முகுந்தமாலா 17, 18 ஸ்லோகங்கள் பொருளுரை (17 minutes audio Meaning of Mukundamala slokams 17 and 18)
குலசேகர ஆழ்வாருடைய முகுந்தமாலையில 16 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். பக்தியினுடைய பெருமையை சொல்லி ‘ஸரஸிஜத்ருஷி தேவே தாவகீ பக்திரேகா’ அந்த தாமரைக் கண்ணனான கிருஷ்ணனிடத்தில் பக்தி ஒண்ணே உன்னை இந்த ‘பவஜலதி’ என்ற பவக்கடலை ‘தாரயிஷ்யதி அவச்யம்’ அவச்யம் தாண்ட வைக்கும். நீ பகவான் காப்பாத்துவார்ங்கிற அந்த விஸ்வாசம் வைச்சு அவர்கிட்ட பக்தி பண்ணினா மட்டும் போதும். நெஞ்சமே, சோம்பலை ஒழித்து பக்தி பண்ணு என்று தன் மனசையே பார்த்து சொல்றார். அந்த பக்தியினுடைய அனுபவத்தையும் அதன் பலனான ஸம்ஸார தரணம் என்கிறதையும் சொன்னார். இன்னிக்கு ஆச்சர்யமான ஒரு ஸ்லோகம் சொல்றார். “பிரதிகூலயல்ய வர்ஜனம்” ன்னு பக்தி பண்ணும் போது எதை நாம தவிர்க்க வேண்டும்கிற முக்யமான உபதேசம் இந்த ஸ்லோகத்துல இருக்கு.
माद्राक्षं क्षीणपुण्यान्क्षणमपि भवतो भक्तिहीनान्पदाब्जे
माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।
मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्
माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥
மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ
ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே
மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய
அன்யதா³க்²யானஜாதம் ।
மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே
சேதஸாபஹ்னுவானான்
மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ
ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥
ன்னு ஒரு ஸ்லோகம். ஹே மாதவா! ஹே லோகநாதா! புவனபதே! மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான்க்ஷணமபி ப⁴வதோ ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே உன்னுடைய பாதாரவிந்தத்தில் பக்தி இல்லாத க்ஷீணபுண்யாஹா- புண்யம் இல்லாத அந்த பாபிகளை நான் ஒரு க்ஷணம் கூட ‘க்ஷணமபி மாத்ராக்ஷம் பார்க்க மாட்டேன்னு சொல்றார். உன்கிட்ட பக்தி இருக்கிற அந்த பக்தர்கள் மட்டும் எனக்கு போறும். உன்கிட்ட பக்தியில்லாதவனை நான் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன். மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்யான்யதா³க்²யானஜாதம் – உன்னுடைய சரிதம் ‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோன்னு’ நம்மாழ்வார் பாடறார். அந்த மாதிரி கிருஷ்ணருடைய கதையோ, ராமருடைய கதையோ, இல்ல பக்தர்களுடைய சரித்ரமோ இதெல்லாம் மட்டும் தான் நான் கேட்பேன். உன்னுடைய சரிதம் அல்லாத வேற எந்த ப்ரபந்தமா இருந்தாலும் அது ‘ச்ராவ்யப³ந்த⁴ம்’ – கேட்கறதுக்கு ரொம்ப இனிமையா இருந்தாலும் மனசை கவரக் கூடிய விதத்துல கதை சொன்னாலும் அந்த கதைகளை ‘மாஸ்ரௌஷம்’ – நான் கேட்க மாட்டேன்னு சொல்றார். ‘மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே சேதஸாபஹ்னுவானான்’ மனதால் உன்னை நினைச்சுண்டே இருக்கணும். உன்னை தன் உள்ளத்தில் வெச்சுண்டு இருக்காதவனை ‘மாச்மார்ஷம்’ – நான் அவாளை நினைக்கக் கூட மாட்டேன். உன்னை நினைச்சுண்டு இருக்கிரவாளை நான் நினைப்பேன். உன்னை நினைக்காதவர்களை நான் நினைக்க மாட்டேன்னு சொல்றார். ‘மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ ஜன்மஜன்மாந்தரேऽபி’ உன்னுடைய பூஜை பண்ணாம ஒரு நாளும் இருக்க மாட்டேன்னு சொல்றார்.
