ஸுப்ரமண்ய புஜங்கம் எட்டாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script below)
ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு ஏழாவது ஸ்லோகம்
महाम्भोधितीरे महापापचोरे
मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले ।
गुहायां वसन्तं स्वभासा लसन्तं
जनार्तिं हरन्तं श्रयामो गुहं तम् ॥ ७॥
மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே |
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் ||
எங்கிற ஸ்லோகம் பார்த்தோம். இந்த ஸ்லோகத்துல, ஹ்ருதய குஹையில் வசிக்கும், ஆயிரம் சூரியர்களின் ஒளியோடு விளங்கும் முருகப் பெருமானை எவர்கள் தரிசிக்கிறார்களோ, அவர்கள் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபட்டு, பவக் கடலையும் தாண்டுவார்கள். இந்த ஞான மார்க்கம் முனிவர்களுக்கு அனுகூலமான கார்யம். முனிவர்களால் எளிதில் அடையக் கூடிய விஷயம். நாம முருகப்பெருமானை தர்சனம் பண்ணுவோம்னு பார்த்தோம்.
இன்னிக்கி எட்டாவது ஸ்லோகம்
लसत्स्वर्णगेहे नृणां कामदोहे
सुमस्तोमसञ्छन्नमाणिक्यमञ्चे ।
समुद्यत्सहस्रार्कतुल्यप्रकाशं
सदा भावये कार्तिकेयं सुरेशम् ॥ ८ ॥
லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே |
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் ஸுரேசம் ||
அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.
இது ஸுப்ரமண்ய ஸ்வாமியோட பள்ளியறை வர்ணணை. கோவில்களில் எல்லாம் அர்த்த ஜாம பூஜைன்னு பண்ணுவா. ஸ்வாமியையும் அம்பாளையும் சேர்த்து பள்ளியறையில விட்டுட்டு புஷ்பங்கள், பழங்கள், தாம்பூலம் எல்லாம் வச்சு அறையை சாத்திட்டு வருவா. சிவன் கோவில்கள்ல திருவாசகத்திலிருந்து சிவபுராணம் சொல்லிண்டு அம்பாளை சன்னதியிலிருந்து கூட்டிண்டு போய் ஸ்வாமி சன்னிதியில விட்டுட்டு வர்றதுன்னு ஒரு வழக்கம்.
இங்கே ஆசார்யாள் திருச்செந்தூர்ல இருக்கிற முருகப் பெருமானோட பள்ளியறையை வர்ணனை பண்றார். ‘ஸ்வர்ணகேஹே’ தங்க கற்களால கட்டின ஒரு அறை. ஒரு க்ருஹம். ‘லஸத் ஸ்வர்ணகேஹே’, அது ஒளி விடுகிறது. அதுல ‘ஸுமஸ்தோம’ – நல்ல வாசனை பூக்களால் ‘ஸஞ்ச்சன்ன’ – அலங்கரிக்கப்பட்ட ‘மாணிக்ய மஞ்சே’ மாணிக்க கட்டில். அதைச் சுத்தி, தேவலோகத்துல இருந்து வந்த பாரிஜாத மலர்கள் போன்ற ரொம்ப வாசனையோடு கூடிய, அழகான பூக்களைக் கொண்டு அலங்காரம் பண்ணியிருக்கா. அதுல ‘ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்’ ஆயிரம் சூரியர்களுக்கு சமமான ப்ரகாசத்தோடு ‘ஸமுத்யதி’ பகவான் விளங்குகிறார். இந்த பள்ளியறை தர்சனம் நாம பண்ணினோமானால், ‘ந்ருணாம் காமதோஹே’ மனிதர்களுக்கு எல்லா விதமான காமனைகளும் பூர்த்தியாகும். ‘ஸதா பாவயே கார்த்திகேயம் சுரேசம்’ – கார்த்திகை பெண்களால் பாலூட்டி வளர்க்கப்பட்ட அந்த முருகப் பெருமானை ‘ஸுரேஷம்’ தேவர்களுக்கெல்லாம் தலைவனான அந்த ஸுப்ரமண்ய ஸ்வாமியை ‘ஸதா பாவயே’ – நான் எப்போதும் த்யானிக்கிறேன்-ன்னு இந்த ஸ்லோகம்.
நம்முடைய வேத மதத்துல தான் ரொம்ப அழகா இந்த கோவில்கள், வழிபாடுகள் எல்லாம் வச்சிருக்கா. அதுல இந்த அர்த்த ஜாம பூஜைன்னு, அம்பாளை கூட்டிண்டு போய் ஸ்வாமி சன்னிதியில சேர்க்கறதுன்னு ஒரு பூஜை. அருணகிரி நாதருடைய கந்தர் அனுபூதியில்
திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே
வள்ளியுடைய பாதத்துல முருகப் பெருமான் பணிந்து, நான் உன்னுடைய பணியாள்-னு சொல்றாராம். அதிமோகம் – இந்த அதி மோஹம் தான், அவருடைய தயை. ஜீவர்கள் கிட்ட அவர் காண்பிக்கற அந்த தயையைத் தான் இப்படி உருவகப் படுத்தி சொல்றா. மூகபஞ்ச சதியில கூட,
रणन्मञ्जीराभ्यां ललितगमनाभ्यां सुकृतिनां
मनोवास्तव्याभ्यां मथिततिमिराभ्यां नखरुचा ।
निधेयाभ्यां पत्या निजशिरसि कामाक्षि सततं
नमस्ते पादाभ्यां नलिनमृदुलाभ्यां गिरिसुते ॥
ரணன்மஞ்ஜீராப்யாம் லலிதகமனாப்யாம் ஸுக்ருதினாம்
மனோவாஸ்தவ்யாப்யாம் மதித திமிராப்யாம் நகருசா |
நிதேயாப்யாம் பத்யா நிஜசிரஸி காமாக்ஷி ஸததம்
நமஸ்தே பாதாப்யாம் நலிணம்ருதுலாப்யாம் கிரிஸுதே ||
ன்னு ஒரு ஸ்லோகம் வரும். அதுல ‘ஹே காமாக்ஷி, உன் பதியான பரமேஸ்வரன், உன்னுடைய பாதங்களை தலையில தாங்கறார் ன்னு மூககவி சொல்றார். ‘நிதேயாப்யாம் பத்யா நீஜ சிரஸி’ – உன் பதி தன்னுடைய சிரசில் இந்த பாதங்களை தாங்கிக் கொண்டிருக்கிறார் -னு சொல்றார். ஜயதேவர் அஷ்டபதியில கூட ராதா தேவியோட பாதங்களை கிருஷ்ணர் தன்னோட சிரஸ்ல வச்சிண்டார்ன்னு வர்றது, இல்லையா! அந்த மாதிரி, ஜீவனிடத்தில் பகவான் காண்பிக்கும் அந்தக் கருணையை மஹான்கள் பாடறா. சிவ சக்த்யைக்ய ரூபிணின்னு இந்த த்யானம் பண்ணா நம்ம மனசுல காமத்தை குறித்து இருக்கக் கூடிய விகல்பம், ஆபாசங்கள் எல்லாம் போய், அது பகவான் கொடுத்திருக்கிற ஒரு கடமைன்னு நாம அதைப் பத்தி ரொம்ப சலிக்காம, ரொம்ப சிரமப்படாம கடந்து போகலாம்.
நம்ம கலாச்சாரத்துல காலகாலத்துல கல்யாணம் பண்ணிண்டு இருந்தா. இருபது வயசுல எனக்கு இந்த விஷயங்கள்லாம் தெரியும் போது மஹா பெரியவளோட ஒரு lecture கேட்டேன். ‘சிவ சிவ பஷ்யந்தி ஸமம்’-ங்கற மூகபஞ்ச சதி ஸ்லோகத்துக்கு அவா அர்த்தம் சொல்லும் போது ‘உதடும், ஓட்டாஞ்சில்லியும் ஒண்ணு’ ன்னு சொல்லும் போது, ‘காமத்துல ஸ்த்ரீ, புருஷாள்ல முதல்ல வர விகாரம், முத்தம் இட்டுக்கணும்னு தோணும். காமம் எல்லாம் மறந்து போயிடுதுன்னா அப்புறம் ஓட்டாஞ்சில்லியைத் தானே இவன் முத்தம் இட்டுக்கணும்ன்னு வேடிக்கையா சொல்லுவா. அந்த அளவுக்கு மஹான்கள் அதை லைட்டா பண்ணி, இது ஏதோ சாப்பிடற மாதிரி, புலன் இன்பங்கள்ல ஒண்ணுன்னு ரொம்ப சுலபமா எடுத்துண்டு போயி , ‘கொஞ்ச நாள் இந்த தொந்தரவு, நீ தெய்வத்தை வேண்டிண்டு இரு’ ன்னு சொல்றா. ‘இதை சரியா வழிபடுத்திட்டா ஒரு கல்யாணம்ங்கற வழியில channelize பண்ணி அழகா கொண்டு போயிட்டா, இல்லறம் அல்லது நல்லறம் அன்றுன்னு அதை வழிபடுத்தினா அதனால நல்ல ப்ரஜைகள் உண்டாவா.’ பெரியவா இன்னும் சொல்றா, “இதுல நமக்கு ஒரு சுகம்னு நினைச்சுகிறோம், அதுவும் ஏமாத்தம் தான். இன்னொரு ஜீவன் இது மூலமா வந்து பொறந்ததுன்னா, அது கடைத் தேறதுக்கு ஒரு வழி. அது தான் அம்பாளோட மாயை. அவதான் இதுல இருந்து நம்மை விடிவிக்கணும். அம்பாள் சரணத் த்யானம் பண்ணினா நாம குழந்தைகளா இருக்கலாம். இதெல்லாம் மறந்து போயிடும்” ன்னு பெரியவா ரொம்ப hope கொடுக்கற மாதிரி பேசியிருக்கா. அந்த மாதிரி நம்முடைய கலாசாரத்திலே தான் இதை சரியான ஒரு வழியில எடுத்துண்டு போறதுக்கு சொல்லிக் கொடுத்துருக்கா எங்கறது, இந்த ஸ்லோகத்தை படிச்ச போது தோணித்து.
நாளையிலிருந்து ஸுப்ரமண்ய ஸ்வாமியோட ரூப வர்ணணை. முதல் ஸ்லோகம் பாதாரவிந்தத்தை பத்தி
रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे
मनोहारिलावण्यपीयूषपूर्णे ।
मनःषट्पदो मे भवक्लेशतप्तः
सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥ ९॥
ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே |
மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே || அப்படீங்கிற ஸ்லோகத்தை நாளைக்கு பார்ப்போம்.
வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா
One reply on “ஸுப்ரமண்ய புஜங்கம் – எட்டாவது ஸ்லோகம் – பள்ளியறை தரிசனம்”
‘ந்ருணாம் காமதோஹே’ – மனிதர்களின் எல்லா ஆசைகளையும் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி பூர்த்தி பண்ணுகிறார் என்று ஆசார்யாள் சொல்கிறார்.
தீக்ஷிதர் ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே க்ருதியில், “போக மோக்ஷ ப்ரதாத்ரே” என்று பாடுகிறார். நாம் விரும்பும் போகங்களை, ஸௌக்யங்களை அள்ளிக் கொடுக்கிறார். ஸம்ஸாரப் பிடுங்கலிலிருந்து விடுபட்ட மோக்ஷம் என்னும் ஸதானந்த நிலையையும் அவரே அளிக்கிறார்.
மஹாபெரியவா இதற்கு விளக்கம் சொல்லும் போது, ‘தனலக்ஷ்மியிடமும், ஸந்தான லக்ஷ்மியிடமும் மோக்ஷத்தை வேண்டினால் கிடைக்காது. போகம்தான் கிடைக்கும். தக்ஷிணாமூர்த்தியிடம் போகத்தைக் கேட்டால் கிடைக்காது. அவர் மோக்ஷந்தான் கொடுப்பார். ஸுப்ரஹ்மண்யர் இரண்டும் தருவார். ‘போக மோக்ஷப்ரதாதா’. இம்மை, மறுமை என்ற இரண்டும் தருபவர் அவர்.’ என்கிறார்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரோஹரா🙏