முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை (12 minutes audio Meaning of Mukundamala slokams 31 and 32)
முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம்
नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा
सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति ।
यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं
सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥
நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்
ஸேவாயை ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 31 ॥
ன்னு ஒரு ஸ்லோகம். புருஷோத்தமஹ ன்னு வேதத்துலயும், இந்த உலகத்துல பகவான் அவதாரம் பண்ணி ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்த போது உலகமே இவன்தான் புருஷோத்தமன்னு கொண்டாடினா. அந்த பகவான் மூவுலகத்தையும் ஒரு குடைக்கு கீழ வெச்சு ஆண்டவன். ஆள்பவன். நாம வழிபட வேண்டிய ஒரே எஜமானன் அவன் தான். அவனை வழிபட்டால், அவனோட காரியத்தைப் பண்ணினா என்ன கொடுப்பான்னா, ‘ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி’ – அவன் தன்னை வழிபடுகிறவர்களுக்கு தன்னுடைய ஸ்தானத்தையே கொடுதுடறான். தன்னையே கொடுக்கறான். அப்பேற்பட்ட அந்த நாராயணன் நமக்கு எஜமானனாக ஸ்வாமியாக விளங்கும்போது ‘யம் கஞ்சித்புருஷாத⁴மம்’ – இவர் புருஷோத்தமர் பகவான். நாம் ஒரு புருஷர்களுக்குள் அதமனா, கர்வியா, ரொம்ப ராஜஸ தாமஸ குணங்கள் நிறைந்தவனா உள்ள ஒருத்தன் கிட்ட ‘கதிபயக்³ராமேசம்’ – ஏதோ ஒரு கிராமத்துக்கு, இரண்டு கிராமத்துக்கு தலைவனா இருப்பான். எவ்ளோ பெரியவனா இருந்தா என்ன? அவனுடைய செல்வமேல்லாம் த்ரிஜகத்துக்கும் தலைவனான, லக்ஷ்மிபதியான பகவானுடைய செல்வத்துக்கு நிகராகுமா? இருந்தாலும் ஏதோ பணக்காரன்னு நாம் நம்பிண்டு ‘அல்பார்த²த³ம்’ அவனுக்கு எவ்ளோ வேலை பண்ணாலும் ரொம்ப அல்பமா தான் கொடுக்கப் போறான். ரொம்ப கஞ்சப்பட்டுண்டு, கஷ்டப் பட்டுண்டு ஏதோ இரண்டு பைசா கொடுக்கப் போறான். அவன்கிட்ட போயி எனக்கு ஏதாவது வேலை கொடுன்னு கெஞ்சிண்டு நிற்கறோம். ‘நரமஹோ மூடா⁴ வராகா வயம்’ நம்மை மாதிரி முட்டாள்கள், அறிவில்லாதவர்கள் யாராவது உண்டா? ன்னு சொல்றார்.
