Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம்

யுத்த காண்டம்

  1. என்னைச் சரண் அடைந்தவர்களைக் காப்பேன்; இது என் கடமை

ராமர், வானர சேனையோடு கடற்கரையை அடைந்து, கடலை எப்படி கடப்பது என்று நண்பர்களோடு கலந்தாலோசிக்கிறார். அங்கே ஹனுமாரின் பராக்ரமத்தால் கலங்கிய ராவணன், மந்திரிகளை அழைத்து, ராம லக்ஷ்மணர்களும் வானரப் படையும் வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது என்று யோசனை கேட்கிறான். சில ராக்ஷஸர்கள் ராவணனுடைய பழைய வெற்றிகளை பேசி ‘உன்னை வெல்ல யாராலும் முடியாது’ என்று புகழ்கிறார்கள். சில ராக்ஷஸர்கள் தற்பெருமை பேசி ‘நாங்கள் இருக்கும் போது என்ன பயம்?’ என்கிறார்கள். வேறு பல குருட்டு யோசனைகள் சொல்லுகிறார்கள்.

விபீஷணன் ‘பிறன் மனைவியை கவர்தல் பெரும் பாவம். உனக்கும் உன்னை நம்பின எல்லாருக்கும் இதனால் கேடுகாலம் வந்திருக்கிறது. தர்மாத்மாவான ராமரை எதிர்க்க இவர்கள் யாராலும் முடியாது. ஸீதையை ராமரிடம் ஒப்படைத்து நிம்மதியாய் இருப்போம்’ என்று சொன்னவுடன் இந்த்ரஜித் அவனை கோழை என்று நிந்திக்கிறான். விபீஷணன் ‘சிறுமதி படைத்த இவனை யார் உள்ளே விட்டது’ என்று கோபிக்க, ராவணன் விபீஷணனை ‘கூடவே இருந்து குழி பறிக்கும் பங்காளி குணத்தை காட்டுகிறாய். தம்பியானதால் கொல்லாமல் விடுகிறேன்’ என்று அவமானப் படுத்தி பேசுகிறான்.

விபீஷணன் உடனே தன் நான்கு மந்திரிகளுடன் வானில் கிளம்பி, ராமர் இருக்கும் இடம் வந்து, சுக்ரீவன் முதலிய வானரர்களிடம் ‘எல்லா உலகிற்கும் புகலிடமான ராமரைச் சரணடைய ராவணன் தம்பியான விபிஷணன் வந்திருக்கிறேன் என்று தெரிவியுங்கள்’ என்று கூறுகிறான். வானரர்கள் ராமரிடம் அதைச் சொல்லி, எதிரியுடமிருந்து வரும் அவனை நம்ப வேண்டாம் என்கிறார்கள். ஹனுமார் மட்டும் ‘இவன் தர்மாத்மா. நம்பிக்கையோடு வந்திருக்கிறான். ஸந்தேகித்தால் மனம் வருந்துவான். இவனை சேர்த்துக் கொள்ளலாம்’ என்கிறார்.

ராமர் ‘அடைக்கலம் கேட்டு வந்தவரை ஏற்பது தான் சரி. தள்ளுவது பாபம்’ என்று சாஸ்த்ரங்கள் கூறுகிறது. மஹான்களும் அவ்வண்ணம் செய்து காட்டி இருக்கிறார்கள். என் இச்சையின்றி எனக்கு யாரும் எந்த ஆபத்தும் செய்ய முடியாது. இவன் நல்லவனோ கெட்டவனோ, என்னை வந்து சரணடைந்தவனை நான் எல்லா கோணங்களிலும் காப்பேன். இது என் விரதம். அவனை அழைத்து வாருங்கள்’ என்கிறார். விபீஷணன் வந்து ராமரை நமஸ்கரிக்கிறான்.

‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களையே நம்பி வந்திருக்கிறேன். உங்களுக்காக உயிரையும் தருவேன்’ என்று பாதங்களில் பணிந்த விபீஷணனை ராமர் கண்களால் பருகுவது போல அன்போடு பார்த்து, சமாதானம் செய்து, அவனை ஏற்கிறார். லக்ஷ்மணனிடம் ஸமுத்ர ஜலம் கொண்டு வரச்சொல்லி, இக்கரையிலேயே அக்கறையோடு விபீஷணனை லங்கைக்கு ராஜாவாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார். ராமரின் இந்த கருணையை பார்த்து வானரர்கள் வியக்கிறார்கள். ராமர் விபீஷணனிடம் கடலை கடக்க உபாயம் கேட்கிறார். அவன் ‘நீங்கள் ஸமுத்ரராஜாவை வேண்டினால் வழி விடுவார்’ என்று சொல்கிறான். ராமரும் அதை ஏற்கிறார்.

———————————————-

ஸ்வாமிகளைப் பார்த்தால் தான் சரணாகதி என்பது ஒரு நிகழ்ச்சி இல்லை. அது ஒரு process என்பதை புரிஞ்சுக்க முடிஞ்சது. நம்முடைய படிப்பு, ஸாமர்த்தியம், இளமை, பணம், செல்வாக்கு இதில் வெச்சுருக்கும் நம்பிக்கையை விட்டு, தெய்வத்தின் கிட்ட நம்பிக்கை ஏற்பட்டு, நம்மை முழுமையாக ஒப்படைத்து, பகவானை ஸூத்ரதாரியாகக் கண்டுகொள்வது என்ன அவ்வளவு easy யா? It cannot be a one time event.

‘ஒரு கஷ்டம்னா வேண்டிக்கலாம். பணம், குடும்பம், உடம்பு எல்லாத்துலயும் மேன்மேலும் கஷ்டம் வந்தவுடன் ரெண்டு கையையும் மேலே தூக்கி பகவானையே சரணடைந்து விட்டேன். (வேலையை விட்டுவிட்டு, மஹாபெரியவா சொல்லியபடி ராமாயண பகவதமே படிச்சுண்டு இருக்க ஆரம்பித்ததைச் சொல்லும் போது அப்படி சொல்வார்) அப்படி சரணடைந்த பின் न मे भक्त्त: प्रणश्यति என்று கீதையில் குடுத்த வாக்கின் படி பகவான் காப்பாற்றுகிறார் என்பதை உணர ஆரம்பித்தேன்’ என்று சொல்வார்.

ஞானத்தின் அடையாளங்களான பயமின்மையும், வைராக்யமும், கருணையும் வௌப்பட தெரிஞ்சாலும், ஸ்வாமிகள் தன் நிலையை confirm பண்ண மாட்டார். ‘நாம் சரணாகதி பண்ணினதை பகவான் ஏற்றுக் கொண்டார் என்று நாமே எப்படி confirm பண்ணிக்க முடியும்? அவர் தான் பண்ணனம். பகவானோட கருணை ஏற்படும் வரையில் சோம்பலை ஒழித்து, திரும்பத் திரும்ப விடாமல் பஜனம் செய்ய வேண்டும். ஞானம் வந்தா சிவன் சார் எழுதி இருக்கற மாதிரி சுவரை வெட்டவௌ மாதிரி கடந்து போகலாமே. அது இன்னும் வரல்லை. ஸுந்தரகாண்டம் படிச்சா ஞானம் வரும்னு ஸேஷாத்ரி ஸ்வாமிகள் சொல்லி இருக்கார். நம்பி படிச்சுண்டு இருக்கேன்’  என்று பாராயணம் பண்ணிக் கொண்டு இருந்தார்.

ஸ்வாமிகள் நிஜமான சரண்யனாய் இருந்ததால் ‘நான், என்னோடது’ என்ற வார்த்தைகளையே உபயோகப் படுத்த மாட்டார். ‘நவாஹம் பூர்த்தி ஆச்சு’ என்று சொல்வார். ‘இந்த ஆத்து குழந்தைகள்’ என்பார். ‘अनहंवादी என்று கீதையில் வரும் வார்த்தையை follow பண்ணுவோம். பாவம் (bhavam) வரும் போது வரட்டும்’என்பார்.

ஒரு அட்டையில் नारायण करुणामय शरणं करवाणि तावकौ चरणौ ‘கருணையே வடிவான குருவாயூரப்பா! உன் இரு திருவடிகளில் சரணடைகிறேன்’ என்று எழுதி வெச்சுண்டு கடைசி நாள் வரை அதைப் பார்த்துக் கொண்டே நாவால் ஜபித்துக் கொண்டே இருந்தார்.

அப்படி தன்னை வௌப்படுத்திக் கொள்ளாமல் இருந்த போதிலும், ராமர் எப்படி அபயம் குடுப்பது தன் விரதமாய் வெச்சுண்டு இருந்தாரோ, அது போல ஸ்வாமிகள் தன் தபோ பலத்தால் நிக்ரஹானுக்ரஹ மஹானாய் இருந்து, நமக்கு எத்தனை தடவை அபயம் குடுத்திருக்கிறார்! அதனால் अपराध सहस्र भाजनं पतितं भीम भवार्णवॊदरे । अगतिं शरणागतं हरॆ क्रुपया केवलं आत्मसात्कुरु ॥ என்று சொல்லி அவரையே சரணடைந்தால் நம்மையும் ஏற்றுக் கொள்வார் என்று என் நம்பிக்கை. That can be an auspicious beginning of the process.

யோசிச்சுப் பார்த்தா, ஸ்வாமிகள் நமக்கு குடுத்த வரமெல்லாம் பலிக்கலை, அவர் செய்யதே என்று சொன்னதைச் செய்தால் சுகமா இருக்கு, அவர் சொன்னதைச் செய்தால் நமக்கு கஷ்டம் தான் வந்தது, என்று இருந்தா கூடா, இவரைத்தான் சரணாகதி பண்ணணும். ஏனென்றால் இவர் ஒருத்தர் தான், புராணங்களை ஒரு உயர்கல்வி என்று உள்ளபடி புரிஞ்சுண்டு, அது மூலமாக நாம் நேர்மை, நல்லறிவு, மனவடக்கம் இதெல்லாம் வளர்த்துக்க வழிகாட்டினார்.

ஹனுமார், ராவணன் அந்தப்புரத்தில் ஸீதாதேவியை தேடுகிறார். ராவணன் மனைவிகளைத் தூங்கும் போது பார்க்க நேர்ந்ததே என்று வருந்துகிறார். ‘என் மனமும் இந்திரியக்களும் என் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மேலும் ராம கார்யத்திற்காக அவர் சொல்லி ஸீதையை தேடறத்துக்காக இங்கு வந்தேன். (இல்லைனா வரமாட்டேன் என்பது தொனி)’ என்கிறார்.

ஸ்வாமிகள் இதை எடுத்துச் சொல்லி, நமக்கு மனம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நினைச்சுண்டு மனத்தைக் கெடுக்கும் club, casino மாதிரி இடங்களுக்குப் போகக்கூடாது. சினிமா, சீட்டுக் கச்சேரி மாதிரி காரியங்கள் பண்ணக் கூடாது என்று சொல்வார். இந்த மாதிரி எடுத்துச் சொல்வது மட்டும் இல்லை, அவர் வாழ்ந்தும் காமிச்சு இருக்கார். அதனால் உருப்பட வேண்டும் என்றால் இவர் காலைப் பிடித்துக் கொள்ளுவது ஒரு நல்ல வழி என்று எனக்கு தோன்றுகிறது.

நான் US ல் இருந்த போது club, casino  எல்லாம் போயிருக்கேன். ஆனா ஸ்வாமிகள் அதெல்லாம் தப்பு என்று சொன்னது ஞாபகம் இருந்ததால், அதை விட்டுவிட்டு திரும்பி வர முடிந்தது. இப்பவும் ஹோட்டல் போறேன், சினிமா பார்க்கறேன். ஆனா நாம என்ன பண்ணிண்டு இருக்கோம், எது பண்ண வேண்டிய கார்யம், என்று concious ஆக இருந்தாலே, ஒரு நாள் திருந்த வாய்ப்பு இருக்கு. நான் நல்லவன், பக்திமான், எனக்கு பகவான் அருள் இருக்கு, ஓரளவு ஞானம் கூட இருக்கு, என்றெல்லாம் நினைத்துக் கொள்வது dangerous. Complacency வந்து உத்தம பக்தி ஏற்பட முயற்சியே செய்யாமல், உயிர் அவமே போய்விடும். ‘ஞானம் வந்தா மனதில் உள்ள முடிச்சுகள் அவிழ்ந்து உண்மை விளங்கும். அது வரைக்கும் பண்ற பஜனம் சரியானதா என்பதை மட்டும் பார்த்துக் கொண்டு, விழிப்போடு அதைப் பண்ணிண்டே போ’என்பது அவர் உபதேசம்.

சரணாகதி செய்த பின், நம் பாப புண்யத்தின் பொறுப்பை பகவான் ஏற்கிறார் என்று சாஸ்த்ரத்தில் இருந்தாலும், சில மனோபாவங்களை  (attitudes) சரி செய்து கொள்ள வேண்டும், என்று ஸ்வாமிகள் காண்பிச்சுக் குடுத்திருக்கிறார். That, in the next few chapters..

  1. சாந்தமுலேக சௌக்யமு லேது

ராமர் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லின் மேல் படுத்து பட்டினியிருந்து ஸமுத்ரராஜனிடம் வேண்டுகிறார். அவன் வரவில்லை. ‘லக்ஷ்மணா! வில்லை எடு. இந்த கடலை வத்த அடிச்சு விடுகிறேன். நாம் நடந்தே இலங்கைக்கு செல்வோம்’என்று கோபத்தைக் காட்டியவுடன் ஸமுத்ரராஜன் வந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு ‘நளனைக் கொண்டு பாலம் கட்டுங்கள். அது முழுகாமல் பார்த்துக்கறேன்’ என்று சொல்கிறான். ராமர் நளனையும் வானரர்களையும் கொண்டு தேவர்களும் வியக்கும் வண்ணம், நூறு யோஜனை நீளம், பத்து யோஜனை அகலத்திற்கு கடலின் மேல் பாலம் கட்டி அதன் மூலமாக லங்கை சென்று அடைகிறார்கள்.

ராவணன் அனுப்பிய ஒற்றர்களை விபிஷணன் ராமரிடம் பிடித்து வர, ராமர் அவர்களுக்கு உயிர் பிச்சை அளிக்கிறார். அவர்கள் ராவணனிடம் வந்து ராம லக்ஷ்மணர், ஸுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், நீலன், அங்கதன் இவர்களின் வீரத்தை புகழ்ந்து பேசுகிறார்கள். ராவணன் ‘அரசனிடம் அண்டிப் பிழைப்பவர்களே! அடுத்தவனையா புகழ்கிறீர்கள். ஓடிப் போங்கள்’ என்று சீறுகிறான்.

ராமரின் தலை, வில் போன்றவற்றை மாயையால் தோற்றுவித்து ஸீதையிடம் காட்டி பயமுறுத்துகிறான். அவள் புலம்பி அழுகிறாள். அதற்குள் யுத்த பேரிகை முழங்கவே, அவனை மந்திரிகள் கூப்பிடுகிறார்கள். அவன் போனவுடன் அந்த தலை மறைந்து விடுகிறது. ஸரமா என்ற ராக்ஷஸி ஸீதையைத் தேற்றுகிறாள்.

மால்யவான் என்ற முதியவர் நல்ல புத்தி சொல்ல வரும் போது, ‘நான் வணங்காமுடி ராவணன். என் வரமும் பலமும் இருக்கும் போது, நான் ஏன் ஒரு நாடோடிக்கும், குரங்குகளுக்கும் பயப்பட வேண்டும். எழுந்து போங்கள்’ என்று கத்துகிறான். யுத்தத்திற்கு வியூகத்தை அமைக்கிறான். விபிஷணனின் மந்திரிகள் கழுகுகளாகச் சென்று அதை ஒற்று அறிந்து வர, ராமரும் அதற்கேற்ப வானரப் படைகளை நான்கு கோட்டை வாயிலில் நிறுத்தி ‘நான், லக்ஷ்மணன், விபீஷணன், அவன் மந்த்ரிகள் ஏழு பேரைத் தவிர, மற்ற நம் படையினர் எல்லோரும் வானரர்களாகவே இருப்போம். அதுவே நமக்கு அடையாளமாக இருக்கட்டும். உருவம் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை.’ என்று சொல்கிறார்.

ராவணன் மூர்க்க பிடிவாதத்தாலும் கோபத்தாலும் விதியின் வழியை அறியாமல் தன் குலத்தையே அழித்து தானும் மடிகிறான். ராமர் கோபம் வந்தாலும் உடனே சாந்தம் அடைகிறார்.

———————————————-

ஸ்வாமிகளைப் பற்றி நினைக்கும் போதே நமக்கு அந்த சாந்த குணம் தான் முதலில் ஞாபகம் வருகிறது. அவருக்கு கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தும் விஷயங்கள் அலை போல வந்துண்டே இருந்தன. இத்தனைக்கும் அவருக்கு ஒரு விதமான ஆசையும் இல்லாத போது. ஆனால் लोकानां क्षणमात्र संस्मरणतः संताप विच्छेदिनी என்றபடி ஒரு க்ஷணத்தில் அந்த ச்லோகங்களை சொல்ல ஆரம்பித்தவுடன் அந்த வருத்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ‘நம்ப மனஸு தட்டான் கடையில் இருக்கிற தராசு மாதிரி இருக்கக் கூடாது. விறகுக் கடையில் இருக்கற தராசு மாதிரி இருக்கணம். சின்ன கஷ்டங்களுக்கு ஆடக்கூடாது’ என்பார்.

மஹாபெரியவா ஸ்வாமிகளைப் பற்றி ‘பாகவத ஸப்தாஹம் மலை போன்ற கார்யம். பாகவதருக்கு தான் ச்ரமம். நமக்கெல்லாம் ஆனந்தம். படனம் மதுரம். ப்ரவசனம் மதுரதரம்’ என்று வாயாரப் புகழ்ந்து, மேள தாளத்தோடு, குடை பிடித்து ஊர்வலமாக அழைத்து வர செய்து, சுக ஸ்வரூபமாக பாவித்து, இவர் அவப்ருத ஸ்னானம் செய்த பின்னரே தான் செய்ய வேண்டும் என்று காத்திருந்த போதும் பெருமைப் பட்டுக் கொண்டதில்லை.

அடுத்த வாரமே, கடனுக்காக அலையும் போது, யாராவது வாசலில் காக்க வைத்தாலும் கோச்சுக்கறதில்லை. ‘ராமரே கபந்தன் கிட்ட தயவு செய்யப்பா என்று கேக்கவில்லையா? இவர் (கடன் குடுப்பவர்) கபந்தனுக்கு கீழேயும் இல்லை. நான் ராமருக்கு மேலேயும் இல்லை’என்று light ஆ சொல்லி விடுவார். Such an equanimity of mind. அந்த மனப்பக்குவம் அவருக்கு எப்படி கிடைத்தது? எப்படிக் கிடைத்ததென்றால், அவர் புத்தியை பகவானின் பாதத்தில் புகட்டி, உத்தம பக்தியை (அந்த ஞானத்தை) வேண்டிப் பெற்றுக் கொண்டார்.

‘आपदां अपहर्तारं दातारं सर्वसंपदाम् । लॊकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् ॥ என்ற ஸ்லோகத்தை வௌயில் போகும்போது வழித்துணையாக சொல்லச் சொல்லுவா. அது வாழ்க்கைக்கே வழித்துணை’என்று சொல்வார் ஸ்வாமிகள். சரணாகதி பண்ணினால், விபீஷ்ணனை ராமர் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி சம்பத்துக்களை குடுத்தது போல, நமக்கும் குடுப்பார். ஆனால் ஸம்ஸாரம் என்ற ஆபத்திலிருந்து மீட்டு, ஞானம் என்ற செல்வத்தை ராமர் நமக்குக் குடுக்க வேண்டுமானால், நாம் புத்தி பூர்வமாக அதையே கேட்க வேண்டும்.

நமக்கு பகவானைச் சரணடைந்த பின், overnight ஆசாபாசங்கள் போய் விடப் போவதில்லை. At least ‘நான் நினைச்சதெல்லாம் நடத்திக் கொள்வேன்’ என்ற திமிரான போக்கை விட்டு, ‘நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்’ என்று நம் முயற்சிகளுக்கு பகவான் தரும் பலனில் excitement / frustration  இல்லாமல் இருக்க try பண்ணலாம். அப்படி மனம் பழகி, வைராக்யம் ஏற்பட்டு, ஞானம் அடைவது தான் சரணாகதியின் நோக்கம். அதற்கு ஸ்வாமிகள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர் பகவானை உண்மையாக சரணடைந்து, பணத்தில் பற்று வைக்காமல், புலன்கள் அடங்கி, ஞானத்தோடு இருந்ததால் அல்லவா அவ்வளவு சாந்தமாய் இருந்தார்!

நாம் வினையின் பலனால் கஷ்டப்படும் போது, பொசபொசவென்று அழுகையும் கோபமும் வரும்போது, சுவாமிகளுடைய சாந்தமான முகத்தை பார்த்துக்கணம். இவருக்கு வந்ததை விடவா, என்று நினைப்பு வருமே! bank balance பார்த்து மனஸ் excite ஆகி துள்ளும் போதும், அந்த புன்சிரிப்பை பார்த்துக்கலாம். ஒண்ணும் bank balance  இல்லாலாமலே அவர் அவ்வளவு happyயா இருந்தாரே, அதோட ரகசியம் என்னனு ஒரு second யோசிக்கத் தோணுமே!

சுக துக்கத்திற்கு மேலான சந்துஷ்டியை, நம் ஸத்குரு கண்டு அண்டி மொண்டு உண்ட சுத்த ஞானமென்னும் தேனை, ஸச்சிதானந்த ஸ்வரூபமான பகவானின் பாதங்களை, நாடுவது தான் சரணாகதி. அந்த ஆனந்தத்தை நிஜமாக அநுபவித்தால், சுக துக்கங்களில் excitement / frustration  குறையும். excitement / frustration  குறைந்தால், பாபம் பண்ணுவது குறைந்து, புண்யம் அதிகமாய் பண்ணுத் தோன்றும். அப்படி தனிமையில் பஜனம் பண்ணினா, அதிலிருந்து கிடைக்கும் சந்துஷ்டியை தக்க வைத்துக் கொள்ள, இன்னும் அதிகமாய் புண்யத்தில் ஈடுபடுவோம். அப்படி சரணாகதி  process ஒரு virtuous cycleஆக ஆகி நம்மை மேம்படுத்தும். இந்த objective & attitude  சரியாக வெச்சுண்டு பண்ணுவது தான் சரணாகதி.

ஸ்வாமிகள் ‘பகவானிடத்தில் பாலைக் கேள். பசுவைக் கேக்காதே. ஸௌக்யங்கள் வேண்டும் என்று கேக்காதே, அதிலிருந்து சந்தோஷம் கிடைக்கும் என்று நிச்சயமில்லை. நிம்மதி வேண்டும் என்று கேள்’ என்பார். காமினீ காஞ்சன மோஹத்தில், நம்மைக் காட்டிலும் அதிகமாக மூழ்கி கிடக்கும் இக்கால போலி சாமியார்களைப் பார்த்துக் கொண்டு, ‘பகவானை சரணாகதி பண்ணியாச்சு, அவர் பாத்துப்பார். என்ன வேணா பண்ணலாம்’ என்று நாமும் நினைத்தால், நரகத்தில் தள்ளும் viscious cycle  லில் மாட்டிப்போம். அந்த மாதிரி போலி சாமியார்கள், show காக பண்ற நல்ல கார்யங்கள், stunt ஆ பண்ற உபந்யாஸம், entertainment value ஜாஸ்தியாக இருக்கற பஜனை, அதில் ருசி அதிகமாகி விட்டால், அவர்கள் புகழ்ச்சியில் மயங்கி, ‘நாமும் நல்ல கார்யம் பண்றோம். பக்தி பண்றோம். நம் பேராசைகள் ந்யாயமானவை’ என்று எண்ணம் வந்து, பாபம் பண்ணுவதில் குளிர் விட்டுப் போய்விடும்.

தோஷ புத்தியோடு உலகை அநுபவித்துக் கொண்டு, ஸ்வாமிகளைப் போன்ற ஒரு தூய்மையான மஹானை ஆச்ரயித்து, அவருடைய மஹத்துவத்தை அடிக்கடி நினைத்துப் பார்த்து, அந்த மாதிரி நிலை நமக்கும் வராதா என்று ஏங்கினால், அந்த ஏக்கத்தின் மூலமாக நிஜமான மாற்றம் (transformation) ஏற்பட்டால் தான், பகவானை சரணாகதி பண்ணின பலன் கிடைக்கும். உலகில் நப்பாசை இருக்கும் வரை, பொருட்பற்று இருக்கும் வரை, அந்த ஏக்கம் வரது கஷ்டம். பக்தியினால் பேசறது, எழுதறது, அழறது, சிரிக்கிறது, ஆடறது, பாடறது, எல்லாமே ஒரு ஆறுதலுக்கு தான். ‘இதையே முடிந்த முடிவாய் நினைத்து விடாதே’ என்று எனக்கும் ஞாபகப் படுத்துங்கள்.

ஆனா பக்தியைத் தவிர வேற வழியும் கிடையாது. அந்த ராமருடைய (ஸ்வாமிகளுடைய) சரித்ரமும், ஸ்தோத்ரமும், நாமமும் தான் ஒரே hope. நம் பக்தியோட நோக்கம், ஸ்வாமிகள் அடைந்த நிலையை அடைய வேண்டும், என்பதாகத் தீர்மானமாக, sincere ஆ இருந்து விட்டால், பகவானுடைய பாதங்களை அடையத் தேவையான புத்தியை, எது ஸத், எது அஸத் என்ற தௌவை அவர் குடுப்பார். மேலான ஞானத்தையும் அளிப்பார். கடைசி வரை வழித்துணையாக வருவார். சரணாகதி பண்ணின பின் ஸத்யமாய் இருக்க வேண்டியதின் அவசியம், elaborated in next chapter.

  1. தன் நெஞ்சறிவது பொய்யற்க

தன் மாளிகையின் மாடத்திலிருந்து படைகளை பார்வையிடும் ராவணனைக் கண்டு, சுக்ரீவன் கோபத்தோடு அவன் மீது பாய்கிறான். அவனோடு மல்யுத்தம் செய்து வெற்றி வீரனாய் திரும்புகிறான். வானர வீரர்களுக்கு யுத்தத்தில் உற்சாகம் கூடுகிறது.

ராமர், ராவணனுக்கு ஒரு கடைசி chance குடுக்க விரும்பி ‘ஸீதையை என்னிடம் ஒப்படைத்து உயிர் பிழைத்துப் போ. ஆனால் இனி லங்கை ராஜ்யம் விபீஷணனுக்குத் தான்’ என்று சொல்லி அங்கதனை தூதனாய் அனுப்புகிறார். ராவணன் அதைக் கேட்டுக் கோபமடைந்து அங்கதனை பிடிக்கச் சொல்கிறான். அங்கதன் வந்த நாலு பேரையும் தூக்கி எறிந்துவிட்டு, ராவணனின் மாளிகை கோபுரத்தைக் காலால் எத்தி உடைத்து, ராமரிடம் வந்து சேருகிறான். யுத்தம் துவங்குகிறது.

இந்த்ரஜித் நேரே யுத்தம் செய்து அங்கதனிடம் தோற்று விடுகிறான். உடனே கண்களுக்கு புலப்படாமல் மறைந்திருந்து, ராம லக்ஷ்மணர்களை நாகபாசத்தால் கட்டுகிறான். பயங்கர விஷப் பாம்புகளின் கட்டில் அவர்கள் மயங்கி கிடப்பதைக் கண்ட விபீஷணன், சுக்ரீவன் எல்லாருமே பயந்து விடுகிறார்கள். ராவணன் ஸீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி காண்பிக்கச் சொல்கிறான். கதறும் ஸீதையை திரிஜடை ஸமாதானம் செய்கிறாள். ஒரு நிமிஷம் மயக்கம் தௌந்த ராமர் லக்ஷ்மணன் நிலையை பார்த்து பரிதவித்து ‘நான் தோற்றுவிட்டேன். எல்லாரும் வந்த வழியே போய்விடுங்கள். விபீஷணா! என்னை மன்னித்து விடு’ என்று சொல்கிறார்.

அப்போது கருட பகவான் அங்கு வர, விஷப்பாம்புகள் பயந்து ஓடிவிடுகின்றன. ராம லக்ஷ்மணர்களை கருட பகவான் தடவிக் குடுக்கிறார். அவர்கள் முன்பை விட இரண்டு மடங்கு சக்தியும் தேஜஸும் பெறுகிறார்கள். ‘ராக்ஷஸர்கள் எப்போதும் சூழ்ச்சியில் வல்லவர்கள். உங்களுக்கு உங்கள் நேர்மை தான் பலம். விரைவில் வெற்றி பெறுவீர்கள்’ என்று வாழ்த்திவிட்டு செல்கிறார்.

வெற்றிக் களிப்பில் இருந்த ராவணன், ராம லக்ஷ்மணர்கள் நாக பாசத்திலிருந்து விடுபட்டு மத்தகஜங்களைப் போல நிற்பதைப் பார்த்து சோகத்தில் ஆழ்ந்து போகிறான்.

ராமாயணம் முழுவதும் ஸத்யத்தை, மனோவாக்காயத்தினால் ஒன்றாயிருப்பது என்ற நேர்மைக் குணத்தை (आर्जवम्) போற்றுகிறது. தசரதர் ஸத்யத்துக்காக அன்பு மகனைக் காட்டுக்கு அனுப்புகிறார். அந்த ஸத்யத்துக்காக ராமர் 14 வருஷம் வனவாசம் செய்கிறார். ‘practical ஆ இருந்துகோ’என்று பேசும் ஜாபாலியை ராமர் கண்டிக்கிறார். ஸீதை ஜனகர் குடுத்த வாக்கின்படி நிழலைப் போல ராமரோடு காட்டிற்குப் போகிறாள். ஜடாயு ‘நீங்கள் தள்ளி போயிருக்கும் போது ஸீதையை நான் பார்த்துக்கறேன்’ என்று சொன்ன வார்த்தைக்காக் தன் உயிரையே தருகிறார். இப்படி அந்த உத்தமர்கள் ஸத்யத்தை காப்பாற்றுவதை தலையாய கடமையாய் வெச்சுண்டு இருந்தார்கள். அப்படி இருப்பவர்களை, எல்லா சூழ்ச்சிகளிலிருந்தும் பகவான் காப்பாற்றுகிறார், முக்தி அளிக்கிறார் என்பது தான் ராமாயணத்தின் முக்கிய செய்தியாய் தெரிகிறது.

———————————————-

Swamigal was an epitome of truth and straight forwardness. அவர் கார்த்தால 5 மணிக்கு எழுந்தா ராத்திரி 10 மணி வரைக்கும் என்ன பண்ணினார் என்பது எல்லாருக்கும் தெரியும். His whole life was an open book.  பேச்சிலியோ, கார்யங்களிலோ ஔவு மறைவே கிடையாது. மறைக்கறதுக்கு ஒண்ணுமே இருக்கலை.

நாளைக்கு கார்த்தால ௯ மணிக்கு பூர்த்தி என்று சொல்லி விட்டால், வேறு சிரமங்களால் பகலில் படிக்க முடியவில்லை என்றாலும், ராத்திரி எல்லாம் படிச்சு அந்த ௯ மணிக்கு பட்டாபிஷேக ஸர்கத்துக்கு வந்து விடுவார்.  மஹாபாரதம், ஸ்காந்தம், ஸௌந்தர்யலஹரி எல்லாம் ப்ரவசனம் பண்ண சொன்னால், எனக்கு ராமாயணம் பாகவதம் தான் தெரியும். மற்றதெல்லாம் deepஆ தெரியாது என்று சொல்லி விடுவார். ஏதாவது ச்லோகம் அர்த்தம் கேட்டா, தெரிஞ்சா சொல்வார். இல்லைனா translation எடு பார்ப்போம் என்பார்.

‘ஸத்யம் இல்லாதவா பண்ற பூஜையை பித்ருக்களோ தெய்வங்களோ ஏற்க மாட்டார்கள்.’ ‘ஸத்யம் இல்லாதவன் பண்ற பாலாபிஷேகம் பகவான் மேல நெருப்பைக் கொட்டற மாதிரி’ ‘யதார்த்தமாய் இருந்தால் மூவுலகில் எதுவும் ஸாத்தியம்’ ‘மண்ணைக் கொண்டு சுத்தி (shuddi) செய்தால் மட்டும் சுத்தி வராது. பண விஷயத்தில் சத்யமாய் இருந்தால் தான் சுத்தி’ என்ற quotations எல்லாம் விடாமல் தைரியமாய் சொல்லுவார். He had the moral authority to quote them.

ஸ்வாமிகள் வெச்சிருந்த கொள்கை எல்லாமே அவருக்கு இருந்த ஸத்யப் நிஷ்டையினால் தான் கடைசி வரை கடைபிடிக்க முடிந்தது. ஒரு வருஷம் ராமாயணம் பிரதி ச்லோகம் அர்த்தம் சொல்லி முடிவில் 200 ரூபாய் தக்ஷிணை குடுத்தால், கொஞ்சம் கூடக் குறைப்பட்டுக் கொள்ளாமல் வாங்கிண்டு இருக்கார். ராமாயண பாகவதத்திற்கு விலை பேசுவதில்லை என்ற ஸத்யத்தை எவ்வளவு சோதனைகள் வந்தபோதும் விடவில்லை. அப்படி ஸத்ய நிஷ்டையாய் இருந்ததால் அவர் சொன்ன வார்த்தைகள், குடுத்த வரங்கள், ஈச்வர வாக்காய், ஸத்யமாய் பலித்தது.

கஷ்டங்கள் எல்லை மீறி போன போது, கூட இருந்த நண்பர்கள் ச்ரமப் படுவதைப் பார்த்து, ராமர் சொன்னது போல ‘நீங்கள் அவரவர் வேலையை பார்க்கப் போங்கள். என் கஷ்டம் என்னோடு போகட்டும்’என்று சொல்லி இருக்கார்.

ஆனால் அவர் நம்பின பகவான் அவரைக் கைவிட்டு விடவில்லை. கடல் போலிருந்த கடனை வற்ற அடித்து, அவருக்கும் அவரை நம்பின எல்லாருக்கும் உண்ண உணவும், இருக்க இடமும் மட்டுமில்லை, தளராத மனமும், தெய்வ வடிவமும், மாசற்ற கீர்த்தியும், உயர்வற உயர் நலமான மோக்ஷத்தையும் குடுத்தார்.

சிஷ்யர்களிடம் ஸ்வாமிகள் கருணைக்கு அளவே கிடையாது. எல்லா தப்பையும் மன்னிச்சு ஏத்துப்பார். ஆனா பொய் மட்டும் ஒத்துக்கவே மாட்டார். ‘எனக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கு. இது போகணம்’ என்ற போது, ‘சின்ன வயசுல class mates கிட்டேருந்து வந்துருக்கும். போயிடும்’ என்றார். US போயிட்டு வந்தேன். வெறுக்கலையே! பேராசை, காமம் எல்லாம் பொறுத்துப்பார். ஆனால் ஸத்யம் தவறினால் வருத்தப் படுவார். உரிமை இருந்தா கண்டிப்பார்.

ஒரு தடவை ஒரு வைஷ்ணவ பையன் ‘தெரிஞ்சவா இருக்கா நல்ல தர்சனம் பண்ணி வைக்கிறேன்’ என்று என்னை திருப்பதி கூட்டிண்டு போய், நாமம் இட்டுவிட்டு ஸேஷாத்ரி என்று சொல்லி தோமல சேவை செய்து வைத்தான். ஸ்வாமிகளிடம் சொன்ன போது ‘மத்த மனுஷா கிட்டவே பொய் சொல்லக் கூடாதுங்கற போது பகவான் கிட்ட பொய் சொல்லலாமா? இனிமே அப்படி பண்ணாதே. இந்த வெங்கடாசலபதியை (படம்) நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேட்டுக்கோ’ என்று சொன்னார். அப்படியே செய்தேன்.

அதிலிருந்து அவரை சரணாகதி செய்த பின், அவரிடமும் வேஷம் போடக் கூடாது என்று தெரிந்து கொண்டேன். சரணாகதி என்பது ‘நான் ஒங்களையே நம்புகிறேன்’ என்று நாம் செய்யும் promise. Based on that அவர் ‘உன்னை நான் காப்பாற்றுகிறேன். பயப்படாதே’ என்று வாக்கு குடுத்திருக்கிறார்.

நாம் வாக்கை மீறினால், for example இவரை நம்பினால் கிடைப்பதை விட நிம்மதியோ, சந்தோஷமோ, பணமோ எதோ ஒண்ணு, வேறொரு ஸாமியாரைப் பார்த்தால் கிடைக்கும் என்று நினைத்தாலோ, or otherwise  இவர் சொல்லிக் குடுத்த ஸ்லோகத்தை விட வேற ஒரு மந்த்ரம் நன்றாக பலிக்கும் என்றோ நாம் போனால், அப்போ கூட அவர் கருணயினால் குடுத்த வாக்கின் படி நம்மைக் காப்பாற்றுவார். ஆனால் ஸத்யம் தவறின நமக்கு பயம் வந்துவிடும். It will slow down the process in which we want to surrender our ego and trust him.

My feeling is  – எல்லா distractions  போகக் கிடைக்கிற கொஞ்சம் நேரத்தில், நம்ம time என்கிற precious பணத்தில், ஸத்ஸங்கம் என்ற தங்கத்தை வாங்கப் பார்க்கிறோம். ஸ்வாமிகள் மூலமா வால்மீகி கூட பண்ற ஸத்ஸங்கம், guaranteed 24 karat  தங்கம். நாளைக்கு எதாவது ஆபத்துனா அடகு வெக்கும் போது ஏமாற்றம் ஏற்படாது.

So சரணாகதி மூலமாய் நமக்கு அவரிடம் நம்பிக்கை வளர ஸத்யம் முக்கியம். அவரையே நம்பி அவருக்கு truthfulஆ loyalஆ இருந்து என்ன கிடைக்கிறதோ, அது போதும் என்ற எண்ணத்தை வெச்சுண்டா, உலகத்திலும் honestஆ இருந்து எது கிடைக்கிறதோ அது போதும் என்று தோன்றிவிடும் வாய்ப்பு இருக்கு. அப்படி ஸத்யத்தை நாம் பிடிச்சு வெச்சுண்டா, அந்த ஸத்யமே வடிவான ஸ்வாமிகள், இன்னிக்கு தெய்வமாக ஆகிவிட்டாலும், அன்னிக்கு போல என்னிக்கும் நம்மை சூழ்ச்சிகளிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் காப்பார் என்பது என் நம்பிக்கை.

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்

மற்றறியேன் பிற தெய்வம் வாக்கியலால் வார்கழல் வந்து

உற்று இறுமாந்து இருந்தேன் எம்பெருமானே அடியேற்கு

பொற்றிவிசு நாய்க்கிடுமாறு அன்றே நின் பொன்னருளே

  1. சோம்பல் குணம் பகவானிடம் போக முடியாமல் தடுத்து விடும்

ராவணன் ப்ரஹஸ்தன் என்ற சேனாதிபதியை பெரும் படையோடு போருக்கு அனுப்புகிறான். கடுமையான போரின் முடிவில் நீலன் என்கிற வானர ஸேனாதிபதி அவனை வதம் செய்கிறான். வியப்படைந்த ராவணன் ‘இது ஸாதாரண எதிரியில்லை. நானே போகிறேன்’ என்று யுத்தத்திற்கு வருகிறான். ராமரே அவன் வரவையும் தேஜஸையும் புகழ்கிறார். ராவணன் நீலன், லக்ஷ்மணன், ஹனுமார் எல்லாரையும் மீறிக் கொண்டு ராமரோடு யுத்தம் செய்ய வருகிறான். ஆனால் ராமரிடம் படுதோல்வி அடைகிறான். அவனுடைய ரதம், கொடி, சாரதி, வில், கவசம், கிரீடம் எல்லாவற்றையும் வீழ்த்திய ராமர், கருணையினால் நிராயுதபாணியாய் இருக்கிறான் என்பதால் கொல்லாமல் விடுகிறார்.

கோட்டைக்கு திரும்பிய ராவணன் ‘ஒரு மனிதனிடம் தோற்றேனே’ என்று அவமானத்தால் புழுங்குகிறான். பயம் மேலிட கும்பகர்ணனை எழுப்பச் சொல்கிறான். கும்பகர்ணன் காதில் தண்ணீரைக் கொட்டி, அவன் மேல் யானைகளை ஓடச் செய்து, தாரை தம்பட்டைகளை முழக்கி, உலக்கைகளால் அடித்து ஒரு வழியாக அவனை எழுப்பி மலை மலையாக மாமிசமும் குடம் குடமாக கள்ளும் குடுத்து, குளிப்பாட்டி ராவணனிடம் அழைத்து வருகிறார்கள்.

ராவணன் தனக்கு ஏற்பட்ட தோல்வியை சொல்லி அழுகிறான். கும்பகர்ணன் ‘இப்ப கூட விபீஷணன் சொன்னதைக் கேட்டால் உனக்கு நல்லது’ என்று சொன்னவுடன் ராவணன் முடிஞ்சு போனதைப் பேசி என்ன ப்ரயோஜனம்? எனக்கு உன் உபதேசம் ஒன்றும் வேண்டியதில்லை. எனக்கு உதவி செய்வியா மாட்டாயா?’ என்று அதட்டுகிறான். கும்பகர்ணன் ‘நான் இருக்கும் போது உனக்கு என்ன கவலை. நான் போய் ராம லக்ஷ்மணர்களை வதம் பண்ணி எல்லா வானரர்களையும் தின்று விட்டு வருகிறேன்’ என்று கிளம்புகிறான். ராவணன் மகிழ்ந்து அவனுக்கு ஆபரணங்கள் அணிவித்து, ஆசீர்வாதம் பண்ணி அனுப்புகிறான்.

கும்பகர்ணன் கடுமையான யுத்தம் செய்து வானரர்களை கதி கலங்கச் செய்கிறான். ஆனால் முடிவில் ராமருடைய அஸ்த்ரங்களுக்கு இரையாகிறான். இதைக் கேட்ட ராவணன் சோகமடைந்து ‘தர்மாத்மாவான விபீஷணன் பேச்சைக் கேட்காமல் அவனை விரட்டினதின் பலனை இன்று அனுபவிக்கிறேன்’ என்று அழுகிறான்.

கும்பகர்ணன் கள், மாமிசம், தூக்கம், ரிஷிகளை ஹிம்ஸித்தல், பரஸ்த்ரீ ஹரணம் என்று தாமஸ வடிவமாய் இருந்ததால், ராமருடைய மஹிமை ஒரு second புரிந்தாலும், விபீஷணனைப் போல ராமரிடம் போக முடியவில்லை. ராவணன் பேச்சை மீற முடியாமல் சாகிறான்.

———————————————-

ஸ்வாமிகள் ‘ராவணன் (ராஜஸம்), கும்பகர்ணன்(தாமஸம்), விபிஷணன்(ஸத்வம்) எல்லாரும் இப்ப நமக்குள்ளவே இருக்கா. ராமரும் இருக்கார். நாம் ராமர் மஹிமையை கொஞ்சம் தெரிஞ்சுண்டு இருக்கோம். ஆனா உலக ஆசைகளை விடமுடியாததால், வேலை, பணம், குடும்பம் என்று மாத்தி மாத்தி ராஜஸத்துலியே முக்கால் வாசி பொழுது போய்விடுகிறது. மிஞ்சி கிடைக்கும் கொஞ்ச நேரத்தில், தாமஸமாய் டிவி, கதைகள், தூக்கம் என்று போக்கி விட்டால் ராமரை மறந்தே போய் விடுவோம்.’

त्वं अक्षरोसि भगवन् व्यक्ताव्यक्त स्वरूपधृत् ।

यदा त्वं रावणं हत्वा यज्ञविघ्नकरं खलम् । लोकान् रक्षितवान् रामा तदा मन्मानराश्रयम् ॥

रजस्तमस्च निर्हृत्य त्वत्पूजालस्य कारकम् । सत्वं उद्रॆकय विभॊ त्वत्पूजादर सिद्धये ॥

‘சோம்பலை ஒழித்து ஒரு target வெச்சுண்டு பகவத் பஜனத்தை விடாமல் செய்ய வேண்டும். கார்த்தால எழுந்து ராமாயணம் படி. பத்து நிமிஷத்துலேர்ந்து அரை மணி, ஒரு மணி என்று ஜாஸ்தி பண்ணிண்டே போகணம். அதுவும் பகவான் பார்த்துப்பார் என்று சொல்லுவது சரியில்லை. provident fundல போட்ட பணம் போயிடுத்துனா எப்படி அழறாளோ அந்த மாதிரி ராமாயணம் படிக்காம ஒரு நிமிஷம் போயிடுத்துனா அழணம்’ என்று சொல்வார்.

அவர் அப்படி இருந்தார். அசதியாய் இருந்தால் படுத்துண்டு ஒரு ஆவர்த்தி விஷ்ணு ஸஹஸ்ர நாமம் படிக்க சொல்லி கேட்டுட்டு புத்துணர்ச்சியோடு அவர் எழுந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கே அந்த ஸ்லோகத்தின் மேல் ஒரு நம்பிக்கை வந்துடும். படுத்துண்டு இருப்பார். என்னைப் பார்த்தவுடன் எழுந்து மூகபஞ்ச சதீ படிப்பார். ‘அம்பாளை நினைச்சதால் சக்தி வந்துவிட்டது. இனி ராமாயணம் இன்னிக்கி portion முடிச்சுடலாம்’ என்று அதை படிக்க ஆரம்பிப்பார்.

தாமஸ குணத்தை அதிகரிக்கும் புகையிலை, மது, வெங்காயம், பூண்டு முதலியவற்றை மருந்துக்கு கூட (not even in medicines) சேர்க்க மாட்டார். காபி மருந்து போல கொஞ்சம் சாப்பிடுவார். அதையே ‘நான் காபி சாப்பிடற ஸந்நியாஸி தானே’ என்று ரொம்ப நிஷித்தமாய் சொல்லிப்பார். சாப்பாடு, தினமும் அதே பதார்த்தங்கள், ரொம்ப அளவாய் சாப்பிடுவார். சப்பு கொட்டிண்டு சாப்பிட மாட்டார். இதெல்லாம் அவர் தாமஸத்தை தவிர்த்ததைப் பற்றி பேசினதால் சொல்கிறேன். அவர் சுத்த ஸத்வமாய் இருந்த தவ விரதங்கள் தான் எவ்வளவு! வெறும் அவல் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பாகவதம் படிச்சுண்டு ௪௮ நாட்கள் குருவாயூரில் பஜனம் இருந்திருக்கிறார். இப்படி எவ்வளவோ!

Tired ஆ இருக்கும் போது walk போகக் கூட தெம்பில்லை என்று தோன்றும். கஷ்டப்பட்டு ஒரு park க்கு போய் walk பண்ணிட்டு வந்தா ஒரு தெம்பு வரும். அது போல, அவரைச் சரணடைந்த பின்னும் அப்படியே இருக்கிறோமே, என்ற தளர்ச்சி ஏற்படும் போது, ‘அவர் சொன்னதைச் செய்வோம்’ என்று அந்த புஸ்தகத்தை எடுத்து, சும்மா mechanical ஆ படிச்சாலே, வார்த்தைகளால் விவரிக்க பண்ண முடியாத ஒரு நிம்மதி கிடைக்கிறது. அது கைவிட்டு போய்விடக் கூடாது என்ற பயத்தில் இன்னும் கொஞ்சம் படிப்போம்.

माभीर्मन्दमनो विचिन्त्य बहुधा यामीश्चिरं यातनाः

नामी नः प्रभवन्ति पापरिपवः स्वामी ननु श्रीधरः ।

आलस्यं व्यपनीय भक्तिसुलभं ध्यायस्व नारायणं

लोकस्य व्यसनापनोदनकरो दासस्य किं न क्षमः ॥

  1. பகவானை சரணாகதி பண்ணினால் என்ன கிடைக்கும்?

கும்பகர்ணன் வதமடைந்த பின் ராவணன் தன் தம்பிகள், பிள்ளைகள் பல பேரை போருக்கு அனுப்புகிறான். அதிகாயனை லக்ஷ்மணன் வதம் செய்து விடுகிறான். மற்ற பேரை வானரர்கள் முடித்து விடுகிறார்கள். ராவணன் ‘வந்திருப்பது மனிதர்களும் குரங்குகளுமா, இல்லை பகவானான நாராயணனும் தேவர்களுமே தானா! என்று எண்ணுகிறான்.

இந்திரஜித் மறைந்திருந்து ராமலக்ஷ்மணர்கள் வானரர்கள் எல்லாரையும் ப்ரம்மாஸ்திரத்தால் வீழ்த்தி விடுகிறான். விபீஷணனும் ஹனுமாரும் மட்டும், முன்பு ப்ரம்மா குடுத்த வரத்தினால் சிறிது நேரத்தில் அதிலிருந்து விடுபடுகிறார்கள். ஜாம்பவான் சொற்படி ஹனுமான், ஹிமயமலையில் ஓஷதிபர்வதத்தில் உள்ள ஸ்ஞ்சீவனி என்ற மூலிகையைத் தேடி பறந்து செல்கிறார்.

மூலிகைகள் அவரைப் பார்த்தவுடன் ஔந்து கொள்கின்றன. ‘என்ன ராமரிடம் கூட கருணையில்லையா? என்ன செய்கிறேன் பார்’ என்று ஹனுமார் அந்த மலையையே உலுக்கி கையில் தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறார். அந்த மூலிகைகளின் காற்றுப் பட்டவுடன் இறந்து கிடந்த ராமலக்ஷ்மணர்கள் வானரர்கள் எல்லாரும் உயிரோடு எழுந்து விடுகிறார்கள். எல்லாரும் ஹனுமாரைப் பூஜிக்கிறார்கள்.

———————————————-

தெய்வத்தையே நம்பி, சரணாகதி பண்ணி, வணக்கமாய் இருந்து, சோம்பலை ஒழித்து, இடையறாது பஜனம் பண்ணினால் என்ன கிடைக்கும்? அந்த தெய்வமாகவே ஆகிவிடலாம். சிதம்பரம் ஐயர் என்ற பக்தரின் பிள்ளை ஒரு விபத்தில் அடிபட்டு உயிர் பிழைக்க மாட்டான் என்று சொன்ன போது, ஸ்வாமிகள் ஸுந்தரகாண்ட ச்லோகத்தைச் சொல்லி பிழைக்க வைத்தார். ஹனுமார் மலையைத் தூக்கியது போல, இப்படி miracles சொல்றதுனா வரிசையா சொல்லிண்டே போகலாம். இன்னிக்கும் நடத்திண்டு இருக்கார். இந்த வருஷம் ஆராதனை நடக்குமா என்று கவலைப் படும் அளவில் ஒரு வயசான பாட்டி பழூர் அக்ரஹாரத்தில் படுக்கையில் இருந்தா. எந்த விக்னமும் இல்லாமல் ஆராதனை நடந்து முடிந்தது.

ஸ்வாமிகள் ஒரு incident சொல்லுவார். ‘முல்லக்குடி ஸுந்தரேச சாஸ்த்ரிகள் னு ஒரு பெரியவர் மஹாபாரதம் ப்ரவசனம் பண்ணுவார். அவர் உச்சிஷ்ட கணபதி உபாசனை செய்பவர். அதனால் ஒரு வேளை நன்றாக சாப்பிடுவார். சாயங்காலம் ப்ரவசனத்தின் போது தட்டில் விழும் பணம் மறுநாள் சாப்பாட்டிற்கு போதுமானதாய் இருக்கும். தினமும் ப்ரவசனம் ஆரம்பத்தில் த்யான ச்லோகங்கள் சொல்லும் போது மூகபஞ்சசதீயிலிருந்து ஒரு ச்லோகம் ராகத்தோடு பாடுவார். ஒரு நாள் நான் கதை கேட்கப் போயிருந்தேன். ப்ரவசனம் ஆரம்பிக்கும் போது மழை வரும் போல இருட்டிண்டு வந்தது. அவர் ‘பக்தர்களின் ஏழ்மையை போக்கும் சுரதருவே’ என்று வரும் ஒரு ச்லோகத்தை உருக்கமாக பாடினார். வந்த மேகங்கள் எங்கோ போய்விட்டன. ப்ரவசனம் முடிஞ்சவுடன் ‘உங்கள் ப்ரார்த்தனை அந்த காமாக்ஷி அம்பாள் காதில் விழுந்து மழையை நிறுத்தி வெச்சுட்டாளே’என்று சொன்னேன். அழுதுட்டார்.’

இந்த incident ஸ்வாமிகள் சொல்லக் கேட்ட போது ‘அந்த ப்ரார்த்தனையை நேரவே கேட்டு, மழையை நிறுத்தி வெச்ச காமாக்ஷி அம்பாள் நீங்க தானே’ என்று நான் நினைத்துக் கொண்டேன். அப்படி இந்த்ரன் யமனெல்லாம் இவர் சொன்ன பேச்சை கேட்டு நடக்கும் ஸித்த புருஷர் நம் ஸ்வாமிகள் என்பது என் துணிபு.

ஆனால், இந்த ஸித்திகளுக்கு எல்லாம் மேலான ஞானஸித்தியை வேண்டி, அதை அடைந்து பிரகாசித்தார். நம் முன் நடமாகும் தெய்வமாக விளங்கிய மஹாபெரியவா ‘உன் ஜன்மா ஸார்த்தகமாகும். (பயனுள்ளதாக ஆகும்)’ என்று ஸ்வாமிகளுக்கு guarantee குடுத்தார். ‘உலகில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் விவேகிகளே இருக்கா’ என்று சொன்ன சிவன் ஸார் ‘திருவல்லிக்கேணி ஸ்வாமிகள் ஒரு மஹான். அவரை அழைச்சுண்டு போக வைகுண்டத்திலிருந்து விமானம் வரும்’ என்று சொன்னார்.

இதெல்லாம் தெரிஞ்சும் நான் ஸ்வாமிகள் கிட்டயே கேட்டிருக்கேன், ‘இப்படி படிச்சுண்டு இருந்ததில் உங்களுக்கு என்ன கிடைச்சுது?’ என்று. அவர் ‘நான் இன்னிக்கு இப்படி உக்காந்து இருக்கேனே. அதுவே பகவதனுக்ரஹம் தான்’ என்றார். ஸ்வாமிகள் வாழ்க்கையே ஒரு ராம ராவண யுத்தம். It was a war between spiritualism and materialism. கல்யாணராமனாய் பிறந்த அவர், வீரராகவனாய் போர் புரிந்து, வெற்றியடைந்து விஜயராகவனாய் வீற்றிருப்பதைத் தான் அப்படி சொன்னார் என்று இப்ப தோன்றுகிறது.

விபீஷணனுக்கு ராமர் சரணாகதி அளித்த போது ‘என்னை நம்பி வந்த எவருக்கும் நான் அடைக்கலம் அளித்து, அவர்களை எல்லாக் கோணத்திலும் காப்பாற்றுவேன். இது என் விரதம்’ என்று சொன்ன வார்த்தையை ராமர் தனக்கே சொன்னதாக நம்பி, ஸ்வாமிகள், ராமரைத் தவிர வேறு ஒரு பற்றுக் கோடும் இல்லாமல் வாழ்ந்தார். அதனால், அவரும் ராமத் தன்மை அடைந்து, தன்னை நம்பி வணங்கிய எவருக்கும் ராமர் பேரால் புகலிடம் தந்து, ஆபத்திலிருந்து காப்பாற்ற முடிந்தது. வருஷக்கணக்காக இதைப் பார்த்துக் கொண்டு இருந்ததால், ஒரு நாள் நான் ‘உங்களை ராமராகவே, வாஸுதேவனான பரம்பொருளாகவே, நினைக்கிறேன்’ என்று சொன்னேன். ஸ்வாமிகள் as usual ‘எனக்கு இன்னும் அப்படி தெரியலை. அந்த ஞானநிலை அடையத் தான் ப்ரார்த்தனை பண்ணிண்டு இருக்கேன்.’ என்றார்.

அவர் பூஜைக்கு எதிராத்திலருந்து ஒரு மாமி பசும்பால் கொண்டு வந்து குடுப்பா. எப்பவும் பேசாதவா அன்னிக்கு ‘உங்களை நான் வெங்கடேசப் பெருமாளாகவே பார்க்கிறேன் பெரியவா’ என்று சொல்லிட்டுப் நமஸ்காரம் பண்ணிட்டுப் போயிட்டா. ஸ்வாமிகள் ‘இவப்பா ரொம்ப பெரியவர். மஹாபெரியவா ஒத்துண்ட மஹான்’ என்றார். நான் எழுந்து நமஸ்காரம் பண்ணி அவர் கிட்ட ‘தயவு செய்ய வேண்டும்’என்று சொன்னேன். அவர் புன்சிரிப்போடு ‘நான் அந்த மாதிரி இன்னும் ஆகலைன்னாலும், நீ அப்படி நினைச்சு பக்தி பண்ணினா, சீக்கிரம் அநுக்ரஹம் கிடைக்கும்’ என்று சொன்னார்.

ஸ்வாமிகளையே தெய்வமாய் நம்பி, சரணாகதி பண்ணி, அவரிடம் frustrate ஆகாமல், வணக்கமாய் இருந்து, சோம்பலை ஒழித்து, அவர் சொன்னபடி எதோ சிலது படித்தாலே, அவர் அரும் பாடு பட்டு பெற்ற பெரும்பேற்றை, ஞானச் செல்வத்தை கருணையினால், சிரமப் படாமலே தந்து விடுவார் என்று எனக்கு நப்பாசை!

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே

வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்

ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கு என்

ஊடகத்தே நின்றுருகத் தந்தருள் எம் உடையானே

  1. கலிப் ப்ரவாஹத்தை எதிர்த்துப் போக, பகவானின் நாமங்களே துணை

ராவணன் இந்திரஜித்தை ‘ஏன் இன்னும் இந்த எதிரிகளை வெல்ல முடியவில்லை? எதாவது செய்’என்று ஏவுகிறான். இந்த்ரஜித் ஒரு மாயா ஸீதையை உருவாக்கி ஹனுமார் கண் பார்க்க அதை வெட்டி விடுகிறான். கலக்கமுற்ற ஹனுமார் ராமரிடம் வந்து சொல்ல, ராமர் மயங்கி விழுகிறார். லக்ஷ்மணன் அவரை சமாதானப் படுத்துகிறான். ஆனால் ‘உங்கள் சத்யமும் தர்மமும் என்னாச்சு? இப்படி ஒரு கஷ்டம் வந்துடுத்தே?’ என்று ஒரு வார்த்தை சொல்கிறான்.

விபீஷணன் வந்து ‘இது இந்திரஜித்தின் மாயை. இப்படி திசை திருப்பி விட்டு இந்திரஜித் நிகும்பிலை என்ற இடத்தில் ஒரு யாகம் செய்கிறான். அதை முடித்து விட்டால் அவனை யாருமே வெல்ல முடியாது. அதனால் லக்ஷ்மணனை அனுப்புங்கள். அவனை ஜயித்து வருகிறோம்’ என்று ராமரிடம் சொல்கிறான். சற்று தௌந்த ராமரும் அவ்வாறே அநுமதி அளிக்கிறார். வானரப் படையோடு சென்று லக்ஷ்மணன் அந்த யாகத்தை தடுத்து விடுகிறான்.

வௌயே வந்த இந்திரஜித் லக்ஷ்மணனோடு கடுமையான யுத்தம் செய்கிறான். மூன்று நாட்கள் தொடர்ந்து யுத்தம் செய்து, எந்த அஸ்த்ரமும் பலிக்காத போது லக்ஷ்மணன் ‘தசரத குமாரனான ராமர் தர்மாத்மா, ஸத்யஸந்தர் என்பது உண்டானால் அவர் பௌருஷத்தின் பேரால் விடும் இந்த அம்பு இந்திரஜித்தைக் கொல்லட்டும்’ என்று ஒரு அம்பை விட இந்திரஜித் தலை கீழே விழுகிறது.

வெற்றி வீரனாய் திரும்பிய லக்ஷ்மணனை ராமர் அணைத்து, ஆச்வாஸப் படுத்தி ஸுஷேணரிடம் அவனுக்கும், எல்லா வானரர்களுக்கும் காயங்களுக்கு மருந்து போடச் சொல்கிறார்.

———————————————-

ஸ்வாமிகள் அந்த ராமாயண புஸ்தகத்தை படிச்சுண்டு ராமாயண காலத்திலியே இருந்துண்டு இருந்தார். வெளி உலகத்தையே பார்க்கவில்லை. practial ஆ இருக்கவில்லை. வேலையை விட்டதற்கு, கருத்தடை பண்ணிக் கொள்ளவில்லை என்பதற்கெல்லாம் அவரை புத்தி கெட்டவர் என்று திட்டினவர்கள் கூட உண்டு. ‘ஒரொருத்தர் communism, அந்த ism இந்த ism என்று அதுக்காக போராடறேன் என்று குடும்பம், உடம்பு எதையும் கவனிக்காமல் இருந்திருக்காளே! அது மாதிரி நான் ஒருத்தன். இந்த நாரத பக்தி ஸுத்ரத்துல சொன்னதை நம்பி வந்தது வரட்டும் என்று இருக்கேன்’ என்பார்.

ஆனால், நின்று, யோசித்துப் பார்த்தால் தான், அப்படி கலியின் பிரவாஹத்தை எதிர்ப்பது, எவ்வளவு தீரமான செயல் என்பது புரியும். லக்ஷ்மணன் ராமருடைய சத்ய தர்மத்தால் கஷ்டம் வந்ததே என்று நினைத்தாலும், முடிவில் அந்த தர்மத்தின் ஸத்யத்தின் பேரால் தான் இந்திரஜித்தை ஜயிக்க முடிந்தது. அது போல, ஸ்வாமிகள், ஸத்யம் தர்மம் என்று சொல்லிக் கஷ்டம் தான் பட்டார் என்று வௌயில் தோன்றினாலும், அவர் ஊக்க சக்தியாய் இருந்ததால் தான் இன்னிக்கும் எத்தனை பேர் ராமாயண பாகவதம் படிக்கிறார்கள்! ந்யாய வழியில் இருக்கிறார்கள்!

ராவணனுடைய பத்து தலை என்பது அதீத மூளைக்கும், இந்திரஜித்தின் மாயை என்பது இந்தக் கலியின் ப்ரவாஹத்திற்கும் (நவீன விக்ஞானம், பணத்தையும் பயத்தையும் காட்டி ஆள் சேர்க்கும் அன்னிய மதங்கள், நம் மதத்திலேயே இக்ஷிணி, துர்தேவதை உபாசனையை நம்பும் போலி சாமியார்கள்) இவற்றின் உருவகம் என்று எனக்கு தோன்றுகிறது.

ஸ்வாமிகள் வழியில், அவர் சொன்ன अपराजित पिङ्गाक्ष नमस्ते रामपूजित என்பது போன்ற நாமங்களை நம்பி, எளிமையாய் பக்தி செய்து வந்தால், வேண்டிய வரங்கள் பெற்று, சின்ன கஷ்டங்களை தாங்கும் சக்தி கிடைத்து, போலி சாமியார்களிடம் போய் நிற்காமல் இருப்போம். அப்படி இருந்தால், சாகறத்துக்குள் ஒரு நாள் ஸ்வாமிகளின் தத்வத்தை உள்ளபடி புரிந்து கொண்டு, இன்று கலியின் ப்ரவாஹத்தில் நாம் தத்தளித்துக் கொண்டு இருந்தாலும், அதில் அடிச்சுண்டு போகாமல் கரை ஏற்றுவார் என்று என் நம்பிக்கை.

नान्या स्पृहा रघुपते हृदयेस्मदीये सत्यं वदामि च भवान् अखिलान्तरात्मा ।

भक्तिं प्रयच्छ रघुपुङ्गव निर्भरां मे कामादि दॊषरहितं कुरु मानसं च ॥

  1. புலன்களை அடக்க முடியாது. தெய்வ பக்தியை தெய்வ பாசமாக உயர்த்திக் கொண்டவருக்கு புலன்கள் அடங்கி விடும்.

புத்ர சோகத்தால் பீடிக்கப் பட்ட ராவணன் ‘நிஜமாகவே ஸீதையை கொல்லுவேன்’ என்று கிளம்புகிறான். ஒரு மந்திரி ‘வேதம் படிச்சவன் நீ. ஸ்த்ரீஹத்தி பண்ணாதே. இப்பவும் ராமரோடு யுத்தம் செய்து வென்றால் ஸீதையை அடையலாம்’ என்று சொன்னவுடன் திரும்புகிறான். அவன் அனுப்பிய லக்ஷம் வீரர்கள் கொண்ட மூலபல சைன்யத்தை ராமர், ருத்ர பகவானைப் போல தனி ஒருவராய் நின்று, அஸ்த்ர மஹிமையால் அழிக்கிறார்.

ராவணன் யுத்தத்திற்கு வருகிறான். விபீஷணனை கொல்லப் பார்க்கும் அவன் முயற்சியை லக்ஷ்மணன் தடுத்து விடுகிறான். உடனே ராவணன் ஒரு வேலால் லக்ஷ்மணனை வீழ்த்தி விடுகிறான். ராமர் கோபம் கொண்டு ‘இன்று ராமரின் ராமத் தன்மையை உலகம் காணப் போகிறது. இன்று பொழுது சாய்வதற்குள் உலகில் ராமனோ, ராவணனோ ஒருத்தர் தான் மிஞ்சி இருப்பார்கள்’ என்று சபதம் செய்கிறார். ஹனுமார் மீண்டும் ஒருமுறை ஸஞ்சீவினி மலையைக் கொண்டு வந்து லக்ஷ்மணனை உயிர்ப்பிக்கிறார்.

இந்திரன் ராமருக்கு தன் தேரையும் சாரதியான மாதலியையும் அனுப்புகிறான். ராமர் வணங்கி அதை ஏற்கிறார். தேவர்களும், ரிஷிகளும், வானரர்களும், ராக்ஷஸர்களும் பார்க்க பயங்கரமான ராம ராவண யுத்தம் நிகழ்கிறது. ராவணன் கலகலத்து போகவே அவனுடைய சாரதி அவனை அப்பால் கொண்டு போகிறான். ராவணன் அதை கண்டித்து மீண்டும் யுத்த களத்திற்கு வருகிறான்.

அதற்குள் அகஸ்த்ய முனிவர் அங்கு வந்து ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயம் என்ற ச்லோகத்தை உபதேசிக்கிறார். அதை மூன்று முறை ஜபித்து, சூரிய பகவானின் அநுக்ரஹத்தால் புத்துணர்ச்சி பெற்ற ராமர், ராவணனை கடுமையாக தாக்குகிறார். அவன் தலையை அம்பால் வீழ்த்துகிறார். ஆனால் அந்த தலை மீண்டும் முளைக்கிறது. இப்படி நூறு முறை ராமர் வீழ்த்திய அவன் தலை, மீண்டும் மீண்டும் முளைக்கிறது. ராமர் ஒரு கணம் மனம் தளர்கிறார். மாதலி ஞாபகப் படுத்தியவுடன் ராமர், ராவணன் மீது ப்ரம்மாஸ்த்ரத்தை விடுகிறார். ராவணன் மடிந்து விழுகிறான். தேவர்கள் ராமர் மீது பூமழை பொழிகிறார்கள். மூவுலகமும் நிம்மதி அடைந்து மகிழ்கிறது.

ராவணன் மனைவிமார் வந்து அவன் உடல் மீது விழுந்து அழுது புலம்புகிறார்கள். மந்தோதரி ‘விபீஷணன் பேச்சைக் கேட்காததால் இப்படி கிடக்கிறாயே. பாபம் செய்த நீ வீழ்ந்து கிடக்கிறாய். புண்யாத்மாவான விபீஷணன் நல்வாழ்வு பெற்றான். புலன்களை அடக்கி வரங்களைப் பெற்றாய். அந்த புலன்களே உன்னை பழி வாங்கி விட்டதே’ என்று புலம்புகிறாள்.

ராமர் விபீஷணனைக் கொண்டு ராவணனுக்கு முறைப்படி ஸம்ஸ்காரம் செய்விக்கிறார். பின் லக்ஷ்மணனைக் கொண்டு, விபீஷணனை இலங்கைக்கு அரசனாக பட்டம் சூட்டி வைக்கிறார்.

———————————————-

ஸ்வாமிகளுக்கு பிறந்ததிலிருந்து பக்தி வைராக்யம் இருந்தாலும், முறைப்படி திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் இருந்தபடி, பாகவத சாஸ்த்ரத்தில் சொன்ன விதத்தில் பஜனம் செய்து, தெய்வ பக்தியை, தெய்வபாசமாக உயர்த்திக் கொண்டார். புலன்கள் முழுமையாக அடங்கி விட்டதை, பல வருடங்கள் உறுதி செய்து கொண்ட பின், கனவிலும் கூட எந்த சலனமும் இல்லாத நிலை அடைந்த பின், ஆசா பாசங்கள், பொருட்பற்று எல்லாம் முற்றிலும் அகன்ற பின், ஸந்நியாஸக் கோலத்தை ஏற்றார்.

ஸ்வாமிகளுடைய ஸந்யாஸத்தை நினைக்கும் போது அவருடைய அம்பாள் பக்தியையும் நினைக்க வேண்டும். மூன்று வயதில் அம்மாவை இழந்து விட்ட ஸ்வாமிகள், எட்டு வயதில் மூகபஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் ‘காமாக்ஷியின் கடாக்ஷம் ராமரைப் போல விளங்குகிறது’ என்ற வரியைக் கண்டு அப்பாவிடம் ‘நம்ம  ராமரைப் பற்றி வருகிறது’ சொல்லி சந்தோஷப்படும் போது, கூட இருந்த ஒரு பெரியவர் ஸ்வாமிகளிடம் ‘இந்த புஸ்தகத்தை பற்றுக் கோடாக வைத்துக்கொள்’ என்று உபதேசித்துள்ளார். ஸ்வாமிகள், அம்மா இல்லாத ஏக்கத்தை மூகபஞ்சதீ மூலம் அந்த காமாக்ஷி அம்பாளையே துதித்து ஆற்றிக் கொள்வார்.  வௌயில் தெரியும்படி, நாராயணீயம் என்ற க்ரந்தத்தை அவருடைய மூச்சுக் காற்று என்று நினைக்கும்படி, அத்தனை ஆவர்த்தி பண்ணியிருக்கிறார். அதே அளவிற்கு பக்தியோடு, மூகபஞ்சசதீ ஸ்தோத்ரத்தை கணக்கில்லாமல் பாராயணம் செய்திருக்கிறார். அந்த ஸ்தோத்ர பாராயணத்தின் பலனாகத் தான் தனக்கு ஸந்யாஸம் கிடைத்தது என்று பல முறை கூறியுள்ளார். ஸந்யாஸம் ஏற்றுக் கொள்ள தாயாரின் அநுமதி பெற வேண்டும் என்ற சாஸ்த்ரத்தை இப்படி கடைபிடித்தார் என்று தோன்றுகிறது.

ஒரு முறை மூகபஞ்ச சதீ படிக்கும் போது அவர் அடுத்த ஸ்லோகம் படித்தார். ‘நான் இந்த முந்தின ஸ்லோகம் படிக்கவில்லையே’ என்று சொன்னேன். சரி என்று படித்தார். ‘ஓ, இதை படித்து விட்டீர்கள்’ என்று சொன்னேன். ‘பாதகமில்லை. இது மீண்டும் படித்தது எனக்கு பாதாம் ஹல்வா சாப்பிடுவது போல இருந்தது’ என்றார். அந்த ஸ்லோகத்தின் பொருள் ‘அம்பாளுடைய கடாக்ஷம் கிடைத்தவர்களுக்கு மனதிற்கு யோக்யமான போக்யங்கள் எல்லாம் கிடைக்கும்’. அவர் டியாபெடீஸ் இல்லைனாலும் ஸ்வீட் சாப்பிட்டு இருக்க மாட்டார். ஏன்னா அவருக்கு கரும்பு துவர்த்தது, செந்தேன் புளித்தது.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே

என்ற பதிகத்தை சொல்லி யோக்யமான போக்யம் பகவானுடைய பாதத்தில் பக்தி தான் என்று எடுத்துரைத்தார். ‘நான் சொல்லறது பெரிசில்லை. ஒரு ராஜாவா இருந்த குலசேகர ஆழ்வார் அப்படி சொல்கிறார்’ என்று முகுந்த மாலையிலிருந்து காண்பித்தார்.

எனவே நாம் புலனடக்கத்தைப் பற்றி விசாரிக்காமல், அதற்கு குண்டலினி யோகம், மந்த்ர தந்த்ரம், யம நியமம் என்று பலதை தெரிந்து கொண்டு குழம்புவதை விட, விஷயங்களை தோஷ புத்தியோடு அநுபவித்துக் கொண்டு, ஸ்வாமிகள் காட்டிய வழியில் இடைவிடாத பாராயணத்தின் மூலம் பக்தியை வளர்த்துக் கொள்ளலாம். ப்ரம்மசர்யம், ஸந்நியாஸம் எடுத்துண்டு, புலனடக்கத்தை மோக்ஷத்திற்கு நம்பும் சிலர், எதாவது மடம், மன்றம் என்று ஒரு institution, trust என்று ஆரம்பித்து அது மூலமாக பணம் புகழில் பேராசை பிடித்து, நோக்கத்தை மறந்து, மேலான நன்மையை இழந்து விடுகிறார்கள். அதற்கு நடுவில் தனித்து இயங்கி, பணத்தில் பற்று வைக்காமல், நிஜமான வைராக்யத்தோடு விளங்கிய ஸ்வாமிகள் மஹிமையை நினைத்துப் பார்க்க வேண்டும். மனத்தை ஸ்வாமிகளிடம் திருப்பி விட்டால், புலன்கள் நம்மை தவறான பாதையில் இழுத்துச் செல்லாமல் அவரே காப்பாற்றுவார். மேலும் ஐவரும் கைவிட்டு மெய்விடும் போது, ஆனந்தமாய் அந்த பகவானுடைய பாதங்களில் அடைக்கலம் புகுந்து விடலாம்.

  1. ஞானம் பிறக்கும், உண்மை விளங்கும், வால்மீகி ராமாயணத்தை திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இரு

ஹனுமார் ஸீதாதேவியிடம் ராமரின் வெற்றியைச் சொல்லி ‘இனி கவலை வேண்டாம். நீங்கள் பக்தனான விபீஷணன் க்ருஹத்தில் தான் இருக்கிறீர்கள்’ என்று சொல்கிறார். ஸீதை ஹனுமாரை வாயார வாழ்த்துகிறாள். பின்னர் ஹனுமார் ‘உங்களை ஹிம்ஸித்த இந்த ராக்ஷஸிகளுக்கு தகுந்த தண்டனை குடுக்கிறேன்’ என்று சொன்ன போது, ‘வேண்டாம், பிழை பொறுத்தல் பெரியோர் கடமை. மன்னித்து விடு’ என்று சொல்கிறாள்.

பின்னர் விபீஷணன் ஸீதாதேவியை ராமரிடம் அழைத்து வர, ராமர் அக்னிப்ரவேசத்தால் தூய்மை அடைந்த பிராட்டியை ஏற்கிறார். ப்ரம்மாதி தேவர்கள் ராமரை முழுமுதற் கடவுளாக துதிக்கிறார்கள். பரமேச்வரன் தசரதரை அழைத்து வர, ராமர் அவரை வணங்குகிறார். தசரதர் அவர்களை ஆசீர்வதிக்கிறார்.

பிறகு புஷ்பக விமானத்தில் சுக்ரீவன் முதலிய வானரர்களோடும், விபீஷணன், அவன் மந்திரிகள், லக்ஷ்மணனோடும், ஸீதையோடும் ராமர் அயோத்தி கிளம்புகிறார். ஸீதையை பிரிந்த பின் நடந்த கதையை ராமர் ஸீதைக்கு சொல்கிறார். அன்று பரத்வாஜ முனிவரின் ஆச்ரமத்தை அடைகிறார்கள். ப்ரத்வாஜர் ஞானதிருஷ்டியால் நடந்த அனைத்தையும் தான் கண்டவாறு கூறி, அன்றிரவு அங்கு தங்கி தன் விருந்தை ஏற்று, மறுநாள் செல்ல உத்தரவிடுகிறார். ராமரும் அதற்கு ஒத்துக் கொண்டு ஹனுமாரை பரதனிடம் அனுப்புகிறார்.

ஹனுமார் பரதனை சந்தித்து ராமர் வருகிறார் என்ற இனிய செய்தியை கூறியவுடன் பரதன் ஆனந்தத்தில் மூர்ச்சிக்கிறான். பிறகு ஹனுமாரை பூஜித்து பலகையில் அமர்த்தி நடந்த விவரங்கள் அனைத்தையும் கேட்டறிகிறான். ஜனங்கள் அயோத்தியை மாலைகளாலும் தோரணங்களாலும் கொடிகளாலும் அலங்கரிக்கிறார்கள்.

மறுநாள் ராமர் முதலானோர் விமானத்தில் வந்து சேர, பரதன் அவர்களை வணங்கி வரவேற்கிறான். ஜனங்கள் எல்லாரும் ராமரை கைகூப்பி வணங்குகிறார்கள். ராமரும் ஸீதையும் அம்மாக்களையும், குருவையும் வணங்கி அவர்களை மகிழ்விக்கிறார்கள். பரத சத்ருக்னர்கள் லக்ஷ்மணனை வணங்குகிறார்கள்.

பின்னர் நடந்த விஷயங்களை ராமர் மந்திரிகளுக்கு சொல்லிண்டே வர ரதத்தில் அயோத்தி சென்றடைந்து அன்றிரவைக் கழிக்கிறார்கள். சுக்ரீவன் வானரர்களை அனுப்பி நான்கு ஸமுத்ரத்திலிருந்தும், கங்கை முதலிய ஐநூறு நதிகளிலிருந்தும் பட்டாபிஷேகத்திற்கு புண்ய தீர்த்தம் கொண்டு வரச் செய்கிறான்.

மறுநாள் ராமரையும் ஸீதையயும் அலங்கரித்து, ரத்ன ஸிம்ஹாஸனத்தில் அமரச் செய்து, வானர ராஜனான ஸுக்ரீவனும் ராக்ஷஸ ராஜனான விபீஷணனும் கவரி வீச, சத்ருக்னன் குடை பிடிக்க, வஸிஷ்டர் முதலான ரிஷிகள் மந்திரபூதமான ஜலத்தினால்     ஸ்ரீராமரை பதினான்கு உலகிற்கும் சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார்கள். !! ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் ஸமேத ஸ்ரீராமசந்த்ர மஹராஜ் கி ஜய் !!

ராம ராஜ்யத்தில் எல்லோரும் ராமா ராமா என்று அவருடைய குணங்களையும் கதைகளையும் பேசிக் கொண்டும், ஒருவரை ஒருவர் ஹிம்ஸிக்காமலும் இருந்ததால், உலகம் ராம மயமாக, ஆனந்த மயமாக ஆகிவிட்டது. இந்த ராம கதையை படிப்பவர்கள் வேண்டிய வரங்களை ராமபிரானின் அநுக்ரஹத்தால் பெறுவார்கள்.

रामो रामो राम इति प्रजानां अभवन् कथाः ।

रामभूतं जगदभूत् रामे राज्यं प्रशासति ॥

———————————————-

இந்த ஒரு பத்து ஸர்கத்தில் ஐந்து முறை ராம கதை வருகிறது. எப்படி வால்மீகி முனிவர் ராம கதையை எத்தனை முறை சொன்னாலும் திருப்தி அடையாமல் திரும்பச் சொல்லுகிறாரோ, அது போல ஸ்வாமிகள் ராமகதையை திரும்பத் திரும்பச் சொல்லுவார். ஒவ்வொரு முறையும் புதிதாகப் படிப்பது போல ஆனந்தப் படுவார்.

நாமும் ஸ்ரீமத்வால்மீகி ராமாயணத்தையும், ஸ்வாமிகள் அதை வாழ்ந்து காட்டியதையும், திரும்பத் திரும்ப பேசிக் கொண்டும், அவர் காட்டிய வழியில் நடந்தும், அவரிடம் பக்தி செய்து, அவருடைய அருளைப் பெறுவோம்.

श्रीरामचन्द्राश्रित सद्गुरूणां पादारविन्दं भजतां नराणाम् ।

आरोग्यं ऐश्वर्यं अनन्तकीर्तिः अन्ते च विष्णॊः पदमस्ति सत्यम् ॥

Series Navigation<< ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – சுந்தர காண்டம்ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – பலச்ருதி >>

2 replies on “ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம்”

Aho bhagyam AhoBhagyam. Ananthakodi namaskarangal. Want to know who has written this. Is there a book having Swamigal’s important quotes. I have noted many from Sri Sundarkumar Swamigals Discourses and follow as much as possible. Dhanyosmi Dhanyavadhaha.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.