இன்னிக்கு மாசி மாதம் பூரட்டாதி நக்ஷத்திரம். (28/2/2017) கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுடைய ஜென்ம நக்ஷத்திரம். இன்னிக்கு இருந்தார்னா அவருக்கு எண்பத்தேழாவது ஜயந்தியா கொண்டாடியிருப்போம். அவர் ஸ்தூல சரீரத்தோட இல்லேனாலும், சூக்ஷ்மமா அவர் இருந்துண்டு பக்தர்களுக்கு, அனுக்ரஹம் பண்ணிண்டு இருக்கார். நம்ம எல்லாரும் அதை உணர்ந்து அனுபவிச்சுண்டு இருக்கோம்.
ஒவ்வொரு க்ஷேத்ரத்துல பகவானை, ஒவ்வொரு விதமா பஜனம் பண்றது, வழிபாடு பண்றது, அப்டீன்னு இருக்கு. திருப்பதில, உண்டியல்ல பணம் போடறோம். இதரா எல்லாம் முடி இறக்கரா. குருவாயூர்ல, ஸ்ரீமத் பாகவதத்தை, சப்தாஹமா, படிச்சு சமர்பிக்கறதுங்கிறது, அங்க ரொம்ப விசேஷமான பஜனம். அங்க துலாபாரம் பண்றா. அந்த மாதிரி, திருப்பறையார்ங்கிற அந்த ஒரு ராமர் க்ஷேத்ரத்துல, வெடி வெடிக்கறது, வெடி போடறதுங்கிறது ஒரு வழிபாடு. ஒரு வேண்டுதல். இப்படி ஒவ்வொரு தெய்வத்துக்கு ஒவ்வொரு பூஜை ப்ரியமா இருக்கு. அப்படி கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு, இன்னிக்கு அவரோட ஜயந்தி வைபவத்துல, அவருக்குப் பிரியமானதை பண்ணனும்னு, அப்டீன்னு, நினைச்சு, அது என்னன்னு கேட்டா, எங்க எல்லாருக்கும், தெரிஞ்சு, அவருக்கு ரொம்ப பிரியமான விஷயம், இடையறாது பகவானுடைய பஜனத்தைப் பண்ணிண்டே இருக்கணும்.
ராம நாமத்தை அஞ்சு நிமிஷம் முடிஞ்சா பண்ணுங்கோ என்பார், அஞ்சு நிமிஷம் பழக்கம் வந்துடுத்துன்னா, பத்து நிமிஷம் பழக்கம் பண்ணிகோங்கோ. முப்பத்தஞ்சு நிமிஷம் பண்ணுங்கோ. ஒருமணிநேரம் பண்ணுங்கோ. ஒரு நாளைக்கு, ஒரு லக்ஷம் ராம நாம ஜபம் பண்ணுங்கோ, சிவ நாமாவோ, ராம நாமாவோ அப்படின்னு கொண்டு விடுவார். முடிஞ்சா பத்து ஆவர்த்தி விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லுங்கோம்பார். அப்புறம், பத்து ஆவர்த்தி சொல்லிண்டு வரவாள்கிட்ட, தினம் இருபத்தோரு ஆவர்த்தியா நாப்பத்தெட்டு நாட்கள்ல ஆயிரத்தெட்டு ஆவர்த்தி பண்ணுங்கோ அப்டீம்பார். ராமாயணத்தை தினம் ஒரு பத்து ஸ்லோகமாவது படி, அப்டீம்பார். அப்பறம் ஒரு ஸர்க்கமாவது படி, அஞ்சு அஞ்சு சர்கமாக நூத்திஎட்டு நாளில் படி அப்டீம்பார். இருபத்தேழு நாள்ல படி, அப்டீம்பார். நவாஹமா, ஒன்பது நாள்ல ராமாயணத்தை முழுக்கப் படிக்கறதுக்கு அனுக்ரஹம் பண்ணுவார். அப்படி அவர் அனுக்ரஹம் பண்ணினா, அந்த பஜனம், சிறப்பாக நடக்கும். ஒரு விதமான, இடைஞ்சல்களும் இல்லாம நடக்கும். அந்த அவர் சொன்ன பஜனத்தை பண்ணிண்டு இருக்கும்போது, குடும்பமோ, வேலையோ, ஒரு கவலையும் ஒரு குறையும் நமக்கு இருக்காது. அதெல்லாமும் தானா நடக்கும். இதெல்லாம் நாங்க அனுபவிச்சிருக்கோம். அப்படி ஒரு மஹான், அப்படி அவர் அனுக்ரஹம் பண்ணி இருக்கார். அப்படி, ஸ்வாமிகளுக்குப் பிடிச்ச மாதிரி ஜயந்தி வைபவத்தை எப்படி கொண்டாடறதுன்னா, அவர் சொன்ன இந்த பாராயணங்களை பண்றது தான், அப்டீன்னு நினைச்சேன்.
அப்புறம் தான், இப்ப வர வர, மஹா பெரியவாளுடைய, அந்த உபந்யாசங்களை கேட்கும்போதும் சரி, மத்தவா எல்லாரும் அவரோட ஏற்படற தன் அனுபவங்களை பகிர்ந்துக்கிறதுலையும் சரி, பெரியவாளும் ஆதி சங்கரர், ஸோபான பஞ்சகத்துல சொன்ன மாதிரி “वेदो नित्यं अधीयतां” “வேதோ நித்யம் அதீயதாம்” வேதத்தை தினம் அத்யயனம் பண்ணனும். ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம், பிராமணாள் எல்லாம் நம்ம வேதத்தை படிக்காம இருக்கக் கூடாது. உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும், அதுல சொன்ன கர்மா எல்லாம்,பண்ணனும், அப்டீன்னு பெரியவா சொல்லி இருக்கா. மூகபஞ்ச சதில ஒரு ஸ்லோகம் ஞாபகம் வரது எனக்கு. பாதாரவிந்த சதகத்துல,
गृहीत्वा याथार्थ्यं निगमवचसां देशिककृपा-
कटाक्षर्कज्योतिश्शमितममताबन्धतमसः ।
यतन्ते कामाक्षि प्रतिदिवसमन्तर्द्रढयितुं
त्वदीयं पादाब्जं सुकृतपरिपाकेन सुजनाः ॥
க்ருஹீத்வா யாதார்த்யம் நிகமவசஸாம் தேசிகக்ருபா-
கடாக்ஷார்க ஜ்யோதிஷ்ஷமித மமதா பந்ததமஸ: |
யதந்தே காமாக்ஷி ப்ரதிதிவஸமந்தர்த்ரடயிதும்
த்வதீயம் பாதாப்ஜம் ஸுக்ருத பரிபாகேன ஸுஜனா: ||
அப்டீன்னு எண்பத்தி ஆறாவது ஸ்லோகம். இதோட அர்த்தம் என்னன்னா,
ஹே காமாக்ஷி, ஆச்சார்யனுடைய கிருபா கடாக்ஷம் அப்டீங்கிற சூரிய கிரணங்களால், மமகாரத்தால் ஏற்பட்ட பந்தம், என்ற அந்த அக்ஞான இருளை போக்கிக் கொண்டு, சாதுக்கள், தங்களுடையப் புண்ணிய பயனால், வேத வசனங்களின் உண்மைப் பொருளைக் கண்டறிந்து, அதாவது, உபநிஷத், பாஷ்யங்கள் எல்லாம் படிச்சு, அவா என்ன தெரிஞ்சுக்கறான்னா, அவா எந்த உண்மையை உணர்ந்துண்டான்னா, உங்களுடைய திருவடி தாமரையை எந்நாளும் மனதிலே, நிலை பெற்றிருக்கும்படி செய்ய, முயல்கிறார்கள், அப்டீன்னு, ‘யதந்தே’ என்கிறார். அப்படி சந்யாசிகள் கூட, வேதம் படிச்சு, உண்மை பொருளை உணர்ந்து, அவா என்ன தெரிஞ்சுண்டான்னா, உன்னுடைய பாதத் தாமரையைதான் தெரிஞ்சுண்டா. அப்படின்னு ஒரு அழகான ஸ்லோகம்.
இதை படிக்கும்போது, மஹாபெரியவா, தெய்வத்தின் குரல்ல அத்வைதத்தை பத்தியும், ஆதிசங்கரர், அவருடைய சரித்ரம், அவருடைய சிஷ்யர்கள், இன்னும் எந்த topic பெரியவா பேசினது ஆனாலும், தெய்வத்தின் குரல் ஸாராம்சம் போல இந்த ஸ்லோகம் இருக்கு. வேதம் படிக்கணும், தர்ம சாஸ்திரத்தை முடிஞ்ச வரைக்கும், வாழ்க்கையில நாம நடத்தணும், ஆசார அனுஷ்டானங்கள் எல்லாம் follow பண்ணினா, அம்பாளுடைய சரணம் கிடைக்கும். பண்ண வேண்டிய கார்யம் அந்த சரண தியானம் தான், இதுக்கெல்லாம் மதம்னே ஒண்ணும் பேர் இல்லை. அம்பாளுடைய சரண தியானம் னு பேரு. அப்படீன்னு முடிச்சுடறா பெரியவா.
இந்த மூகபஞ்சஸதி ல, கடாக்ஷ சதகத்துல ஒரு ஸ்லோகம் இருக்கு.
अज्ञातभक्तिरसमप्रसरद्विवेक-मत्यन्तगर्वमनधीतसमस्तशास्त्रम् ।
अप्राप्तसत्यमसमीपगतं च मुक्तेः कामाक्षि नैव तव स्पृहयति दृष्टिपातः ॥
அஜ்ஞாத பக்திரஸமப்ரஸரத்விவேகம்
அத்யந்த கர்வமனதீதஸமஸ்த சாஸ்த்ரம் |
அப்ராப்தஸத்யமஸமீபகதம் ச முக்தே:
காமாக்ஷி நைவ தவ காங்க்ஷதி த்ஷ்டிருபாத: ||
அப்டீன்னு கடாக்ஷ சதகத்துல நூறாவது ஸ்லோகம். இதோட அர்த்தம் என்னன்னா, ஹே காமாக்ஷி, பக்தியின் சுவையை அறியாதவனும், பகுத்தறிவின் சுவடே இல்லாதவனும், சாஸ்திரங்களை ஓதி உணராதவனும், சத்ய பொருளை அறியாதவனும், மோக்ஷத்துக்கு அருகே செல்லாதவனுமான, ஒருவனை காமக்ஷியினுடைய கடாக்ஷம் எப்போதும் விரும்புவது இல்லை, அப்டீன்னு அர்த்தம்.
ஆனா, மஹாபெரியவா, இதுக்கு அர்த்தம் சொல்லும்போது, காமாக்ஷி கடாக்ஷமானது, ஒருவரையும், மேற்குறித்த துர்குணங்களை கொண்டவனாக இருக்க விடுவதில்லை. அவன் பக்தியின் சுவையை அறிந்து, கர்வத்தை ஒழித்து, பகுத்தறிவோடு சாஸ்திரங்களை பயின்று, உண்மையை அறிந்து மோக்ஷத்தை அடையும்படி செய்யும். என்பது கருத்து, அப்டீன்னு, பெரியவா சொல்றா.
இந்த ஸ்லோகத்தை படிக்கும்போது எனக்கு சிவன் சாருடைய ஏணிப்படிகளில் மாந்தர்கள் ல சொன்ன அந்த approach ஞாபகம் வரது. உனக்கு விவேகம் வேணும், பக்தி வேணும், சத்யம் வேணும், இதெல்லாம் இருந்தாதான், உண்மை பொருளை உணர்ந்து, மோக்ஷம் அடைய முடியும். மோக்ஷம்கிறது, இந்த காலத்துல, commercialize பண்ணி, ரொம்ப சுலபம்கிற மாதிரி, சாமியார்கள் சொல்றா. அப்படி எல்லாம் கிடையாது. ஆத்மீகம்கிறது ரொம்ப உயர்ந்த விஷயம். தெய்வீகம் என்கிறதே ரொம்ப மேல இருக்கு. எத்தனையோ ஜென்மங்களுக்கு அப்புறம் கிடைக்கக் கூடிய ஒரு பெரிய நிலை. அப்டீன்னு, நீ ரொம்ப light ஆ நினைக்காதே, அப்டீன்னு சிவன் சார் warn பண்ற மாதிரி, இந்த ஸ்லோகம் இருக்கு.
ஆனா சிவன் சாரும் தன்கிட்ட வந்து நமஸ்காரம் பண்றவா கிட்ட பக்தியை சொன்னார். லக்ஷ்மி நாராயணன். அவர் சிவன் சார் கிட்ட, நான் ஸுப்ரமணிய புஜங்கம் பாராயணம் பண்றேன், சந்தியாவந்தனம் பண்றேன், அவ்வளவுதான் தெரியும் பெரியவா, அப்டீன்ன உடனே, “போறும். அதுபோறும். விடாமல் பாராயணம் பண்ணிண்டு இரு. என்னை வந்து நமஸ்காரம் பண்ணு. உனக்கு, மேல் உலகத்துக்கு போனா சித்திரகுப்தன், ஸ்டூல் போடு உட்கார வைப்பான்”, அப்டீன்னு, அபயம் கொடுத்துருக்கா.
அந்த மாதிரி, மஹா பெரியவா கேட்கவே வேண்டாம். தேசம் முழுக்க நடையா நடந்து, எண்பது வயசுக்கு மேல, கிளம்பி தொண்ணூறு வயசு வரைக்கும், நடந்து போய் எல்லாருக்கும் தரிசனம் கொடுத்து, எல்லாருக்கும், ஆறுதல் சொல்லி, எல்லாருக்கும், அபயம் கொடுத்து, எல்லாருக்கும் மனதில் தெய்வ பக்தி வரும்படியா பெரியவா அனுக்ருஹம் பண்ணியிருக்கா.
எதுக்கு சொல்லவரேன்னா, பெரியவா தெய்வத்தின் குரல்ல, தர்ம சாஸ்திரங்கள், வேதம், அத்வைதம் எல்லாம் சொன்னாலும் பெரியவாளும், தன்கிட்ட வந்து நமஸ்காரம் பண்ணவாளுக்கு பக்தி, நாம ஜபம், ஸ்தோத்திர பாராயணங்கள், இததான் ரொம்ப stress பண்ணி சொல்லி இருக்கா. சிவன் சாரும், அவர் வந்து, ஆத்மீகம், தெய்வீகம் எல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம், அப்டீன்னு சொன்னா கூட, தன்னை வந்து, நமஸ்காரம் பண்ணவாகிட்ட, ‘நீ நேர்மையா இரு. விடாம ஒரே தெய்வத்திடம் பக்தி பண்ணு. ஒரு கடமையா, பணிவோட தெய்வ பக்தி பண்ணு. என்னை நம்பு’, அப்டீன்னு வாக்கு கொடுத்துருக்கார்.
ஸ்வாமிகளும் அதே மாதிரி, தன்னை வந்து நமஸ்காரம் பண்ணவா எல்லாருக்கும்,பொறுமையா, வருஷக் கணக்கா, இந்த ஸ்தோத்திரங்களை எல்லாம் சொல்லி கொடுத்து, இந்த ஸ்தோத்திரங்களை படி, மூகபஞ்சசதி பாராயணம் பண்ணு, சுப்ரமண்ய புஜங்கம் பாராயணம் பண்ணு, அப்டீன்னு, இதை விடாம, இன்னும் அனவரதமும் இத பாராயணம் பண்ணிண்டே இருக்கணும். நம்ம வாழ்க்கையினுடைய அர்த்தமே அதுதான், அப்டீன்னு, ஸ்வாமிகள் தான் வாழ்ந்து காண்பிச்சு, சொல்லிக் குடுத்து இருக்கார். எவ்வளவு இக்கட்டு இருந்தாலும், தெய்வ பஜனம் பண்ணனும். அப்படி பண்ணினா பகவான் காப்பாத்துவார். நம்முடைய எல்லா பொறுப்புகளையும் அவர் எடுத்துப்பார். கஷ்டங்களை போக்குவார். மனசுல சாந்தி ஏற்படும்படியா, அனுக்ரஹம் பண்ணுவார், அப்டீங்கிறது, ஸ்வாமிகளை பார்த்தவா எல்லாருக்கும் தெரியும். அவர் சொல்லி, ஏதோ கொஞ்சம் பஜனம் பண்றவாளுக்கும் அது புரியும்.
அதனால, இந்த ஸ்வாமிகளுடைய ஜயந்தி உத்ஸவத்துல அவருக்கு ரொம்ப பிரியமான, இந்த பஜனத்தை இன்னும் இன்னும் அதிகமா, மற்ற கார்யங்களை எல்லாம் கூட விட்டுட்டு, அவர் சொன்ன ராமாயணம், விஷ்ணு சஹஸ்ரநாமம், சங்கர ஸ்தோத்திரங்கள், மூகபஞ்சசதி, திருப்புகழ், திருவகுப்பு, இதையே படிச்சுண்டு இருக்கணும் அப்டீன்னு, அவருடைய சரணாரவிந்தத்துல எனக்காகவும், எல்லாருக்காகவும் பிரார்த்தனை பண்ணிக்கிறேன்.
மஹாபெரியவா approachக்கு ஒரு மூகபஞ்சஸதி ஸ்லோகம் சொன்னேன், சிவன் சார் approachக்கு ஒரு ஸ்லோகம் சொன்னேன். ஸ்வாமிகளுடைய approach க்கு சொல்லணும்னா,பாதாரவிந்த சதகத்துல, நாற்பதாவது ஸ்லோகம் ஒண்ணு இருக்கு.
शनैस्तीर्त्वा मोहाम्बुधिमथ समारोढुमनसः
क्रमात्कैवल्याख्यां सुकृतिसुलभां सौधवलभीम् ।
लभन्ते निःश्रेणीमिव झटिति कामाक्षि चरणं
पुरश्चर्याभिस्ते पुरमथनसीमन्तिनि जनाः ॥
ஷனைஸ் தீர்த்வா மோஹாம்புதிம் அத ஸமாரோடு மனஸ:
க்ரமாத் கைவல்யாக்யாம் ஸுக்ருதி ஸுலபாம் சௌத வலபீம் |
லபந்தே நிச்’ரேணீ மிவ ஜடிதி காமாக்ஷி சரணம்
புரச் ச’ர்யாபிஸ்தே புரமதன ஸீமந்தினி ஜனா: ||
ஹே காமாக்ஷி, திரிபுரத்தை அழித்த பரமேஸ்வரனுடைய பத்னியே, அக்ஞானமாகிய ஸமுத்ரத்தை கடந்து, அதன் பிறகு படிப்படியாக கைவல்யம் என்னும் பேரை உடையதான,புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே அடையக் கூடியதான மாளிகையின் மாடத்தை ஏறிச்சென்று அடைய வேண்டும், என்ற எண்ணம் உடையவர்கள், உன்னுடைய பாதத்துக்கு பூஜை செய்ய ஆரம்பித்த உடனேயே, அதாவது, பூஜையின் ஆரம்பம்,புரஸ்சரணை. அதை ஆரம்பித்த உடனேயே, அதி சீக்கிரத்தில், மாடிக்கு ஏறுவதற்கு படிக்கட்டு போல, உன்னுடைய சரணத்தைப் பெறுகிறார்கள். அப்டீன்னு, அந்த அம்பாளுடைய சரணம் மோக்ஷத்துக்கு ஒரு படிக்கட்டாட்டம் இருக்கு.
இந்த தர்ம ஸாஸ்திரங்கள்ல சொன்ன வழியோ, இந்த உபநிஷத் விசாரங்களோ, ஆத்ம விசாரங்களோ, அதெல்லாம் பண்ணா எந்த மோக்ஷம் கிடைக்குமோ, அதெல்லாம் இந்த அம்பாளோட சரணத்தை தியானத்தை பண்ணனும், பூஜை பண்ணணும்னு ஆரம்பிக்கரதுக்குள்ளயே, அம்பாளுடைய சரணம்ங்கிற ஏணியில் ஏறி அந்த மோக்ஷத்தை அடைஞ்சுடலாம், அப்டீன்னு, இந்த ஸ்லோகம் இருக்கு. இதுதான் ஸ்வாமிகளுடைய approach. ரொம்ப ஆறுதலா, ரொம்ப hope கொடுத்து, இதை நீ பாராயணம் பண்ணு,பெரிய க்ஷேமம் ஏற்படும், அப்டீன்னு, ஒரு சாதாரண ஸ்தோத்திர பாராயணத்தை, அதில் அந்த மஹான்கள் சொன்ன வார்த்தையை நம்பி, लभेत्स्कन्दसायुज्यमन्ते नरः सः லபேத் ஸ்கந்த சாயுஜ்யம் அந்தே நர: ஸ: அப்டீன்னு, அந்த பகவானை போயி அடையலாம் அப்டீன்னு, அந்த ஸ்தோத்திரத்தை விடாம பாராயணம் பண்ணு,நிறைய ஆவர்த்தி பண்ணு, அப்டீன்னு, encourage பண்ணி சொல்வார். அந்த சுலபமான உபாயத்தால, பெரிய நன்மை,மோக்ஷ பர்யந்தம் எல்லாமே கிடைக்கும், அப்டீங்கிறது,ஸ்வாமிகள், சொல்றது, இந்த ஸ்லோகம் மாதிரி, படியாட்டம் அம்பாளுடைய சரணம் கிடைக்கும், சரணம்கிறதுக்கு, அடின்னு,ஒரு வார்த்தை இருக்கு இல்லையா. அது போல சரணம்னாலே அடியவர்கள். பகவத்பாத: அப்டீன்னாலே, அந்த பகவானுடைய அடியவர்கள். அந்த மாதிரி ஸ்வாமிகளே நமக்கு குருவா, ரொம்ப சுலபமான ஒரு உபாயத்தை காண்பிச்சிருக்கார். அதை நம்பி நாம பண்ண வேண்டியதுதான்.
अत्यन्तशीतलमतन्द्रयतु क्षणार्धं
अस्तोकविभ्रममनङ्गविलासकन्दम् ।
अल्पस्मितादृतमपारकृपाप्रवाहम्
अक्षिप्ररोहमचिरान्मयि कामकोटि ॥
ஹே காமாக்ஷி, உன்னுடைய கடாக்ஷம், கிருபைங்கிற மழையை என் மேல கொட்டணும், அப்டீன்னு ஒரு அழகான ஸ்லோகம். அப்படி அந்த மழை மாதிரி ரொம்ப குளிர்ச்சியானதும்,இனிமையானதுமான அந்த காமாக்ஷியினுடைய கடாக்ஷம், நம்ம மேல கொட்டும். அந்த குரு வார்த்தையை நம்பி, நம்முடையegoங்கிற குடையை வெச்சு, அந்த மழையை தடுக்காம, குடையை எடுத்துட்டு, குரு வார்த்தையை நம்பி, பஜனம் பண்ணிணா, அந்த மழையை. அந்த ஆனந்தத்தை அனுபவிக்கலாம். ஸ்வாமிகளுடைய அனுக்ருஹம் இருக்கு, வேற எதை பத்தியும் கவலைப் பட வேண்டாம்.
ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…
https://soundcloud.com/ganapathy-subramanian-sundaram/swamigal-jayanthi-2017
2 replies on “கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஜயந்தி”
ஶ்ரீ குருப்யோ நம: !
ஸத்குரு கடாக்ஷம் , அதுவும் கிருபை நிரம்பிய கடாக்ஷம் ஞான சூரியன் ! மமாகாரம் என்ற ஷங்காரத்தால் ஏற்பட்ட அஞ்ஞானம் என்ற கண்களைத் திறந்து, ஞானமாகிய மையை இட்டுவிடுகிறது! புண்ய சாலிகளான சாதுக்கள் பூர்வ புண்ய பலத்தால் வேத நெறியிலே நின்று, பரம சத்தியமாய் விளங்கும் உன் திருவடித் தாமரைகளில் தம்மை அர்ப்பணிக்கிறார்கள்!
வேதம் நமக்கு விதி என்று தல்லுவதை நிஷேதம் என்று சொல்கிறது!
அஞ்ஞான திமிராந்தாஸ்ய
ஞானாஞ்சல சலாகயா
சக்ஷுர் உன்மீலிதம் ஏன தஸ்மை ஶ்ரீ குரவே நம:
குரு மூலமாகவே நாம் ஈஸ்வரனை, அம்பாளை அடைய ஹேதுவாகிறது !
அப்படிப்பட்ட குருவின் ஜென்ம தினம் நமக்கு ஒர் புனிமான நாளல்லவா !!
ஸ்ரீ பெரியவா ! ஷரணம் 🙏🙏
ஸ்ரீ காமாக்ஷயின் கடாக்ஷமும், ஸ்ரீ ஸ்வாமிகள் அருள் கடாக்ஷமும் ஒரு சேர்ந்த ஓர் உயர்ந்த அனுபவத்தை கொடுத்த இந்த பகிர்வுக்கு முதற்கண் வணக்கம்.
ஸ்ரீ பெரியவா என்ற காமாக்ஷியும், ஸ்ரீ சாரும், ஸ்ரீ ஸ்வாமிகளும் ஸத் குருவாக நின்று காட்டிய வழியில் அழைத்துச் செல்ல ஒரு வகையாக அமையப்பெற்றுள்ளது, ஸ்ரீ ஸ்வாமிகள் ஜெயந்தி விழா உரை.
ஸ்ரீ சார் நேரில் பேசுவது போல் இருந்தது இந்த விளக்கம்.
ஸ்ரீ ஸ்வாமிகள் வாழ்க்கையும், வாக்கும் மிகுந்த நம்பிக்கை கொடுக்க கூடியதாக உள்ளது.
ஸ்ரீ பெரியவா சொன்னது போல் காமாக்ஷியின் சரண தியானம், மற்றும் ஸ்ரீ சார் கொடுக்கும் ஆசிகளும், ஸ்ரீ ஸ்வாமிகள், நாம ஜபம், ஸ்த்தோத்ர பாராயணம் மூலம் மோக்ஷத்திற்கு எளிதாக இந்த பக்தி மார்க்கத்தினால் அடைய முடியும், என்று சொன்ன உத்திரவாதம் மூலம் இப்பிறவி பயன் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
ஸ்ரீ காமாக்ஷி சரண தியானம் செய்வோம், மதத்தை விலக்கி, அவளின் இடைவிடாத கருணை மழையில் நனைந்து இன்புறுவோம்.
ஸ்ரீ காமாக்ஷி பாதம் ஷரணம் 🙏🙏