ஸுப்ரமண்ய புஜங்கம் முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் (13 min audio file)
கடந்த முப்பத்திரெண்டு நாட்களாக ஸுப்ரமண்ய புஜங்கத்துல தினமும் ஒரு ஸ்லோகத்தை எடுத்துண்டு அதோட அர்த்தத்தை சிந்தனை பண்ணி சந்தோஷப் பட்டுண்டு இருந்தோம். இன்னிக்கு கடைசி ஸ்லோகம், முப்பத்தி மூணாவது ஸ்லோகம், இந்த பலஸ்ருதி ஸ்லோகம். அதை படிக்கறதுக்கு முன்னாடி sense of gratitude ன்னு சொல்றாளே, நம்மை பகவான் இந்த அளவுல வெச்சுருக்கான் அப்படீங்கிற திருப்தியும் அதனால ஒரு நன்றி உணர்ச்சியும் இருந்தாலே நமக்கு, மேலும் மேலும் அனுக்ரஹமும் க்ஷேமமும் ஏற்படறது. ஸ்தோத்ரங்களோட purpose-ஏ அதுதான். நாம எதுக்கு பகவானை ஸ்தோத்ரம் பண்ணணும்? பகவானுக்கு நைவேத்தியம் பண்ணணும்னா, அவருக்கு சாப்பட்றதுக்கு கொடுக்க போறது இல்லை, எனக்கு சாப்படறதுக்கு இன்னிக்கு நீ இந்த அன்னத்தை கொடுத்தியே, இன்னிக்கி இந்த பழங்களை கொடுத்தியே, அப்படீன்னு அவர் முன்னாடி படைச்சு நமஸ்காரம் பண்ணி, அந்த நன்றியோட அதை அவருடய ஆசீர்வாதமா ஏத்துக்கறதுங்கறது தான் நைவேத்தியம். பகவானை ஸ்தோத்ரம் பண்றதுன்னா, அந்த நன்றி உணர்ச்சியால வர்ற வார்த்தைதான் ஸ்தோத்ரம்ங்கறது. அப்பேற்பட்ட ஸுப்ரமண்ய புஜங்கம், எவ்வளவு ஒரு ஆச்சர்யமான ஒரு ஸ்தோத்ரம். எனக்கே கொஞ்சம் ஆழ்ந்து படிச்ச போது, நான் நிறைய தெரிச்சிண்டேன். அந்த நன்றியோடு இந்த முப்பத்தி மூணாவது ஸ்லோகத்தை சொல்லி பூர்த்தி பண்றேன்.
भुजङ्गाख्यवृत्तेन कॢप्तं स्तवं यः
पठेद्भक्तियुक्तो गुहं सम्प्रणम्य ।
सपुत्रंकलत्रं धनं दीर्घमायु-
र्लभेत्स्कन्दसायुज्यमन्ते नरः सः ॥ ३३॥
புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய:
படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய |
ஸபுத்ரம் களத்ரம் தனம் தீர்கமாயுர்
லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ: ||
‘ஆக்யா’ னா பேர்-னு அப்படீன்னு அர்த்தம், ‘புஜங்காக்ய’ -புஜங்கம் என்ற பெயரைக் கொண்ட, வ்ருத்தத்தில் அமைந்து இருக்கும், ‘வ்ருத்தேன க்லுப்தம்’ – வ்ருத்தத்தில் அமைந்து இருக்கும், ‘ஸ்தவம்’ – இந்த ஸ்தோத்ரம், ‘ய: படேத்’ – யவன் ஒருவன் இதை ‘பக்தியுக்த:’ பக்தியோடு கூட படிக்கிறானோ, ‘குஹம் ஸம்ப்ரணம்ய’ – முருகப் பெருமானை வணங்கி இந்த ஸ்தோத்ரத்தை, இந்த ஸுப்ரமண்ய புஜங்கதை எவன் ஒருவன் படிக்கிறானோ, ‘ஸம்ப்ரணம்ய’ – அப்படீங்கற வார்த்தை இருக்கறதுனால, நமஸ்காரம் பண்ணி, ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் நமஸ்காரம் பண்ணி, இதை பாராயணம் பண்றதுன்னு ஒரு முறை இருக்குன்னு சொல்லுவா பெரியவா. அவன் ‘ஸபுத்ரம் களத்ரம்’, அவன் பிள்ளைகளோடும், மனைவியோடும் ‘தனம்’ –செல்வத்தோடும் ‘தீர்க்கம் ஆயுஹு’ – நீண்ட ஆயுசோடும் ‘லபேத்’ – இவை எல்லாவற்றையும் அடைந்து, ‘அந்தே’ முடிவில் ‘ஸ: நரஹ’ – அந்த மனிதன், ‘ஸ்கந்தஸாயுஜ்யம்’ அடைவான். அவன் முருகப் பெருமானுடைய சாயுஜ்ய பதவியையும் அடைவான், அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.
