப்பாயாக, ‘ஸுஜனைரபரோக்ஷிதேன’ உன்னுடைய கடாக்ஷம் புண்யசாலிகளால் தரிசிக்கப் பட்டது. ‘ மந்தாக்ஷிதேன’ மந்தமா சலிச்சிண்டு இருக்கு. ‘காமாக்ஷி கர்ம திமிரோத்கர பாஸ்கரேண’ என்னுடைய வினைகள் என்ற இருளைப் போக்கும் பாஸ்கரனாக, ஸூரியனாக உன்னுடைய கடாக்ஷம் இருக்கு. ‘ஸ்ரேயஸ் கரேண’ எல்லா க்ஷேமமும் கொடுக்கக்கூடியது. ‘மதுபத்யுதி தஸ்கரேன’ மதுபஹன்னா வண்டு. அந்த வண்டினுடைய ஒளியை உன்னுடைய கண்கள் அபகரிக்கிறதுன்னு சொல்றார். அதாவது கண்கள் வண்டு மாதிரி இருக்குங்கறதை சொல்றார்.

இன்னொரு ஸ்லோகம் கடாக்ஷத்தை பத்தி மூககவி பண்ண ஸ்லோகத்துல எனக்கு இது ஒண்ணு பிடிச்ச ஸ்லோகம்.

संसारघर्मपरितापजुषां नराणां

कामाक्षि शीतलतराणि तवेक्षितानि ।

चन्द्रातपन्ति घनचन्दनकर्दमन्ति

मुक्तागुणन्ति हिमवारिनिषेचनन्ति ॥

ஸம்ஸாரகர்மபரிதாபஜுஷாம் நராணாம்

காமாக்ஷி ஷீதலதராணி தவேக்ஷிதானி |

சந்த்ராதபந்தி கனசந்தனகர்தமந்தி

முக்தாகுணந்தி ஹிமவாரிநிஷேசனந்தி ||

‘சம்சாரகர்மம்’, சம்சாரம், வாழ்க்கை தவிப்பு என்ற, கடுமையான வெயில், அந்த வெயில்ல வாடற ஜனங்களுக்கு, ‘நரானாம்’ ‘காமாக்ஷி ஷீதலதராணி தவேக்ஷதானி’ உன்னுடைய கடாக்ஷம் குளிர்ச்சின்னா, குளிர்ச்சியுடைய superlative, ஷீதலதமம், ஷீதலதரம், ‘ஷீதலதரானீ தவேக்ஷிதானி’. எவ்வளோ குளிர்ச்சியா இருக்குன்னா ‘சந்திராதபந்தி’, சந்திரனைப் போல குளிர்ச்சியா இருக்கு. ‘கன சந்தன கர்தமந்தி’ சந்தனத்தை பூசிண்டா எப்படி குளிர்ச்சியா இருக்குமோ அதுமாதிரி இருக்கு. “முக்தாகுணந்தி’ முத்து மாலையை போட்டுண்டா உடம்புக்கு குளிர்ச்சிம்பா, அது மாதிரி முத்து மாதிரி குளிர்ச்சியா இருக்கு. ‘ஹிமவாரி நிஷேசனந்தி’ பனிமழை மேல பொழிஞ்ச மாதிரி அவ்வளோ குளிர்ச்சியா இருக்குங்குறார். அது மாதிரி காமாக்ஷியினுடைய கடாக்ஷம் நம்ம மனசை குளிரப் பண்ணும். அந்த காமாக்ஷியினுடைய பிள்ளையான சுப்ரமண்ய ஸ்வாமியினுடைய கடாக்ஷமும் நமக்கு எல்லாவிதமான அனுக்ராஹமும் பண்ணும்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா

Series Navigation<< ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினான்காவது ஸ்லோகம் – இருபதமுமறுமுகமும் யானோத ஞானமதை அருள்வாயேஸுப்ரமண்ய புஜங்கம் – பதினாறாவது ஸ்லோகம் – கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே >>

One reply on “ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினைந்தாவது ஸ்லோகம் – அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே”

தலைப்பே வழக்கம் போல் மிக அருமை! கடைக்கண் இயலும்’ !!

‘நல்ல வினை தீய வினை என்ற இரு வினைகளில் தீய வினையால் பெற்ற அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கும் சூரியன் அம்பாள் கடாக்ஷம்! அதை உணர நல்லோற்களாலேயே இயலும் ! கர்மா வினைகளை ஒழிக்க இருளை சூரியன் விரட்டுவது போல், தேனுண்ணும் வண்டுகளின் காந்தியைச் கவரும் ஆற்றல் பெற்ற உன் கண் பார்வை ஒன்றே போதுமே! அந்தகடாக்ஷ வீக்ஷணத்தில், என்னை மூழ்கடிப்பாயா அம்மா’ என்ற பொருள் படும் இந்த இடத்தில் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது !!
சுப்ரமண்ய சுவாமியின் கடாக்ஷம் பற்றி சங்கரர் வர்நித்திருப்பதைச் சொன்னது மிக அருமை !
காதுவரை நீண்ட விசாலமான 12 கண்களால் தயா கடாக்ஷம், அதுவும் கொஞ்சம் கடைக்கண் பார்வையால் அருளினால் உனக்கு என்ன கஷ்டம் என்று பொருள் சொன்ன இடம் ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது !
இடம், பொருள் ஏவல் எந்த வித்யாசமில்லாமல் முருகன் அனுகிரகம் யாவருக்கும் அருள்வதுடன் நல்ல கல்யாண குணங்களையும் முருகணன்றி யார் அருள்வார்கள் என முடித்தது மனம் நிறைந்ததாக அமைந்துள்ளது !!

வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.