இதுல மாட்டேன், மாட்டேன்னு சொன்னாலும் தாத்பர்யம் என்னன்னா ‘எப்போதும் உன்னோட அடியார்களோட கூட, உன்னுடைய சரிதங்களை கேட்டு, உன்னை தியானிக்கும் பக்தர்களையே நான் மனசுல த்யானிப்பேன். இப்படி என் வாழ்நாளை நான் உன் பூஜையை பண்ணிண்டு கழிப்பேன். வெறும் பேச்சு பேசறவாளோட நான் பழக மாட்டே’ ன்னு சொல்றார். இது ஒரு முக்யமான பரிபாகம் பக்தியில.
இந்த மாதிரி நான் வெறும் பஜனை பண்ணின்டிருப்பேன். வெறும் பாராயணம் பண்ணின்டு இருப்பேன்னு, இந்த மாதிரி இருக்கிறவாளே போதும். வேற யாரோடும் நான் பழக மாட்டேன்னு இருந்தா ரொம்ப lonelyயா ஆயிடாதா. antisocial ஆ ஆயிடமாட்டானான்னு நாம நினைப்போம். அவனுக்கு யாருமே இருக்க மாட்டாளே. தனிமை பட்டு போயிடுவானேன்னு. ஆனால் எவனொருவன் நேர்மையாவும் மனசுல கருணையோடும் அதே நேரத்துல ரொம்ப உலகப் பற்றும் இல்லாம இருக்கானோ, அவனிடத்தில் எல்லாரும் ரொம்ப அன்பா இருப்பா. தன்னோட பெற்றோரிடத்திலும், கூட பிறந்தவாளோடும், கணவன் மனைவியிடத்திலும், மனைவி தன கணவனிடத்திலும், தன் குழந்தைகளிடமும் இருக்கறதை காட்டிலுமே ஒரு பக்தனிடத்தில் எல்லாரும் அன்பா இருப்பா. அதை நான் ஸ்வாமிகள் கிட்ட பார்த்திருக்கேன். ஏன்னா, அந்த பகவானுடைய கதைகளை பேசும் போது அவாளுக்கு கிடைக்கற ஆறுதல், மற்ற உறவுகள், இன்பங்கள், பணம் முதலிய சௌக்யங்களிலிருந்து கிடைக்காது, அந்த பகானுடைய பேச்சில் இருக்கிற ஆனந்தம், பக்தர்களுடைய சங்கம் ரொம்ப ரொம்ப தனியான இனிமை, அதை அனுபவிச்ச பின்ன தானா நாம அதை நாடிப் போவோம்.
அதனால ஒரு பக்தன் அவன் பகவானையே பேசிண்டிருக்கான். உலகம் அவனை தனிமை படுத்திடும்னு கிடையாது. யாராவது சாதுக்கள் இருப்பா. அவா அவனை நாடி வந்து அந்த பேரின்பத்தின் துளியை அநுபவிப்பவா. அதனால அவன் தனிமையில இருக்க மாட்டான். தனிமையில தான் உட்கார்ந்திருப்பான். தனியா உட்கார்ந்து புஸ்தகத்தை படிச்சிண்டிருப்பான். ஆனால் அவன் தனிமையா feel பண்ண மாட்டான். கருணையும், நேர்மையும் இருக்கறதுனால உலகத்துல ஒரு வெறுப்போ ஒரு frustration ஓ இல்லாம ஆனந்தமா அவன் காலத்தை கழிப்பான் என்கிறதை நான் ஸ்வாமிகள் கிட்ட பார்த்திருக்கேன்.
இன்னொரு விஷயம் ஸ்வாமிகளை பார்த்தபோது புரிஞ்சுண்டேன். பல உபன்யாசகர்கள் public ல பகவான் காப்பாத்துவார்ன்னு உபன்யாசம் பண்ணுவா. பக்கத்துல வந்து யாராவது ஏதாவது கஷ்டத்தை சொல்லும் போது, என் கிட்ட அதெல்லாம் சொல்லாதிங்கோ. நாம பகவான் கிட்ட கஷ்டத்தையே சொல்லக் கூடாதுன்னு சொல்வா. ஸ்வாமிகளும் சரி, மஹாபெரியவாளும் சரி. இன்னிக்கு நாம மஹா பெரியவாளை தெய்வமா போற்றுகிறோம். அவர் தன் பூஜை பண்ணினதை தவிர வேற என்ன பண்ணின்டிருந்தார்னா கார்த்தால மூணு மணிக்கு எழுந்தா ராத்திரி பன்னிரண்டு மணிக்கு தூங்கற வரைக்கும் யார் வந்து கஷ்டம்னு சொன்னாலும் காது கொடுத்து கேட்டு தெய்வத்தின் பேரால ஆறுதல் சொன்னா. ‘காமாக்ஷி காப்பாத்துவா. கவலைப்படாதே’ என்கிற வார்த்தையை சொன்னார். பகவான் காப்பாத்துவான் என்கிறதை தானே நம்பி, ரொம்ப நேர்மையாகவும்இருந்து, அவாளுக்கு அந்த உத்தம பக்தியும் இருக்கிறதுனால அவா வாயால ஒரு ஆசிர்வாதமா சொன்னா அது சத்யமாகி அந்த ஜனங்களுடைய கஷ்டம் தீர்ந்து, அவாளுக்கு கேட்ட வரங்கள் கிடைச்சு அவா ரொம்ப நன்றியோட இருப்பா. அப்படி தான் நான் நிறைய பார்த்திருக்கேன். கஷ்டத்தையே சொல்லக் கூடாது. பகவான் கிட்ட எதுவும் வேண்டிக்கக் கூடாதுன்னு சொல்லி, ஆனா கூட்டம் சேர்த்து பணம் சேர்க்கற சாமியார்களையும் நாம பாரக்கறோம். அது வேற category. அதை பேச வேண்டாம்.
பகவான் கிட்ட பக்தி பண்ணும்போது நாம பகவானையே பார்த்துண்டு இருக்கணும். யாராவது சாதுக்கள் வந்து சேர்ந்தா நாம சொன்னதை அவா கேட்கறாளான்னு பார்க்காம, வந்து சேர்ந்தவா தெய்வபக்தியில இருக்களான்னு பார்த்து, நம்மளை வீண் பேச்சில இழுக்காம இருக்காளான்னு பார்த்து, நாம ரொம்ப ஜாக்ரதையா வாட்ச் பண்ணி நம்மோட பஜன்தை பண்ணிண்டே போகணும்.
இந்த கருத்தை சொல்லும்போது எனக்கு மூகபஞ்சசதியில உண்மையான ஸாதுக்களைப் போலிச் சாமியார்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஒரு ஸ்லோகம் (மந்தஸ்மித சதகத்துல 53வது ஸ்லோகம்) ஞாபகம் வர்றது.
वैशद्येन च विश्वतापहरणक्रीडापटीयस्तया
पाण्डित्येन पचेलिमेन जगतां नेत्रोत्सवोत्पादेन ।
कामाक्षि स्मितकन्दलैस्तव तुलामारोढुमुद्योगिनी
ज्योत्स्नासौ जलराशिपोषणतया दूष्यां प्रपन्ना दशाम् ॥
வைஶத்³யேன ச விச்வதாபஹரணக்ரீடா³படீயஸ்தயா
பாண்டி³த்யேன பசேலிமேன ஜக³தாம் நேத்ரோத்ஸவோத்பாதே³ன ।
காமாக்ஷி ஸ்மிதகந்த³லைஸ்தவ துலாமாரோடு⁴முத்³யோகி³னீ
ஜ்யோத்ஸ்னாஸௌ ஜலராசிபோஷணதயா தூ³ஷ்யாம் ப்ரபன்னா த³சாம் ॥
அதாவது இந்த சந்திரிகை காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்துக்கு தானும் சமமா ஆகணும்னு முயற்சி பண்ணிண்டே இருக்காம். காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதம் வெள்ளை வெளேர்னு இருக்கு. அதேமாதிரி இந்த சந்த்ரிகையும் வெள்ளையா இருக்கு. ஜனங்களுக்கு சந்திரன் வந்தா தாபம் போறது. தாபம் போறதுங்கிற குணம் சந்திரன் வெச்சிண்டிருக்கிறதுனால அம்பாளோட மந்தஸ்மிததுக்கு ஓரளவு சமமா இருக்கும்னு சொல்லலாம். அதே மாதிரி கண்ணுக்கு பார்த்தா ஆனந்தத்தை கொடுக்கிறது சந்திரன். அதனால அதுலேயும் காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்தைப் போல இருக்கு. காமாக்ஷியை பார்த்தா நமக்கு ஆனந்தம் ஏற்படறது. இதெல்லாம் வெச்சுண்டு சந்திரனும், காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதமும் ஒண்ணுன்னு சொல்லலாம்னு தோன்றது. ஆனா இந்த சந்திரன் கடலை பொங்க பண்றது. சந்திரன் வந்தா கடல் பொங்கும். high tide னு சொல்வா. அதை வெச்சுண்டு வார்த்தைகள்ல கவி விளையாடறார். இந்த ஜலராசியை வளர்க்கறதுனால அது இகழும்படியான நிலையை சந்திரன் அடைஞ்சிடுத்துங்கிறார். இந்த ஜலராசிங்கிறதுக்கு ல,ட இந்த 2ஐயும் interchangeable ஆ சமஸ்கிருதத்துல use பண்ணலாம். அதனால ‘ஜடராசி போஷனதயா தூஷ்யாம் பிரபன்னா தசாம்’ ன்னு அறிவிலிகளுடைய கூட்டத்தை இந்த சந்திரன் வளர்க்கறது. அதாவது காமாக்ஷியோட மந்தஸ்மிதம் ஞானத்தை கொடுக்கும். மூடர்கள் கூட்டத்தை வளர்க்காது. ஆனா சந்திரன் ‘ஜடராசி போஷனதயா தூஷ்யாம் பிரபன்னா தசாம்’ ன்னு கவி சொல்றார்.
கவி சொல்ல வர தாத்பர்யம் என்னன்னா இந்த போலி சாமியார்களுக்கு நிறைய கூட்டம் இருக்கும். ஆனா ஒருத்தர் கூட அதுலருந்து ஞானத்தை தெரிஞ்சிக்க மாட்டா. மஹான்களோட பழகும்போது நமக்கு அவாளை பார்த்தாலே நமக்கு சந்தோஷம் ஏற்படும். தாபம் போகும். அவா தூய்மையே வடிவமா இருப்பா. அதுக்கு மேல அவா கூட்டத்துக்காக பஜனம் பண்ண மாட்டா. அவா தனிமையில பகவானை பஜனம் பண்ணி, காமாக்ஷியோட வடிவமாவே மஹா பெரியவா இருந்ததுனால எவ்வளவோ பேரை அவா நல்வழி படுத்தினா. அறிவாளிகளா நிறையப் பேரை மாத்தினா. அறிவிலிகளா போலிச் சாமியார்கள் மாத்திண்டிருக்கா என்கிறதைத் தான் இந்த ஸ்லோகத்துல மூக கவி சொல்றார். அதனால நாம நிஜமான சத்சங்கம் எதுன்னு தெரிஞ்சுண்டு அதுல இருக்கணும். மத்ததை தவிர்க்கணும்.
அடுத்த ஸ்லோகமும் ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்.
वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्
औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |
सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:
प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: || १८ ॥
வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்
ஔதார்யாத் அகஷோஷணாத் அகணிதஷ்ரேய:பதப்ராபணாத் |
ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:
ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ன்னு பகவானோட குணங்களை அடுக்கி ஆறு குணங்களை சொல்லி, ஆறு பேரை அதுக்கு சாக்ஷியா சொல்லி, respectively ன்னு English ல சொல்லுவாளே அந்த மாதிரி முறைப்படியே இந்த ஆறுபேர்னு வெச்சுக்கணும்.
‘வாத்ஸல்யாத்’ – பகவான் அன்பே வடிவமா இருக்கார். வாத்ஸல்யம். அது எப்படி தெரியறதுன்னா, பிரஹ்லாதன் மூலமாக தெரியறது. பிரஹ்லாதன் ‘ஹரி எங்கும் இருப்பான்’ ன்னு சொன்ன உடனே பகவான் எல்லா இடத்துலயும் காத்துண்டு இருந்தாராம். ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ ன்னு குழந்தை சொன்ன உடனே, ஒவ்வொரு துரும்பிலும், ஒவ்வொரு தூணிலும் எல்லா இடத்துலயும் பகவான் காத்துண்டு இருந்தாராம். எங்க சொன்னாலும் ஆவிர்பவம் ஆகணும்னு. பிறகு ஹிரண்யகசிபுவை வதம் பண்ணி, பிரஹ்லாதனை மடியில வெச்சுண்டு அன்பு பாராட்டறார். பிரஹ்லாதன் ஸ்தோத்ரம் பண்ணின உடன் அவனுக்கு ஆசீர்வாதம் பண்றார். பொதுவா நரஸிம்ம ஸ்வாமின்னா எல்லாரும் பயப்படுவா. குலசேகரர் வாத்ஸல்யத்துக்கு நரஸிம்ஹ ஸ்வாமின்னு சொல்றார்
‘அபய ப்ரதான ஸமயாத்’ – அபயமளிப்பது என்ற அந்த கொள்கை. அதுக்கு விபீஷணனுக்கு சாக்ஷி. ஆனா ராமர் அவனுக்கு அபயம் கொடுத்தார். சுக்ரீவாதி வானரர்கள் எல்லாம் வேண்டாம்ங்கறா. ஹனுமார் மட்டும்தான் ‘அவன் நல்லவன் தான்னு நான் நினைக்கறேன், சேர்த்துக்கலாம்’ ன்னு சொல்றார். ராமர் ‘ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீ திச யாசதே | அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம || எவன் என்னை நமஸ்காரம் பண்ணி உன்னை சேர்ந்தவனா வெச்சுக்கோன்னு கேட்டாலும் யாரா இருந்தாலும் நான் அபயம் கொடுப்பேன். இது என்னோட வ்ரதம்னு சொல்றார். அதுதான் பகவானோட அபாரமான தயை. அந்த அபயமளிக்கும் கொள்கை பகவானுக்கு இருக்குங்கிறதுக்கு விபீஷ்ணன் தான் சாக்ஷி.
