Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 5, 6 ஸ்லோகங்கள் பொருளுரை


சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 5, 6 தமிழில் பொருள் (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 5 and 6)

ஆதிசங்கர பகவத் பாதாள் அருளிச் செய்த சிவானந்த லஹரியில ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு வர்றோம். முதல் ஸ்லோகத்துல பார்வதி பரமேச்வராளை சேர்த்து ‘சிவாப்யாம் நதிரியம்’ ன்னு அவாளுக்கு நமஸ்காரம்னு சொன்னார். அடுத்த ஸ்லோகத்துல சிவானந்த லஹரின்னு சம்புவிலிருந்து கிளம்பி வரக் கூடிய அந்த சிவானந்த வெள்ளம் என் மனமாகிய மடுவில் வந்து தங்கட்டும்ன்னு ப்ரார்த்தனை பண்ணினார். அடுத்த ஸ்லோகத்துல  பரமேஸ்வரனுடைய வடிவத்தை தியானம் பண்ணி, மூன்று கண்கள், உடம்பெல்லாம் பாம்பு, ஜடாபாரம் அப்படி அந்த, கம்பீரமான தோற்றத்தை நினைச்சு, முப்புரத்தை எரித்த மஹிமை எல்லாம் நினைச்சு, அந்த பரமேஸ்வரனை நான் என் ஹ்ருதயத்தில் பஜிக்கறேன்னு சொன்னார். நாலாவது ஸ்லோகத்துல எத்தனையோ தெய்வங்கள் இருக்கு. ஆனா அந்த தெய்வங்கள் பின்னாடி நான் போகமாட்டேன். அவா கொடுக்கிற அல்ப பலன்கள் எனக்கு வேண்டாம். ஹே பரமேஸ்வரா, எனக்கு உன்னுடைய பாத பக்திதான் வேணும். உன்னுடைய பதாம்போஜ பஜனம்தான் எனக்கு வேணும்னு ஒரு ஸ்லோகம். இன்னிக்கு 5 ஆவது ஸ்லோகம்

स्मृतौ शास्त्रे वैद्ये शकुनकवितागानफणितौ

पुराणे मन्त्रे वा स्तुतिनटनहास्येष्वचतुरः ।

कथं राज्ञां प्रीतिर्भवति मयि कोऽहं पशुपते

पशुं मां सर्वज्ञ प्रथित कृपया पालय विभो ॥ ५ ॥

ஸ்ம்ருʼதௌ சாஸ்த்ரே வைத்³யே சகுனகவிதாகா³னப²ணிதௌ

புராணே மந்த்ரே வா ஸ்துதினடனஹாஸ்யேஷ்வசதுர: ।

கத²ம் ராஜ்ஞாம் ப்ரீதிர்ப⁴வதி மயி கோऽஹம் பசுபதே

பசும் மாம் ஸர்வஜ்ஞ ப்ரதி²த க்ருʼபயா பாலய விபோ⁴ ॥ 5॥

ன்னு ஒரு ஸ்லோகம். இதனுடைய அர்த்தம் பார்ப்போம். உலகத்துல பலவிதமான வித்தைகள், படிப்பு இருக்கு. இந்த வித்தைகள் எல்லாம் கத்துண்டா உலகத்துல பிழைக்கலாம்னு ஒரு நம்பிக்கை. ஸ்ம்ருதி என்று சொல்லப் படுவதான மனுஸ்ம்ருதி முதலான, ரிஷிகள் பண்ண தர்ம சாஸ்திரங்கள்னு சொல்வா. தர்ம ஸாஸ்த்ரத்துல கார்த்தால கண் திறந்ததுலேருந்து  ராத்திரி படுக்கிற வரைக்கும் எப்படி நடந்துக்கணும்? ஆசாரம் என்று சொல்லப்படும் நன்னடத்தை, பிறகு 40 ஸம்ஸ்காரங்கள் ன்னு வாழ்கையை எப்படி நடத்தணும்னு சொல்லியிருக்கா. அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே தெரியல. வேதத்துக்கு அங்கமா சிக்ஷை, கல்பம், வ்யாகரணம், வ்ருத்தம், சந்தஸ், ஜ்யோதிஷம்னு இந்த வேத அங்கங்கள் இருக்கு. இதெல்லாம் வேத சாஸ்திரங்கள் னு சொல்வா. இந்த சாஸ்திரங்களும் எனக்கு ஒண்ணுமே தெரியல. இல்ல வைத்திய சாஸ்த்ரம் தெரியுமா? நாடி பிடிச்சு பார்த்து இந்த வியாதி, அதுக்கு இது மருந்துன்னு சொன்னா, யாருக்காவது கொஞ்சம் உடம்பு ஸ்வஸ்த்தமாகும். அவா பணம் கொடுப்பா. இந்த வைத்ய சாஸ்த்திரமும் எனக்கு தெரியல. இல்ல சகுனகவிதாகா³னப²ணிதௌ சகுன சாஸ்த்ரமோ கவிதை எழுதறதோ,பாட்டுப் பாடறதோ, பணிதௌ ன்னா உரைநடை, prose, grammar இதெல்லாமும் எனக்கு தெரியல. புராண கதை பிரவச்சனம் பண்ண தெரியுமா? ஜனங்கள் கேட்பான்னா, அதுவும் எனக்கு தெரியல. மந்த்ரம் சாஸ்திரம் தெரியுமா?ஒரு மந்த்ரத்தை ஜபிச்சா பாம்போட விஷம் இறங்கிடும். இல்ல ஒரு மந்திரத்தை ஜபிச்சா இங்க தான் கிணறு தோண்டலாம். இங்க ஜலம் இருக்குன்னு சில பேர் சொல்லுவா. ஒரு மந்த்ரம் ஜபிச்சா மழை பெய்யும். அப்படியெல்லாம் அந்த மந்திர சாஸ்திரங்களும் எனக்கு ஒண்ணும் தெரியல

ஸ்துதினடனஹாஸ்யேஷ்வசதுர: – ஸ்துதின்னா, ஸ்தோத்திரமா பேசறது. எல்லாருக்கும் புகழ்ந்து பேசினா பிடிக்கும். அந்த மாதிரி ராஜாவை புகழ்ந்து பேசினா அவர் சந்தோஷப் படுவார். எனக்கு அந்த மாதிரி பேசறதும் தெரியல. நடனம் – நாட்டியம்ஆடறது இல்லேன்னா நடிக்கறதுன்னு வெச்சுக்கலாம். அதெல்லாமும் எனக்கு தெரியல. விகடம் – மிமிக்ரி பண்றது, விகடமா பேசறது. சந்தோஷப் படுத்தற மாதிரி வேடிக்கையா பேச்சு பேசறது. இது எல்லாத்துலயும் அசதுர – எதுலயுமே எனக்கு திறமை இல்ல. நான் எப்படி இருக்கேன்னா, ஒரு பசுவைப் போல இருக்கேன். மிருகத்தைப் போல அவ்வளவு அறிவற்றவனாக நானிருக்கிறேன்.

கத²ம் மயி ராஜ்ஞாம் ப்ரீதிர்ப⁴வதி? – இப்படி இருக்கும் போது பெரிய பிரபுக்களுக்கும், ராஜாக்களுக்கும் என்னிடத்தில எப்படி ப்ரீதி உண்டாகும்? ஆனா எனக்கு அவாளோட ப்ரீதி வேண்டாம்’ ன்னு சொல்றார். எனக்கு வேண்டியது என்னன்னா, நீங்கள் ஸர்வக்ஞர். நான் பசு போல அறிவற்றவனா இருக்கேன். நீங்கள் பசுபதி – எல்லா ஜீவராசிகளுக்கும் தலைவர் நீங்க தான். இங்க நான் வந்து பிறக்கறதுக்கு நானா காரணம்? பரமேஸ்வரன் அல்லவா கரணம்! அதனால மரம் வெச்சவன் தண்ணி விடுவான் என்கிற மாதிரி நீதான் என்னை காப்பாத்தணும். உன்னுடைய கருணை என் மேல இருந்துடுத்துன்னா இந்த வித்தைகள் எல்லாம் எனக்கு வேண்டாம். நான் இந்த உலகத்துல ஆனந்தமாக இருந்துப்பேன். நீங்கள் ஸர்வக்ஞர். எல்லாம் அறிந்தவராக இருக்கேள் பிரதித க்ருபயா – உங்களுடைய கருணையை உலகமே பேசறது. புகழ் பெற்ற உங்களுடைய கருணை இருக்கு. விபோ – எங்கும் நிறைந்து இருக்கேள். அதனால நான் ஒரு ராஜாவை தேடி போக வேண்டாம். ராஜா கிட்ட போயி அவருக்கு என்ன தெரியும்? நமக்கு அது தெரியுமா? அவரை திருப்திப் படுத்தி, அவர் கிட்டயிருந்து சம்பாதிச்சு வாழ்க்கையை நடத்தணும்னு நான் நினைக்க வேண்டாம். நான் இங்க இருந்த இடத்துலேயே உன்னுடைய க்ருபை யினால பிழைப்பேன். உன்னுடைய கிருபையினால என்னை காப்பாத்துன்னு சொல்றார். இது நடக்கும்

மூகோऽபி ஜடிலது³ர்க³திசோகோऽபி ஸ்மரதி ய: க்ஷணம் ப⁴வதீம் ।

ஏகோ ப⁴வதி ஸ ஜந்துர்லோகோத்தரகீர்திரேவ காமாக்ஷி ॥ 57 ॥

ன்னு மூக கவி சொல்ற மாதிரி, ஊமையா இருந்தா கூட ஒரு ஜந்து வாட்டம் படிப்பில்லாதவனா இருந்தா கூட ஒரு க்ஷணம் காமாக்ஷின்னு சொன்னா போதும், உலகத்துலேயே தன்னிகரற்ற கீர்த்தியோட விளங்குவான்னு சொல்றார். யோசிச்சு பார்த்தா மஹா பெரியவாளே காமகோடி பீடத்துக்கு வந்த போது, முதல்ல English படிப்பு கொஞ்ச நாள் படிச்சா. காமகோடி பீடதுக்கு யதேச்சையா வந்தா. வந்த போது அவருக்கு நேரடியா சொல்லித் தரக் கூடிய குரு கூட இல்ல. அவரோட குரு ஸித்தி ஆயிட்டார். அப்படி இருக்கும் போது, மகேந்திரமங்கலத்துல அவர் பண்டிதர்கள் கிட்ட மூணு வருஷம் கத்துண்டார் என்பது உண்டு. ஆனா இப்படி உலகமே வியக்கும் அளவுக்கு எல்லா வித்தைகள்லேயும் பாண்டித்யத்தோடு, ஜகத்குருவா பெருமையோட விளங்கினார்னா அவர் ‘அம்மா, காமாக்ஷி’ ன்னு அந்த தெய்வத்தை நம்பினதுனால தானே தவிர அவர் முயற்சி பண்ணினதுனால இல்ல. அவர் அவதார மஹான். ஆனா அவர் இந்த மாதிரி பீடத்துக்கு வந்தது,  ‘பகவானை நம்பினாலே போறும். ஒவ்வொரு வித்தையிலையும் தனித்தனியா பாண்டித்யம் இருந்தாத் தான் இந்த உலகத்துல பெருமையோடு இருக்கணும் என்று இல்லை’ எங்கிறதை காட்டறதுக்கு தான்.