இந்த ஸ்லோகத்துல சொல்லி இருக்கறது சத்யம் அப்படீங்கறது, என் கண் முன்னாடி நான் எங்க அப்பாவை பார்த்து இருக்கேன். எங்க அப்பா எண்பது வருஷங்கள் வாழ்ந்தார். அவருக்கு நல்ல health இருந்தது. தீர்க்காயுசா, கடைசி வரைக்கும் நன்னா திருப்தியா சாப்டுண்டு, வ்யாதிகள் எல்லாம் ரொம்ப அவரை தொல்லை பண்ணல, கடைசி ஒரு வருஷத்துல கொஞ்சம் கொஞ்சம் ஸ்ரமங்கள் இருந்தது. ஆனா அதுவரைக்கும் அவரால தன் கார்யங்கள் எல்லாம் தானே பண்ண முடிஞ்சுது. புத்தி ரொம்ப தெளிவா இருந்துது. எல்லார் கிட்டேயும் அளவற்ற அன்போடு, கருணையோடு இருந்தார்.
எங்க அப்பா பேர் சுந்தரேச சர்மா, சுந்தரம்-ன்னு கூப்பிடுவா. அவர் தினமும் காத்தால சிவ பஞ்சாயதன பூஜை பண்ணுவார். ஒரு ரெண்டு மணி நேரம் நிதானமா சிவ பூஜை பண்ணுவார். சாயங்காலத்துல திருப்புகழ் பாராயணங்கள் பண்ணுவார். திருவல்லிகேணில முருகன் திருவருட் சங்கம், அப்படீன்னு ஒரு சங்கம். அதோட founder member எங்க அப்பா. அறுபத்தியெட்டு வருஷங்களா இருக்கு. அந்த சங்கத்துல வாரா வாரம் ஒரு பஜனையாவது ஏற்பாடு பண்ணுவா. விடாமல் அந்த திருப்புகழ் பஜனைல போய் கலந்துப்பார். திருப்புகழ்ல ரொம்ப அவருக்கு இஷ்டம். திருநெல்வேலியில பிறந்தவர், அதனால திருச்செந்தூர் குலதெய்வம். அடிக்கடி திருச்செந்தூருக்கு போயிருக்கோம். அவருக்கு இந்த ஸ்லோகத்துல சொன்ன மாதிரி, மனைவி, குழந்தைகள், பணம், அந்தகாலத்துல பணம்னா, மனுஷா bank-ல லக்ஷம், கோடி சேர்த்தா தான் பணம்னு நினைக்கல. ‘அடியவர் இச்சையில் யவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே’ அப்படீன்னு அருணகிரி நாதர் பாடறார். அந்த மாதிரி பையன் college-ல சேரணுமா அதுக்கு பணம் இருந்ததா சரி. குழந்தைக்கு கல்யாணமா, அதுக்கு அப்போ பணம் கையில வந்து சேர்ந்துதுன்னா, ‘ஆஹா முருகா!’ அப்படீன்னு தான் அவா பணத்தை நினைச்சாளே தவிர, நிறைய சேர்த்து வெச்சுண்டாத் தான் பணம்னு நினைக்கல. அப்படி எங்க அப்பா பணக்காரரா இருந்தார். கொஞ்சம் கொஞ்சம் நாங்க எல்லாமும் வேலைக்கு போய் சேர்ந்து பணம் கொடுத்த பின்ன, நிறைய தான தர்மங்கள் பண்ணார். அந்த மாதிரி பணம், இல்லாத போதே பரோபகாரம் பண்ணுவார், கொஞ்சம் கையில பணம் வந்த போது தாராளமா, நல்ல கார்யங்கள் பண்ணினார். நிறைய வைதிகாளுக்கும் கோவில்களுக்கும் குடுப்பார். ஏழைகளுக்கும் கொடுப்பார். அன்னதானம் பண்றதுல அவருக்கு ரொம்ப ஆசை. நிறைய ஆத்துலயே கூப்பிட்டு சாப்பாடு போடறதும் பண்ணுவார். கோவில்ல அன்னதானதுக்கும் கொடுப்பார். அப்படி தனம், தீர்க்காயுசு எல்லாம் இருந்தது. முடிவுல அவர் அன்னிக்கு சாயங்காலம் சித்தி அடைந்தார்ன்னா, கார்த்தால என் கிட்ட
