ஸீதா ராம குணக்ராம புன்யாரண்ய விஹாரிணௌ (18 min audio in tamil)
वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये । जगतः पितरौ वन्दे
पार्वतीपरमेश्वरौ ।।
வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ ||
அப்படீன்னு ரகு வம்சத்தினுடைய முதல் ஸ்லோகம். மஹாகவி காளிதாசர் பண்ணிணது. வாக்கு, அதனுடைய அர்த்தம், ஒரு சொல், அதனுடைய பொருள். பலாப்பழம், அப்படீன்னு சொன்னா, உடனே, நம்ம மனசுல, அந்த பொருள், ஞாபகம், வர்றது. அந்த பொருளையும், அந்த வார்த்தையையும் எப்படி பிரிக்க முடியாதோ, அப்படி பார்வதி, பரமேஸ்வரர்களையும், பிரிக்க முடியாது. “பிதரௌ” அப்படீன்னு, ஸமஸ்க்ருதத்துல, ஒரே வார்த்தையில, உலகத்துக்கே அம்மையப்பனா இருக்கற, ஜகத: பிதரௌ – உலகத்துகெல்லாம், தாய் தந்தையா இருக்கக் கூடிய, அவாளை, எனக்கு, நல்ல வாக்கும், நல்ல, வார்த்தைகளும், அதற்கேத்த பொருளும், என்னுடைய கவிதையில அமையுமாறு, என்னுடைய காவியத்தை, பண்ண ஆரம்பிக்கும் போது, இந்த பார்வதி, பரமேஸ்வராளை, வணங்குகிறேன், அப்படீன்னு சொல்லி, காளிதாசர் ஆரம்பிக்கறார்.
இதே அர்த்தத்துல, அபிராம பட்டரும்,
சொல்லும் பொருளும் எனநட மாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க் கேஅழி யாஅரசும்
செல்லும் தவநெறி யும்சிவ லோகமும் சித்திக்குமே.
அப்படீன்னு சொல்றார். அது மாதிரி, அம்பாளையும், பரமேஸ்வரனையும், நினைக்கறவாளுக்கு, இந்த உலகத்துல, நல்ல வாழ்க்கை, மேலுலகத்துல அழியாத அரசு, அதுகெல்லாம் மேல, தவநெறியில, போகக் கூடிய ஒரு பாக்யமும், அதோட முடிவுல, சிவலோகமும், சித்திக்கும், அப்டீன்னு சொல்றார். அது மாதிரி, மஹா பெரியவாளும், ஒரே தெய்வம்தான், அம்மையும் அப்பனுமா ஆகி, நமக்கு அனுக்ரஹம் பண்றது. அம்பாளோட சரணத்தை தியானம் பண்றது, நமக்கு சுலபம். மனசு தானா போயி அங்க நிக்கறது, அப்படீன்னு சொல்றா.
அப்படி அந்த அம்மையப்பனா இருக்கற ஈஸ்வரனும், அம்பாளும், அப்பப்ப, ஏதோ ஒரு, கோச்சுண்டா, அதனால, அம்பாள் பிரிஞ்சு வந்தா, தபஸ் பண்ணி பகவானை அடைஞ்சா, அப்படீன்னு சில க்ஷேத்ரங்கள் எல்லாம் நாம கேள்வி படறோம். காஞ்சிபுரத்துல, அம்பாள், கம்பாநதிக் கரையில, மணல் எடுத்து, ஒரு லிங்கம் பண்ணி, பூஜை பண்ணிண்டு இருக்கா. அப்போ, கம்பை நதியில வெள்ளம் பெருக்கெடுத்து ஓடறது. பூஜை பண்ணும்போது, வெள்ளம் வந்தா நாம என்ன பண்ணுவோம்? எழுந்து ஓடிப் போயிடுவோம். ஆனா, அம்பாள், அந்த லிங்கத்தை கட்டிண்டா. அப்போ, பகவான், காட்சி கொடுத்து, அந்த மா மரத்தடியில, அம்பாளை கல்யாணம் பண்ணிண்டு இருக்கார். ஏக ஆம்ர நாதர். ஒரு மாமரத்தடியில இருப்பவர். அந்த மரத்தோட நாலு கிளைகளும், நாலு வேதங்கள். ஒவ்வொரு, கிளையில உண்டாகிற பழங்கள், ஒவ்வொரு ருசியா இருக்கும். இன்னிக்கும், அந்த மாமரத்தடியில, அந்த அம்பாளும், ஏகாம்பரேஸ்வரரும் கல்யாண காட்சி ஒரு சந்நிதி இருக்கு. அந்த சிற்பம், செதுக்கி வெச்சிருக்கா. கல்யாணத்தின் போது, எப்படி ஒரு பெண்ணோட முகத்துல, எப்படி ஒரு சந்தோஷமும், வெட்கமும் கலந்த ஒரு சிரிப்பு இருக்குமோ, அதை அவ்வளவு, தத்ரூபமா பண்ணி இருக்கா. அதை அடிக்கடி, தரிசனம் பண்ணணும். அந்த மாதிரி, சந்தோஷம், ஒரு பெண்ணுக்கு, ஒரு குழந்தைக்கு, தாயாகும் போது தான், நான் பார்த்திருக்கேன்.
அப்படி ஸ்வாமியும் அம்பாளும் பிரிஞ்சு மீண்டும் சேர்ந்தார்கள், அப்டீங்கிறது, எங்க மயிலாப்பூர்லேயும், அம்பாள் மயிலா இருந்து, பூஜை பண்ணிணா. அதாவது பரமேஸ்வரன் உபநிஷத் தத்துவத்தை சொல்லிண்டிருந்தாராம். அப்போ, அம்பாள், மயில் டான்ஸ் ஆடறதை, நாட்டியம் ஆடறதை பார்த்துண்டு, சொன்னதை கவனிச்சுக் கேட்கலையாம். அப்போ பகவான், நீ மயிலா போன்னு, சபிச்சுட்டார். இங்கே மயிலாபுரியில வந்து, சிவலிங்கத்துக்கு பூஜை பண்ணி, திரும்பவும், சுயரூபம் அடைஞ்சு, அம்பாள் பரமேஸ்வரனோட சேர்ந்தா, அப்படீன்னு, இங்க ஸ்தல புராணம்.
பகவானே, தன்னோட பக்தர்களை, தம்பதிகள், பிரிஞ்சு இருந்தா சேர்த்து வெச்சிருக்கார். பரமேஸ்வரனே தூது போயிருக்கார். “பரவைக்கு எத்தனை விசை தூது” ன்னு அதை அருணகிரி நாதர் பாடறார். சுந்தரமூர்த்தி நாயனார், அவர் பகவானோட அம்சம். சிவபெருமான், ஒரு தடவை, தன்னை, கண்ணாடியில பார்த்தபோது, உள்ளிருந்து வெளி வந்த, தன்னை அலங்காரம் பண்ணிண்டு ஸ்வாமி பார்த்தபோது வெளி வந்த, அந்த ஸ்வாமிதான், சுந்தரமூர்த்தி. அவர் பார்வதி தேவியோட ரெண்டு சேடிப் பெண்களை பார்த்து, ஆசைப்படறார். அப்ப பகவான், “நீ பூமியில போயி பிறந்து, அவாளை, கல்யாணம் பண்ணிண்டு, அனுபவிச்சுட்டு வா”ன்னு அனுப்பறார்.
பூமியில திருவாரூர்ல வந்து, சுந்தர மூர்த்தி பிறக்கறார். பகவான், அவரை, ஆட்கொள்கிறார். பரவை நாச்சியார்னு, திருவாரூர்ல, ஒரு பொண்ணு, பொறந்திருக்கா. அவளை கல்யாணம் பண்ணிக்கறார். அப்புறம், இங்க திருவொற்றியூர்ல வந்து, சங்கிலி நாச்சியார்னு இன்னோருத்தியை கல்யாணம் பண்ணிக்கறார். அப்புறம் திரும்பவும் திருவாரூர் போன போது, அந்த பரவை நாச்சியார், “உங்களை சேர்த்துக்க மாட்டேன்”னு, சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் சொல்றா. அப்படி சொன்ன போது, சுந்தரமூர்த்திக்கு, சிவபெருமான், தம்பிரான் தோழர். அவர் தான் best friend. அதனால அவர் ஸ்வாமி கிட்ட, “நீங்க எனக்காக, பரவை நாச்சியார் கிட்ட சமாதானம் பேச தூது போகணும்”, அப்டீங்கறார். சிவபெருமான், தூது போறார். பரவை நாச்சியார், இல்லேங்கறா. அப்படி சுந்தரமூர்த்திக்கு வந்து பகவான் சொன்ன போது, “திரும்பவும் போங்கோ”ங்கறார். திரும்பவும் போறார். இப்படி நடையா நடந்து, சுந்தரமூர்த்தியையும், பரவை நாச்சியாரையும் சிவபெருமான், சேர்த்து வைக்கறார்.
இப்படி, பிரிந்த தம்பதிகளை, சேர்த்து வைக்கறதுங்கற காரியம், பகவானே பண்ற கார்யம், அதை ஹனுமார் பண்றார். ஹனுமார் பிரம்மசாரி. அவருக்கு, ராமர் சீதையை, பிரிஞ்சு படற கஷ்டத்தை பார்த்தபோது, புரிஞ்சிருக்காது. ஆனா இங்க வந்து, சீதா தேவியை பார்த்த உடனே, அவர் “ஆஹா, ஆஹா, அப்படீன்னு தெய்வப் பெண்ணா இருக்காளே, இவள்”
‘யதி ராமஹ சமுத்ராந்தாம் மேதிநீம் பரிவர்த்தயேத் |
அஸ்யா: க்ருதே ஜகச்சாபி யுக்தமித்யேவ மீ மதி: ||
ராமர் கடல் சூழ்ந்த இந்த உலகத்தை, புரட்டி போட்டார்னா கூட, இவளுக்காக பண்ணலாம், யுக்தம் தான் அது, அப்டீங்கறார்.
ராஜ்யம் வா த்ரிஷு லோகேஷு சீதாம் வா ஜனகாத்மஜாம் |
த்ரைலோக்ய ராஜ்யம் ஸகலம் சீதாயா: நாப்னுயாத் கலாம் ||
மூவுலகத்தினுடைய ராஜ்யமும், சீதாதேவியையும் ஈடு பார்த்தா சீதையினுடைய, பதினாறுல ஒரு பங்குக்கு மூவுலக ராஜ்யமும், ஈடாகாது. அப்படின்னு சொல்றார்.
“மமாபி வ்யதிதம் மன:” இவா ரெண்டு பெரும் பிரிஞ்சு இருக்காளேன்னு, இந்த ராக்ஷசிகளுக்கு, மத்தியில, இப்படி கஷ்டப் படறாளேன்னு, இவளை பார்த்து, என் மனமே, ரொம்ப துக்கப் படறது, ராமர் எப்படி இதை தாங்குவார். ராமருடைய உயிர், சீதை கிட்ட இருக்கு, சீதையினுடைய உயிர் ராமர் கிட்ட இருக்கு. அதனால தான் இவா ரெண்டு பேரும், இன்னும் உயிரோட இருக்கா, அப்படீன்னு வியக்கறார்.
அந்த இடத்துல சுந்தரகாண்டத்துல பதினைந்தாவது, சர்கத்துல, ரெண்டு ஸ்லோகம் வர்றது.
इयं सा यत्कृते रामश्चतुर्भिः परितप्यते । कारुण्येनानृशंस्येन शोकेन मदनेन च ।।
स्त्री प्रणष्टेति कारुण्यादाश्रितेत्यानृशंस्यतः । पत्नी नष्टेति शोकेन प्रियेति मदनेन च ।।
இயம் ஸா யத்க்ருதே ராம: சதுர்பி: பரிதப்யதே |
காருண்யேன ஆன்ருஷம்ஸ்யேன ஷோகேன மதனேன ச ||
ஸ்த்ரீ பிரணஷ்டேதி காருண்யாத் ஆஸ்ரிதேதி ஆன்ருஷம்ஸ்யத: |
பத்னி நஷ்டேதி, ஷோகனே ப்ரியேதி மதனேன ச ||
இந்த பெண்ணை குறித்து, ராமர் நாலு விதமா கவலைப் படறார். கருணையினாலயும், தயவினாலயும், சோகத்துனாலயும், காமத்துனாலயும் வருத்தப் படறார். “ஸ்த்ரீ பிரணஷ்டேதி காருண்யாத்” அப்படீன்னு, ஒரு பெண், இந்த மாதிரி, காணாம போயிட்டாளேன்னு கருணை. தன்னை நம்பி, வந்தவள், “ஆஸ்ரிதேதி ஆன்ருஷம்ஸ்யத: ” நம்மை நம்பி வந்தவள். அவளை நாம தொலைச்சுட்டோமே, அப்படீன்னு அவருக்கு ஒரு வருத்தம். “பத்னி நஷ்டேதி, ஷோகேன” தன்னுடைய பத்னி, பக்கத்துல இல்லாம இருக்காளே, அப்படீன்னு, அதனால ஒரு சோகம். “ப்ரியேதி மதனேன ச” தனக்கு, பிரியமான காதலி, அவள் இல்லாம இருக்கறது, அதனால ஒரு சோகம்.
இப்படி நாலு விதமான உணர்ச்சிகள், நாலு விதமான கணவன், மனைவிக்குள்ள, இருக்கற உறவு, இந்த ஒரு ஸ்லோகத்தை வெச்சுண்டு, திருமண வாழ்க்கைன்னா என்ன? அதுல, கணவன் எப்படி இருக்கணும்? மனைவி எப்படி இருக்கணும்? அப்டீங்கிறது எல்லாம், அவ்வளவு அழகா சொல்லி இருக்கார்! அதை ஹனுமார், வாயால சொல்றது இன்னும் அழகு. அவர் இவா ரெண்டு பேரையும், சேர்த்து வைக்கறார். அதுமாதிரி, உத்தம தம்பதிகளா இந்த ஸ்லோகத்துல இருக்கற மாதிரி, கணவன், மனைவி இருந்தா ஏதாவது ஒரு விதி வசமா அவா பிரிஞ்சா கூட, பகவானே அவாளை சேர்த்து வெச்சுடுவார். எப்படி ஹனுமார் சேர்த்து வெச்சாரோ, அப்படி.
ஒரு பொண்ணா அவளுடைய இயல்புகளை புரிஞ்சுண்டு, ஒரு ஆண் அவள்கிட்ட பொறுமையோடு அன்போடு நடந்துக்கணும். தன்னை நம்பி ஒரு பெண்ணை கொடுத்திருக்கா, அப்டீங்கிற போது, அவாளோட physical constrains, அவாளால எவ்ளோ முடியும், அப்டீங்கிறதை புரிஞ்சுக்கணும். அவாளோட அந்த limitations தெரியணும். அவாளுடைய பயமோ, அவாளுடைய வெட்கமோ, அவாளுக்கு டக்குன்னு, possessive ஆ இருக்கறதுனால மத்தவா மேல ஒரு வெறுப்பு வரும். தன் கணவன் மேல இருக்கற அன்புனால, தன் நாத்தனார், மாமியார், எல்லார் மேல கூட அவாளுக்கு விருப்பம் குறைச்சலா இருக்கும். ஒரு கோபம், கீபம், வரும். அதெல்லாம் கூட ஒரு கணவன் எங்கிறவன் புரிஞ்சுக்கணும். அதை அன்பினால் மாத்தணும்.
அப்புறம் தன்னை நம்பி வந்திருக்கா. அவளுடைய அப்பா, அம்மா, சகோதரர்கள், தோழிகள், எல்லாரையும் விட்டுட்டு, இந்த பெண், தன்னை நம்பி வந்திருக்கா, அப்டீங்கிறதை நினைச்சு, அவ கிட்ட பிரியத்தை காண்பிக்கணும். அவளை காப்பாத்தணும்.
அடுத்தது, பத்னிங்கிற ரோல். அந்த பத்னிங்கிற, roleலில், தனக்கு, தன்னை கரையேத்தக் கூடிய பிள்ளைகளை பெற்று, கொடுக்கறா. தன்னுடைய அப்பா, அம்மாவை கரையேத்தறதுக்கு, கூட நிக்கறா. அப்படீன்னு அந்த பத்னிங்கிற, roleக்கு தனி மதிப்பு. ஒரு பெரியவர், தன்னுடைய பத்னீ காலமானபோது, என்னோட அக்னியை கூட்டிண்டு போயிட்டியே, அப்படீன்னு அழுதாராம். அப்படி பத்னி இருந்தாதான், அக்னி காரியமெல்லாம், பண்ணலாம். இவ்வளவு முக்யமான ஒரு role. அதனால, எந்த தொழிலா இருந்தாலும், அந்த பத்னியினுடைய துணை என்ன அப்படீன்னு புரிஞ்சுண்டு, அந்த role, அவ பண்றாங்கிறதை மதிக்கணும். அவா ஆத்தை பாத்துக்கலேன்னா, நாம நிம்மதியா வெளியில போயிட்டு வர முடியுமா? அதனால அதை கௌரவிக்கணும்.
கடைசியில, இவ தன்னோட காமத்தை பூர்த்தி பண்றா, அப்டீங்கிறது, அது ஒரு element. 25%. அது முக்யம்தான். அதை base பண்ணி ஒரு கல்யாணத்தை நாம நிறுத்தி வைக்க முடியாது. அதை புரிஞ்சுண்டு, அந்த மாதிரி எல்லாம், ஒரு கணவன், தன் மனைவியை, அன்பா நடத்தினாலொழிய கல்யாண வாழ்க்கைங்கறது கஷ்டமாக போயிடும். கல்யாணம்கிறது, ரொம்ப, hard work. அதுவும், நம் arranged marriage அர்த்தப் புஷ்டியானது, ஆயிரம் காலத்துப் பயிர்னு நாம நம்பறோம். அதுல கணவன், இவ்வளவு, எல்லாம் புரிஞ்சுண்டு, நடக்கணும்.
அதே மாதிரி, இந்த ஸ்லோகத்துல, ஒரு பெண்ணும் எப்படி நடந்துக்கணும்ங்கிறது இருக்கு. பெண்களுக்கு, அவாளுக்கும், தங்களுடைய limitation, தங்களோட characteristics என்று சொல்ற மாதிரி, தங்களோட விசேஷ குணாதசியங்கள், அச்சம், மடம், நாணம், பயிர்ப்புனா என்னன்னு தெரியணும். இந்த காலத்துல படிச்சு வேலைக்கு போயிட்டா, இதெல்லாம் இல்லாம இருக்கறதுதான், ரொம்ப உலகம் பாராட்டறது. ஆனா, இதெல்லாம் அவாளுக்கு இயல்பா இருக்கு. யாரும் திணிக்க ஒண்ணும் இல்ல.
நம்ம சாஸ்திரங்கள், ல, அச்சம், மடம், நாணம், பயிர்ப்புன்னு, சொல்றா. இதெல்லாம் சொன்னா, என்னை அடிக்க வருவா. ஆனா, ஒரு பெண், ஒரு பூனையை பார்த்தா பயப்படறா. ஆனா கணவன் கையை பிடிச்சுண்டு, ஆஸ்திரேலியாக்கு கூட போறா. என்ன தைரியம்! அந்த மாதிரி அவாளோட சில பயங்கள் எல்லாம், வந்து புரிஞ்சுக்கணும்.
அது மாதிரி, மடம், னா ஒரு, naivety. ஒரு வெகுளித் தன்மை. ஒரு expert doctorஆ இருந்தா கூட, தன்னோட குழந்தைக்கு, உடம்பு சரியில்லைன்னா, வேற doctor கிட்ட போவா. ஏன்னா, அவளுக்கு, அந்த தன் குழந்தைன்னு வரும்போது, ஒரு அசடு தட்டிடறது. அந்த மாதிரி, அவாளுக்கு, சில சமயம், decision making போது, அந்த மாதிரி, ஒரு பாசத்தினால ஏதாவது ஒரு தப்பு பண்ணக் கூடும். அப்படீங்கிறது, தனக்கு, அந்த limitation இருக்குங்கிறது, அவாளும் புரிஞ்சுக்கணும்
நாணம், அப்படீனா, ஒரு லஜ்ஜை. சிலது பண்ணலாம், சிலது பண்ணக் கூடாது.
அது மாதிரி, பயிர்ப்புன்னா,ஒரு வித வெறுப்பு. கணவனைத் தவிர, பர புருஷர்கள் கிட்டயோ, வேத்து மனுஷா கிட்ட, ஒரு விதமான, மனவிலக்கம்.
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க னு திருவெம்பாவைல சொன்ன மாதிரி. கணவன் கிட்ட தனிப்பட்ட அன்பு.
இதெல்லாம் இவாளோட, இயல்பு. இந்த இயல்பை அவா வெச்சுண்டு இருந்தா, கணவனுக்கு அவ கிட்ட ஆசை வரும்.
கணவனுக்கும், முதல்ல ஒரு தடவை, ஒரு பூனையை, பார்த்து பயந்துண்டு, தன்னை கட்டிண்டா, கணவனுக்கு அது பிடிக்கறது. அதை வெச்சுதான் காதலே வர்றது. ஆனா, அப்புறம் பின்னாடி, அதை வெறுத்தான்னா, எப்படி? அதனால ரெண்டு பேரும் தன்னோட இந்த இயல்புகளை புரிஞ்சுக்கணும்.
அடுத்தது கணவனை நம்பி, இருக்கறது, அப்டீங்கிறது என்னனா, பணத்தை நம்பி இருக்கக் கூடாது. கணவனுடைய குணத்தை நம்பி இருக்கணும். கணவனுடைய படிப்பு, அவனுடைய வீரம், அந்த மாதிரி அவனுடைய தனித் திறமைகளை புரிஞ்சுண்டு, அதை வளர்க்கணும். இது ஒரு மனைவியோட முக்யமான ஒரு கடமை.
அடுத்தது, பத்னிங்கிற role ஐ play பண்ணனும். குழந்தைகளை, பாத்துக்கணும். அவனோட அம்மா அப்பாவை பாத்துக்கணும்.
அதெல்லாம் போக கணவனுடைய காமத்தை பூர்த்தி பண்ணனும். அதுல பரஸ்பரம், ரெண்டு பேருக்கும் ஒரு சந்தோஷத்தை பகவான், வெச்சிருக்கார். அதனால அதையும் புரிஞ்சுக்கணும்.
இப்படி ஒரு, கணவனும் ,மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுண்டு, ideal ஆ, ஒரு ஆதர்ச தம்பதிகளா இருந்தா, பகவான்அனுக்ரகம் கிடைக்கும். இந்த இல் வாழ்க்கையே ஒரு புண்யமமாக, எல்லா தர்மங்களுக்கும் மேலாக, “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” அப்படின்னு ஔவை பாட்டி சொன்னா மாதிரி. அந்த மாதிரி இல் வாழ்க்கை என்பதே தர்மம். இப்படி வாழ்ந்துண்டு, அவா ஒரு நாம ஜபம் பண்ணிண்டு இருந்தாலே அவா ரொம்ப சுலபமா, பகவானை அடைஞ்சுடுவா.
ஆனால், சில சமயம் இப்படி இருக்கும்போது கூட, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்துண்டு பரஸ்பரம், அன்போட இருக்கும்போது கூட, விதி வசமா ஏதாவது ஒண்ணு வந்து அவாளோட அன்புக்கு சோதனையா வரும். அப்டீங்கிறதை தான் நம்முடைய, இந்த கதைகள் எல்லாம் காண்பிக்கறது. இந்த மாதிரி சீதையை பார்த்த போது, ஹனுமார் சொல்லுவார்.
तुल्यशीलवयोवृत्तां तुल्याभिजनलक्षणाम् ।
राघवोऽऽर्हति वैदेहीं तं चेयमसितेक्षणा ।।
துல்ய ஷீல வயோ வ்ருத்தாம் துல்யாபிஜன லக்ஷணாம் |
ராகவோர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அசிதேக்ஷணா ||
இவா ரெண்டு பேரும் சரியான வயசு, அதாவது பொருத்தமான வயசு. பொருத்தமான குணம், அவாளுடைய சீலம், ஒழுக்கம், ஒரே மாதிரி. வ்ருத்தமும் ஒரேமாதிரி. அவாளுடைய ஆசாரங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. இவா ரெண்டு பேரும் ராஜகுமாரன், ராஜகுமாரி. இவாளுடைய அபிஜனங்களும், ஒரே மாதிரி. ஜனகர், மகள் இவள். தசரத குமாரர் அவர். “ராகவோர்ஹதி வைதேஹிம்” ராமனுக்கு இவள், ரொம்ப பொருத்தமான மனைவி. சீதைக்கு, ராமர்தான் பொருத்தமான கணவர். அப்படீன்னு, இங்க வந்து, அவா பிரிந்து இருக்கும்போது இதை எதுக்கு, சொல்லணும்னா, நமக்கு வைராக்கியம் வரதுக்ககாக தான். அப்பேற்பட்ட ராமரும் சீதையும் கூட பிரியும்படியான ஒரு காலம் வரும். “காலோஹி துரதிக்ரமஹ” காலம்கிறது, ரொம்ப கடுமையானது. விதிங்கிறது, அவ்வளோ powerful, அப்டீங்கிறது, அவர், feel பண்ணி, இதை சொல்றார், ஹனுமார்.
ஆனா அந்த ஹனுமார், இவா ரெண்டு பேரையும் பார்த்தவுடனே அவாளுடைய பக்தர் ஆயிட்டார். சீதையை பார்த்த உடனே, அவருக்கு அவ கிட்ட பக்தி வந்துடறது. அப்புறம், அவள் இராவணன் கிட்ட behave பண்றதும், அடுத்தது, அவள் தன்கிட்ட பேசும்போதும், நடந்துண்ட விதமும், மேன்மேலும், ஹனுமாருருக்கு, சீதா தேவி மேல பக்தி ஏற்பட்டு, அந்த சீதையை கஷ்டப் படுத்தறா, அப்படீங்கிற கோபத்துனாலதான், இலங்கையை, எரிச்சார், ஹனுமார் “ய: சோகவஹ்நிம் ஜனகாத்மஜாயா: ஆதாய தேனைவ ததாஹா லங்காம்” அப்டீன்னு, சீதையினுடைய, கோப அக்னியை, கொண்டுதான், இலங்கையை, எரிச்சார், அவர், அப்படீன்னு ஸ்லோகம்.
அப்புறம், ராமர் கிட்ட திரும்பி வந்து, “இன்னிக்கே கிளம்புவோம்” என்கிறார். தன்னோட வானர சேனைகள் கிட்டயும் வந்து, “சீதையை, நாம காப்பாத்தணும், இப்பவே, சீதையை, நாம மீட்டுண்டு, கூட போயிடலாம்”, அப்படீங்கும்போது, அவாளும் “ஆஹா, அப்படி பண்ணுவோம்” அப்படீங்கிறா. ஆனா ஜாம்பவான், “ நாம ராமரை பார்த்து, அவர் சொல்றதை கேட்போம்” அப்படீன்னு சொன்ன உடனே, ராமரை பார்த்து, அன்னிக்கே, ராமரை கிளப்பி, கூட்டிண்டு வந்து, சீதையை, மீட்கும்படி ஹனுமார், பண்றார். சீதா தேவியோட செய்தியை, ராமர்கிட்ட சொல்லும்போது, அங்க ராமர் சந்நிதியில் ராமரை நமஸ்காரம், பண்றார். அப்புறம், தெற்கு திக்குல திரும்பி சீதா தேவியை ஒரு நமஸ்காரம் பண்றார். ராமருக்கு நமஸ்காரம் பண்ணிண்டு இருந்தவர்,
சீதாராம குணக்ராம புண்யாரண்ய விஹாரிணௌ |
வந்தே விஷுத்த விக்ஞாணௌ கவீஷ்வரரௌ கபீஸ்வரௌ ||
அப்டீன்னு, இந்த வால்மீகியும், ஹனுமாரும் இந்த சீதா ராம குணத்துல, அப்படி மூழ்கறா. ராமர் எவ்ளோ, தூரம், சீதைக்காக, ஏங்கிண்டு இருக்கார், அப்டீங்கிறதை, ஹனுமார், முப்பத்து ஒண்ணாவது சர்கத்துல இருந்து, நாற்பதாவது சர்கம் வரைக்கும், அப்படி திரும்ப திரும்ப, சொல்றார். ராமர் கிட்டே “ஏதாவது, சாப்பிடுங்கோளேன்”, அப்படீன்னு, சொன்னா, “வேண்டாம்பா, வேண்டாம்பா”, அப்படீன்னு, சொல்லிடறார். “சாயங்காலம் நாலு மணி, அஞ்சு மணிக்கு ஏதோ சாப்பிடறார். ஆனா ஒண்ணுமே ரசிச்சு, சாப்பிடறது இல்ல” அப்படீன்னு, சீதைகிட்ட “உங்களை, நினைச்சு, அப்படி அவருக்கு, தூக்கமும் இல்ல, சாப்பாடும் இல்ல, சந்திரனை பார்த்தா, சீதையோட முகம் மாதிரி இருக்கு”, அப்படீங்கறார். “எப்பவும் உங்களை நினைக்கிறார். எப்பயோ ஒரு தடவை தூங்கினாலும், கனவுல உங்களை பார்த்துட்டு, “சீதேதி மதுரம் வாணீம்” சீதா அப்படீன்னு, அந்த மதுரமான வார்த்தைகளை, சொல்லிண்டு, எழுந்துண்டுடறார்” என்கிறார் ஹனுமார்.
அப்படீன்னு ரெண்டு பேருடைய பரஸ்பர அன்பை புரிஞ்சுண்டு, சேர்த்து வெச்சவர் ஹனுமார். அது மாதிரி இப்பவும், தம்பதிகளுக்குள்ள ஏதாவது பேதம் ஏற்பட்டா, “அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமபூஜித“ அப்படீன்னு ஹனுமாரை வேண்டிண்டா உடனே அவர், அந்த பிணக்கை போக்கி சேர்த்து வைப்பார்.
ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…
3 replies on “ராமாயணம் காட்டும் இல்லற இலக்கணம்”
நமஸ்காரம்..இந்த பக்கத்தை அப்படியே பிரிண்ட் போட்டு ஒன்று xerox அல்லது நோட்டீஸ் மாதிரி போட்டு தற்கால பெண்கள்,ஆண்களுக்கு விநியோகம் செய்யணும் என்று இருக்கு..ஒரு ஆயிரம் நோட்டீஸ் கொடுத்து அதில் ஒரே ஒருத்தர் இதில் சொன்னமாதிரி நடந்தால் கூட (அது எனக்கு தெரியாட்டி போன கூட) அது எனக்கு ச்ரேயஸை தரும்..அந்த பகவான் அனுக்கிரஹம் கிடைக்கும்..நன்றி
சாமான்ய ஜனங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று காட்டத் தான் பகவான் அவதாரம் அமைந்துள்ளது என்பதை சரியான எடுத்துக்காட்டுடன் விளக்கியது அருமை. இன்று பங்குனி உத்திரம் நன்னாளில் அம்பாள், ஸ்வாமி,ராமர்,சீதா விவாஹம் மனக்கண் முன் அமைந்தது🙏🙏🙏🙏
Wonderful explanation of husband & wife relationship!! With apt examples !! Step by step brings out the feeling with proper quotation !! Beautiful! The way you explains the relationship youngsters who read will understand the real affection + concern of this relationship for sure !!
Swamigal anugraham paripoornam!