ஸுப்ரமண்ய புஜங்கம் ஐந்தாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script below)
ஸுப்ரமண்ய புஜங்கதுல நாலு ஸ்லோகம் பார்த்து இருக்கோம். அஞ்சாவது ஸ்லோகம்
यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गास्तथैवापदः सन्निधौ सेविनां मे ।
इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५॥
யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா:
ததைவாபத: ஸந்நிதெள ஸேவினாம் மே |
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் ||
ன்னு ஒரு ஸ்லோகம், ‘அப்தி’-ன்னா கடல், தரங்கங்கள்-ன்னா அலைகள், ‘யதா(2)’ எப்படி, ‘அப்தேஸ்தரங்கா’ கடலின் அலைகள், ‘துங்காஹா’ பெரிய அலைகள், பெரிய அலைகள் திருச்செந்தூர்-ல கடற்கரைக்கு வந்த உடனே, ‘லயம் யாந்தி’ அலைகள் எல்லாம் அடங்கி, கரையில ஒதுங்கிடறது இல்லையா? எப்படி அந்த மாதிரி அலைகள் லயம் அடைகிறதோ, ‘ததை(2)வ’ அப்படியே, என்னுடைய தரிசனத்தை செய்யும் ஜனங்களுக்கு, ‘ஆபாதஹ’ எல்லா விதமான ஆபத்துகளும், ‘ஸந்நிதெள’ என்னுடைய சன்னிதியில் ‘லயம் யாந்தி’ லயத்தை அடைந்து விடும் ‘இதி’ என்று ‘ஊர்மிபங்திஹி’ அலைகளை, கடற்கரையிலே வரிசையா அலைகள் வந்து மோதி கொண்டே இருக்கிறது. அந்த அலைகளை ‘தர்சயந்தம்’ காண்பிச்சிண்டு இந்த ஸுப்ரமண்ய ஸ்வாமி கடற்கரையில இருக்கார். ஏன் கடற்கரையில இருக்கார் அப்படீங்கிறதுக்கு நேற்று ஒரு காரணத்தை சொன்னார் ஆதி ஆசார்யாள். இன்னிக்கு ஒரு காரணம் சொல்றார், நேத்து சொன்னது ‘பவாம் போதி’ சம்சார கடலையே நான் தாண்ட வைத்து விடுவேன், முக்தி அளிப்பேன், என்று கடற்கரையிலே இருந்ததுண்டு சூசகமா சொல்லிண்டு இருக்கார், அப்படீன்னு சொன்ன மாதிரி, இன்னிக்கு கடல் அலைகளை காண்பிச்சு, எவ்வளோ பெரிய அலையா இருந்தாலும், இந்த கரையில வந்த உடனே ‘லயம் யாந்தி’ இல்லாம போயிடறது. அப்படி என்னுடைய பக்தர்கள், என்னை வந்து சேவிப்பவர்களுடைய, ஆபத்துகள் எல்லாமே லயம் அடைந்துவிடும் என்பதை காண்பிச்சுக் கொண்டு ப்ரஸித்தமாக விளங்கும் ‘தம் குஹம்’ முருகனுக்கு குஹப்பெருமான்-னு ஒரு பேரு, அந்த குஹனை ‘ஸதா’ இப்பொழுதும், ‘ஹருத்ஸரோஜே’ என் ஹ்ருதய தாமரையில், ‘பாவயே’ த்யானம் செய்கிறேன்”, ன்னு இந்த ஸ்லோகம்.
ஆபத்துக்கள்ன்னு சொல்லும் போது, மூணு விதமான ஆபத்துகள், ஆத்யாத்மீகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம். ‘ஆதி(4)’ ன்னா, மனோ வியாதின்னு அர்த்தம், அதுனால வர உடம்பு வியாதி. வியாதிகளுக்கு காரணம், ஆயுர்வேதத்துல மூன்று விதமா சொல்றா. ‘ஆத்மீகம்’ நம்மளே உண்டு பண்ணிக்கறது. கண்டதை திங்கறதுனாலயோ, இல்ல மனச போட்டு குழப்பிண்டு, பலவிதமான குருட்டு யோஜனையாலயோ, உடம்பு வியாதி வர வைச்சிக்கிறோம், மனக் கவலைகளை ஏற்படுத்திக்கறோம். வேற வெளியில இருந்துன்னு இல்லாமல், நம்மளே நமக்கு கொடுத்திக்கறதுக்கு ‘ஆத்யாத்மீகம்’-ன்னு பேரு. ‘ஆதிதைவிகம்’ அப்படீன்னா இந்த பூர்வ வினைகள்னால, அது பலவிதமாக வரது. fate அப்படீன்னு சொல்ற மாதிரி, கிரஹங்கள் மூலமாக, பகவான் நமக்கு கொடுக்கக்கூடிய வினைப் பயன்கள், அதுனால வரக்கூடிய கஷ்டங்கள். ‘ஆதிபௌதிகம்’ இந்த பஞ்ச பூதங்கள் மூலமாக வரது. திடீர்னு வெயில் ஜாஸ்தியாறது, திடீர்னு குளிர் ஜாஸ்தியாறது, அது மூலமா வரக் கூடிய கஷ்டங்கள், வ்யாதிகள். இந்த மூணு விதமான ஆபத்துகளும், முருகப் பெருமானை தரிசனம் பண்ணினால் வேரோடு நசிச்சுப் போயிடும், அப்படீன்னு இந்த ஸ்லோகத்துல சொல்றார்.
போன ஸ்லோகத்துல முருகனுடைய தர்சனத்துனால முக்தி கிடைக்கும்னு சொன்னார். இந்த ஸ்லோகத்துல முருகனுடைய தர்சனத்துனால உடல், மனோ வ்யாதிகள் எல்லாமே போயிடும்ன்னு சொல்றார்.
இந்த ஸ்லோகத்தை சொல்லும் போது, பகவானை தர்சனம் பண்ணி, ஜீவன் முக்தனாக ஆன பின்ன, என்ன கஷ்டம்? அப்படீன்னு தோணும். அப்படி ஜீவன்முக்தி அடைந்த பின்னையும், மஹான்கள் கொஞ்ச காலம் பாக்கி பூமியில இருக்கா இல்லையா, அதை ப்ராரப்த கர்மான்னு சொல்றா. அந்த ப்ராரப்த காலத்தை, கர்மாவை அனுபவிச்சு தீர்க்கக்கூடிய அந்த காலத்தில், அவா ஞானத்துனால அவா, அவா பூர்வ கர்மாவை எல்லாத்தையும் எரிச்சுண்டுட்டா, மிஞ்சி இருக்கிற ஒரு சொட்டு, அதை இந்த ஜென்மாவுல அனுபவிச்சு தீர்க்கறா. ஆகாமி, சஞ்சிதம் எல்லாத்தையும் எரிச்சுண்டுட்டா, ப்ராரப்தம் அப்படீன்னு பலன் கொடுக்க ஆரம்பித்து விட்ட அந்த கர்மா மட்டும் பாக்கி இருக்கு, அதை அனுபவிக்கிறா. அந்த நேரத்தில அவாளுக்கு கர்ம பந்தம் ஒண்ணும் கிடையாது, அவா பண்ண கூடிய பாப புண்யங்கள் அவாளை ஒட்டாது. அவாளை போய் நமஸ்காரம் பண்ணினா அவாளோட புண்யம் கிடைக்கும், அவாளை தூஷணை பண்றவாளுக்கு அவாளோட பாபம் போகும் அப்படீன்னு இருக்கு. அந்த வேளையில மஹான்கள் பாபமே பண்ண மாட்டா, புண்யம் தான் பண்ணி இருப்பா. அவாளை நமஸ்காரம் பண்ணினா நமக்கு அந்த புண்யம் கிடைக்கும்.
அவாளுக்கு என்ன கஷ்டம், என்ன ஆபத்து? போன ஸ்லோகத்துல முருக தரிசனத்தால் முக்தி கிடைச்சதுன்னு சொன்னவர், அடுத்த ஸ்லோகத்துல மனோ வியாதிகளும் உடம்பு வியாதிகளும் போகும்னு சொல்றாரே ன்னா, மகான்கள், தெய்வத்தோட அனுக்ரஹத்தால ஞானம் அடைஞ்ச பின்ன அவாளே தெய்வமாக ஆகிடறா. தெய்வத்தோட ஒரு அபாரமான, ஆச்சர்யமான குணம் கருணை. அந்த கருணையினால் மகான்கள் தங்களுடைய சிஷ்யர்களுக்கு, பக்தர்களுக்கு வரக்கூடிய உடல் வியாதி மனோ வியாதிகளை போக்கறா. அந்த பிராரப்தத்தை அவா ரெண்டு விதமாக கழிக்கறா. பகவானுடைய கதைகளை பேசிண்டு, கேட்டுண்டு, பக்தி பண்ணிண்டு கழிக்கறா. அதை தவிர, வந்து நமஸ்காரம் பண்றவா, அதாவது கஷ்டம் னு சொன்னா, அந்த கஷ்டத்தை கேட்டு அவாளுக்கு ஆறுதல் சொல்றது, இந்த ரெண்டுமே அவா equally important தெய்வ காரியமாக நினைச்சு பண்றா. இதை நான் என்னுடைய வாழ்க்கையில் நேரே ஸ்வாமிகள் கிட்ட அனுபவிச்சு இருக்கேன். மஹா பெரியவாளும் அதைத் தான் பண்ணிண்டு இருந்தா.
ஸ்வாமிகள் 75 வருஷங்கள் ஜீவியவந்தராக இருந்தார். கடைசி வருஷம் அவர் சித்தி அடையறதுக்கு ஒரு மூணு மாசம் முன்னாடி ஒரு நாள் சொன்னார் ‘கார்த்திகை இருபத்தி எட்டாம் தேதி நாராயணீயம் day னு சொல்றா. அந்த நாராயணீயத்துல நூறு தசகங்கள். கார்த்திகை இருபத்தி எட்டாம் தேதி அவர் நூறாவது தசகத்தை எழுதி முடிச்சவுடன் நாராயண பட்டத்திரிக்கு ஸ்ரீ குருவாயூரப்பன் தரிசனம் கிடைச்சது, அவருடைய வியாதிகள் எல்லாம் போச்சு, ன்னு சொல்லுவா. அதுனால, அதுக்கு முன்னாடி நூறு நாட்கள் எண்ணின்டு, இன்னிலேர்ந்து ஆரம்பிச்சு, தினமும் ஒரு தசகம் வீதமாக ஒரு ஆவர்த்தி பண்றது வழக்கம். நான் இன்னிக்கு ஆரம்பிச்சு இருக்கேன்’ ன்னு ஸ்வாமிகள் சொன்னார். அதுலேர்ந்து நூறாவது நாள் முடிஞ்ச பின்ன, ஒரு இருபது நாட்களில் ஸ்வாமிகள் coma ல போயிட்டார். அப்பறம் சித்தி ஆகி விட்டார். என்னோட நம்பிக்கை என்னவென்றால், ஸ்வாமிகள் ‘எனக்கு எப்ப கிருஷ்ண தரிசனம் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்தார். அவர் அந்த நூறு தசகங்களை படிச்சு முடிச்ச போது அவருக்கும் குருவாயூரப்பனுடைய தரிசனம் கிடைச்சு, பகவானோடு இரண்டறக் கலந்து ஜீவன் முக்தராக ஆயிட்டார். அதுக்கப்பறம் இந்த உடம்பை வெச்சுக்கறதுல ஆர்வம் போயிடுத்து. அதுனால சித்தி ஆகி விட்டார், அப்படின்னு நான் நினைப்பேன்.
அப்படி ஜீவன் முக்தராக அவர் இருந்த அந்த காலத்தில், அவருடைய வாழ்க்கையின் கடைசீ இருபது நாட்களில், எனக்கு குழந்தை பிறந்து இருந்தான். அந்த குழந்தைக்கு ரகுராமன் னு பேர் வெச்சார். ஏன் ரகுராமன் னு பேர் வெச்சார் னு தனியாக ஒரு இடத்தில் பேசி இருக்கேன். எங்க அப்பா பேர் சுந்தரம். அப்பா ஆசீர்வாதம் பண்ணி எனக்கு குழந்தை பிறந்ததுனால, ரகு வம்சத்தில் வந்த ராமன் என்பது போல, சுந்தர மாமாவின் பேரன், அந்த நல்ல குணங்களோட அவன் இருக்கட்டும்”, னு சொல்லி ரகுராமன் னு பேர் வெச்சார். அதுக்கப்பறம் அடுத்த பத்து நாட்களில் குழந்தைக்கு, பிறந்த குழந்தைகளுக்கு வரக்கூடிய ஒரு mild jaundice வந்தது. அப்ப நான் ஸ்வாமிகள் கிட்ட போய் சொன்ன போது, விபூதி வெச்சுண்டு, இந்த ஸுப்ரமண்ய புஜங்கத்தை ஜபிச்சு குடுத்தார். அதைக் குழந்தைக்கு இட்டவுடன் அந்த ஜுரம் போய்விட்டது. அப்படி ஜீவன் முக்தர்களாக ஆன பின்னும், ஸுப்ரமண்ய புஜங்கத்தை வியாதிகளையும் மனக் கவலைகளையும் போக்கறதுக்கு சிஷ்யர்களுக்காக உபயோகப் படுத்தினா என்பதை நான் அனுபவித்து சொல்றேன். அதுனால முதல் ஸ்லோகத்துல முருக தரிசனத்துனால முக்தி கிடைக்கும்னு சொல்லிட்டு அதுக்கு அடுத்த ஸ்லோகத்துல, வியாதிகளும் மனக் கவலைகளும் போகும்னு சொல்றாரே என்று கேட்டால், நம்மைப் போன்ற சித்யர்களுக்காக ஆசார்யாள் சொல்லி இருக்கார்னு இன்னிக்கு தோணித்து. இதோட பூர்த்தி பண்ணிக்கறேன்.
यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गास्तथैवापदः सन्निधौ सेविनां मे ।
इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५॥
நாளைக்கு ‘கிரௌ மந்நிவாசே’ னு ஆரம்பிக்கற ஆறாவது ஸ்லோகத்தை பார்ப்போம்.
நம: பார்வதீ பதயே… ஹர ஹர மகாதேவா
2 replies on “ஸுப்ரமண்ய புஜங்கம் – ஐந்தாவது ஸ்லோகம் – முருக தரிசனம் மனக் கவலைகளை போக்கும்”
சரவணபவ சரவணபவ
இந்த கிருத்திகை திருநாளில் ஸ்ரீ முருகப் பெருமானை நினைந்து செய்த விளக்க உரை அருமை.
இப்போது இருக்கும் இந்த வியாதி உடல்/ உயிர்க்கும் ஆபத்து ஏற்படுத்தி அதன் தாக்கம் மனதுக்கும் ஆபத்தான நிலை உருவாக்கியுள்ளது.இந்த சூழ்நிலையில் சுப்ரமணிய புஜங்கம் அவசியம் படிக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த ஆபத்திலிருந்து விடுதலை பெற
அந்த முருகப்பெருமானையும், பரமேஸ்வரனையும் காமாக்ஷியையும்
அண்டி பிரார்த்திப்போம்.
நமக்கு அந்த பகவான் பாதத்தை பற்றிக் கொண்டால் பயமற்ற நிலை கிடைக்கும், நம் அனைவரையும் அம்மையப்பனான பகவான் நம்மை ரக்ஷிப்பார்கள்.
🙏🙏🌼🌼
மிகவும் அழகான ஸ்லோகம். ஸ்வாமிகளின் அனுபவங்கள் மிக அற்புதமாக இருந்தது.
‘என்னை வந்து சேவிப்பவர்களுடைய ஆபத்துகள் எல்லாமே லயம் அடைந்துவிடும்’ என்று ஆசார்யாள் இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.
தீக்ஷிதர் ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே க்ருதியில் “தாப-த்ரய ஹரணநிபுண தத்வோபதேச கர்த்ரே” என்று பாடுகிறார்.
தாபத்ரயம் என்ற மூன்று – ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம், ஆதி தைவிகம். இவை மநுஷ்யரைத் தபிக்க வைக்கின்றன. இவைகளால் விபத்து, வியாதி இத்யாதி ஏற்படலாம். அப்படிப்பட்ட ‘தாபத்ரயங்களைப் போக்குவதில் மிகவும் வல்லமை வாய்ந்த தத்வ உபதேசத்தைச் செய்பவர் ஸுப்ரஹ்மண்யர்’ என்கிறார்.
அவரே குருகுஹனாக நம்முடைய ஹ்ருதய குஹையில் வசிக்கிறார். அவரை தியானம் செய்கிறேன் என்கிறார் ஆசார்யாள்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரோஹரா🙏