நமஸ்தேஷாம் மஹாத்மனாம் (5 min audio in Tamizh, same as the script above)
கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கையைப் பற்றி, அவருடைய ஞான வைராக்கியம், அவர் செய்த அனுக்ரகங்கள், இதையெல்லாம் பேசறோம், கேட்கறோம். இதிலேயே ஒரு சந்தோஷம் இருக்கு. ஆனால் அதுக்கும் மேலே இதில் ஒரு பெரிய லாபம் இருக்கு.
அது என்னவென்றால், சுந்தரகாண்டத்தில் ஸீதாதேவி சோக மிகுதியினால் உயிரை விட நினைக்கிறாள். அப்போது ஒரு வார்த்தை சொல்கிறாள்.
प्रियान्न संभवेद्दुःखमप्रियादधिकं भयम्।।
ताभ्यां हि ये वियुज्यन्ते नमस्तेषां महात्मनाम्।
ப்ரியான்ன சம்பவேத் துக்கம் அப்ரியாத் அதிகம் பயம் |
தாப்யாம் ஹி யே வியுஜ்யந்தே நமஸ்தேஷாம் மஹாத்மனாம் ||
“பிரியமான விஷயம் நடக்கவில்லை என்றால் துக்கம் ஏற்படுகிறது. அப்ரியமான விஷயம் நடந்தால் பயம் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட்டவர்கள் மஹாத்மாக்கள். நான் இந்த ராவண க்ருஹத்தில் ரொம்ப கஷ்டப்படறேன். இந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. என் ராமனும் இன்னும் வரவில்லை. அவருக்கு என்ன ஆகிவிட்டதோ என்ற பயம் என்னை பீடிக்கிறது. அதனால் நான் உயிரை விடப்போகிறேன். ஆனால் துக்கம் பயம் இவற்றிலிருந்து விடுபட்ட மஹான்களுக்கு நமஸ்காரம்.” என்று சொல்கிறாள். ஸ்வாமிகள் இந்த ஸ்லோகம் வரும்போது மஹாபெரியவாளை நினைத்து நாலு தடவை சொல்லி நமஸ்காரம் பண்ணுவார். நாம் ஸ்வாமிகளை நினைச்சுண்டு இந்த ஸ்லோகத்தை சொல்லி நாலு நமஸ்காரம் பண்ணனும். ஏன்னா ஸ்வாமிகள் வாழ்க்கையில் பிரியமான விஷயங்கள் கொஞ்சம் தான் வந்தது. அவரோட material life பார்த்தால், அலை அலையாக கஷ்டங்கள் வந்தது.
அவர் ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களைச் சொல்லி ராமாயண பாகவத பிரவசனம் பண்ணுவார். ஆனால் அவருடைய மூத்த பிள்ளை பத்து ஸ்லோகம் கூட மனப்பாடம் ஆகாது. அஞ்சு வயசு குழந்தை அளவுக்கு தான் புத்தி அவருக்கு. நாமெல்லாம் குழந்தைகள் படிக்கலைனா எவ்வளவு வருத்தப் படறோம்? இந்த காலத்தில் அது ஒண்ணுக்கே frustrate ஆயிடறா. அவருடைய பூர்வஸ்ராம மனைவி வைதிக குடும்பத்திலிருந்து வந்தவா. கல்யாணம் ஆனா புதுசுல பூஜைக்கு எடுத்து வைக்கறது மடிசார் கட்டிண்டு நைவேத்யம் பண்ணித்தறது அப்படின்னு ரொம்ப அனுசரணையாக இருந்து இருக்கா. சில வருஷங்களில் புத்தி பேதலித்து விட்டது. இவரை மாதிரியே ராமாயண பாகவதம் நன்னா பாராயணம் பண்ணக் கூடிய ஒரு பிள்ளை 28 வயசுல சித்தி அடைஞ்சுட்டான். ஒரு பெண்ணுக்கு fits வரும். இது ஒவ்வொன்றும் தாங்க முடியாத துக்கம். ஆனா இதல்லாம் அவரை ஒண்ணுமே பண்ணலை.
“பகவானுக்கு கண் இல்லையா? என்ன பஜனம் பண்ணி என்ன கண்டேன்?” என்ற வார்த்தை அவர் வாயில் வரவே வராது. மத்தவா சொன்னா கூட கண்டிப்பார். பகவான் கருணாமூர்த்தி. நம் வினையை நாம் தான் அனுபவிக்க வேண்டும். என்று சொல்வார். அதே நேரத்தில் எதாவது பெருமை வந்தால் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவார்.
