இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தரகாண்டத்துல முப்பத்தாறாவது ஸர்க்கத்துல ஒரு ஸ்லோகம்
कच्चिन्मित्राणि लभते मित्रैश्चाप्यभिगम्यते ।
कच्चित्कल्याणमित्त्रश्च मित्रत्त्रैश्चापि पुरस्कृतः ।।
கச்சின் மித்ராணி லபதே மித்ரைஸ்சாபி அபிகம்யதே |
கச்சித் கல்யாண மித்ரஸ்ச மித்ரைஸ்சாபி புரஸ்க்ருதஹ ||
னு சீதாதேவி ஹநுமார் கிட்ட ராமரைப் பத்தி கேட்கறா.
ஹனுமார், மெதுவா ராம கதையைச் சொல்லி கீழே இறங்கி வந்து நமஸ்காரம் பண்ணி, சீதையோட நம்பிக்கையை ஜெயிச்ச பின்ன, ராமருடைய பெயர் பொறித்த மோதிரத்தை கொடுத்து, ரொம்ப சீதைக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தறார்,
“விக்ராந்தஸ்துவம் ஸமர்தஸ்துவம் பிராக்ஞஸ்த்வம் வனரோத்தமா” எப்பேர்ப்பட்ட காரியத்தை நீ பண்ணியிருக்கே, இந்த ராக்ஷஸ கோட்டையெல்லாம் தாண்டி வந்து என்னைப் பாத்து, இந்த ராமருடைய மோதிரத்தை கொடுத்து, என் உயிரை காப்பாத்தினியே! எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தினியே! அப்படின்னு சொல்லிட்டு, இப்ப ஹனுமார் ராமதூதன் தான் என்கிற நம்பிக்கை சீதைக்கு வந்துடுத்து, இப்போ தான் ஹனுமார் கிட்ட முழு மனசோட பேச ஆரம்பிக்கிறா.
அப்போ, “ராமர் எப்படி இருக்கார்? அவர் என்ன பிரிஞ்ச துக்கத்தில ரொம்ப துவண்டு போகமால் இருக்கிறாரா? அவர் சாப்பிடறாரா? அவர் அடுத்த அடுத்த காரியத்தை எல்லாம் கவனிக்கிறாரா? இப்படி கேட்டுண்டே வரும்போது, இந்த ஒரு ஸ்லோகம் வர்றது – “கச்சின் மித்ராணி லபதே” – அவருக்கு நண்பர்கள் கிடைக்கிறார்களா? “மித்ரைஸ்சாபி அபிகம்யதே” – அந்த நண்பர்கள், அவரை வந்து பாக்கறாளா, நெருங்கி வருகிறார்களா? ” கச்சித் கல்யாண மித்ரஸ்ச” – கிடைச்ச நண்பர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா? ” மித்ரைஸ்சாபி புரஸ்க்ருதஹ” – அந்த நண்பர்கள், இவரை கௌரவிக்கிறார்களா? அப்படினு நாலு கேள்வி கேட்கறா, என்ன அழகான கேள்விகள்!
Misery Loves Company-ங்கிற மாதிரி கஷ்டகாலம் வரும்போது, யாராவது வேண்டாதவா வந்து சேர்ந்துப்பா. இன்னும், மேலும் கஷ்டம் ஜாஸ்தியாகும். அந்த மாதிரி ராமருக்கு ஒரு கஷ்ட காலம், சீதையை பிரிஞ்சு தவிக்கும்போது, நல்ல நண்பர்கள் கிடைக்கிறாளா, அந்த நண்பர்கள் இவரை, கேலி பண்ணாமல் இவரை கௌரவிக்கறாளா, அப்பப்போ வந்து இவரை பார்க்கறாளா அப்படியெல்லாம் அழகா கேக்கறா. இந்த காட்சியை பாக்கும்போது, எனக்கு ஹனுமார் எப்படி சுக்ரீவனை ராமரோடு சேர்த்து வெச்சார், சுக்ரீவன் தான் ராமருக்கு கஷ்டகாலத்துல கிடைச்ச நண்பர், அப்படி கிடைச்ச நண்பரை ஹனுமார் சேர்த்து வைக்கும் அந்த காட்சி ரொம்ப அழகாயிருக்கும்.
சுக்ரீவன் மலை மேலேர்ந்து இவா வர்றதை பார்த்தபோது, பயந்துடறான். “ரொம்ப பெரிய வீரர்களா தெரியறா இவா ரெண்டு பேரும், வாலி அனுப்பிச்சாவாளா இருக்கும்”, அப்படின்னு சொல்லி ஒரு சிகரத்துலேர்ந்து இன்னொரு சிகரத்துக்கு தாவி ஓடறான். அப்போ ஹனுமார் “நீ ராஜாவாக ஆகணும்னு ஆசைப்படற, இப்படி பயந்தன்னா எப்படி?” னு சொல்றார். அவன் உடனே ஹனுமார் கிட்ட “சரி, உனக்கு தைரியம் இருக்குனா நீ போய் அவாளை பாத்துப் பேசி, அவா நல்லவா தானா, நாம் அவாளோட நட்பு பண்ணிக்கலாமான்னு தெரிஞ்சிண்டு வா”ன்னு, அனுப்பறான்.
ஹனுமான் ஒரு பிக்ஷு வேஷம் போட்டுண்டு வந்து, ராமரை நமஸ்காரம் பண்ணறார். அந்த மொதல்ல ஹனுமார் ராமர் கிட்ட பேசின அந்த இருபது சுலோகங்களை ஒண்ணு ஒண்ணும் எடுத்து, அதை வந்து நாம ரசிக்கணும். அந்த பேச்சைக் கேட்டு “சொல்லின் செல்வன்”னு ராமர் ஹனுமார்க்கு, title கொடுக்கிறார். “இவன் வித்வான், இவன் இவ்வளவு நேரம் பேசினதுல ஒரு அபசப்தம் கூட கிடையாது, நவவயக்காரண வேத்தா, நாலு வேதங்களையும் படிச்சவன், “உச்சாரயதீ கல்யாணீம் வாசம் ஹ்ருதயஹரீணீம்” மனத்தை கொள்ளை கொள்ளும்படியான மங்களகரமான வார்த்தைகளை பேசுகிறான், இவன் உரக்க பேசலை, ரொம்ப காதுலயே விழாம பேசலை, விறு விறு விறுனு பேசலை, ரொம்ப இழுத்து இழுத்து பேசலை, அவ்வளோ அழகா பேசறான், இவன் கிட்ட நம்ம விஷயத்த சொல்லு”, அப்படினு ராமர் லக்ஷமணன் கிட்ட சொல்றார், லக்ஷ்மணனே பெரிய வித்துவான், லக்ஷ்மணன் பேசும்போதே, நிறைய grammatical peculiarityலாம் வரும்.
அப்ப லக்ஷ்மணன் சொல்றார் “தனுங்கற கந்தர்வன் சொன்னான், இங்க சுக்ரீவன் என்கிற வானரத்தை தேடி வந்துண்டிருக்கோம்” அப்படினு சொல்லி ஆரம்பிச்சவுடனே, ஹனுமார், “ஆமாம், நானும் சுக்ரீவனோடா, மந்த்ரி தான்” என்கிறார். அப்போ லக்ஷ்மணன் சொல்றார், “இது ராமர், தசரத குமாரர். எத்தனையோ லக்ஷக்கணக்கான பசுக்களை தானம் கொடுத்து, யாகமெல்லாம் பண்ணிணவர், நன்னா படிச்சவர், ஆனா காட்டுக்கு வந்துட்டார், அப்பா பேச்சை கேட்கணும்னு காட்டுக்கு வந்துட்டார், வந்த இடத்துல அவரோட மனைவி காணாமப் போய்ட்டா. ரொம்ப நாங்க கஷ்டத்துல இருக்கோம், எங்களுக்கு சுக்ரிவன்தான் தயவு பண்ணனும்” அப்படினு லக்ஷ்மணன் சொல்றார்.
அதாவது வந்திருக்கறது சுக்ரீவனோட மந்த்ரி. அதனால அந்த protocol maintain பண்ற மாதிரி, தனக்கு மந்த்ரி மாதிரி இருக்கும் லக்ஷ்மணனை கொண்டு ராமர் பேசச் சொல்றார். லக்ஷ்மணன் இந்த மாதிரி “நாங்கள் சுக்ரீவனோட தயவை நாடி வந்துருக்கோம்” அப்படினு சொல்றான். ஆனால் ஹனுமாருக்கு அது பொறுக்கலை, “ஆஹா! உங்களை மாதிரி உயர்ந்த குலத்துல பிறந்தவர்களும், கோபத்தையும், புலன்களையும் ஜெயித்தவர்களும் ஆன உங்களை மாதிரி பெரியவர்கள், சுக்ரீவனுக்கு இந்த நேரத்துல ஒரு friend ஆ கிடைக்கறது, அவன் பண்ணிண பாக்யம். அவன் இந்த மலையை விட்டு வெளியில் வர முடியுமா மாட்டிண்டுருக்கான், அதனால நீங்க தான் தயவு பண்ணனும் அவன் கிட்ட, உங்கள கூட்டிண்டு போறேன், நீங்க அவனுக்கு உதவி பண்ணா, அவன் உங்களுக்கு கட்டாயம் உதவி பண்ணுவான்” என்கிறார்.
“தயவு பண்ணனும், உதவி வேணும்”னு கேட்கும்போது மட்டம் தட்டாமா, இவாளா பாத்த ஒடனே, ராமரைப் பாத்த உடனே ஹனுமார் தன்னையே ஒப்பு கொடுத்துடறார். அதனால, அவளோட கஷ்டத்தை பெரிசு படுத்தாம, “உங்களுடைய கஷ்டத்தை நாங்க போக்கிடுவோம், சுக்ரீவனுக்கு தான் உங்க தயவுவேணும்”, அப்படினு சொல்றது எவ்வளவு பெருந்தன்மை.
அப்பறம் அவாளை சுக்ரிவன் கிட்ட அழைச்சிண்டு போய், அந்த ஹனுமார், ராமனை சுக்ரீவனுக்கு introduce பண்ணி, “இவர் சக்கரவர்த்தி குமாரர். பெரிய வீரர், யாகங்களாம் பண்ணவர். இந்த கஷ்ட காலத்துல உனக்கு இந்த மாதிரி friend கிடைக்கிறது கஷ்டம். இவரோட நீ friendship பண்ணிக்கோ” அப்படினு சொல்றார். அப்போ சுக்ரீவன் ரொம்ப பணிவா, “நான் ஏதோ ஒரு வானரம், என்னோட நீங்க friendship பண்ணிப்பேளா?” அப்படினு கேட்கறான். ராமர் உடனே அவனைக் கட்டிண்டு “நானும் நீயும் இனிமே friends”, அப்படினு சொன்னவுடனே, உடனே ஹனுமார் அக்னி மூட்டறார். ராமரும் சுக்ரீவனும் அக்னியை ப்ரதக்ஷிணம் பண்ணி, “நானும் நீயும் இனிமே friends, உன் கஷ்டம் என் கஷ்டம், உன் சுகம் என் சுகம்” அப்படினு சொல்றா. இப்படி ரெண்டு பேரும் friendship பண்ணிக்கிறா, அது கடைசி வரைக்கும் இருக்கு. ராம பட்டாபிஷேகத்துக்கு சுக்ரீவன் வரான்.
அந்த மாதிரி நல்ல நண்பர்கள் கிடைக்கறது கஷ்டகாலத்துல ஒரு அரிய விஷயம், அது கிடைச்சதுனால தான் ராமர் அந்த கஷ்டத்துலேருந்து மீண்டு வரார். சுக்ரீவன் friendship கிடைச்சதால் தான் ராமருக்கு ஹனுமாரோட அன்பு கிடைச்சது. அது ராமருக்கு எவ்வளோ பெரிய லாபமாயிருந்தது.
இதெல்லாம், ராஜகுமாரியாக இருப்பதால் சீதாதேவி அழகாக கேட்கறா.
கச்சின் மித்ராணி லபதே மித்ரைஸ்சாபி அபிகம்யதே |
கச்சித் கல்யாண மித்ரஸ்ச மித்ரைஸ்சாபி புரஸ்க்ருதஹ || என்று கேட்கறா.
அப்பறம் “கச்சித் ஆஷாஸ்தி தேவானாம் பிரசாதம் பார்திவாத்மஜ: – தெய்வங்களை ஆராதனை செய்து அவர்களுடைய பிரசாதத்தை அடைகிறாரா? என்று கேட்கிறா. மற்ற புராணங்களில் ராமர் சிவ பூஜை பண்ணினார் என்று சொல்வதற்கு இங்க மூலத்துலேயே ஒரு proof.
கச்சித் புருஷகாரம் ச தைவம் ச ப்ரதிபத்யதே – தன்னுடைய பௌருஷத்தையும் (Freewill) உணர்ந்து விதியின் வலிமையை (fate) உணர்ந்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு முயற்சியும் செய்து வருகிறாரா? இப்படி சீதாதேவியின் மனத்தை கொள்ளைகொள்ளும் அழகான பேச்சு.
கச்சின் மித்ராணி லபதே (8 min audio in tamil. same as the script above)
ஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம…