Categories
Govinda Damodara Swamigal

ராகா சந்திர ஸமான காந்தி வதனா – மஹாபெரியவா ஸ்துதி

ராகா சந்திர சமான காந்தி வதனா (14 min audio in tamizh, same as the transcript below)

மூக பஞ்சசதியில், ஸ்துதி சதகத்தில் ஒரு ஸ்லோகம். அனேகமாக எல்லாரும் அறிந்த சுலோகம், உபன்யாசகர்கள் அதிகமாக சொல்வார்கள், சந்கீத வித்வான்கள் கூட இதை அதிகமாக பாடுவதுண்டு.

राकाचन्द्रसमानकान्तिवदना नाकाधिराजस्तुता

मूकानामपि कुर्वती सुरधनीनीकाशवाग्वैभवम् ।

श्रीकाञ्चीनगरीविहाररसिका शोकापहन्त्री सतां

एका पुण्यपरम्परा पशुपतेराकारिणी राजते ॥

ராகா சந்திர ஸமான காந்தி வதனா நாகாதி ராஜஸ்துதா

மூகானாமபி குர்வதீ ஸுரதுநீ நீகாஷ வாக்வைபவம்

ஸ்ரீ காஞ்சீநகரீ விஹார ரஸிகா ஷோகாபஹன்த்ரீ ஸதாம்

ஏகா புண்ய பரம்பரா பசுபதே: ஆகாரிணி ராஜதே
மஹா பெரியவா குரலில் இந்த ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் என்னவென்றால், “ராகா சந்திர ஸமான காந்தி வதனா“ – “முழுநிலவினை போன்ற காந்தி கொண்ட முகம், அம்பாளுடைய முகம். இது ஒரு பூரணமான உவமை, ஒரு உவமை சொல்வதென்றால் , ஒரு உவமை இருக்கவேண்டும், உவமைஉருபு இருக்கவேண்டும், உவமேயம் இருக்கவேண்டும், அந்த உவமை பொருத்தமுள்ளதாக இருக்க வேண்டும், அப்படி இந்த “ராகா சந்திர ஸமான காந்தி வதனா “ அப்படி என்றால், பூரண சந்திரன், பௌர்ணமி அன்று வரக்கூடிய முழுநிலவினை போல காந்தி, கொண்ட முகம், அம்பாளுடைய முகம். காஞ்சிபுரம் சென்றால், அன்னை காமாக்ஷியின் முகம், அந்த சிலை கருப்பு சிலையாக இருந்தாலும் கூட, பால் நிலவு போன்ற அந்த காந்தி நிரம்பியதாக இருப்பதை தான் இந்த பாட்டில் சொல்கிறார்.

“நாகாதி ராஜஸ்துதா”, சொர்கத்திற்கு அதிபதியான இந்திராதி தேவர்களெல்லாம் அம்பாளை ஸ்தோத்ரம் செய்கின்றனர்.

அம்பாள் பக்தர்களுக்கே ஒரு வழக்கம் என்னவென்றால் எல்லா தெய்வங்களும் எங்கள் காமாக்ஷியைத் தான் நமஸ்காரம் செய்கிறார்கள், ஸ்தோத்திரம் செய்கிறார்கள் என்று கூறுவதில் ஒரு உத்சாகம், ஒரு சந்தோஷம். அது வாஸ்தவம் தானே, காஞ்சிபுரத்தில், காமாக்ஷி தான் ராஜராஜேஸ்வரி. அங்கே வேறு எந்த சிவன் கோவிலிலும் அம்பாள் சன்னதி தனியாக கிடையாது. அங்கு நூற்றியெட்டு சிவன் கோவில் இருக்கிறது என்று சொல்வார்கள். பிரதானமான பெரிய சிவன் கோவில்களே இருபது, இருபத்திஐந்து இருக்கின்றன. எல்லா சிவன் கோவில்களுக்கும் அம்பாள் சன்னதி காமாக்ஷி தான். ஏகாம்பரேஸ்வரர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், அங்கு வரதராஜ பெருமாள் கோவில் வரைக்கும், அந்த க்ஷேத்ரத்தில் இருக்கிற எந்த கோவிலில் ஒரு உத்சவம் நடந்தாலும், அந்த ஸ்வாமி புறப்பாடு செய்து காமாக்ஷி கோவில் வந்து, காமாக்ஷி அம்மன் கோவில் சுற்றி உள்ள நாலு மாட வீதிகளிலும் பிரதக்ஷணம் செய்து கொண்டு செல்வார்கள். அப்படி ஒரு வைபவம் காமாக்ஷி அம்பாளுக்கு.

