शिवे पाशायेतामलघुनि तमःकूपकुहरे दिनाधीशायेतां मम हृदयपाथोजविपिने ।
नभोमासायेतां सरसकवितारीतिसरिति त्वदीयौ कामाक्षि प्रसृतकिरणौ देवि चरणौ ॥
சிவே பாசாயேதாம் அலகுநி தம:கூப குஹரே
தினாதீசாயேதாம் மம ஹிருதய பாதோஜ விபிநே |
நபோமாஸாயேதாம் ஸரஸகவிதா ரீதி ஸரிதி
த்வதீயௌ காமாக்ஷி ப்ரஸ்ருத கிரணௌ தேவி சரணௌ ||
இது மூக பஞ்சசதியில் பாதாரவிந்த சதகத்தில் பத்தொன்பதாவது சுலோகம். இதன் பொருள் – “சிவே” பரம மங்கள வடிவமான காமாக்ஷி தேவியே! “தம கூப குஹரே” அக்ஞானம் என்னும் பாழும் கிணற்றில் வீழ்ந்து இருக்கிறேன். “அலகுனி” மீள முடியாததாக தோன்றுகிறது. அதற்கு “த்வதீயௌ சரணௌ” உன்னுடைய இரு பாதங்கள் “பாசாயேதாம்” ஒரு கயிறாக ஆகட்டும். அதாவது ஒருவரை கயிற்றை கொடுத்து கிணற்றில் இருந்து தூக்குவது போல என்னையும் அக்ஞானம் என்னும் கிணற்றில் இருந்து தூக்கி விடு. “தினாதீசாயேதாம் மமஹிருதய பாதோஜ விபினே” என்னுடைய மனமாகிய தாமரை காட்டிற்கு அந்த பாதம் “தினாதீச:”, அதாவது பகலுக்கு தலைவனான சூரியனாக விளங்கட்டும். சூரியன் வந்தால் தாமரை மலரும். அதுபோல, என் மனது மலர வேண்டும். “நபோமாஸாயேதாம் ஸரஸ கவிதா ரீதி ஸரிதி” அழகான கவிதைகள் என்கின்ற ஆறு பெருக்கெடுத்து ஓடுவதற்கு உன்னுடைய பாதங்கள், “நபோமாஸ:” மழை மாதங்களாக அதாவது ஆவணி, புரட்டாசி போன்ற மாதங்களாக விளங்கட்டும். மழை பெய்தால் தானே ஆற்றில் நீர் ஓடும். அது போல, உன்னுடைய பாத ஸ்மரணத்தினால் என் வாக்கில் நல்ல கவிதைகள் உண்டாகட்டும். “த்வதியௌ” காமாக்ஷி, ஒப்பற்ற உன்னுடயதான பாதங்கள் “ப்ரஸ்ருத கிரணௌ” கிரணங்களால் சூழப்பட்டு அழகாக விளங்கும் உன்னுடைய சரணங்கள் “ஹே தேவி” என்னை அக்ஞானத்திலிருந்து மீட்டு, மனதை மலர வைத்து, நல்ல வாக்கினை கொடுக்கட்டும் என்று சுலோகம்.
இதில் இந்த ஸ்லோகத்தின் வரிசை மிகவும் அழகாக இருக்கிறது என்று எனக்கு தோன்றியது. ஸ்வாமிகள் எப்படி அம்பாள் பக்தி செய்தார் என்பதை காட்டுவது போல இந்த சுலோகம் அமைந்திருக்கிறது.
ஸ்வாமிகளின் சிவபக்தி பற்றி பேசின போது அம்பாள் பக்தி பற்றியும் சொல்ல வேண்டுமென தோன்றியது.
எனக்கு தெரிந்த நாளிலிருந்து ஸ்வாமிகள் பூரண ஞானத்துடன் தான் எல்லாக் கார்யங்களும் செய்தார். அவர் அவதார மஹான். அவர் செய்தது எல்லாம் ஈஸ்வர சங்கல்பத்தினால், மிகவும் வைராக்ய ஞானத்துடன் செய்தார் என்பதை நான் கண்டேன். இருந்தாலும் அவர் என்ன சொல்லுவார் என்றால் “பக்தி மார்க்கம் என்பது evolutinory. revolution கிடையாது. புரட்சிகரமாக பண்ணுவது இல்லை. பொறுமையாக இருக்க வேண்டும், என்று சொல்லி ஒரு குரு ஸ்தானத்தில் இருந்ததால், நமக்கு ஒரு பாடமாக, அவர் அப்படி பொறுமையாக பக்தி பண்ணி காண்பித்தார். “மூன்று வருடத்திற்கு ஒரு முறை பகவானிடம் நெருங்குகிறோம், பகவான் என்னை ஏற்று கொள்கிறார் என்று எனக்கு சூசகமாக தெரிகிறது” என்று சொல்லுவார்.
கடாக்ஷ சதகத்தில் என்பதிரண்டாவது ஸ்லோகம்,
नीलोत्पलप्रसवकान्तिनिर्दशनेन कारुण्यविभ्रमजुषा तव वीक्षणेन ।
कामाक्षि कर्मजलधेः कलशीसुतेन पाशत्रयाद्वयममी परिमोचनीयाः ॥
நீலோத்பல பிரஸவகாந்தி நிதர்சநேன
காருண்யா விப்ரமஜூஷா தவ வீக்ஷநேன |
காமாக்ஷி கர்மஜலதே கலஷீஸுதேன
பாசத்ரான் வயமமீ பரிமோசனியா: ||
என்று ஒரு ஸ்லோகம். இந்த ஸ்லோகத்தில் மூன்று விதமான பாசங்கள் புத்ரேக்ஷணை, தாரேக்ஷணை வித்தேக்ஷணை அல்லது ஜனேக்ஷணை என்று சொல்வார்கள். மனைவி, மக்கள், பணம், ஜனங்கள் இதிலெல்லாம் இருக்க கூடிய பாசம். இதிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.
அம்மா, உன்னுடைய கடாக்ஷம் என்கிற அகஸ்திய முனிவர் என்னுடைய கர்மா என்கிற கடலை குடித்து, அகஸ்தியர் கடலை குடித்தார். அது போல “கர்ம ஜலதேஹே கலஷீஸுதென” என் பூர்வ கர்மா கடல் போல உள்ளது. கர்மத்தினால் தான் இந்த பாசம். இந்த மூன்று விதமான பாசங்களிளிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
ஸ்வாமிகள் இதை தினம் எத்தனை முறை ஆவர்த்தி பண்ண வேண்டுமென கேட்டதற்கு, மூன்று முறை பண்ணுங்கள், என்று சொல்லி தினமும் மூன்று முறை பண்ணினார். பிறகு ஸன்யாசம் கிடைத்தவுடன், “நான் மூன்று முறை இதை ஆவர்த்தி பண்ணியதால் தான், பாசத்திலிருந்து அம்பாள் என்னை விடுவித்து விட்டாள். எனக்கு ஸன்யாசம் கிடைத்தது” என்று சொல்வார்.
அதற்கு பிறகு ஞானம் பெற வேண்டி கடாக்ஷ சதகத்தில் தொண்நூற்று ஏழாவது ஸ்லோகம்
यावत्कटाक्षरजनीसमयागमस्तेकामाक्षि तावदचिरान्नमतां नराणाम् ।
आविर्भवत्यमृतदीधितिबिम्बमम्ब संविन्मयं हृदयपूर्वगिरीन्द्रशृङ्गे ॥
யாவத்கடாக்ஷ ரஜநீ ஸமயாகமஸ்தே
காமாக்ஷி தாவத் அசிராந்நமதாம் நராணாம் |
ஆவிர்பவத்யம்ருததீதிதி பிம்பமம்ப
ஸம்வின்மயம் ஹிருதய பூர்வ கிரீந்திர ச்ருங்கே ||
“யாவத்”, எதுவரை “கடாக்ஷ ரஜநீ ஸமய:”, அம்பாளின் கடாக்ஷம் என்கிற இரவு வேளை வருகிறதோ, அதுவரை “அசிராத் நமதாம் நராணாம்” இடைவிடாது நமஸ்காரம் பண்ணிக் கொண்டு இருக்கக் கூடிய “நராணாம்”, அந்த மனிதனுக்கு, “ஹிருதய பூர்வ கிரீந்திரச்ருங்கே”, அவனுடைய ஹிருதயமாகிய மலைச் சிகரத்தில் “சம்வித்” ஞானம் என்கிற “அம்ருததீதிதி” அம்ருத மயமான, அம்ருதத்தை கொட்டும் ஞானம் என்கிற சந்திரன் “ஆவிர்பவதி” உதயமாகிறது என்று பொருள். ஸ்வாமிகள், “ஸன்யாசம் வாங்கிக் கொண்டேன் இன்னும் எனக்கு ஞானம் வரவில்லையே” என்று சொல்லி, இந்த ஸ்லோகத்தை தினம் மூன்று ஆவர்த்தி பண்ணுகிறேன் என்று நிறைய வருடங்கள் பண்ணிக்கொண்டு இருந்தார்.
அதற்கு பிறகும், சுகாசாரியார் கிருஷ்ணன் கதையை சொல்லிக் கொண்டிருந்தது போல, ஞானம் அடைந்த பின்பும், ஸ்வாமிகள் பகவானையே கடைசி நாள் வரை பேசிக் கொண்டிருந்தார். “சிவே பாசாயேதாம்” என்கின்ற ஸ்லோகத்தில் சொன்னது போல நாம் இந்த ஈஷணைகளினால் துன்பப் படுகிறோம். இந்த அக்ஞானத்திலிருந்து விடுபட வேண்டும். பிறகு மனமாகிய தாமரை ஞானத்தினால் மலர வேண்டும் பிறகு பகவானையே பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். என்று இந்த ஸ்லோகத்தில் உள்ளதைப் போல ஸ்வாமிகள், கொஞ்சம் கொஞ்சமாக பாசங்களிலிருந்து விடுபட்டு, ஸன்யாசம் வாங்கிக் கொண்டு, பிறகு மனது மலர்ந்து ஞானத்துடன் பகவானையே பேசிக்கொண்டு விளங்கினார்.
அம்பாள் மீது பக்தி பண்ணுவதை இப்படி ஒரு விதமாக அவர் வாழ்ந்து காண்பித்தார். இது அவர் என்னிடம் சொன்னது. ஆனால் எப்பவுமே அவர் ஞானிதான். இப்படி படிப்படியாக ஞானம் அடைந்தார் என்று சொல்வது கூட அபசாரம் என்று தோன்றுகிறது. ஆனால் அவர் இப்படிதான் சொல்லிக் கொண்டார். என்னை அம்பாள் இந்த பாசத்திலிருந்து விடுவித்து விட்டாள், என்றும், ஞானதிற்காக இதை பிரார்த்தனை பண்ணுகிறேன் .என்று சொல்வார். “ஆதாரமிலேன் அருளைப் பெறவே” என்று இருந்தேன் “தன்னந்தனி நின்றது தானறிய” என்று பகவான் உணர்த்தி விட்டார் என்று தான் ஞானம் அடைந்ததை சொல்லியிருக்கிறார்.
இன்னொன்று சொல்ல வேண்டும். நான் ஸ்வாமிகளிடம் பழகிய காலத்தில் ஏதோ நிறைய புத்தகங்கள் படித்து “சௌந்தர்யலஹரி படிக்கிறேன். லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன்” என்று சொல்வேன். அதற்கு அவர் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னார். சௌந்தர்யலஹரி ஏன் வேண்டாம் என்று சொன்னார் என்றால் அதில் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் இவ்வளவு ஆவர்த்தி செய்தால் இன்ன பலன். ஜனவச்யம், தனாகர்ஷனம், என்று இருந்ததினால் நான் எங்கே இந்த பக்தி மார்கத்தை விட்டு விலகி விடுவேனோ என்று கவலைப் பட்டு அப்படி சொன்னார்.
புத்தி இருப்பது முக்யமல்ல, புத்தியினால் பல விஷயங்களை தெரிந்து கொண்டு அம்பாள் உபாசகர் என்று சொல்லிக் கொண்டு திரிந்தால் கர்வம்தான் வருமே ஞானம் வராது. கர்வம் போனால் தான் நமக்கு ஞானம் ஏற்பட்டு, பேரானாந்தத்தில் திளைக்க முடியும். அது தான் முக்யமே தவிர பல விஷயங்கள் தெரிந்து கொண்டு பலன் இல்லை. உனக்கு ஸ்ரீ வித்யா உபாசனை, காமகலா தியானம், நவாவர்ண பூஜை, சண்டி ஹோமம், மந்த்ரம், தந்த்ரம், யந்த்ரம் எல்லாமே மூக பஞ்சசதி தான். இதை பாராயணம் பண்ணு என்று சொல்லிவிட்டார்.
தான் ரொம்ப நாள் உபாசித்த ஒரு மஹாபெரியவா சித்திரத்தையும் எனக்கு கொடுத்தார். இதுதான் இந்த மஹாபெரியவா தான் காமாக்ஷி “குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி” புரிந்து கொண்டாயா என்பது போல அது முதல் அறிமுகம். அப்பறம் பார்த்தால் குண்டலினி யோகம் போன்ற அம்பாள் தத்துவங்கள் எல்லாம் இந்த மூகபஞ்ச சதீ ஆர்யா சதகத்தில் வருகின்றன. இது அம்பாள் விஷயம் என்று புரிந்து கொண்டாயா, என்று சொல்லிவிட்டு, அடுத்து நீ தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் “அம்பாளின் பாதார விந்தத்தில் நமது அகம்பாவத்தை விட்டு நமஸ்காரம் பண்ண வேண்டியது” என்று சொல்வது போல பாதாரவிந்த சதகம் வருகிறது. இதற்கு பிறகு “மனது வைத்து அம்பாளின் பெருமையை இடையறாது ஸ்தோத்ரம் செய்ய வேண்டும்”. இது ஸ்துதி சதகம். “இப்படி இடையறாது ஸ்தோத்ரம் செய்து கொண்டிருந்தோமானால் அம்பாளுடைய கடாக்ஷம் கிடைக்கும்.” என்று சொல்வது போல அடுத்து கடாக்ஷ சதகம்.
ஸ்வாமிகள் எனக்கு கொடுத்த மஹாபெரியவா சித்திரத்திலும் ஒரு கர்ப்பமாக உள்ள ஒரு ஸ்திரீ இருப்பது போல அந்த படம் இருக்கும். மஹாபெரியவா மிகவும் ஒல்லி. ஆனால் அந்த படம் அப்படிதான் இருக்கும். ஒரு தாயார் போல இருக்கும். அப்பறம் கடாக்ஷம் தெரியும், மந்தஸ்மிதம், புன்சிரிப்பு இதுதான் அந்த படத்தில் இருக்கும். “பெரியவா தான் காமாக்ஷி. நீ இவரை வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டார். இந்த கடாக்ஷம் கிடைத்து விட்டது என்றால் பாசத்திலிருந்து விடுபடுவோம், இந்த புன்சிரிப்பு என்கிற மந்தஸ்மிதம் தான் ஞானம். ஞான சந்த்ரிகையும் ஆனந்த காற்றும் வீசும் உப்பரிகையில் போய் இருக்கலாம்.”
இது ராஜ மார்க்கம் “செக்கனி ராஜ மார்க்கமுலுண்டக” என்று தியாகராஜர் பாடினது மாதிரி. இது இருக்கும்போது நீ எதற்கு அம்பாள் உபாசனை என்று வேறு வழிகளில் சிக்கி கொள்ள வேண்டும் என்று கருணையுடன் ஆனால் ஆணித்தரமாக சொன்னார். எவ்வளவு ஆணித்தரமாக என்றால் – நான் தெய்வத்தின் குரல் ஐந்து பாகங்களையும் முழுக்க அவரிடம் படித்திருகிறேன். ஆனால் ஆறாம் பாகத்தில் சௌந்தர்யலஹரி விஷயம் உள்ளது. ஆறாம் பாகத்தை படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார், வழி தவறி அதில் மாட்டிக்கொண்டு விடக் கூடாது என்று அப்படி சொன்னார். மூக பஞ்சசதி பாராயணம் பண்ணு. எளிமையாக இரு. அநுக்ரஹம் கிடைக்கும் என்று சொன்னார். அந்த பாதையில் போக முயற்சி செய்து கொண்டிருகின்றேன். அம்பாள் தான் வழி விட வேண்டும்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா கோவிந்தா…
ஸ்வாமிகள் அம்பாள் பக்தி (10 min audio in tamizh, same as the transcript above)
One reply on “கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அம்பாள் பக்தி”
ஈஸ்வரனின் பத்நியும், மங்கள ஸ்வரூபினியுமான.காமாக்ஷியின் சரணங்கல் அஞ்ஞானம் , அறியாமை எனும் இருள் நிறைந்த ப்பாழுங்கினற்றிலிருந்து கரையேற உதவும் தாம்புக்கயிரு போலும்,, இதயம் என்ற தாமரைக் காட்டில் விளங்கும் சூர்யனாகவும், ரசம் ததும்பும் கவிதை வெள்ளத்தை ப பெருகச் செய்வதில் மழைக் காலமான ஆவணி மாதமாக வும் விளங்குகிறது !
காமாக்ஷி முக்திக்கு வித்தானதும், அழகாகச் சுழல்வதும்மான காமணின் இருமாப்பினை மீண்டும் ஒளிரச் செய்ததும், எல்லாருக்கும் க்ஷேமத்தை அருளும் உன் கடை கண் பார்வைக்கும் கரம் கூப்பி வழி படுகிறேன். என அடுத்த ஸ்லோகத்தில் சொல்வது எத்தகைய பொருத்தம்,!!
மன்மதன் வரும் நேரம் இரவு ! இருள் நிறைந்த நேரத்தில் யாவரும் வயப்படும் வேலை அல்லவா? அந்த நேரம் வரும் வரை நான் உன் நாம ஜபம் செய்து, உன் கடாக்ஷம் , ஞானம் அடைகிறேன் என்ற. கருத்துக் கொண்ட ஸ்லோகம் பக்தியின் மேன்மை, நாமா ஜெபத்தின் மகிமை இவற்றை விளக்குகிறது,,!
நாம பாராயண பிரீத்தா நந்தி வித்யா நடெஸ்வரி என்ற நாமாவால் இது விளங்கும் !!
அழகான maeRkoaLutan தகுந்த விரிவாக்கம் ,!!
ஜய ஜய ஜகாதம்ப சிவே …….