இன்னிக்கு ஸ்லோகம் யுத்த காண்டத்தில பட்டாபிஷேக சர்க்கத்துல வர ஒரு ஸ்லோகம்
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: |
ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் பிரஷாஸதி ||
ராம பட்டாபிஷேகம் முடிஞ்ச பின்ன, ராம ராஜ்யத்தை பத்தி ஒரு பத்து ஸ்லோகங்கள். இந்த ராமாயணத்தை படிக்கறதுனாலயும் சொல்றதுனாலேயும், கேட்கரதுனாலேயும் என்ன புண்யம் அப்படினு பத்து ஸ்லோகங்கள்.
அந்த
ராம ராஜ்யம் எப்படியிருந்தது? அங்க திருடர்களே கிடையாது, எல்லாரும் க்ஷேமமாக இருந்தா, சத்யசந்தர்களாக இருந்தா, தர்மபரர்களா இருந்தா, எல்லாரும் பேராசைப் படமால் தன்னுடைய தொழிலையே பண்ணிண்டு இருந்தா, எல்லாரும் சந்தோஷமா இருந்தா, பிறர் பொருளுக்கு ஆசைப்படலை. புஷ்பங்களும், பழங்களும் நன்னா கிடைச்சுது. ஸஸ்யங்களும் தானியங்களும் ஸமிருத்தியாக கிடைச்சுது, ஒவ்வொவொருத்தரும் மாடுகளும், குதிரைகளும், தேர்களும் யானைகளும் வெச்சிண்டு சௌக்யமாயிருந்தா அப்படினு வரும். ஆரம்பத்துல தசரதர் ராஜ்யத்தை வர்ணிக்கும்போதே, அந்தமாதிரி செழிப்பான அமராவதிக்கு நிகரான அயோத்யா பட்டணம், கோசல தேசம்னு வரும். அப்போ ராம ராஜ்யத்துக்கும் தசரத ராஜ்யத்துக்கும் என்ன வித்யாசம்னா
ராம ராஜ்யத்துல ஜனங்களெல்லாம்
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: |
ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் பிரஷாஸதி ||
ஜனங்களெல்லாம் ராமா ராமான்னு ராமருடைய கதைகளையே பேசிண்டு உலகம் ராம மயமாக ஆனந்த மயமாக ஆகிவிட்டது அப்படின்னு ஒரு ஸ்லோகம் இருக்கு. இதுதான் ராம ராஜ்யத்துக்கும் தசரத ராஜ்யத்துக்கும் உள்ள வித்யாசம், தசரத ராஜ்யத்துல ராம கதையை பேச முடியாது. ஏன்னா ராமர் அப்போ பிறக்கவே இல்லயே. அப்படி ராம ராஜ்யத்துல இந்த ராமருடைய கதைய எல்லாரும் பேசிண்டு இருந்தா, அதனால ரொம்ப சந்தோஷமா இருந்தா, ராம மயமா ஆனந்த மயமா இருந்தா. ஸ்வாமிகள் இந்த இடத்துல சொல்வார் “நாமளும் ராமருடைய கதையை பேசிண்டு இருந்தா, இன்னிக்கும் என்னைக்கும் சந்தோஷமா இருக்கலாம். நமக்கு ராமர் தான் ராஜா”
ராமர் திரும்ப வந்தவுடன் பரதன் ராஜ்ஜியத்தை ராமரிடம் ஒப்படைச்சு “நீ இதை ஏத்துக்கோ, ஏதோ எங்கம்மா ஆசைப்பட்டு நீ இதை கொடுத்த. இனிமே இந்த பாரத்தை என்னாலே சுமக்க முடியாது, உன்னைத் தான் ராஜாவா ஆக்கணும்னு தசரதர் வளர்த்தார், நீ ராஜாவா இல்லைனா எங்களுக்கு எல்லாம் ரொம்ப நஷ்டம். ஒரு காளைமாடு இழுக்குற சுமைய ஒரு கன்னுகுட்டி இழுக்க முடியுமா, ஒரு கழுகு பறக்கற மாதிரி ஒரு காக்கை பறக்க முடியுமா, தயவு செய்து நீ ராஜாவாயிருக்கணும்,
“யாவதாவர்த்ததே சக்ரம் யாவதீவ வசுந்தரா |
தாவத் த்வம் இஹ ஸர்வஸ்ய ஸ்வாமித்வம் அனுவர்தயா ||
“எதுவரைக்கும் காலச்சக்கரம் இருக்கோ, உலகம் இருக்கோ, அதுவரைக்கும் நீயே எங்களுக்கு ராஜாவாயிருக்கணும்” அப்படினு பரதன் கேட்ட உடனே, “ததேதி பிரதிஜக்ராஹ” “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி ராமர் அவன் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டார் அப்டினு வரது. அப்படி ராமர் ஏற்று கொண்டதால், காலசக்கரம் இருக்கறவரைக்கும், நமக்கெல்லாம் ராமாயணம் படிக்கறவர்களுக்கும், ராம பக்தர்களுக்கும் ராமர் தான் ராஜா. “நாடாளும் நாயகா, வயலூரா” அப்படினு அருணகிரிநாதர் முருப்பெருமானை சொல்றமாதிரி, பக்தர்களுக்கு அவர்தான் ஸ்வாமி.
ராம ராம ராமானு ராமர் கதையே பேசிண்டு சந்தோஷமாயிருந்தா அப்படீங்கறது, நாம வந்து…அது ஒரு மனப்பழக்கம் னு தான் சொல்லணும். பக்தியிருந்தால் தான் திரும்ப திரும்ப ராமாயணத்தை கேட்டு, அதுல சந்தோஷப் படமுடியும். இது நான் ஸ்வாமிகள்கிட்ட பாத்துருக்கேன்.
இந்த வால்மீகி ராமாயணத்தை எடுத்துண்டாலே
முதல் சர்கத்தில் நாரதர் வந்து வால்மீகி பகவானை பார்க்கறார், வால்மீகி சில கேள்விகள் கேக்கறார், இந்த உலகத்துல, இந்த காலத்துல, ஒரு பதினாறு குணங்கள் சொல்றார். படிப்பு இருக்கணும், அழகு இருக்கணும், புத்தி இருக்கணும், வீரம் இருக்கணும் இப்படி எல்லா குணங்களும் நிறைஞ்சவனா யாராவது இருக்காளா, அப்படினு கேட்ட போது, நாரதர், “ஆமாம்! அப்படி ஒருத்தர் இருக்கார், அவர் பெயர் ராமர், அவருடைய சரித்ரத்தை சொல்றேன்”, என்று நூறு ஸ்லோகத்துல சங்க்ஷேப ராமாயணம்னு பேரு, நாரதா பகவான் அந்த ராமாயணத்தை வால்மீகி முனிவருக்கு உபதேசிக்கிறார். அப்படியொரு தடவை ராமாயணம் வருது. அதனால, கடைசி chapter-லதான் climax-இருக்கு thrilling-ஆ இருக்கும் அப்படினு ஒண்ணும் கிடையாது, வால்மீகி ராமாயணத்தோட கதை என்னனு முழுக்க நமக்கு முதல்லயே தெரியும்.
அடுத்தது பிரம்மா வந்து “நீ ராமாயணத்தை எழுது”னு சொன்னவுடனே, வால்மீகி முனிவர் உக்காந்து தன்னுடைய மனசுல அந்த ராமகாதையை த்யானம் பன்றார். மனதில் வரித்துக் கொண்டார்னு வரும் போது, ஒரு பெரிய ஸர்கம் எல்லா நிகழ்ச்சிகளும் வரும். முழு ராமாயணத்தோட எல்லா காட்சிகளும் வரும், இதை எல்லாத்தையும் அவர் காவியத்துல எழுதினார், ஏழுகாண்டங்களும், இருபத்துநாலாயிரம் ஸ்லோகங்களும் கொண்ட ராமகாவியத்தை “சீதாயாஸ் சரிதம் மஹத்” அப்படினு அதுக்கு ஒரு இன்னொரு பெயர். ராமாயணம்னா, ராமன் போன பாதை அப்படினு அர்த்தம், ராமாயணம்னு ஒரு பேரு சீதையுடைய உத்தமமான சரிதம், பெருமையான சரித்திரம் அப்டின்னு ஒரு பேரு. அந்த காவ்யத்தை எழுதிமுடித்தார். அப்பறம் அவர் அதை லவகுசர்களுக்கு சொல்லிவைச்சார். அதை அவா ராமரோட சபையிலியே அதை சொல்றா, அஷ்வமேத மஹாமண்டபத்தில அதை சொல்றா, அங்கேயிருந்து ஆரம்பிச்சது ராமாயணம்.
சுந்தரகாண்டத்துல ராமாயணம் திரும்ப திரும்ப வரும். சீதாதேவி கிட்ட ஹனுமார் தான் ராமரைப் பார்த்ததிலிருந்து ஆரம்பிச்சு, கிஷ்கிந்தா காண்டம் முழுக்க repeat பண்றார். அப்பறம் அவர் திரும்ப வந்து அன்ன ஆச்சுன்னு வானரர்கள் எல்லாம் கேட்ட போது “நான் நீங்க பார்க்க ஆகாசத்தில் கிளம்பினேன்.” அப்படின்னு ஆரம்பிச்சு சுந்தரரகாண்டம் முதல் சர்கத்துலேர்ந்து அந்த அம்பத்தி ஏழாவது சர்கம் வரைக்கும் உள்ளதை ஒரு இருநூறு ஸ்லோகங்களில் அம்பத்தி எட்டாவது சர்கத்துல repeat பண்றார்.
அப்பறம் ராமர் கிட்ட வந்து சீதை எப்படி இருக்கா, என்ன சொன்னா, அதையெல்லாம் சொல்றார்.
யுத்த காண்டத்தில் ராமர் ராவண வதம் செய்துவிட்டு புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்ப வரும்போது, நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சீதைக்கு reverse order ல சொல்றார். “இங்கே தான் ராவணனை வதம் பண்ணினேன். இங்கே தான் கும்பகர்ணனை வதம் பண்ணினேன். இங்கே தான் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்தான். இதோ கடல் மேல் பாலம் கட்டி இருக்கேன் பார். இதோ ஹனுமாருக்காக இந்த மைனாக மலை வந்தது” அப்படின்னு reverse order ல கிஷ்கிந்தை, பஞ்சவடி, சித்ரகூடம் வரைக்கும் சொல்றார்.
அப்பறம் பரத்வாஜர் ஆஸ்ரமத்தை பார்த்த உடனே “நாம் போய் அவரை நமஸ்காரம் பண்ணுவோம்” என்கிறார். பரத்வாஜர் ராமரைப் பார்த்தவுடன் “ஹே ராமா! ஒரு குற்றம் செய்யாத நீ நாட்டை இழந்து இங்கே வந்திருந்த போது நான் வருத்தப் பட்டேன். அப்பறம் உனக்கு நடந்ததை எல்லாம் நான் இங்கே என்னுடைய ஞான திருஷ்டியினால் பார்த்துண்டே இருக்கேன்” என்று சொல்லி அவர் ஒரு வாட்டி ராமாயணம் முழுக்க சொல்றார். “இன்னிக்கு நீ வெற்றி வீரனாக விஜயராகவனாக நண்பர்களோடு வந்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். இன்னிக்கு நீ இங்கே தங்கி என்னுடைய விருந்து உபசாரத்தை ஏத்துண்டு, நாளைக்கு அயோத்திக்கு போ” னு சொல்றார். ராமரும் சரி என்று ஏத்துண்டு ஹனுமாரிடம் “நீ போய் பரதனிடம் நாங்கள் நாளைக்கு வரோம் என்று தகவல் சொல்லிவிடு. அவன் உயிரைப் பிடிச்சுண்டு இருக்கான்” என்கிறார்.
ஹனுமார் அங்கே போய் பரதனிடம் ராமர் வரார்னு சொன்னவுடன் சந்தோஷத்தில் மூர்ச்சை ஆகிவிடுகிறான். அப்பறம் தெளிந்து ஹனுமாரிடம் “நடந்த விஷயங்களைச் சொல்லுங்கள்” என்று கேட்க, ஹனுமார் விஸ்தாரமாக பரதனுக்கு எல்லா நிகழ்ச்சிகளையும் சொல்றார். இப்படி வால்மீகி ராமாயணதுக்குள்ளேயே திரும்ப திரும்ப ராம கதை வந்துண்டே இருக்கும். அதைச் தவிர சுருக்கமாக பல தடவை. ஸ்வயம்ப்ரபா, ஸுரசை கிட்ட ஹனுமார் சொல்றார். ராமரே ராவணனோடு யுத்தம் பண்ணும் போது, எதுக்காக நான் வாலியை வதம் பண்ணினேனோ, எதுக்காக வாணர்களை கொண்டு சீதா தேவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தேனோ, அப்படி எல்லாத்தையும் சொல்லி, அந்த கோபத்தை இப்போ காண்பிக்கிறேன் என்று சொன்னவுடன் அவருக்கு வீரம் வந்துடும். அப்படி ராமருக்கே உத்சாகத்தை குடுக்க கூடிய ஒரு கதை ராமாயணம்.
அப்படி ராமாயணத்தை திரும்ப திரும்ப சொல்றதுல ஸ்வாமிகளுக்கு ரொம்ப திருப்தி. திரும்ப திரும்ப கேட்பார். திரும்ப திரும்ப சொல்வார். அதுல சந்தோஷப் படுவார். அவ்வளவு சாரமான விஷயம். அப்படி திரும்ப திரும்ப கேட்கக்கூடிய ஒரு பக்தியை ராமர் தான் நமக்கு குடுக்கணும். ஸத்குரு தான் குடுக்கணும்.
ஸ்ரீமத்பாகவத்தோட முடிவில் பன்னிரெண்டாவது ஸ்கந்தத்துல பன்னிரெண்டாவது அத்யாயத்தில் இரண்டு ஸ்லோகங்கள் வரது.
ததேவ சத்யம் ததுஹைவ மங்களம்
ததேவ புண்யம் பகவத்குணோதயம் |
ததேவ ரம்யம் ருசிரம் நவம் நவம்
ததேவ சச்வன் மனஸோ மஹோத்சவம் |
ததேவ ஷோகார்ணவ ஷோஷணம் ந்ருணாம்
யதுத்தமஸ்லோக யஷோனகீயதே |
யதுத்தமஸ்லோக யஷோனகீயதே – பகவானுடைய புகழை பாடக்கூடிய அந்த கதைகள் அந்த கீதங்கள், ததேவ சத்யம் – அது தான் சத்யம். உலகத்தில் மத்த பேச்செல்லாம் வீண் தான். சத்யம் கிடையாது. ததுஹைவ மங்களம் – அது தான் பரம மங்களமானவை. ததேவ புண்யம் – அதுவே புண்யம். புன்யஷ்ரவணகீர்த்தன: என்று விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருவது போல, பகவானுடைய கதைளை கீர்த்தனம் பண்ணினாலோ ச்ரவணம் பண்ணினாலோ நமக்கு புண்யம் கிடைக்கும். பகவத்குணோதயம் – பகவானுடைய குணங்களை சொல்லும் அவை தான் உத்தமான ஸுக்திகள். ததேவ ரம்யம் – அது தான் ரொம்ப ரம்யமாக இருக்கு. வேட்கவே இனிமையாக இருக்கு. ருசிரம் – ரொம்ப ருசியாக இருக்கு. melodious and sweet. நவம் நவம் – ஒவ்வொரு நாளும் புதுமையாக இருக்கு. நாம வாழ்க்கையில் யோசிச்சு பார்த்தால், எல்லாமே பண்ணினதையே தான் பண்ணிண்டு இருக்கோம். monotonous தான். ஆனா அதை ருசிச்சு ருசிச்சு பண்ணிண்டு இருக்கோம். ஆனால் பகவானோட கதைகளை திரும்ப திரும்ப கேட்டாலும் புதுசு புதுசா மனசுல அர்த்தங்கள் தோணும், ஸ்புரிக்கும். அதுனால அது தான் நவம் நவம்.
ததேவ சச்வன் மனஸோ மஹோத்சவம் – அது மனசுக்கு ஒரு மகோத்சவம் மாதிரி இருக்கு என்கிறார் சுகர். மலையாளத்துல ஆன்சன் நம்பூத்ரி னு ஒரு பெரியவர் இருந்தார். அவா எல்லாம் ஒரு team. அவா ஆயிரம் ஆவர்த்தி பாகவதம் பாராயணம் பண்ணின பின்ன தான் வெளியில பிரவசனத்துக்கு வருவா. அவாளோட பாகவத ப்ரவசன முறை எப்படின்னா, கார்த்தால ஆறு மணியிலேர்ந்து சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் படிப்பா. தம்பி அம்பது ஸ்லோகம் படிச்சா, அண்ணா அதுக்கு அர்த்தம் சொல்வார். அப்பறம் turn மாத்திண்டு அண்ணா ஒரு அம்பது ஸ்லோகம் படிச்சா தம்பி அதோட jist அர்த்தம் சொல்வார். இப்படி முழு பாகவதத்தையும் text படிச்சு, அதோட அர்த்தத்தை ஏழு நாட்களில் சொல்லுவா. இது ஸ்வாமிகளுக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு வருஷமும் சென்னையில் ஒரு வாரம் பண்ணுவா. முப்பத்தஞ்சு வருஷம் ஸ்வாமிகள் ஏழு நாளும் போய் கேட்பார். அந்த ஆஞ்சன் நம்பூத்ரிக்கு நம்ம ஸ்வாமிகள் கிட்ட ரொம்ப பக்தி. உத்தவர்னு சொல்லி ஸ்வாமிகளை பார்த்தாலே வந்து கட்டிப்பார். இப்படி பகவானுடைய கதைகளில் ரமிக்கறது ஸ்வாமிகள் பண்ணி காண்பிச்சு இருக்கார். அந்த approachனால் தான் ஸ்வாமிகள் ராமாயணத்தையும் பக்தி பிரதானமாக சொல்லுவார்.
ததேவ ஷோகார்ணவ ஷோஷணம் ந்ருணாம் – நாம் வாழ்க்கையில் பல கவலைகளை படறோம். பகவானோட பரம மங்களமான கதைகளைக் கேட்டால் கவலைகள் என்ற கடலை அது வற்ற அடித்துவிடும். யதுத்தமஸ்லோக யஷோனகீயதே – அதுனால நாம் அதைத்தான் கேட்டுண்டே இருக்கணும். அதைத்தான் பாடணும்.
உலக விஷயங்களைப் பற்றி வருத்தப் படறது, worry பண்றது ரெண்டு காரணத்துனால தேவை இல்லை. ஒண்ணு “சிதைங்கிறது மரித்த உடம்பை தான் எரிக்கறது. சிந்தைங்கறது சிந்தா னா சமஸ்க்ருதத்துல worry பண்றதுனு அர்த்தம். அது உயிரோடவே மனுஷனை எரிக்கறது னு ஒரு ஸ்லோகம் இருக்கு. இன்னும் ஒண்ணு “சிந்த்யமான: சமஸ்தானாம் க்லேஷானாம் ஹானிதோ ஹி ய: | சமுத்ஸ்ருஜ்ய அகிலம் சிந்த்யம் ஸோச்யுத: கிம் ந சிந்த்யதே || அப்படின்னு ஒரு ஸ்லோகம். விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஆதிசங்கரர் இதை quote பண்ணி இருக்கார். சிந்த்யமான: சமஸ்தானாம் க்லேஷானாம் – உனக்கு என்னென்ன கவலைகள் இருக்கோ, அதுக்கு நீ என்னென்ன யோசனைகள் பண்றயோ, அதுக்கெல்லாம் முடிவு பகவான் கிட்ட தான் இருக்கு. அதுனால இந்த கவலை படறதை விட்டுட்டு பகவானை சிந்தனை பண்ணேன். அவர் உன் கஷ்டத்தை போக்கிடுவார். நீ குருட்டு யோசனை பண்ணி என்ன ஆகப் போகிறது? “சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை”னு ஔவைப் பாட்டி சொன்ன மாதிரி இந்த ஸ்லோகம் இருக்கு. அதுனால இந்த ராமாயணத்தை மேலும் மேலும் படிப்போம். பாடுவோம். கேட்போம்.
ராமோ ராமோ ராம இதி (17 min audio in tamil. same as the script above)
ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…