ஸுப்ரமண்ய புஜங்கம் ஏழாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script below)
ஸுப்ரமண்ய புஜங்கத்துல இது வரைக்கும் ஆறு ஸ்லோகங்களை பார்த்து இருக்கோம். ஆறாவது ஸ்லோகத்துல,
गिरौ मन्निवासे नरा येऽधिरूढा-
स्तदा पर्वते राजते तेऽधिरूढाः ।
इतीव ब्रुवन्गन्धशैलाधिरूढः
स देवो मुदे मे सदा षण्मुखोऽस्तु ॥
கிரெள மந்நிவாஸே நரா யேதிரூடா:
ததா பர்வதே ராஜதே தேதிரூடா: ||
இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூட:
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து ||
‘மந்நிவாஸே’ என்னுடைய திருச்செந்தூர் க்ஷேத்ரத்துல ‘கந்தசைலாதிரூட:’ கந்தசைலம்-ன்னு இருக்கு. அந்த மலையில் யார் ஏறுகிறார்களோ அவர்கள், கைலாசத்துல ஏறி என்னோடேயே (முருகப் பெருமானோடு) நித்ய வாசம் பண்ணுவார்கள்ன்னு சொல்லுவது போல, இந்த கடற்கரையில், மலைக்கு பக்கத்துல நீங்க வசிக்கிறேள்ன்னு அந்த ஸ்லோகம், இன்னிக்கி ஏழாவது ஸ்லோகம்.
महाम्भोधितीरे महापापचोरे
मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले ।
गुहायां वसन्तं स्वभासा लसन्तं
जनार्तिं हरन्तं श्रयामो गुहं तम् ॥ ७॥
மஹாம்போதிதீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே |
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் ||
ன்னு ஒரு ஸ்லோகம், இதுலேயும் அந்த கந்தசைலத்தை பத்தி வர்றது. ‘ஸுகந்தாக்யசைலே’-னு வர்றது, இதுல ஒவ்வொரு பதத்துக்கும் நான் அர்த்தம் சொல்றேன்.
‘மஹாம்போதி தீரே’ ‘அம்போதின்னா’ -கடல், பெரிய கடலின் கரையில், ‘மஹாபாபசோரே’ மஹாபாபங்கள்னு ஒரு அஞ்சு இருக்கு. அந்த மஹாபாபங்களை திருடிடறார். நம்முடைய பாபங்கள் எப்படி போச்சுன்னு நமக்கே தெரியாத மாதிரி நம்முடைய பாபங்களை எல்லாம் திருடிடறார் முருகப் பெருமான். முதல்ல பதம் பதமாக அர்த்தம் சொல்றேன். ஆனா அதுல சூக்ஷ்மமான ஒரு அர்த்தம் இருக்கு, அதை அடுத்து சொல்றேன். ‘முனீந்த்ரானுகூலே’ முனிவர்களுக்கு அனுகூலமாக இருக்கக் கூடிய, முனிவர்கள் தவம் செய்ய ரொம்ப சௌகர்யமா இருக்கக்கூடிய ‘ஸுகந்தாக்யசைலே’ ஆக்யம்-னா பெயர்ன்னு அர்த்தம். கந்தமாதனம் என்ற பெயர் பெற்ற ஒரு மலையில், நிறைய தபஸ்விகள், முனிவர்கள், எல்லாம் தபஸ் பண்ணிண்டு இருக்கா. அதற்கு அனுகூலமாக்க இருக்கும் அந்த மலையில் ‘குஹாயாம் வஸந்தம்’ ஒரு குஹையில் முருகப் பெருமான் வசிக்கிறார். ‘ஸ்வபாஸா லஸந்தம்’ குஹைன்னா இருட்டா இருக்கும், இந்த குஹை கோடி ஸூர்ய ப்ரகாசமா இருக்கு. ஏன்னா அந்த குஹைக்குள்ள தன்னுடைய ஒளியினாலேயே பிரகாசிக்கக் கூடிய ஸ்வாமி குஹன். அவர் பேரும் குஹன். குஹைக்குள்ள வசிக்கிற அந்த குஹனை ‘ஜனார்திம் ஹரந்தம்’ ஜனங்களுடைய ‘ஆர்த்தி’ன்னா கஷ்டம், கஷ்டங்களை போக்கும், ‘தம் குஹம்’ அந்த முருகப் பெருமானை ‘ஸ்ராயமஹ’ நாங்கள் ஆஸ்ரயித்திருக்கிறோம்’ ன்னு இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.
இங்கே தேதியூர் சாஸ்திரிகள் அர்த்தம் சொல்லும் போது ஒண்ணு சொல்றார். “இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படும் விஷயமோ அதி ரஹஸ்யமானது”ன்னு சொல்றார். ஆனா அது என்னன்னு அவர் சொல்லலை. குஹைக்குள்ள இருக்க கூடிய முருகப் பெருமானை போய் தர்சனம் பண்ணிணால், அவாளுடைய மஹா பாபங்களும் போயிடும். ‘ஆர்த்தி’ எல்லாவிதமான கஷ்டங்களும் விலகிடும்ன்னு சொல்லியிருக்கார். இதுல இருக்க கூடிய விஷயம் அதி ரஹஸ்யமானதுன்னு சொல்றார்.
எனக்கு என்னனு தோண்றதுன்னா, இந்த ‘குஹாயம் வஸந்தம்’ எங்கறது, நம்முடைய ஹ்ருதய குஹைக்குள்ள பகவான் வசிக்கிறார். ‘ஸ்வபாஸா லஸந்தம்’ மத்த வெளிச்சத்துக்கு எல்லாம், சந்திரனுக்கு ஸூர்யன் source, ஸூர்யனுக்கு அம்பாள் source-ன்னு, அது மாதிரி எல்லா வெளிச்சங்களும் வேற ஒரு source-லேர்ந்து வர light. ஆனா ஆத்மாங்கிறது தானே ஒளி விடுகிறது. அப்படி’ ஹ்ருதய குஹையில் வசிக்கும், ஆத்ம ஸ்வரூபமாக விளங்குபவர் முருகப் பெருமான். அந்த முருகப் பெருமானை தர்சனம் செய்தவர்கள்’, மஹாம்போதி தீரே’ ன்னு இருக்கு. அதாவது ஸம்ஸார கடலில் இருந்து கரை ஏறினா தான் ஞானத்தை அடைய முடியும். ‘முனீந்த்ரானுகூலே’ இந்த ஞானம்ங்கறது முனிவர்களுக்குத் தான், அதாவது மௌனமாக இருப்பவர்களுக்கு முனிவர்கள்-ன்னு பேரு. ரொம்ப உலக விஷயங்கள்-ல பற்று வைக்காம, அதிலேர்ந்து விலகி வந்த பின்ன தான் இந்த ஞான மார்கத்துல போய், மதி, சித்தம் எல்லாம் தெளிவடைஞ்சு அந்த ஒளியை பார்க்க முடியும். அப்பேற்பட்ட அந்த ஒளி தர்சனம் கிடைச்சா தான், பண்ண கர்மாக்கள் எல்லாம் நசிச்சு போயிடும். ‘மஹாபாபசோரே’ முந்தைய பாபமே, இப்போ பாபத்தை தூண்டறது, அப்படி திரும்ப திரும்ப இந்த கர்ம சூழல்ல இருக்கோம். அதெல்லாம் தீடீர்னு எப்படி போச்சு. இவ்வளவு கோடிக் கணக்கான ஜென்மத்துல பண்ண பாபங்களும் பகவான் போக்கிட்டாரே-ன்னு ஞானிகள் வியக்கிறார்கள்-னு ஒரு ஸ்லோகம் இருக்கு. அந்த மாதிரி பாபங்களையெல்லாம் திருடிடறார் ‘மஹாபாபசோரே’-னு அந்த முருகப் பெருமான் உள்ளத்துல ஒளியாக இருக்கார். அதை யார் தர்சனம் பன்றாளோ அவாளுக்கு பாபங்கள் போயிடும். அந்த முருகப்பெருமானை ‘தம் ஷ்ரயாமஹ’ ஆஸ்ரயிக்கிறோம்.
இந்த இடத்துல ஹ்ருதய குஹையில வசிக்கும் ஒளின்னு வரும்போது, ரமண பகவான் கிட்ட ஒருத்தர், “எனக்கு இந்த புஸ்தகத்துல கையெழுத்து போட்டு கொடுங்கோ” ன்னு கேட்டாராம். அப்போ ரமணர் பதில் சொன்னாராம்.
एकमक्षरं हृदि निरन्तरम् | भासते स्वयं लिख्यते कथम् ||
‘ஏகம் அக்ஷரம் ஹ்ருதி நிரந்தரம் பாஸதே ஸ்வயம் லிக்யதே கதம்?’ ன்னு ஒரு ஸ்லோகம் சொல்லியிருக்கார். அவர் கேட்கறது கையெழுத்து. அதனால் அந்த அக்ஷரம்ங்கிற வார்த்தையை உபயோகப்படுத்தறார். ஆனா ‘ஏகம் அக்ஷரம்’ ஒரு எழுத்துன்னு ஒரு அர்த்தம். இன்னொரு அர்த்தம் அழிவற்ற மாறாத ஒரு பொருள். ‘ஹ்ருதி’ என்னுடைய ஹ்ருதய குஹையில் ‘நிரந்தரம்’ இடையறாது ‘பாஸதே’ பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ‘ஸ்வயம்’ தானே பிரகாசிக்கிறது. அதுக்கு self-தான் source. self- sourced ம்பா ஆனா self தான் source அந்த ஒளிக்கு ஆதாரம். அப்படி தானாக ஒளி விட்டுக் கொண்டிருக்கும் அதை, பேச முடியமா, எழுத முடியுமான்னு, தொனிக்கும் படி ‘லிக்யதே கதம்?’ அதை எப்படி எழுத முடியும்ன்னு கேட்கறார். அப்போ அந்த பக்தர் இதையே எழுதி கொடுங்கோ-ன்னு சொன்னாராம். அதை எழுதி கொடுத்தார்ன்னு இருக்கு. நாம பக்தர்கள் இப்படி தான் இருப்போம்னு சிரிப்பா தோணித்து எனக்கு. ஆனா அவர் எழுதிண்டதுனால தான் நமக்கு இந்த அருமையான வரி கிடைச்சிருக்கு. ‘ஏகம் அக்ஷரம் ஹ்ருதி நிரந்தரம் பாஸதே ஸ்வயம் லிக்யதே கதம்’.
ரமணரை நினைக்கும் போது, ரமண பகவான் முதல்ல அவருக்கு சமாதி அனுபவம் கூடின உடனேயே வீட்டை விட்டுட்டு கிளம்பி திருவண்ணாமலைக்கு வந்துடறார். திருவண்ணாமலையில கோயிலுக்குள்ள பாதாள லிங்க சன்னிதி ஒண்ணு இருக்கு. அதுக்குள்ள இருக்கார். சில பேர் சிரமப்படுத்தறா. சில பசங்க அவர் மேலே கல்லெல்லாம் தூக்கி போடறா. அப்போ ஷேஷாத்ரி ஸ்வாமிகள், தன்னுடைய ஒரு பக்தரை கூப்பிட்டு “என் குழந்தை அங்க இருக்கான் பாரு. அவனை காப்பாத்து”ன்னு சொல்றார். அப்பறம் ரமணரை கூட்டிண்டு போய் மலையில ஒரு இடத்துல வெச்சு காப்பாத்தறா. அந்த சேஷாத்ரி ஸ்வாமிகளை காமாக்ஷின்னும், ரமணரை ஸுப்ரமண்ய ஸ்வாமின்னும் சில பக்தர்கள் புரிஞ்சிண்டு சொல்லியிருக்கா. இந்த இரண்டு மஹான்களும் பேசாம இருந்து அதை ஆமோதிச்சு இருக்கா. அப்படி இந்த ஸுப்ரமண்ய புஜங்கம் சொல்லும் போது ரமணரை த்யானம் பண்றது ரொம்ப பொருத்தமா இருக்கு.
அப்படி ஹ்ருதய குஹையில் ஒளி விடும் முருகப் பெருமான் இந்த ஸுப்ரமண்ய வடிவம் எடுத்துண்டு கையில வேலும், கொடியும் வச்சுண்டு ‘ஜனார்திம் ஹரந்தம்’ வந்து நமஸ்காரம் பண்றவா, கொடுத்த நைவேத்தியத்தையும் , பலியையும் வாங்கிண்டு, அவாளோட கஷ்டத்தை போக்கற அந்த ஸகுண வடிவமாகவும் விளங்குகிறார் ன்னு ஆதிசங்கரர் பார்த்து, அதை இந்த ஸ்லோகத்துல பேசறார்.
महाम्भोधितीरे महापापचोरे
मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले ।
गुहायां वसन्तं स्वभासा लसन्तं
जनार्तिं हरन्तं श्रयामो गुहं तम् ॥ ७॥
மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே |
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் ||
நேத்திக்கு தேதியூர் சாஸ்திரிகள் ‘சரவணபவ’ன்னு இந்த மஹா மந்த்ரத்தை புஸ்தகத்துல எழுதியிருக்கார்-ன்னு நான் சொன்னேன். அப்புறம் யோசிச்ச போது தான், இந்த சரவணபவ, ராம இதெல்லாம் நாம மந்த்ரங்கள். மஹா பெரியவா ஒரு சபையில ‘சிவாயநமஹ’, பதினோரு ஆவர்த்தி ஜபம் பண்ணுங்கோ. ஜபம் பண்ணிட்டு, அப்பறம் பத்து நிமிஷம் கழிச்சு போய் சந்த்யாவந்தனம் பண்ணுங்கோன்னு சொல்லியிருக்கார். அப்படி மஹான்கள் நாம மந்த்ரங்களை வெளிப்படுத்தி இருக்கா. ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே எங்கிற மஹா மந்த்ரத்தை சைதன்ய மஹாப்ரபு தேசம் முழுக்க போய் பஜனை பண்ணினார். ‘குரு மூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ ன்னு ‘என் குரு வடிவில், மஹாபெரியவா வடிவில், நான் காமாக்ஷியை தரிசித்து நமஸ்காரம் பண்றேன்’ என்று மூக பஞ்ச சதியில் வரும் இந்த வரியை ஸ்வாமிகள் எல்லோருக்கும் சொல்வார் நாலு தடவை சொல்வார். ஏன்னா சன்யாசிகளுக்கு நாலு நமஸ்காரம்ன்னு நாலு தடவை இதைச் சொல்லி நமஸ்காரம் பண்ணுவார்.
ஒரு தடவை ஸ்வாமிகளோட பூர்வாஸ்ரம பிள்ளை ராமநாதன்-ங்கிறவர் பெரியவா கிட்ட இந்த வரியை ஒரு புஸ்தகத்துல எழுதிண்டு போயிருந்தார். பெரியவா என்னதுன்னு வாங்கி, பெரியவா ரெண்டு வாட்டி அதை சொன்னாளாம். ‘குரு மூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ ‘குரு மூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி’ ன்னு சொல்லியிருக்கா. ரெண்டு வாட்டி சொன்னான்னு ஆத்துல வந்து அவர்சொன்ன போது, ஸ்வாமிகள் “உனக்கு ஒரு தடவை, எனக்கு ஒரு தடவை”-னு சொன்னார். “ஒரு வாட்டி சொன்னதை உனக்குன்னு வச்சுக்கோ, ஒரு வாட்டி சொன்னதை எனக்குன்னு வச்சுக்கறேன்”-னு ஸ்வாமிகள் சொன்னார். இந்த சரவணபவ என்கிறதெல்லாம் நாம மந்த்ரங்கள்ன்னு அப்பறம் கேட்டு தெரிஞ்சுண்டேன்.
“சரவணபவ சிவா ராம கோவிந்த நாராயண மகாதேவா” “शरवणभव शिव राम गोविन्द नारायण महादेव” ன்னு இருபத்தியொரு அக்ஷரங்கள் கொண்ட இந்த நாம மந்த்ரம் மஹா ரோகங்களையும் மஹா பயங்களையும் போக்கும்” ன்னு பெரியவா சொல்லிருக்கா. இதை ஸ்வாமிகள் தன் கிட்ட வந்தவா, உடம்புல வியாதி, ஏதாவது பயங்கள் ன்னு சொன்னா, இந்த ஸ்லோகத்தை எழுதிக் கொடுத்து நிறைய ஜபம் பண்ண சொல்வார். அதை பாத்துருக்கேன்.
போன ஸ்லோகத்துல அந்த ஷடக்ஷரி சரவணபவ ங்கிறதை ஒவ்வொரு அக்ஷரத்துக்கும் விளக்கம் கொடுத்து தேதியூர் சாஸ்த்ரிகள் எழுதியிருக்கார். இந்த ஸ்லோகத்துல ஞான பரமான விஷயம் என்கிறதுனால ஹ்ருதய குஹையில் வசிக்கும் முருகப் பெருமானை அந்த ஒளியை தரிசனம் பண்ணுகிறவர்களுக்கு மஹாபாபங்களும் போயிடும். அதுக்கு முனிவர்களா இருந்து தபஸ் பண்ணனும்ங்கிற விஷயத்தை அவர் விளக்கி எழுதல. இதை பேசலாம், எழுதலாம். ஆனா அது அனுபவம் தானே. கண்டவர் விண்டிலர் என்கிற மாதிரி இதை அவர் சூசகமா சொல்லியிருக்கார் ன்னு தோணித்தது.
வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா
7 replies on “ஸுப்ரமண்ய புஜங்கம் – எழாவது ஸ்லோகம் – ஏகமக்ஷரம் ஹ்ருதி நிரந்தரம் பாஸதே ஸ்வயம் லிக்யதே கதம்”
எதை எடுத்து கொள்வது ? எதை விடுவது?..தாங்கள் குறிப்பிட்டுள்ள மந்திரங்களைத்தான் சொல்கிறேன்…ஒரு சிறு குழந்தை தன் சிறிய கரங்களில் எத்தனை பழங்களை எடுக்க முடியும்?
We also had a similar dilemma in Swamigal sannidhi. எனக்கே நிறைய variety ஆக அந்தந்த சமயத்தில் சொல்லி இருக்கார். அதைத் தவிர மத்தவாளுக்கு சொல்றதைக் கேட்கும் போது அதை பண்ணலாம் னு ஆசை வரும்.
Mind is like this. It wants variety. As long as we do bhajanam for say an hour a day, it is a good beginning. At some point one of the manthrams will hold you tight. Then you know that is the one which will lead you to bhagavaan sannidhi
Namaskaram sir.
Feeling blessed to read subramaniya bhujangam.
I am looking for subramania sahasranama by t.k ramachandra sasthrikal by giri press.
By any chance do you have a copy sir
Thanks
சந்ததமும் 110
பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் – பல்கோடி 111
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாகம்அடல்
பூதமுதீ நீரும் பொருபடையும் – தீது அகலா 112
வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் – அவ்விடத்தில் 113
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் – கச்சைத் 114
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் – விரிகிரணம் 115
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண் 116
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து – பல்விதமாம் 117
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் – ஓசை 118
எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து – ஒழுக்கமுடன் 119
இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் – தம்மைவிடுத்து 120
ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் – சேய 121
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.
🙏🙏🙏🌹
Thank you Sir for the meaning. Blessed to read this today ..Skandha ஷஷ்டி 🙏🙏
சரவண பவ! சரவண பவ! !
இந்த மஹா கந்த சஷ்டி நாளில் மந்திரோபதேசம், கிடைத்தற்கு அரிய பாக்கியம்.
“மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார். ” என்று
குமர குருபரர் எழுதிய நீதி நெறி விளக்க பாடலுக்கு முன்னோடியாக, எங்களுக்கு உள்ளது, உங்களுடைய ஆன்மீக தொண்டு. முதற்கண் அதற்கு ஓர் பெரிய வணக்கம் 🙏.
ஸ்ரீ மஹா பெரியவாளுக்கும், ஸ்ரீ சிவன் ஸாருக்கும், ஸ்ரீ ஸ்வாமிகளுக்கும் கோடான கோடி வந்தனங்கள் 🙏🙏🙏.
இந்த கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தில்
நம்முடைய மஹா பாபங்கள் என்ற அசுரனை இந்த சுப்பிரமணிய சுவாமியின் வேலை கொண்டு அவருடைய அந்த ஒளியைக் கொண்டு சம்ஹாரம் செய்வோம்.
மேலும் மேலும் த்ருடமான பக்தியை அனுக்ரஹிக்க பிரார்த்திப்போம். வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா! 🙏 🙏 🙇 🙇 🌹
மிக அற்புதமான விளக்கம்! எதைச் சொல்வது, எதை விடுவது ?
சுப்ரமண்ய புஜங்கம் மனதில் நிலை பெற்று நிற்கு மாபோல் அறிய விளக்கம் தக்க மேற்கோள்களுடன் !
ஸதா நாம ஜெபம் செய்து மனதில் உணர்ந்து நிலைத்து, ஊன் உருக மெய் சிலிர்க்கச் செய்யும் பஜனை நேரே பகவானிடத்தில் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை !
இது போன்று பிரவசங்கள் கேட்டு , மகிழ்ந்து ஊனும் உடலும் உருகினால் அங்கு பகவான் வருவார் !
மனம் ஒன்றி அவர் தியானத்தில் உருக இது போல் பிரவசனங்கள் கேட்டு மனதில் ஜோதியை உணருமாறு அனுபவிக்க வேண்டும் !
கந்த ஷஷ்டி அன்று இனிதான உரையாற்றிய கணபதிக்கு நன்றிகள் பல !!
ஆசார்யாள் “குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்” என்று பாடுகிறார். முருகப்பெருமான் குஹையில் வசிக்கிறார். குஹை என்றால் இருட்டாக இருக்கும். ஆனால் இந்த குறை ப்ரகாசமாக இருக்கிறது என்கிறார் .
சீர்பாத வகுப்பில், முருகனுடைய பாதங்களை ‘சதகோடி சூரியர்கள்’ என்று உவமித்து, அந்த முருகப் பெருமானுடைய பாதத்தினுடைய ஒளி, யுக முடிவின் இருளையே போக்குகிறது என்று அருணகிரிநாதர் பாடுகிறார்.
தீக்ஷிதர் ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே க்ருதியில், “குருகுஹாய; அஜ்ஞான – த்வாந்த – ஸவித்ரே” என்று பாடுகிறார்.
‘த்வாந்தம்’ – இருட்டு. ஸவித்ரு, ஸவிதா என்றால் ஸூர்யன். இருட்டை இருந்த இடம் தெரியாமல் ஸூர்யன் விரட்டி அழித்து விடுகிற மாதிரி அஜ்ஞான இருட்டை த்வம்ஸம் பண்ணும் ஞான ஸூர்யன். ஸுப்ரஹ்மண்யரான ஞான ஸூர்யன் அஞ்ஞான இருட்டை அழிப்பது மட்டுமில்லை; அஞ்ஞானம் அழிந்த இடத்தில் பூர்ணாநுபவமான ஞான ப்ரகாசத்தை அவர் உண்டாக்குகிறார்.
அந்த குஹனை நாங்கள் ஆச்ரயித்திருக்கிறோம் என்கிறார் ஆசார்யாள்.