முகுந்தமாலா 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை (15 minutes audio Meaning of Mukundamala slokams 1 and 2)
वन्दे मुकुन्दमरविन्ददलायताक्षं कुन्देन्दुशङ्खदशनं शिशुगोपवेषम् ।
इन्द्रादिदेवगणवन्दितपादपीठं बृन्दावनालयमहं वसुदेवसूनुम् ॥ १ ॥
வந்தே³ முகுந்த³மரவிந்த³த³லாயதாக்ஷம்
குந்தே³ந்து³ஶங்க²த³ஶனம் ஶிஶுகோ³பவேஷம் ।
இந்த்³ராதி³தே³வக³ணவந்தி³தபாத³பீட²ம்
வ்ருʼந்தா³வனாலயமஹம் வஸுதே³வஸூனும் ॥ 1 ॥
श्रीवल्लभेति वरदेति दयापरेति भक्तप्रियेति भवलुण्ठनकोविदेति ।
नाथेति नागशयनेति जगन्निवासेति आलापनं प्रतिपदं कुरु मे मुकुन्द ॥ २ ॥
ஸ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி
ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி
ஆலாபனம் ப்ரதிதி³னம் குரு மே முகுந்த³ ॥ 2 ॥
இந்த இரண்டு ஸ்லோகங்கள் முகுந்தமாலா ன்னு குலசேகர ஆழ்வார் பண்ணின ஒரு ஸ்தோத்திரத்தோட முதல் இரண்டு ஸ்லோகங்கள். இந்த குலசேகர ஆழ்வார், பன்னிரண்டு ஆழ்வார்கள்ல, ரொம்ப மூத்தவர். ஒரு மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னாடின்னு சொல்றா. ஐயாயிரம் வருஷங்களுக்கு முன்னாடின்னு கூட ஒரு கணக்கு இருக்கு. அவரோட சரித்ரம் ரொம்ப நன்னா இருக்கும். அவர் சேர நாட்டுல பிறந்த ஒரு ராஜா. கேரளத்துல பிறந்து அங்க ஜயசாலியா எல்லாரையும் ஜயிச்சு, பாண்டியர்கள், சோழர்களைக் கூட ஜயிச்சு, அவா எல்லாம் கூட அவருக்கு பெண் கொடுத்துருக்கா. நல்லாட்சி பண்ணிண்டு இருக்கார். நல்ல செல்வம். பதவி. ஆனா வால்மீகி ராமாயணம் கேட்க ஆரம்பிச்சு, விஷ்ணு பக்தர்களோட இருந்திருந்து, அவருக்கு இதுல எல்லாம் பற்று விலகிடறது. அந்த ராமாயண பக்தியினால ராமனையே நினைச்சுண்டு இருக்கார். அந்த வைஷ்ணவர்கள் எல்லாம், திருவேங்கடத்தைப் பத்தியும், ஸ்ரீரங்கத்தை பத்தியும் சொல்றதைக் கேட்டுக் கேட்டு நித்யம் ஸ்ரீரங்கத்துக்குப் போகணும், அப்படீன்னு கிளம்பிண்டே இருப்பாராம். மந்திரிகள் எல்லாம் ‘கொஞ்சம் இருங்கோ’, அப்படீன்னு ஏதாவது ஒரு அலுவல் கொடுத்து, அவரை கொஞ்சம் பிடிச்சு வெச்சுப்பாளாம். அப்படி ஒரு உத்தம பக்தரா இருந்தார்.
ஒரு வாட்டி இராமாயண ப்ரவசனத்தின் போது, கர வதத்துக்காக தனியா ராமர் தனி ஒருவரா கிளம்பினார், பதினாலாயிரம் ராக்ஷதர்களை வதம் பண்றதுக்கு ராமர் தனியாக கிளம்பினார், அப்படீன்ன உடனே இந்த குலசேகர ஆழ்வார், சேனாதிபதியை பார்த்து, ‘நாலு வகை படைகளும் சித்தமாகட்டும். இப்ப நாம போறோம் ஜனஸ்தானத்துக்கு’, அப்படீன்னு order போட்டாராம். அப்புறம் மந்திரிகள் சில தூதர்களைக் கொண்டு, ராஜா கிட்ட, ‘ராமர் ஜயிச்சுட்டார். கர தூஷணாள எல்லாம் வதம் பண்ணிட்டார். நீங்க திரும்ப சபைக்கு வரணும்’ அப்படீன்ன உடனே, சபைக்கு வந்து, மந்த்ரிகள் அந்த உபந்யாசகர் கிட்ட, ‘நீங்க சீக்கிரமா கதையை கொண்டு போயி பட்டாபிஷேகத்துல பூர்த்தி பண்ணுங்கோ’, அப்படீன்னு சொல்லி, ராஜாவை சமாதானப் படுத்தினாளாம். அப்படி ஒரு பக்தர் அவர்.
இப்படி இவர் இந்த பக்தியில மூழ்கி ராஜ்ய கார்யங்களை கவனிக்க மாட்டேங்கிறாரே, அப்படீன்னு, மந்திரிகள் என்ன பண்ணாளாம், ஒரு வாட்டி, இந்த வைஷ்ணவாளோட ராஜா இருக்கும் போது, ஸ்வாமியோட ஒரு ஆபரணத்தை எடுத்து ஒளிச்சு வெச்சுடறா. அத காணோம்ன உடனே, ‘அதெப்படி, ஸ்வாமியோட ஆபரணம் எங்க போச்சு?’ அப்படீன்னு, ராஜா கேட்டபோது, ‘அங்க பக்தர்கள் மட்டும் தான் இருந்தா. அவா யாராவது தான் எடுத்துருக்கணும்’ அப்படீன்னு சொன்னாளாம். அப்பா ராஜா சொன்னாராம், ‘அவாளை எல்லாம் கூப்டுங்கோ’ அப்டீன்னாராம். அந்த மாதிரி அவாளை எல்லாம் கூப்டுட்டு, மந்திரிகள் சொன்னாளாம். இந்த குடத்துக்குள்ள கடுமையான விஷம் கொண்ட பாம்பு இருக்கு. அவாளை இந்த குடத்துக்குள்ள கையை விட்டு ‘நாங்க எடுக்கல’ அப்படீன்னு சொல்ல சொல்லுங்கோ. அதாவது மந்திரிகளோட எண்ணம் என்னன்னா, இந்த இந்த விஷ்ணு பக்தர்கள் மேல ராஜாக்கு ஒரு வெறுப்பு வந்துடுதுன்னா, அதுக்கப்புறம், இந்த மாதிரி அவர் பக்தியில ரொம்ப மூழ்காம ராஜ கார்யங்களை கவனிப்பார்னு நினைச்சு அப்படி பண்றா. அந்த ராஜா பக்தர்களை கூப்ட்டு அந்த மாதிரி மந்திரிகளை சொல்ல சொல்லிட்டு ‘ஒரு நிமிஷம்’ அப்டீன்னாராம். ‘விஷ்ணு பக்தர்கள், விஷ்ணுகிட்ட மனசை வெச்சவா அவா ஒரு நாளும் இந்த மாதிரி பொருள்கள் மேல ஆசை பட மாட்டா. இது சத்யமானா இந்த பாம்பு என்னை கடிக்காம இருக்கட்டும்’, அப்படீன்னு அந்த குடத்துக்குள்ள ராஜாவே கையை விட்டாராம். மந்திரிகள் எல்லாம் நடுங்கி போயிட்டாளாம். ஆனா அந்த பாம்பு சத்யத்துக்கு கட்டுப் பட்டு அவரை கடிக்காம இருந்தது. அவர் கையை வெளியில எடுத்து மந்திரிகள் கிட்ட, ‘விஷ்ணு பக்தர்கள் மேல சந்தேகப்படாதேங்கோ, பெரிய அபச்சாரம்’ அப்படீன்னு சொன்னாராம். அதற்கு அப்புறம் அவருக்கு மனசு ராஜ்யத்துலேர்ந்து ரொம்ப விலகிடுத்து. தன்னோட பையனை பட்டாபிஷேகம் பண்ணிட்டு, அவர் ஸ்ரீரங்கத்துக்கே கிளம்பி வந்துடறார். ஸ்ரீரங்கத்துல திருப்பதில இருக்கும் போது பகவானை பாடறார்.
எப்படி ராமர் கஷ்டப்பட்டா தாங்காம லக்ஷ்மண ஸ்வாமி தவிப்பாரோ அந்த மாதிரி, ராமருடைய கர வதத்தும்போது, எப்படி கூடவே போகணும்னு படையோட கிளம்பினார், அப்படீங்கிறதுனால, இந்த பன்னிரண்டு ஆழ்வார்கள் ல குலசேகர ஆழ்வாரை மட்டும், குலசேகர பெருமாள்னு, லக்ஷ்மண பெருமாள் அப்படீன்னு சொல்ற மாதிரி குலசேகர பெருமாள் அப்படீன்னு சொல்வாளாம். அவர் எழுதின நூத்தி அஞ்சு பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்துல சேர்த்துருக்கா. அந்த நூத்தி அஞ்சுக்கு பெருமாள் திருமொழின்னு பேரு. அது தமிழ்ல ரொம்ப ஆனந்தமா இருக்கும். அந்த ராஜா முகுந்தமாலை அப்படீன்னு ஸ்தோத்திரம் பண்ணி இருக்கார். இதுல முப்பத்தஞ்சு ஸ்லோகம் அப்படீன்னு ஒரு version இருக்கு. நாற்பத்தியாறு ஸ்லோகங்கள் எடுத்து மஹா பெரியவா காமகோடி கோஷஸ்தானத்துல அதை பதிப்பிச்சிருக்கா. சுந்தராசாரியார் னு ஒரு ஸ்ரீ வைஷ்ணவரைக் கொண்டு இதுக்கு, அர்த்தம் எழுதியிருக்கா. அப்பறம் மற்ற versions ம் இருக்கு. எழுபது ஸ்லோகம் வரைக்கும் முகுந்தமாலை இருக்குன்னு சில பேர் சொல்றா. இந்த மஹா பெரியவா போட்ட புஸ்தகத்தை வெச்சுண்டு நான் இந்த நாற்பத்தாறு ஸ்லோகங்களுக்கு அர்த்தம் சொல்லணும்னு ஆசைப்படறேன். அந்த ஆழ்வார்கள் பண்ணின க்ரந்த்தங்கள் எல்லாம் எடுத்து பேசறதுக்கு ரொம்ப ஸாஹசம் வேணும்.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவாளுக்கு இருக்கிற அந்த கிருஷ்ண சௌலப்யம் அந்த பகவானை அனுபவிக்கறது, அந்த ராமபக்தி மத்தவாளுக்குப் போறாது, அப்படீன்னு ஒரு எண்ணம். அது வாஸ்தவம்தான். அவாளுடைய அனுபவமே தனி. ஒரு வாட்டி ஸ்வாமிகள் இராமாயண பிரவச்சனம் பண்ணும் போது, காற்பங்காடு வெங்கடாசார்ய ஸ்வாமின்னு ஒரு பெரிய வித்வான். அவர் ஸ்ரீவைஷ்ணவத்துக்கு ரொம்ப service பண்ணியிருக்கார். அந்த பெரியவர் வந்திருந்தாராம். அவர் கேட்டு முடிச்ச உடனே, ‘இப்படி ஸ்மார்த்தா கூட இராமாயணத்தை அனுபவிப்பான்னு இன்னிக்கு தெரிஞ்சுண்டேன்’ அப்படீன்னாராம். இப்படி வைஷ்ணவா கிருஷ்ண பக்தியும், ராம பக்தியும் ரொம்ப தனி. வேளுக்குடி கிருஷ்ணன் ங்கிறவரோட மாமா அவர். அந்த காற்பங்காடு ஸ்வாமின்னே சொல்வா. பேரே சொல்ல மாட்டா. அப்படி அவா அந்த எப்படி பகவானை அனுபவிக்கணும்ங்கிறதுக்கு ஒரு rulebookஏ போட்டு அதுக்கு அழகான quotations லாம் எடுத்து அழகா மேலும் கீழும் கோர்த்து பார்த்து பார்த்து அதை அனுபவிப்பா. நான் அதெல்லாம் ஒண்ணுமே தெரியாதவன். இருந்தாலும் இந்த முகுந்தமாலை ஸ்வாமிகள் சொல்லி படிச்சிருக்கேன். கிருஷ்ண பக்தி இருக்கு அதுல. இந்த பக்தி சாஸ்த்ரத்தோட எல்லா லக்ஷணங்களும் குலசேகர ஆழ்வார் அதுல வெளிபடுத்தறார். அதை பகிர்ந்துக்கணும்ங்கிற ஒரு ஆசையில இதை சொல்ல ஆரம்பிக்கறேன். தெரிஞ்ச அர்த்தம் சொல்றேன். பதத்துக்கு பதம் அர்த்தம் சொல்றேன். நீங்க அனுபவிச்சுக்கோங்கோ.
‘வந்தே முகுந்தம் அரவிந்த தலாய தாக்ஷம்’ – ‘முகுந்த:’ அப்படீன்னா முக்தியை அளிப்பவன் ன்னு அர்த்தம். நம்ப விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்துல ஆச்சார்யாளும் முகுந்த: அப்படீன்னா, முக்தியளிப்பவன் முகுந்தன் அப்படீன்னு பாஷ்யம் பண்ணியிருக்கா. அரவிந்தம் அப்படீன்னா தாமரை. அரவிந்த தளம். தாமரையையுடைய இதழ்களைப் போன்ற அக்ஷம். அக்ஷம்னா கண். ஆயதாக்ஷம் அப்படீன்னா நீண்ட கண்கள். தாமரை இதழ்களைப் போன்ற நீண்ட கண்களை படைத்த முக்தியை அளிக்கும் முகுந்தனை ‘வந்தே’ நான் நமஸ்கரிக்கறேன். குந்தேந்து சங்கதசனம் – தசனம் னா பல்லுன்னு அர்த்தம். குந்த புஷ்பம்னு ஒண்ணு இருக்கு. அது வெள்ளையா இருக்கும். இந்துனா சந்திரன். சங்கம்னா வெண் சங்கு, இதெல்லாம் எப்படி வெள்ளையா இருக்குமோ அந்த மாதிரி வெண்மையான வரிசையானா அழகான பற்களைக் கொண்ட கிருஷ்ணன். சிஷுகோப வேஷம். இந்த பிருந்தாவனத்துல இடையர்களுக்கு நடுவுல இடையர் குழந்தை மாதிரி வேஷம் போட்டுண்டு இடையர் குலத்துல அவதாரம் பண்ணினவன். இந்திராதி தேவகண வந்தித பாத பீடம் – இந்திரன் முதலான தேவகணங்கள் எல்லாம் எவரை வணங்குகிறார்களோ அந்த குழந்தை. இந்த கோவர்தனகிரிதாரி. இந்திரனுக்கு வழிபாடு பண்ணிண்டு இருந்ததை மாத்தி கிருஷ்ணர், கோவர்தன மலைக்கு பண்ணுவோம் அப்படீன்னு சொன்னார். இந்திரனோட கர்வத்தை அடக்கறதுக்காக அப்படி பண்றார். அப்போ அந்த இந்திரன், 7 நாட்கள் தொடர்ந்து மழையை பொழிய வைக்கறான். அப்ப அந்த கோவர்தன மலையை தூக்கி கையில பிடிச்சுண்டு அதுக்கு அடியில இந்த ஆயர்குலத்துல எல்லாரையும், இந்த மாடுகள் கன்றுகளோட, கோபர்களை நிறுத்தி காப்பாத்தறார். அப்புறம் இந்திரன் வந்து நமஸ்காரம் பண்ணி, காமதேனுவை கொண்டு பாலபிஷேகம் பண்ணி, கோவிந்த பட்டாபிஷேகம் அப்படீன்னு சொல்லுவா. இப்படி இந்த்ராதி தேவகண வந்தித பாத பீடம். அப்படி எல்லாரும் வணங்கிய அந்த பாதங்கள் படைத்தவர். ப்ருந்தாவனாலயம் – பிருந்தாவனத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டவர். வசுதேவஸூனும், வஸுதேவருக்கும், தேவகிக்கும் குழந்தையா பிறந்தவர்.
இது முதல் ஸ்லோகம்.
வந்தே³ முகுந்த³மரவிந்த³த³லாயதாக்ஷம்
குந்தே³ந்து³ஶங்க²த³ஶனம் ஶிஶுகோ³பவேஷம் ।
இந்த்³ராதி³தே³வக³ணவந்தி³தபாத³பீட²ம்
வ்ருʼந்தா³வனாலயமஹம் வஸுதே³வஸூனும் ॥ 1 ॥
அடுத்த ஸ்லோகம்
ஸ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி
ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி
ஆலாபனம் ப்ரதிதி³னம் குரு மே முகுந்த³ ॥ 2 ॥
‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ அப்படீங்கிற மாதிரி இந்த பகவானை முதல்ல ரூப த்யானம் பண்ணிண்டார். அந்த கோகுல கிருஷ்ணனை, பிருந்தாவனத்து இடைச் சிறுவனாக. இங்க அவனுடைய நாமங்களை எல்லாம் சொல்றார். அது கூட ‘ஹே முகுந்தா முகுந்தா’ ன்னு கூப்பிடறார். முகுந்தமாலை அல்லவா.
இதுல பிரதிபதம் னா அடிக்கடி, அப்படீன்னு சாதாரண அர்த்தம். நான் வாயை திறந்து பேச வந்தாலே, நான் உன்னுடைய நாமங்களை மட்டும் நான் பேசணும். வேற பேச்சே நான் பேசக் கூடாது. உலக விஷயங்களை பேசினா, அந்த பாபத்தை தூசியை அலம்பிக்கறதுக்கு, பகவானுடைய நாமங்கள் என்கிற கங்கா தீர்த்தம் தான் வழி, அப்படீன்னு மகான்கள் சொல்லியிருக்கா. அந்த மாதிரி நாமங்களை என் வாயில வர வை அப்படீன்னு சொல்றார். ஆலாபனம் அப்படீன்னா வாயில சொல்றது. பிரதிபதம் குருமே முகுந்தா. அந்த நாமங்களை பார்ப்போம். ஸ்ரீவல்லபேதி – ஸ்ரீதேவியினுடைய அன்புக்குரியவனே அப்படீன்னு அர்த்தம். இந்த பாற்கடலை கடைஞ்ச போது லக்ஷ்மிதேவி வந்தா. மகாவிஷ்ணு எடுத்து தன்னோட மார்புல வெச்சுண்டு, வக்ஷஸ்தலத்துல லக்ஷ்மியை வெச்சுண்டு இருக்கார். அதன் ஸ்ரீதரம்னு பேர் இல்லையா. வரதேதி – வரங்கள் கொடுப்பவர். விபீஷ்ணணனுக்கு ராஜ்யத்தை கொடுத்தார். தயாபரேதி – தயை பண்ணுபவர். பாஞ்சாலி துரியோதனன் சபையில கதறின போது மானத்தை காப்பாத்தினார். பக்தப்ரியேதி – பக்தர்களுக்குப் ப்ரியமானவன். பிரஹ்லாதன் துருவன், அப்படீன்னு எல்லா பக்தர்களுக்கும் ரொம்ப இஷ்டமானவன் பகவான். பவலுண்டனகோவிதேதி – சம்ஸார துக்கத்தை போக்க வல்லவன். நாதேதி – எல்லாருக்கும் தலைவன் கிருஷ்ணன்தான். நாக சயன: – அந்த பாற்கடலுக்கு நடுவுல ஆதிசேஷன் பாம்பு படுக்கையில அந்த நீல மேக சியாமளனாக, நான்கு கரங்களோடு, வயத்துல தொப்புள் கொடியில இருந்து தாமரை. அதுல பிரம்மா. அந்த திருவனந்தபுரத்துல பத்மநாப சுவாமி மாதிரி அந்த தியானம் பண்றார். ஜகன்னிவாஸேதி – ஜகத்துல உள்ளும் புறமும் எங்கும் வசிப்பவர் இந்த விஷ்ணு பகவான்தான். இப்படி இந்த நாமங்களை நான் அடிக்கடி சொல்லும்படியாக என்னை வை, அப்படீங்கறார்.
பகவானுக்கு எட்டு குணங்கள் அப்படீன்னு ஒரு வரிசை படுத்தறா. எண்குணத்தான் தாளை வணங்காத் தலை அப்படீன்னு திருவள்ளுவர் கூட சொல்றார். அந்த எட்டு குணங்கள் ராமாயணத்துல தாரை சில ஸ்லோகங்கள் சொல்றா
त्वमप्रमेयश्च दुरासदश्च जितेन्द्रियश्चोत्तमधार्मिकश्च।
अक्षय्यकीर्तिश्च विचक्षणश्च क्षितिक्षमावान्क्षतजोपमाक्षः ||
த்வமப்ரமேயஷ்ச துராஸதஷ்ச ஜிதேந்த்ரியஷ்சோத்தமதார்மிகஷ்ச |
அக்ஷய்யகீர்திஷ்ச விசக்ஷணஷ்ச க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷ ||
அப்படீன்னு இந்த எட்டு குணங்கள். இப்படி ஒரு எட்டு குணங்கள் தாரை சொல்றா. உபநிஷத்ல ஏஷ ஆத்மா அபஹதபாப்மா, விஜரோ, விம்ருத்யு:, விஷோகோ, விஜிகித்ஸோ, அபிபாஸ:, ஸத்யகாம: ஸத்யசங்கல்ப: ன்னு இந்த எட்டு குணங்கள் பகவானுக்கு சொல்லி இருக்கா. இப்படி எண்குணத்தான் அப்படீன்னு சொல்லலாம்.
குலசேகர ஆழ்வார் எட்டு நாமங்களை சொல்றார்
ஸ்ரீவல்லபே⁴தி வரதே³தி த³யாபரேதி
ப⁴க்தப்ரியேதி ப⁴வலுண்ட²னகோவிதே³தி ।
நாதே²தி நாக³ஶயனேதி ஜக³ன்னிவாஸேதி
அப்படீன்னு இந்த எட்டு குணங்களை குலசேகர ஆழ்வார் பாராட்டறார் பகவான் கிட்ட, அப்படீன்னு சுந்தராச்சர்யார் சொல்லியிருக்கார்.
யாரு நல்ல வழியில போகணும்னு பகவானை நினைக்கறாளோ, அவாளைத் தான் அவர் நல்ல கார்யங்கள்ல ஈடுபடுத்தறார். எவர் மேல அவர் கடாக்ஷம் இல்லையோ அவன் தப்பு வழியில போறதுக்கு விட்டுடறார். அந்த மாதிரி நாம நல்ல வழியில போகணும், பகவானை நினைக்கணும் ன்னு அதுக்கு வேண்டிக்கணும். அதற்கு இந்த நாமங்களை என் நாக்கு சொல்லும்படியா வை, அப்படீன்னு வேண்டிக்கறார். இந்த இரண்டு ஸ்லோகங்கள் பார்த்தோம். இந்த ஸ்தோத்ரத்துல நாற்பத்தியாறு ஸ்லோகங்கள் இருக்கு. ரொம்ப அழகழகான கருத்துக்கள் எல்லாம் இருக்கு. இதை சொல்லி முடிக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கறேன்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா
4 replies on “முகுந்தமாலா 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை”
Namaste Rama Rama,
Read for the first time about Kulasekara Perumal’s wonderful life from the introduction post to Mukundamala earlier.
Hearing the same in this post feels much more sweeter (thanks to the wonderful story telling method).
Unique story where worldly reality(!!) dims and Puranic Rama(Sat-chit-anandam)comes to the fore to Kulasekara Perumal. 🙂 enjoyed so much.
“eight character” attributes of the Lord by Tharai and Upanishad, reminded me of the general definition of Bhagavan (given to children in our classes) as someone with limitless strength, fame, wealth, courage, beauty and detatachment.
This definition is a unique one as this simply says in many words Bhagavan feels for us. Very touching contrast to the above definitions. Thanks for getting out this pearl.
Thank you.
Regards
Sujatha.R
யார் நல்ல வழியிலே போகணும்னு சுவாமி நினைக்கிறாரோ அவாளை நல்ல பாதையில் அழைத்துச் செல்கிறார், அல்லாதவரை தீய வழிகளில் ஈடுபடுத்துகிரார் என்பது நிதர்சனமான உண்மை !
சத்சங்கம் அமைந்தால் நல்ல வழியில் செல்ல வாய்ப்புண்டு ! அதுவும் அவர் கையில் தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை !
அழகான பொருள் விளக்கம் !
பகவான் கிருபா கடாக்ஷம் !!
[…] Explanation in Tamil – https://valmikiramayanam.in/?p=2990 Explanation in Hindi – […]
[…] Explanation in Tamil – https://valmikiramayanam.in/?p=2990 […]