இன்னிக்கு மகாபெரியவாளோட ஆராதனை. உலகம் முழுக்க நாம எல்லாரும் சந்தோஷமா கொண்டாடறோம். “ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய”, அப்டீன்னு கச்யப்ப சிவாச்சாரியார், முருகப் பெருமானுடைய அவதாரத்தை பத்தி கந்த புராணத்துல பாடின மாதிரி, ஸ்வாமிநாதனா வந்து அவதாரம் பண்ணி தர்ம செங்கோலை வெச்சுண்டு நூறு வருஷம், அருளாட்சி பண்ணிணா பெரியவா. மஹாபெரியவாளை நினைக்கறது, பூஜிக்கறதுனால நமக்குதான் க்ஷேமம். அவருக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லை. அவரை தியானம் பண்ணோம்னா, அவரை கொண்டாடினோம்னா நமக்கு இக பர சௌபாக்யங்கள் எல்லாமே கிடைக்கும்.
கலியோட பிரவாகத்தை தடுத்த ஒரு மகான். ரிஷிகள் கூட சத்தியத்தையும் தர்மத்தையும் ஒரு ஆபத்து காலத்துல விட்டு குடுக்கலாம், ரிலாக்ஸ் பண்ணலாம்னு சொல்றா. ஆனா கொஞ்சம் கூட ரிலாக்ஸ் பண்ணாம, அன்னிக்கு ராமாவதாரத்துல ராமர் எப்படி சத்தியத்தையும் தர்மத்தையும் கடை பிடிச்சாரோ அப்படி கடை பிடிச்ச ஒரு மகான்.
குழந்தைகளுக்கு கதை சொன்னோம்னா, “இந்த கதை தெரியும்ப்பா. வேற ஏதாவது புது கதை சொல்லுங்கோப்பா”, அப்டீன்னு கேப்பா. அந்த மாதிரி மஹாபெரியவாள பத்தி புதுசா எதாவது சொல்லுங்கோளேன்னு கேக்கறா. அதனால இன்னிக்கு புதுசா ரெண்டு விஷயங்கள் சொல்றேன். ரெண்டு அனுபவங்கள்.
மஹா பெரியவாகிட்ட ரொம்ப நெருங்கி கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கிற ஒருத்தர். அவருக்கு செக் போஸ்ட்ல வேலை போட்டா. அந்த செக்போஸ்ட்ல இருக்கற எல்லாரும் அவர்கிட்ட, “இங்க பாரு, நாங்க எல்லாரும் லஞ்சம் வாங்கறோம். நீயும் உன் பங்கை வாங்கிக்கோ. என்னமோ பண்ணிக்கோ. நடுவுல எதுவும் தகராறு பண்ணாதே” அப்டீன்னு மிரட்டறா. அவர் வந்து பெரியவாகிட்ட சொல்றார். பெரியவா “நீ லஞ்சம் வாங்காதே” அப்டீன்னு சொல்லிடறா. ஆனா, அந்த பக்தர் அங்க office போனா அவாக்கிட்ட பயத்துனால அவர் அந்த பணத்தை வாங்கி பெரியவாளுக்கு நகைகள் பண்ணி, அதை கொண்டு வந்து பெரியவாகிட்ட கொண்டு வந்து வைக்கறார். பெரியவா அவர் எது கொடுத்தாலும் ஏத்துப்பார். அத்தனை வருஷம்,பெரியவாகிட்ட நெருங்கி தொண்டு பண்ணியிருக்கார் அவர். அந்த நகைகள அவர் வெச்ச போது பெரியவா நிர்தாட்சண்யமா அதை “எனக்கு வேண்டாம்”, அப்டீன்னு ஒதுக்கிடரா. இவர் அடுத்த நாளும் கொண்டு வந்து வெக்கறார், பெரியவா சொல்றாளாம். “இது லஞ்சப் பணத்துல பண்ணிணதோன்னு எனக்குத் தோன்றது, நானே சந்நியாசி. நான் என்னுடைய நல்ல கதியை பாத்துண்டு போகணும். இதெல்லாம் என்னால ஜரிக்க முடியாது” அப்டீன்னு சொன்னாளாம்.
அந்த பக்தர் நிறைய புஷ்பங்கள் வெச்சுண்டு ஆத்துல தினமும் லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்லி பெரியவாளுக்கு அர்ச்சனை பண்ணிண்டே இருப்பார். அந்த பக்தர் அப்படி பண்ணறார்ங்கிறது பெரியவாளுக்குத் தெரியும். அடுத்தநாள் பெரியவாகிட்ட வந்தபோது யாரோ ஒரு கூடை புஷ்பம் கொண்டு வந்து வெச்சாளாம். பெரியவா இவரைக் கூப்பிட்டு பாதங்களை காண்பிச்சு, “அர்ச்சனை பண்ணு” அப்டீன்னு சொல்லி எவ்வவளவோ நேரம் அவர் திருப்தியா அர்ச்சனை பண்ணிணாராம். சீக்கரமே அவரை செக்போஸ்ட்லேர்ந்து கணக்கு எழுதற வேலைக்கு மாத்திட்டாளாம். இந்த incident அவரே என்கிட்டே நேரடியா சொன்னார்.
அப்படி பெரியவா மகாபாரதத்தை பத்தி பேசும்போது கூட, “யாரும் பொய்யே பேசக் கூடாது, யாரும் லஞ்சமே வாங்கக் கூடாது”, அப்டீன்னு சொல்றா. மஹாபெரியவா பத்தி நினைக்கும்போது நாம இந்த நேர்மை, ஒழுக்கம், புலனடக்கம், பணத்துல பற்று இல்லாம இருந்தது, கொஞ்சம் கூட ஆசையே இல்லாம, எந்த ஒரு விதமான போகங்கள்லயும் மனசு வெக்காம, வாழ்க்கை முழுக்க மத்தவாளுக்காகவே வாழ்ந்தார், அப்டீங்கிறது தான் அடிக்கடி நினைக்கணும்.
மஹா பெரியவாளோட நினைப்பை நாம வைபவமா கொண்டாடனும். ஸ்வாமிகள் சொல்வார் “குருவை, ஆச்சார்யனை எப்பிடி கொண்டாடனும்கிறதை நாம வைஷ்ணவாகிட்டயிருந்து கத்துக்கணும்” அப்டீம்பார். இங்க பார்த்தசாரதிகோயில் பக்கத்துலதான் சுவாமிகளும் இருந்தார். நானும் இருந்தேன். இருக்கேன். பார்த்தசாரதி கோயில்ல,பார்த்தசாரதிக்கு எப்படி உற்சவம் பண்றாளோ அந்த மாதிரி, அந்த சிம்ம வாஹனமோ, ஹம்ச வாஹனமோ வெச்சு, உடையவருக்கு ராமானுஜருக்கு உற்சவம் பண்றா. ஸ்வாமிகள் சொல்வார் “வைஷ்ணவத்துல, குருவுக்கு உடம்பு சரியில்லேன்னா, அவரைத்தான் கவனிக்கனுமே தவிர, திருவாராதனம் கூட முக்கியம் கிடையாது, அவ்வளவு தூரம் அவா ஆச்சார்யனுக்கு முக்யத்துவம் கொடுத்துருக்கா” அப்டீன்னு சொல்வார். அந்த மாதிரி இப்பதான் நாமளும், ஸ்மார்தாளும், பெரியவாளப் பார்த்து பார்த்து, பெரியவா தன்னோட குருவுக்குப் பண்ண ஆராதனைகள பார்த்து, பெரியவா தேசம் முழுக்க, ஆதி சங்கராச்சார்யாளுக்குப் பண்ணின சிலைகளும் கட்டின கோயில்களும் பார்த்து நாமளும் இப்பதான் கத்துண்டு இருக்கோம்னு நினைக்கறேன். இப்படிதான் கொண்டாடனும் குருவை.
