சிவன் சார் புத்தகத்திலிருந்து ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சரித்ரம்
சிவன் சாருடைய “ஏணிப்படிகளில் மாந்தர்கள் “ புஸ்தகத்திலிருந்து ஸ்ரீதர ஐயாவாள் அப்படிங்கற பகுதி. ஆந்திர தேச ராஜ்யங்களுள் ஒன்றில் அமைச்சராக பணியாற்றி காலகதி அடைந்துவிட்ட தந்தையின் ஸ்தானத்தை ஏற்க அரசன் தனையருக்கு உத்தரவிட்டான். சாஸ்திர கலைகளில் மஹா மேதையாக விளங்கி வந்த தனையர், தெய்வீகத்திலேயே ஈடுபட்டு வந்ததினால் அத்தகைய உயர்ந்த பதவியை ஏற்றுக்கொள்ள இயலாததை அரசனிடம் தெரிவித்துக்கொண்டார். அரசன் மேலும் வற்புறுத்தவில்லை.
இதையடுத்து வேதியர் தன்மனைவியுடன் தென் திசையை நோக்கி க்ஷேத்திர யாத்திரையை மேற்கொள்ளலானார். மேலும் ஆசாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வந்த பிரம்பு பெட்டியில் அமர்ந்து வந்த பகவானும் தனது யாத்திரையில் அன்றாட பூஜையை தவறாமல் நிரைவேற்றிக்கொண்டார். இவ்வாறு பல க்ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே சோழ நாட்டை அடைந்தார்.
சோழ நாட்டின் இயற்கை வளங்களையும், ஏராளமான நதிகளுடன் கூடிய நீர்வளத்தையும், ஆங்காங்கு சோலைகளுக்கிடையே உயர்ந்து காணப்பட்ட பகவானின் கோபுரங்களையும் கண்டு மகிழ்ந்த வேதியர் அந்த பிராந்தியத்திலேயே தங்கிவிட மனம் கொண்டார். எனவே காவேரி தீரத்திலுள்ள க்ஷேத்திரங்களை தரிசித்துக்கொண்டே போய்க்கொண்டிருந்த போது திருவிசநல்லூர் என்ற க்ராமத்தை அடைய நேர்ந்தது. சாஸ்திர விற்பன்னர்களையும் மஹா பண்டிதர்களையும் பெருமையுடன் தாங்கி வந்த அந்த க்ராமத்தைக் கண்டதும் அவ்விடத்திலேயே வாசத்தை ஏற்க தீர்மானித்துவிட்டார். வேதியரின் மேன்மையை அங்கீகரித்த க்ராம பெரியோர்களும் தம்பதிகளுக்கு இடம் அளித்து உதவி புரிந்தனர். பெரியோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட வேதியர் வழக்கம் போல உஞ்சவ்ருத்தி எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இவர் க்ஷேத்ர யாத்திரை ஏற்று வந்த போதே பகவானால் அங்கீகரிக்கப்பட்டு தெய்வ சாதுவின் நிலையை அடைந்துவிட்டார். தன்னுடைய அன்றாட சிவலிங்க பூஜை முடிந்ததும் உச்சி வேளைக்கு முன்பே, அருகில் இருந்த கற்கடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று பகவானை தரிசித்து வரும் பணியை ஏற்று வந்தார். இதே விதமாக ஒவ்வொரு ப்ரதோஷ திதியிலும், சந்த்யாகாலத்தில் சற்று தூரத்தில் இருக்கும், திருவிடைமருதூர் மஹாலிங்கத்தை தரிசித்து, திரும்பும் வழக்கத்தை ஏற்று வந்தார். இவர் அவ்வப்பொழுது பகவானின் மேல் ஸ்தோத்திரங்களை இயற்றி வந்ததுடன், சில சமயங்களில் தெய்வ சிந்தனையில் மெய் மறந்த நிலையிலும் ஆழ்ந்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய பிதாவின் ஸ்ராத்த தினம் நெருங்கிய போது, திருவிடைமருதூர் மஹாலிங்க பெருமான் இவருடைய பெருமையை வெளியிட மனம் கொண்டுவிட்டார். ஸ்ராத்த தினத்தன்று ,காலையில் செயலாற்ற வேண்டிய ஏற்பாடுகளை முடித்து விட்டு, இரண்டாவது ஸ்னானத்தின் பொருட்டு வேதியர் காவேரிக்கு சென்றார். ஸ்னானம் செய்துவிட்டு திரும்புகையில், ஒரு பஞ்சமன், மஹாலிங்கம் பசுக்கொடுமையில் தவிப்பதை பார்த்துவிட்டார். இத்தகைய பரிதாபத்தை கண்ட, இவரது மனமோ மேலும் தவிக்க ஆரம்பித்துவிட்டது. பஞ்சமனின் பசியை தீர்ப்பதற்கு வேறு வகையில் இவர் ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் ஸ்ராத்தத்தின் பொருட்டு சமைத்து வைத்திருந்த, பதார்த்தங்களை எடுத்து சென்று அந்த பஞ்சமனுக்கு அளித்துவிட்டார் தெய்வ சாது. சாஸ்த்தர சம்மதமற்ற, இத்தகைய மனமாற்றத்தை அவர் உடனடியாக உணராமலும் இல்லை. எனவே தம்பதிகள் இருவரும் மறுமுறை ஸ்னானம் செய்துவிட்டு, பதார்த்தங்களை தயாரிக்க தலைப்பட்டனர்.
நிற்க. தெய்வ சாதுவின் நிலையை ஐயாவாள் அடையாமல் இருந்திருந்தால் மஹாலிங்கர் பஞ்சமனாக வந்திருக்கப்போவதில்லை. பொதுவாக எக்குலத்தினராயினும், முக்கியமாக பிராமணர்கள், நமது தெய்வ சாது புரிந்த ஒரு கூடாத முறையை ஏற்றுவிட்டால், அது ஒரு பெரும் பிழையே ஆகும். ஆனால் இவர் ஒரு தெய்வ சாது அல்லவா? தெய்வ சாதுவின் இத்தகைய செய்கையை அறிய நேர்ந்த க்ராம பெரியோர்கள், வேதியரை ஜாதி ப்ரஷ்டம் செய்ததாக அறிவித்ததுடன் அவர் காசிக்கு சென்று கங்கையில் ஸ்னானம் செய்து பிராயச்சித்தத்தை முடித்துக்கொண்டு வரும்படியான ஒரு நிபந்தனையையும் விதித்தனர். எனவே ஸ்ராத்தத்துக்கு வரிக்கப்பட்டிருந்த பிராமணர்கள், கர்மாவை முடித்துக்கொடுப்பதிலிருந்து, விலகிக்கொண்டனர்.
பொதுவாக ஸ்ராத்தத்திற்கு பிராமணர்கள் கிடைக்காத சந்தர்ப்பம் நேரிட்டுவிட்டால், அவர்கள் அமரவேண்டிய ஸ்தானங்களில் தர்ப்பையை, குஷாக்ராஸ்)ஆவாஹனம் செய்து பூர்த்தி செய்வது வழக்கமாகும். எனவே அடுத்து வரும் அதே திதியில் பிராமணர்களை கொண்டு முடிக்கவேண்டியதும் அவசியம் ஆகும். எனவே தெய்வ சாதுவின் க்ரஹத்திலிருந்து பிராமணர்கள், விலகிக்கொண்டு விட்டதால் தர்ப்பையை ஆவாஹனம் செய்து, ஸ்ராத்தத்தை முடித்துக்கொண்டார். ஆனால் ஸ்ராத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், தாளிடப்பட்ட அவரது வீட்டுக்குள்ளிருந்து, பிராமணர்களால் சொல்லப்பட்ட ஸ்ராத்த மந்த்ரங்கள், அண்டைய வீட்டினரின் செவிகளில் விழுந்தன. இதை அதிசயத்துடன் கேட்ட அவர்கள், அக்கம் பக்கத்திலுள்ள சிலர்களை கூப்பிட்டு, அவர்களையும் செவியுறச்செய்தனர். ஆனால் இத்தகைய ஆச்சர்யத்திற்கான காரணத்தை ஊஹிக்க இயலாதவாறு, ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.
உண்மையில் வீட்டினுள் வேதியரை தவிர வேரொருவரும் இருந்தாரில்லை. அந்த வேதியரும் மந்திர சப்தத்தை கேட்டாரில்லை. இவ்விதத்தில் அதிசயத்தை தோற்ற வைத்தார் மஹாலிங்கர். எனவே, தெய்வ சாதுக்கள் சாஸ்திர விதிகளிலிருந்து தவறினாலும், அது குற்றமாகாது என்பதே இதன் பொருளாகும். ஆனால் தங்களுடைய உயர்ந்த நிலையை உணராத தெய்வசாதுக்கள், எக்குலத்தினராயினும் அவரவர்களுக்குற்ற சாஸ்திர விதிகளை கடைபிடிக்கத் தவறுவதுமில்லை.
பெரியோர்கள் தெய்வ சாதுவுக்கு நிபந்தனை விதித்ததாக கூறினேன் அல்லவா. அத்தகைய நிபந்தனையை, அந்நிலையில் இருந்த அவர் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்று நமக்கு தோன்றலாம். சிவனைத்தவிர வேரொன்றையும் நினையாத அவர், வேறு எந்த இடத்திலும் வாழ்க்கையை கொள்ளலாம். ஆனால் தன்னை போல் உத்க்ரிஷ்டமான சாஸ்த்திர விதிகளை கடைபிடித்து வந்தவர்களும், உயர்ந்த யோக்யதைகளில் மேன்மையுற்று இருந்தவர்களுமான, பெரியோர்களின் நியாயமான நிபந்தனையை அவர் உள்ளங்கனம் செய்யவில்லை.
எனவே வழக்கம் போல மறு நாள் உஷத்காலத்தில் எழுந்திருந்து, பரியேணி தர்ப்பணத்தையும், பிறகு கர்மாநுஷ்டானங்களையும் முடித்துக்கொண்டு, தனது பத்தினியுடன் காசிக்கு புறப்பட்டார். இவர்கள் சென்றுகொண்டிருந்த சிறிது நேரத்திற்கெல்லாம், ஒரு யௌவன ஸ்த்ரீ எதிரில் தென்பட்டாள். அவள் இவர்களை நிறுத்தி, இவர்கள் போகும் இடத்தையும் அதன் காரணத்தையும் விசாரித்தாள். இவருடைய வரலாறணைத்தையும் கேட்டுக்கொண்ட அவள், தானே கங்கை என்றும் அந்த வாரத்தில் வரும் அமாவாசை அன்று காலையில், அவர்களுடைய வீட்டில் கிணற்றுக்கு வருவதாகவும், இதில் நம்பிக்கை வைக்கலாம் என்றும் கூறி புறப்பட்டவர்களை திருப்பி அனுப்பி விட்டாள்.
களங்கத்தை கொள்ளாத இவர்களும், பெண்ணின் வார்த்தையில் இம்மியளவும் சந்தேகத்தை கொள்ளாமல், திரும்பியதை நினைக்கும் போது எவரும் ஆச்சர்யத்தை கொள்ளாமல் இருக்க முடியாது. இவர்கள் திரும்பி வந்துவிட்டதை கண்ட க்ராம பெரியோர்களில் பலர், தெய்வ சாதுவின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லையானாலும், முந்தைய நாளில் ஸ்ராத்த மந்திரத்தை அதிசயத்துடன் கேட்ட சிலர் அமாவாசை வரை பொருத்து பார்க்கலாமே என்று கூறியதன் பெயரில், அதுவரையில் காத்திருக்க மற்றவர்களும் இசைந்தனர். அமாவாசை திதியும் வந்துவிட்டது. உஷத்காலத்திலேயே வழக்கம் போல காவேரியில் ஸ்னானம் செய்து, காவேரி தீரத்தில் அனுஷ்டானம், த்யானம் போன்றவைகளையும் முடித்துக்கொண்டு அருணோதயத்துக்கு முன்பே வீட்டை அடைந்தார். வீட்டையடைந்ததும், தன்னுடைய சிவலிங்கத்தை தரிசித்துவிட்டு கங்கையை ஸ்தோத்தரித்துக்கொண்டே கிணற்றடிக்கு சென்றார். இதற்கு முன்பே கிராமத்தவர்கள் ஒவ்வொருவராக வேதியரின் வீட்டை சூழ்ந்துகொண்டனர். கிணற்றடியில் நமஸ்கரித்து எழுந்து கங்கையை ப்ரார்த்தித்தார் தெய்வ சாது.
என்னே அதிசயம். கிணற்றுக்குள் கங்கை பொங்க ஆரம்பித்தாள். கிணற்றின் மேல் வழிந்தோடினாள். மேலும் வெள்ளப்பெருக்கெடுக்கவும் ஆரம்பித்தாள். மஹானாக மாறியவர், கங்கையை அடங்கும் படி பிரார்த்தனை செய்தார். கங்காதேவியும் தனது உக்கிரஹத்தை அடக்கிக்கொண்டாள். மஹானின் பாதங்களில் விழுந்து அனைவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்திலிருந்து மஹான் க்ராமத்தை விட்டு அகன்று சஞ்சாரத்தை கொண்டுவிடுவாரோ என்ற ஒரு ஐயமும், பெரியோர்களுக்கு தோன்றிவிட்டது. எனவே, மறுமுறையும் நமஸ்கரித்து க்ராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக்கொண்டனர். மஹானும் அவர்களுக்கு மரியாதை தெரிவித்து திருவிசைநல்லூரிலேயே தங்கி இருக்க ஒப்புக்கொண்டார். எனினும் ப்ரதோஷ நாட்களில் மஹாலிங்கத்தை தவறாது தரிசித்து வந்த மஹான், தனக்கு தோன்றிய மற்றைய நாட்களிலும் திருவிடைமருதூரை அடைந்து தரிசித்து வந்தார்.
திருவிடைமருதூரை அடைவதற்கு இரு நதிகளை கடந்தாக வேண்டும். ஒரு நாள் மஹாலிங்க ஸ்வாமியை தரிசித்து திரும்பும் போது, இரவில் சற்று நேரமாகிவிட்டது. ஓடக்காரர்களோ தங்களது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர். நதிக்கரையை அடைந்த மஹான் ஓடக்காரனை காணாமல் தயங்கிக்கொண்டிருக்கையில், பகவான் ஓடக்காரன் ரூபத்தில் ஓடிவந்து மஹானை உற்ற இடத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். ஆனால் மஹான் அவனுக்கு அன்பை செலுத்த நினைத்த பொழுது, ஓடக்காரனை அவ்விடம் காணவில்லை. எனினும் மறுநாளைக்கு ஓடத்துரையை அனுகிய பொழுது, தனக்கு அந்நேரத்தில் உதவியதற்கு ஓடக்காரனிடம், அன்பு தெரிவித்தார் மஹான். இதை அதிசயத்துடன் கேட்ட அவன், தான் முதல் நாள் இரவு மஹானை கொண்டு சேர்க்காததை தெரிவித்துக்கொண்டான். இந்த தெய்வீக சம்பவத்தை ஓடக்காரன் மூலமாக யாவரும் அறிய நேர்ந்தது.
மஹான் ஒரு சில ஆண்டுகள் வரையில் தான் மஹாலிங்கத்தின் தரிசனத்தை ஏற்று வந்தார். ஒரு நாள் மஹாலிங்கத்தின் சன்னதியில் நமஸ்கரித்து, வழிபட்டுக்கொண்டிருந்த மஹான், மறுபடியும் எழுந்திருக்கவில்லை. படுத்து வழிபட்ட மஹானை அவ்விடத்தில் காணவும் இல்லை. மஹான் சூனியமாகிவிட்டார். யாவும் மாயை என்பதாக வேதாந்தம் கூறுகிறதே, அதை இந்த விதமாக மஹாலிங்கர் உணர்த்தியதாகவும் கொள்ளலாம். அந்த மாயை நமக்கு புரியாத போதிலும், ஐயாவாள் என்ற ஆந்திர மஹானை, மஹாலிங்கர் இந்தவிதத்தில் ஆட்கொண்டார் என்பதை புரிந்துகொண்டாலே போதுமானதாகும்.
இவரை வழிபட்டு நிற்கும் வழக்கத்தை கொண்ட பக்தர்களோ, இந்த அற்புதத்தை கண்டு ப்ரமிப்பான வியப்பில் ஆனந்தத்தை கொண்டனர். இன்றைக்கும் திருவிசநல்லூரில் கார்த்திகை அமாவாசை அன்று, அந்த மஹானின் ஞாபகார்த்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த திருநாளன்று அதிகாலையில் மக்கள் காவேரியில் நீராடி, ஐயாவாள் மடம் என்ற அவரது க்ரஹத்தை அடைந்து, மறுபடியும் அந்த கங்கை கிணற்றில் ஸ்னானம் செய்து, மடத்திலுள்ள மஹானின் பிம்பத்தை வழிபடும் வழக்கத்தை ஏற்று வருகிறார்கள். திருவிசநல்லூர் கிராமம், கும்பகோணத்திற்கு கிழக்கில் நான்கு மைல்கள் தூரத்தில் உள்ளது. திருவிடைமருதூருக்கு மேற்கில் இரண்டு மைல் அருகிலுள்ளது. மஹான்களாக உயர்பவர்கள் தங்களுடைய அந்தஸ்தை எந்த விதத்திலும் காட்டிக்கொள்ளாத தன்மையை ஏற்பவர்களே தவிர, அடக்கத்தை காண்பிக்கும் தன்மையை ஏற்பவர் அல்லர்.
இந்த கடைசி வரியை படிக்கும் போது எனக்கு மூகபஞ்சசதியில, ஆர்யா சதகத்துல 69வது ஸ்லோகம்,
किं वा फलति ममान्यैर्बिम्बाधरचुम्बिमन्दहासमुखी ।
सम्बाधकरी तमसामम्बा जागर्ति मनसि कामाक्षी ॥
“ கிம் வா ப²லதி மமான்யை: பி³ம்பா³த⁴ரசும்பி³மந்த³ஹாஸமுகீ² ।
ஸம்பா³த⁴கரீ தமஸாமம்பா³ ஜாக³ர்தி மனஸி காமாக்ஷீ ॥ 69 ॥
“பி³ம்பா³த⁴ரசும்பி³மந்த³ஹாஸமுகீ² – கோவைப்பழம் போன்ற உதடுகளில் மந்தஹாசத்துடன், “ஜாக³ர்தி மனஸி காமாக்ஷீ”- உன்னுடைய முகமானது என் மனத்தில் ஒளிவிடுகிறது. “ஸம்பா³த⁴கரீ தமஸாம்”- என்னுடைய அஞ்ஞானத்தை போக்கிவிட்டது “கிம் வா ப²லதி மமான்யை:-அம்மா காமாக்ஷி, மத்தவாளால எனக்கு என்ன ஆக வேண்டியிருக்கிறது அப்படின்னு சொல்றார். மஹான்கள் அப்படித்தான் இருப்பார்கள். துறவிக்கு வேந்தனும் துரும்புனு சொல்ற மாதிரி அவா யார்கிட்டயும் பணிவா பேசவேண்டிய அவசியமே இல்லை. அதே நேரத்துல தன்னுடைய தெய்வீக அந்தஸ்தை காமிக்கவும் மாட்டா. இந்த வரிகளை படிக்கும் போது எனக்கு கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஞாபகம் வரும். அவர் அப்படிதான் இருந்தார். இன்னிக்கு கார்த்திகை அமாவாசை. ஐயாவாளையும் அது மூலமா கோவிந்த தாமோதர ஸ்வாமிகளையும் த்யானம் பண்ணலாம் அப்டின்னு நினைச்சு இந்த ஐயாவாள் சரித்ரத்தை படிச்சேன். இந்த ஐயாவாள் சரித்திரம் சார் புக்ல தான் ரொம்ப நன்னா இருக்கு. அதனால உங்ககிட்ட பகிர்ந்துண்டேன்.
நம: பார்வதி பதயே !!! ஹர ஹர மஹாதேவா !!
9 replies on “சிவன் சார் புத்தகத்திலிருந்து ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சரித்ரம்”
சிவன் சாரின் வாக்கில் அய்யாவாளின் வரலாறு மிக அற்புதம். நம் நாட்டின் பண்பு, நம் நாட்டு மஹான்களின் வாழ்க்கை முறை எவ்வளவு அதிசயத்தக்க விதமாக இருந்திருக்கிறது! அய்யாவாள் சுமார் முந்நூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர். பகவந்நாம போதேந்திராளின் சமகாலத்தவர் . போதேந்திராள் விசேஷமாக ‘ராம’ நாமாவையும், ‘கோவிந்த’ நாமாவையும் பிரசாரம் செய்து வந்தார். அய்யாவாள் ‘சிவ’ நாமாவின் மகிமையைப் பரப்பி வந்தார். இரண்டு பேருக்குமே சைவ வைஷ்ணவ பேதம் கிடையாது. அதனால் இருவருமே சேர்ந்துகூடத் திருவிசநல்லூரில் நாம ஸித்தாந்தத்தைப் பிரசாரம் செய்திருக்கிறார்கள்.
அய்யாவாளின் சிவ-விஷ்ணு அபேதத்தை மஹாபெரியவா கோடிட்டு காண்பிக்கிறார். “அய்யாவாள், ஸீதா கல்யாணத்துக்கு முன்னால் ஸ்ரீராம சந்திர மூர்த்தி சிவதநுஸை ஒடித்த விஷயத்தை ஓர் இடத்தில் சொல்லியிருக்கிறார். அங்கே “ஸ்வகர ப்ரதிபாடித ஸ்வசாப:” என்கிறார். அதாவது, தன் கையாலேயே தன் வில்லை ஒடித்துக் கொண்டார் என்கிறார். ‘சிவதநுஸ் ஏற்கெனவே நாராயணனால் விரிசல் ஆக்கப்பட்டது. அப்புறம் நாராயணன் ஸ்ரீராமனாக வந்து அதை நன்றாக ஒடித்தே போட்டு விட்டார்’ என்பதாக இந்த தநுர்பங்க சமாசாரத்தை வைத்து ஈச்வரனைத் தாழ்த்தி பேசுவது நீண்ட காலமாக வந்த ஒரு வாதம். ஆனால் ஸமரஸமாக பார்த்த அய்யாவாளுக்கோ, சிவ விஷ்ணு பேதமே தெரியவில்லை. ‘சிவனேதான் விஷ்ணு; விஷ்ணுவேதான் ராமன். ஆகையினால் ராமனும் சிவனும் ஒன்றுதான். சிவதநுஸ் என்றால் அதுவேதான் ராம தநுஸும்! தன் கையால் தன் வில்லையே முறித்துப் போட்டார்! அவருடைய லீலைக்கு இதெல்லாம் வேண்டியிருக்கிறது! என்று எழுதிவிட்டார்.”
சிவா பெருமானுடைய கருணையை ஸ்ரீ தர ஐயாவாளின் சுவாரஸ்யமான வரலாற்றின் ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகதின் வாயிலாக எடுத்துரைத்த கணபதி சார் அவர்களுக்கு நன்றிகள்
ராம் ராம்
Kotanukoti Namaskaram to Sri Sivan Sar.
🙏 🙏
An episode of Sri Sridhara Ayyaval’s life written by Sar, read out with perfect effect, followed by comparing Aarya Shatakam slokam with Mahans lifestyle and Swamigal’s way of living really a blessing for the day, 3 mangoes in one stroke.
Thank you for sharing Anna 🙏 🌹
மெய் சிலிர்க்க வைக்கும அய்யாவாள் சரித்திரம்.சிவன் சார் பாதம் சரணம் .
🙏🙏
Periyavaa Charanam Sharanam 🙏🙏 thank you so much
Arputham 🙏🙏🙏🙏🙏🙏
தெய்வ சாதுவான அய்யாவாளின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம், அவரின் பக்தியினை வெளிப்படுத்த பகவானே, பின்னாளில் நம் போன்றவர்களுக்கு புரியும்படியாக அமைத்தார். இறைவனால் ஒரு உன்னதமான பக்தனுக்கு சோதனை ஏற்படும் என்றால், அது அந்த இறைவனால் தகுதி உள்ள ஒருவரையே தேர்ந்தெடுத்து சோதிப்பார். இறைவன் அந்த பக்தனின் உறுதியான பக்தியை உலகுக்கு உணர்த்த மேற்கொள்ளும் ஓர் வகை.
ஐயாவாள் திருவடிகள் சரணம்
சதாசிவ ப்ரம்ஹேந்த்ர ஸ்வரூபேப்யோ நமோ நமோ: