Categories
Stothra Parayanam Audio

திருப்புகழ் பாடல்கள் ஒலிப்பதிவு – 1

பாடலைக் கேட்க பாடலின் தலைப்பில் உள்ள இணைப்பில் சொடுக்கவும்.

  1. கைத்தல நிறைகனி 

    கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
    கப்பிய கரிமுக …… னடிபேணிக்

    கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
    கற்பக மெனவினை …… கடிதேகும்

    மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
    மற்பொரு திரள்புய …… மதயானை

    மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
    மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே

    முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய …… முதல்வோனே

    முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
    அச்சது பொடிசெய்த …… அதிதீரா

    அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
    அப்புன மதனிடை …… இபமாகி

    அக்குற மகளுட னச்சிறு முருகனை
    அக்கண மணமருள் …… பெருமாளே.

  2. காரணம தாக வந்து

    காரணம தாக வந்து …… புவிமீதே
    காலனணு காதி சைந்து …… கதிகாண
    நாரணனும் வேதன் முன்பு …… தெரியாத
    ஞானநட மேபு ரிந்து …… வருவாயே

    ஆரமுத மான தந்தி …… மணவாளா
    ஆறுமுக மாறி ரண்டு …… விழியோனே
    சூரர்கிளை மாள வென்ற …… கதிர்வேலா
    சோலைமலை மேவி நின்ற …… பெருமாளே.

  3. வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்

    வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
    மாயமதொ ழிந்து …… தெளியேனே

    மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
    மாபதம ணிந்து …… பணியேனே

    ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
    ஆறுமுக மென்று …… தெரியேனே

    ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
    தாடுமயி லென்ப …… தறியேனே

    நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
    நானிலம லைந்து …… திரிவேனே

    நாகமணி கின்ற நாதநிலை கண்டு
    நாடியதில் நின்று …… தொழுகேனே

    சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
    சோகமது தந்து …… எனையாள்வாய்

    சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
    சோலைமலை நின்ற …… பெருமாளே.

  4. காலனிடத்தணுகாதே

    காலனிடத் …… தணுகாதே
    காசினியிற் …… பிறவாதே

    சீலஅகத் …… தியஞான
    தேனமுதைத் …… தருவாயே

    மாலயனுக் …… கரியானே
    மாதவரைப் …… பிரியானே

    நாலுமறைப் …… பொருளானே
    நாககிரிப் …… பெருமாளே.

  5. நாசர்தங் கடையதனில் விரவிநான்

    நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து …… தடுமாறி
    ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி …… மெலியாதே

    மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து …… சுகமேவி
    மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று …… பணிவேனோ

    வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற …… குருநாதா
    வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு …… மணவாளா

    கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து …… புடைசூழுங்
    கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த …… பெருமாளே.

  6. இருமலு ரோக முயலகன் வாத

    இருமலு ரோக முயலகன் வாத
    மெரிகுண நாசி …… விடமேநீ

    ரிழிவுவி டாத தலைவலி சோகை
    யெழுகள மாலை …… யிவையோடே

    பெருவயி றீளை யெரிகுலை சூலை
    பெருவலி வேறு …… முளநோய்கள்

    பிறவிகள் தோறு மெனைநலி யாத
    படியுன தாள்கள் …… அருள்வாயே

    வருமொரு கோடி யசுரர்ப தாதி
    மடியஅ நேக …… இசைபாடி

    வருமொரு கால வயிரவ ராட
    வடிசுடர் வேலை …… விடுவோனே

    தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
    தருதிரு மாதின் …… மணவாளா

    சலமிடை பூவி னடுவினில் வீறு
    தணிமலை மேவு …… பெருமாளே.

  7. ஏது புத்திஐ யாஎ னக்கினி

    ஏது புத்திஐ யாஎ னக்கினி
    யாரை நத்திடு வேன வத்தினி
    லேயி றத்தல்கொ லோஎ னக்குனி …… தந்தைதாயென்

    றேயி ருக்கவு நானு மிப்படி
    யேத வித்திட வோச கத்தவ
    ரேச லிற்பட வோந கைத்தவர் …… கண்கள்காணப்

    பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
    தாளில் வைக்கநி யேம றுத்திடில்
    பார்ந கைக்குமை யாத கப்பன்முன் …… மைந்தனோடிப்

    பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
    யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
    பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது …… சிந்தியாதோ

    ஓத முற்றெழு பால்கொ தித்தது
    போல எட்டிகை நீசமுட்டரை
    யோட வெட்டிய பாநு சத்திகை …… யெங்கள்கோவே

    ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
    மான்ம ழுக்கர மாட பொற்கழ
    லோசை பெற்றிட வேந டித்தவர் …… தந்தவாழ்வே

    மாதி னைப்புன மீதி ருக்குமை
    வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
    மார்ப ணைத்தம யூர அற்புத …… கந்தவேளே

    மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
    லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
    வாழ்தி ருத்தணி மாம லைப்பதி …… தம்பிரானே.

  8. பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்

    பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
    பயிலப்பல காவி யங்களை ……யுணராதே

    பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்
    பசலைத்தன மேபெ றும்படி …… விரகாலே

    சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
    சருகொத்துள மேய யர்ந்துடல் …… மெலியாமுன்

    தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
    தனிலற்புத மாக வந்தருள் …… புரிவாயே

    நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு
    நுவல்மெய்ப்புள பால னென்றிடு …… மிளையோனே

    நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
    நொடியிற்பரி வாக வந்தவன் …… மருகோனே

    அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
    அரனுக்கினி தாமொ ழிந்திடு …… குருநாதா

    அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி
    அதனிற்குடி யாயி ருந்தருள் …… பெருமாளே.

  9. பத்தியால் யானுனைப் பலகாலும்

    பத்தியால் யானுனைப் …… பலகாலும்
    பற்றியே மாதிருப் …… புகழ்பாடி

    முத்தனா மாறெனைப் …… பெருவாழ்வின்
    முத்தியே சேர்வதற் …… கருள்வாயே

    உத்தமா தானசற் …… குணர்நேயா
    ஒப்பிலா மாமணிக் …… கிரிவாசா

    வித்தகா ஞானசத் …… திநிபாதா
    வெற்றிவே லாயுதப் …… பெருமாளே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.