ராமனுஜரைப் பத்தி சொன்ன உடனே திருப்பாவை ஞாபகம் வரது. இப்ப மார்கழி மாசம். ராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர்னே ஒரு பேரு. அந்த திருப்பாவை முப்பது பாசுரதுல அவருக்கு அவ்வளவு உயிர். அதுக்கு பாஷ்யம் எழுதியிருக்கார். அதை உபநிஷத்துக்கு சமானமா கொண்டாடியிருக்கார். அவர், தினம் உஞ்சவிருத்தி போகும்போது திருப்பாவை பாசுரங்களை சொல்லிண்டுதான் போவாராம். அதுகூட பாதுகைகள கழட்டி வெச்சுட்டுதான் போவாராம். ஏன்னா,அந்த திருப்பாவை மேலயும், ஆண்டாள் மேலயும் இருக்கிற பக்தி. திருகோஷ்டியூர்ங்கிற ஒரு ஊரில அந்த திருப்பாவை முப்பது பாசுரங்களையும் சொல்லிண்டு உஞ்சவிருத்தி எடுத்துண்டு போயிண்டு இருக்கார். அவருடைய குரு திருகோஷ்டியூர் நம்பிகள்ன்னு ஒருத்தர். அவா ஆத்து வாசல்ல வரும்போது,
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாட
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
அப்டீன்னு பாடிண்டு போகும்போது, அந்த திருகோஷ்டியூர் நம்பிகளுடைய பெண், அத்துழாய்ன்னு பேராம், அவள் கதவை திறந்துண்டு வரா. அந்த “வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”, அப்டீன்னு அவர் பாடறதுக்கும், அந்த குழந்தை கைகள்ல இருக்கிற வளை சத்தம் பண்ணும் படியா கதவை அவள் திறந்துண்டு வந்தாளாம். அதை பார்த்த உடனே இராமானுஜர் சமாதி நிலைமைக்கு போயிட்டாராம். அப்படி, பகவான் நாம பஜனம் பண்றதைக் கேட்கறார், அப்டீங்கிரத மகான்கள் நினச்சு நினைச்சு சந்தோஷப் படுவா. அதுதான் அவாளுக்கு அற்புதம். இந்த coincidence, நமக்கு coincidence தான்னு தோணறது. ஆனா பகவான் இருக்கார்ங்கிறதை எப்படி காண்பிச்சுக் கொடுகிறார். இந்த ஒரு coincidence மூலமாக தானே.
அப்படி ஸ்வாமிகள் விஷயத்துல ஒரு மஹாபெரியவாளோட ஒண்ணு நடந்துருக்கு. ரொம்ப சுவாரஸ்யமா சம்பவம். மஹா பெரியவாகிட்ட ஸ்வாமிகள் பாகவதப் பிரவச்சனம் பண்ணும்போது, கிருஷ்ணாவதாரம் சொல்லிண்டு இருக்கார், கிருஷ்ணர் அவதாரம் பண்ணிண உடனே, வசுதேவர் கிருஷ்ணரை தலைமேல வெச்சுண்டு கோகுலத்துக்கு எடுத்துண்டு போறார். அப்போ யமுனை வழி விடறது. ஆதிசேஷன் மழை மேல விழாம படமெடுத்துக் குடையா பிடிக்கறார். அப்போ,அவர்கிட்ட இருந்த ஒரு நாகமணி வெளிச்சம் காண்பிக்கறது.ஒரு torch light மாதிரி அப்டீன்னு வர்றது.அந்த இடத்துல சுவாமிகள் மூகபஞ்சசதில இருந்து ஒரு ச்லோகம் சொல்வார்
क्षुण्णं केनचिदेव धीरमनसा कुत्रापि नानाजनैः
कर्मग्रन्थिनियन्त्रितैरसुगमं कामाक्षि सामान्यतः ।
मुग्धैर्द्रुष्टुमशक्यमेव मनसा मूढस्य मे मौक्तिकं
मार्गं दर्शयतु प्रदीप इव ते मन्दस्मितश्रीरियम् ॥
க்ஷுண்ணம் கேனசிதேவ தீரமனஸா குத்ராபி னானாஜனைஃ
கர்மக்ரன்தினியன்த்ரிதைரஸுகமம் காமாக்ஷி ஸாமான்யதஃ |
முக்தைர்த்ருஷ்டுமஶக்யமேவ மனஸா மூடஸய மே மௌக்திகம்
மார்கம் தர்ஶயது ப்ரதீப இவ தே மன்தஸ்மிதஶ்ரீரியம் ||39||
“யாரோ, எங்கோ, ஒரு தீர புருஷனால், யோகியினால் இந்த முக்தி மார்கமானது அறியப் படுகிறது. மற்றவர்களுக்கு எல்லாம் அப்படி ஒன்னு இருக்குன்னே தெரிய மாட்டேன்ங்கிறது. கர்மாங்கிற கட்டுல இருக்கிற ஜனங்களுக்கு இந்த முக்தி மார்கமானது போகவே முடியாது இருக்கு. மூடர்களுக்கு அப்படி ஒரு வழி இருக்கறதே தெரியவே மாட்டேன்கிறது. எனக்கு,அம்மா உன்னோட மந்தஸ்மிதம்,ஒரு தீபம் போல அந்த முக்தி மார்கத்துல போறதுக்கு வழி காண்பிக்கட்டும்”அப்டீன்னு ஒரு ஸ்லோகம். இந்த வசுதேவருக்கு, ஆதிசேஷனுடைய நாகரத்தினம் ஒரு தீபம் போல வழி காண்பிச்சுதுங்கிற இடத்துல, ஸ்வாமிகள் இந்த மூகபஞ்சசதி ஸ்லோகத்தை சொல்றார். மடத்துல சொல்லும்போது, பெரியவா அப்பப்ப வந்து கேப்பா. இந்த ஸ்லோகத்தை சொல்லிண்டு இருக்கும்போது பெரியவா “நன்னா கேக்கறதே” ன்னு சொல்லிண்டே வந்தாளாம். சுவாமிகள் சொல்லிண்டு இருக்கும்போது சில பேர் கேப்பா. அதுல ஒருத்தர் பெரியவாகிட்ட போயி, “இந்த மோட்டாரை போட்டுடறா. அதனால நன்னா கேட்கவே மாட்டேன்கிறது” அப்டீன்னு ஒரு compalint சொல்லியிருக்கா. பெரியவா அங்க வரா. பெரியவா வரான்னு தெரிஞ்ச உடனே மோட்டரை ஐ off பண்ணிட்டாளாம். பெரியவாளுக்கும் அது தெரியும். உடனே. பெரியவா வந்து உட்கார்ந்துண்டு, “நன்னா கேட்கறதே” அப்டீன்னு சொன்னாளாம். அந்த ஸ்லோகத்தை சொல்லி முடிச்ச உடனே. அப்போ அந்த complaint பண்ணிணவர், “பெரியவா வந்த உடனே மோட்டாரை off பண்ணிட்டா, அப்டீன்னு சொன்னாராம். அப்போ பெரியவா சிரிச்சுண்டாளாம். அது அவருக்கும் தெரியும் அப்டீன்னு ஒரு புன்சிரிப்பு. ஸ்வாமிகளுக்கு, “அம்மா காமாக்ஷி உன்னுடைய இந்த புன்சிரிப்பு எனக்கு மோக்ஷ மார்கத்துக்கு வழி காண்பிகட்டும்ன்னு ஸ்லோகத்தை சொன்ன உடனே பெரியவா “நன்னா கேக்கறதே”னு சொல்லிஅந்த ஒரு புன்னகை பண்ணதை வந்து, ஸ்வாமிகள் ஒரு ஆசிர்வாதமா எடுத்துண்டு இருக்கார்.இப்படி மகான்கள் அந்த coincidence ஒரு பெரிய அனுக்ருஹமா நினைப்பா.
இந்த மாதிரி பெரியவாளை நினைக்கும்போது, அவாளை நமஸ்காரம் பண்ணா ப்ரொமோஷன் வந்தது, கஷ்டம் தீர்ந்தது, வியாதி போச்சு,அப்டீன்னு நாம கேள்விப் படறோம். அதெல்லாம் பெரிய பாக்கியந்தான். அந்த பெரியவாளாலதான் எல்லா நன்மையும் நடந்ததுன்னு மனச பழக்கறத்துக்கு, அது ஒரு நல்ல வழி. ஆனா இந்த மாதிரி மஹாபெரியவாள ரசிக்கறதுக்கும் நாம அவர் குணங்களை நினைச்சு நினைச்சு அவர்கிட்ட ஒரு அன்பு வரும்படியான ஒரு மனப் பழக்கத்தை நாம ஏற்படுத்திக்கணும். “எனக்கு நல்ல புத்தி கொடுங்கோ பெரியவாளே. எனக்கு உங்க பாதபக்தி கொடுங்கோ பெரியவாளே” அப்டீன்னு வேண்டிக்கணும் அப்டீன்னு உங்களுக்கு சொல்றது மூலமா நான் எனக்கே சொல்லிக்கறேன்.
ஜானகி காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம
மகாபெரியவாளை எப்படி போற்ற வேண்டும்? (12 min audio)
4 replies on “மஹாபெரியவா ஆராதனை”
Excellent, please keep it up
Top Class Devotional Lecture. Continue this service.
ஸ்ரீ காமாக்ஷி பாதம் ஷரணம்!
மஹா பெரியவாபாதம் ஷரணம்!
என்னே ஒரு அருமையான ஆன்மீக அனுபவங்கள், இவைகளை அள்ளித்தர ஸ்ரீ ஸ்வாமிகள், ஸ்ரீ பெரியவா, ஸ்ரீ சிவன் சார் ஆசிகள் உங்களுக்கு, சிரமம் இல்லாமல் வெகு சுலபமாக கிடைக்க பெரியவா உங்கள் மூலம் எங்களுக்கு, இந்த ஸத் ஸங்கம் வழங்கியுள்ளார்.
நம் பிரார்த்தனை மூலம் கிடைக்கும் பலன் co-incidence என்று identify செய்து அனுபவங்களாக மாறுகிறது.
ஸ்ரீ மஹா பெரியவாளின் ஆசியினால், காம்யார்த்த பக்தி விலகி, நல்ல புத்தியும், அவர் பாதங்களின் மேல் உண்மையான திண்மையான பக்தியும் மேன்மேலும் வளர வேண்டும் என்று பிரார்த்திப்போம். 🙏
மேலும் பக்தி மார்க்கத்தில் முக்தி பெற வழிகள் வழங்கியருள ஸ்ரீ காமாக்ஷியை யாசிக்கிறேன். 🙏🙏🙇
அற்புதம்!! பக்தி இலக்கணத்தை சுவாமிகளிடம் கற்க வேண்டும்!
பெரியவா ஆசார்யாள் மேலே வெச்சிருந்த பக்தி உலகே அறியும்!
ஸ்ரீராம நவமி, கிருஷ்ண jayandhikku ஒரு படி மேலாகவே ஆசார்யாள் ஜெயந்தி விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று சொன்னது அவர் குரு பக்தியின் தீவிரம், மேன்மை இவற்றைக் காண்பிக்கிறது!
அந்த ஸ்ரீ ராம நவமி கிருஷ்ண ஜெயந்தி எல்லாம் ஆசார்யாள் காலத்தில்தான் ஏற்படிஉத்தப் பட்டது? சண்மத ஸ்தாபனம் என்பதனை ஏற்படுத்தியது ஆசார்யாள் தானே?
குரு பக்தி எதையும் சாதிக்க வல்லது! நாம் தினசரி வாழ்க்கையில்.இதக் கண்கூடாகக் காணமுடியும்!
பெரியவா ஸ்தூல சரீரத்துடன் பலருக்கு அனுகிரகம் பண்ணினார் என்றால் சூக்ஷ்ம ரூபத்தில் இப்போதும் பண்றார்.
அமெரிக்காவில் ஒரு பெண்மணி உயிர் போகும் நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். போன உடனே உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர் வீட்டுக்கு எடுத்துப் போகச் சொல்லிட்டார்.
ஆனால் அவளுக்கு subconscious mind வேலை பண்றது. இழைக்கும்
வினை வழியே அடும் காலம் எனை நடுங்க அழைக்கும்போது அஞ்சல் என வர வேண்டும் என்ற அந்தத்8யை அந்தராத்மாவில் சொல்றா.
கூவி அழைத் தால் குரல் கொடுப்பவன் அல்லவா சுவாமிநாதன்? உடன் அங்கு தண்டத்துடன் வந்து காமாக்ஷி அருகில் நிற்க தண்டத்தால் வழக்கை மணிக் கட்டில் தட்டி முழிசுக்கோ என்று குரல் கொடுக்க எல்லாரும் வியக்கும் வண்ணம் உயிர் மெதுவா வரது ! ICU போகும் வரை கூட இருந்து பக்கத்தில்.அமர்ந்து பெரியவா அம்பாளுடன் அந்தர்தியானம் ஆகிறார்!! இது நடந்த உண்மை, கதை அல்ல.
குரு பக்தி எதையும் சாதிக்கும் என்பதன் எடுத்துக் காட்டு. அவ்வளவே.
ரொம்ப அழகா வைஷ்ணவ குரு பக்தி , ராமானுஜர் அவர்களின் எளிமையான பக்தி எல்லாம் யாவருக்கும் புரியும்படி விளக்கமா சொன்ன கணபதிக்கு நன்றி.
ஜய ஜய சங்கரா….