மஹா பெரியவா ஒரு உதாரணம். கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஒரு உதாரணம். அவரும் SSLC படிச்சிட்டு postal office ல வேலை பண்ணிண்டு இருந்தார். ஆனா குருவாயூரப்பனோட அனுக்ரஹத்துனால மஹா பெரியவாளே ஆனந்தப் படும்படியாக அவரால புராண பிரவச்சனம் பண்ண முடிஞ்சுது. அவர் புராண பிரவச்சனம் பண்ணும் போது இந்த மனுஸ்மிருதியில இருந்தும், எல்லா சாஸ்திரங்கள்லேயிருந்தும் சொல்வார்.  அவர் ஸ்லோகங்கள் சொல்லும் போது அதுலே கவிதையும் வரும். சங்கீதமும் வரும். அவர் ஒரு வித்தையும் படிக்காம இருந்தும், எல்லா வித்தையும் அந்த புராண ப்ரவச்சனத்துல வரும்.

ரமண பகவானை எடுத்துண்டா அவர் மதுரையில கோவில்ல நாயன்மார்கள் முன்னாடி நின்னுண்டு ‘உங்களை மாதிரி எனக்கு பக்தி வேணும்’ ன்னு வேண்டின்டார். என்னாச்சு? பகவான் அந்த மாதிரி பக்தியை அவருக்கு கொடுத்துட்டார். அருணாசலத்துக்குப் ஓடிப் போயி அவர் உட்கார்ந்திருக்கார். நன்னா படிச்சவாள்லாம் அவர் முன்னாடி நாலு பேர் உட்கார்ந்துண்டு கைவல்ய நவநீதமும், யோகா வாஸிஷ்டமும் படிக்கறா. தனக்கு ஏற்பட்ட அந்த ஞான அனுபவத்துனால தான் உலகத்தை துறந்து இங்க வந்தார். அவருக்கு ‘ஓஹோ! என்னோட இந்த அனுபவத்தை மஹான்கள் முன்னாடியே இந்த மாதிரி சொல்லி வெச்சிருக்கா’ ன்னு அவருக்கு தெரிஞ்சுது.தன்னுடைய இந்த அனுபவத்தை யோக வாஸிஷ்டத்துலயும், கைவல்ய நவநீதத்துலயும் மஹான்கள் சொல்லியிருக்கான்னு புரிஞ்சுண்டார். அதற்கப்புறம் அவர் ரொம்ப எளிமையா அதை அக்ஷரமணமாலை,உள்ளது நாற்பதுன்னு ஸ்தோத்திரங்கள்லாம் பண்ணி அவர் அதை எடுத்து சொல்லி அதனால எவ்வளவோ பேர் அதுல லாபம் அடைஞ்சிருக்கா. இதெல்லாம் புஸ்தகம் படிச்சு வர்ற வித்தையா?

அந்த மாதிரி, படிப்புங்கிறது வேணும். ஆனா அதுக்கு மேல பகவானோட பக்தி இருந்துடுத்துன்னா போதும். மாம் க்ருʼபயா பாலய – ன்னு இங்க கேட்கறார். பகவானோட கிருபையை நம்பினா அவர் அப்படி காப்பாத்துவார். ‘பக்தியை நம்பணும். புத்தியையும், வித்தையையும் நம்ப வேண்டாம்’ ன்னு கடை கண்ணியல் வகுப்புன்னு அருணகிரிநாதர் பண்ணியிருக்கார். அதுல கூட இந்த உலகத்துல பெருமை வேணும்னாலும் சரி, தமிழ்ல சித்தி வேணும்னாலும் சரி, எமனை விரட்டுவதானாலும் சரி, முருகனோட ஒன்று கூடுவதுனாலும் சரி. இந்த வித்தையை நம்பாதேங்கோ. மயிலையும், அவன் திருகை அயிலையும், அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே ன்னு சொன்னார். உங்கள் வித்தையினை இனி விடும் – உங்கள் வித்தையை நம்பியிருக்கறதை இனி விட்டுடுங்கோ. முருகனை நம்புங்கோ. அவன் உங்களுக்கு எல்லாம் கொடுப்பான்னு மஹான்கள் தங்களோட அனுபவத்துல உணர்ந்ததை சொல்றா. நமக்கு அந்த நம்பிக்கை வந்ததுன்னா, பெரிய பெருமை கிடைக்கும். இந்த ஸ்லோகம்லாம் படிக்கும் போது ‘உன்னுடைய கருணையை பிரார்த்திக்கறேன்னு சொல்றார். நாமும் வேண்டிப்போம்.

அடுத்த ஸ்லோகமும் கிட்டத்தட்ட இந்த themeலதான் இருக்கு

घटो वा मृत्पिण्डोऽप्यणुरपि च धूमोऽग्निरचलः

पटो वा तन्तुर्वा परिहरति किं घोरशमनम् ।

वृथा कण्ठक्षोभं वहसि तरसा तर्कवचसा

पदाम्भोजं शंभोर्भज परमसौख्यं व्रज सुधीः ॥ ६ ॥

க⁴டோ வா ம்ருʼத்பிண்டோ³ऽப்யணுரபி ச தூ⁴மோऽக்³னிரசல:

படோ வா தந்துர்வா பரிஹரதி கிம் கோ⁴ரசமனம் ।

வ்ருʼதா² கண்ட²க்ஷோப⁴ம் வஹஸி தரஸா தர்கவசஸா

பதா³ம்போ⁴ஜம் சம்போ⁴ர்ப⁴ஜ பரமஸௌக்²யம் வ்ரஜ ஸுதீ:⁴ ॥ 6 ॥

ன்னு ஸ்லோகம். ஸுதீ:⁴ ன்னா நல்ல புத்தியை உடையவன்னு அர்த்தம். பகவான் நமக்கு நல்ல புத்தியை கொடுத்திருந்தார்னா அதைக் கொண்டு இந்த வித்தைகள் எல்லாம் கத்துண்டு அதுக்கும் மேல தர்க்கம்னு ஒண்ணு இருக்கு. தர்க்கம்னா அது ஒரு நல்ல படிப்புதான். logic ன்னு அர்த்தம். logic ங்கிற அந்த தர்க்கத்துல வந்து அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடிய உபமானங்கள்லாம் இங்க சொல்றார் க⁴டோ வா ம்ருʼத்பிண்ட: ன்னா கடமும் (குடமும்) மண்ணும் ஒண்ணுதான் அணுரபி – எல்லாம் அணுக்களால் ஆனதுன்னு ஒரு நியாயம் தூ⁴மோऽக்³னிரசல: – புகையிருக்கிற இடத்துல நெருப்பு இருக்கும்னு ஒரு நியாயம் படோ வா தந்துர்வா – சேலையும் நூலும் ஒண்ணுதான். இப்படி பலவிதமான உபமானங்களை சொல்லி தர்க சாஸ்த்ரத்தை கொண்டு, இந்த வித்தைகள்லாம் கொண்டு, ஒரு ராஜ சபையில போயி வாதத்துல ஜயிக்கணும்ங்கிற மும்முரம் இருந்துதுனா அதுனால என்ன லாபம்? ன்னு கேட்கறார். சங்கரர் சொல்றார். அதுனால என்ன லாபம்னா, உன் தொண்டை தண்ணி வத்தும்ங்கிற ஒண்ணு தான் லாபம். நீ புத்திமானா இருந்தா தர்க்கம் பண்ணாதே. வ்ருʼதா² கண்ட²க்ஷோப⁴ம் வஹஸி – வீணா தொண்டை காய்ஞ்சு போகும்படி பண்ணிக்கற நீ. பயங்கரமான இறப்புங்கிற அந்த எமனுடைய வாதையை இந்த உன்னுடைய தர்க்க வாதங்கள் போக்கடிக்க முடியுமா? முடியாது. அதுனால பதா³ம்போ⁴ஜம் சம்போ⁴ர்ப⁴ஜ – பரமேஸ்வரனுடைய பாதத் தாமரையை தியானம் பண்ணு, பரமஸௌக்²யம் வ்ரஜ – அதை பண்ணேன்னா உனக்கு பரம சௌக்கியம் கிடைக்கும். நீ வீணா இந்த மாதிரி தர்க்கம் பண்ணிண்டிருக்காதேன்னு சொல்றார்.

