Categories
Mukunda Mala

முகுந்தமாலா 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை


முகுந்தமாலா 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை (14 minutes audio Meaning of Mukundamala slokams 11 and 12)

குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த முகுந்த மாலையில் இதுவரை பத்து ஸ்லோகங்களை அனுபவிச்சுருக்கோம். இன்னிக்கு பதினொன்னாவது ஸ்லோகம்.

करचरणसरोजे कान्तिमन्नेत्रमीने श्रममुषि भुजवीचिव्याकुलेऽगाधमार्गे ।

हरिसरसि विगाह्यापीय तेजोजलौघं भवमरुपरिखिन्नः खेदमद्य त्यजामि ॥ ११ ॥

கரசரணஸரோஜே காந்திமன்நேத்ரமீனே

ச்ரமமுஷி பு⁴ஜவீசிவ்யாகுலேऽகா³த⁴மார்கே³ ।

ஹரிஸரஸி விகா³ஹ்யாபீய தேஜோஜலௌக⁴ம்

ப⁴வமருபரிகி²ன்ன: க்லேசமத்³ய த்யஜாமி ॥ 11 ॥

இந்த ஸ்லோகத்துல கிருஷ்ணனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை ஒரு ஏரியாக (ஸரஸாக) நினைச்சு அந்த ஏரியில நன்னா முங்கி குளிச்சு அந்த பகவானோட ரூபத்துல இருந்து வெளிப்படும் அந்த தேஜஸ் என்ற தீர்த்தத்தை நிறையப் பருகி என்னோட சம்ஸார தாபத்தை போக்கிப்பேன், அப்படீன்னு சொல்றார். ப்ரம்ம ஸ்வரூபம் அகண்டமா எல்லையற்று எங்கும் வியாபித்து விளங்குகிறது. மஹான்கள் அவாளோட பக்தியினால அதை நமக்கு காண்பிக்கரா.

அந்த ப்ரம்மானந்தம் பரமசுகதம் சச்சிதானந்த ரூபம் அது. அந்த சச்சிதானதந்தத்தை மஹான்கள் பக்தியினால அந்த கிருஷ்ணா ஸ்வரூபத்திலயே பார்க்கறா. அது ஸமுத்ரம் போல இருக்கு ப்ரம்மம். அதை ஒரு சின்ன ஏரியாட்டம் கொண்டு வந்து அதுல ஸ்நானம் பண்ணி நமக்கும் அந்த சந்தோஷத்தைப் பத்தி சொல்லிக் கொடுக்கறா. இந்த மாதிரி முகுந்தமாலை மாதிரி ஸ்தோதிரங்களும், ஒரு பார்த்தசாரதி கோயில், ஒரு வெங்கடாசலபதி சந்நிதியில நின்னா நமக்கு ஒரு சொட்டு திருப்தி ஏற்படறது. அது எல்லா களைப்பையும் போக்கிடறது. மஹாபெரியவாள தரிசனம் பண்ணிட்டு வந்தா அந்த மாசத்தோட களைப்பு போயிடறது. அடுத்தது திரும்பவும் நம்மளுடைய குடும்பம், கணக்கு, வழக்கு எல்லாம் பார்த்து ரொம்ப தளர் ச்சி ஆனா உடனே திரும்பவும் போயி ஒரு தடவை மஹாபெரியவாளை தரிசனம் பண்ணா அந்த தேஜஸ், ஜலம் மாதிரி அதைப் பருகி, அவாளோட அந்த ரூபத்துல சௌந்தர்யத்துல மனஸைக் கொடுத்து அந்த குளத்துல மூழ்கி குளிச்சு இந்த தாபமெல்லாம் போயி, திரும்பவும் வந்து சம்ஸாரம், இப்படி தான் நம்ம வாழ்கையை தள்ள முடியறது நம்மால்.

இந்த ஸ்லோகத்தோட அர்த்தம் சொல்றேன். ஒரு மடு ஜலம் அப்படீன்னா அதுல என்னவெல்லாம் இருக்கும்?. தாமரை பூக்கள் இருக்கும். அலைகள் இருக்கும். மீன்கள் இருக்கும். இந்த கிருஷ்ணனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துல ‘கர சரண சரோஜே’ – பகவானுடைய திருக்கைகள், திருவடிகள் இதெல்லாம் தாமரைப் பூ மாதிரி இருக்கு. ‘ஹரிஸரஸி’ – ஹரிங்கிற குளத்துல இந்த தாமரைகள் இருக்கு. ‘காந்திமந் நேத்ர மீனே’ ரொம்ப காந்தியோட இருக்கக் கூடிய அவரோட கண்கள் மீன்களைப் போல இருக்கு. ‘ஸ்ரமமுஷி புஜவீசி’ – நம்முடைய ஸ்ரமத்தை போக்குவதான தோள்கள் என்ற அலைகள் இருக்கு. ‘வ்யாகுலேऽகா³த⁴மார்கே’ – நம்முடைய வ்யாகுலங்களையும், ஸ்ரமங்களையும் போக்கக் கூடிய அந்த தோள்கள். அந்த குளம் எப்படி இருக்குன்னா, “அகாத மார்க்கே” ஆழமாக இருக்கு. பகவான் எவ்வளவு ஆழமானவர்! ஆழமான அந்த ஹரிசரஸி விகாஹ்ய நன்னா முங்கி குளிச்சு, ‘ஆபீய தேஜோ ஜலௌகம்’ – பொங்கி வரும் தேஜஸ் என்ற அந்த ஜலத்தை, ‘ஆபீய’ –குடிச்சு, ‘பவமரு பரிகின்ன:’ – இந்த சம்ஸாரம்ங்கிறது ஒரு பாலைவனம் மாதிரி இருக்கு. இந்த பாலைவனத்துல அலைஞ்சு அலைஞ்சு நான் ரொம்ப தாபத்தோட இருக்கேன். அந்த தாபம் tiredness எல்லாத்தையும் “கேதமத்ய த்யஜாமி” இன்னிக்கு அதெலாம் நான் போக்கிக்கப் போறேன்னு சொல்றார்.

நமக்கு அந்த அர்ச்சாவதாரமான சுவாமி முன்னாடி நிக்கும் போது ஒரு க்ஷணம் அந்த மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் ஏற்படறது. அதனால தானே திருப்பதியில கோடிக் கணக்கான பேர் வந்து அங்கு எந்த ஸ்ரமத்தையும் பார்க்காம நின்னு பகவானை தரிசனம் பண்றான்னா, நம்மளை காட்டிலும் அந்த பாமர ஜனகளுக்குதான் ரொம்ப பக்தி. ஏன்னா, அவா ஒரு வருஷம் முழுக்க கஷ்டப் பட்டு பணத்தை சேர்த்துண்டு, அங்க வந்து ஸ்வாமியை தரிசனம் பண்ணி, உண்டியல்ல முடிஞ்சதை போட்டுட்டு அதுல என்ன திருப்தி அவாளுக்குன்னா, அது அவாளுக்குத் தான் தெரியும். அந்த சுவாமிக்கு முன்னாடி கோவிந்தா, கோவிந்தான்னு சொல்லி அவரைப் பார்த்தா அவாளுக்கு சம்ஸார தாபம் எல்லாம் போயிடறது. அப்படி ஒரு விக்ரஹத்தை பார்க்கும் போதே இவ்வளவு திருப்தி. அவா பக்திக்கு அவாளுக்கு ஒரு திருப்தி ஏற்படறது. அப்ப மஹான்கள் ஞானக் கண்ணோடு விஷ்ணு பகவானை விஸ்வரூபமாகவே தரிசனம் பண்ணுவா. அதற்கப்பறம் எங்கும் எதிலும் அந்த கிருஷ்ணனைப் பார்த்துண்டு இருக்கான்னா அவாளுக்கு எவ்வளவு திருப்தியை கொடுக்கும்! அவாளுக்கு எவ்வளவு தூரம் அந்த வாழ்க்கை கவலைகளை எல்லாம் அந்த பகவானோட பேரால அவா போக்கிக்கறாங்கிறதை நாம கற்பனைதான் பண்ணி பார்க்க முடியும்.

கீதையில கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு சொல்றார். இங்க திருவல்லிகேணியில தான் பார்த்தசாரதி இருக்கார். அவர் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் தரிசனம் கொடுக்கறார். கொடுத்த உடனே அவன்

“ஸ்தானே ஹ்ருஷீகேச தவப்ரகீர்த்யா, ஜகத் ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்ய தே ச |

ரிக்ஷாம்ஸி பீதானி திஷோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்திச ஸித்த ஸங்கா ||

ன்னு ஸ்லோகங்கள் சொல்லி நமஸ்காரம் பண்றான். ‘எனக்கு நீ சாதாரணமாகவே காட்சி கொடு, நாலு கைகளோட, அப்படீன்னு சொல்றான். அவர் அந்த மாதிரி எப்பவும் போல இருக்கிற உருவத்தை எடுத்துண்டு, கிருஷ்ணன் அர்ஜுனன் கிட்ட சொல்றார்.

नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया ।

शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ॥

நாஹம் வேதைர் ந தபஸா ந தானேன ந சேஜ்யயா |

ஷக்ய ஏவம்-விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவான் அஸி மாம் யதா ||

ன்னு சொல்றார். என்னுடைய விஸ்வரூபத்தை நீ தரிசனம் பண்ணின. இது வேதம் படிச்சதுனாலயோ, தபஸ் பண்ணதாலயோ, தானங்கள் பண்ணறதாலயோ, யக்ஞங்கள் பண்றதாலயோ இந்த தரிசனம் கிடைக்காது.

भक्त्या तु अनन्यया शक्यः अहम् एवंविधोर्जुन ।

ज्ञातुम् द्रष्टुम् च तत्त्वेन् प्रवेष्टुम् च परन्तप ।।

பக்த்யா த்வ் அனன்யயா ஷக்ய: அஹம் ஏவம்-விதோ (அ)ர்ஜுன |

க்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப ||

இப்படி என்னை அறிந்து, தரிசித்து, எனக்குள் புகுவதற்கு பக்தி ஒன்றால் தான் முடியும், அப்படீன்னு கீதா வாக்யம். அப்படி அந்த ப்ரம்மம் ஸமுத்ரம் போல இருக்கு. அந்த பிரம்மத்தை ஒரு கிருஷ்ண ஸ்வரூபத்துல ஒரு மடு போல ஸரஸ் போல தியானம் பண்ணி அதுல ஆனந்தமா ஸ்நானம் பண்ணி அந்த தேஜஸை தீர்த்தம் போல குடிச்சு அவா சம்ஸார தாபத்தை போக்கிக்கறா. மூக கவி இதே மாதிரி ஒரு ஸ்லோகம் சொல்றார்.

दुष्कर्मार्कनिसर्गकर्कशमहस्सम्पर्कतपतं मिलत्

पङ्कं शङ्करवल्लभे मम मनः काञ्चीपुरालङ्क्रिये ।

अम्ब त्वन्मृदुलस्मितामृतरसे मङ्क्त्वा विधूय व्यथां

आनन्दोदयसौधशृङ्गपदवीमारोढुमाकाङ्क्षति ॥

து³ஷ்கர்மார்கனிஸர்க³கர்கஶமஹஸ்ஸம்பர்கதபதம் மிலத்

பங்கம் ஶங்கரவல்லபே⁴ மம மன: காஞ்சீபுராலங்க்ரியே ।

அம்ப³ த்வன்ம்ருʼது³லஸ்மிதாம்ருʼதரஸே மங்க்த்வா விதூ⁴ய வ்யதா²ம்

ஆனந்தோ³த³யஸௌத⁴ஶ்ருʼங்க³பத³வீமாரோடு⁴மாகாங்க்ஷதி ॥

ன்னு சொல்றார். துஷ்கர்மார்க்க: என்னுடைய துஷ்கர்மங்கள் வினைகள் எல்லாம் அர்க்கனைப் போல, சூரியனைப் போல என்னை தவிக்க வைக்கறது. அந்த கிரணங்களால ரொம்ப தாபம் அடைஞ்சிருக்கேன் நான். இதோட ‘மிலத் பங்கம்’ அது பழைய வினைகள். இப்ப பண்ணின பாவங்கள் எல்லாம் இன்னும் என் மேல சேறாட்டம் ஒட்டிண்டு இருக்கு. ‘சங்கர வல்லபே’ – சங்கரனுடைய மனைவியே, ‘மம மன:’ – என் மனம் இந்த மாதிரி தவிச்சுண்டிருக்கு. இந்த சம்ஸார தாபத்துல ‘த்வன்ம்ருʼது³லஸ்மிதாம்ருʼதரஸே ‘உன்னுடைய புன்னகை ம்ருதுலஸ்மித அமிர்தரஸே – அமிர்தமா இருக்கற மந்தஸ்மிதம் என்ற மடுவில் நான் மூழ்கி ‘மந்க்த்வா’ நன்னா முங்கி குளிச்சு ‘விதூ⁴ய வ்யதா²ம்’ – என்னுடைய இந்த தாபத்தை எல்லாம் போக்கிண்டு ஆனந்தோ³த³யஸௌத⁴ச்ருʼங்க³பத³வீம் ஆனந்தம் என்கிற மலையின் உச்சியில் மாரோடு⁴மாகாங்க்ஷதி – ஏறுவதற்கு ஆசை படுகிறது. என்னுடைய மனம் விரும்புகிறது, அப்படீன்னு சொல்றார். வருஷா வருஷம் இந்த டிசம்பர் கடைசி வாரத்துல திருத்தணியில போய் படிவிழா பண்ணிட்டு வருவோம். திருத்தணியில அந்த மாதிரி ஒரு அமைப்பு. அந்த குளத்துல ஆனந்தமா ஸ்நானம் பண்ணி படியில பூஜை பண்ணி மேல போயி அந்த முருகப் பெருமானை தரிசனம் பண்றது, இந்த ஸ்லோகத்தை படிக்கும் போது எனக்கு அந்த ஞாபகம் வர்றது.

அந்த மாதிரி பகவான் எங்கும் இருந்தாலும் ஞானிகள் ஒரு கோவில்ல அவாளுடைய தபோ சக்தியினால அந்த பகவானை ஒரு அர்ச்சாவதாரத்துல பார்க்கும்படியா ஸ்தாபிச்சு கொடுத்ததுனால அதோட நமக்கு ஒரு லவலேசம் ஒரு அனுபவம் கிடைக்கறது. மஹான்கள் அந்த எங்கும் இருக்கும் பரம்பொருளை அந்த பகவானை தன்னுடைய ஞான சக்தியினால் பார்த்து அப்பறம் எங்கும் அந்த பகவானை பார்க்கறா. அந்த அனுபவம் தான் பேரானந்தம். அதைதான் இந்த ஸ்லோகத்துலயும் நாம பார்க்கறோம். அடுத்த ஸ்லோகத்துல

सरसिजनयने सशङ्खचक्रे मुरभिदि मा विरमस्व चित्त रन्तुम् ।

सुखतरमपरं न जातु जाने हरिचरणस्मरणामृतेन तुल्यम् ॥ १२ ॥

ஸரஸிஜனயனே ஸஶங்க²சக்ரே முரபி⁴தி³ மா விரம ஸ்வ சித்த ரந்தும் ।

ஸுக²தரமபரம் ந ஜாது ஜானே ஹரிசரணஸ்மரணாம்ருʼதேன துல்யம் ॥ 12 ॥

இந்த முகுந்தமாலையில ஒன்பது விதமான பக்தி சொல்லியிருந்தாலும் இதுல இந்த பாதஸ்மரணம், நாம சங்கீர்த்தனம் இந்த இரண்டையும் ரொம்ப அதிகமா குலசேகர ஆழ்வார் சொல்றார். இந்த ஸ்லோகத்துக்கு என்ன அர்த்தம்னா, ‘ஸரஸிஜனயனே’ அப்படீன்னா தாமரைக் கண்ணனே ‘ஸசங்க சக்ரே’ கைகளில் சங்கும் சக்ரமும் வெச்சுண்டு இருக்கிற ‘முரபிதி முரனை சம்ஹாரம் பண்ணின அந்த விஷ்ணுவிடத்தில் ‘மா விரம ஸ்வசித்த ரந்தும்’ – தன்னுடைய மனசையே கூப்பிட்டு ஏ நெஞ்சமே அந்த பகவானிடத்தில் ரமிப்பதை மறந்துடாதே. எப்பவும் அங்க ரமிச்சுண்டே இரு. ‘ஸுகதரமபரம் நஜானேதுஜானே’ இதை காட்டிலும் சுகமான விஷயம் ஒண்ணுமே கிடையாது. ஹரி சரண ஸ்மரணம் என்கிற அந்த அமுதத்துக்கு துல்யமான இன்னொரு வஸ்து உலகத்துல கிடையாது. அதை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோன்னு சொல்றார். நம்ம மனசு தான் ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுராத்மான: நம்ம மனசுதான் நமக்கு பந்து, நம்ம மனசுதான் நமக்கு எதிரி. அதனால மனசையே கூப்பிட்டு சொல்றார். உனக்கு நன்மையான கார்யத்தையே செய். இந்த விஷ்ணுவினிடத்திலயே ரமிச்சுண்டு இரு.

இந்த மூணும், ஸரசிஜ நயனே, அப்படீங்கிறது பகவானோட சௌந்தர்யத்தை குறிக்கறது. ஸசங்க சக்ரே அப்படீங்கிறது, அவர் சங்கு சக்ரம் வெச்சுண்டு இருக்கார். அதனால ஆபத்துல இருக்கிரவாளை காப்பாத்துவார். நமக்கு அபயம் கொடுப்பார். முரபிதி முரனை சம்ஹாரம் பண்ணவர், அப்படீங்கிறதுனால ரக்ஷணம் பண்றதுக்கு அவருக்கு இருக்கிற சாமர்த்தியம். இந்த மூணுத்தையும் நினைச்சு அந்த கிருஷ்ணனிடத்துலயே நீ ரமிச்சிண்டு இரு. வேற இடத்துல போகாதே. இதைக் காட்டிலும் சந்தோஷமான விஷயம் எதுவுமே கிடையாதுன்னு சொல்றார்.

ஸ்வாமிகள் வேடிக்கையா சொல்வார். சுவாமிகளுக்கு உடம்புல வியாதிகள் இருந்தது. பணக் கஷ்டம் இருந்தது. குடும்பத்துல கஷ்டம் இருந்தது. ஆனால் அவர் வரவாளுக்கெல்லாம் பகவானோட பேரால ஆறுதல் சொல்லிண்டு இருந்தார். இடையறாது பஜனம் பண்ணிண்டு இருந்தார். அவர் சொல்வார். ‘என்னை பார்க்கறவா சில பேர், பாவம் அவருக்கு வாழ்க்கையில பல கஷ்டம். ஒரு ஆறுதலுக்காக இதையெல்லாம் படிச்சுண்டு உட்கார்ந்திருக்கார்னு சொல்வா. நான் ஆறுதலுக்காக படிக்கிறேனா இருக்கும். ஆனா இந்த குலசேகர பெருமாள் சக்கரவர்த்தி. அவரே சொல்றாரே. இந்த பகவானுடைய சரண ஸ்மரணத்துக்கு துல்யமான அமிர்தம், இது போன்ற ஆனந்தத்துக்கு இணையே கிடையாதுன்னு சொல்றாரே. அவருக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே. ஏன்னா, அது தான் உண்மை. இந்த பகவானோட பஜனம்ங்கிறது ஆறுதலுக்காக பண்றது கிடையாது. அது தான் எல்லாத்தைக் காட்டிலும் ஆனந்தத்தை கொடுக்கக் கூடியது, பண்ண வேண்டியது அப்படீங்கிறதை மகான்கள் எல்லாருமே சொல்லியிருக்கான்னு ஸ்வாமிகள் சொல்வார். ராஜாவே சொல்றார். எல்லா ராஜ போகங்களை காட்டிலும் பகவானோட பாத ஸ்மரணம் தான் ‘சுகதரம்’ – எல்லா சுகத்துக்கும் மேலான சுகம் இதுன்னு சொல்றார்.

போன ஸ்லோகத்துல ‘பகவானோட திவ்ய மங்கள விக்ரஹத்தை நினைச்சு அந்த மடுவுல ஸ்நானம் பண்ணி அந்த மங்கள விக்ரஹத்துல இருந்து வரக் கூடிய தேஜஸ் என்கிற ஜலத்தை குடிச்சு, இந்த சம்ஸார தாபத்தை எல்லாம் போக்கிண்டு நான் சௌக்யமா இருக்கேன்’ ன்னு சொல்றார். அப்படித் தான் ஸ்வாமிகள் இருந்தார். இந்த சம்ஸார தாபம் அவரை ஒண்ணுமே பண்ணலை. மூணு விதமான தாபங்களும் பகவத் பக்தனை ஒண்ணும் பண்ணாதுங்கிறதை காண்பிக்கறதுக்காகவே வாழ்ந்தவர் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். அவர் என்ன பண்ணிண்டு இருந்தார்னா, இந்த ஸ்லோகத்தை சொல்றதுதான் பண்ணிண்டு இருந்தார். பகவானை ஒரு க்ஷணம் கூட மறக்காம அவரோட கதைகளையும், அவரோட ரூபத்தையும், அவரோட நாமங்களையும் நினைச்சு பகவானோட த்யானத்துலயே மூழ்கி இருந்தார். அது தான் பேரானந்தம்னு அவரை பார்த்தவாளும் புரிஞ்சுண்டா. அவரும் அதையே தான் சொன்னார். நீங்களும் இதை பண்ணிப் பாருங்கோன்னு வழி காண்பிச்சார்.

सरसिजनयने सशङ्खचक्रे मुरभिदि मा विरमस्व चित्त रन्तुम् ।

सुखतरमपरं न जातु जाने हरिचरणस्मरणामृतेन तुल्यम् ॥ १२ ॥

இப்படி ஒரு அழகான ஸ்லோகம். நாளைக்கு ‘மாபீர் மந்தமன:’ என்கிற ஸ்லோகத்தை பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா.

Series Navigation<< முகுந்தமாலா 9, 10 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.