முகுந்தமாலா 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை (14 minutes audio Meaning of Mukundamala slokams 13 and 14)
குலசேகர ஆழ்வாருடைய முகுந்த மாலைங்கிற அற்புதமான ஒரு ஸ்துதியை படிச்சுண்டு இருக்கோம். குலசேகர ஆழ்வார் பக்தியோட ரசத்தை, அந்த அனுபவத்தை விவரிச்சு, அந்த பக்தி மார்கத்துல போறது அவ்வளவு சுலபம், பகவானுடைய நாமங்களை ஜபிச்சு அவனுடைய கதைகளைக் கேட்டு பக்தி வந்துடும். அவனுடைய பாத ஸ்மரணம் தான் எல்லாத்துக்கும் மேலான ஸுகம். ஸுகதரம் – எல்லாத்துக்கும் மேலான ஸுகம் இதுதான்னு சொல்றார். நாலு புருஷார்த்தங்களும் எனக்கு வேண்டாம். எனக்கு பக்தி போதும்னு சொல்றார். எல்லாத்துக்கும் மேலான ஸுகம் இதுதான் அப்படீங்கிறார். மஹான்கள் என்ன பண்றா. அவாளோட அந்த அனுபவத்தை யாராவது ஸத்பாத்ரம் இருந்தான்னா அவா புரிஞ்சுகட்டும் என்கிறதுக்காக அதை விளக்கி சொல்றா. சொல்லும் போது வரக்கூடிய சந்தேகங்களுகெல்லாம் பதில் சொல்றா. இப்படி சம்பாதிக்கறதையும் விட்டுட்டு, வாழ்க்கையில அனுபவிக்கறதையும் விட்டுட்டு, பகவானோட பஜனத்தை பண்ணிண்டிருந்தா என்ன கிடைக்கும், இதுல. இது ரொம்ப சுகம்னு நீங்க சொல்றேள். எங்களுக்கு இதுல என்ன ப்ரயோஜனம்னு புரியவே இல்லையேன்னு கேட்டா, அதுக்கு ஒண்ணு ஒண்ணா பதில் சொல்லிண்டு வரார், இந்த 13 ஆவது ஸ்லோகத்துல
माभीर्मन्दमनो विचिन्त्य बहुधा यामीश्चिरं यातनाः
नामी नः प्रभवन्ति पापरिपवः स्वामी ननु श्रीधरः ।
आलस्यं व्यपनीय भक्तिसुलभं ध्यायस्व नारायणं
लोकस्य व्यसनापनोदनकरो दासस्य किं न क्षमः ॥ १३ ॥
மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:
நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।
ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥
ன்னு ஒரு ஸ்லோகம். நீ பகவானிடத்தில் பக்தி பண்ணினேன்னா எமன் கிட்ட நீ பயப்பட வேண்டாம். சிவன் சார் புஸ்தகத்துல ‘மரணத்தை வரவேற்பது என்பது வேதாந்த பக்குவங்கள்ல ஒரு சின்ன பக்குவமாகும்’ ன்னு வேடிக்கையா எழுதியிருப்பார். அவரோட styleஏ தனியா இருக்கும். அப்படி இந்த எமனுடைய தூதர்கள் வந்து என்னை மிரட்டுவாளேன்னு பயம் இல்லாம நீ அநாயாசமா பகவானோட பாதங்களை போய் அடையலாம். இது பக்தியில ஒரு பிரயோஜனம்ங்கிறதை இந்த ஸ்லோகத்துல சொல்றார். மந்தமன: – பலவிதமான கவலைகளை பட்டுண்டிருக்கிற மனமே உனக்கு ஒண்ணு சொல்றேன் கேளு. ‘யாமீஸ்சிரம் யாதனஹா’ – யமனுடைய பலவிதமான யாதனைகள் அவன் கொடுக்கக் கூடிய தண்டனைகள். வயசு ஏற ஏற பண்ண பாபங்கள் எல்லாம் சேர்ந்து இந்த ஜரா அப்படீங்கிற முதுமையே ஒரு பெரிய தண்டனையாட்டம் இருக்கு. இதுக்கு அப்புறம் பண்ண பாவம் எல்லாம் சேர்ந்து அடுத்தது நரக வேதனை படப்போறோம் ன்னு நினைக்கறதுனால தான் வயசான காலத்துல பல கவலைகள் வந்துடறது. அந்த கவலைகள் எல்லாம் சேர்ந்து வியாதியா வர்றது. வியாதியினால கவலை. கவலைனால வியாதி. அப்படியே போய் சேர்ந்துடறா.
சிவன் சார் சொல்வார் ‘மரணம்ங்கிறது எல்லாருக்குமே விமோசனம் தான். ஞானிகள் அதை ரொம்ப சௌக்யமா எடுத்துண்டுடறா. அதுக்கு முன் நிலைகள்ல சாதுக்கள், விவேகிகள் எல்லாம் ‘இதை விட ஒரு நல்ல உயர்ந்த நிலைக்குத் தான் போகப் போறோம்’ என்கிறதுனால மரணத்தை வரவேற்கறா. பாமரன் பாபிக்கு கூட அது நல்லதுதான். ஏன்னா, அவன் பாபம் பண்றது கொஞ்ச நாள் நிக்குமே’ ன்னு சொல்லியிருக்கார். அப்படி அந்த மரணம் வரும்போது அந்த மரண வேதனைன்னு கடைசியில ரொம்ப கஷ்டம். அதுக்கப்புறம் நரக வேதனை. குலசேகரர் சொல்றார். இந்த யாதனைகள் எல்லாம் பத்தி நினைச்சு ‘மாபீஹி; – நீ பயப்படாதே. ஏன்னா நீ பக்தி பண்ணினேன்னா. நீ இந்த உலகத்தவர்களுக்கு வேலை செஞ்சாதான் பலவிதமான பாபங்கள் பண்ணனும். அதுனால உனக்கு இந்த நரக வாதனைகள் வரும். அதை நினைச்சு உனக்கு மனசுக்குள்ள கவலைகள் ஏறும். நீ பகவானோட பஜனத்தை உன் வாழ்க்கையில பண்ணிண்டே வந்தேன்னா, ‘ஸ்வாமி நனுஸ்ரீதரஹ’ – உனக்கு ஸ்வாமி யாரு. யஜமானன் யாருன்னா, ‘ஸ்ரீதரஹ’ – லக்ஷ்மிபதியான விஷ்ணு பகவானே, உன்னைத் தன்னைச் சேர்ந்தவனாக நினைச்சுண்டு காப்பாத்தப் போறார். அதனால மாபீஹி: – இந்த யமனுடைய தண்டனைகள் எல்லாம் நீ நினைச்சு பயப்பட வேண்டாம். “நாமீ ந: ப்ரபவந்தி பாபரிபவ:” பாபிகளுக்குத் தான் இந்த யமதூதர்கள் எதிரிகள். ‘ந அமி ந: ப்ரபவந்தி’ – அந்த துக்கம் நம்மள பாதிக்காது. ஏன்னா ‘ஸ்வாமி நனுஸ்ரீதரஹ’
இந்த இடத்துல ஸ்ரீதரஹ எங்கிறதுக்கு அப்படி ஏதாவது பகவான் இவன் ரொம்ப பாபின்னு உதாசீனம் பண்ணனும் நினைச்சா கூட தாயார் லக்ஷ்மி தேவி நமக்காக சிபாரிசு பண்ணி ‘இந்த குழந்தையை காப்பாத்துங்கோ. உங்க பேரைச் சொன்னானே ன்னு சொல்வாளாம். ஸ்ரீதரஹ லக்ஷ்மிபதியான ஸ்ரீயஹ்பதியான எம்பெருமா ன்னு சொல்றார்.
அடுத்த இரண்டு வரியும் ரொம்ப அழகு. ‘ஆலஸ்யம் வ்யபநீய பக்தி சுலபம்’ -இந்த பகவான் பக்திக்கு கட்டுப் படறான். ‘த்யாஸ்வ நாராயணம்’ நாராயண: எங்கிறதுக்கு நரர்கள் அடைய வேண்டிய ஒரு பதம்ன்னு அர்த்தம். பகவானைத் தான் நாம அடையணும். அதை எப்படி அடையலாம்னா பக்தர்களுக்கு ரொம்ப சுலபமானவன் அவன் – அவனை நீ ‘ஆலஸ்யம் வ்யபநீய’ உன்னுடைய சோம்பலை ஒழித்து ‘த்யாஸ்வ நாராயணம்’அவனோட தியானத்தை நீ பண்ணு. சும்மா தூங்கிண்டு இருக்காதே. இரண்டு ஆவர்த்தி சஹஸ்ரநாமம் சொல். இப்படி அவனோட பக்தியை நீ பண்ணினால் ‘லோகஸ்ய வ்யஸனாபனோத³னகர:’ – உலகத்துக்கு வர்ற கஷ்டங்களையே அவன் போக்குவான். அவதாரம் எடுத்து ராக்ஷதர்கள் கிட்டயிருந்து பூமியை காப்பாத்தினான். அப்படி உலகத்தோட கஷ்டத்தையே போக்கறவன் சர்வம் விஷ்ணுமயம் ஜகத்துனு சொல்ற மாதிரி. அப்பேற்பட்ட பகவான் ‘தா³ஸஸ்ய கிம் ந க்ஷம:’ – உனக்கு வர்ற கஷ்டத்தை போக்க மாட்டானா? எப்படி மார்கண்டேயனுக்காக பரமேஸ்வரன் வந்த யமனை காலால உதைச்சாரே, அந்த மாதிரி நீ விஷ்ணு பக்தி பண்ணிண்டே வந்தால் யமனுடைய வாதனைகள் உன்னை ஒண்ணும் பண்ணாமல் அந்த விஷ்ணு பகவான் உன்னை தன்னோட பாதங்களில், மடியில ஏத்துப்பார்னு ஒரு அழகான ஸ்லோகம்.
மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:
நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।
ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥
இந்த பாபங்கள் எல்லாம் பண்றதுக்கு ஒரு முக்யமான காரணம், இந்த உலகத்தில் இருக்கிறவர்களை என்னைச் சேர்ந்தவர்கள்னு நினைச்சு அவாளுக்குகாகத் தான் நான் பண்றேன். சம்பாதிக்க வேண்டாமா? குழந்தைகளுக்காக சேர்த்து வைக்க வேண்டாமா? இப்படியெல்லாம் நாம நினைச்சுக்கறோம். அதுக்கு அடுத்த ஸ்லோகத்துல பதில் சொல்றார்.
भवजलधिगतानां द्वन्द्ववाताहतानां सुतदुहितृकलत्रत्राणभारार्दितानाम् ।
विषमविषयतोये मज्जतामप्लवानां भवतु शरणमेको विष्णुपोतो नराणाम् ॥ १४ ॥
ப⁴வஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்
ஸுதது³ஹித்ருʼகலத்ர த்ராணபா⁴ரார்தி³தாநாம் ।
விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்
ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 14 ॥
இந்த சுத, துஹித்ரு, களத்ரம் – மகன், மகள், மனைவி இவாளெல்லாம் காப்பாத்தப் போறேன் நான் என்ற ‘த்ராணபா⁴ரார்தி³தாநாம்’ அவாளை காப்பாத்தற பாரத்தை இவன் சுமக்கறான். நாம எங்க காப்பத்தறோம்? மேலும் யாரு நம்மை சேர்ந்தவா? இந்த மமதா அப்படீங்கிறது ஒரு பிசாசு மாதிரி நம்மளைப் பிடிச்சுண்டு இருக்கு. என்னுடைய குழந்தைகள், என்னுடைய பணம், என்னுடைய வீடு அந்த பாரத்தை நாம சுமந்து அதனால ரொம்ப தவிச்சுண்டு இருக்கோம். இந்த பாரத்தை எங்க இருக்கும்போது சுமக்கறோம்ன்னா ‘பவ ஜலதி கதானாம்’ – இந்த சம்ஸார கடல்ல இருக்கும்போது தலையில ஒரு பாரம் வேற. ‘த்வந்த்வ வாதாஹதானாம்’ – இதுல எனக்கு இவனைப் பிடிக்கும், அவனைப் பிடிக்காது. இந்த மாதிரி யோசனைகள். காத்தால நஷ்டம் வந்தது. ராத்திரி லாபம் வந்தது. இந்த மாதிரி இந்த ஸுகதுக்கங்கள் எல்லாம் போட்டு காத்து மாதிரி அடிக்கிறது. நாம ஏற்கனவே கடல்ல தத்தளிச்சுண்டு இருக்கோம். இந்த மாதிரி காம க்ரோதாதிகள் காற்று அடிக்கிறது. அது இல்லாம என்னுடையவா, என்னுடைய வீடு அதுக்கு insurance என்னுடையது, இதை நான் காப்பாத்தணும், அப்படீன்னு கணக்கு போட்டுண்டு, அந்த பாரத்தை வேற நாம சுமந்துண்டு இருக்கோம். இதுக்கு நடுவுல ‘விஷம விஷய தோயே’ – இந்த கடல் ஜலம் என்ன ஜலம்னா, விஷய சுகம்தான். இந்த பவக் கடல்ல இருக்கிற ஜலம் அது ரொம்ப சுகமா இருக்குன்னு நீ நினைச்சு அனுபவிக்கற. ஆனா அது விஷ மயமானது. அது உன்னுடைய புத்தியை கெடுக்கக் கூடியது. இந்த ஜலத்துல மூழ்கிண்டு இருக்க.
ஆனா இந்த கடல்ல போக சுலபமா ஒரு வழி சொல்றேன்னு குலசேகர ஆழ்வார் சொல்றார். ‘மஜ்ஜதாமப்லவாநாம் ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம்’ – இப்படிபட்ட நரர்களுக்கு அடைக்கலம், அவாளைக் காப்பாத்தறதுக்கு ஒரே ஒரு வஸ்துதான் இருக்கு. அது பேர் விஷ்ணு என்கிற கப்பல் எங்கறார். ‘விஷ்ணு போதோ நராணாம்’ – ஒரு நல்ல கப்பல் கிடைச்சுடுதுன்னா நீ உன் பாரத்தை கொண்டு போகலாம். அந்த கப்பல்ல ஏறி உட்கார்ந்துக்கலாம். அந்த கப்பல் எவ்வளவு காத்து அடிச்சாலும் சரி, எவ்வளவு ஆழமான ஜலமா இருந்தாலும் சரி அதெல்லாம் ஒண்ணும் நீ கவலைப் பட வேண்டாம். கப்பல் பாத்துக்கப் போறது. உன்னுடைய சுமையை நீ கப்பல்ல இறக்கி வெச்சுடலாம். அது மாதிரி ‘விஷ்ணு போத: விஷ்ணு என்ற கப்பலில் நீ ஏறிண்டேன்னா இந்த சம்சாரக் கடலை பத்தி நீ கவலைப் படவேண்டாம். இங்க பாகவதத்துல இருந்து அழகான ஒரு quotation கொடுத்திருக்கார். “த்வயா ஹி குப்தா: விசரந்தி நிர்பயா:விநாயகாநீகபமூர்தஸு ப்ரபோ” ன்னு சொல்றார். பகவானை அடைந்தவர்கள் அவனால் நாற்புறமும் ரக்ஷிக்கப்பட்டவர்களாய் இடையூறுகளின் தலைகளை மிதித்துக் கொண்டு நிர்பயமாக எங்கும் சஞ்சரிப்பார்கள், அப்படீன்னு சுகஸ்வாமி பாகவதத்துல சொல்றார், அப்படீன்னு ஒரு quotation கொடுத்திருக்கார்.
அந்த மாதிரி த்ருடமான விஷ்ணுங்கிற கப்பல் கிடைச்சுடுத்துன்னா நாம எதுக்கும் பயப்படாம சந்தோஷமா இந்த வாழ்க்கையை கடந்துடலாம்னு சொல்றார். இந்த என்னுடயதுங்கிற மமதை போகணும். நான் என்பது அஹங்காரம், அஹந்தா. என்னோடது என்பது மமதா. இந்த மமதைங்கிற பிசாசு நம்மளை பிடிச்சுண்டிருக்கு. அதோட பிடியிலிருந்து கொஞ்சம் விட்டாக் கூட அந்த அளவுக்கு நமக்கு நிம்மதி. அந்த பிசாசு எவ்ளோ பிடிச்சு நம்மள ஆட்டறதோ அவ்ளோ பாடுபடறோம். அதோட பிடி ஓரளவு குறைஞ்சுதுன்னாக் கூட அந்த அளவுக்கு நமக்கு வாழ்க்கையில நிம்மதி கிடைக்கும். மூகபஞ்ச சதியில பாதாரவிந்த சதகத்துல அம்பாள் பாதத்தை மந்திரவாதின்னு அழகான ஒரு உவமை சொல்லி ஒரு ஸ்லோகம்.
महामन्त्रं किञ्चिन्मणिकटकनादैर्मृदु जपन्
क्षिपन्दिक्षु स्वच्छं नखरुचिमयं भास्मनरजः ।
नतानां कामाक्षि प्रकृतिपटुरच्चाट्य ममता-
पिशाचीं पादोsयं प्रकटयति ते मान्त्रिकदशाम् ॥
மஹாமந்த்ரம் கிஞ்சின்மணிகடகநாதை³ர்ம்ருʼது³ ஜபன்
க்ஷிபந்தி³க்ஷு ஸ்வச்ச²ம் நக²ருசிமயம் பா⁴ஸ்மனரஜ: ।
நதாநாம் காமாக்ஷி ப்ரக்ருʼதிபடுரச்சாட்ய மமதா-
பிஶாசீம் பாதோ³ऽயம் ப்ரகடயதி தே மாந்த்ரிகத³ஶாம் ॥ 36 ॥
ன்னு ஒரு ஸ்லோகம். அம்மா காமாக்ஷி, உன்னோட பாதம் ஒரு மந்திரவாதி மாதிரி இருக்குங்கிறார். மந்த்ரவாதின்னு அந்த காலத்துல ஒரு profession. அவா என்ன பண்ணுவா. விபூதியை நாலா பக்கமும் தூவிண்டு மந்த்ரங்கள் எல்லாம் ஜபிச்சுண்டு வேப்பிலை அடிச்சு பிசாசு ஓட்டுவா. அந்த மாதிரி உன்னுடைய பாதம் ஒரு மந்த்ரவாதியோட வேலை பண்றது. எப்படி பண்றதுனா, அம்பாள் கால்ல சலங்கை கட்டியிருக்கு. அந்த சலங்கை ஒலிங்கிறது மந்த்ரம் ஜபிக்கிற மாதிரி இருக்கு. இந்த நக காந்தி வெள்ளை வெளேர்னு இருக்கு. அது எங்கும் பரவறது. அது நாலாபக்கத்துலயும் விபூதியை தூவற மாதிரி இருக்கு. என்ன பிசாசை ஓட்டறதுன்னா, “மமதா பிசாசீம்” உன்னுடைய பாதம் என்கிற மந்த்ரவாதி என்னுடைய மமதைங்கிற பிசாசை ஓட்டறது, என்கறார், மூககவி.
அந்த மாதிரி நமக்கு இந்த “சுத துஹித்ரு களத்ர தரான பாதார்த்தி தானாம்” அப்படீன்னு இந்த குடும்ப பாரத்தை நாமதான் சுமக்கறோம்னு நினைக்காம அதுக்காக தப்பு வழியில சம்பாதிக்காம அதுக்கான நேரத்துல பகவானோட பஜனத்துல கழிச்சோமேயானால், முந்தின ஸ்லோகத்துல சொன்ன மாதிரி ‘நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ:’ – பாபிகளை எல்லாம் யமபடர்கள் வந்து கூட்டிண்டு போய் எம பட்டணத்துல தண்டனை கொடுக்கப் போறா. ‘ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர:’ – நீ தான் பகவானோட பஜனத்தை பண்ணியே. உனக்கு சுவாமி ஸ்ரீயஹ்பதியான ஸ்ரீமந்நாராயணன் சாக்ஷாத் விஷ்ணு பகவான், அதனால நீ கஷ்டப் படாம சுகமா அநாயாசமா இங்க மரணம். அதற்கப்பறம் வைகுண்டத்துக்கு போய்ச் சேருவே ன்னு இந்த பக்தியோட ப்ரயோஜனங்களா சில ஸ்லோகங்கள் சொல்றார். அதுல இந்த இரண்டைப் பார்த்தோம். பாக்கி நாளைக்குப் பார்ப்போம்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்…கோவிந்தா கோவிந்தா.
3 replies on “முகுந்தமாலா 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை”
very intersting to read
Periyavaa Charanam Sharanam. Puriyardu. Adukke Periyavaa periya Anugraham panni irukka.
Pedai manasu.. innum evlo pokkisham irukku puriya padardukki..
anda Dayaparan daan karai serkkanum.
Shree Gurubhyo Namaha
Thank you.
இந்தக் குடும்ப பாரத்தை நாம் தான் சுமக்கிரோங்கிற நினைவு எத்தகைய பேதமை ! ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் அவன் அருளன்றி நடக்குமா ?
மார்க்கண்டேயன், பிரகலாதன் துருவன் போன்ற குழந்தை பக்தர்களின் சரித்திரம் போதுமே இதை நிரூபிக்க !
சதா அவன் தாள்கள் பற்றி விட்டால் இறப்பு பற்றி சிந்தனை ஏது ?
அவன் அருள் இருந்தால்தான் அவன் தாள்களைப் பற்றவும் இயலும் அல்லவா?
இங்கு மூக பஞ்ச சதி பாதாரவிந்த சதகம் மேற்கோள் காட்டியது சாலப்.பொருந்துமாறு அமைந்துள்ளது சிறப்பு !
அம்பாளின் பாத சலங்கை ஒலி மந்த்ரா ஜெபம் போல் இருப்பதாகவும், வெண்ணிற காந்தி விபூதி தூவி மந்திரம் ஜபிப்பதுபோலவும் சொன்ன உதாரணம் மிகச் சிறப்பு !
பாதம் பற்றினால் பாசம் விலகும் !
ஸதா நாமஸ்மரணையில் மனம் இருந்தால் தீவினை யாவும் பொசுங்கி விடும் என்பதனை தெற்றென விளக்கும் ஸ்தோத்திரங்கள் !
அருமையான விளக்கம் !
ஓம் நமோ நாராணாய நம: