सर्वथा क्रियतां यत्न स्सीतामधिगमिष्यथ।।पक्षलाभो ममायं वस्सिद्धिप्रत्ययकारकः।
ஸர்வதா க்ரியதாம் யத்ன: ஸீதாம் அதிகமிஷ்யத |பக்ஷலாபோ மமாயம் வ: சித்தி ப்ரத்யய காரக: ||
அப்டீன்னு சம்பாதி கழுகு வானரா கிட்ட சொல்றது. “எனக்கு, நிஷாகர மஹரிஷியினுடைய அனுக்ரஹத்துனால, இறக்கைகள் திரும்பவும் வந்துடுத்து, இளமையில் எனக்கு, எவ்வளவு, சக்தியும் வீரியமும், இருந்ததோ, அதெல்லாம், எனக்கு, இப்போ, திரும்ப கிடைச்சிருக்கு. இதுவே உங்களுடைய காரியமும் நடக்கும். நீங்கள் சீதா தேவி எங்க இருக்கான்னு தெரிந்து கொள்வீர்கள்., அப்டீங்கிறதுக்கு ஒரு அடையாளம். அதனால முயற்சி பண்ணுங்கோ. கட்டாயம் சீதையை காண்பீர்கள்”, அப்டீன்னு அந்த சம்பாதி கழுகு, சொல்லிட்டு ஆகாசத்துல கிளம்பி போறது.
இந்த நிஷாகர மஹரிஷிங்கிறது, யாரு, அது என்ன வ்ருத்தாந்தம்னு, கேட்டா,
இந்த சம்பாதி கழுகு, மலை மேல உட்கார்ந்துண்டு இருக்கு. வானரா எல்லாம் பேசிண்டு இருக்கா. அவாள்ளாம், “நாம சீதையை இன்னும் எங்கேன்னு கண்டுபிடிக்கல, சுக்ரீவன் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள, திரும்பி வரணும், வந்து, சீதா தேவியை, பார்த்தாச்சா, இல்லையான்னு சொல்லணும், அப்படீன்னு கெடு வெச்சிருக்கான். இப்போ. ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுத்து. மூணு நாலு மாசம் ஆயிடுத்து. இப்போ, நாம திரும்பி போனோம்னா, கடுமையா தண்டிப்பான்” அப்டீன்னு பயந்துண்டு, அங்கதன், “நான் பிராயோபவேசம் பண்ணப் போறேன்” அப்டீன்னு சொல்லி, அந்த கடற்கரையில, வடக்கு நோக்கி உட்கார்ந்துடறான், அப்ப, ஜாம்பவான், ஹனுமான், எல்லாம், சொல்றா, “இல்ல, நீ திரும்ப வா, சுக்ரீவன் ஒண்ணும் சொல்ல மாட்டான், நீ கவலைப் படாதே”, அப்டீன்னு, சொன்னாலும் அங்கதனுக்கு நம்பிக்கை இல்ல. “என்னை ராமர் தான், யுவராஜாவா பட்டாபிஷேகம் பண்ணி வெச்சார். சுக்ரீவன் ஒண்ணும் பண்ணல” என்கிறான். என்ன இருந்தாலும் அவனுக்கு, அந்த ராம பக்தி இருக்கு.
அப்படி பேசிண்டு இருக்கா. நான் உயிரை விடப் போறேன். அப்படீன்னு சொல்றான். அப்போ “என்ன இருந்தாலும், ராமர் ஒரு மஹாபுருஷர், அவருக்காக, நாம எல்லாரும் முயற்சி,பண்றோம், ஜடாயு கழுகு, உயிரையே கொடுத்துது”, அப்படீன்னு, சொன்ன போது, இந்த சம்பாதி கழுகு, கேட்டுண்டு இருக்கு. “ஆஹா! ஜடாயுவா, உங்களுக்கு எப்படி ஜடாயுவைத் தெரியும், ஜடாயு, உயிரை விட்டுடுத்தா, என்னாச்சு, எனக்கு விவரம் சொல்லுங்களேன்”, அப்படீன்னு, கேட்கறது.
அங்கதன் சொல்றான், “தசரத மஹாராஜாவோட குமாரர், ராமர். தன் மனைவி, சீதையோடும், தம்பி லக்ஷ்மணரோடவும், அப்பாக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தறத்துக்காக, காட்டுக்கு வந்தார். வந்த இடத்துல, அவருடைய மனைவி, சீதாதேவியை இராவணன் என்ற ஒரு ராக்ஷசன் தூக்கிண்டு போயிட்டான். அவன் கொண்டு போகும்போது, ஜடாயு அவனை, தடுத்து, அவனோடு கடுமையா யுத்தம், பண்ணித்து.
இந்த ஜடாயு ராவணனோட பண்ண யுத்தம், ரெண்டு சர்க்கம், ரொம்ப நன்னா இருக்கும், அந்த வர்ணனை. அந்த ராவணனோட தேரை உடைச்சு, தேரோட்டியை வதம் பண்ணி, ராவணனை தவிக்க விடறார், அந்த ஜடாயு. அத்தனை வயசு, தசரதருக்கு, சமமான வயசு, அறுபதினாயிரம் வயசு, ஜடாயுவுக்கு. ஆனாலும்,அந்த ராமருக்காக, சீதை மேல இருக்கிற அன்பினால, அவர் சொல்லிப் பார்க்கறார். ராவணன்கிட்ட, “நீ பண்றது, தப்பு. மடியில நெருப்பை கட்டிண்டு போக முடியாது. நம்மால ஜரிக்க முடியாத உணவை சாப்பிட முடியாது. நீ, இந்த கார்யத்துனால, உன்னுடைய குலத்துக்கே, ஆபத்தை வரவழைச்சுக்கற. பண்ணாதே”ன்னு சொல்றார். அவன், “நீ வழியை விடு. இல்லேன்னா, உன்னை கொன்னுடுவேன்”னு, சொல்றான். “நான் உயிரோடு இருக்கும் போது, நீ சீதையை தூக்கிண்டு போக முடியாது, என்னோட யுத்தம் பண்ணு”, அப்டீன்னு சொல்லி, ராவணனை ஜடாயு, யுத்தத்துக்குக் கூப்பிடறார். சீதாதேவி கூட சொல்றா, “அவன் கையில ஆயுதம் வெச்சுண்டு இருக்கான், நீங்க ரொம்ப வயசானவாளா இருக்கேள், போயி ராம லக்ஷ்மணாள்கிட்ட சொல்லுங்கோ” அப்டீன்னு சொல்றா சீதை. ஆனா ஜடாயு சொல்றார், “என் கண் முன்னாடி, அவன் உன்னை தூக்கிண்டு போறதை, பார்க்க மாட்டேன், அதனால யுத்தம் பண்றேன்” அப்டீன்னு, அவர், அந்த ராவணனோட யுத்தம் பண்றார். இராவணன், தன்னோட வில்லையும் அம்பையும் கொண்டு, ஜடாயுவை சுத்தி, ஒரு கூண்டாட்டம் பண்ணிடறான். ஆனா, ஜடாயு, அதை தகர்த்துண்டு வந்து, திரும்பவும் யுத்தம் பண்றார். இந்த இராவணனோட பத்துக் கைகளை, தன்னோட அலகாலக் குத்தித் தூக்கிப் போடறார். பிச்சு எடுத்துடறார். ஆனா, திரும்பவும், அவனுக்குக் கைகள் முளைக்கறது. அவனுக்கு அந்த மாதிரி வரங்கள் இருக்கறதுனால, இப்படி மேலும், மேலும், யுத்தம் பண்ணும்போது, இவர், வயசானவர், தளர்ந்து, போயிடறார். இவருடைய இறக்கைகளை வெட்டிப் போட்டுட்டு, இராவணன் போயிடறான். சீதை “ஆ, எனக்காக, நீங்க இந்த யுத்தத்துல, உயிரை கொடுத்தேளே” புலம்பி அழறா. அவன் அவளை தூக்கிண்டு போயிடறான்.
இதெல்லாம், அங்கதன், சம்பாதி கிட்ட சொல்றான். அப்ப சம்பாதி, சொல்றது, “இந்த மாதிரி, என்னுடைய தம்பியை, இந்த ராக்ஷசன் வதம் பண்ணான்னு கேட்டுக் கூட, என்னால பழி வாங்க ஒண்ணும் பண்ண முடியல. எனக்கு இறக்கைகளே இல்ல. நான் என்ன பண்ணுவேன், என்னை இந்த கடற்கரைக்கு, தூக்கிண்டு போங்கோ, நான் என் தம்பிக்கு, தர்ப்பணம், பண்றேன்” அப்டீன்னு சொல்றார். சரீன்னு, இவாள்ளாம், அந்த பட்சியை, கொண்டு வரா. அந்த கடல் ஜலத்தைக் கொண்டு,சம்பாதி, ஜடாயுவுக்காக, தர்ப்பணம் பண்றார். அப்புறம் “எனக்கு, பக்ஷங்கள் இல்ல. ஆனா என் வாக்கை கொண்டு, நான், உங்களுக்கு ஸஹாயம் பண்றேன்”, அப்டீன்னு சொல்லிட்டு, அது, இப்படி சுத்திப் பாக்கறது. இந்த கடலுக்குள்ள, நூறு யோஜனை, போனா, இலங்கைன்னு, ஒரு தீவு இருக்கு, அந்த இலங்கையில ,சீதாதேவி இருக்கா, எங்களுகெல்லாம், தீர்க்கமான பார்வை உண்டு, அதனால, அந்த இராவணன் சீதாதேவியை, இலங்கையில சிறை வெச்சிருக்கான், நீங்க போனா, அங்க அவளைப் பார்த்துடலாம்”, அப்டீன்னு சம்பாதி சொல்றார்.
அப்ப, ஜாம்பவான், ரொம்ப புத்திமான். வயசானவர் அனுபவஸ்தர் ங்கிறதுனால அவர் கேட்கறார். “நாங்க தேடி வந்த சீதையைதான், நீ இலங்கையில பார்க்கறேன்னு, எப்படி சொல்றே”னு கேட்கறார். அப்போ “நான் என்னோட வ்ருத்தாந்தத்தை முழுக்க சொல்றேன் கேளுங்கோ”, அப்டீன்னு சொல்லி,
“நானும் ஜடாயுவும், ரொம்ப பலசாலிகளா இருந்தோம். எங்க ரெண்டு பேருக்குள்ள, யார் ரொம்ப பலசாலி, அப்டீன்னு, ஒரு வாட்டி ஒரு போட்டி வந்தது”. போட்டி என்றாலே, அதுல கஷ்டங்கள் இருக்கு, அப்டீங்கிறதுக்கு இது ஒரு கதை. “நாங்க ரெண்டு பேரும்,மேரு மலையில இருந்து, ரிஷிகள் முன்னாடி, ஒரு பந்தயம் வெச்சுண்டு, “சூரியன் உதிக்கும் போது ஆரம்பிச்சு, சூரியன் மறையற வரைக்கும், யார் ஆகாசத்துல ரொம்ப நேரம், ரொம்ப உயரத்துல பறக்கறாளோ, அவா தான் ரொம்ப பலசாலி”, அப்டீன்னு போட்டி வெச்சுண்டு, நாங்க ரெண்டு பேரும் பறக்க ஆரம்பிச்சோம். கார்த்தால, சூரியன், உதயத்தும்போது கிளம்பினோம்.
ஆகாசத்துல உயர, உயர போகப் போக, பூமியில மலைகள் எல்லாம், சின்ன சக்கரம் மாதிரி தெரிஞ்சுது. சத்தம் எல்லாம் குறைஞ்சு போயிடுத்து. உயரப் போயிண்டே இருக்கும்போது, வெயில் ஜாஸ்தியாகும் போது, ஜடாயு துவண்டு மயங்கி கீழ விழ ஆரம்பிச்சுட்டான். அவனுக்கு ஏதாவது ஆயிடப் போறதேன்னு, நான் என்னுடைய இறக்கைகளால, சூரிய ஒளி, அவன் மேல படாத மாதிரி, நான் அவனை, மறைச்சு, அந்த சூரிய ஒளியில இருந்து, அவனை காப்பாத்தினேன். அவன் ஜனஸ்தானத்துக் கிட்ட, எங்கயோ, விழுந்துட்டான்னு, நினைக்கிறேன். அந்த சூரிய வெப்பதுனால, என்னோட இறக்கைகள் எரிஞ்சு போயிடுது. நான் இங்க இந்த மகேந்திர மலை பக்கத்துல,விழுந்தேன். ரொம்ப துக்கப் பட்டுண்டு, இறக்கைகள், இல்லாம, என்ன பண்றதுன்னு நினைக்கும் போது,
நிஷாகர மஹரிஷின்னு ஒருத்தர், எங்களுக்குத் தெரியும். அந்த மஹரிஷி, எல்லா உயிர்களிடத்தும், அன்பு உடையவர். ஸர்வபூத ஹிதே ரத: அவர் கார்த்தால, ஸ்நானம் பண்ண போனா, எல்லா பிராணிகளும், எல்லா பக்ஷிகளும், அவரோட போகும். “உங்க கார்யத்தை பாருங்கோ” , அப்டீன்னு சொன்ன பின்ன, நாங்கல்லாம், எங்க கார்யத்தைப் பாப்போம். அப்படி அவர், எல்லா உயிர்களிடத்தும், அன்பபோடு இருந்ததுனால, அவர்கிட்ட, எல்லாருமே பிரியமா இருந்தோம். அந்த நிஷாகர மகரிஷியை நான் பார்த்தேன். அவர் என்னை பார்த்த உடனே, “நீ சம்பாதி தானே, நீயும், ஜடாயுவுமா, என்னை பார்க்க வருவேளே, என்ன ஆச்சு, உனக்கு? ஏதாவது, வியாதியா? யுத்தத்துல, உன்னோட, இறக்கைகள் போயிடுத்தா? என்னாச்சு, ஏன் இறக்கைகள், பொசுங்கிடுத்து?” ன்னு, கேட்டார். இந்த மாதிரி, நாங்கள் முட்டாள் தனமா பந்தயம் வெச்சுண்டு, என்னுடைய இறக்கைகளை, இழந்துட்டேன், அப்படீன்னு சொன்ன போது, அந்த நிஷாகர மஹரிஷி, சொன்னார். “நான் இப்போ, உனக்கு, இறக்கைகளை கொடுப்பேன், ஆனா, உன்னால ஒரு பெரிய கார்யம் நடக்கப் போறது. நீ இந்த மகேந்திர மலையிலேயே, இருந்துண்டு, இரு. இங்க, ரொம்ப நாளைக்கு அப்புறம், வானரா கொஞ்சம் பேர் வருவா. அவா சீதாதேவி அப்டீன்னு ஒரு பெண்ணை தேடிண்டு வருவா. சாக்ஷாத் விஷ்ணு பகவான், பூமியில, ராமர்னு, அவதாரம், பண்ணப் போறார். அவரோட, மனைவி, சீதாதேவியை, வானரர்கள், தேடிண்டு, வருவா. அவாளுக்கு, நீ சீதை எங்கேயிருக்கான்னு, பார்த்து, சொன்னேயானா, உனக்கு, உன்னோட இறக்கைகள், முளைக்கும்”. அப்படீன்னு, சொன்னார்.
நான், அதனால ரொம்ப நாளா, காத்துண்டு இருக்கேன், அப்பப்போ, என்னடா இதுன்னு, வாழ்க்கையே வெறுத்து, உயிரை விடலாம்னு, நினைப்பேன். இருந்தாலும், அவர், சொன்ன, வார்த்தைகளை, பற்றுகோடா வெச்சுண்டு, உயிரை விடாம, இருந்துண்டு இருக்கேன், நான். என்னுடைய பிள்ளை, சுபார்ஷ்வன், அப்டீன்னு, ஒரு கழுகு. அவன்தான், எனக்கு, சாப்பாடு போட்டு, என்னை காப்பாத்திண்டு இருக்கான். நான், ஒருநாள், ஆகாசத்துல ஒரு பத்து தலை ராக்ஷசன் ஒரு பெண்ணை தூக்கிண்டு போறதை பார்த்தேன். அவ “ராமா ராமா”னு கத்திண்டு இருந்தா.
அன்னிக்கு சாப்பாட்டுக்கு காத்துண்டு இருக்கும் போது, என் பையன், சாப்பாடு கொண்டு வர தாமதம் ஆயிடுத்து. கந்தர்வர்களுக்கு, காமம் ஜாஸ்தி. பாம்புகளுக்கு, கோபம் ஜாஸ்தி. எங்களுக்குப் பசி ஜாஸ்தி. அதனால ரொம்ப நேரம் பசியாயிட்டு, இவன் தாமதமாக வந்த உடனே, “என்னடா இப்படி லேட் பண்ணிணே” னு கேட்டேன். அவன் சொன்னான், “இன்னிக்கு நான் சாப்பாடு எடுத்துண்டு, வந்துண்டு இருந்தேன்பா, அப்ப, ஒரு பத்து தலை ராக்ஷசன்,ஒரு பெண்ணை தூக்கிண்டு, போனான். நான் போயி அவனை தடுத்தேன், அப்போ அவன், எனக்கு தயவு பண்ணு, வழி விட்டுடுன்னு, கேட்டான். அப்படி, கேட்கும்போது, என்ன பண்றதுன்னு நான் வழிவிட்டுட்டேன். அப்ப ரிஷிகள் எல்லாம் என்கிட்டே வந்து இவன் யார் தெரியுமா, தசகண்டனான ராவணன். அவனை போயி நீ எதிர்த்தியே, நல்ல காலம். நீ உயிரோட மிஞ்சின., அப்டீன்னு சொன்னா. அப்போ அந்த பெண், நான் பார்த்தவளைதான், அவனும் பார்த்துருக்கான். அவள் பேர் சீதை., அப்டீன்னு, இராவணன் சீதா தேவியை தூக்கிண்டு போயிண்டு இருக்கான், அப்டீன்னு ரிஷிகளெல்லாம் சொன்னா. அந்த பெண் தான் சீதை. ராமா ராமான்னு கத்தினா. அந்த பெண்ணைத் தான் இப்ப நான் அங்க பார்க்கறேன், இலங்கையில பாக்கறேன்”னு அவர் சொல்றார். அப்படி சொல்லும் போது அவருக்கு இறக்கைகள் முளைச்சுடறது.
அந்த நிஷாகர மஹரிஷி, சொல்றார். “அந்த சீதா தேவியை இராவணன், இலங்கையில சிறை வெச்சிருப்பான். அவ, இராவணன் கொடுக்கிற எதையும் ஏறிட்டும் பார்க்க மாட்டா. அவளோட உயிர் தரிச்சு இருக்கணும்கிறதுக்காக, இந்திரன், அமிர்த மயமான உணவை, அவளுக்கு சமர்ப்பிப்பான். அவ, அதுல இருந்து, இரண்டு வாய் எடுத்து, ராமனுக்கும், லக்ஷ்மணனுக்குமா எடுத்து வெச்சு, நைவேத்யம், பண்ணிட்டு,பாக்கியை, கொஞ்சம் சாப்பிடுவா.அந்த ராமனையும் லக்ஷ்மணனையும், சீதா தேவியையும் நானும் தரிசனம் பண்ண ஆசைப் படறேன்”னு, அப்டீன்னு, அந்த நிஷாகர மஹரிஷி, சொல்றார். “ஆனா, எனக்கு, ரொம்ப வயசாயிடுத்து, உடம்பு தளர்ந்து போயிடுத்து, இன்னும், அவ்ளோ காலம் காத்துண்டு இருக்க முடியாது. நீ இங்க இருந்து, வானரர்களுக்கு உதவி பண்ணினேயானால் மூவுலகங்களுக்கும் அது க்ஷேமமா முடியும்”. அப்டீன்னு நிஷாகர மஹரிஷி சொல்றார்.
சம்பாதி சீதை எங்கே இருக்கானு சொல்றார். அதே மாதிரி, அவா, போயி சீதையை கண்டு பிடிக்கறா. அதைக்கொண்டு ராமர் ராவணனை வதம் பண்றார், இதுதான் உலகத்துக்கு க்ஷேமமான அந்த கார்யம்.
ஸ்வாமிகள், என்னுடைய குருநாதர், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், “என்னால, வேற ஒண்ணும், பண்ண முடியல. என் வாக்கால, ஏதாவது முடிஞ்ச உபகாரம் பண்றேன்னு, அந்த சம்பாதி கழுகு சொல்றது”. ஸ்வாமிகளுக்கும் உடம்பு ரொம்ப முடியாம ஸ்ரமமா இருந்தது. “அதனால நான் வேற ஏதும் ராம கார்யம் பண்ண முடியல, அதனால என் வாக்கால, ராமனுடைய கதையை, சொல்லிண்டு இருக்கேன், ஒரு உத்சவத்துல போயி சுவாமியை போயி தூக்கறதோ, அதெல்லாம் என்னால முடியல. என்னால முடிஞ்சுது, என் வாக்கால, ராமனுடைய கதையை, படிக்கறேன், சொல்றேன்”, அப்டீன்னு சொல்வார். அது மாதிரி இந்த உலகத்துல யாருமே வந்து, ஏதாவது, உடல் குறைபாடோ, ஏதாவது குறைகள் இருந்தாலும், அவா வந்த இந்த உலகத்துல useless, waste அப்டீன்னு ஸ்வாமிகள் சொல்ல மாட்டார். எல்லாருக்குமே ஒரு purpose இருக்கு. எதையுமே, அவர் ஒரு பொருளை கூட இதெல்லாம் தூக்கி போட்டு, useless வேண்டாம்னு அப்டீன்னு சொல்லவே மாட்டார். அப்படி இந்த உலகத்துல எல்லாருக்கும் பகவான், ஒரு காரணமா, அவாளை படைச்சிருக்கார்.
ஆனா நிறைய பேருக்கு, ஐயோ, பிரம்மா, என்னை ஏன் தான் படைச்சாரோ, அப்டீன்னு, துக்கம். நாராயணீயத்துல பட்டத்ரி சொல்றார் “பகவானோட பஜனம் பண்ணாத வரைக்கும் தான் அப்படி இருக்கும். பகவானுடைய பஜனம் பண்ணத் தெரிஞ்சுண்டுட்டான்னா, அவா வாழ்க்கையில் அந்த பஜன இன்பத்தை அனுபவிப்பா. உலகத்துல மூணு விதமான இன்பங்கள். உலக இன்பங்கள், பஜனத்துனால கிடைக்கக் கூடிய இன்பம், அப்புறம் மோக்ஷானந்தம், அப்டீங்கிறது, அந்த மோக்ஷானந்தம்ங்கிறது, ஒரு நிர்குணமான ஒரு ஆனந்தம். இந்த சிற்றின்பம்ங்கிறது, கொஞ்ச நாள் புலன்களை கொண்டு அனுபவிக்கிறது ஒரு சிற்றின்பம். அது அனுபவிச்சு தீரப் போறது இல்ல. இந்த பஜனம் பண்ணி, பகவானோட கதைகளை பேசறதோ, நாமத்தை ஜபிக்கறதோ, அது, நிறைய, மகான்கள் அதை வந்து, அந்த நிர்குனமான மோக்ஷானந்தத்ததுக்கும் மேலானதாக சொல்றா. இந்த உலகத்துல, நாம கடைசி நாள் வரைக்கும், நாம இங்க இருக்கிற வரைக்கும், இந்த பஜனம் பண்ணனும். அப்டீன்னு மஹாபெரியவா, கூட ஸ்வாமிகள், இந்த கருத்தை சொன்ன போது, பெரியவா, பாகவதத்துல, இது அடிக்கடி வரும், இந்த பகவத் பஜனம்கிறது, மோக்ஷதுக்கும் மேலான ஆனந்தம், அப்டீன்னு.
சுகர் கூட, அவர் பிறவியிலேயே ஞாநி, அவர், இருந்தாலும் வந்து, பொறந்துருக்கோம், ஏதோ, ப்ராரப்தமோ, என்ன பண்ணலாம்னு யோசிச்சாராம். நம்ம ஸாதுக்களோட, சங்கம் இருந்தா, இந்த காலத்தை கழிச்சுடலாம். ஸாதுக்கள், சங்கம் எப்படி கிடைக்கும். நம்ம பகவானை பேசுவோம். அப்ப ஸாதுக்கள், நம்மகிட்ட வருவா, அப்டீன்னு கங்கை கரைக்கு, போனார். அங்க ரிஷிகள் எல்லாம் இருந்தா. பரீக்ஷித் வந்தான். அவனுக்கு பாகவதத்தை உபதேசம் பண்ணார். அப்டீன்னு சொல்வா.
அந்த மாதிரி, இந்த பகவத் பஜனம்ங்கிறது, மோக்ஷானந்தந்தத்திற்கும், மேல அப்டீன்னு ஸ்வாமிகள் சொன்ன போது, மஹா பெரியவா, ஆமா, எவ்வளோ பெரிய ஞானியா இருந்தாலும், கிருஷ்ணாய நமஹ, கமலநாதாய நமஹ, வாசுதேவாய நமஹ, அப்டீன்னு அந்த புஷ்பத்தை எடுத்து அர்ச்சனை பண்ணும் போது, அதற்கும் மேலான சந்தோஷத்தை, அனுபவிக்கறா, இல்லையா! அப்டீன்னு கேட்டாராம். அப்படி மகான்கள், அந்த கருத்தை, approve பண்ணியிருக்கா.
அப்படி அந்த நிஷாகர மஹரிஷி, அப்படீங்கிற வார்த்தை, நிஷாகரஹ, அப்படீன்னு சந்திரன்னு அர்த்தம், அதனால அந்த, நிஷாகர மஹரிஷின்னு படிக்கும் போது, ஸ்வாமிகள் சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள், அப்டீன்னு மஹாபெரியவாளை நினைப்பா. அப்படி “மஹாபெரியவா, அனுக்ரஹத்துனால, எனக்கு, எவ்வளோ கஷ்டம் இருந்தாலும், பகவானை பேசறதுக்கு, ஒரு வழி கொடுத்துருக்கார். அதை கொண்டு நான், எல்லா கஷ்டத்தையும் தாண்டிடுவேன்”, அப்படீன்னு, தன்னை அவ்வளோ எளிமையா ஸ்வாமிகள், நினைச்சுப்பார். தன்னை “ஒரு பெரிய உபன்யாசகர், என்னை மாதிரி ராமாயணம் சொல்ல ஆளில்லை” அப்டீனெல்லாம், நினைச்சுக்கவே மாட்டார். “இது ஒரு பாக்கியம், கிடைச்சுதே, இந்த உடம்பெலாம் இருக்கும் போது, பகவானை பேசறோம்”, அப்டீன்னு சந்தோஷமா பேசி, அதுக்கு, ஸ்வாமிகள், மஹாபெரியவா பண்ணிண அனுக்ரஹம் அப்படீன்னு, இந்தக் காட்சி வரும்போது, நிஷாகர மஹரிஷிங்கிறது, சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள்,னு, சொல்லி, மஹாபெரியவாளோட அனுக்ரஹம், அப்டீன்னு நினைப்பார்.
அதனால இந்த உலகத்துல நாம யாருமே குறையே பட வேண்டாம். எல்லாருக்கும் ஏதாவது, குறைகள் இருக்கு, மனசுலையோ, உடம்புலையோ. நம்ம எல்லாரையும், ஒரு காரணமா பகவான் படைச்சிருக்கார். அதை உணருவதற்கு நாம பகவத் பஜனம் பண்ணிணா போறும். பகவான் புரிய வைப்பார்.
சம்பாதி கழுகுக்கு நிஷாகர மகரிஷி செய்த அனுக்ரஹம் (17 min audio in tamil. same as the script above)
ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…
One reply on “சம்பாதி கழுகுக்கு நிஷாகர மகரிஷி செய்த அனுக்ரஹம்”
Rama Rama Rama