அதனால் அம்பாளை எல்லாருக்கும் மேலாக இப்படி கூறுவதில், அம்பாள் பக்தர்களுக்கு ஒரு உத்சாகம். சங்கரர் கூட “பிரம்மா விஷ்ணு எல்லாரும் பிரளயத்தில் லயமாகிவிடும் போது, ஆலஹால விஷத்தினை உண்ட பின்னும் பரமேஸ்வரன் எப்படி தீர்காயுளடன் இருக்கிறார் என்றால், ஹே அம்மா, நீ காதில் அணிந்துள்ள பனை ஓலை தானே காரணம்” என்று கூறுகிறார். அதாவது, “தவ ஜனனி தாடங்க மஹிமா”, அம்பாளுடைய மாங்கல்ய பலம் என்று கூறுவார்களே, அந்த பதிவ்ரத்யத்தால், தபசினால் பரமேஸ்வரன் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று கூறுகிறார். ஆதி சங்கரர்.

இதேபோல, ஆனந்த சாகரஸ்த்வம் என்று ஒரு ஸ்லோகம். நீலகண்ட தீக்ஷிதர் என்று ஒரு மஹான் பண்ணினது. அப்பைய தீக்ஷிதருடைய தம்பி பேரர் அவர். அவர் மீனாக்ஷி தேவியின் பக்தர். அவர் மிகவும் வேடிக்கையாக சொல்வார். இந்த காமனை எரித்தார் என்று பரமேஸ்வரனுக்கு பெயர். ஆனால், காமனை எரித்தார் என்றால், நீதான் அவரது பாதி உருவம். நெற்றிக்கண்ணில் இடது பக்கம் உனக்கு தந்துவிட்டார். அப்படி இருக்க காமனை எரித்தார் என்கிற பெயரில் பாதி புகழ் உனக்குத்தானே வரவேண்டும். சரி அதுவாவது போகட்டும், இந்த காலனை காலால் உதைத்தார் என்கிற பெயரை அவருக்கு எப்படி தரமுடியும்? இடதுகாலால் தானே உதைத்தார், அந்த பெருமை முழுதும் உனக்குத்தானே வரவேண்டும் என்று கூறுகிறார். இது போல, அம்பாள் பக்தர்களுக்கு அம்பாளுக்கு தான் எல்லா பெருமைகளும் வரவேண்டும், எல்லாரும் அம்பாளுக்கு தான் நமஸ்காரம் செய்கிறார்கள் என்று கூறுவதில் ஒரு சந்தோஷம்.

அடுத்த வரி “மூகானாமபி குர்வதீ ஸுரதுநீ நீகாஷ வாக்வைபவம்” ஸுரதுநீ என்றால் கங்கா தேவி, எப்படி கங்கை பிரவாகமாக போகிறாளோ, அது போல ஒரு ஊமையை கூட, கங்கா பிரவாகம் போல பேச வைக்கும் அந்த அனுக்ரஹம் அம்பாளால் பண்ண முடியும். இந்த இடத்தில் மூக கவி தன்னுடைய அனுபவத்தினை கூறுகிறார். அவர் ஊமையாக இருந்து இப்பேற்பட்ட கவிதைகளை பண்ணக்கூடிய அனுக்ரஹம் அம்பாளினால் தானே அவருக்கு கிடைத்தது.

“ஸ்ரீ காஞ்சீநகரீ விஹார ரஸிகா”, காஞ்சி நகரத்தில் வசிப்பதிலேயும், விளையாடல்கள் பண்ணுவதிலேயும், மிகவும் ரஸிகா. சந்தோஷாமாக அந்த காஞ்சிபுரத்தில் அம்பாள் இருக்கிறாள்.

“ஷோகாபஹன்த்ரீ ஸதாம்”, சாதுக்களுக்கு ஏதாவது ஒரு வினையினால் ஒரு துக்கம் வந்ததென்றால், “ஜகதம்பா, காப்பாற்று” என்று சொல்லி காமாக்ஷிக்கு ஒரு நமஸ்காரம் செய்தால், அதனை போக்கிவிடுவாள். “ஸதாம்” சாதுக்களுக்கு சோகத்தினை போக்குகிறாள் என்பதை, அபிராம பட்டரும், அபிராமி அந்தாதியில் “தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்” என்ற பாட்டில் கூறும்போது, “அன்பர் என்பவர்க்கே” என்று கூறுகிறார். அது போல நாமும் ஒரே ஒரு முயற்சி செய்யவேண்டும், அந்த அம்பாளுடைய சரணாரவிந்தங்களை பிடித்து கொள்வது என்பது நாம் செய்யவேண்டும். அந்த அன்பை நாம் காண்பிக்க வேண்டும். அப்போ நமது கஷ்டங்ககளை போக்கிவிடுவாள்.

“ஏகா புண்ய பரம்பரா பசுபதே: ஆகாரிணி ராஜதே” அம்பாளுடைய பெருமையை சொல்லும் போது, “ஏகா புண்ய பரம்பரா பசுபதே:” அந்த பசுபதியானவர், நிரம்ப புண்யம் செய்து, நிறைய தபஸ் செய்து, அந்த புண்யம், தபசுக்கு அவருக்கு கிடைத்த பலன் தான் காமாக்ஷி என்று கூறுகிறார். “ஏகா புண்ய பரம்பரா பசுபதே: ஆகாரிணி ராஜதே” அந்த புண்யமெல்லாம் சேர்ந்து ஒரு உருவம் எடுத்தது, அது தான் காமாக்ஷி, காஞ்சிபுரத்தில் விளங்குகிறது, வந்து பாருங்கள் என்று கூறுகிறார்.

இந்த ஸ்லோகத்தை படிக்கும்பொழுது ஸ்வாமிகள் என்னை, குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி, மஹாபெரியவா தான் காமாக்ஷி என்று நினைத்து மூகபஞ்ச சதீ சொல்லிகொண்டிரு, உனக்கு இகபர சௌபாக்கியம் எல்லாம் கிடைக்கும், நீ உன்னையே certify செய்து கொள்ளாதே, நான் material ஆக நன்றாக வந்துவிட்டோமா, Spritual ஆக மேலே வந்துவிட்டோமா என்று இது போலவெல்லாம் சர்ச்சையே செய்யாமல், ஐந்து ஐந்து ஆவர்தியாக மூக பஞ்சசதி திரும்ப திரும்ப வாசித்து கொண்டிரு. “பித்யதே ஹ்ருதயக்ரந்தி: சித்யந்தே ஸர்வசம்சயா: க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே” என்று மனதில் இருக்கிற முடிச்செல்லாம் அவிழும், எல்லா சந்தேஹகங்களும் நீங்கும், ஞானம் பிறக்கும், எல்லா காரியங்களும் முடிந்துவிடும், அந்த உண்மையின் தர்சனம் கிடைக்கும் என்கிற வார்த்தைகளை எழுதிக் குடுத்திருக்கிறார்.

ஸ்வாமிகள் அப்படி சொன்னதனால், எனக்கு இந்த “ராகா சந்திர ஸமான காந்தி வதனா” என்று படிக்கும்போது, இது மஹாபெரியவாளுக்கும் பொருந்துமே என்று தோன்றுகிறது. எப்படி என்றால்,

மஹாபெரியவாளையும் தரிசனம் செய்யும் போது, முதலில் அந்த மேனாவின் திரையை விலக்கும் போது, அல்லது ஒரு கதவை திறந்து தர்சனம் குடுக்கும்போது, கோடி சூர்ய பிரகாசமாக இருக்கும், கண்ணே கூசும். ஒரு ஐந்து நிமிடம் பார்த்து கொண்டிருக்கும் போது, அந்த புன்சிரிபெல்லாம் பார்த்த பின், அப்படியே குளுமையாக நிலவு போல ஆகிவிடுவார்.

“நாகாதி ராஜஸ்துதா” இந்த்ராதி தேவர்களெல்லாம் அவரை ஸ்தோத்திரம் செய்தார் என்பது அன்று மட்டும் அல்ல. அன்று அவர் இருக்கும் பொழுது President, Prime Minister, ராஜாக்களும் ராணிகளும் வந்து நமஸ்காரம் செய்தது ஆச்சர்யம் இல்லை, இன்றும் எல்லாரும் அவருடைய ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் உலகம் முழுக்க அவருடைய ஜயந்தியும், ஆராதனையும், கொண்டாடுகிறார்கள் என்றால், அவர் சாக்ஷாத் பரமேஸ்வரன், சாக்ஷாத் காமாக்ஷி என்பதினால்தானே.

“மூகானாமபி குர்வதீ ஸுரதுநீ நீகாஷ வாக்வைபவம்” என்று ஊமையும், அம்பாள் பேச வைப்பாள் என்பதற்கு ஒரு உதாரணம்.

TS சாரி என்று ஒருவர், ஆல் இந்தியா ரேடியோ வில் வேலை செய்து கொண்டிருந்தார். இப்போது மடத்துலேயே முழு நேரமும் சேவை செய்கிறார். அவர் மஹாபெரியவாளை ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை தரிசனம் செய்து கொண்டிருந்தார். அவருடைய பெண், மூன்று வயது வரைக்கும் எதுவும் பேசவில்லை. அவருடைய மனைவி, அவரிடம், “மஹாபெரியவாளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று கூறியவுடன், ஒரு ஞாயிற்று கிழமை குழந்தையோடு மஹாபெரியவாளிடம் சென்று “இந்த குழந்தை பேசவேயில்லை 3 வயது ஆகிவிட்டது” என்று கூறுகிறார்.

மஹாபெரியவா அன்று நாலரை மணியிலேர்ந்து ஆறு மணி வரைக்கும் கண்களை மூடி த்யானம் செய்து கொண்டிருந்தார்களாம். ஞாயிற்றுகிழமை நாலரை ஆறு இராகு காலம், அந்த நேரம் முழுக்க எதோ ஜபித்திருக்கிறார், வேண்டியிருக்கிறார். பிறகு கண்களைத் திறந்து, “அந்த குழந்தை நன்றாக பேசுவாள், நிறைய பேசுவாள்” என்று சொன்னார்களாம். அப்புறம் ஜாக்கிரதையாக, விளக்கை கொடுத்தனுப்பி, அவரையும் குழந்தையையும் train ஏற்றி விட சொன்னார்களாம். அந்த குழந்தை அவர்களின் அகத்திற்கு வந்து உள்ளே நுழைந்தவுடன், தட்டெடுத்து வந்து, “அம்மா பசிக்கிறது மம்மு குடுமா“ என்று கூறியாதாம். அப்படி, ஊமையை பேசவைத்தது, இந்த கலி காலத்திலேயும் மஹாபெரியவா செய்திருக்கிறார்.

“ஸ்ரீ காஞ்சீ நகரீ விஹார ரஸிகா” – காஞ்சிபுரத்தில் வசிப்பதுக்கும், திருவிளையாடல்கள் செய்வதற்கும், மிகவும் விருப்பத்துடன் செய்தவர் மஹாபெரியவா. அவருக்கு முன்னால், கும்பகோணம் மடம் கும்பகோணம் ஸ்வாமிகள் என்றே பெயர் இருந்தது. பல காலங்களுக்கு முன்னால், மடத்தை போர் முதலியவைகளினால் கும்பகோணத்திற்கு மாற்றி சென்று விட்டார்களாம். அதனால் அப்பொழுது கும்பகோணம் ஸ்வாமிகள் என்று தான் பெயர் இருந்தது.

ஆனால் மஹாபெரியவா, மோக்ஷபுரியான காஞ்சிபுரம் வேண்டும், இங்கே காமாக்ஷி சன்னதி வேண்டும் என்று இந்த மடத்தை, நாமெல்லாம் காஞ்சி பெரியவா, காஞ்சி பெரியவா என்று கூறுகிறோமே, அப்படி காஞ்சிபுரத்திற்கு மாற்றிக் கொண்டு, காஞ்சியை அதிஷ்டானமாக ஆக்கிக் கொண்டு, ஜகத்குருவாக விளங்கி, பாரத தேசம் முழுக்க மூன்று முறை பிரதக்ஷிணம் செய்து, காசியில், சென்று, அன்னபூரணி பூஜை, காசி விசாலாக்ஷி தர்சனம், இங்கு காமாக்ஷிக்கு கும்பாபிஷேகம், மதுரையில் மீனாக்ஷிக்கு கும்பாபிஷேகம் செய்வித்து அப்படி தனது அம்பாள் பக்தியை பிரகடனம் செய்துகொண்டு இருந்தார்.

அவரை தூக்கி செல்லும் போகிகள் கூட காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று பாடிக் கொண்டுதான் செல்வார்களாம்.

கடைசியில் காஞ்சிபுரத்திலேயே வந்து இருந்து, எல்லாருக்கும் அனுக்கிரகம் செய்து, அங்கேயே அதிஷ்டானமும் கொண்டு அருள் பாலித்து வருகிறார். இப்படி காஞ்சிபுரத்திலேயே இருப்பதற்கு விருப்பப் பட்டவர் என்றால் அது மஹாபெரியவா தான். இன்றும் காஞ்சிபுரத்திற்கு, காமாக்ஷி இருக்கிறாள், ஏகாம்பரேஸ்வரர் இருக்கிறார், குமரக்கோட்டத்தில் சுப்ரமணிய ஸ்வாமி இருக்கிறார், ஹஸ்திகிரியில் வரதராஜ பெருமாள் இருக்கிறார் என்பதோடு, நமது மஹாபெரியவா அதிஷ்டானம் இருக்கிறது. தரிசனம் பண்ணவேண்டும் என்று காஞ்சிபுரம் ஓடி செல்பவர்கள் அதிகம்.

“ஷோகாபஹன்த்ரி ஸதாம்” – சாதுக்களுக்கு சோகத்தினை போக்குபவர். மஹாபெரியவா சந்திரமௌலீச்வர பூஜை செய்தார், ஆதி சங்கரருடைய பாஷ்யங்களெல்லாம் பாடம் எடுத்தார் என்பதெல்லாம் விட, எல்லாருக்கும் நடமாடும் தெய்வமாக ஏன் தெரிந்தார் என்றால், யார் அங்கு சென்று ஒரு நமஸ்காரம் செய்து, தனது கஷ்டத்தை சொன்னாலும் அந்த கஷ்டம் தீரும் என்பதினால் தானே எல்லாரும் அவரை தெய்வமாக வைத்திருந்தார்கள். அப்படி ஆபத்பாந்தவராக, அனாதரக்ஷகராக, கண்கண்ட தெய்வமாக மஹாபெரியவா இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.

“ஏகா புண்ய பரம்பரா பசுபதே: ஆகாரிணி ராஜதே” – பரமேஸ்வரன் செய்த புண்ய பரம்பரையெல்லாம் சேர்ந்து ஒரு உருவம் எடுத்து காமாக்ஷி ரூபமாக இருப்பது போல, பரமேஸ்வர அவதாரமான ஆதிசங்கர பகவத்பாதாள், மடங்களை ஸ்தாபனம் செய்து, சந்திரமௌலீச்வர பூஜை செய்யவேண்டும் என்று அவர் நியமித்தது, அத்துணை பெரியவாளும், அறுபத்தியேழு பீடாதிபதிகளும் செய்த சந்திரமௌலீச்வர பூஜையின் புண்யங்களின் பலனாக ஒரு மஹாபெரியவா அவதாரம் செய்து, அம்பது வருஷங்களுக்கு மேல் சந்திரமௌலீச்வர பூஜை செய்தார்.

அல்லது அந்த சந்திரமௌலீச்வரருக்கே மஹாபெரியவா வந்து நம்மை பூஜை செய்யவேண்டும், காமாக்ஷி இந்த உருவம் எடுத்து தன்னை பூஜை செய்ய வேண்டும் என்று பரமேஸ்வரன் செய்த பிரார்த்தனையால் தான் மஹாபெரியவா அவதாரம் எடுத்தார் என்று தோன்றுகிறது. எத்தனை வருடம் சந்திரமௌலீச்வர பூஜை, பிரதோஷ பூஜை, நவாவர்ண பூஜை. பூஜா துரந்தரராக இருந்து நமக்கெல்லாம் அனுக்ரஹம் புரிந்தார். இப்படியெல்லாம் மஹாபெரியவாளை அனுபவிக்க நமக்கு சொல்லி குடுத்த கோவிந்த தாமோதர ஸ்வாமிகளையும் நினைத்து ஒரு நமஸ்காரம் செய்வோம்.

ஜானகீ காந்த ஸ்மரணம்!!! ஜய ஜய ராம ராம!!!

4 replies on “ராகா சந்திர ஸமான காந்தி வதனா – மஹாபெரியவா ஸ்துதி”

Hara Hara shankara
Jaya Jaya shankara
I am a very ordinary person
Past one month started chanting this sloka
Today I suddenly got this devine essence of this sloka
Tears strated rolling….

தேவராஜன் என்றழைக்கப்படும் இந்திரனால் வணங்கப் பட்டவளும்,
சாதுக்களின் துயரினைத் துடைக்க வல்லவளுமான காமாக்ஷி ஊமைகளையும் தன் தாம்பூல உச்சிஷ்டத்தால் பேசவும்.வைக்கிறாள்! மூல கவியான நம் 20 வ்து சங்கரர் இதற்கு ஒர் எடு்துக்காட்டு ! காஞசியில் அம்பாள் பல லீலைகள் புரிந்து, சிவ பெருமானின் புண்ய பலத்தால் அவருக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றால் மிகையில்லை! திரு. கணபதி சுப்ரமணியன் சொன்னது போல் மஹா பெரியவா காமாக்ஷி ரூபமாக இருந்து குறைகளையெல்லாம் களைந்தார்!
அவர் வாழ்ந்த காலத்தில் அவரால் மிதிக்கப் பெற்ற மண்ணில் நாம் வாழவும், அவர் சுவாசக் காற்றை நுகர்வதற்கும் புண்யம் பல ஜன்மத்தில் செய்திருக்க வேண்டும்!
ஒவ்வொரு ஸ்லோகமும் செறிந்த கருத்துடையது! விளக்கம், உவமை, தலைப்பு யாவும் கன ஜோர்! வாழ்க அவர்தம் பணி! ஜய ஜய சங்கரா…

ஒவ்வொரு உவமான உபமேயமும் எப்படிக் கொணர்ந்து சேர்த்து மாலையாக்கி அம்பாளுக்கே அணிவிக்கிறார்போல் அருமையிலும் அருமை !!
You are made for this service Ganapathy !!
I am blessed to be in your association !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.