‘மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன் வந்தால் – என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்’
அப்படின்னு சொன்னார். அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்த போது, பக்கத்து ரூம்ல bedஐ சாய்க்கலாம் அப்படின்னு சொல்லி பக்கத்து Room க்கு மாத்தினா. அந்த ரூம்ல படுத்துண்டு இருந்த போது, அவர் கண்ணுக்கு முன்னாடி, ஒரு நூறு வருஷ பழைய ஒரு அறுமுக ஸ்வாமி படம், எதிர்ல அருணகிரிநாதர் நின்னு கை கூப்பிண்டு இருக்கற மாதிரி, பின்னாடி பார்வதி பரமேஸ்வரா, அந்த படத்தப் பாத்துண்டே இருந்தார். ‘தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்’ ங்கிற வார்த்தை சொன்னார். அப்படி அவர் ஸ்கந்த சாயுஜ்யம் அடைந்தார்ங்கறதை நேராகப் பார்த்தோம்.
இதுல என்னனா ‘குஹம் ஸம்ப்ரணம்ய’ – மிகவும் வணக்கத்தோடு இந்த ஸ்தோத்திரத்தை பண்ணுபவன் அப்படின்னு வருது. இந்த மாதிரி பூஜைகள் பண்றவா,முருக பக்தியோடு இருக்கிறவா இருக்கா. ஆனா ஸ்வாமிகள் சொல்லுவார் ‘முருக பக்தி பண்ணினா எப்படி இருக்கணுமோ அப்படி உங்க அப்பா இருக்கார். நீ அவரைப் பாத்துக்கோ’ என்பார். அதாவது, ஸ்வாமிகள் பெரிய மஹானாக, ஞான வைராக்கியத்தோட, உலக பாசங்கள் எல்லாம் விட்டு இருந்தார். எங்க அப்பா பேரன்,பேத்திகளைக் கொஞ்சிண்டு அவருக்கு கிடைச்ச வரங்களெல்லாம் அனுபவிச்சிண்டு இருந்தார். நான் இப்படி புரிஞ்சிண்டேன். ‘என் அளவுக்கு நீ ஞான வைராக்கியம் அடையல்லைன்னாலும், உங்க அப்பா வாழ்க்கையை அனுபவிக்கும் போது, மனசை முருகர் கிட்டயே வைச்சுண்டு இருக்கார். அதைத் தவிர அவருக்கு ஆத்ம குணங்கள் இருக்கு. இதெல்லாம் பாத்துண்டு, இந்த ஜன்மத்துல, இந்த அளவுக்கு நீ வந்தாலே, உனக்கு ரொம்ப ஒரு பெரிய பாக்கியம்’ அப்படின்னு சொல்றார்ன்னு நான் புரிஞ்சுண்டேன்.
எங்க அப்பாவோட ஆத்ம குணங்கள் எல்லாம், ரொம்ப ஆச்சரியம். அவர் நித்யம் அனுஷ்டானங்கள், பூஜை எல்லாம் பண்ணினார், திருப்புகழ் பாராயணம் பண்ணினார். அதுக்கும் மேல ஆகார நியமம். வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டார். ஹோட்டல்ல சாப்பிட மாட்டார். ரொம்ப ‘நன்னா’ சாப்பிடுவார். திருப்தியா சாப்பிடுவார். என்ன என்ன சமைக்கலாம்ன்னு plan போட்டு கறிகாய் வாங்கிட்டு வந்து அம்மா சமைத்து, டேஸ்ட்டா இருக்குன்னு சொல்லி சாப்பிடுவார். ஆனா அநாசார வஸ்துக்களைச் சேர்க்க மாட்டார்.
கவர்ன்மென்ட்ல வேலை பார்த்தார். ஒரு பைசா லஞ்சம் வாங்கினது கிடையாது. ஆனா அவருக்கு பரபரப்பே கிடையாது. எந்த ப்ரமோஷனோ. ட்ரான்ஸ்பரோ வேண்டாம்ன்னு சொல்லி அந்த க்ளர்க் வேலைல சேர்ந்து க்ளர்க் வேலையிலேயே ரிட்டயர் ஆனார். ஆனா எல்லார்கிட்டயும் நல்ல பேர். சத்யம். பொய்யே பேச மாட்டார். பொறாமையே தெரியாது.
அதிகம் பேசவே மாட்டார். ரொம்ப மௌனி. முனிவர் மாதிரி தான் அவர். நான் பிறந்து எனக்கு நாற்பத்தெட்டு வயசுக்குள்ள என் கிட்டயே ஒரு பத்து வார்த்தைகள்தான் பேசி இருப்பார்ன்னு தோணும். அவ்வளவு கொஞ்சமா பேசுவார். ஆனா பேசினா ரொம்ப இனிமையாப் பேசுவார். ஒருத்தரை புண் படுத்த மாட்டார். ஒருத்தர் மேல குத்தம் சொல்ல மாட்டார். குற்றங்களை பார்க்கவே மாட்டார். எப்படித் தான் இப்படி இருக்காரோன்னு ஆச்சரியமா இருக்கும். நாம ஒரு நாள் காத்தாலே இருந்து சாயங்காலம் வரை ‘என்னடா பேசினோம்’ ன்னு யோசிச்சு கணக்கு எடுத்து பார்த்தா, நுாத்துக்கு தொண்ணுாறு மத்தவா மேல குத்தம் சொல்வதா இருக்கு. மத்த பத்து sentence வந்து எதோ factஐ சொல்வதாக இருக்கே தவிர, மத்தவாள பாராட்டி encourage பண்ணி இனிமையா பேசிறதுங்கறது, ரொம்ப பெரிய ஒரு முயற்சியா இருக்கு. ஆனா எங்கப்பாவுக்கு அது இயல்பா வந்தது. எல்லார் கிட்டயும் ஒரு நல்லதைப் பார்த்து, அதை எடுத்துச் சொல்லி, அவாள encourage பண்ணுவார். அதை அவா life time புடிச்சிண்டு follow பண்ணுவா, பாத்துருக்கேன்.
ரொம்ப எளிமையான வாழ்க்கை. அவர் வேஷ்டி தான் கட்டிண்டு இருந்தார். life முழுக்க pant போட்டது கிடையாது. வேஷ்டி, அங்கவஸ்திரம். ஆபிஸ் போகும் போது கொஞ்ச நாள் சட்டை போட்டு இருந்தார். ரிட்டயர் ஆன பின்ன, கடைசி வரைக்கும் இருபது வருஷம் சட்டையே போடல. இருக்கிற இடமும் ரொம்ப சிம்பிளான இடத்துல தான் இருப்பார். அவருடைய தேவைகள் ரொம்ப கம்மி. அதிகமான பொருள் சேர்க்க மாட்டார். Life முழுக்க அவர் சினிமா பார்த்தது கிடையாது. கெட்ட பழக்கங்கள், சீட் ஆடறதோ, புகையிலை போடறதோ, அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. சாத்விகம்னா அவ்வளவு சாத்விகமா இருந்தார்.
தான் ஆச்சாரமா இருப்பார். மத்தவாளை, ‘இங்க நிக்கிறயே,அங்கே நடக்கறயே, இதை தொட்டயே.. கை அலம்பு’ ன்னு பேசவே மாட்டார். அவர் கிட்ட வந்து சொல்லுவா,’நீங்க ஷஷ்டி பூஜை பண்ணும் போது இவாள்ளாம் வர்றா’ ன்னு. அதுக்கு அவர் சொல்லுவார்,’எனக்கு புஷ்பம் இருக்கு. முருகன் இருக்கான். நான் குளிச்சிட்டு வந்து பூஜை பண்றேன். எல்லாரையும் திருத்தறதுக்கு எனக்கு நேரம் இல்லையப்பா’ ன்னு சொல்லிடுவார். யாராவது ரொம்ப ஆச்சாரமா இருக்கிறவா வந்தா, ‘உனக்கு முடிஞ்சா பழகு. இதெல்லாம் பகுளந்தான். நீ பாத்துக்கோ’ ன்னுடுவார். அப்படி அவர், தன் கண்ல ‘முருகன், புஷ்பம், அர்ச்சனை’ ன்னு பண்ணிண்டுருந்தார். ரொம்ப தயாள குணம், ரொம்ப பரோபகாரம். இதே நேரத்துல, நான் சொன்ன மாதிரி, பேரன் பேத்திகளோட கொஞ்சிண்டு ரொம்ப சொலப்யமாவும் இருந்தார். ரொம்ப humble ஆ, ரொம்ப சிம்பிளாவும் இருந்தார். அப்படி சிவன் சார் புக்ல சொல்ற மாதிரி ‘ஸாது’ குணங்கள் எல்லாம் அவர் கிட்ட இருந்தது.
இந்த காலத்து SSLC தான் அவர் படிச்சார். அதோட short hand கத்துண்டு வேலைக்கு போய்ட்டதால அதுலயே ரிட்டயர்ட் ஆனார். ஆனால் இந்த காலத்து படிப்பு படிக்கலயே தவிர, வேதம் படிச்சிண்டே வந்தார். நாலு காண்டம் வேதம் படிச்சார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சூர்ய நமஸ்காரம் பண்ணுவார். ஒவ்வொரு ஏகாதசிக்கும் பவமானம் படிப்பார். துவாதசிக்கு ‘தைத்ரீய உபநிஷத்’ பாராயணம் பண்ணுவார். நித்யம் ருத்ரம், சமகம், ஸூக்தாதிகள் சொல்லி பூஜை பண்ணுவார். அப்படி எது உண்மையான படிப்போ அதைப் படிச்சிருந்தார். எழுபத்தி அஞ்சு வயசுல ‘கந்தர் அலங்காரம்’ முழுக்க மனப்பாடம் பண்ணார். ‘புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டி அன்பால் முக்தியை வாங்க அறிகின்றிலேன்’ அப்படின்னு சொல்ற மாதிரி, புத்தியை பகவான் எதுக்குக் குடுத்திருக்கான்னா,பகவானோட காரியத்தப் பண்ணி முக்தியை வாங்கறதுக்குத் தான் குடுத்திருக்கான். அது அவர் பண்ணிணார். இந்த உலகப் படிப்பை அவர் ரொம்ப சட்டை பண்ணல. அப்படி ஒரு பெரியவர். முருக பக்தியினால இந்த பல ஸ்ருதியில சொன்ன எல்லாம் அவருக்கு கிடைச்சுது அப்படிங்கறத நான் நினைச்சுப் பாக்கறேன். அவருக்குப் பிள்ளையா பிறந்தது ஒரு பாக்யம். அவர்,
களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா: |
யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார ||
‘என்னைச் சேர்ந்தவா எல்லாரும் முருக பக்தியோட இருக்கணும்’ ன்னு வேண்டிண்டு இருந்தார். அதுனால தான் இந்த ஸூப்ரமண்ய புஜங்கத்தை படிச்சு புரிஞ்சுண்டு, அதை எடுத்து பேசறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது. முப்பத்துமூணு நாட்கள் நடந்த இந்த உபன்யாசத்தை அவருக்கு செலுத்திய அஞ்சலியாக நினைக்கிறேன்.
வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா
6 replies on “ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் – தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்”
இந்த திவ்ய தம்பதிகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்…நல்ல புத்திரனை தந்த அந்த அழகு சுந்தரத்திற்கு நமஸ்காரம்…இந்த கணபதிக்கும் நமஸ்காரம்…சொல்ல வேறு என்ன இருக்கு?
அன்பரே, தங்கள் தொண்டுக்கு வாழ்த்த வார்த்தைகளே இல்லை, வாழ்க வளமுடன். நன்றி.நமஸ்காரம்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
ஜ.ராதாகிருஷ்ணன்
Sir, kandar Alankaram, please.
Namaskaram Sir,
Subramanya Bhujangam upanyasam devaamrutham.
May jagadamba bless you with her infinite grace.
Thanks,
Sendhil
நன்றி.
சொல்ல வார்த்தைகள் இல்லை.
நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன்.
மஹா பெரியவா அருளால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
தங்களுக்கு என்னுடைய பணிவான நமஸ்காரங்கள் சார்
மூன்று நாட்களாக தங்களுடைய சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் உபந்யாசம் கேட்டேன்
தெய்வீக குரலில் தெய்வீகமான விளக்கங்கள்
எப்படி என் நன்றிகளை கூறுவது என தெரியவில்லை
எங்களுக்கு தங்களின் உபன்யாசம் ஒரு மகா வரம்
மூன்று நாட்கள் திரு செந்தூர் முருகரையே நினைத்திருக்கும்படி செய்தீர்
என்றும் முருகன் அருளால் அவரை நினைக்க வேண்டும்