பஜகோவிந்தம்ங்கிற ஸ்தோத்திரத்துல கூட பஜகோவிந்தம்

ப⁴ஜ கோ³விந்த³ம் ப⁴ஜ கோ³விந்த³ம்

கோ³விந்த³ம் ப⁴ஜ மூட⁴மதே ।

ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே

நஹி நஹி ரக்ஷதி டு³க்ருʼங்கரணே ॥

ன்னு டு³க்ருʼங்கரணேங்கிறது வியாகரண rule. அந்த rule உன்னை காப்பாத்தப் போறதா? கோவிதம் பஜ – கோவிந்தனை  தியானம் பண்ணுன்னு சொன்னார். இங்க பதா³ம்போ⁴ஜம் சம்போ⁴ர்ப⁴ஜ – பரமேஸ்வரனுடைய பாதத் தாமரையை தியானம் பண்ணு. வீணா தர்க்கம் பண்ணிண்டு இருக்காதே. தர்க்கம், வியாகரணம் எல்லாம் உபயோகம் தான். ஆனா அதைக் கொண்டு மத்தவாளை உருட்டி மிரட்டறதுக்கு உபயோகப் படுத்தாதேன்னு. அதை பகவானோட பக்தி பண்றதுக்கு உபயோகப்படுத்து ன்னு மஹான்கள் சொல்லி தரா. பகவான் தர்க்கத்துனால கிடைப்பாரா? கிடைக்க மாட்டார். உட்கார்ந்து பரமேஸ்வரனை பூஜை பண்ணி, தியானம் பண்ணி, சிவ நாம ஜபம் பண்ணி, இந்த சிவானந்தலஹரி மாதிரி ஸ்தோத்திரங்களை படிச்சா தான் பகவான் கிடைப்பார். தர்க்கம் பண்றதுனால கிடைக்க மாட்டார்ங்கிறது தாத்பர்யம். இதை தாயுமானவர் ஒரு பாட்டுல வேடிக்கையாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்றார். அது எல்லார்க்கும் தெரிஞ்சிருக்கும். நான் அதை ஒரு வாட்டி படிக்கறேன்.

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்

கற்றும்அறி வில்லாதஎன்

கர்மத்தை யென்சொல்லுகேன் மதியையென் சொல்லுகேன்

கைவல்ய ஞானநீதி

நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று

நாட்டுவேன் கர்மமொருவன்

நாட்டினா லோபழைய ஞானமுக்கியமென்று

நவிலுவேன் வடமொழியிலே

வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே

வந்ததா விவகரிப்பேன்

வல்லதமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியி

வசனங்கள் சிறிதுபுகல்வேன்

வெல்லாம லெவரையும் மருட்டிவிட வகைவந்த

வித்தையென் முத்திதருமோ

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற

வித்தகச் சித்தர்கணமே.”

ன்னு ஒருபாட்டு. இன்னொரு பாட்டுலயும் அவரே சொல்றார்.

கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காகத்

கடபடம் என்றுருட்டுதற்கோ கல்லால் எம்மான்

குற்றமறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு

குணம்குறியற் றின்பநிட்டை கூட அன்றோ!

கல்லால் – ஆலமரத்தினடியில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி கைகாட்டும் கருத்தைக் கண்டு – அவர் கையில அந்த சின்முத்திரை காண்பிக்கறாரே அதோட கருத்தை புரிஞ்சுண்டு குணம்குறியற் றின்பநிட்டை – அது மாதிரி இன்ப நிஷ்டயா கூடறதுக்காகத்தானே படிப்பு எல்லாம். கடபடான்னு உருட்டிண்டு இருக்கறதுக்காகவான்னு சொல்றார். அதுதான் மஹான்களோட அறிவுரை. அதை நாம கேட்டுக்கணும்.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ

Series Navigation<< சிவானந்தலஹரி 3, 4 ஸ்லோகங்கள் பொருளுரைசிவானந்தலஹரி 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.