Categories
Bala Kandam

வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?

3. வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.

[வால்மீகி முனிவரின் பூர்வ சரிதம்] (Audio file. Transcript given below)

வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத்மஜே |

வேத ப்ரசேதஸாதாசீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா ||

‘பகவான்னு ஒருத்தர் இருக்கார்! ஈஸ்வரன்னு ஒருத்தர் இருக்கார்! அம்பிகைன்னு ஒருத்தர் இருக்கார்!’ என்று வேதம் நமக்கு காட்டிக் கொடுத்திருக்கு. அந்த வேதம் கூறிய பரம்பொருளானது, பூமியிலே ஸ்ரீ தசரத குமாரனாய், ஸ்ரீராமராக அவதாரம் செய்தவுடனே, அந்த வேதம் பார்த்தது. “இந்த பகவானே ஸ்ரீராமராய் அவதாரம் செய்து விட்டார். இனி நாம் என்ன செய்ய வெண்டும்?”, என்று எண்ணி வேதமானது ஸ்ரீ வால்மீகி முனிவரின் வாயிலாக ஸ்ரீமத்ராமாயணமாக வெளிப்பட்டுவிட்டது. இதுதான் இந்த ஸ்லோகத்துக்கு பொருள்.

வேதம் தான் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்! அதை வெளிப்படுத்தின முனிவர், மகரிஷி வால்மீகி பகவான். அந்த வால்மீகி முனிவரின் பூர்வ சரித்திரம் என்ன?

முன்னொரு காலத்தில், ரத்னாகரன் என்ற வழிப்பறி கொள்ளைகாரன் ஒருவன் காட்டில் இருந்தான். யாராவது, அந்த காட்டின் வழியே போனால் அவர்களை கொன்று அவர்களுடைய பொருட்களை அபகரித்து, அதில் வாழ்ந்து வந்தான்.

ஒரு முறை அவனுடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தினால், சப்தரிஷிகள் அந்த வழியே வந்தார்கள். எப்போதுமே கத்தியை எடுத்துக்கொண்டு போகும் அவன், அவர்களைப் பார்ததுமே மனதில் சிறிது சாந்தம் ஏற்பட, ஆனாலும் அவர்களிடம் போய், “யார் நீங்கள்? எங்கு வந்தீர்கள்? இருப்பதெல்லாம் கீழே வையுங்கள். வைத்துவிட்டு, பேசாமல் ஓடிப்போங்கள்!”, என்றான்.

அதற்கு அவர்கள், “எங்கக்கிட்ட ஒண்ணுமே இல்லயே, அப்பா!” என்றார்கள்.

“ஒண்ணுமே இல்லையா? அப்போ என்ன செய்வீர்கள்?”

“நாங்க பகவானை ஸ்மரித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் த்யானத்திலே இருக்கோம். அதனால் ஆனந்தமாக இருக்கிறோம்.”

“ஆமா! பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சாந்தமாக, ஆனந்தமாக இருக்கிரீர்கள். ஆனால், உங்களிடம் ஒன்றும் இல்லை! எங்கிட்ட எவ்வளவு இருக்கு தெரியுமா? நிறைய இருக்கு. கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன்.”

“ஆனால், நீ இப்படி சேர்த்துவைத்த பணமெல்லாம், பண மூட்டை இல்லையப்பா… இதெல்லாம் பாவ மூட்டை! இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாயே…” என்று கருணையினால் பதில் கூறினார்கள்.

“ஏன்? என்னக் கஷ்டம்?”

“இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சுவர்க்கம், நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்தால், அதாவது புண்ணிய காரியங்கள் செய்தால், சுவர்க்கம் செல்வார்கள். பாவச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில், பலவிதமான தண்டனைகளை பெற்று அவதிப் படவேண்டியிருக்கும்.”

“அப்படியா? இதெல்லாம் நான் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் அதை பகிர்ந்துக் கொள்வார்கள்”.

“அப்படியா? நீ அவர்களைப் போய் கேட்டுக் கொண்டு வா!”

உடனே ரத்னாகரன் வீட்டுக்கு வந்து தன் மனைவி, அப்பா, அம்மா, குழந்தைகளிடம், “நான் நிறைய பாவம் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள் வாங்கிக்கொள்வீர்களா?  பகிர்ந்துக் கொள்ளுகிறீர்களா?”என்று கேட்டான். அதற்கு அவர்கள் “அதை எதுக்கு நாங்க பகிர்ந்து கொள்ளணும்? எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். நீ நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியதுதானே? நீ பாவ வழியில் சம்பாதித்தால், அதற்காக நாங்கள் அந்த பாவத்தை வாங்கிக் கொள்ள மாட்டோம்! அப்பா அம்மாவை காப்பாத்த வேண்டியது உன்னுடைய கடமை. மனைவி குழந்தைகளை காப்பாத்த வேண்டியது உன்னுடைய கடமை. அதற்கு நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது உன்னுடைய கடமை. அதை விட்டு விட்டு தப்பு வழியில் சம்பாதித்தது உன் தவறு.”

இதைக் கேட்டவுடன், இரத்னாகரனுக்கு அகக்கண் திறந்துவிட்டது. அவர் உடனே திரும்பி வந்து, ரிஷிகளையெல்லாம் நமஸ்காரம் செய்து, “அறியாமல் இது போன்ற தப்பு வழிகளில்  இவ்வளவு நாள் இருந்துவிட்டேன். மிகவும் கடுமையான பாவங்களை எல்லாம் செய்திருக்கிறேன். எனக்கு ஏதாவது கதி இருக்கிறதா? வழி இருக்கிறதா? நீங்கள் கூற வேண்டும்”  என்று வேண்டிக் கொண்டான்.

“நீ, ‘ராம! ராம! ராம!’ என்று ராம நாமத்தை நாமத்தை சொல்லுப்பா. ராம நாமம் ஜபம் எல்லாப் பாவத்தையும் போக்கும்!” என்று அவர்கள் பதில் உரைத்தனர்.

ஆனால், இவருக்கோ, ‘ராம’ என்று கூட சொல்ல வரவில்லை. உடன் அருகில் இருந்த மரா மரத்தை காட்டி, “இது என்ன?” என்றனர்.

“இது, மரா மரம்.” “மரா, மரா என்று சொல்!”

“மரா!” “ஹ்ம்ம்… இதையே நீ திருப்பிப் திருப்பி சொல்லிக் கொண்டிரு!” என்று கூறி அவர்கள் சென்றுவிட்டனர்.

இப்படி ‘மரா மரா மரா…’ என்று கூறினால் ‘ராம ராம ராம…’ என்று வரும். இரத்னாகரனாய் இருந்த அவரும் இப்படியாக ‘ராம ராம ராம’ என்று சொல்லி, அவருக்கு ‘ராம’ நாமத்தில் ருசி வந்துவிட்டது. ஜென்ம ஜென்மாவாக புண்ணியம் செய்திருந்தால்தான் ‘ராம’ நாமத்தில் ருசி வரும்.

வேடனாய் இருந்த அவருக்கு, ரிஷிகளின் போதனையால், ‘ராம’ நாம ருசி வந்துவிட்டது. அவர் ராப்பகலாய் பசி தாகத்தை மறந்து, ‘ராம ராம ராம’ என்று சமாதி எனும் நிஷ்டையில் இருந்தார்.

அசையாமல் அப்படி அவர் இருந்ததால், அவர் மேல் எறும்புகளெல்லாம் புற்றுக் கட்டிவிட்டது. ஆனால், அவருக்கு அதுகூட தெரியவில்லை. இப்படி அவரிடம் இருந்த எல்லா பாவங்களும் நீங்கி, பரம புண்ணிய பாவனனாய், ஒரு மகரிஷியாக ஆகிவிட்டார்.

சில காலம் கழித்து, அதே சப்தரிஷிகள் அந்த பக்கம் வரும் போது, “இங்கே மிக ரம்மியமாக, ஆசிரமம் போல் உள்ளதே! ஓ… இங்கே தானே ‘ராம’ நாம ஜபம் செய்ய ஒருவர் உட்கார்ந்தார்” என்று அந்த எறும்புப் புற்றைப் பார்த்தனர். அதைப் பார்த்து, ‘வால்மீகி!’ என்று அழைத்தனர். புற்றுக்கு ‘வால்மீகி’ என்றுப் பெயர். புற்றிலிருந்து மகரிஷி வெளியே வந்தார்.

“இன்றிலிருந்து உமக்கு ‘வால்மீகி’ என்று பெயர். நீங்கள் மகரிஷியாகிவிட்டீர்கள். இந்த ராம நாம மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும்“, என்று கூறினர்.

அவரும் ரிஷிகளை பலமுறை நமஸ்கரித்து, பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு, ஒரு ஆசிரமத்தை அந்த தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டு இருந்து வருகிறார். அவரிடம் சிஷ்யர்கள் எல்லாம் வந்து சேர்கிறார்கள்.

பிறகு, நாரத மகரிஷி ஸ்ரீ ராம சரித்திரத்தை வால்மீகி பகவானுக்கு உபதேசம் செய்ததை நாளை பார்ப்போம்.

Series Navigation<< ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்?ஸங்க்ஷேப ராமாயணம் >>

2 replies on “வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?”

மரா மராவென்று உபதேசித்து, அதன் மூலம் ராமருடைய நாமத்தை சொல்வது தமிழ்தெரிந்த ரத்னாகரனுக்கு பொருந்தும். வடமொழி தெரிந்தவனுக்கு இது எப்படி பொருந்தும்.

ரிஷிகள் தமிழ் வார்த்தை மரம் என்பதை மரா என்று சொல்லவில்லை. மரா என்ற பெயருடைய ஒரு மரம், வ்ருக்ஷம் இருக்கிறது. அந்த வ்ருக்ஷத்தின் பெயரை சொல்லச் சொல்லி அதன் மூலம் அவன் வாயில் ராம நாமத்தை வரவழைத்தார்கள். அதாவது, பக்தியோ படிப்பறிவோ இல்லாதவரும் ராம நாமத்தை சொல்வதின் மூலம் பாபங்கள் விலகி மகரிஷியாக ஆகலாம் என்பது கருத்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.