முந்தின ஸ்லோகங்கள்ல நாராயண நாமத்துடைய மஹிமையை சொன்னார். நாராயண நாமத்தை ஜபிச்சிருந்தா எனக்கு இந்த மாதிரி திரும்ப வந்து கர்பவாஸாதி துக்கத்தை அனுபவிச்சு இந்த பவக்கடல்ல விழுந்துருக்க மாட்டேன். போன ஜன்மத்துல நான் நாராயண நாமத்தை ஜபிக்காம போயிட்டேன்னு வருத்தப் படறார். நாராயண நாமத்தை சொன்னால் பகவான், பாபியா இருந்தா கூட அவனுடைய ஆசைகளையெல்லாம் பூர்த்தி பண்ணுவார்ன்னு சொன்னார். இந்த நாராயண நாமத்தோட மஹிமை சொல்லணும்னா அஜாமிள உபாக்யானம்னு ஸ்ரீமத் பாகவதத்துல இருக்கு. அஜாமிளன்னு ஒருத்தன் இருக்கான். அவன் வேதம் படிச்சு நல்ல வழியில வாழ்க்கையை நடத்திண்டிருக்கான். அவனுடைய அப்பா அம்மாவை பார்த்துக்கறான். ஒரு நாள் அவன் அப்பா ‘நீ காட்டுல போயி விறகு எடுத்துண்டு வா’ ன்னு சொல்றார். அவன் காட்டுக்கு வந்த இடத்துல யாரையோ பார்க்கறான். எல்லாத்தையும் மறந்து, அவளோட இருந்து அவ கிட்ட பத்து பிள்ளைகள் பெற்று கொள்கிறான். பத்தாவது பிள்ளைக்கு நாராயணன்னு பேர் வைக்கறான். அவனுடைய அந்திம காலம் வர்றது. எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்து அவன் ரொம்ப மோசமான வாழ்க்கை நடத்தியிருந்தாலும் அவன் அந்த கடைசி நிமிஷத்துல உயிர் பிரியும்போது, நாராயணான்னு கூப்பிடறான். தன் பத்தாவது பிள்ளையைத் தான் நினைக்கறான். பகவானைக் கூட நினைக்கலை. நாராயணான்னு கூப்பிட்டுண்டு உயிரை விட்டுடறான். எம படர்கள் இவனைப் பிடிச்சுண்டு போய் நரகத்துல கடுமையான தண்டனை கொடுக்கணும்னு வரா. நல்ல ஜன்மா கிடைச்சுக் கூட இப்படி வீணடிச்சான்னு அவன் உயிரை பறிக்க வரும்போது விஷ்ணு தூதர்கள் வரா. அவா எமபடர்கள் கிட்ட ‘இவனை நாங்க வைகுண்டத்துக்கு கூட்டிண்டு போகப் போறோம்’ ன்னு சொல்றா. யமதூதர்களுக்கு ஆச்சர்யமா இருக்கு. ‘இவனை எப்படி நீங்க வைகுண்டத்துக்கு கூட்டிண்டு போக முடியும்? ன்னு கேட்ட உடனே ‘இவன் கடைசி நிமிஷத்துல நாராயண நாமத்தை சொன்னான். அதனால இவன் பாபமெல்லாம் போயிடுத்து. நீங்க எமதர்ம ராஜாவையே போய் கேட்டுக்கோங்கோ’ ன்னு சொல்லிட்டு அஜாமிளனை கூட்டிண்டு போயிடறா.
இவா எமதர்ம ராஜாகிட்ட போய் கேட்ட போது ‘ஆமாம். நாமத்தோட மஹிமை அப்பேற்பட்டது. எவன் ஒருவன் உயிர் பிரியும் தருவாயில் நாமத்தை சொன்னால் அவனை பகவான் தன்னைச் சேர்ந்தவனா நினைச்சு காப்பாத்தறார். இனிமேல் அந்த மாதிரி விஷ்ணு பக்தர்கள் பக்கத்துல போகாதேங்கோ’ ன்னு சொல்றார்.
இந்த அஜாமிளனுக்கு ஏதோ ஒரு புண்ய பலத்தினால, அந்த பித்ரு பக்தியினால, அப்பா சொல்கேட்டு காட்டுக்கு கிளம்பின அந்த புண்யமோ, ஏதோ ஒரு பூர்வ புண்யத்தினால அவனுக்கு வாயில நாராயண நாமம் வந்தது. அதனால் அவன் பிழைத்து போனான். ஆனா நமக்கு அந்த மாதிரி நாமம் நாவில் வரதுக்கு என்ன பண்ணனும்னா பகவானுக்கு எப்பவுமே அடிமையா இருக்கணும்னு ஆசைப்பட்டு, வேற ஒருத்தர்கிட்ட போய் பணத்துக்காக காத்து கிடக்காம பகவானுடைய காரியத்தை நாம பண்ணினோம்னா நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் இருக்கும் எளிய தேவைகளை பகவான் பூர்த்தி பண்ணுவார். இவ்ளோ பெரிய உலகத்தையே ஸ்ருஷ்டி பண்ணி, ‘கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும்’ எங்கிற மாதிரி. கல்லுக்குள் தேரை. தேரைன்னா தவளையுடைய tadpole. அது கல்லைப் பிளந்துண்டு வளர்ந்து வெளிய வர்றது. அதுக்கு யார் உணவு கொடுத்தா? கருப்பைக்குள்ள உயிருக்கு யார் உணவு கொடுக்கறா? அந்த பரமன் தான் கொடுக்கறான். அதனால நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன்? யார் கிட்டயாவது போயி வேலை பார்த்தாதான் நடக்கும்னு நீ போய் அல்ப மனிதர்கள் கிட்ட போய் கெஞ்சிண்டிருந்தேன்னா உன்னைவிட முட்டாள் வேற யாரும் கிடையாது. பகவானுடைய காரியத்தை பண்ணுன்னு குலசேகராழ்வார் சொல்றார்.
மஹான்கள் அனுபவம் அது. அவா அதை சொல்றா. பகவானுடைய சேவையை பண்ணி பகவானுக்கு அடிமையா இருந்தா ‘யோகக்ஷேமம் வஹாம்யஹம்’ ன்னு ‘அவாளுடைய தேவைகளை நான் பூர்த்தி பண்ணுவேன்’ ன்னு பகவான் சொல்றார். இந்த பஜனத்துல கிடைக்கற இன்பத்துனால அந்த ஸாதுக்களுக்கு வேற எதுலயும் ருசி இல்லாதுனால அவாளுடைய எளிய தேவைகளை பூர்த்தி பண்றதுக்கு பகவானே யாரையாவது ‘தெய்வம் மானுஷ ரூபேன’ ன்னு யாரயாவது ஒருத்தரை அனுப்பறார். மேலும் பகவத் பஜனத்துல அந்த வழியில இருக்கிறவாளுக்கு ஏற்படக் கூடிய குறைகளை போக்கி, முடிவில் தன்னிடத்தில் சேர்த்துக்கறார். அப்படி அந்த பகவானுடைய காரியத்தைத்தான் பண்ணனும். பகவான் என்ன கொடுப்பான்? பகவானுடைய பஜனம் பண்ணினா ‘ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி’ வேற ஒரு தெய்வம் இவ்ளோ கருணை பண்ணாது. இந்த தெய்வங்களுக்குள்ள தன்னையே கொடுக்கிறவன் இந்த நாராயணன் தான்.
அவன் புருஷகளுக்குள் உத்தமன். ராமருடைய குணங்களை நினைச்சுப் பார்த்தா, அயோத்தியா காண்டம் இரண்டாவது ஸர்கத்துல ஜனங்கள் எல்லாம் ராமனோட குணத்தை புகழ்ந்து பேசி தசரதர் கிட்ட ‘உடனடியாக நீங்க அவனை ராஜாவாக்குங்கோ’ ன்னு வேண்டிக்கறா. அப்ப அவா சொல்றா. ‘ராமன் யாரிடத்துல திருப்தி ஆனானோ அவனுக்கு நிறைய செல்வத்தைக் கொடுப்பார். பக்தனுக்கு எல்லா அனுக்ரஹமும் பண்ணுவார். யார் கிட்ட ராமன் கோபிச்சிண்டானோ அவனை தவறாம தண்டிப்பான்’ ன்னு ஜனங்கள் சொல்றா. அந்த மாதிரி பகவானோட காரியத்தை பண்ணினா கட்டாயமா நம்மை காப்பாத்துவான். அவன் புருஷோத்தமன். அவனுடைய குணங்களை நினைச்சுப் பார்க்கணும். ‘த்ரிஜக³தாமேகாதி⁴ப:’ மூவுலகதுக்கும் அவன்தான் தலைவன். அதனால பகவானுடைய காரியத்தைப் பண்ணு. யாரோ ஒரு மனுஷன்கிட்ட போயி இவன் தான் என்னை காப்பாத்தப் போறான்னு அவனை ஆச்ரயிக்காதே. பகவானை ஆச்ரயித்து அவனுடைய காரியத்தை பண்ணுன்னு குலசேகராழ்வார் சொல்றார். நாம இந்த ஸ்லோகத்தை அடிக்கடி நினைச்சுப் பார்த்துக்கணும். நாம அப்படி இல்லேன்னாலும், நமக்கு வைராக்கியம் இல்லாததுனால இந்த ஸ்லோகம் புரியவே புரியாம கூட போகலாம். ஆனால் இதுதான் சத்தியம். நாம பண்ற வேலை, நமக்கு எல்லாம் சௌரியமாதானே இருக்கு. வேலையும் பிடிச்சிருக்கு. சம்பளமும் சௌரியமா இருக்கு. இதெல்லாம், இவர் சொல்ற பேச்சு ஒண்ணும் புரியலைன்னு நமக்கு இப்ப தோணலாம். ஆனா ஒட்டகம் முள்செடியை தின்னும் போது வாயில ரத்தம் வந்தாலும் விடாம முள்செடியை திங்கும்ன்னு ராமகிருஷ்ணர் சொல்வார். அந்த மாதிரி நாம உலகவிஷயங்கள்ல இருக்கிற துக்க தோஷம் பார்க்க மாட்டேங்கறோம். நாம இதையே ருசிச்சு சாப்பிட்டுண்டு இருக்கோம். மஹான்கள் அந்த பகவானுடைய பாதத்தாமரையில் இருக்கும் அந்த தேனை குடிச்சு இதுதான் அமிர்தம்னு சொல்லி கொடுக்கறா. At least நாம அது சத்யம்ன்னு நம்பணும். இது குலசேகராழ்வாருடைய வாக்கு. இதை தினமும் சொல்லி என்னை இந்த மனிதர்களுக்கு வேலை செய்யற இந்த பந்தத்திலருந்து என்னை விடுவிக்கணும்னு வேண்டிக்கணும்.
அடுத்த ஸ்லோகம்
मदन परिहर स्थितिं मदीये मनसि मुकुन्दपदारविन्दधाम्नि ।
हरनयनकृशानुना कृशोऽसि स्मरसि न चक्रपराक्रमं मुरारेः ॥ ३१ ॥
மத³ன பரிஹர ஸ்தி²திம் மதீ³யே
மனஸி முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்னி ।
ஹரனயனக்ருʼசானுனா க்ருʼசோऽஸி
ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே: ॥ 32 ॥
ன்னு ஒரு ஸ்லோகம். மதன! ஹே காமனே! நீ என்கிட்ட உன் வாலை ஆட்டாதேன்னு சொல்றார். ‘முகுந்த³பதா³ரவிந்த³தா⁴ம்னி’ முகுந்தனுடைய திருவடித் தாமரைகள் என்னுடைய ஹ்ருதயத்துல இருக்கு. அதனால நீ இங்க இருக்காதே. எங்க ராமன் இருக்கானோ அங்க காமன் இருக்க முடியாது. எங்க காமன் இருக்கானோ அங்க ராமன் இருக்க முடியாதுன்னு துளசிதாசர் சொல்வார். அந்த மாதிரி என்னுடைய மனசுல முகுந்தனுடைய திருவடித் தாமரைகளை நான் வெச்சிண்டிருக்கேன். அதனால் இங்கேயிருந்து நீ விலகிப் போயிடு. இல்லேன்னா! ன்னு சொல்லிட்டு ‘ஹரனயனக்ருʼசானுனா க்ருʼசோऽஸி’ – பரமேஸ்வரனுடைய நெற்றிக்கண்ணால நீ சாம்பலா போனே. ஏதோ காமாக்ஷி உன்னை காப்பாத்தினா. ‘ஸ்மரஸி ந சக்ரபராக்ரமம் முராரே:’ முரனை கொன்ற விஷ்ணு பகவானோட சக்ர பராக்ரமத்தை நீ நினைச்சு பாருன்னு சொல்றார்.
அப்படி பக்தியின் சுகத்தை அறிந்தவர்கள் காம சுகத்தை மனசாலும் நினைக்கமாட்டார்கள் எங்கிறது இதன் தாத்பர்யம். பக்தியோட ருசி ஏற ஏற இந்த நாராயண நாமத்தை நாம சொல்றோம். இதெல்லாம் ஒண்ணும் எனக்கு தெரியலேன்னா, நிறைய நாம ஜபம் பண்ணிண்டே இருந்தா அதோட ருசி ஊறி ஊறி அந்த அம்ருதத்தை பானம் பண்ணினா தாமரை இலை மேல ஒரு பசை இருக்கிற மாதிரி நமக்கு உண்மையான பக்தி ஏற்படும். அந்த பக்தி ஏற்பட்டா தண்ணி தாமரை இலையில் ஒட்டாத மாதிரி விஷய சுகங்கள் தானாக விலகிடும்ங்கிறது இந்த ஸ்லோகத்தோட த்வனி. இதுவும் ஒரு முக்யமான பிரார்த்தனை. குலசேகராழ்வார் பண்ண முகுந்தமாலையில நமக்காக ரொம்ப பிரார்த்தனை பண்ணி இருக்கார். இதெல்லாம் நாம மனசுல வாங்கிக்கணும்.
கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா
One reply on “முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை”
நாம பாராயணம் என்கிறது சரீரத்தில் ஒர் அம்சமாகணும் ! நாம பாராயண பிரீதா என்று லலிதா சஹஸ்ர நாமாவில் ஒர் நாமம் !
காலாஞ்ஜி மேடு என்ற கிராமத்தில் லக்ஷ்மி என்ற பேருடைய ஒரு ஸ்த்ரீ இருந்தாள் . அவள் சிறுவயதில் வைதவ்யம் அடைந்ததால் அவளை அந்த ஊர் ஜனங்கள் துக்கிரி என்று அழைத்து வந்தார்கள். ஆனால் ராம பாராயணம் (ராம நாம)
எப்போதும் சொல்லி வந்தாள். 10000 முறை ஜபித்ததும் சுவற்றில் சாக் பீஸ் ஆல் ஒரு கோடு கிழித்து, அதையே ராமராக பாவித்து, தான் சமைத்த உணவை ப்படைக்கும் வழக்கம் கொண்டிருந்தாள்.
யாருக்காவது ஒரு பிரச்னை என்றால் உடனே தான் ஜபித்த நாமாவின் .பலனை அளிக்கும் விதமாக அந்தக் கோட்டை அழித்து விடுவாள் ! அவர்கள் பிரச்னை தீர்ந்துவிடும் ! இதை பெரியவா குறிப்பிட்டு நாம மகிமை பற்றிச் சொல்லியிருக்கார்!
என் தாத்தா அனுஷ்டானங்களை ஷ்ரத்தையா செய்வார். ஆச்சார சீலர் ! அவர் படுத்த படுக்கையில் ஒன்றும் முடியாது இருந்த போது என் அகத்திற்கு வந்து பெரியவா ” இனி அனுஷ்டானம் வேண்டாம், ராம நாம பாராயணம் போதும்,” என்று சொல்லிச் சென்ற பின் நாம ஜபாமும் பெரியவா ஸ்மரணை யுடனும் ஈசன் அடி சேர்ந்தார் ,!
நாவில் பகவான் ஜபமும் நினைவில் அவர் உருவமும், செயலில் அவர் நமக்கு அளித்த உபதேசங்களை ப் பின்பற்றினால்
பகவான் நாம் ஒர் அடி முன்னே வைத்தால் நம்மை நோக்கி ஓடோடி வருவார் !!
இதெல்லாம் எளிய வழி பகவானை அடைய !
நாமும் பின்பற்ற வேண்டும் !
தியாகராஜ சுவாமிகள் பக்தி இதற்கு பர் எடுத்துக் காட்டு !!
ஶ்ரீ ராம ராம