ஆர்யா சதகம் 29வது ஸ்லோகம் பொருளுரை – ஆனந்த அமுதக்கடல்
स्मयमानमुखं काञ्चीमयमानं कमपि देवताभेदम् ।
दयमानं वीक्ष्य मुहुर्वयमानन्दामृताम्बुधौ मग्नाः ॥
ஸ்மயமானமுக²ம் காஞ்சீமயமானம் கமபி தே³வதாபே⁴த³ம் ।
த³யமானம் வீக்ஷ்ய முஹு: வயமானந்தா³ம்ருʼதாம்பு³பதௌ⁴ மக்³னா: ॥
இது ஆர்யா சதகத்தில் 29வது ஸ்லோகம்.
‘ஸ்மயமாந முகம்’ – மந்தஸ்மிதத்துடன் கூடிய முகம். ‘காஞ்சீமயமாநம்’ – காஞ்சீ தேசத்தை வந்தடைந்த (காஞ்சீ தேசத்தில் இருந்து கொண்டு அநுக்ரஹம் பண்ணும்) , “கமபிதேவதா பேதம் தயமானம்” – தயவே வடிவான / பரிவோடு கூடிய , ‘கமபி’ – வார்த்தைகளால் எப்படி என்று வர்ணிக்க முடியாதது, அநிர்வசனீயம் அப்படீன்னு சொல்லுவா. ‘தேவதா பேதம்’ – ஒரு தெய்வம். அதோட பெருமையை நான் சொல்லி முடியாது, அப்பேற்ப்பட்ட தெய்வம் அப்படீன்னு சொல்றார். அந்த காமாக்ஷி தேவியை “வீக்ஷ்ய” – பார்த்து , “முஹு:” – மீண்டும் மீண்டும் , “வயம்” – நாங்கள் , “ஆனந்த அமிர்த அம்புதௌ” ‘அம்புதி ’ன்னா கடல், ‘அமிர்த அம்புதி’ அப்படின்னா அமிர்தக் கடல், ஆனந்த அமிர்த அம்புதௌ – ஆனந்த அமிர்த கடலில், ‘மக்நாஹா’ – மூழ்கியிருக்கிறோம் அப்படிங்கறார்.
என்ன ஒரு அனுபவம்!! இந்த மாதிரி மஹான்கள் தங்களுடய அனுபவத்தை இவ்வளவு அழகான கவிதையாக்கி நமக்கு குடுக்கலேன்னா நம்மால இப்படி ஒன்று இருக்குன்னு கூட நினைச்சு பார்க்க முடியாது. அதான் மஹான்களுடைய கருணை. இந்த ஸ்லோகம் எனக்கு முக்கியமா மஹாபெரியவா மேல அப்படின்னு தோணும். ஏன்னா, “கமபி தேவதா பேதம்” ஒரு தெய்வம் தயவே வடிவானது, காஞ்சீ தேசத்தை வந்தடைந்தது. மஹாபெரியவா எவ்வளவு பாதயாத்திரை பண்ணினாலும் கடைசியில புது பெரியவாளும் எல்லாரும் பிரார்த்தனை பண்ணினதுக்காக காஞ்சீபுரத்தில் வந்து, அங்க அதிஷ்டானமா இருந்து, நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணின்டிருக்கா. “ஸ்மயமான முகம்” பெரியவாளுடைய அந்த மந்தஸ்மிதத்தை ஞானப் பூங்கொத்து அப்படின்னு சொல்லணும். அந்த மந்தஸ்மிதத்தையும், அன்பையும்
‘அன்னை காமாக்ஷி போலே அன்பே வடிவாய் வந்தார் !
அமுதூறும் எளிய சொல்லால் அருமறை எல்லாம் தந்தார் ! ’
அப்படீன்னு பெரியசாமித் தூரனுடைய “புண்ணியம் ஒரு கோடி” ங்கற பாட்டுல பாடியிருப்பார்.
அப்படி பெரியவாளுடைய கருணையும், பரிவும், அந்த அம்மா போல அன்பும் அதை நெனச்சு நெனச்சு ஆனந்த படறது அப்படிங்கறது ஒரு பாக்யம். அது அவருடைய அனுக்ரஹத்தினால்தான் அந்த மாதிரி நாம் அவரை அனுபவிக்க முடியும், ‘மூக பஞ்சஷதீ’ பாராயணம் அதுக்கு ஒரு வழி.
ராமாயணத்துல ஒரு தியான ஸ்லோகத்துல கூட
यः पिबन् सततं रामचरितामृतसागरम् | अतृप्तस्तं मुनिं वन्दे पाचेतसमकल्मषम् ||
“ய: ராம சரித்த அமிர்த சாகரம்” ராம சரிதம் என்ற அமிர்த கடலை ““சததம் பிபன்னு” திரும்ப திரும்ப குடிக்கறார் அவர். ஆனாலும், “அத்ருப்தஹ” – போறும்னே தோணலயாம் அவருக்கு. யார் அவர்னா? “தம் முனீம் வந்தே” அந்த “பிராச்சேதசம கல்மஷம்” குற்றமற்ற அந்த வால்மீகி முனிவரை வணங்குகிறேன் அப்படீன்னு ஒரு வால்மீகி முனிவர் மேல ஒரு தியான ஸ்லோகம்.
இன்னொரு ஸ்லோகம் இருக்கு.
सीताराम गुणग्राम पुण्यारण्य विहारिणौ !
वन्दे विशुद्धविज्ञानौ कवीश्र्वर कपीश्वरौ !!
சீதா ராம குணக்ராம புண்யாரண்ய விஹாரிநௌ |
வந்தே விஷுத்த விஞ்ஞானௌ கவீஷ்வர கபீஷ்வரௌ ||
சீதா ராமர்களுடய குணம் என்ற “புண்யாரண்ய விஹாரிநௌ” புண்ணியமான வனத்தில் எப்போதும் விஹாரம் பண்ணும்(விளையாடி கொண்டிருக்கும்) , “கவீஷ்வர கபீஷ்வரௌ” கவீஷ்வரஹன்னா வால்மீகி, கபீஷ்வரஹன்னா ஹனுமான். அந்த இரண்டு பேரும் ‘விஷுத்த விஞ்ஞானௌ’. அந்த மாதிரி ராமர் கதையும் சீதா தேவியுடைய புண்ணிய சரித்திரத்தையும் திரும்ப திரும்ப பேசிண்டும் கேட்டுண்டும் இருக்கறத்துனால அவாளுடைய புத்தி அவ்வளவு சுத்தம் ஆயுடுத்து. “வந்தே விஷுத்த விஞ்ஞானௌ கவீஷ்வர கபீஷ்வரௌ” அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம். ஒரு தடவை ஸ்வாமிகள் பிரவச்சனம் பண்ணிண்டு இருக்கும்போது கடைசி நாள் யுத்த காண்டம் சொல்லி பூர்த்தி பண்ணப் போறார். அதுல யுத்த காண்டத்துல கடைசியில ராமர் சீதா தேவியை மடியில் வெச்சுண்டு புஷ்பக விமானத்துல லங்கையிலிருந்து திரும்ப வரும்போது, நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் சீதைக்கு ரிவர்ஸ்ல சொல்வார். அப்பறம் அவா வந்து பரத்வாஜருடைய ஆஸ்ரமத்துல இறங்குவா. பரத்வாஜர் ராமரைப் பார்த்த உடனே “ராமா! வா. நீ ஒரு நாள் இங்க தங்கி என்னுடைய விருந்தை ஏத்துண்டு போ” அப்படீன்னு சொல்லிட்டு ‘உனக்கு நடந்ததை எல்லாம் நான் என்னோட ஞான திருஷ்டியினால பார்த்தேன்’ அப்படின்னு அவர் ஒரு தரம் ராமாயணம் முழுக்க சொல்வார். அதுக்கப்பறம் ராமர் ஹநுமார்கிட்ட “ நீ போய் பரதனைப் பார்த்து நான் நாளைக்கு வரேன்னு சொல்லு” என்று சொல்றார். ஹனுமான் வந்து அந்த நல்ல செய்தியை சொன்னவுடனே பரதன் மூர்ச்சை போட்டு விழுந்துடுவான். அப்பறம் எழுந்து பேசிண்டு இருக்கும்போது ‘என்னெல்லாம் நடந்தது சொல்லு’ன்னு சொன்னவுடனே ஹநுமார்,” நீ சித்ரகூடத்துக்கு வந்த…” அப்படீன்னு ஆரம்பிச்சு எல்லாத்தையும் திரும்ப சொல்லுவார். இப்படி ராமயணத்துக்குள்ள ராமாயணம் திரும்பித் திரும்பி வந்துண்டேருக்கும். இதை ஸ்வாமிகள் திரும்பத் திரும்ப சொல்லி சந்தோஷப் பட்டுண்டிருந்தாராம். அப்ப கார்ப்பங்காடு ஸ்வாமிகள்னு ஒருத்தர் இருக்கார். அவர் அன்னிக்கு கதை கேட்டுண்டு இருந்தாராம், ஸ்மார்த்தாளுக்கு இவ்வளவு தூரம் ராமாயாணத்தை அனுபவிக்க தெரியும்னு இன்னிக்கு தெரிஞ்சுண்டேன் அப்படின்னாராம். வைஷ்ணவா ரொம்ப ராமாயணத்தை அனுபவிப்பா. அதனால அந்த மாதிரி ஒருத்தர் இருக்கார்னு சந்தோஷப் பட்டு ஸ்வாமிகளை கொண்டாடிட்டு போனார்.
“ஆனந்த அமிர்த அம்புதௌ முஹு: மக்நாஹா” திரும்பத் திரும்ப பாராயணம் பண்ணி அதுல ஒரு ஆனந்தத்தை அனுபவிக்கறதுங்கறது பழக்கத்துலதான் வரும். குருதான் அதற்கு அனுக்ரஹம் பண்ணனும். இன்னொரு விஷயம் என்னன்னா,உ விஷயங்களிலேயே பலது நம்ம திரும்பத் திரும்ப பண்ணி ஒரு ருசி வளர்த்துக்கறோம் அப்புறம் அதற்கு அடிமையாப் போயிடறோம். ஆனா பெரியவா தியானம், காமாக்ஷி ஸ்தோத்ர பாராயணங்கறது அமிர்தம். நம்மள இந்த பந்தத்திலிருந்து விடுவிக்கும்.
இன்னும் ஒண்ணு. இந்த பாராயணங்கள் மெதுவா பண்ணறதுங்கறது ஸ்வாமிகள் சொல்லி குடுத்தார். விஷ்ணு சகஸ்ரநாமம் அவர்கிட்ட படிக்கும்போது எனக்கு கொஞ்சம் சைநஸ் (sinus) ப்ராப்ளம் எல்லாம் இருந்தது. கொஞ்சம் மூச்சு வாங்கும். அதனால அவர் ஒவ்வொரு நாமாவளியா பிரிச்சு எழுதி அதைப் படி அப்படீன்னார்.
“விஸ்த்தாரஹ ஸ்தாவரஹ ஸ்தானுஹு பிரமாணம் பீஜம் அவ்யையம்/ அர்த்த:, அனர்த்த: மஹாகோச: மஹாபோக: மஹாதனஹ”
இப்படித்தான் நான் பாராயணம் பண்ணுவேன். இது கேக்கறவாளுக்கு வித்யாசமா இருக்கும். நான் நினைச்சு பார்த்துப்பேன். ஸ்வாமிகள் எல்லோரோடையும் நாங்க மிக்ஸ் ஆக வேண்டாம் தனியா உட்காந்து பாராயணம் பண்ணணுங்கறதுக்காக, பரசுராமர் எப்படி சோழ தேசத்திலிருந்து கூட்டிண்டு போன பிராமணாளை அவாளுடைய பழக்கங்களை மாத்திவிட்டாரோ அந்த மாதிரி இந்த சகஸ்ரநாம பாராயணங்கள் எல்லாம் ரொம்ப வித்தியாசமா பண்றதுக்கு சொல்லிக் குடுத்தார் அப்படீன்னு நான் விளையாட்டா நினைச்சுப்பேன். ஆனா இந்த மாதிரி மெதுவா பண்ணி இதை சுவைக்க கத்துண்டுட்டேன்னா விறு விறுன்னு பாராயணம் பண்றது நமக்கு வராது. ஒரு ரொம்ப பிடிச்ச ஸ்வீட்டா இருந்தா மட மடன்னா சாப்பிடுவோம்? அதை நிதானமாதானே சாப்பிடுவோம்?
உலக விஷயங்கள்லேயே முதல்ல இருக்கற பரபரப்பு எந்த அனுபவத்துலயும் கொஞ்சம் குறைஞ்சுடும். ஆனா அதுல இருக்கற சந்தோஷம் ஜாஸ்தியா இருக்கும். லக்கியா இருந்தா. ஒரு கல்யாணத்துல ஆரம்பத்துல இருக்கறது வேற. ஒரு இரண்டு குழந்தைகள் பிறந்தபின்ன இருக்கற சந்தோஷம் வேற. அந்த மாதிரி நம்போ மஹாபெரியவாளை சேர்ந்தவன் அப்படீங்கற தீர்மானம் பாராயணம் பண்ணி பண்ணி ஜாஸ்தியாயிடுத்துன்னா அப்புறம் எங்கயும் ஓடி போபோறதில்லை. பெரியவா நாம கூப்பிட்ட போது வருவா, பாராயணம் பண்ணினா அங்க பெரிவா இருக்கா அப்படீன்னு சொல்லி நிதானமா பண்ணினா நம்மளுடைய சந்தோஷமும் ஜாஸ்தியா இருக்கும். அதுக்கு கிடைக்கிற அனுக்ரஹமும் ஜாஸ்தியா இருக்கும்.
“ஸ்மயமன முகம் காஞ்சிமயமானம் கமபி தேவதாபேதம் | தயமானம் வீக்ஷ்ய முஹு: வயம் ஆனந்தாம்ருதாம்புதௌ மக்நாஹா” ||
மூக பஞ்சஷதியை திரும்பி திரும்பி படிச்சு மஹாபெரிவாளுடைய மந்தஸ்மிதம், அவரோடைய கருணை அதை நினைச்சு நம்ம அந்த ஆனந்த அமிர்த கடலில் மீண்டும் மீண்டும் மூழ்குவோம்,
நம பார்வதி பதயே | ஹர ஹர மகாதேவா ||