மஹாபெரியவா கோகுலாஷ்டமியின் போது கூப்பிட்டு பாகவத சப்தாஹம் பண்ண சொல்லி, பூர்த்தியில பகவத்கீதை பாராயணம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணிட்டு அவப்ருத ஸ்நானம் பண்ணுவா. பாகவத சப்தாஹம் ஞான யக்ஞம். யக்ஞ முடிவில் அவப்ருத ஸ்நானம் பண்ணுவா. அப்படி மஹாபெரியவாளும் ஸ்வாமிகளுமாக ஸர்வதீர்த்த குளத்தில் ஸ்நானம் பண்ணப் போறா. மஹாபெரியவா ஸ்நானம் பண்ணட்டும் என்று ஸ்வாமிகள் காத்திருந்தால் ‘நீங்க பண்ணுங்கோ’ என்று மஹாபெரியவா ஜாடை பண்ணி காத்திருப்பளாம். அதாவது ஸ்வாமிகள் ஸ்நானம் பண்ணின தீர்த்ததுல ஸ்நானம் பண்ணினா தனக்கு புண்யம் என்று மஹாபெரியவா நினைக்கிறா. அப்படி அந்த ஏழு நாளும் ஸ்வாமிகளை சுக ஸ்வருபமாக பாவித்து மஹாபெரியவா நடத்துவா. மத்த நேரத்தில் ஒருமையில் அழைத்தாலும் அந்த நேரத்தில் ‘வாங்கோ உட்காருங்கோ’ என்று பக்தியோடு நடத்துவாளாம். அப்படி அவரை பெருமைப் படுத்தினாலும், ஸ்வாமிகள் அதை மனஸில் ஏத்திண்டு கர்வப் படமாட்டார். ஸ்வாமிகள் இன்னோரு நாள் காஞ்சிபுரத்தில் தங்கி, காமாக்ஷி கோயிலுக்கு போய் மூக பஞ்ச சதீ ஸ்தோத்ரத்தை முழுக்க பாராயணம் பண்ணி அந்த பெருமை எல்லாம் அம்பாளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு வந்துருவார். இப்படி
प्रियान्न संभवेद्दुःखमप्रियादधिकं भयम्।।
ताभ्यां हि ये वियुज्यन्ते नमस्तेषां महात्मनाम् ||
என்று ஒருத்தர் இருந்தார் என்று ஸ்வாமிகளை நினைத்து நாம் நமஸ்காரம் பண்ணினா எப்படி ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஸீதாதேவிக்கு ஆறுதல் சொல்லி பெரிய ஆபத்திலிருந்து காப்பாறினாரோ அது மாதிரி நம்ம life ல வர ups and downs ல (கஷ்ட நஷ்டங்களில் இருந்து) நம்மளை ஸ்வாமி காப்பாத்துவார்.
உடுக்க துகில் வேண்டும் னு ஸ்வாமிகளுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு திருப்புகழ் பாட்டு. அதுல உடுக்க துகில் வேணும் – உடுப்பதற்கு உடைகள் வேண்டும்; நீள்பசி அவிக்க – பெரிய பசியைத் தணிக்க, கன பானம் வேணும் – உயர்ந்த சுவைநீர் வேண்டும்; நல் ஒளிக்கு – தேகம் நல்ல ஒளிதரும் பொருட்டு, புனல் – நீரும், ஆடை வேணும் – ஆடையும் வேண்டும்; மெய் உறுநோயை ஒழிக்க – உடம்பில் வந்த நோய்களை அகற்றும் பொருட்டு, பரிகாரம் வேண்டும் – மருந்துகள் வேண்டும், உள் இருக்க சிறு நாரி வேணும் -வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும்; படுக்க ஓர் வீடு வேணும் – படுப்பதற்கு ஒரு தனி வீடும் வேண்டும்! என்று பகவானிடம் கேட்கிறோம். எல்லாம் கிடைத்து அனுபவித்து உயிர் அவமே போம் -முடிவில் உயிர் வீணாகக் கழிந்து போகும்; ஆத்ம லாபம் அடையாமல் ஜன்மா வீணாகி விடுகிறது.
க்ருபை சித்தமும் – உமது கருணை உள்ளத்தையும், ஞான போதமும், சிவஞான போதத்தையும், கேட்க தெரியவில்லை, பகவானே நீங்களே அடியேனை அழைத்துத் தந்தருள வேண்டும் என்று கேட்கிறார். அது போல ஸ்வாமிகள் வாழ்க்கையை நினைத்துக் கொண்டே இருந்தால் ஆபத்திலிருந்தும் காப்பார். வரங்கள் குடுப்பார். அவருடைய கிருபையால் ஞானத்தையும் ஒரு நாள் அழைத்துக் கொடுப்பார் என்பது என் நம்பிக்கை.
கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!
One reply on “நமஸ்தேஷாம் மஹாத்மனாம்”
பெரியவா ஷரணம் 🙏🙏
“இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்” என்று
ஞான சம்பந்தர் போன்றோர் காட்டும் வழி ஏற்று வாழ்ந்த மஹாத்மா ஸ்ரீ ஸ்வாமிகள்.
எத்தனை துன்பங்கள், அத்தனையையும் பகவத் பஜனத்தில் மூழ்கி தொலைத்தார், தன்னில் தானாக இருந்த உத்தம புருஷர்.
ஸ்ரீ ஸ்வாமிகளை நினைக்கையிலே ஸ்ரீ பெரியவாளும், ஸ்ரீ சாரும் கூடவே கண் திரையில் வருகிறார்கள். இவர்களை வணங்கி ஊழ் வினையால் விளையும் ஆபத்துக்களை புறந்தள்ளுவோம்.
கோவிந்த கோவிந்த ஹரே முராரே ,
கோவிந்த கோவிந்த முகுந்த கிருஷ்ண,
கோவிந்த கோவிந்த ரதாங்க பாணே,
கோவிந்த தாமோதர மாதவேத்தி !! 🌷🌷