‘ஆர்தார்த்திநிர்வாபணாத்’ – கஷ்டத்திலிருப்பவர்களுடைய துயரத்தை போக்குபவன் பகவான். அதுக்கு யாரு சாக்ஷினா கரிராட் கஜேந்திரன். “நாராயணா அகில குரோ பகவன் நமஸ்தே” ன்ன உடனே கருட பகவானை இழுத்துண்டு வந்து கஜேந்திரனுக்கு கஷ்ட நிவர்த்தி கொடுத்தார்.
‘ஔதார்யாத்’ – தாராள தன்மைக்கு த்ரௌபதி சாக்ஷி. ஒரு பருக்கை அரிசியை சாப்பிட்டு அந்த துர்வாஸாதி மஹரிஷிகளோட கோபத்துக்கு பாண்டவர்கள் ஆளாகாம காப்பாத்தினார். சபையில துகிலைக் கொடுத்தார். அப்படி ஔதார்யதுக்கு திரௌபதியை சாக்ஷி சொல்வா.
‘அகஷோஷனாத்’ – பாபங்களைப் போக்குபவர் பகவான்கிறதுக்கு அஹல்யா சாக்ஷி.
‘அகணிதஷ்ரேயபதப்ராபணாத்’ – இவ்ளோன்னு சொல்ல முடியாது. அவ்ளோ உயர்ந்த பதவியை கொடுப்பார் என்கிறதுக்கு துருவன் தான் சாக்ஷிங்கறார். துருவ நக்ஷத்ரமாக நாம இன்னிக்கும் பார்க்கும்படி என்னென்னிக்குமா ஜ்வலிக்கற பதவி குடுத்தார். அந்த குழந்தை அப்பா மடியில உட்காரமுடியலையேன்னு காட்டுல போயி தபஸ் பண்ணினதுக்கு பகவான் நினைச்சுக்கூட பார்க்க முடியாத உயர்ந்த சுப ஸ்தானத்தை கொடுத்தார் இல்லையா. இப்பேற்பட்ட பகவான் இந்த “ஸ்ரீபதிரேகஏவ ஸேவ்ய:” இந்த பகவான் ஒருவனே வழிபடத் தக்கவர் என்பதற்கு இந்த ஆறு பேர் சாக்ஷி சொல்கிறார்கள்னு அழகான ஸ்லோகம்.
பகவான் ஒருத்தரைத் தான் நாம நம்பணும். உலகத்தவர்களை நம்பக் கூடாதுங்கிறது தாத்பர்யம்.
வாத்ஸலாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்
ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |
ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:
ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||
ன்னு இவளோட சரித்திரங்களை எல்லாம் நினைச்சு பார்க்கணும். இந்த பகவானோட கதைகளை ஏன் கேட்கணும்னா அப்பதான் அவனோட பிரபாவம் தெரியும். இந்த குணங்களை எல்லாம் நாம நினைக்கும் போது தான், பகவான் காப்பாத்துவார் என்கிற நம்ம நம்பிக்கை உறுதிப்படும். பக்தி வளரும்.
அடுத்த ஸ்லோகம் “ஜிஹ்வே கீர்த்தய கேசவம்’ என்கிற ஸ்லோகம். அதை நாளைக்கு பார்ப்போம்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா.