Categories
mooka pancha shathi one slokam

நீ வேறனாதிருக்க நான் வேறனாதிருக்க


ஆர்யா சதகம் 44வது ஸ்லோகம் பொருளுரை – நீ வேறனாதிருக்க நான் வேறனாதிருக்க

समया सान्ध्यमयूखैः समया बुद्ध्या सदैव शीलितया ।
उमया काञ्चीरतया न मया लभ्येत किं नु तादात्म्यम् ॥

ஸமயா ஸாந்த்⁴யமயூகை:² ஸமயா பு³த்³த் ⁴யா ஸதை³வ ஶீலிதயா ।

உமயா காஞ்சீரதயா ந மயா லப்⁴யேத கிம் நு தாதா³த்ம்யம் ॥

இது ஆர்யா ஸதகத்துல 44 வது ஸ்லோகம்.

ஸாந்த்யமயூகை: – சந்தியா காலத்து சூரிய கிரணங்களுக்கு , ஸமயா – சமமான காந்தியை உடையவள். அபிராமி பட்டர் கூட “உதிக்கின்ற செங்கதிர்”ன்னு சொல்றார்.

சந்தியா காலத்து சூரியன்னா நமக்கு சாயங்காலம்தான் ஞாபகம் வரும். ஆனா கார்த்தாலயும் அதே தானே. “சந்த்யா” அப்படின்னா ‘இரவும் பகலும் சந்திக்கின்ற வேளை’ன்னு அர்த்தம். கார்த்தால வரதும் சந்தியா காலம்தான். ‘உதிக்கின்ற செங்கதிர்’ தான் “ஸமயா ஸாந்த்யமயூகை:”. அப்படி செக்கச்செவேல்னு சூரியனைப் பார்க்கும் பொழுது அம்பாளோட ஞாபகம் வருது. இந்த பாசுரத்துல அந்த மாதிரி சிவப்பை எல்லாம் சொல்றார்.

“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்  உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் …”

இதைத்தான்  “ஸமயா ஸாந்த்யமயூகை: ஸமயா புத்யா ஸதைவ ஶீலிதயா” ன்னு மூககவி சொல்றார்.

“..  மாதுளம்போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:”

காஞ்சீரதயா – காஞ்சி தேசத்தின் மேல் ரொம்ப ‘ரதி’ ன்னா ஆசை , காஞ்சிபுரத்தின் மேல் ரொம்ப ப்ரீதி கொண்டவளுமான காமாக்ஷி தேவி, உமயா – இங்க உமான்னு சொல்லறார், அந்த காமாக்ஷி தேவியை யார் உள்ளபடி உபாசிக்கறான்னா, “ஸமயா புத்யா ஸதைவ ஶீலிதயா” – சமபுத்தி படைத்தவர்கள் அந்த காமாக்ஷியை இடைவிடாமல் உபாசிக்கிறார்கள். சமபுத்தின்னா  ‘லாப நஷ்டம்’, ‘சுக துக்கம்’ ,’மான அவமானம்’ இதெல்லாம் ஒண்ணா பார்க்கற புத்தி. அந்த புத்தி லாபம் ஜன்மாந்தர சுஹ்ருதத்தினாலேயும், இப்ப குருவுக்கும் பகவானுக்கும் செய்யற உபாசனையாலும் ஏதோ மஹான்களுக்கு மட்டும்தான் கிடைக்கறது. அப்பேர்ப்பட்ட ஒரு மஹான்தான் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். லாப நஷ்டம்னா – ஸ்வாமிகள் 1930ல பிறந்தார், 1950ல சென்னைக்கு வந்தார். 1985 வரையில கடன் இருந்தது. 1986ல தான் கடன் போச்சு. அதுக்கு அப்பறம் கொஞ்சம் பணம் வந்தது. ஆனா அதுக்கு அப்பறம் ஸந்யாஸம் வாங்கிண்டார். நஷ்டம் – அவர் புத்ரனையே இழந்தார். அதுக்கு மேல ஒரு  நஷ்டமா?. ஆனா இது இரண்டுமே அவரை பாதிக்கலை. அதே மாதிரி சுக துக்கம்னா – ஒரு பெரிய family இருந்தது. நிறைய குழந்தைகள் இருந்தா. இதை வேணும்னா சுகம்னு சொல்லலாம். துக்கம்னா அவருக்கு எப்பவுமே உடம்புல சிரமங்கள் இருந்துண்டே இருந்தது. அதுக்கு மேல ஒரு துக்கம் மனுஷனுக்கு உண்டா?. இந்த இரண்டும் கூட ஸ்வாமிகளை பாதிக்கல. மான அவமானம்னா – 5000 பேர் அவரோட பிரவசனம் கேட்டிருக்கா. எத்தனையோ பேர் அவரை தெய்வமா வெச்சு நமஸ்காரம் பண்ணி இருக்கா. அவமானம்னா – பணத்துக்கு கஷ்ட பட்ட போது நிறைய பேர் எவ்வளவோ பேசி இருக்கா. என்னமோ principle னு சொல்லிண்டு புத்திகெட்டவனா இருக்கயேனு எல்லாம் அவரைப் பார்த்து சொல்லி இருக்கா. அதையும் அவர் ஒன்னும் பொருட் படுத்தலை …

அப்படி ‘சமபுத்தி’னா எனக்கு ஸ்வாமிகள் ஞாபகம்தான் வரும். அப்பேர்ப்பட்ட மஹான்களால் இடைவிடாது உபாசனை செய்யப்படும் காமாக்ஷி.

இத்தனைக்கும் நடுவுல ஸ்வாமிகள் பெரியவாளையே த்யானம் பண்ணிண்டு இருந்தார். எனக்கு இதை படிக்கும் போது சுந்தர காண்டத்துல ஒரு ஸ்லோகம் ஞாபகம் வரும்.

नैषा पश्यति राक्षस्यो नेमान्पुष्पफलद्रुमान्।

एकस्थहृदया नूनं राममेवानुपश्यति।।

சீதா தேவியை அசோகவனத்தில் சிறை வெச்சிருக்கான் இராவணன். அனுமார் பார்க்கறார். அழுதுடறார் அவர். என் ராமனுக்கு எல்லா விதத்துலயும் தகுதியான இந்த பெண் ராமனை பிரிந்து இங்க உக்காந்துண்டு தபஸ் பண்ணிட்டு இருக்காளே!.

‘ந ஏஷா பஷ்யதி ராக்ஷஸ்யஹ’ – இந்த கோரமான ராக்ஷஸிகள் பயமுறுத்துவதையும் அவள் பார்க்கவில்லை.  ‘ந இமான் புஷ்ப பலத்ருமாந்’ –  இந்த அசோகவனம் அவ்வளவு அழகா இருக்கு, யாராக இருந்தாலும் மனசை பறி கொடுத்துடுவா. அவ்வளவு அழகா பண்ணி வெச்சிருக்கான் இராவணன். அந்த அழகையும் ரசிக்கலை. ‘ஏகஸ்தஹ்ருதயா நூநம் ராமம் ஏவ அநுபஷ்யதி” ஒரே மனஸா ‘ராமா ராமா’ன்னு ராமரையே நெனச்சுண்டு இருக்கா. இதுதான் பக்தியோட லக்ஷணம்னு ஸ்வாமிகள் சொல்வார். அதை அவரே வாழ்ந்தும் காமிச்சார். அப்படி பெரியவாகிட்ட அவ்வளவு பக்தியோட இருந்தார். அப்பேர்ப்பட்ட காமாக்ஷியோடு,

“உமயா ந மயா லப்யேத கிம் நு தாதாத்ம்யம்”

‘தாதாத்ம்யம்’னா அந்த தெய்வமாவே ஆகறது, சாயுஜ்ய பதவின்னு சொல்லுவா, நமக்கு உலகத்துல கூட யாரையாவது ரொம்ப பிடிச்சுதுன்னா அவாளாவே ஆயிடணும்னு நினைப்போம். நீ என் உயிர் அப்படின்னு எல்லாம் சொல்லறது இல்லையா. அது மாதிரி இங்க மூக கவி காமாக்ஷியோட ஒண்ணா ஆகற நிலைமையை பிரார்த்திக்கிறார். அப்படி பிரார்த்திக்க முடியுமா, நம்ம எங்கயாவது மஹாபெரியவா ஆகா முடியுமான்னு கேட்டுண்டா.. அதுதான் நம்ம வேத மதத்திற்கும் வேறு மதங்களுக்கும் இருக்கற வித்யாசம். நம்முடைய வேத மதத்திலதான் ,

“நீ வேறெனாதிருக்க நான் வேறெனாதிருக்க

நேராக வாழ்வதற்குன் அருள்கூர

நீடார் ஷடாதரத்தின் மீதே பராபரத்தை

நீ காணெனாவனைச் சொலருள்வாயே”

( ‘நாவேறு’ எனத் தொடங்கும் சுவாமி மலைத் திருப்புகழ்)

அப்படிப் பிரார்த்தனை இருக்கு, இந்த ஸ்லோகத்துலயும் அப்படித்தான் பிரார்த்தனை பண்றார். அப்படிப் பிரார்த்தனை பண்ணறது ஒரு அபசாரம் கிடையாது. நம்ம இருக்கற நிலையிலிருந்து அது Absurdனு தோணலாம். ஆனா மஹான்கள் திரும்பத் திரும்ப இது மாதிரி ஸ்லோகங்களைச் சொல்லச் சொல்லறா. ஸ்வாமிகள் எனக்கு ஒரு incident  சொல்லுவார். அவர் பேர் ஞாபகம் வர மாட்டேங்கறது. மகா பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருந்த ஒருத்தருக்கு கண் மறைக்க ஆரம்பிச்சுடுத்து. அவர் மஹாபெரியவாகிட்ட போய் சொல்லறார். அதுக்கு மஹாபெரியவா ” உனக்கு ஏதேனும் ஸ்லோகம் தெரியுமா?”னு கேக்கறார். அதுக்கு அவர் “எனக்கு மூகபஞ்சஷதீ யில ஆர்யா சதகம் மட்டும் தெரியும்” னு சொல்லறார். பெரியவா உடனே “அது போருமே, தினமும் அதை 48 நாட்களுக்கு சொல்லிண்டு வா” என்று சொன்னார். அவர் உடனே “எனக்கு அது மனப்பாடம் தெரியும், சொல்லிக் காமிக்கட்டுமா?” னு கேட்டு, மஹாபெரியவா கிட்ட 48 நாளும் சொல்லிக் காமிக்கறார். மஹா பெரியவாளும் ” ஆஹா ஸ்தோத்ரம்ன்னா இது தான் ஸ்தோத்ரம்” னு அவ்ளோ சந்தோஷத்தோட கேக்கறார். 48 ஆவது நாள் பெரியவா சந்நிதியில அவர் சொல்லி முடிச்சதும், பெரியவாளை பார்க்கறதுக்கு ஒரு கண் doctor வரார். ‘அவர் கண்ணை கொஞ்சம் பாரேன்’னு பெரியவா சொல்லி, அவருக்கு கண்ணுல இருந்த திரையை எடுத்து அவருக்கு நன்னா கண் தெரிய ஆரம்பிச்சுடுத்து. அப்படி ” ஸ்தோத்ரம்ன்னா இதுதான் ஸ்தோத்ரம்” னு மஹாபெரியவா இந்த மூகபஞ்சஷதீயைச் சொல்லி இருக்கா. இந்த உலகத்துலயும் க்ஷேமத்தை கொடுக்கும். அம்பாளோடு தாதாத்மியத்தையும் கொடுக்கும்னு ஸ்ரீமுகத்துல சொல்லி இருக்கா. அப்படி ஒரு அற்புத ஸ்தோத்ரம்.

மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் (audio and transcript)

ஸமயா ஸாந்த்⁴யமயூகை:² ஸமயா பு³த்³த் ⁴யா ஸதை³வ ஶீலிதயா ।

உமயா காஞ்சீரதயா ந மயா லப்⁴யேத கிம் நு தாதா³த்ம்யம் ॥

அதனால இதை நாம கத்துண்டு நன்னா படிப்போம். அது என்ன பண்ணுங்கறத நாம அனுபவிச்சுப் பாத்துக்கலாம்

2 replies on “நீ வேறனாதிருக்க நான் வேறனாதிருக்க”

மூககவி ஸாயுஜ்யத்தைப் ப்ரார்த்திக்கும் அழகான ஸ்லோகம்.🙏🌸

மூககவி அம்பாளை ‘உமா’ என்றழைத்து, ஸந்த்யாக்கால கிரணங்களுக்கு நிகரான சோபை உள்ளவளாக வர்ணிக்கிறார்.

அம்பாளை ‘உமா’, ‘ஹைமவதி’ என்ற பெயர்களில் கேநோபநிஷத்தில் சொல்லி, அவள் மஹா காந்தியோடு விளங்குகிற ‘பஹுசோபமானா’ – ‘மிகவும் சோபை பொருந்தியவள்’ என்று வர்ணனையும் பண்ணுகிறது.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் பாஷ்யத்தில் ‘பஹுசோபமானா’ என்பதற்கு அர்த்தம் செய்கிறபோது, ‘சோபை உள்ளவற்றுக்கெல்லாம் மேலான உத்கிருஷ்டமான சோபை ஞானம்தான் – வித்யைதான். அந்த வித்யா ரூபிணியே உமா. ஹைமவதியாகி ஹேம (பொன்) ஆபரணங்களை அணிந்தும், இந்தச் சோபையை வெளிப்படக் காட்டுகிறாள். எல்லாவற்றையும் அறிகிற அறிவான ஸர்வக்ஞ தத்துவமே பரமேசுவரன். அந்த அறிவோடு இரண்டறச் சேர்ந்திருக்கிற ஞான ஸ்வரூபிணியே அவள்’ என்கிறார்.

ஸமபுத்தியுள்ளவர்களால் உபாஸிக்கப்படுபவள் என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிற மூககவி, அந்த ஸமபுத்தியும் காமாக்ஷி கடாக்ஷத்தால் கிடைக்கும் என்று ‘சிவசிவ பச்யந்தி ஸமம்’ ஸ்லோகத்தில் சொல்கிறார். காமாக்ஷியின் கடாக்ஷத்தால் ஸ்வாமிகளும் ஸமபுத்தியோடு இருந்திருக்கிறார். 🙏🙏🙏🙏

ஸ்வாமிகளுடைய ஸமபுத்தி, ஸீதாதேவியின் பக்தி, மஹா பெரியவா எடுத்துக்காட்டிய ஆர்யா சதகத்தின் சிறப்பு மிக அருமை 👌🙏🌸

நீ வேறு நான் வேரனாதிருக்க என்றால் என்ன ஜீவாத்மா வும், பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைதம் தானே? அப்படி வாழ்ந்து காட்டியவர்கள் பெரியவாளை, சுவாமிகளும் சிவன் சார் இவர்கள் போன்ற ஞானிகள்!
ஆஞ்சநேய் ஸ்வாமிகள் அத்வைதம் என்பதன் எடுத்துக்.காட்டு ,! தன் நெஞ்சில் ஸ்ரீ ராமரை சுமந்திருந்தவர் !! யத்ர யத்ர ராகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர கிருதமஸ்த காஞ்சலிம் என ராமர் நினைவுடன் கலந்த சிவா ஸ்வரூபம்!
என் மனதில் தோன்றும் அத்வைதம் இதுவே
ஹரே ஸ்ரீ ராம், ஆஞ்சநேய சுவாமிக்கு ஜெய்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.