ஸ்ரீ சங்கர சரிதம் – ஆறாம் பகுதி – அத்வைத குரு பரம்பரை

 

நேற்றைய கதையில், ஆதி சங்கர பகவத் பாதாள் தன்னுடைய குரு கோவிந்த பகவத் பாதாள் கிட்ட ஸந்யாஸ தீக்ஷை வாங்கிண்டு, அவர் உத்தரவு படி காசியிலே போயி, அத்வைத தத்துவத்தை ஜனங்களுக்கு பாஷ்யங்கள் மூலமாகவும், தன்னுடைய ப்ரவசனங்கள் மூலமாகவும், 56 தேசத்திலேருந்து வந்த பண்டிதர்களெல்லாம் சொல்லி, அதன் மூலமா வேத மதத்துக்கே ஒரு புத்துயிர் கொடுத்தார், அப்படீங்கிறதை சொல்லிண்டு இருந்தேன்.

கோவிந்த பகவத் பாதர் அப்படீன்னு சொல்லும்போது அதுக்கு முன்னாடி அத்வைத குருபரம்பரை, அதுல எல்லா மஹான்களையும், தெய்வங்கள்ல இருந்து ஆரம்பிச்சு ரிஷிகளுக்கு வந்து அங்கிருந்து சன்யாசிகளுக்கு வந்து இந்த பரம்பரையை தியானம் பண்ணுவோம்.

सदाशिव समारंभां शंकराचार्य मध्यमाम् । अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरुपरंपराम् ॥

ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம் |

அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம் இருக்கு. தக்ஷிணாமூர்த்தியில் இருந்து, ஆதி சங்கரர் மூலமாக, நம்முடைய குரு மஹா பெரியவா வரைக்கும் எல்லாருக்கும் நமஸ்காரம் அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

இதுல என்னை வலிய வந்து ஆட்கொண்ட என் குருநாதர் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். அவர் சிவன் சார் கிட்ட உத்தரவு வாங்கிண்டு ஸந்யாஸம் வாங்கிண்டார். சிவன் சாருடைய கௌசிக நாடியில மஹா பெரியவா அவருக்கு ஞானத்தை கொடுத்தா அப்படீன்னு இருக்கு. அதனால மஹா பெரியவா, சிவன் சார், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ன்னு அவாளை எல்லாம் நான் ஸ்மரிக்கறது.

இன்னொரு ஸ்லோகம் இருக்கு. அதுல “நாராயணம் பத்மபுவம்” ன்னு ஆரம்பிக்கறது. தக்ஷிணாமூர்த்தி மௌன குரு. விஷ்ணு பகவான் வேதங்களை பிரம்மா கிட்ட கொடுத்தார். “இந்த மந்திரங்களை கொண்டு நீ ஸ்ருஷ்டி பண்ணு” ன்னு சொன்னார், அப்படீன்னு, புராணங்களில் எல்லாம் இருக்கு. அதனால மஹாவிஷ்ணுலேருந்து ஆரம்பிச்சு இந்த ஸ்லோகத்துல குரு பரம்பரை சொல்றா. ஏன் வேதம்னா? வேதத்தோட முடிவுல தான் உபநிஷத் இருக்கு. உபநிஷத்துல தான் அத்வைதம் இருக்கு. அதனால அத்வைத ஆச்சார்ய பரம்பரைக்கு, முதல் குரு மஹாவிஷ்ணு. இந்த ஸ்லோகத்தை சொல்றேன்.

नारायणं पद्मभुवं वशिष्ठं शक्तिं च तत्पुत्रं पराशरं च

व्यासं शुकं गौडपादं महान्तं गोविन्दयोगीन्द्रं अथास्य शिष्यम् ।

श्री शंकराचार्यं अथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यम्

तं तोटकं वार्त्तिककारमन्यान् अस्मद् गुरून् सन्ततमानतोऽस्मि ॥

நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச
வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்த்ரம் அதாஸ்ய சிஷ்யம் |
ஸ்ரீ சங்கராச்சார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம் வார்த்திககாரம் அன்யான் அஸ்மத் குரூன் ஸந்ததம் ஆனதோஸ்மி ||

அப்படீன்னு ஒரு ஸ்லோகம். இன்னிக்கு இந்த குருபரம்பரையில வர எல்லாரைப் பத்தியும் ஒவ்வொரு நிமிஷம் தியானம் பண்ணுவோம்.

விஷ்ணு பகவான் வேதங்களை ப்ரம்மா கிட்ட கொடுத்து இந்த மந்திரங்களை கொண்டு ஸ்ருஷ்டி பண்ணுன்னு சொல்றார். ப்ரம்மா தன்னோட நான்கு முகத்தாலயும், நான்கு வேதங்களையும் எப்பவும் ஓதிண்டே இருக்கார். அதன் மூலமா உலகத்தையெல்லாம் ஸ்ருஷ்டி பண்றார்.

ப்ரம்மாவோட பிள்ளை வசிஷ்டர். இவால்லாம் வந்து எவ்வளவோ கோடிக் கணக்கான வருஷங்கள் இருந்தவா. வசிஷ்டர், இக்ஷ்வாகு முதற்கொண்டு, ராமன் பர்யந்தம் இன்னும் அந்த குலத்துல எல்லாருக்கும் குலகுருவா இருந்ததுண்டு, ராமன் பொறந்தபோது அவருக்கு பேர் வெச்சார். ராமருக்கு வசிஷ்டர் உபதேசம் பண்ணதா யோக வாசிஷ்டம்னு ஒரு புஸ்தகம். ஞானத்தை பத்தி, அத்வைதத்தை பத்தி, ராமருக்கு ஒரு கலக்கம் வந்தபோது வசிஷ்டர் உபதேசம் பண்ணினதாக. “வாசிட்டம்” அப்படீன்னு அதுக்கு தமிழாக்கம் இருக்கு. இதெல்லாம் ஞான நூல்கள் படிக்கறவாளுக்கு ரொம்ப முக்கியமான புஸ்தகம். ஸ்வாமிகள் யோக வாசிஷ்டத்தைப் பத்தி, ஒண்ணு ரெண்டு விஷயங்கள் சொல்லியிருக்கார். ஒண்ணு – “சுகமும் துக்கமும் ஒண்ணை ஒண்ணு  துரத்திண்டு cancel  பண்ணிடறது. இந்த ஞானம் இருந்தா நாம நிம்மதியா இருக்கலாம்”, அப்படீன்னு ஒரு தத்துவம். இன்னொன்னு “இந்த உலகத்துல புருஷ ப்ரயத்தனம்ங்கிறது பகவத் பஜனம் தான்” அப்படீன்னு யோகவாசிஷ்டத்துல இருக்கு அப்படீன்னு ஸ்வாமிகள் சொல்வார்.

அடுத்தது பராசரர். பராசரர் பண்ண ரெண்டு பெரிய உபகாரம் ஒண்ணு விஷ்ணு புராணம் பண்ணார். இன்னொன்னு வ்யாஸரை கொடுத்தார், நமக்கு.

வியாசர் ஸ்மார்த்தர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும், மாத்வர்களுக்கும், எல்லாருக்குமே வ்யாஸர் தான் குரு. எல்லாரும் குருவா ஒத்துண்டு இருக்கா. எல்லா சன்யாசிகளும், வ்யாஸ பௌர்ணமி அன்னிக்கு இந்த மூணு மதத்து சன்யாசிகளும் வ்யாஸ பூஜை பண்றா . வ்யாஸர் வேதங்களை தொகுத்தவர். மஹாபாரதம் எழுதினவர். அதுல தான் கீதை இருக்கு.

அந்த வ்யாஸாச்சாரியாருக்கு, பிள்ளையா சுகர் அவதாரம் பண்ணார். இதுல விஷ்ணு பகவான் ப்ரம்மா இருவரும் ஸ்வாமி, தெய்வங்கள். வசிஷ்டர் சக்தி, பராசரர் வ்யாஸர் இவாளெல்லாம் ரிஷிகள். ரிஷிகள் மனுஷாளுக்கு ரொம்ப மேலான ஒரு ஜாதி. சுகர் வந்து இது எதுலேயும் வராத அதற்கெல்லாம் மேற்பட்ட அதி வர்ணாஸ்ரமியா இருந்தார். நம்ம சதாசிவ ப்ரம்மேந்திராள் போல. இந்த காலத்துல அவரைத் தான் குறிப்பிட முடியும். சுகாச்சார்யாள் பொறந்த போதே கர்ப்பத்துலேருந்து ஞானத்தோட வெளியில வந்தவர் அவர் ஒருத்தர்தான். எல்லாரும் கொஞ்சம் ஒரு கர்ம சேஷம் இருந்தது. அதை வந்து ஏதாவது ஒரு முயற்சி பண்ணி போக்கிண்டு ஞானிகள் ஆவா. சுகாச்சார்யாள் பிறந்தபோதே ஞானி.

அவர் கை கால் முளைக்கணும்னு காத்துண்டு இருந்தாராம். அப்படியே கிளம்பி போறார். ஒரு அஞ்சு வயசு ஆன உடனே. ஆனா வியாசருக்கு பாசம். “எங்கேடா போற, குழந்தே, குழந்தே” அப்படீன்னு பின்னாடி போறாராம். புத்ர, அப்படீன்னு கூப்டுண்டு வ்யாஸாச்சார்யாள் சுகர் பின்னாடி போறார். அப்போ அங்க இருக்கற மரங்கள் எல்லாம் வந்து “என்ன என்ன” ன்னு பதில் கேட்டுதாம். அப்படி சுகாச்சார்யாள் எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறார், அப்படீங்கிறது வியாசருக்கு புரியறதுக்காக, இவர் தன் குழந்தையை கூப்பிட்ட போது எல்லாம் பதில் சொல்லித்து, அப்படீன்னு சொல்லுவா. அப்படி எல்லா உயிர்களிடத்தும் இருக்க கூடிய ப்ரம்ம ஸ்வரூபியாக பிறந்ததிலேருந்து இருந்தவர் சுகாச்சார்யாள்.

இன்னொரு கதை சொல்வா. ஒரு முறை சுகாசார்யாள் உடம்புல வஸ்த்ரம்  கூட இல்லாம போயிண்டே இருந்தார். அவர் அப்படி போகும் போது அங்கே சில பெண்கள் குளத்துல குளிச்சிண்டு இந்தாளாம். அவா ஒண்ணும் மாற்றம் அடையலையாம். வயாஸர் மரவுரி எல்லாம் போட்டுண்டு பின்னாடி போறார். அவரை பார்த்த உடனே இவா எல்லாம் வஸ்தரத்தை எடுத்து போட்டுண்டாளாம். “என்ன, என் பையன் யுவா, அவன் போறான். அவனுக்கு நீங்க ஒண்ணுமே சலிக்கல, என்னை பார்த்த உடனே வெட்கப்படறேள்”னா, அவா “அவர் அந்த நிலைமைல இருக்கார், ஆண், பெண், அலி அந்த பேதங்கள் எல்லாம் இல்லாத நிலைமைல இருக்கார். அதனால நாங்கள் அவர் பார்த்த போது எந்த விகாரமும் ஏற்படல” அப்படின்னு சொன்னாளாம். அப்பேற்பட்ட பெரிய ஞானி சுகர். ஸ்ரீமத் பாகவதத்தை பரிக்ஷித் மூலமா உலகத்துக்கு கொடுத்தவர்.

அந்த சுகாசார்யள் கிட்ட கௌட பாதர், பதரிகாஸ்ரமத்துல ஞான உபதேசம் பெற்று, அந்த கௌட பாதர் கிட்ட, கோவிந்த பகவத் பாதர் உபதேசம் வாங்கிக்கிறார். நம்ம சங்கர பகவத் பாதர் கோவிந்த பகவத் பாதர் கிட்ட நர்மதா நதிக்கரையில் தீக்ஷை எடுத்துக்குறார்.

இந்த இடத்துல ரொம்ப சுவாரஸ்யமான கதை ஒண்ணு இருக்கு. பதஞ்சலி சரித்ரம்ன்னு ஒரு புஸ்தகம் இருக்கு, அதுல விஷ்ணு பகவானோட ஹ்ருதயத்துல சிவபெருமான் அஜபா நடனம் பண்றார்னு வரது. அஜபா அப்படின்னு ஒண்ணு, அதவாது ஜபமே இல்லாத ஒரு மந்த்ரம், மூச்சு உள்ள போயிட்டு வெளியில வர அந்த சத்தம் வந்து, உள்ள போகும் போது ஹும்ம்ன்னு போறது, வெளியில வரும்போது ஸ்ஸ்ஸ்ஸன்னு வறது, அதை வந்து ஹம்ஸ, ஹம்ஸ மந்த்ரம் அப்படின்னு சொல்லுவாளாம். அப்படி ஒண்ணும் ஜெபிக்காமலே அந்த ஹம்ஸ மந்த்ரம் நம்ம எல்லாரும் ஜபிச்சிண்டே இருக்கோம், அதனால அஜபா, ஜபிக்காத ஜபம் அது. உதடை அசைச்சு ஏதோ ஜபிக்கணும்னு இல்லாம, அந்த ஹம்ஸ மந்த்ரத்தை, அதுல நாட்டம் வெச்சு சொல்லிண்டே வந்தா பிரணவ மந்த்ரம் தெரியும், அதனால சித்தி ஏற்படும் அப்படின்னு சொல்றா. விஷ்ணு பகவான் அந்த ஹம்ஸ மந்த்ரத்தை ஜபிக்கும்போது, பரமேஸ்வரன் அந்த மந்த்ரத்துக்கு ஒரு நடனம் ஆடினாராம், அது அஜபா நடனம்.

ஒரு நாளைக்கு அந்த மாதிரி சாயங்கால வேளைல விஷ்ணு பகவானோட ஹ்ருதயத்துல பரமேஸ்வரன் ஆடும்போது, அவர் படுத்துண்டு இருந்த ஆதிசேஷன் வந்து “திடிர்னு ரொம்ப கனமா போய்ட்டேளே என்ன” ன்னு கேட்டாராம், “பரமேஸ்வரன் என் மனசுல நர்த்தனம் ஆடினார், அதை பார்த்துண்டு இருந்தேன்” அப்படின்னு சொன்ன உடனே, “எனக்கும் அந்த நாட்டியத்தை பார்க்கணுமே”ன்னு கேட்டாராம், “நீ சிதம்பரத்துல போய். அந்த பரமேஸ்வரனுடைய நடனத்தை தர்சனம் பண்ணு”ன்னு சொன்னாராம். அப்போ பதஞ்சலியா பூமில அவதாரம் பண்ணி அந்த நடனத்தை தர்சனம் பண்றார் பதஞ்சலி.

அந்த பதஞ்சலி பூமிக்கு போகும் போது விஷ்ணு பகவான் சொன்னாராம் “நீங்க போகும் போது இன்னும் உபகாரமா நிறைய கார்யங்கள் பண்ணுங்கோ”ன்னு சொன்ன போது, மனோ வாக் காயம், மனசுக்கு, வாக்குக்கு, உடம்புக்கு இது மூணுக்கும் உபயோகமா இருக்கும்படியான கார்யங்கள் பதஞ்சலி பண்றார். பதஞ்சலி யோக சூத்ரம்னு ஒண்ணு பண்றார் இது மனோலயத்துக்காக, அது தான் ரொம்ப famous அதாரிடியான யோக புஸ்தகம், பதஞ்சலி யோக சூத்ரம் அப்படிங்கிறது எல்லா யோக ஆசார்யாளுக்கும் அது தெரிஞ்சு இருக்கும். உலகம் முழுக்க அதோட logic எல்லாம் ரொம்ப appreciate பண்ணுவா, இது மனசுக்கு. வாக் சுத்தி வரணும்னா, வ்யாகரணம் grammar நன்னா தெரியணும். அதுக்கு , பதஞ்சலி ஒரு புஸ்தகம் பண்ணார். மஹாபாஷ்யம் அப்படின்னே அதுக்கு பேர். அந்த பரமேஸ்வரனுடைய உடுக்கை ஒலியிலே இருந்து வந்த எழுத்துக்களை கொண்டு பாணினி ஒரு வ்யாகரண ஸுத்ர புஸ்தகம் பண்றார், அதுக்கு பாஷ்யாமா பதஞ்சலி முனிவர் எழுதினது மஹாபாஷ்யம்னு பேரு. அப்பறம் உடம்புக்கு சரகம் அப்படின்னு ஒரு புஸ்தகம் பண்ணி இருக்கார், சரகசம்ஹிதை அப்படின்னு சொல்லுவா.

இந்த மூணுத்துல இன்னொரு விஷேஷம் என்னன்னா, இந்த சூத்ரம்ங்கிறது, முக்கால்வாசி மூல புஸ்தகமா இருக்கும். வ்யாஸர் பண்ண ப்ரம்மசூத்ரம், சூத்ரங்கள்ங்றது formula மாதிரி இருக்கும்.  அது, textஅ இருக்கும், அதுக்கு பாஷ்யம்ங்கிறது  commentaryயா இருக்கும். வார்திகம்ன்னு ஒண்ணு இருக்கு அந்த  commentaryக்கு இன்னும் additional notes எல்லாம் வெச்சு, அதுல இருக்குற குண தோஷங்கள் எல்லாம் விசாரிச்சு, விவரமா எழுதற புஸ்தகத்துக்கு வார்திகம்ன்னு பேரு. இந்த பதஞ்சலி யோகத்துக்கு சூத்ரம்  பண்ணார். இந்த grammarக்கு பாஷ்யம் பண்ணார், இந்த சரகம் அப்படின்னு சொல்லி ஒரு வார்திகம் எழுதினார். இதுல ஏதாவது ஒண்ணு பிரபலமாக இருக்கும். ப்ரம்ம சூத்திரத்தை எடுத்துண்டா ப்ரம்ம சூத்திரத்தை காட்டிலும், ஆச்சார்யாள் பாஷ்யம் ரொம்ப பிரபலமா இருக்கு. ஆசார்யாள் பாஷ்யம் தான் magnum opus. அது தான்  உலகத்துல பரசித்தியா இருக்கு. சிலபேர் பண்ண சூத்ரங்கள் விளங்கும், சிலபேர் பண்ண பாஷ்யங்கள் விளங்கும், சில பேர் பண்ண வார்திகம் ரொம்ப விசேஷமா இருக்கும். இந்த பதஞ்சலி ஒண்ணொண்ணுக்கும் பண்ணது தான் அந்த subjectலேயே topஆக இருக்கு. அப்படி யோகத்துக்கு பதஞ்சலி யோக சூத்ரம், grammarல அவர் பண்ண மஹாபாஷ்யம்,  நம்ம ஆயுர்வேதத்துக்கு ஆதாரமா இருக்ககூடிய சரக சம்ஹிதையும் அவர் பண்ணினது தான். அது ஒரு வார்திகம்.

இதுல, இந்த மஹாபாஷ்யத்தை எழுதி இந்த பதஞ்சலி என்ன பண்ணினாராம், நாம எல்லாருக்கும் சொல்லித் தரணும் அப்படின்னு சொல்லி, படிக்க வரச் சொன்னாராம். விஷயத்தை வெளியில சொன்ன உடனே ஆயிரம் சிஷ்யர்கள் வந்தாளாம். இவருக்கு, “நாம இந்த ஆயிரம் சிஷ்யர்களுக்கும், individual attention கொடுத்து பாடம் எடுக்கணும்” அப்படின்னு ஒரு ஆசை. ஆனா, அப்படி ஒவ்வொருத்தருக்கும் தனித் தனியா எடுத்தா எத்தனை நாள் ஆகுமோ, திரும்பியும் நாம வைகுண்டத்துக்கு போகணும்னு சொல்லி, பதஞ்சலிங்கிறது ஆதிசேஷன் அவதாரம் தானே! ஆதிசேஷனுக்கு ஆயிரம் நாவும்பா, அதனால அவர் என்ன பண்றார், ஆயிரம் பேரை உட்கார சொல்லிடறார், ஒரு ஆயிரம்கால் மண்டபத்துல. ஒவ்வொரு கால் கீழ ஒருத்தரை உட்கார சொல்லிட்டு, தான் நடுவில உட்கார்ந்துகிறார். “நான் உங்க முன்னால ஒரு திரை போட்டுடுவேன்.  அந்த திரைக்கு அந்தண்ட பக்கம் நான் பாடம் எடுப்பேன். உங்களுக்கு காதுல விழும். நீங்க நான் சொல்லிதர மஹாபாஷ்யத்தை கத்துக்கோங்கோ, திரைய திறந்து பார்க்க கூடாது, ஆயிரம் பேர்ல யாரானாலும், திரைய திறந்து பார்க்க கூடாது. திரைய திறந்து பார்தா பெரிய அனர்த்தம் விளையும்” ஏன்னா அவர் ஆதிசேஷன் பாம்பு. அந்த நச்சு காற்று பட்டாலே, இவா எல்லாம் பஸ்மமா போயிடுவா, அதனால, “ஒரு காரணத்தை கொண்டும் திரைய திறக்காதேங்கோ. ரெண்டாவது, எழுந்து போகாதீங்கோ” இவர் திரை போட்ருக்கார்ன்னு அவா எழுந்து போய்ட்டா, “எழுந்து போனா நீங்கள் ப்ரம்ம ராக்ஷஸா ஆயிடுவேள்”, அப்படின்னு ரெண்டு condition போட்டு, இந்த ஆயிரம் பேரை உட்கார வெச்சு, ஒரே நேரத்துல ஆயிரம் பேருக்கு தனித்தனியா பாடம் எடுக்குறார்.

அப்படி பண்ணும் போது, யாரவது ஒரு விஷமக்காரா பையன் இருப்பானே, அவன் ஒருத்தன் திரையை திறந்துட்டான். எப்படி ஆயிரம் பேருக்கு ஒருத்தரே பாடம் எடுக்கமுடியும் ன்னு சந்தேஹம் அவனுக்கு. திரையை திறந்த உடனே அந்த ஆயிரம் பேரும் பஸ்மமா போய்ட்டா. அவருக்கு ரொம்ப துக்கம். நாம ஆயிரம் பேருக்கும் ஒரே நேரத்துல பாடம் எடுக்கலாம்னு பார்த்தா, இது இந்த மாதிரி ஆயிடுத்தே, நன்னா படிக்க வந்த குழந்தைள் எல்லாம் இப்படி போய்ட்டாளேன்னு வருத்த படறார். இந்த மஹாபாஷ்யத்தை சீக்கிரம் பிரச்சாரம் பண்ணலாம் ன்னு பார்த்தா, யாருமே இல்லையேன்னு நினைச்சாராம்.

அதுல ஒரு பிள்ளை, கௌட தேசம், பெங்காலேர்ந்து வந்து இருந்தானாம், அவன் ஜலசங்கயைக்காக (bathroom) எழுந்து போய் இருந்தானாம். அவன் எழுந்து போயிருந்ததுனால அவன் ஒருத்தன் மிஞ்சினானாம். அந்த ஒரு மிஞ்சின பையன் வந்த போது, இவர் சந்தோஷப் பட்டு என்ன பண்ணாராம், “எனக்கு தெரிஞ்ச ஞானம் எல்லாம் உனக்கும் தெரியட்டும். இந்த மஹாபாஷ்யம் உன் மனதில் விளங்கட்டும்”, அப்படின்னு ஆசீர்வாதம் பண்றார். ஆசீர்வாதத்துனாலயே ஞானத்தை அவனுக்கு கொடுத்துடார்.

அந்த கௌட தேசதுத்துலேர்ந்து வந்த அந்த பையன் சுமாரான புத்தியசாலியா தான் இருக்கான். இவர் அனுகிரஹத்துனால அவனை புத்திமானாக ஆக்கி, இந்த இந்த மஹாபாஷ்யத்தை அவனுக்கு சொல்லி கொடுத்துடறார். ஆனா அவனுக்கு முதல்ல சொன்ன சாபம் இருக்கோல்யோ, அதுனால அவன் ப்ரம்மராக்ஷஸன் ஆயிடுறான். அப்போ இந்த பதஞ்சலி சொல்றார், “நீ யாராவது ஒரு தகுதியான பிள்ளைக்கு, இந்த மஹாபாஷ்யத்தை சொல்லி குடுத்தாயானால், உனக்கு இந்த பிரம்ம ராக்ஷஸ் சாபம் விலகும்”, அப்படின்னு சொல்றார்.

இந்த பிரம்ம ராக்ஷஸ்ங்கறது ஒரு தேவ ஜாதிதான், அவா வந்து பிராம்மணாள பிடிச்சு தின்னுடுவா. யாரவது பிராம்மணா கிட்ட கேள்வி கேட்பா, அவா தப்பு தப்பா பதில் சொன்னா அவாளைத் பிடிச்சு தின்னுடுவா. இப்படி ஒரு கஷ்டம்.

பதஞ்சலி சொன்னவுடனே, இந்த  கௌடர், நர்மதா நதிக்கரைல போய், ஒரு ஆலமரத்து மேல உட்காந்து இருக்கார். அதாவது  பஞ்ச கௌட தேசங்கள் அப்படின்னு , விந்திய மலைக்கு வடக்கு பக்கம் இருக்கறதெல்லாம், பஞ்ச கௌட தேசங்கள், அதுக்கு கீழே இருக்கறதெல்லாம் பஞ்ச திராவிட தேசங்கள் அப்படின்னு. அது அந்த கௌடங்கற வார்த்தை பெங்கால்க்கும், திராவிடங்கற தேசம் தமிழ்நாட்டுக்கும் exclusive ஆக மிஞ்சியிருக்கு. அதுனால,  center ஆன இடம் அது, அதனால படிக்கறதுக்கு மேலே கீழே பசங்க போவான்னு  சொல்லி காத்துண்டிருக்கார்.

வரவாள்ட்ட எல்லாம் அவர் ஒரு test பண்ணுவார், நிஷ்டான்னு ஒரு ப்ரத்தயம், ஒரு suffix. ஒரு தாதுவோட ஒரு suffix சேர்ந்தா, அது எப்படி ரூபம் மாறறது, அப்படிங்கறதுக்கு, புஜ் அப்படிங்கற தாதுவோட நிஷ்டா ப்ரர்த்தயம் சேர்ந்தா புக்தம் அப்படின்னு ஆகும். அது மாதிரி, ரக்தம், ஸிக்தம் அப்படின்னெல்லாம் ஆகும். ஆனா இந்த பச்ங்கற தாதுவோட நிஷ்டா ப்ரத்யம் சேர்ந்தா பக்தம்ன்னு ஆகாது, பக்வம்ன்னு ஆகும். இந்த கேள்விய அவர் வரவா கிட்ட எல்லாம் கேட்பார், புஜ்ஜோட நிஷ்டா ப்ரர்த்தயம் சேர்ந்தா என்ன , அப்படின்ன்னா அவா புக்தம்பா , இந்த புக்தம், ரக்தம், ஸிக்தம் சொல்லிண்டு வரும்போது, பச் க்கு என்னன்னு கேட்டார்ன்னா, பக்தம்ன்னு சொல்லிடுவா. ஆகா! பக்தம் கிடையாது, பக்வம். நீ எனக்கு நல்ல பக்குவமான ஆகாரம் தான்னு அவாளை சாப்பிட்டுடுவார், இப்படி அவர் பாவம் சாப்பிட்டுண்டிருந்தார்.

அப்ப ரொம்ப நாளைக்கு அப்புறம், சந்த்ரஷர்மா ன்னு ஒரு பிரம்மச்சாரி அந்த பக்கம் வறார். இது யாருன்னா, பதஞ்சலியே தான், கௌடருக்கும் சாப விமோசனம் கிடைக்கல்லை, நம்ம மஹாபாஷ்யமும் ப்ரச்சாரம் ஆகமட்டேங்கறது சொல்லிட்டு, சந்த்ரஷர்மா ரூபத்துல, திரும்பியும் அவதாரம் பண்ணி பதஞ்சலியே வந்தார், அப்படின்னு சொல்லுவா. அவர் வந்தவுடனே அவர் correctஆ பதில் சொல்லிடுறார், பச் நிஷ்டா ப்ரர்த்தயத்துல பக்வம் அப்படின்னு சொன்னவுடனே, கௌடர், ஆஹா அப்படின்னு ரொம்ம சந்தோஷபட்டு, “நீ ஒருத்தன் வந்தியே, நான் உனக்கு இந்த மஹாபாஷ்யத்தை சொல்லித் தரேன்” என்கிறார்.

ஆனா இந்த பிரம்மராக்ஷஸ் என்கிறதால ரொம்ப கடுமையானா conditions போடறார். “நான் சொல்லிண்டே போவேன், நீ எழுதிண்டே  இருக்கணும், சாப்பிடக் கூடாது, தூங்கக் கூடாது”, அப்படின்னு ரொம்ப harsh conditions போடறார். சந்த்ரஷர்மா படிப்புல இருக்கற ஆர்வத்துனால, “என்ன சொன்னாலும் சரி, நீங்க சொல்ற மாதிரி கேட்கறேன்” ன்னு சொல்லி, அந்த மரத்துமேலேயே உட்கார்ந்துண்டு, அவர் ஆரம்பிச்சுடறார். இவர், புஸ்தகம் இல்லை, ஒண்ணும் இல்லை. அதுனால அந்த அரசமரத்து இலைகளை எடுத்து, தொடையை கீறி, அந்த ரத்தத்தை தொட்டு, அந்த அரச மர குச்சியை வைச்சு, அவர் சொல்றதெல்லாம் எழுதிண்டே வரார், எழுதி எழுதி கீழே போடறார், ஒன்பது நாள் ராப்பகலா கௌடர் பாடம் எடுக்கறாராம், அந்த ஒன்பதுநாள் பாடம் எடுத்ததெல்லாம் இவர் மனசுல வாங்கிண்டு, எழுதி வெச்சுக்கறார். அப்புறம் கீழே வந்து அந்த இலைகளையெல்லாம் எடுத்து வெச்சுக்கறார். பிரம்ம ராக்ஷஸ சாபத்துலேர்ந்து கௌடர் முக்தி அடைஞ்சு , அவர்தான், கௌட பாதர், அவர் பத்ரிகாஷ்ராமத்துல  போய் சுகப்ரம்மத்து கிட்ட ஞானபோதேசம் வாங்கிண்டு, அங்க இருக்கார்.

இந்த சந்திரஷர்மா , இதை இலைகளெல்லாம் பொறுக்கிண்டு, கிளம்பறார், ஆனா கீழே வந்த போது அந்த அசதி தாங்காம தூங்கிட்டாரம். எழுந்து பார்த்தா, கொஞ்ச இலைகளை ஆடு தின்னுடுத்தாம். அந்த அஜ பக்ஷிதம் போயிடுத்து. பாக்கி இருக்கறதெல்லாம் எடுத்துண்டு, பக்கத்துல ஒரு உஜ்ஜயினிங்கற தேசத்துக்கு வரார். அந்த உஜ்ஜயினில ஒரு ஆத்து வாசல்ல வந்து அந்த இலைய மூட்டை கட்டி வெச்சுட்டு, படுத்துண்டு தூங்கி போயிடறார்.  நாள் கணக்கா தூங்கறார். அவருக்கு அவளோ அசதி. அப்போ இவர் பார்க்கறதுக்கு தேஜஸா இருக்காரேன்னு அந்த வீட்ல ஒரு வைஷ்ய பொண்ணு இருக்காளாம், அவள் தயிர்சாதத்தை அவரோட வயித்துல தடவி, அவரை உயிரோடவெச்சுருக்காளாம். ஒரு extra ஓட்டை போட்டு, இந்த காலத்துல injection போடறா. நம்ம உடம்புல natrual ஆகவே  ரோமகூபங்கள் இருக்கு, அது மூலமாகவே, இந்த மாதிரி தேஹத்தில் உயிர்ச்சத்தை சேர்கறதுக்கு method எல்லாம் அவாளுக்கு தெரிஞ்சிருக்கு, அப்படின்னு சொல்றா பெரியவா.

அந்த மாதிரி, அந்த பொண்ணு அவர் உயிரை காப்பாத்திருக்கா . ஒரு பத்து நாள் கழிச்சு அவர் எழுந்திருக்கிறார்.  எழுந்துண்டு கிளம்ப பார்க்கிறார், எழுந்தவுடனே முதல்ல அந்த இலை மூட்டை இருக்கான்னு பார்த்துக்கறார், அப்போ அந்த வைஷ்யன் சொல்றான், “என் பொண்ணு, உங்க மேல ப்ரியப்பட்டு உங்க உயிரை இவ்வளவு நாள் காப்பாத்தினாள், இவளை கல்யாணம் பண்ணிக்கோங்கோ” அப்படின்னு சொல்றார். இவர் “கல்யாணமாவது கார்த்திகையாவது! எனக்கு, அதுக்கெல்லாம் நேரம் இல்லை”ன்னவுடனே, “அதெல்லாம் கிடையாது, எங்களுக்கு உரிமை இருக்கு” ன்னு சொல்லி, ராஜாட்ட போவோம்னு கூட்டிண்டு போறாளாம்

அங்க ராஜாக்கு ஒரு பொண்ணு இருக்கா. அவர் வந்து என் பொண்ணை இவருக்கு குடுக்கறேங்கறார். அவர் இதுக்கு சாஸ்த்ரத்துல இடம் இருக்கானு கேட்க மந்திரியை கூப்பிடறார். மந்த்ரி ஒரு பிராமணர், அவர் வறார். அவர் வந்து, எனக்கும் ஒரு பொண்ணு இருக்காள், ஒரே முகூர்த்தத்துல நாலு பொண்களை, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சாஸ்த்ரம் இருக்குனு சொல்லி, இன்னொரு, நாலாவது வர்ணத்து பெண் ஒருத்தியும் ஆசைப்படறா. அவளையும் சேர்ந்து, எல்லாரரையும் , “சரி, இது தெய்வ சங்கல்பம்”, அப்படின்னு நாலு பேரையும் கல்யாணம் பண்ணிக்கிறார், இவா நாலு பேருக்கும் பொறந்தவாதான் வரருசி, விக்ரமாதித்யன், பட்டி, பர்த்ருஹரிஅப்படின்னு அந்த பதஞ்சலி சரித்ரத்ல இருக்கு.

இப்படி ஒரு சுவாரஸ்யமான கதை, இந்த குழந்தைகளெல்லாம் பொறந்து, அவா உபநயனம் ஆகி, இந்த மஹாபாஷ்யத்தை அந்த நாலு  பேருக்கு சொல்லிக் குடுத்து, “நீங்க இதை உலகத்துல பிரசாரப் படுத்துங்கோ” ன்னு சொல்லிட்டு, இந்த சந்திரஷர்மா பதரிகாஸ்ரமத்தில் போய், தன்னுடைய முன்னாடியே குருவான கௌடபாதரை பார்த்து, நமஸ்காரம் பண்ணி, அவர் கிட்டே இருந்து சன்யாஸம் வாங்கிக்கறார். அவர்தான் கோவிந்த பகவத் பாதர்.

அந்த கோவிந்த பகவத் பாதர் தான் அப்புறம் வியாஸாச்சார்யர் சொல்லி, நர்மதை கரைல வந்து, காத்திருந்து, நம்முடைய சங்கரருக்கு, தீக்ஷை குடுக்கறார். இந்த கோவிந்த அப்படிங்கற நாமத்துல, தன்னுடய குருவோட நாமம் என்கிறதால, ஆச்சார்யாளுக்கு ப்ரீதி. பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் அப்படின்னு இந்த கோவிந்த நாமத்தை, ஒரு வாட்டிக்கு மூணு வாட்டியா சொல்றார். அப்படி கோவிந்த நாமதுல ஆசார்யாளுக்கு தனி ப்ரீத்தி.

இதோட இன்னிக்கு பூர்த்தி பண்ணிக்கறேன்.

அத்வைத குரு பரம்பரை
(21 min audio in tamil. same as the script above)

கோவிந்த நாம சங்கீர்த்தனம்…கோவிந்தா கோவிந்தா

Series Navigation<< ஸ்ரீ சங்கர சரிதம் – ஐந்தாம் பகுதி – காசியில் சங்கரர்ஸ்ரீ சங்கர சரிதம் – ஏழாம் பகுதி – பக்தியின் மூலமே ஞானம் அடையலாம் >>
Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.