நேற்றைய கதையில் பத்மபாதாச்சார்யாள் ஆதி சங்கரருக்கு காசியிலே முதல் சிஷ்யராக வந்து சேர்ந்தது, அவர் குரு பக்தியினால் தாமரை தாங்கிய தாளராக, பத்மபாதராக ஆனது, காபாலிகன் கிட்டேயிருந்து நரசிம்ம மூர்த்தியோட அனுக்ரஹத்துனால ஆச்சார்யாளை காப்பாத்தினது, அவர் எழுதிய பஞ்சபாதிகா இதெல்லாம் பார்த்தோம். இன்னிக்கு இன்னும் இரண்டு உத்தம சிஷ்யர்களைப் பத்தி பார்ப்போம். ஆச்சார்யாள் அப்படின்னாலே எல்லா படத்துலயும் நாலு சிஷ்யர்களோட இருப்பார். அந்த பாக்கி ரெண்டு பேர் ஹஸ்தாமலகர், தோடகாச்சார்யாள் ன்னு ரெண்டு பேர்.
இந்த ஹஸ்தாமலகர்-ங்கிறது, ஆச்சார்யாள் ஸ்ரீபலின்னு ஒரு ஊருக்கு போயிருந்தாராம். அங்க ஒரு பையன், பன்னிரண்டு வயசு வளர்ந்து இருக்கான். ஆனா அவன் பார்க்க மாட்டேங்கிறான், கேட்க மாட்டேங்கிறான், பேச மாட்டேங்கிறான் ன்னு, அவனை ஆச்சார்யாள் கிட்ட அழைச்சிண்டு வந்தா. “இந்த குழந்தை ஒண்ணும் பேச மாட்டேங்கறான். ப்ரம்மமா இருக்கான்”, அப்படீன்னு சொன்னாளாம். அப்போ ஆச்சார்யாள் அவனை ஏறெடுத்துப் பார்த்த உடனே, “ஆமா இவன் ப்ரம்மஞானி தான்” ன்னு புரிஞ்சுண்டாளாம். “நீ யாருப்பா? எந்த ஊரு?” ன்னு கேட்டாராம் ஆச்சார்யாள். அந்த குழந்தை பத்து ஸ்லோகம், “நான் இந்த புலன்களோ, இந்த உடம்போ கிடையாது, எனக்கு அப்பா, அம்மா, ஜாதி, ஊருன்னு, எதுவும் கிடையாது, நான் நிஜ போத ரூபம். நான் ஸ்வச்சமான ஆத்மா தான்”, அப்படீன்னு அவன் பத்து ஸ்லோகங்கள் சொல்றான். இந்த பெரியவர் கிட்ட கூட்டிண்டு வந்தவுடனே, ஏதோ குழந்தை பேசறான், அப்படீன்னு அப்பா, அம்மா ஆசையா ஆத்துக்கு கூட்டிண்டு போனாளாம். அங்க போனா திரும்பவும் பிரம்மமா இருக்கான். திரும்பவும் இவர் கிட்ட கூட்டிண்டு வந்தா ரொம்ப ஞானமா பேசறான். திரும்பியும் ஆத்துக்கு கூட்டிண்டு போனா பேசவே இல்லை. சரின்னு அவனை கொண்டு வந்து “இந்த குழந்தை உங்களுக்குத் தான்” னு ஆச்சார்யாள் கிட்ட விட்டுட்டாளாம்.
ஆசார்யாள் அவருக்கு ஹஸ்தாமலகர் என்று தீக்ஷா நாமம் கொடுத்து சன்யாசம் கொடுத்தார். ஆமலகம்-னா நெல்லிக்காய். ஆரஞ்சுப்பழம் மாதிரி பெரிய பழத்தை உள்ளங்கையில வச்சா, அது கையை அழுத்தும். அதனால அந்த பழத்துல ஓரளவு தான் தெரியும். 30% கைக்குள்ள மறைஞ்சுடும். பாக்கி 70% தான் தெரியும். இந்த நெல்லிக்கனியை கையில் வச்சா முழுக்க 100% வெளியில தெரியும். அதனால உள்ளங்கை நெல்லிக்கனி போலன்னு சொல்வா. தெளிவா தெரியறது. அதனால இந்த குழந்தைக்கு ஞானம் ரொம்ப தெளிவா இருக்கு, அப்படீங்கிறதை வச்சிண்டு, ஹஸ்தாமலகம்-னு ஹஸ்தாமலக ஆச்சார்யாள்-னு அவருக்கு பேர் கொடுத்தார்.
அந்த ஹஸ்தாமலகாச்சார்யாளைப் பெரியவா தெய்வத்தின் குரல்ல சொல்ல வரும் போது, நம்ம சேஷாத்திரி ஸ்வாமிகள் மாதிரி-னு சொல்றார். அப்படி சேஷாத்திரி ஸ்வாமிகள் கிட்ட பெரியவாளுக்கு பக்தி. அதாவது ப்ரம்மம் மாதிரி இருப்பார். யாராவது பக்கத்துல வந்தா கூட, கல்லை தூக்கி போடுவார். ஆனா அது நூறு மடங்கு அனுக்கிரஹமா இருக்கும். அப்படி இந்த ஹஸ்தாமலகர் ப்ரம்ம ஞானியா இருந்தார். அவர் மௌனமாவே இருந்தார். இந்த ஆச்சார்யாள் கூட அப்படி தான்னு சொல்லியிருக்கார்.
அப்பறம் தோடகாச்சார்யாள், அவருக்கு ஆநந்தகிரின்னு பேரு. காசியில் ஆசார்யாளோட ஆறாயிரம் சிஷ்யர்கள் இருந்தா. அவர் எல்லாருக்கும் பாடம் எடுப்பார். இந்த தோடகர், ஆசார்யாளுக்கு கைங்கர்யம் பண்றதுல ரொம்ப உத்ஸாகத்தோட இருந்தார். அவரோட துணியை தோய்ச்சு போடறது, அவருக்கு என்ன வேணும்னு பார்த்து பார்த்து பண்ணுவாராம். படிப்பு போறாது. ஆனா ஆசார்யாளுக்கு இவர் கிட்ட தனிப் ப்ரியம். ஒரு நாள், த்யான ஸ்லோகங்கள் சொல்லிட்டு இவர் பாடத்துக்கு வரணும்னு காத்துண்டு இருந்தாராம்., அப்போ மத்த சிஷ்யா எல்லாம் “அவனுக்கென்ன வந்தா புரியவா போறது? அசடு, மக்கு” அப்படீன்னு சொன்னாளாம். அப்போ ஆசார்யாளுக்கு, “நம்ம கிட்ட வந்து சிஷ்யாளா சேர்ந்தவாளுக்கு, இவன் மக்கு நாம உசத்தி அப்படீன்னு எண்ணம் இருக்கக் கூடாது. இதை மாத்தணும்” னு நினைச்சாரம். அதே நேரத்துல அந்த தோடகர் (ஆனந்தகிரி) மேலேயும் கருணை ஏற்பட்டது. அதனால இங்க இருந்தே அவனுக்கு ஞானத்தை அனுக்கிரஹம் பண்ணிடுறார். ஞானம் பிறக்கும், உண்மை விளங்கும், குரு அனுக்கிரஹம் இருந்தா ஒரு க்ஷணத்துல ஞானம் வந்துடும்ங்கறதுக்கு, ஒரு உதாரணம். அந்த ஆனந்தகிரி பேரானந்தத்துல திளைச்சிண்டு இருக்கார். அவர் அங்கே இருந்து கையைத் தட்டிண்டு, ஒரு அழகான தோடக வ்ருத்தம் ன்னு ஒரு வ்ருத்ததுல ஆச்சார்யாள் மேல பாடிண்டே வரார்.
விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் ||
அப்படீன்னு ஆரம்பிச்சு எட்டு ஸ்லோகங்கள் . இந்த தோடகாஷ்டகம் ரொம்ப அழகா இருக்கும். இன்னொரு நாளைக்கு அது முழுக்க பதம், பதமா நான் அர்த்தம் சொல்றேன். இந்த எட்டும் பாடிட்டு, கடைசி ஸ்லோகம். ‘விதிதா ந மயா விஷதைக கலா’ எங்கு ஒரு படிப்பும் தெளிவா தெரியாது ‘ந ச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரு’. என்கிட்ட ஒரு ரூபா கூட இல்லை, என் கிட்ட ஒரு விதமான செல்வமும் இல்லை. “த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்” ஹே குரோ! உங்களோட கூட பிறந்ததான, இயல்பான கருணையை ஏன் மேல காண்பியுங்கோ. ‘பவ சங்கர தேசிகமே சரணம்’ சங்கர தேசிகர் -னா சங்கர ஆச்சார்யாள். ஆசார்யாளே உங்களுடைய பாதங்களில் நான் சரணாகதி பண்றேன்” அப்படீன்னு வந்து பாதங்கள்-ல விழறார்.
எந்த உபநிஷத் பாஷ்யத்தை ஆச்சார்யாள் சொல்லி கொடுத்துண்டு இருக்காரோ, அந்த ‘மஹிதோபநிஷத் கதிதார்த நிதே’ அந்த உபநிஷத் அர்த்தமே இந்த பெரியவா தானே அப்படீங்கறார் அவர். எந்த உபநிஷத் பாடம் எடுக்கறாரோ அதன் பொருளே இவர்தானே. அப்படீன்னு சொல்லி உயர்ந்த பக்தியும், ஞானமுமா வந்து நமஸ்காரம் பண்றார். அந்த அளவுக்கு தெளிவு. ‘பவ ஏவ பவான் இதி’ நீங்கள் பரமேஸ்வரன் தான் என்று நான் தெரிஞ்சுண்டேன். அவருக்கு ஆனந்தம் தாங்கலை. ‘பவ எவ பவானிதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா’ என் உள்ளம் சந்தோஷத்துல பொங்கறது, அப்படீன்னு ஆனந்தமா பாடிண்டு வந்து நமஸ்காரம் பண்ணுகிறார். அப்ப அவரோட பெருமையை எல்லாரும் புரிஞ்சிக்கிறா. தோடக வருத்தத்துல அவர் இந்த ஸ்லோகங்களை பண்ணினதால, அவரோட இயற்பெயர் மறைஞ்சு, அவருக்கு தோடகாசார்யர்னே பேர் அமைஞ்டுசுடுத்து.
இந்த தோடகாஷ்டகத்தை மஹா பெரியவா கிட்ட யாரவது சொன்னா, பெரியவா அசையாம சிலை போல நிப்பா. அந்த 8 ஸ்லோகங்களையும் முழுக்க சொல்லி நமஸ்காரம் பண்ற வரைக்கும், சின்ன குழந்தையையாக இருந்தாலும் சரி, பண்டிதராக இருந்தாலும் சரி, இந்த தோடகாஷ்டகத்தை சொன்னா பெரியவாளை நம் முன்னே நிறுத்திடலாம். எப்படி இராமாயணத்தை படிச்சா, அங்க ஆஞ்சநேய ஸ்வாமி கேட்டுண்டு இருக்கற மாதிரி, எங்கே இந்த தோடகாஷ்டகத்தை நாம சொன்னாலும் அங்க மஹா பெரியவா இருக்கான்னு அர்த்தம்.
தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamil
நிறைய வாட்டி பாத்திருக்கேன். இந்த தோடகாஷ்டகத்தை சொன்னா பெரியவா அப்படியே சிலையாட்டம் நிப்பா. நடு ரோட்டில ஆனாலும் சரி. அந்த எட்டு நமஸ்காரம் பண்ற வரைக்கும் நிப்பா. பெரியவா in turn தனக்கு பண்ற நமஸ்காரத்தை ஆசார்யாளுக்கு பண்ணிண்டு இருப்பா. அப்படி இந்த ஸ்லோகத்துல பெரியவாளுக்கு இஷ்டம். இந்த தோடகர் ஸ்ருதி ஸார சமுத்திரம்-னு ஒரு புஸ்தகம் எழுதியிருக்கார் அப்படீன்னு சொல்றா பெரியவா.
இதைத் தவிர இன்னும் ரெண்டு சிஷ்யர்களைப் பத்தி பெரியவா பேசி இருக்கா. காஞ்சி மடத்துக்குள்ள ஆதி சங்கரரோட ஆறு சிஷ்யர்கள் இருக்கற மாதிரி ஒரு சன்னதி இருக்கு. இந்த பாக்கி ரெண்டு பேர், சர்வக்ஞாத்ம முனி-ன்னு நேத்திக்கு சொன்னேன். ஆச்சார்யாள் காஞ்சிபுரத்துல சர்வக்ஞ பீடம் ஏறும் போது தாமிரபரணி தீரத்துல இருந்து ஒரு சின்ன பையன் வந்திருக்கான். அவன் நன்னா படிச்சுருக்கான். ஆச்சார்யாளை சில கேள்விகள் கேட்கறான். ஆச்சார்யாள் அதுக்கு பதில் சொல்லிடுறார். அப்பறம் அவன் நமஸ்காரம் பண்ணி “எனக்கு ஸன்யாசம் கொடுக்கணும்” ன உடனே அந்த குழந்தைக்கு சன்யாசம் கொடுத்து, அவர் சர்வக்ஞாத்மமுனி ன்னு அப்படீன்னு அவருக்கு தீக்ஷா நாமம் கொடுகறார்.
இன்னொருத்தர் ப்ருத்வீதரர். இந்த ப்ருத்வீதராச்சார்யாள், ஆசார்யாளுக்கு முன்னாடி இந்த ப்ரம்ம சூத்ரத்துக்கு பாஷ்யம் ஒண்ணு எழுதி இருக்கார். அந்த பாஷ்யங்களை ஆச்சார்யாள் பொடி பொடியாக்கி தான் எழுதின அந்த அத்வைத பரமான பாஷ்யத்தை மலை மேல் விளக்கு போல பிரகாசிக்க பண்ணினார் அப்படீன்னு புஸ்தகங்கள்ல வர்றது. அதனால இந்த ப்ருதிவிதராச்சார்யாள் வேற மதத்துல இருந்து, ஆச்சார்யாள் தர்சனத்துனால, அவருடைய உபதேசத்துனால, அத்வைதத்தை புரிஞ்சிண்டு , பெரியவா கிட்ட சன்யாசம் வாங்கிண்டு இருக்கார்ன்னு தெரியறது.
இந்த ப்ருதிவிதராச்சார்யாள் அதிகம் புஸ்தகம் எழுதினதாகவும் இல்லை. ஆனா தசநாமி அப்படீன்னு பத்து விதமான சன்யாசிகளுக்கும் இந்த ப்ருதிவிதராச்சார்யாள் குரு அப்படீன்னு ஒரு catalog-ல இருக்கு, அப்படீன்னு சொல்றா பெரியவா. இந்த தசநாமி-ங்கறது தீர்த்த, ஆஸ்ரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, ஸாகர, சரஸ்வதி, பாரதி, புரி-அப்படீன்னு பத்து விதமான சன்யாசிகள். அப்ப பெரியவா சொல்றா, “நிறைய ஆண்டி கூட்டமா இருந்ததை, அவா அவாளோட மனப்போக்கை வெச்சுண்டு, அவாளுடைய ஆச்சார்ய பரம்பரையை வெச்சுண்டு பத்து விதமா சன்யாசமா ஒரு ஒழுங்கு படுத்தணும்” னு, ஆச்சார்யாள் ஆசை பட்டிருக்கா. இந்த ப்ருத்விதரர் அவருடைய administrative-capacity-னாலஅதை பண்ணியிருக்கார். இரண்டாயிரத்தி ஐநூறு வருஷம் முன்னாடி பண்ணினது இன்னிக்கு வரைக்கும் இந்த தசநாமி-ன்னு இந்த பத்து விதமான சன்யாசிகள் தான் இந்தியாவுல இருக்கா. ஸ்ருங்கேரில பாரதின்னு இருக்கா. இங்க காஞ்சிபுரத்துல சரஸ்வதினு இருக்கோம். அப்படி ப்ருத்வீதரர் அவ்ளோ பெரிய உபகாரம் பண்ணியிருக்கார்” ன்னு பெரியவா சொல்றா.
தோடகரைப் பத்தி இன்னிக்கு படிச்சு, இந்த தோடகாஷ்டகத்தை எல்லாம் நினைச்சுண்டு இருந்த போது, நம்ம எல்லாருக்கும் வழிகாட்டி தோடகர் தான் அப்படீன்னு தோணித்து. ஆச்சார்யாளை பத்தி பத்து நாளாக பேசிண்டு இருக்கேன். எத்தனையோ ஆசார்யாளோட, விவேக சூடாமணி, அபரோக்ஷானுபூதி அப்படீன்னு ஞான நூல்கள், பாஷ்யங்கள் தவிர அவரே எழுதின நிறைய ஞான நூல்கள் இருக்கு. நிறைய அவரே எழுதின சின்ன சின்ன ஞான ஸ்லோகங்கள் எல்லாம் இருக்கு “கௌபீன வந்த: கலு பாக்யவந்த:” ன்னு முடியும் “சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்” “ததேகோவசிஷ்ட: சிவ: கேவலோஹம்”, இப்படி எல்லாம் ஞான நூல்கள் நிறைய இருக்கு. அதெல்லாம் அதிகம் நான் பேசலையேன்னு நினைச்சுண்டேன்.
ஆனா நமக்கு அனுபவப் படாத ஒண்ணை பத்தி எப்படி பேச முடியும்?அதனால நான் சிவன் சாரோட book ல இந்த ஆத்மாவைப் பத்தியும், ஞானத்தைப் பதியும் சிலது சொல்லியிருக்கார். அதையெல்லாம் இங்கே பகிர்ந்துக்கறேன்.
சிவன் சார் bookல பத்துப் படிகள் சொல்லி இருப்பார். பாபி, பாமரன், விவேகி, சாது, சிறந்த விவேகி, முற்றின விவேகி, தெய்வ சாது, தெய்வ விவேகி, மஹான், துறவி, ஞானி அப்படீன்னு. அதுல அந்த ஞானப் பாதையை சொல்லும் போது
- ஞானம் எய்திட பிரம்மச்சர்ய பக்தியை நினைப்பவன் பாமரன்
- வைதீக ஆசாரத்தில் மட்டும் மனமேற்பவன் பாமரன்
- மேலும் எளியோரை நினைத்து ஆறுதல் ஏற்பவன் பாமரன்
- தன் பிள்ளைகளை கொஞ்சி மகிழ்பவன் பாமரன்
- தான் திருந்தாது நெறிகளை போதிக்கும் படிப்பாளி பாபி
- தனக்குள்ள நீதியை பிறர்க்கு ஒப்பாத ஆணவன் பாமரன்
அப்படீன்னு இந்த பாமரன், பாபியை பார்த்தா எல்லாம் வந்து, என்னை describe பண்ற மாதிரியே இருக்கு. அதுனால நாம பாமரனா இருக்கும் போது ஞான நூல்களைப் பத்தி என்ன பேசறது அப்படீன்னு, அதை பத்தி நான் பேசறதில்லை. ஸார் சொல்றார் –
- ஞானப் பாதைக்கு தூய்மையை கூறுவான் விவேகி.
- அதே பாதைக்கு பகவானின் அருளும் தேவை என்பான் சாது
- ஆசாபாசங்கள் அகல வேண்டும் என்பான் முற்றின விவேகி
- ஐம்புலன்களின் அடக்கத்தையும் புகல்வார் தெய்வ விவேகி
- யாவையும் மாயை என்று உணர வேண்டும் என்பார் தெய்வ சாது
- மானிடர்களிடையே அலுவலை துறந்தவர் மஹான்
- தன்னையும் துறந்தவர் துறவி
- சொற்களால் விளக்க முடியாத நிலை ஞானம்
அப்படின்னு இந்த ஞானப் பாதையை பத்தி சொல்றார்.
இந்த இடத்துல சார் ஒண்ணு warn பண்றார். இந்த காலத்துல ஏதோ ஆத்துல சண்டை போட்டுண்டோ, இல்லை வியாபாரத்துல நஷ்டம் ஆகியோ, ஏதோ ஒண்ணுனால உலக வாழ்க்கையில சிலருக்கு ஒரு வெறுப்பு வர்றது. அது ஒரு momentry renunciation அப்படீங்கிற மாதிரி, ஒரு சொட்டு வைராக்கியம், வந்துட்டு போயிடறது. சில பேருக்கு இன்னும் தீவிரமா வைராக்கியம் வர்றது. அவா எல்லார் கிட்ட இருந்தும் விலகி இருக்கா. இதை வந்து temperory renunciation தற்காலிக வைராக்யம் னு சொல்லலாம். அது வந்து momentary renunciation ஐ விட இன்னும் கொஞ்சம் தீவிரமா ஒரு ஆறு மாசம் ஒரு வருஷம் குடும்பத்துல இருந்தே விலகி போயி தனியா உட்கார்ந்துண்டு இருந்தார்னா அதை temporary renunciation அப்படீன்னு சொல்றார். இதெல்லாம் meaningful renunciation வைராக்கியம் கிடையாது. இப்படி இருக்கிறவாளை கொஞ்ச நாள்ல ஒரு கட்டடத்துல உட்கார வெச்சு, அவாளை சுத்தி சிஷ்ய கோடிகள், சேர்ந்து அப்புறம் அதை ஒரு ஸ்தாபனம் ஆக்கி, அதுக்கு பணம் கேட்கறது, கூட்டம் சேர்க்கறது அப்படீன்னு பண்ணிடுறா. சின்ன குடும்பத்தை விட்டு பெரிய குடும்ப தலைமை வந்துடறது. இது வைராக்யம் கிடையாது. தனித்து இயங்குபவனே வைராக்யன் ஆவான். எவன் பதவி, ஸ்தாபனம், காணிக்கை போன்றவைகளை எல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் ஸந்யாஸி கிடையாது. அப்படீன்னு ஒரு warning பண்றார்.
அதே மாதிரி, “ஆத்மான்னு ஒண்ணு இருக்கு. வாஸ்தவம் தான். நாம ஸ்வப்னத்துல ஏதேதோ பார்க்கறோம். ஸ்வப்னம்னு ஒண்ண வந்து பகவான் கொடுத்திருக்கார். அந்த அனுபவத்தின் மூலமா நமக்கு ஞானிகள் இந்த உலக வாழ்க்கையே ஸ்வப்னமா நினைக்கறா. அவா ஒரு துரீய நிலையில இருக்கா, அப்படீங்கிறது எல்லாம் தெரியறது. ஆனால் நாம் ஆத்ம விஷயங்களை, ரொம்ப சுலபமா நினைச்சுக்க கூடாது. ஆத்மீகம், இதற்கு ஏதாவது பகவத்கீதை, உபநிஷத் எல்லாம் இந்த காலத்து பாமரர்கள் படிக்கறா. படிச்சா குழப்பம் இன்னும் ஜாஸ்தி தான் ஆகும்”, அப்படீங்கறார் அவர்.
பொதுவாக இந்த புஸ்தகங்கள் ல, பகவான சரணடையனும், ஆசாபாசங்களை அகற்றணும், ஐம்புலன்களை அடக்கணும், நான் யார்னு தெரிஞ்சுக்கணும், பிரபஞ்சத்தை மாயைன்னு உணரனும், யோகத்தை ஏற்க வேண்டும், இப்படி எல்லாம் போட்டிருக்கு. உடனே இவா அந்த யோகம்ங்கறதை எடுத்துக்கறா. சரின்னு போயி குண்டலினி யோகம் claas ல சேர்ந்துக்கறா.அந்த குண்டலினி யோக class ல இவாளை வந்து தடவி, உங்களுடைய ஆக்ஞா சக்கரத்தை நாங்க எழுப்பி விட்டாச்சு, அப்படீன்னு அவா சொல்றா. ஆனா குண்டலினி யோகம் தெரிஞ்சவா ஒரு க்ஷணத்துல இங்க காஞ்சிபுரத்துல இருப்பா. அதே க்ஷணத்துல சிகாகோ ல இருப்பா. இவாளால தரையில இருந்து ஒரு அங்குலம் கூட மேல ஏற முடியாது. ஒரு விதமான உடம்பு வியாதியோ, கஷ்டங்களைக் கூட போக்கிக்க முடியாது.
ஸ்வாசபந்தனம் எல்லாம் ரொம்ப தீவிரமா பண்ணினா, முரட்டுத்தனமா பண்ணினா மூளைக் கோளாறு, முடக்குவாதம் எல்லாம் வந்துடும். சாதாரண சில ஆசனங்கள் நல்ல ஒரு teacher ஐ வெச்சுண்டு கத்துண்டா, சில உடம்பு கோளாறுகள் இல்லாம இருக்கலாம். அது தான் தெரிஞ்சுக்கலாமே தவிர இதுக்கு மேல ஹட யோகங்களோ, குண்டலினி யோகங்களோ இந்த காலத்துல attempt பண்ணக் கூடாது.
பொதுவாக வேதாந்த நூல்கள், இந்த யோகசூத்திரங்கள் இதெல்லாம் பாமரர்களுக்காக அல்ல. சிறந்த விவேகிகள், முற்றின விவேகிகளாக உயர்வதற்கு, சித்த வளர்ச்சியை கொடுக்கக் கூடியது. ஸன்யாசத்தில் விருப்பமுள்ளவர்கள் பாசங்களை துறக்க, அதுக்காக அருளப்பட்டவை இந்த புஸ்தகங்கள். இதெல்லாம் படிச்சா அதிலிருந்து நமக்கு ஞானம் வராது, அப்படீன்னு சொல்றார்.
இந்த வேதாந்தத்தை வாயளவுக்கு பேசிண்டு தங்களை யோகி போல சொல்லிண்டு, பணம், கூட்டம் சேர்க்கறது கடுமையான பாபம். நாம் நல்லவாளா இருக்க முயற்சி பண்ணனும். சத்தியம், தர்மம் இது தான் நாம பார்த்துண்டு போணுமே தவிர நேர்மையை ஒதுக்கி பக்தியில மூழ்கினா கூட பாபம்ங்கிறார்.
இவர் சொல்ற இந்த danger எல்லாம் பக்தி மார்க்கத்துலயும் இருக்கு. பக்தியிலயும் நாம பணம், கூட்டம் சேர்த்தா, நம்மள யாராவது கௌரவப்படுத்தணும், ஒரு பெரியவனா மதிக்கணும் அப்படீங்கிறது எல்லாம் தப்பு. நான் மஹா பெரியவா சிஷ்யன், மஹா பெரியவா பக்தன், அப்படீன்னு சொல்லியே ஒரு cult மாதிரி தன்னை தனியா ஒரு பெரியவனா நினைச்சுக்கறா. அதெல்லாம் danger. க்யாதிலாப பூஜையில இருந்து மனசை விலக்கி, இதுல வந்து ஆதி சங்கரருடைய இன்னொரு ஸ்லோகம். அம்பாள் பரமாக இருக்கு
சரீரேதி கஷ்டே ரிபௌ புத்ர வர்கே
ஸதா பீதி மூலே கலத்ரே தநே வா |
ந கஸ்சித் விரஜ்யத்யஹோ தேவி சித்ரம்
வினா த்வத் கடாக்ஷம் கதம் தத்வபோத: ||
அப்படீன்னு ஒரு ஸ்லோகம். “சரீரே, அதிகஷ்டே”, உடம்புல பல வியாதிகள். “ரிபௌ புத்ர வர்கே” பிள்ளைகளே எதிரிகளா இருக்கா.எப்படா ஆள் close ஆவான், நாம பணத்தை எடுத்துக்கலாம் ன்னு நினைக்கறா. “ஸதா பீதி மூலே கலத்ரே தநே வா” கையிலிருக்கிற பணம், மனைவி குறித்து பல விதமான பயங்கள். இப்படி இருந்தாலும் “ந கஸ்சித் விரஜ்யதி”. யாருக்குமே வைராக்கியம் வரது இல்ல. “அஹோ தேவி சித்ரம்” என்ன ஆச்சர்யம்! அப்படீங்கறார். ஆனால் “வினா த்வத் கடாக்ஷம் கதம் தத்வபோத:” உன்னுடைய கடாக்ஷம் இல்லைனா எப்படி போதம், ஞானம் வரமுடியும்! அப்படீன்னு சொல்றார்.
அதனால அம்பாளுடைய அனுக்கிரகம் இருந்தா தான் ஞானம் வரும். அதனால பக்தி மார்க்கம் தான் எனக்கு ஸ்வாமிகள் சொல்லி இருக்கார். humble ஆ இருந்துக்கோ, சார் book ஐ படிச்சுக்கோ ஸ்தோத்ர பாராயணம் பண்ணு, அப்படீன்னு சொல்லி கொடுத்ததுனால நான் அதைத் தான் ஏதோ முயற்சி பண்றேன். அதுக்கு மேல ஞான நூல்கள் எல்லாம் நான் ஆராய்ச்சி பண்றதில்லை. அதனால தான் அதையெல்லாம் எடுத்து அவ்வளோ பேசல. இதுல பக்தி மார்க்கதுல ஒரு மூகபஞ்சஸதி ஸ்லோகம் ஞாபகம் வரது.
जगन्नेदं नेदं परमिति परित्यज्य यतिभिः
कुशाग्रीयस्वान्तैः कुशलधिषणैः शास्त्रसरणौ ।
गवेष्यं कामाक्षि ध्रुवमकृतकानां गिरिसुते
गिरामैदम्पर्यं तव चरणपद्मं विजयते ॥
ஜகன்னேதம் நேதம் பரமிதி பரித்யஜ்ய யதிபி:
குசாக்ரீயஸ்வான்தை: குசலதிஷணை: சாஸ்த்ரஸரணௌ |
கவேஷ்யம் காமாக்ஷி த்ருவமக்ருதகானாம் கிரிஸுதே
கிராமைதம்பர்யம் தவ சரணபத்மம் விஜயதே ||
அப்படீன்னு “இந்த உலகம் மாயை அப்படீன்னு அதை விலக்கி, ரொம்ப கூர்மையான புத்தியோட சாஸ்த்ரத்தை ஆராய்ச்சி பண்ணி, அவா சன்யாசிகள் என்ன கண்டு பிடிச்சான்னா, அம்மா உன்னோட பாதத்தை தான் தெரிஞ்சுண்டா” அப்படீங்கறார்.
அப்படி பக்தியினால தோடகருக்கு அனுக்கிரகம் கிடைச்ச மாதிரி நமக்கு மஹா பெரியவாளுடைய பாதம் கிடைக்கும். ஆனா இந்த பக்தி மார்க்கதுலயும் honest ஆ நாம கர்வம் இல்லாம பணிவோட எப்படி தோடகர் இருந்தாரோ, அப்படி நாமும் இருந்துண்டு பகவானுடைய அனுக்கிரகதுக்குப் பாத்திரம் ஆவோம்.
ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு (19 min audio file. Same as the script above)
ஜானகீ காந்த ஸ்மரணம்…ஜய ஜய ராம ராம
5 replies on “ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு”
நான் மஹாபெரியவா சிஷ்யன், மஹாபெரியவா பக்தன், அப்படீன்னு சொல்லியே ஒரு cult மாதிரி தன்னை தனியா ஒரு பெரியவனா நினைச்சுக்கறா. அதெல்லாம் danger. க்யாதிலாப பூஜையில இருந்து மனசை விலக்கி, இதுல வந்து ஆதி சங்கரருடைய இன்னொரு ஸ்லோகம். அம்பாள் பரமாக இருக்கு
100% truth.
ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர
சிறு வயதிலேயே தன்னை உணர்ந்து ஞான நிலையில் ப்ரஹம்மாக இருந்த குழந்தை, ஆசார்யாளின் அனுக்ரஹத்தில் ஹஸ்தாமலகர் என்ற தீக்ஷா நாமம் பெற்று விளங்கினார் என்றும், மஹா பெரியவா ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் இவரைப்போல் ப்ரஹம்ம நிலையில் இருந்ததாக ஒப்பிட்டு கூறுவார் என்பது மிகவும் நன்றாக உள்ளது.
ஆனந்தகிரி என்கிற ஸ்ரீ தோடகாச்சார்யார் நமக்கெல்லாம் அருளிய தோடகஷ்டகம், மஹா பெரியவா தோடகாஷ்டகத்திற்கு மானசீகமாக ஆசார்யாளுக்கு தன்னுடைய நமஸ்காரங்களை அளித்தார் என்பதால் நமக்கு தோடகாஷ்டகத்தின் மேல் மேலும் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது.
ஸர்வாக்ஞமுனி, ப்ருத்வீதரர் ஆகிய மற்ற இரு ஆசார்யாளின் சிஷ்யர்கள் பற்றியும்,
மேலும் ஸ்ரீ சிவன் சார் YPM மூலம் வழங்கிய அறிவுரைகள், பிறகு ஸ்ரீ ஸ்வாமிகள் அறிவுறுத்தல்படி பக்தி மார்க்கத்தில் சஞ்சரிக்கும் தாங்கள், எங்களைப்போல சம்சார ஸாகரத்தில் தவிப்போர்க்கு பக்தியின் விசேஷத்தை போதித்துள்ளீர்.
நன்றி அந்த ஆண்டவனாகிய பெரியவாளுக்கும், தங்களுக்கும்
எளிமையான ஆனா திருடமான பக்தி ஒன்றே சாமான்யனுக்குத் தேவை.
அதற்கு அவர் பாதாரவிந்தங்களை இறுக்கப் பிடித்துக் கொள்ள வேண்டும். தருணம் இதையா உதவி புரிய தருணம் இதையா என்று முருகனிடம் அருணகிரியார் கேட்கிறார். எதற்கு? அவர் சரண கமலாயத்தில் தஞ்சம் புக! அது போல் எளிய பக்தி இருந்தால் ஞானம் தானாகவே வரும்
எல்லாரும் ஞானியாக முடியாது
தோடகாஷ்டகம் சொன்னால் பெரியவா கு தூகலிப்பா ஏன் ஆசார்யாள அனுகிரகத்தாலே தொடகாசார்யாளுக்கு வந்தது முதல் காரணம் , ரெண்டாவது ஆச்சார்யா புகழ் சொல்றது! குரு அனுகிரகத் தோட சாராம்சம்! பெரியவா கடைசி மூச்சு வரை குரு பக்தியே பிரதானமாக வெச்சுண்டு இருந்தா, அப்புறம் அம்பாள் சரணாகதி! ஒரு தடவை 90+ வயசுலே காமாக்ஷி கோவில் பிராகார அங்கப் பிரதக்ஷணம் பண்ணினா, முடிஞ்ச உறனர் அந்த சிவப்பு உட்ம்பிலே இரத்தப் புள்ளிகள். எங்கே வந்து உக்கார்ந்து தெரியுமோ? ஆசார்யாள் சந்நிதியில்! பாலு மாமா வற்புறுத்தி பால் கொடுத்து கொஞ் ரெஸ்ட் எடுத்து கொண்டார்கள். அந்த ஸ்ரமத்தோட தேனம்பாக்கம் புறப்பட்டுப் போய்ட்டா! குரு பக்தி அதுதான் !
ரொம்ப அழகா எளிமையாக கோர்வையாக சொல்லப்பட்டிருக்கிறது சம்பவமெல்லாம் ! ஜய ஜய சங்கரா…..
வம்பராசில என்ற திருப்புகழில் எப்படி உலக பந்தம், வம்பு இவகளிலிருந்து விடுபட்டு சுவாமியின் பொன்னான கழல்களை இறுக்கப் பற்றி சரணாகதி அடைந்தால் பக்தி , ஞானம் கிடைக்கும் தன்னை உணர்ந்து உள்ளுருகி செலுத்தவேண்டும்.என்கிறார் அருணகிரி நாதர். இது பழக்கத்தில் தன்னை மறந்த நிலையில் வரவேண்டும். யாருக்காகவும் செய்யத் தேவையில்லை. இதனை தோடகாசார்யார் மூலமா உணர்த்தரார் ஆச்சாரியார்!
“ஹஸ்தாமலகரிடம் ஆசார்யாள் ‘நீ யார்?’ என்று கேட்டவுடன், ச்லோக ரூபமாக அவர் பதில் சொல்கிறார். அதற்கு ‘ஹஸ்தாமலக ஸ்தோத்ரம்’ என்று பேர். அந்த ச்லோகங்களுக்கு ஆசார்யாளே பாஷ்யம் எழுதினார். ‘ஹஸ்தாமலகீயம்’ என்று பேர்.” என்கிறார் பெரியவா.
தோடகருடைய சரித்திரமும் சிவன் சாருடைய அறிவுரைகளும் மிக அருமை.
“மஹாவிஷ்ணுவுடைய நாலு புஜம் மாதிரி எனக்கு நாலு சிஷ்யர்களை வைத்துக்கொண்டு அவதாரம் பண்ணுவேன்” என்று ஈச்வரனே இவர்களைத் தன் அங்கங்களாகச் சொன்னார். அதனாலே ஆசார்யாள் என்று நினைத்த மாத்திரத்தில் அவருடைய ப்ரதான நான்கு சிஷ்யர்களும் அதில் வந்துவிடுகிறார்கள். அவர்களுடைய சரித்திரங்களையும் கேட்டது மிக ஆனந்தமாக இருந்தது.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏🌸