கருணா வருணாலய பாலய மாம் (7 min audio in Tamizh, same as the script above)
ஸ்வாமிகளோட பரிவு அனுபவிச்சவா வாழ்க்கை முழுவதும் (life time) அதை ஞாபகம் வெச்சுண்டிருப்பா. அவர் பகவானோட கருணையை அனுபவிச்சு அதை நம்பமேல காமிக்கறார்.
சுந்தரகாண்டத்துல ஸீதாதேவியை ஹனுமார் மரத்துமேலேந்து பார்த்து அவ கஷ்டத்தை புரிஞ்சிண்டு, ராமகதையை சொல்லி மனசு ஓரளவுக்கு சமாதானம் ஆன பின்ன இறங்கி கீழ வந்து நமஸ்காரம் பண்ணி, “அம்மா நீ யாரு அருந்ததியா, ரோகிணியா, தெய்வ பெண்ணாட்டம் இருக்கியே. ஆனா உன் கால் தரையில இருக்கு, கண்ணுல ஜலம் வருது. அதனால நீ மனுஷ்யப் பெண் தான்னு நினைக்கிறேன். உன் லக்ஷணங்கள் எல்லாம் பார்த்தால் ராஜகுமாரி மாதிரி இருக்கிறாய். நீ ராமரோட மனைவி சீதையா, அப்படி இருந்தா எனக்கு சொல்லு” என்கிறார். அப்பறம் ஆமாம்னு அவ சொன்ன பின்ன அவளுடைய நம்பிக்கையை பெற்ற பின்னர், ஸ்ரீராமருடைய மோதிரத்தைக் குடுத்து, “ராமர் வருவார் நீ கவலைபடாதே” அப்படினு சொல்லி “ஏம்மா அழறேனு கேட்டு, இனிமே நீ அழ வேண்டாம். திரும்ப போய் ராமர் கிட்ட நான் சொல்ற அந்த நேரம் தான் தாமதம் தான் ஆகுமே தவிர, அவர் உடனே புறப்பட்டு வருவார். நான் அவரை அழைச்சுண்டு வந்துடறேன்.” அப்படினு அவ்ளோ அழகா சீதையை ஹனுமார் சமாதானபடுத்தறார். ஸ்வாமிகளும் அப்படித் தான் பண்ணுவார்.
அவர் கிட்ட ஒரு பெண் போய் “குழந்தைகளை கூட்டிண்டு ஊருக்கு போறேன். அவர் வரசொல்லி இருக்கார்”. அப்படினு சொன்னா, இன்னொருத்தரா இருந்தா என்ன சொல்வா, “நீ தான் வேலைக்கு எல்லாம் போயிருக்கயே இதென்ன பெரிய கஷ்டம்” அப்படினு சொல்வா. “எல்லாரும்தான் போறா. நான் கூட போயிருக்கேன்” அப்படின்னு சொல்வா. ‘சோகோ நாஷயதே தைர்யம், சோகோ நாஷயதே ஸ்ருதம்’ அப்படினு எவ்வளவு படிச்சிருந்தாலும் ஏதோ ஒரு கவலைல அந்த படிப்பு, அந்த தைரியம், கை கொடுக்க மாட்டேங்கறது. நமக்கு வேண்டியது ஒரு ஆறுதல் வார்த்தை. அஞ்சு வயசு குழந்தையா இருந்த போது ஒரு பாவாடை தடுக்கி விழுந்தா, அம்மா “அச்சச்சோ என்னாச்சு” னு கேட்கற மாதிரி யாராவது கேட்கமாட்டாளானு அந்த கனிவை எதிர்பார்க்கறோம். ஸ்வாமிகள் கிட்ட அது கிடைக்கும். அதனாலதான் நாம்ப வாழ்க்கை முழுக்க அதை நினைச்சு நினைச்சு நெகிழ்ந்து போகிறோம். ஸ்வாமிகள் “அப்படியா, உனக்கு விழிக்குதுணை பாசுரம் தெரியுமா?” அதை முழுக்க சொல்ல வைப்பார்
“விழிக்குதுணை திருமென் மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே”
அப்படினு இந்த பாசுரத்தை சொல்லிண்டே இரு என்று சொல்வார். அதுலகூட கைக்குழந்தை வெச்சுண்டு இந்த பாசுரத்தை சொல்றது கஷ்டமா இருக்குமோ, அருணகிரிநாதர் என்ன சொல்றார், “பயந்ததனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே” அப்படினு வேலும், மயிலும், துணைனு சொல்றார். “வேலும், மயிலும் துணை, வேலும், மயிலும் துணைனு சொல்லிண்டே இரு”, அப்படிம்பார். இப்படி அவருடைய அந்த பரிவு அனுபவிச்ச பின் அதை தேடி தேடி திரும்ப திரும்ப போயிண்டே இருப்போம். சில பேருக்கு அவர் ஒரு வாட்டி சொன்னதே வாழ்க்கை முழுமைக்கும் போதுமா இருக்கும். வாழ்க்கையில் இப்படி நம்ப கிட்ட ஒருத்தர் கருணையோடு இருந்தார் என்று நினைப்போம். அதெல்லாம் கூட அவர் அந்த நம்பிக்கையை உருவாக்காமல் யாருக்கும் எதுவும் unsolicited ஆ கேட்காமல் எந்த ஒரு உபதேசமும் பண்ணமாட்டார்.
வருஷக்கணக்கா நான் போயிண்டு இருக்கேன். அவர் எதிரில உட்கார்ந்து சந்தியாவந்தனம் பண்ணிண்டு இருக்கேன். பல வருஷங்களுக்கு அப்புறம் ஒரு நாள் சொன்னார். நீ இந்த பூணாலை பிடிச்சுண்டு காயத்ரி ஜபம் பண்ணற, இரண்டு கையை பிரிச்சு வெச்சுண்டு காயத்ரி ஜபமோ, அர்க்கிய பிரதானமோ பண்ணக்கூடாது. நீ இத்தனை வருஷம் பழகிண்டு இருக்கிறதுனால் சொல்லாம்னு நினைச்சுண்டு சொல்றேன். இரண்டு கையையும் சேர்த்துக் கொண்டு ஒரு துணியால் மூடிக் கொண்டு காயத்ரி ஜபம் பண்ண வேண்டும்” அப்படின்னார். அதே மாதிரி நம்ப சஹஸ்ரநாமம் சுரேஷ்கிட்ட நாலு அஞ்சு வருஷம் பழகின பின்ன “நாம்ப ஒரு மாதிரி நெருங்கிட்டோம்னு நினைக்கறேன். ஆதனால ஒண்ணு சொல்றேன். எது சாப்பிடறதுனாலும் நீ உட்கார்ந்து சாப்பிடு. ஜலம் குடிக்கறதுனா கூட ஒரு இடத்துல உட்கார்ந்து குடி” அப்படினு சொல்லுவர். அந்த மாதிரி தனக்கு ஒரு உரிமை இருக்கு அப்பிடினு யார் கிட்டையுமே வெச்சுக்க மாட்டார்.
ஸ்வாமிகள் எனக்கு சொன்னார். அடுத்த நாள் இன்னோரு பையன் அங்க சந்தியாவந்தனம் பண்ணிண்டிருந்தான். நான் அவன்ட்ட “இந்த மாதிரி ஒரு கையால பண்ணாதே, இரண்டு கையையும் சேர்த்துண்டு பண்ணு” னேன், அவன், எங்கிட்ட “உன் வேலையை பார்த்துண்டு போ” என்றான். ஸ்வாமிகள் ஏன் அப்படி இருக்கார்ங்கறத்துக்கு அடுத்த நாளே எனக்கு பாடம்.
அப்படி அவருடைய பரிவு, அவர் கஷ்டமான விரத நியமங்கள் எல்லாத்தையும் தனக்கு தான் வெச்சுப்பார். மேடையில் உட்கார்ந்து பிராம்மண தர்மம், ஏகாதசி விரதம்னு உபந்யாசம் பண்ணிட்டு இறங்கி வந்தா ஏதேதோ தானும் பண்றது, தன்னை சேர்ந்தவாளும் எப்படியோ இருக்கிறது, அப்படி இருக்கும் காலத்துல, அவர் தான் ஏகாதசி விரதம் இருப்பார். ஒரு வைகுண்ட ஏகாதசிக்கு அவரோட கூட நான் பட்டினி இருந்தேன். சாயங்காலம் ஆகிறத்துக்குள்ள வாந்தி எடுத்து சுருண்டு விழுந்துட்டேன். அவர் என்னை ரிக்ஷா வெச்சு ஆத்துக்கு அனுப்பிச்சார். அப்புறம் அடுத்த நாள் சொன்னார். “அப்பா, அம்மா உன்னை ரொம்ப செல்லமா வேளா வேளைக்கு சாப்பாடு போட்டு வளர்த்திருக்கா, நீ இந்த மாதிரி விரதங்கள் எல்லாம் இருந்து கஷ்டபடாதே. மூகபஞ்சதி சதி ஸ்துதி சதகத்துல
इमं परवरप्रदं प्रकृतिपेशलं पावनं परापरचिदाकृतिप्रकटनप्रदीपायितम् ।
स्तवं पठति नित्यदा मनसि भावयन्नम्बिकां जपैरलमलं मखैरधिकदेहसंशोषणैः ॥
இமம் பரவர ப்ரதம் ப்ரக்ருதி பேஷலம் பாவனம்
பராபர சிதாக்ருதி பிரகடன பிரதீபாயிதம் |
ஸ்தவம் படதி நித்யதா மனஸி பாவயன் அம்பிகாம்
ஜபை: அலம் அலம் அகை: அதிக தேஹ சம்ஸோஷணை: ||
ரொம்ப உடம்பை வருத்திக்கவேண்டாம் இந்த பாராயணத்தை பண்ணின்டே இருந்தா போதும். அனுகிரஹம் கிடைக்கும்னு இருக்கு. உனக்கு அதை வெச்சுக்கோ, உன் உடம்பும் சரியில்லை” அப்படினு சொன்னார். எனக்கு ஆபீஸ் தள்ளி இருந்தது. பலவித சிரமங்கள் இருந்ததுனால “முடிஞ்சா கார்த்ததால எழுந்து சுந்தர காண்டத்தை பாராயணம் பண்ணிட்டு போ” அப்படின்னு சொல்லுவார். அது முடியலை என்ற போது “நீ சாயந்தரம் வந்த பின்ன, ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமானு 21 தடவை சொன்னா, பிரம்மஹத்தியாதி தோஷங்களே போகும்னு, தர்ம சாஸ்திரத்திலேயே ரிஷி வாக்கியமே இருக்கு. இருக்கு. அதனால நீ அதை சொல்லிட்டு உட்கார்ந்து படி. எப்ப எந்த அசுத்தி இருந்தாலும் அதை பத்தி நினைக்காதே. இந்த “ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராமா” னு 21 தடவை சொல்லிட்டு அப்புறம் பாராயணம் பண்ணு. பாராயணம் பண்ண வேண்டும் அப்படிங்கிறது தான் ரொம்ப முக்கியம் அப்படினு சொன்னார். அதை மாதிரி அடுக்கிண்டே போலாம். என்னை சேர்ந்தவா, என் ஸ்நேஹிதர்கள் யாரை அவர்கிட்ட அழைச்சுண்டு போனாலும், அவாளோட கஷ்டம் தீர்ந்திருக்கு. அப்படி அதை கண்கூடா நான் பார்த்திருக்கேன். கருணா வருணாலய பாலயமாம் அப்படினு “கருணைகடலே என்னை காப்பாத்து” அப்படினு சொல்லி வேண்டிக்கலாம்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!