ஸுப்ரமண்ய புஜங்கம் இருபத்தி நான்காவது ஸ்லோகம் (13 min audio file. Same as the script above)
இன்னைக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல இருபத்தினாலாவது ஸ்லோகம்,
अहं सर्वदा दुःखभारावसन्नो
भवान्दीनबन्धुस्त्वदन्यं न याचे ।
भवद्भक्तिरोधं सदा कॢप्तबाधं
ममाधिं द्रुतं नाशयोमासुत त्वम् ॥ २४ ॥
அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே |
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் ||
ன்னு ஒரு ஸ்லோகம். ஆதி சங்கர பகவத்பாதாள் மஹான், ஞானி. அவருக்கு ஒரு துக்கமும் கிடையாது. இருந்தாலும், நாம இருக்கற நிலைமையை உணர்ந்து, எப்படி பகவான் கிட்ட என்ன வேண்டணும் அப்படீன்னு சொல்லி கொடுக்கறதுக்காக இப்படி ஒரு ஸ்லோகம் சொல்றார். ‘அஹம்’ – நான், ‘ஸர்வதா’ – எப்பொழுதும், ‘துக்கபாராவஸந்ன:’ – துக்க பாரத்தை சுமந்துண்டு, அந்த பளு தாங்க முடியாம, பரிதவிச்சிண்டு இருக்கேன், அவஸ்த்தை பட்டுண்டு இருக்கேன். ‘பவான்’ – தாங்கள் ‘தீனபந்து’ – தீனன்னா ஏழை, அனாதை, யாரும் இல்லாதவன் ன்னு அர்த்தம். அந்த மாதிரி இருக்கறவாளுக்கு பந்து நீ தான். ‘பவான் தீனபந்து: த்வதன்யம் நயாசே’ – உன்னைத் தவிர இன்னொருதர் கிட்ட போய் நான் கேட்க மாட்டேன். இது ஒரு முக்கியமான message, பகவான் கிட்ட தான் நாம கஷ்டத்தை சொல்லி அழணும், ‘த்வம்’ – நீ, எனக்கு எப்பவும் இந்த ஹிம்ஸயை கொடுக்கக்கூடிய, ‘க்லுப்த பாதம்’ எனக்கு கஷ்டத்தை கொடுக்க கூடிய, ‘பவத்பக்தி ரோதம்’ – உன்னுடைய பக்தியை பண்ண முடியாம என்ன ஸ்ரமபடுத்தும், ‘ஆதி’ – வ்யாதின்னா உடம்புக்கு வர்ற வ்யாதி, ஆதின்னா மனசுக்கு வரக்கூடிய இந்த கவலைகள், அந்த துக்க பாரம்-ன்னு சொல்றாரே, அதெல்லாம் சேர்த்து ஒரே வார்த்தைல ஆதி-ன்னு சொல்லுவா. ‘ஆதிவ்யாதி ஹர ஆஞ்சநேய ஸ்வாமி’ ன்னு இங்க நங்கநல்லூர்-ல இருக்கார். அந்த மாதிரி ஆதின்னா மனோவ்யாதி அதை ‘த்ருதம்’ – சீக்ரமாக ‘நாஷய’ அப்படீன்னு சொல்லும்போது, இந்த இடத்துல ‘ஹே உமாஸுதா’ ன்னு சொல்றார் , உமையின் மைந்தனே, பார்வதி போல அந்த கருணை உள்ளம், ஸுப்ரமண்ய ஸ்வாமிக்கும் இருக்கறதுனால, நீ எந்தன் துக்க பாரத்தை போக்கு, அப்படீன்னு சொல்றார்.
இந்த இடத்துல தேதியூர் சாஸ்திரிகள் ஒரு ஸ்லோகம் சொல்றார்.
चिता चिन्ता तयोर्मध्ये चिन्ता एव गरीयसि |
चिता दहति निर्जीवं चिन्ता जीवन्तमप्यहो ||
சிதா சிந்தா தயோர்மத்யே சிந்தா ஏவ கரீயஸி |
சிதா தஹதி நிர்ஜீவம் சிந்தா ஜீவந்தம் அப்யஹோ ||
‘சிதாவுக்கும் சிந்தாவுக்கும் தராசுல வெச்சு பார்த்தா, சிந்தா தான் ரொம்ப வந்து பலசாலியா தெரியறது. சிதை – கடைசில, இடுகாட்ல எரிப்பாளே அதுக்கு சிதைன்னு பேரு. அந்த சிதை உயிர் போன பின்ன தான் எரிக்கறது, இந்த சிந்தைங்கற கவலை, உயிரோடு இருக்கும் போதே மனிதனை எரிக்கறதே!’ ன்னு சொல்றார். அப்படி அந்த சிந்தைக்கு இடம் கொடுக்க கூடாது.
நாம துக்கப் படறோம்ன்னு நமக்கு தெரியறது, அந்த துக்கத்துக்கு காரணம் என்ன? நாம ரொம்ப பந்தத்துல மாட்டிண்டு, அதனால தான் சந்துஷ்டி இல்லாம இருக்கோம், அப்ப்டீங்கறத எப்பயோ ஒரு சமயத்துல உணர்றோம், உணர்ந்தா கூட இதெல்லாம் எப்படி விட முடியும், இனிமே எப்படி விட முடியும், அப்படியெல்லாம் நினைச்சிண்டு, ஆசார்யாள் இங்கே சொல்ற இந்த பிராத்தனையே நாம பண்ண மாட்டேங்கறோம். இந்த ஸ்லோகத்துல ‘நான் உன்னையே வேண்டறேன், என்னை இந்த துக்கத்துலேர்ந்து மீட்டு விடு’ அப்படீன்னு பகவான் கிட்ட போய் ப்ரார்த்தனை பண்றது கூட பண்ண மாட்டேங்கறோம், ஏதோ இந்த துக்கத்துக்கு நடுவில சொட்டு சுகம் இருந்தா, அதே போறும்-னு த்ருப்தி ஆயிடறோம். அப்படி ஆகாமல், இந்த கொஞ்சம் கொஞ்சம் பண்ற பகவத் பஜனத்துல கிடைக்கக்கூடிய அந்த ருசியை புரிஞ்சிண்டு, இது அம்ருதம், இந்த அம்ருதமான வாழ்வு தான் வேணும் அப்படீன்னு வேண்டணும்.
நான் இருக்கற நிலைமை எனக்கு துக்கத்தை கொடுக்கறது, இதுலேர்ந்து நான் மீளனும், அப்படீன்னு நினைச்சா தான் மீள முடியும். வ்யாதி என்னன்னு diagnose பண்ணின பிறகு தான் மருந்து கொடுக்க முடியும். அந்த மாதிரி நம்முடைய கஷ்டத்துக்கு காரணமான பந்தங்கள்-எல்லாம் விடணும் அப்படீன்னு நாம வேண்டணும். ‘இதெல்லாம் ok. இது இப்படித்தான் இருக்கும்’ அப்படீன்னு நினைக்கக் கூடாது. எதோ ஒரு வேலையில பளு ஜாஸ்த்தியா இருக்கு, ஒரு இடத்துல இருக்கறது கஷ்டமா இருக்கு, இல்லை ஒரு relationship சரியா இல்லன்னா, நாம பகவான் கிட்ட வேண்டிக்கணும். ‘இந்த மாதிரி பந்தத்துல என்னை வைக்காதே, நான் மோக்ஷம் அடைஞ்சு சந்தோஷமா இருக்கணும், உன்னுடைய பக்தியை பண்ணனும்’ அப்படீன்னு நாம பகவான் கிட்ட வேண்டிக்கணும்.
ஒரு தடவை ராமகிருஷ்ண பரமாஹம்ஸர் விவேகானந்தர் கிட்ட ” நீ ஒரு தேனீ-னு நினைச்சுக்கோ, ஒரு பாத்திரத்துல, உள்ள முழுக்க பகவான் என்ற தேன் இருக்கு, நீ அதை எப்படி சாப்பிடுவ?” ன்னு கேட்கறார். விவேகானந்தர் சொல்றார் “நான் விளிம்புல உட்கார்ந்துண்டு உறிஞ்சி குடிப்பேன்”-எங்கறார், ராமகிருஷ்ணர் சொல்றார் “இந்த தேன் அம்ருதம்னு சொன்னேனே. அதுக்குள்ள விழுந்துரு, அதுக்குள்ள முழுக்க விழுந்துடு. அது உன்னை கொல்லாது, அது அம்ருதத்தை கொடுக்கும் உனக்கு, சாகாத நிலைமையை கொடுக்கும், ஏன்னா அது பகவான், அதனால பயப்படாதே” அப்படீன்னு சொல்றார். அப்படி அந்த குருங்கறவர் காண்பிக்கறார். இந்த உலக விஷயத்துல, எதையாவது ஒண்ணை விட்டோம்னா அவஸ்தை படுவோமோ, அப்படீன்னு பயப்படறோம். அப்படி பயப்பட வேண்டாம். உன்னுடைய எல்லா நலன்களையும் பகவான் பார்த்துப்பார் ன்னு அருணகிரிநாதர் சொல்றார். ‘மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்திருக்க வாருமே’ ன்னு பாடறார். உனக்கு பணம் வேணுமா. கிடைக்கும், இந்திர பதவி வேணுமா. கிடைக்கும், நீ நல்ல தமிழ் பாடல்கள் பாடணும்னு ஆசைப்படறியா, உனக்கு கிடைக்கும், எமனை விரட்டி விடணும்னு ஆசை படறியா, உன்னால முடியும் அப்படி சொல்லிட்டு, ‘இவையொழிய வும்ப லிப்ப தகலவிடும் உங்கள் வித்தையினையினி விடும்பெருத்த பாருளீர்’ – நீங்க ஏதோ ஒரு வித்தை வெச்சிண்டு இருக்கேள். இதனால, நான் நாலு காசு சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கபோறேன் ன்னு நினைக்கறேளே, அதை விட்டுடுங்கோ ‘மயிலையும் அவன்தி ருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்திருக்க வாருமே’ பகவானோட பஜனத்தை பண்ணுங்கோ, அப்படீன்னு சொல்றார். அந்த மாதிரி, ஆச்சார்யாள் சொல்லி கொடுக்கறார் நமக்கு.
‘அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ பவான் தீனபந்து: த்வதன்யம் நயாசே’ உன்னை தவிர வேற யார் கிட்டயும் கேட்க மாட்டேன், ஹே உமாஸுதா ‘பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம் மமாதிம் த்ருதம் நாசய’ – உன்னுடை பக்தி பண்றதுக்கு இடைஞ்சலாய் இருக்கக்கூடிய, என்னுடைய மனக் கவலைகளை போக்கு, இடையறாது உன்னுடைய பக்தியை பண்றதுக்கு எனக்கு நல்ல புத்தியை கொடு. அப்படீன்னு வேண்டிக்கறார். அருணகிரி இந்த மாதிரி நிறைய வேண்டிண்டு இருக்கார். ஒண்ணு, ரெண்டு நான் சொல்றேன்.
எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே
ன்னு பாடறார், அதுலயும் ‘சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்’, ‘நீதான் எனக்கு அம்மா, நீதான் எனக்கு அப்பா, என் கவலைகளை போக்கு’ அப்படீன்னு கேட்கறார்.
ஒரு பழனி பாட்டுல…
“வசன மிகவேற்றி மறவாதே
மனது துயர் ஆற்றில் உழலாதே
இசை பயில் சடாட்சர மதாலே
இகபர செளபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழநி மலை வீற்று அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே”
“ஏதோ பேச்சுகள் எல்லாம் பேசிப் பேசி உன்னை மறந்து, அதனால மனது துயர் ஆற்றில் உழன்றுண்டு இருக்கு. அதை விட்டுட்டு, ‘இசை பயில் சடாக்ஷரம் அதாலே’ உன்னுடைய சடாக்ஷரத்த இசையோடு கூடி இடையறாம ஜபிச்சு, அதனால ‘இகபர செளபாக்யம் அருள்வாயே’.. எனக்கு இகபர செளபாக்யத்தைக் கொடு… பழநிமலை வீற்று அருளும் வேலா.. அப்படின்னு பாடுறார்.
இந்த மகான்களோட ஸூக்தி விசேஷம் என்னன்னா அத படிக்கும் போதே நமக்கு அந்த தமிழும், அந்த சமஸ்கிருதமும், அதுல வரக் கூடிய அழகான கதைகளும், அந்த பஜனமே தித்திப்பா இருக்கு. அந்த பஜனத்தால கிடைக்க கூடிய சந்துஸ்டி, அத வந்து நம்ம மனசுக்கு பழக்கி கொடுக்கணும். அது சாதாரணமா எடுத்த உடனே வராது. உலக விஷயங்கள்ல இருக்கிற சந்தோஷம், அதுல நமக்கு இருக்க கூடிய taste அந்த தெய்வ வழிபாட்டில முதலில் அவ்வளவு தூரம் வராது. மொதல்ல கொஞ்சம் தான் வரும். அப்புறம் அஞ்சு நிமிஷம் , பத்து நிமிஷம்னு ஜாஸ்தி பண்ணிக்கணும். ராம நாமத்தையே ஏழு மணி நேரம் சொல்லிட்டு இருக்க நம்மால முடியலை. அதுக்காக ஸ்தோத்ரங்கள், பாராயணங்கள் அப்படின்னு பண்ணி கொடுத்திருக்கா. அது பண்ணிண்டே வந்தா ருசி வந்துரும். அப்புறம் பக்தி வரும்.
இதே மாதிரி எனக்கு கவலையினால என் மனமும், உடலும் தளர்ந்து மெலிந்து போகிறதுக்கு முன்னாடி உன்னுடைய தரிசனம் கிடைக்கணும் அப்படின்னு ஒரு பாட்டு. ஆனா அந்த பாட்டே எவ்வளவு அழகா இருக்கு பாருங்கோ.
பகர்தற்கரிதான செந்தமிழ் இசையிற் சில பாடலன்பொடு
பயிலப் பல காவியங்களை ……யுணராதே
பவளத்தினை வீழியின் கனியதனைப் பொருவாய் மடந்தையர்
பசலைத் தனமே பெறும்படி …… விரகாலே
சகரக்கடல் சூழும் அம்புவி மிசையிப்படியே திரிந்துழல்
சருகொத்துளமே அயர்ந்துடல் …… மெலியாமுன்
தகதித் திமிதா கிணங்கிண எனவுற்றெழு தோகையம்பரி
தனில் அற்புதமாக வந்தருள் …… புரிவாயே
” நுகர்வித்தகமாகும் என்று உமை மொழியிற் பொழி பாலை உண்டிடு நுவல் மெய்ப்புள பாலனென்றிடும் இளையோனே” இந்த வரி திருஞானசம்பந்தரைப் பற்றினது.
அருணகிரி நாதருக்கு திருஞான சம்பந்தர் தான் மானசீக குரு. திருஞான சம்பந்தரை முருகராவே 100 பாடல்கள்ல பாடி இருக்கார். ‘வேல் எடுத்து சூர பத்மாவை கொன்ற திருஞான சம்பந்தரே’ன்னு பாடுவார். அப்படி அவருக்கு முருகனும் தன் குருவும் ஒன்று. அப்படி பாடி இருக்கார். இங்க அம்பாள் குடுத்த ஞானப் பாலை உண்ட திருஞான சம்பந்த முர்த்தியே ன்னு பாடுறார்.
‘நுதிவைத்த கரா மலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திட நொடியிற் பரிவாக வந்தவன் மருகோனே…’ இதுல ‘கரா’ன்னா முதலை . யானைக்காக முதலையை கொல்லறதுக்கு ஓடி வந்தவருடைய மருகோனேன்னு அர்த்தம்.
‘அகரப்பொருள் ஆதி யொன்றிடு முதல் அட்சரமானதின் பொருள் அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா’ வேதத்தினுடைய முதல் அட்சரமான பிரணவத்தின் பொருளை அரனுக்கு இனிதாக மொழிவதற்காக வந்த குருநாதா’ அப்படிங்கிறார்.
அமரர்க்கிறையே வணங்கிய பழநித் திருவாவினன்குடி
அதனிற் குடியாயிருந்தருள் …… பெருமாளே.
சகரக்கடல் சூழும் அம்புவி மிசையிப்படியே திரிந்துழல்
சருகொத்துளமே அயர்ந்துடல் …… மெலியாமுன்
தகதித் திமிதா கிணங்கிண எனவுற்றெழு தோகையம்பரி
தனில் அற்புதமாக வந்தருள் …… புரிவாயே
இந்தப் பாட்டைப் படிக்கிறதே, அந்த தமிழும், அந்த சந்தமும் அதுவே சந்தோஷம். அப்புறம் அதனால ஏற்பட கூடிய அருள். அதனால ஏற்பட கூடிய பக்தி. அது இன்னும் சந்தோஷத்தை கொடுக்கும்.
அப்படி ‘உன்னுடைய பக்திக்கு இடைஞ்சலாக இருக்க கூடிய எல்லா மன கவலைகளையும் போக்கு முருகா’ அப்படின்னு அழகான ஒரு ஸ்லோகம்.
அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே |
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் ||
வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா