சிவானந்தலஹரி 50வது ஸ்லோகத்துல ‘ஸந்த்4யாரம்ப4விஜ்ருʼம்பி4தம்’ அப்படீன்னு ஸந்த்யா காலத்தில் மலர்ந்து இருக்கும் மல்லிகையைப் போல, ஸந்த்யா காலத்தில் நடனம் பண்ணும் மல்லிகார்ஜுன ஸ்வாமியை பார்த்து மல்லிகையாவே பேசினார் . ப்ரமராம்பா ஸமேத மல்லிகார்ஜுன ஸ்வாமினு அந்த மல்லிகார்ஜுன ஸ்வாமியை வண்டாக அம்பாள் சுத்திண்டு இருக்கா, அணைச்சுண்டு இருக்கா அப்படீன்னு சொன்னபின்ன, அவருக்கு அம்பாள் வண்டான பின்ன ஸ்வாமியும் வண்டாதான் இருக்கணும்னு அப்படீன்னு தோணியிருக்கு போல இருக்கு. அடுத்த ஸ்லோகத்தல ஸ்வாமியையே ஒரு வண்டாக ரொம்ப அழகாக வர்ணிக்கிறார்.
भृङ्गीच्छानटनोत्कटः करिमदग्राही स्फुरन्माधवाह्लाद: नादयुत: महासितवपुः पञ्चेषुणा चादृतः ।
सत्पक्षः सुमनोवनेषु स पुनः साक्षान्मदीये मनोराजीवे भ्रमराधिपो विहरतां श्रीशैलवासी विभु: ॥ ५१ ॥
ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட: கரிமத³க்³ராஹீ ஸ்பு²ரன்மாத4வா-
ஹ்லாத³: நாத³யுத: மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்³ருʼத: ।
ஸத்பக்ஷ: ஸுமனோவநேஷு ஸ புன: ஸாக்ஷாந்மதீ³யே மநோ-
ராஜீவே ப்4ரமராதி4போ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு4: ॥ 51 ॥
இது சிவானந்தலஹரில 51வது ஸ்லோகம். ஸம்ஸ்ருத கவிதையோட ஒரு உச்சமா இருக்கு. வார்த்தைகளை வச்சு விளையாடி “ஶ்ரீசைலவாஸியான மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கும் வண்டுக்கும்” ஸ்லேஷை பண்றார். ஒருவிதத்தில பார்த்தால் எல்லா பதங்களும் வண்டை குறிக்கிறது. இன்னொரு விதத்தில ஸ்வாமியை குறிக்கிறது.
“ப்ருʼங்கீ³ச்சா² நடனோத்கட:” – முதல்ல வண்டுக்கு சொல்றேன். ‘ப்4ருʼங்கீ³’ அப்படீன்னா பெண் வண்டு. பெண் வண்டு ஆசைப்பட்டதுக்காக ஆசையோடு தான் நடிப்புதும். அதாவது மிருகங்கள்ல பெண் மிருகத்தை attract பண்றதுக்காக ஆண் மிருகங்கள் dance எல்லாம் ஆடும். அந்த மாதிரி, இந்த பெண் வண்டுக்கு அதோட விருப்பத்திற்காக தான் ஆடுவதும்.
” கரிமத³க்³ராஹீ” – ‘கரி’னா யானை. யானையோட மத ஜலத்தைக் குடிப்பதும்.
“ஸ்பு²ரன்மாத4வாஹ்லாத³:”- வஸந்த ருது வந்தவுடனே, அது ரொம்ப நன்றாக ப்ரகாசிக்கும் போது தான் ரொம்ப சந்தோஷம் அடைவதும். வண்டுகளுக்கு வஸந்த ருது வந்தா, எல்லா பூக்களுமே பூத்துக் குலுங்கும். வண்டுகளுக்கு ரொம்ப சந்தோஷம்.
“நாத³யுத:”- வண்டுகள் எப்பவும் ரீங்காரம் பண்ணிண்டே இருக்கும். ஈ…ஈ…னு.
“மஹாஸிதவபு:”- நல்ல கருப்பான உடலை உடையதும் .
“பஞ்சேஷுணா ச ஆத்³ருʼத:” – ‘பஞ்சேஷு’ன்னா 5 அம்புகள். ஐந்து அம்புகள் கொண்டவன் மன்மதன்.மன்மதனடைய அந்த வில்லினுடைய நாண் கயறே வண்டுகளா ஆனது அப்படீன்னு ஒரு ஐதீகம் இருக்கு. அதனால மன்மதனால் ஆதரிக்கப்பட்டதும்,
”ஸுமனோவநேஷு” – நல்ல பூக்கள் பூத்துக்குலுங்கும் காடுகளில்,
”ஸத்பக்ஷ” – ரொம்ப ஆசைக்கொண்டதும்,
”ஶ்ரீஶைலவாஸீ” – ’ஶ்ரீஶைல வாஸீ’னா,ஶ்ரீஶைல வாயில் வசிப்பதும்னு சொல்லாம். ‘ஶ்ரீ’னா திரு, மிகுந்த. அழகான மலைகளில் வண்டுகள் நிறைய காணப்படும் இல்லையா. வஸிப்பதும்.
“விபு4:” – எங்கும் செல்லக்கூடியதும்.
”ஸ: ப்4ரமராதி4ப:” – அந்த ஆண் வண்டு,
“புன: ஸாக்ஷாத் மதீ³யே மநோராஜீவே” – என்னுடைய மனமாகிய தாமரையில்,
“விஹரதாம்” – விளையாடட்டும்.
அப்படீனு ஒரு வண்டு யானையோட மத நீரை குடித்துவிட்டு, தாமரை பூவை சுத்தி வந்து ரீங்காரம் பண்ணிண்டு, பெண் வண்டை சந்தோஷப்படுத்தற காட்சியை அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்துடறார்.
இதையே ஸ்வாமிக்கு சொல்லும்போது ,
“ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட:” – ப்ருங்கி முனிவரின் விருப்பத்திற்கேற்ப நடனம் புரிபவரும். இன்னைக்கு மஹா ப்ரதோஷ வேளை! ஸ்வாமியோட நடராஜா தரிசனம்தான் ரொம்ப விசேஷம்! இந்த ஸ்லோகத்துல நாம் அதை பாத்துட்டோம். ப்ருங்கி முனிவர் ஆசைப்பட்டதுக்காக நடனம் செய்தவரும்,
“கரிமத³க்³ராஹீ” – அந்த கஜாஸுரனுடைய கொழுப்பை அடக்கினவரும். தோலாக போர்த்திண்டாறே யானையை கிழிச்சு.
“ஸ்பு²ரன்மாத4வாஹ்லாத³:” – ‘மாத4வ:’ விஷ்ணு பகவான், மோஹினி வேஷம் போட்டுண்டு வந்த போது, அதைப்பார்த்து ரொம்ப சந்தோஷம் அடைந்தவரும்.
” நாத³யுத:” – பகவான் பரமேஸ்வரனோட மூச்சுக்காத்துதான் ப்ரணவம். அந்த நாதத்தை கொண்டவரும்.
”மஹாஸிதவபு:” – இங்க அவஸர்கம் சேர்த்து, வெண்மையான திரு உருவம் கொண்டவர் அப்படீன்னு வச்சுக்கணும். எப்பவும் விபூதி பூசிண்டு வெள்ள வெளேர்னு இருக்கார்.
“பஞ்சேஷுணா ச ஆத்³ருத:” – மன்மதன் தன்னுடைய புஷ்ப பாணங்களுக்கு எவரை இலக்காக கொண்டானோ அந்த பரமேஸ்வரன்.
“ஸுமனோவநேஷு” – இங்க அவஸர்கம் போட்டு, தேவர்களை காப்பதில்,
“ஸத்பக்ஷ:” – விருப்பம் உடையவரும். இந்த மஹா ப்ரதோஷமே நம்ப ஸ்வாமி ஹாலஹால விஷத்தை உண்டு தேவர்களை காத்ததை கொண்டாடறோம். அதுக்காகதானே நன்றி பாராட்டி அவரை நமஸ்காரம் பண்றோம். அப்படி அவரைப் போற்றினா, நம்முடைய எல்லா ஆபத்துலேந்தும் என்றும் காப்பாத்தறார்.
“ஶ்ரீஶைலவாஸீ” – இது ஶ்ரீசைலமென்ற மலையில் வசிக்கும் மல்லிகார்ஜுன ஸ்வாமி.
“விபு4:” – பரமேஸ்வரனுக்கு ‘விபு:’ என்பது எங்கும் நிறைந்தவர் அப்டீன்னு அர்த்தம்.
” ப்4ரமராதி4ப:” – ப்ரமராம்பாவுடைய பதியான பரமேஸ்வரன்.
”புந:” – அடிக்கடி, ”ஸாக்ஷாத்” – எனக்கெதிரில், “மதீ³யே மநோராஜீவே” – என்னுடைய மனத்தாமரையில்,
“விஹரதாம்” – லீலை புரியட்டும். அப்படீன்னு அந்த வார்த்தைகளைக் கொண்டு, பரமேஸ்வரனுக்கும் அது பொருந்துற மாதிரியும், ஒரு வண்டுக்கும் அது பொருந்துற மாதிரியும் எவ்வளவு அழகான ஒரு ஸ்தோத்திரம் பண்ணியிருக்கார்.
மூக பஞ்சசதிலயும் நிறைய ஸ்லோகங்கள் அம்பாளேட கடாக்ஷத்தை வண்டுன்னு வரும். எப்பவும் அம்பாள் பரமேச்வரனையே பார்த்துண்டு இருக்கார்ங்கறதுனால. பரமேச்வரனுடைய உடம்பு என்கிற தாமரைக் காட்டில் வண்டு ரீங்காரம் பண்ணிண்டு எப்பவுமே சுத்திண்டு இருக்கு அப்படினு நிறைய வண்டு சம்பந்தப்படுத்தி ஸ்லோகங்கள் இருக்கு.
அதுல ஒரு ஸ்லோகம்,
अम्ब स्मरप्रतिभटस्य वपुर्मनोज्ञम्
अम्भोजकाननमिवाञ्चितकण्टकाभम् ।
भृङ्गीव चुम्बति सदैव सपक्षपाता
कामाक्षि कोमलरुचिस्त्वदपाङ्गमाला ॥22॥
அம்ப3 ஸ்மரப்ரதிப4டஸ்ய வபுர்மனோஜ்ஞம்
அம்போ4ஜகானனமிவாஞ்சிதகண்டகாப4ம் |
ப்4ரு’ங்கீ3வ சும்ப3தி ஸதை3வ ஸபக்ஷபாதா
காமாக்ஷி கோமலருசிஸ்த்வத3பாங்க3மாலா ||22||
“அம்ப காமாக்ஷி கோமலருசி:” – கண்ணுக்கு இனிமையான காந்தியோடு கூடியதான
“த்வத் அபாங்க3மாலா” – உங்களுடைய கடாஷங்களோட வரிசையானது,
” ஸ்மரப்ரதிப4டஸ்ய” – ‘ஸ்மர:’னா மன்மதன். மன்மதனோட யுத்தம் செய்யும் பரமேச்வரனுடைய,
“மனோஜ்ஞம் வபு:” – ரொம்ப மனசுக்கு சந்தோஷம் கொடுக்க கூடிய அவருடைய அந்த “வபு:” மார்புனு வச்சுகலாம். அவருடைய உடம்பு, ரூபம் என்ற
“அம்போ4ஜகானனம்” – அது ஒரு தாமரைக் காடு மாதிரி இருக்காம்.
“கண்டகாப4ம்” – ஸ்வாமிக்கு அம்பாள் பார்க்கறதுனால மயிர் கூச்சல் எடுக்கறது. அந்த மயிர்கூச்சலோடு கூடிய ஒரு தாமரைக் காடு போல விளங்கும் ஸ்வாமியோட மார்பில் உன்னுடைய கடாக்ஷம்,
“ப்4ரு’ங்கீ3வ” – வண்டு போல,
“ஸதை3வ ஸபக்ஷபாதா” – எப்போதும் ரொம்ப ஆசையோடு,
“சும்ப3தி” – முத்தம் கொடுக்கறது. அதாவது காமாக்ஷியோட கடாக்ஷம் எப்பவும் ஸ்வாமியை பார்த்துண்டு இருக்குங்கறத ‘கடாக்ஷத்தை ஒரு வண்டாகவும், ஸ்வாமியோட உடம்பை ஒரு தாமரைக் காடாகவும், வண்டு தாமரைக் காட்டுல ப்ரியமா போய் உக்காந்துக்கற மாதிரி, இந்த கடாக்ஷம் போய் ஸ்வாமியோட மேல உட்கார்ந்து இருக்கு. அதனால சந்தோஷத்துல ஸ்வாமிக்கு மயிர் கூச்சல் ஏற்படறது!; அப்படின்னு ஒரு அழகான கவிதை.
இன்னைக்கு இந்த வண்டுக்கும், ஸ்வாமிக்கும் ஸ்லேஷையான ஒரு அழகான ஸ்லோகத்தைப் பார்த்தோம்.
ப்4ருʼங்கீ³ச்சா²நடனோத்கட: கரிமத³க்³ராஹீ ஸ்பு²ரன்மாத4வா-
ஹ்லாத³: நாத³யுத: மஹாஸிதவபு: பஞ்சேஷுணா சாத்³ருʼத: ।
ஸத்பக்ஷ: ஸுமனோவநேஷு ஸ புன: ஸாக்ஷாந்மதீ³யே மநோ-
ராஜீவே ப்4ரமராதி4போ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு4: ॥ 51 ॥
‘ஸ்ரீஶைலம்’கறது ஒரு மலை. அங்கு நிறைய வண்டுகள் இருக்கும். அதை பார்த்தவுடனே ஆசார்யாளுக்கு இப்படி ஒரு அழகான கற்பனை. அந்த ஸ்ரீஶைல மவ்லிகார்ஜுன ஸ்வாமியை நாமும் வேண்டிப்போம்.
நம: பார்வதி பதயே.. ஹர ஹர மஹாதேவ..
2 replies on “சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை”
மிக அழகான ஸ்லோகம் அற்புதமான விளக்கம். அம்பாளுடைய கடாக்ஷத்தை வர்ணிக்கும் மூக பஞ்ச சதி மேற்கோள் மிக அருமை 👌🙏🌸
போன ஸ்லோகத்தில் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஸ்தோத்தரித்து, ஸ்வாமியை மல்லிகையாகவும் அம்பாளை வண்டாகவும் வர்ணித்திருந்தார். இந்த ஸ்லோகத்தில் ஸ்வாமியையே வண்டாக சிலேடை செய்திருக்கிறார்.
ஆச்சார்யாள் பல ஸ்லோகத்தில் நிலவுக்கும், சிங்கத்துக்கும், மல்லிகைக்கும், வண்டுக்கும், மேகத்துக்கும் என்று ஏகப்பட்ட சிலேடைகள் செய்திருக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் போதும் நினைக்கும் போதும் நமக்கு ஆச்சார்யாள் ச்லோகமும், சிவ ஸ்மரணமும், அந்த சிவனிலேயே நம் மனமும் லயித்துவிடும். பக்தி ஸ்தோத்திரங்களாகவே பண்ணியிருந்தாலும், எல்லாவற்றிலும் அந்த பரமாத்மாவையே பார்க்கும்படியாக அத்வைதம் கிட்டே கொண்டு வருகிறார் என்று தோன்றுகிறது.🙏🌸
எங்கும் நிறைந்த பிரமராம்பாவின் பதியான சிவன் ‘சாக்ஷாத் மதியே மனோ ராஜீவே விஹரதாம்’ – என்னெதிரில் என் மனமாகிய தாமரையில் விளையாடட்டும் என்கிறார். சிவபெருமானை வண்டாக சொல்வதால், அது வசிக்கும் தாமரையை நம் மனதாக உவமிக்கிறார்.
ஆசார்யாளின் வண்டு ஸ்தோத்திரம் நினைவுக்கு வருகிறது. மஹாபெரியவா இதற்கு விளக்கம் சொல்லும் போது, “‘ஷட்பதீ’ என்றால் ‘ஆறுகால் உடைய வண்டு’ என்று அர்த்தம் சொல்லி, இதில் ஆறு ச்லோகம் இருப்பதாலும், வண்டு ஸம்பந்தம் இருப்பதாலும்தான் ஆசார்யாள் ச்லேஷையாக ‘ஷட்பதீ ஸ்தோத்ரம்’ என்று பெயர் வைத்தார். மனஸை அதன் ஐந்து அங்கங்களான பஞ்சேந்தரியங்களும் கொண்ட ஆறுகால் வஸ்துவாகச் சொல்வதுண்டு. முடிக்கும்போது, ‘இதி ஷட்பதி மதீயே வதந ஸரோஜே’ – ‘மனமாகிய வண்டு என்னுடைய வாயான தாமரையில் வசிக்கட்டும்’ என்றும் ‘ஆறு ச்லோகம், அதோடு ஏழாவது ச்லோகத்தின் ஆறு வார்த்தைகள் (நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ)– ஸதா என் வாக்கில் இருக்கட்டும்’ என்று பொருள்படும் படியாக முடிக்கிறார்.” என்கிறார். 🙏🌸
ப்ருங்கி என்ற பிரியமான பக்தனுக்காக நர்த்தனம் செய்பவரும், ( பெண் வண்டின் விருப்பத்துக்கு ஆடுபவரும்); கஜாசுரநின் கொட்டத்தை அடக்கியவரும், ( யானையின் மத ஜலத்தை கிரகிக்கும் திறமை உடையவரும், ) மோகினி அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணுவின் ஏற்பட்ட ஆனந்தத்தால் பரகாசிப்பவரும், வல ரூபமாக பிரண வத்தால் பிரதிபாதனம் செய்யப்படுகிறவரும்,. தேவர்களை ரக்ஷை செய்பவரும், (பூந்தட்ட நகளில் விருப்பம் உள்ளவரும்) பிரபுவான ஸ்ரீ சைலத்தில் வசிக்கும் பரமேஸ்வரன், பிரமராம்பிகைக்கு அதயந்தமானவர் ( வண்டுகளின் தலைவர்) என் மனதாகிற தாமரையில்.விகசித்துக் கொண்டு இருக்கட்டும் என்று இரு பொருள் பட ஸ்லேடையாக வர்ணிக்கிறார்!!
அரிய வர்ணனை!! ஆசார்யாள் ஸ்லோடையாக வர்நித்திருப்பது பல இரங்களில்.பார்க்கிறோம்மூக பஞ்ச சதியில் அம்பாளின் கடாக்ஷம் ஒளிவடிவாய் பரமசிவனின் திருமேனியில் அமர்ந்திருந்து திருமேனியை மேலும் காந்தி உடையதாக ச்செய்கிறது என்ற பொருள்பட ஒரு ஸ்லோகம் . இது போல் பல ஸ்லோகங்கள் பார்க்கிறோம் சிவன் அம்பாள் பிரேமை வித விதமாய் வர்ணிக்கப்படுகிறது சௌந்தர்ய.லஹரி, மூக பஞ்ச
சதி இன்ன பிற ஸ்லோகங்கள் வர்ணிக்கின்றன ! அழகான, தெளிவான விளக்கம் அளித்த கணபதிக்கு என் நன்றி !
ஜய சங்கரா..
ஜய ஜய ஜகதம்ப சிவே…