இன்னிக்கு மூல நக்ஷத்ரம், ஹனுமாருடைய பிரபாவத்தைப் பற்றி பேசுவோம். ஹனுமார், சீதா தேவியை பார்த்து, அவளுக்கு ஆறுதல் சொல்லி, ஸ்ரீ ராமருடைய அங்குலீயகத்தை (மோதிரம்) காண்பித்து, நம்பிக்கை ஏற்படுத்தி, “ஸ்ரீ ராமர் வந்துவிடுவார், தங்களின் கஷ்டம் தீர்ந்தது, தாங்கள் இனிமேல் அழவேண்டாம்” என்று கூறுகிறார். முதலில் பார்த்தவுடன், “ஏனம்மா அழுகிறாய்?” என்று கேட்டார், இப்போ கிளம்பும்போது “இனி நீங்கள் அழவேண்டாம், தங்களின் கஷ்டங்கள் தீர்ந்தது” என்று கூறிவிட்டு, சீதாவிடம் ஏதாவது அடையாளம் தரச் சொல்லி கேட்டு, அவள் சூடாமணி தர, அதனை பெற்றுக் கொண்டு கிளம்புகிறார்.
அது போல, பகவான் ஒருவர் தான், ஏன் அழுகிறாய் என்று கேட்டு, இனிமேல் அழவேண்டாம், உன் கஷ்டம் தீர்ந்தது என்று கூறுவார். அதனால், நம்முடைய கஷ்டத்தினை பகவான் ஒருவரிடம் தான் கூற வேண்டும், வருவோர்கள் போவோர்கர்ளிடம் கூறினால், ஒரு சிலர் சந்தோஷமும் படுவார்கள், பலர் அதனை பொருட்படுத்த மாட்டார்கள். அவாளால என்ன செய்ய முடியும், உலத்தில் உழலும் மனிதர்களினால் நம்முடைய கஷ்டத்தினை போக்க முடியாது. போக்கு கூடிய பகவானிடம்தான் நாம் கூறவேண்டும், என்று ஸ்வாமிகள் சொல்வார்.
அடுத்தது, அசோக வனத்தில் இருந்து வெளியே வந்தவுடன், யோசிக்கிறார். “சரி நாம் வந்தோம், சீதாதேவியை பார்த்தோம், அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டோம், இந்த இராக்ஷஸ பதர்களுக்கு எல்லாம் என்ன ஒரு கர்வம், இவர்களுடைய கர்வத்தினை ஒழிப்பது போல, இவர்கள் பயப்படும் விதமாய் எதாவது செய்யவேண்டும். நாம் வந்த காரியத்திற்கு கெடுதல் இல்லாமல், அதிகப்படியாக காரியம் செய்தால், அதவாது, அதற்கு அனுகூலமான காரியங்கள் செய்தால் தவறு இல்லை” என்று முடிவு செய்துகொண்டு, இந்த இராவணனை பார்க்கவேண்டும், அவனுக்கு ஒரு தடவையாவது நல்ல புத்தி கூறவேண்டும், அதனை அவன் கேட்கிறானா என்று பார்ப்போம் என்று நினைத்து, அந்த இராவணனை பார்க்க, நம்முடைய பராக்கிரமத்தை காட்டவேண்டும், இந்த இராக்ஷஸகளிடம், சாம தான பேதம் எல்லாம் ஒன்றும் பலிக்கப் போவது இல்லை, இவர்கள் மிக பலசாலிகளாக இருக்கிறார்கள், இவர்களிடம் சமாதனம் பேசுவதோ, இவர்களுக்கு பரிசுகள் தானமோ குடுப்பதோ, அல்லது இவர்கள் ஒருவரை ஒருவர் பிரித்து விடுவதோ அதுபோன்றவை எல்லாம் இப்பொழுது நடக்காது, தண்டம் தான் அவர்களுக்கு புரியும், அதனால், இவரக்ளுடன் யுத்தம் செய்து, வானரர்களின் பராக்கிரமம் என்ன என்றும், இராமதாசன் என்றால், எவ்வளவு பெரிய வீரன் என்று இவர்களின் மனதில் ஒரு பயத்தினை உண்டாக்கபோகிறேன்” என்று சங்கல்பித்துக் கொண்டு, அசோக வனத்தினை த்வம்சம் செய்கிறார்.
அசோகவனத்தில் இருக்கும் மரங்களை அழித்து, அங்கு இருக்கும் மண்டபங்களை உடைத்து த்வம்சம் செய்தவுடன், இராக்ஷஸிகள் எழுந்து இவரை பார்க்கிறார்கள். இவ்வளவு பெரிய மலை போன்ற உருவத்தை பார்த்து பயந்து போய், உடனே சென்று இராவணனிடம் சொல்கிறார்கள், “யாரோ ஒரு பெரிய உருவமுடைய, சிவந்த முகமுடைய ஒரு குரங்கு அசோகவனத்தில் வந்திருக்கிறது. அது சீதாதேவியிடம் பேசியது என்று நினைக்கிறோம் நாங்கள், அனால் சரியாக தெரியவில்லை. அக்குரங்கு அசோகவனத்திணை அழித்துவிட்டது, தங்களின் காவலில் இருக்கிற இலங்கையில் உள்ளே ஒருவன் வருவதாவது!, அப்படி வந்து சீதாதேவியை பார்த்து பேசுவதாவது! நீங்கள் உடன் அவனுக்கு தண்டனை குடுக்க வேண்டும்” என்று சொல்கிறார்கள்.
உடனே, இராவணனுக்கு கடும் கோபம் வருகிறது, “அவனின் கண்களில் இருந்து நெருப்பு பொறிகள் கிளம்பியது” என்கிறார் வால்மீகி. உடனே அவன் எண்பதாயிரம் கிங்கரர்களை அனுப்புகிறான். ஹனுமார் ஒரு தூணினை பெயர்த்து எடுத்து சுற்றுகிறார், அதனில் இருந்து நெருப்பு வருகிறது, அந்த எண்பதாயிரம் பேரையும் வதம் செய்து விடுகிறார்.
जयत्यतिबलो रामो लक्ष्मणश्च महाबलः ।
राजा जयति सुग्रीवो राघवेणाभिपालितः ।।
दासोऽहं कोसलेन्द्रस्य रामस्याक्लिष्टकर्मणः ।
हनुमाञ्शत्रुसैन्यानां निहन्ता मारुतात्मजः ।।
न रावणसहस्रं मे युद्धे प्रतिबलं भवेत् ।
शिलाभिस्तु प्रहरतः पादपैश्च सहस्रशः ।।
अर्दयित्वा पुरीं लङ्कामभिवाद्य च मैथिलीम् ।
समृद्धार्थो गमिष्यामि मिषतां सर्वरक्षसाम् ।।
ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல: |
ராஜா ஜயதி சுக்ரீவோ ராகவேணபிபாலித: ||
தாஸோ(அ)ஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |
ஹனுமான்ஸத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||
ந ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத் |
ஸிலாபிஸ்து ப்ரஹரத: பாதபைஸ்ச ஸஹஸ்ரஸ: ||
அர்தயித்வா புரீம் லங்காமபிவாத்ய ச மைதிலீம் |
ஸம்ருத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||
என்று கர்ஜிக்கிறார், “நான் ராமதாசன், ஆயிரம் இராவணர்கள் வந்தாலும் என் முன் யுத்தத்தில் நிற்க முடியாது. சுக்ரீவன், வானரப்படையோடு வரப்போகிறான், உங்கள் எல்லாரையும் உதைக்க போகிறான்” என்று சொல்கிறார். இந்த நான்கு ஸ்லோகங்கள்
ஜயதி அதி பலோ ராம: லக்ஷ்மணஸ்ச மஹாபல:…..
என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களை, எந்த ஒரு புதிய காரியமாக இருந்தாலும், இதனை சொல்லிக் கொண்டு இருந்தால், அதில் வெற்றி ஏற்படும் என்று ஸ்வாமிகள் நிறைய பேரிடம் சொல்லி நான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு ஜயப்ரதமான நான்கு ஸ்லோகங்கள்.
அதன் பிறகு, பிரகஸ்தனின் பிள்ளை ஜம்புமாலி என்று ஒருவன் வர, அவனையும் வதம் செய்துவிடுகிறார். அதன் பிறகு, ஏழு சேனாதிபதிகள், ஐந்து மந்திரி குமாரர்கள் , மேலும் பலர் வருகிறார்கள், அவர்கள் எல்லாவற்றையும் வதம் செய்துவிடுகிறார் ஹனுமார்.
அப்புறம், இந்த்ரஜித்தை அனுப்புகிறான் இராவணன், இந்த்ரஜித் ப்ரம்மாஸ்திரம் போடுகிறான், ஹனுமாரும் சரி, இராவணனை இனி பார்க்கவேண்டும், அதானால் அந்த அஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு, அந்த இராவணன் சபைக்கு சென்று, அவனக்கு, நல்ல வார்த்தையாக இரண்டு சொல்கிறார், பிறகு கடுமையாக எச்சரிக்கை (Warning) கொடுக்கிறார்.
அப்பொழுது இராவணனுக்கு கோபம் வருகிறது, “இந்த வாரனத்தை கொல்லுங்கள்” என்கிறான். அப்பொழுது விபீஷணர் எழுந்தது, “இராவணா தூதனாய் வந்தவனை கொல்லக்கூடாது, நீ அரச தர்மங்களை எல்லாம் படித்திருக்கிறாய், நீ அதனை செய்யாதே”, என்று கூறியவுடன், அதற்கு இராவணன் சொல்கிறான், “இவன் எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்திவிட்டான், இவனை கொல்லப் போகிறேன்” என்றவுடன், விபீஷணர் மீண்டும் எழுந்து, “நீ எவ்வளவு பெரிய வீரன், இவனை நீ கொன்று விட்டால், அதன்பிறகு, யார் மீண்டும் சென்று இவனை அனுப்பியவரிடம் சொல்வார், பிறகு நீ அவர்களை எப்படி யுத்தத்தில் சந்திக்க முடியும்? அதனால், நீ இவனை திருப்பி அனுப்பு, யார் இவனை அனுப்பினார்களோ, அந்த இராம லக்ஷமணர் வரும்பொழுது, உனது வீரத்தினை காட்டு. வந்த ஒரே ஒரு தூதனை கொல்வது பாபம்”, என்று அறிவுறுத்தியவுடன், இராவணனும் “சரி” என்கிறான்.
அதன் பிறகு விபீஷணர், “வேறு ஏதாவது தண்டனை குடு என்று, தூதர்களை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அனுப்பவுது போன்றவற்றை செய்வார்கள், கொல்ல மாட்டார்கள்” என்று கூறுகிறார். உடனே, இராவணன், “வானரர்களுக்கு வால் மிகவும் பிரியமான ஒரு அங்கம், அதனால் இவனுடைய வாலில் நெருப்பு வைத்து கொளுத்துங்கள்” என்று கூறுகிறான். வானரர்களுக்கு உள்ள பழக்கம் என்னவென்றால், ஒரு வானரம் அங்கஹீனம் ஆகிவிட்டது என்றால், அதாவது, கை கால் ஏதாவது அடிபட்டதென்றால், மற்ற வானரங்கள் அதனை விட்டுவிட்டு சென்று விடும், இதனை ஒரு documentry யில் கூட பார்த்தேன் அதுபோல, வாலில்லாமல் வந்தால், இவனுடைய பந்துக்களும் சிநேகிதர்களும் கேலி செய்வார்கள். அதனால், இவனுடைய வாலில் நெருப்பு வையுங்கள் என்று கூறுகிறான்.
உடனே இராக்ஷஸர்கள் ஹனுமாரின் வாலில், துணியை சுற்றுகிறார்கள், நெய்யை விடுகிறார்கள, அனால் எவ்வளவு சுற்றினாலும், நெய் விட்டாலும், அவருடைய வால் வளர்ந்து கொண்டே போகிறது, அந்த விளையாட்டில், இராக்ஷஸர்கள் தளர்ந்து போகிறார்கள். பின்னர், இராவணன் நெருப்பை வைக்க சொல்ல, அவர்களும் வைத்துவிடுகிறார்கள். அப்பொழுது, இந்த விஷயத்தை இராக்ஷஸிகள் சென்று சீதாதேவியிடம் சொல்கிறார்கள், சீதை ஒரு விளக்கை ஏற்றி, அக்னிபகவானிடம், இந்த ஹனுமனின் வாலில் உள்ள நெருப்பு அவரை சுடாமல் இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்.
यद्यस्ति पतिशुश्रूषा यद्यस्ति चरितं तपः।। यदि वास्त्वेकपत्नीत्वं शीतो भव हनूमतः।
யத்3யஸ்தி பதி ஸுஸ்ரூஷா யத்3யஸ்தி சரிதம் தப: ||
யதி3 வாஸ்த்யேகபத்னீத்வம் ஸீதோ ப4வ ஹனூமத: |
என்று வேண்டிகொள்கிறாள். அப்பொழுது ஹனுமாரின் வாலில், வைத்த நெருப்பு அவருக்கு குளிர்ச்சியாக இருக்கிறது,
“என்னடா இது, நெருப்பு வைத்தார்களே” என்று திரும்பி பார்க்கிறார் அவர், “ஆமாம், நெருப்பு இருக்கிறது அனால் எனக்கு சுடவில்லை!, இது அம்பாளின் அனுக்ரஹம்” என்று நினைத்து, என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். “நான் என்ன செய்ய போகிறேன் என்றால், இந்த இலங்கையை எரிக்க போகிறேன், இந்த இராக்ஷஸர்கள் நினைத்து நினைத்து பார்க்கிறது போல ஒரு பயங்கரமான காரியம் செய்தால் தான், இவர்களுக்கு, ஸ்ரீ ராமரிடம் ஒரு நடுக்கம் ஏற்படும்” என்று சொல்லிக் கொண்டு, பளிச்சென்று கிளம்பி, அவர்கள் கைகளை கால்களை கட்டிபோட்டு உள்ளார்கள், அவரும் விளையாட்டாகத்தான் கட்டுண்டு இருக்கிறார். அந்த கட்டுக்களை எல்லாம் உடைத்து எறிந்துவிட்டு, அப்படியே ஆகாசத்தில் தாவி மிகப்பெரிய உருவம் எடுத்துக்கொண்டு, வாலில் உள்ள நெருப்பினால் இலங்கையில் உள்ள எல்லா க்ரஹங்களுக்கும் நெருப்பு வைக்கிறார். அப்படி எல்லா க்ரஹங்களுக்கும் நெருப்பு வைத்துகொண்டு வரும்பொழுது, விபீஷணருடைய க்ரஹத்திற்கு மட்டும் நெருப்பு வைக்கவில்லை..
वर्जयित्वा महातेजा विभीषणगृहं प्रति।
क्रममाणः क्रमेणैव ददाह हरिपुंगवः।।
வர்ஜயித்வா மஹாதேஜா விபீ4ஷண க்3ருஹம் ப்ரதி |
க்ரமமாண; க்ரமேணைவ த3தா3ஹ ஹரிபுங்க3வ: ||
எல்லா வீட்டையும் எரித்தார் வரிசையாக, விபீஷணரின் வீட்டினை மட்டும் எரிக்காமல் விட்டார் என்று ஒரு ஸ்லோகம், இந்த இடத்தில ஸ்வாமிகள் சொல்வார், தப்புகள் செய்யும் போது ஜனங்கள், பாபம் செய்யும்போது, “எல்லாரும் இந்த காலத்தில் அப்படித் தான் இருக்கிறார்கள், நாம் மட்டும் என்ன, பரவாயில்லை” என்று சொல்கிறார்கள், ஆனா கஷ்டம் வரும்போது மட்டும் “ஐயோ! எனக்கு ஏன் இந்த கஷ்டம் வருகிறது?” என்றும் சொல்கிறார்கள். நாம் தப்பு செய்யாமல் இருந்தால், ஹனுமார் விபீஷண க்ருஹத்தை நெருப்பிலிருந்து காத்த மாதிரி, பகவான் நம்மை மட்டும் காப்பாத்துவார்.
அப்புறம், இலங்கையே பற்றி எரிகிறது, அப்பொழுது, அந்த இராக்ஷஸர்கள் எல்லாம். இவரை கட்டி இழுத்து வரும்பொழுது . இராக்ஷஸிகள் எல்லாம் மிக சந்தோஷப்பட்டு கும்மாளம் அடித்தார்கள், இராக்ஷஸர்கள் எல்லாம் அவரை போட்டு அடித்து, திருடன், ஒற்றன், சாரன் அப்படி என்று எல்லாம் கூறி அடித்துக் கொண்டு இருந்தார்கள். அனால், அப்பொழுது ஹனுமார் ஸ்ரீராமருக்காக அதனை எல்லாம் பொறுத்துக் கொண்டார். அனால் இப்பொழுது, வீடெல்லாம் எரியும்பொழுது, “ஐயையோ என் வீடு எரிகிறதே, சொத்தெல்லாம் போயிற்றே” என்று அழுகிறார்கள் அவர்கள் எல்லாம். அப்பொழுது அந்த ராக்ஷசர்கள் சொல்வதாக சில ஸ்லோகங்கள் வருகிறது
वज्री महेन्द्रस्त्रिदशेश्वरो वा साक्षाद्यमो वा वरुणोऽनिलो वा ।
रुद्रोऽग्निरर्को धनदश्च सोमो न वानरोऽयं स्वयमेव कालः।।
किं ब्रह्मणः सर्वपितामहस्य सर्वस्य धातुश्चतुराननस्य।
इहागतो वानररूपधारी रक्षोपसंहारकरः प्रकोपः।।
किं वैष्णवं वा कपिरूपमेत्य रक्षोविनाशाय परं सुतेजः।
अनन्तमव्यक्तमचिन्त्यमेकं स्वमायया सांप्रतमागतं वा।।
வஜ்ரீ மஹேந்த்3ரஸ்த்ரிதஸேஸ்வரோ வா
ஸாக்ஷாத்யமோ வா வருணோ (அ)னிலோ வா |
ருத்3ரோ(அ)க்3னிரர்கோ த4னத3ஸ்ச சோமோ
ந வானரோ(அ)யம் ஸ்வயமேவ கால: ||
கிம் ப்3ரஹ்மண: ஸர்வபிதாமஹஸ்ய
ஸர்வஸ்ய தா4துஸ்சதுரானனஸ்ய |
இஹாக3தோ வானரரூபதா4ரீ
ரக்ஷோபஸம்ஹாரகர: ப்ரகோப: ||
கிம் வைஷ்ணவம் வா கபிரூபமேத்ய
ரக்ஷோ வினாஸாய பரம் சுதேஜ: |
அனந்தமவ்யக்தமசிந்த்யமேகம்
ஸ்வமாயயா ஸாம்ப்ரதமாக3தம் வா ||
என்று சொல்லி – வந்திருக்கிற இவர், வஜ்ராயுதம் வைத்துக் கொண்டுள்ள இந்திரனா, சாக்ஷாத் பரமேஸ்வரனா, இல்லை, எமனா, வருணனா, அக்னியா , காலனா, குபேரனா, இல்லை இது வானரமே தானா, இல்லை, இது பிரம்மாவா, இராக்ஷஸர்கள் மேலுள்ள கோபத்தினால் முன்பு ஸ்ருஷ்டி செய்தவர், இப்பொழுது சம்ஹாரம் செய்ய வந்துவிட்டாரா, இல்லை, இது விஷ்ணு பகவானா, தன்னுடைய மாயையினால், இது போல நம்மை எல்லாம் தண்டிக்கிறாரா, அப்படி என்று இந்த இராக்ஷஸர்கள் எல்லாம் புலம்புகிறார்கள்.
இந்த இடத்தில் ஸ்வாமிகள் சொல்வார், ஹனுமார், எல்லா தெய்வங்களுடைய ஸ்வரூபம் என்பதனை, காவியத்தில் நேராக சொல்லாமல், இந்த மாதிரி சொல்லி இருக்கிறது என்று சொல்வார். ஹனுமாரை ஸ்ரீ ருத்ராம்சம் என்று சொல்வார்கள், இந்த இடத்திலேயே கூட, “ருத்ரேண திரிபுரம் யதா:” ஸ்ரீ ருத்ரபகவான் எப்படி திரிபுரத்தினை எரித்தாரோ, அது போல இலங்கையை ஹனுமார் எரித்தார் என்று வால்மீகி சொல்கிறார். அது போல, எல்லா தெய்வங்களுடைய அம்சம் தான் ஹனுமார், அவரை பிரார்த்தனை செய்தால் நம்முடைய வினைகள் என்ற இலங்கையை எரித்து நமக்கு எல்லா க்ஷேமங்களையும் குடுப்பார்.
ஜயதி அதிபலோ ராம: லக்ஷ்மணஸ்ச மஹாபல: (12 min audio in tamil. same as the script above)
ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…