Categories
Mukunda Mala

முகுந்தமாலா 29, 30 ஸ்லோகங்கள் பொருளுரை

Krishna by Keshav Venkataraghavan

முகுந்தமாலா 29, 30 ஸ்லோகங்கள் பொருளுரை (10 minutes audio Meaning of Mukundamala slokams 29 and 30)

முகுந்தமாலையில இன்னிக்கு 29ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம்.

श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं केन प्रापुर्वाञ्छितं पापिनोऽपि ।

हा नः पूर्वं वाक्प्रवृत्ता न तस्मिंस्तेन प्राप्तं गर्भवासादिदुःखम् ॥ २९॥

ஸ்ரீமன்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம்

யேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோऽபி ।

ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மின்

தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ 26॥

ன்னு ஒரு ஸ்லோகம்.

‘நாராயணாக்யம்’ பகவானுடைய திரு நாமங்களில் நாராயணா என்ற இந்த நாமத்தை ‘ஸ்ரீமன் நாம:’ ங்கிறதுக்கு விஷ்ணுவினுடைய பெயர்ன்னு ஒரு அர்த்தம். அதுக்கு ஸுமங்கள நாமம்ன்னு பரம மங்களமான இந்த நாராயண நாமத்தை ஸ்ரீமன் நாம ப்ரோச்ய –  அந்த நாராயண நாமத்தை சொல்வார்கள் எனில் ப்ராபுர்வாஞ்சி²தம் – இஷ்டப்பட்டதை அடைவார்கள். யார்? ‘பாபிநோபி’ பாபம் பண்ணினவர்களா இருந்தா கூட இந்த நாராயண நாமத்தை சொல்றதுன்னு வெச்சுண்டா அவா இஷ்டப்பட்டதைப் பெறுவார்கள். ஆனால் நான் இந்த நாராயண நாமத்தை போன பிறவியில சொல்லலேன்னு தெரியறது. முன்னமே அவரிடத்துல பக்தி வெச்சு, நாராயண நாமத்தை சொல்லியிருந்தேன் எனில் நான் இந்த கர்ப்பவாஸாதி துக்கத்தை இன்னொரு வாட்டி அனுபவிச்சிருக்க மாட்டேன். வந்து இப்படி ஒரு தாய் வயிற்றில் பிறந்து இந்த பிறவிக் கடலில் விழுந்து அவஸ்தை படமாட்டேன்னு சொல்றார். இந்த நாராயண நாமத்தை இப்போதாவது சொல்லி இந்த ஜன்மத்துல கரையேறனும்கிறது தாத்பர்யம்.

எனக்கு இது கூட தெரியலையே, நான் இவ்ளோ தீனனா இருக்கேனேன்னு அந்த சரணாகதியில தன்னுடைய குறைகளை நினைச்சு பகவான்கிட்ட முறையிடறது ஒரு அங்கம்னு சொல்றார்.

நாராயண நாமம்ங்கிறது உசந்தது. ஸந்யாசிகள் கூட நமஸ்காரம் பண்ணினா, நாராயண, நாராயண, நாராயண, நாராயண னு ஆசீர்வாதம் பண்ணுவா. நாராயண நாமத்துக்கு அவ்ளோ மஹிமை. விஷ்ணு சஹஸ்ரநாமத்துல நாராயண நாமம் நாலு தடவை வர்றது. திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்துல

“குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்

நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளோடு பெருநிலம் அளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்றதாயினுமாயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

ன்னு சொல்றார். உயர்ந்த குலத்தைக் கொடுக்கும். நிறைந்த செல்வத்தைக் கொடுக்கும். அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் நிலந்தரம் செய்யும் – அடியார்களுடைய துயர்களை எல்லாம் தரை மட்டம் ஆக்கிடும். காணாம போக்கிடும். நீள் விசும்பு அருளும் – வைகுண்ட பதவியைக் கொடுக்கும். அருளோடு பெருநிலம் அளிக்கும் – அருளையும் கொடுக்கும். பகவானுக்கு கைங்கர்யம் பண்ணக் கூடிய அந்த ஒரு பெரிய பாக்யத்தையும் கொடுக்கும். நாராயண நாமம் வலம் தரும்னா சக்தியை தரும். பகவானோட பக்தி பண்றதுக்கு நமக்கு மனசுல ஊக்கத்தையும், சக்தியையும் கொடுக்கும். மற்றும் தந்திடும் – இன்னும் என்ன வேணுமோ, நீ பகவானை அடையறதுக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் நாராயண நாமமே தரும். பெற்ற தாயினும் ஆயின செய்யும் – உன்னைப் பெற்று வளர்த்த தாயினைக் காட்டிலும் பெரிய நன்மையை செய்யும். நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்னு சொல்றார்.

பாபிகளா இருந்தாக் கூட பகவானுடைய நாமம் அவாளுக்கு எல்லா தீங்கையும் போக்கி நன்மையைச் செய்யும்னு இந்த ஸ்லோகத்துல சொல்ற மாதிரி திருஞானசம்பந்தருடைய “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி’ ன்னு ஆரம்பிக்கற நமச்சிவாயப் பதிகத்துல

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்

இல்லாரேனும் இயம்புவாராயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவார் என்பரால்

நல்லார் நாமம் நமச்சிவாயவே

ன்னு சொல்றார். அப்படி நமசிவாய நாமத்தை சொன்னால் அவன் கொலை பண்ணியிருந்தாலும், குணங்கள் இல்லாதவனா இருந்தாலும், பல நன்மைகள் பண்ணி புண்ணியம் சம்பாதிக்காதவனாக இருந்தாலும் இந்த நமச்சிவாய நாமத்தை சொன்னா அவன் மாறிடுவான். எல்லா தீங்கையும் நீங்குவார், எல்லா தீங்கும் நீங்கி சிவபெருமானுக்கு நெருங்கி வந்து விடுவார்கள்னு திருஞானசம்பந்தர் சொல்றார். அதுமாதிரி இங்க திருமங்கையாழ்வார் ‘நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்னு’ சொல்றார்.

எங்க அம்மாக்கு சித்தி, சித்தப்பா நுங்கம்பாக்கத்துல இருந்தா. வெங்கடாசலம் ஐயர், மீனாக்ஷின்னு பேரு. அவாளுக்கு குழந்தைகள் இருக்கலை. அவர் banker ஆ இருந்தார். அதனால கொஞ்சம் வசதி இருந்தது. பாலக்காடு, காவசேரியிலேருந்து இங்க சென்னைக்கு வந்தவர். சௌரியமா இருந்தார். அவர் தர்மகார்யங்கள் நிறைய பண்ணிண்டே இருப்பார். மஹாபெரியவா அவா ஆத்துக்கு இரண்டு வாட்டி வந்திருக்கா. மாயவரம் பெரியவா அங்க வந்து இரண்டு வாட்டி பாகவத சப்தாகம் பண்ணியிருக்கார். நம்ம கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் இரண்டு வாட்டி சப்தாகம் பண்ணியிருக்கார். கோடிக் கணக்கா லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை பண்ணிண்டே இருப்பா. அவா அகமே ஒரு ஆஸ்ரமம் மாதிரி இருந்தது. எங்கம்மா சொல்வா ‘அந்த சித்தப்பா சாயங்காலம் ஆச்சுனா, ஆண் குழந்தைகளா இருந்தா கைகால் அலம்பிண்டு விபூதி இட்டுண்டு, சந்த்யாவந்தனம் பண்ணிட்டு வரணும். பெண் குழந்தைகள்னா தலையை வாரிண்டு, பின்னிண்டு, முகம் கை கால் அலம்பிண்டு, நெத்திக்கு இட்டுண்டு வந்து உட்கார்ந்துக்கணும். நமசிவாய, நாராயணாய, நமச்சிவாய, நாராயணாயன்னு 108 தடவை சொன்னா அந்த சித்தப்பா ஒரு வாழைப்பழம் கொடுப்பாராம். அந்த சின்ன வயசுலேயே நல்ல விஷயங்களை மனசுல ஏத்திவிட்டிருக்கா. இது எனக்கு ஞாபகம் வந்தது.

அப்படி நாராயண நாமத்துக்கு அபார மஹிமை. முகுந்த மாலையில நிறைய நாராயண நாமத்தை சொல்றார். நாமும் எல்லாருமா உட்கார்ந்து சாயங்காலம் விளக்கேத்தி நாராயணா நாமத்தை ஜபிச்சா ஆத்துல ஒரு வியாதி இருக்காது. ஒரு கஷ்டம் இருக்காது. எல்லா மங்களங்களும் வந்து சேரம். “நாராயண நாராயணன்னு ஆயிரத்தெட்டு தடவை ஒரு பதினைஞ்சு நிமிஷம் சொன்னாலே ஆனந்தமா இருக்கும்.

நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயணா

நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயணா

அடுத்த முப்பதாவது ஸ்லோகம்….

मज्जन्मनः फलमिदं मधुकैटभारे मत्प्रार्थनीयमदनुग्रह एष एव ।

त्वद्भृत्यभृत्यपरिचारकभृत्यभृत्यभृत्यस्य भृत्य इति मां स्मर लोकनाथ ॥ ३२ ॥

மஜ்ஜன்மன: ப²லமித³ம் மது⁴கைடபா⁴ரே

மத்ப்ரார்த²னீயமத³னுக்³ரஹ ஏஷ ஏவ ।

த்வத்³ப்⁴ருʼத்யப்⁴ருʼத்யபரிசாரகப்⁴ருʼத்யப்⁴ருʼத்ய-

ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகனாத² ॥ 27॥

மதுகைடபர்களை வதம் பண்ணின கிருஷ்ணா! ஜகன்னாதா! உலகத்தின் தலைவனே, ‘மஜ்ஜன்மன: ப²லமித³ம்’ என்னுடைய ஜன்மா எடுத்ததற்கு இந்த ஒண்ணே ஒண்ணுதான் பயன். எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் நீ செய்ய வேண்டியது. ‘மத்ப்ரார்த²னீயமத³னுக்³ரஹ ஏஷ ஏவ’ நான் பிரார்த்தனை பண்றது இது ஒண்ணுதான். எனக்கு நீ பண்ணவேண்டிய அனுக்ரஹமும் இது ஒண்ணுதான். என்ன தெரியுமா?

த்வத்³ப்⁴ருʼத்யப்⁴ருʼத்யபரிசாரகப்⁴ருʼத்யப்⁴ருʼத்ய-

ப்⁴ருʼத்யஸ்ய ப்⁴ருʼத்ய இதி மாம் ஸ்மர லோகனாத²

ன்னு உன்னுடைய அடிமைக்கு, அடிமைக்கு, அடிமைக்கு, அடிமைக்கு அடிமைக்கு, அடிமைக்கு, அடிமையாக என்னை வெச்சுக்கோ. எனக்கு அந்த தாஸ்யத்தை கொடு. அந்த அடிமைக்கு அடிமைக்கு அடிமையா இருக்கணும் ன்னு வேண்டிக்கறார். ஒரு செல்வம்னா பரம்பரையா வந்தா அதுக்கு ஒரு பெருமை. புது பணக்காரன்னு கேலி பண்ணுவா இல்லையா? பரம்பரையா வந்த செல்வத்துக்கு ஒரு பெருமை. அந்த மாதிரி இந்த அடிமைச் செல்வதையும் பரம்பரையா வந்தா பெருமை. அருணகிரிநாதர் சீர்பாத வகுப்புல

“முடியவழி வழியடிமை எனுமுரிமை அடிமை முழு

துலகறிய மழலைமொழி கொடுபாடும் ஆசுகவி

முதலமொழிவன நிபுண மதுப முகரித மவுன

முகுளபரிமள நிகில கவிமாலை சூடுவதும்… மணநாறு சீறடியே”

ன்னு சொல்வார். அந்த மாதிரி முடிய வழி வழி அடிமை எனுமுரிமைஅடிமை, அப்படி வழிவழியா அடிமை. அப்பாவும் உனக்கு அடிமை. தாத்தாவும் உனக்கு அடிமை. நானும் அடிமைன்னா பகவானால நம்மை புறக்கணிக்க முடியாது. ஏத்துண்டுதான் ஆகணும். அப்படி அந்த ஒரு பாக்யத்தை கொடுன்னு இந்த ஸ்லோகத்துல வேண்டிக்கறார்.

அடுத்த ஸ்லோகம் ‘நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே’ ன்னு ஆரம்பிச்சு, பகவான் இருக்கும் போது நீ ஏன் இன்னொருத்தர்கிட்ட வேலை கேட்கற? பகவானுடைய காரியத்தை பண்ணினா தன்னையே கொடுப்பான்னு ரொம்பவே அழகான ஒரு ஸ்லோகம். அதை நாளைக்கு பார்ப்போம்.

கோபிகா ஜீவன ஸ்மரணம்….கோவிந்தா கோவிந்தா.

Series Navigation<< முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரைமுகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை >>

6 replies on “முகுந்தமாலா 29, 30 ஸ்லோகங்கள் பொருளுரை”

இணையற்ற நாராயண நாமத்‌தின் மகத்துவத்தை எடுத்துச் சொன்னீர்கள்.என் வாழ்நாளில் நடந்த ஒரு அற்புதத்தைப் பகிர்ந்துகொள்ள ஆவல்.தஞ்சாவூருக்குப் பக்கம் வாளமர்கோட்டை என்று ஒரு கிராமம்.நெடுநாள் மழையின்றி மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.அந்தக்கிராமத்தில் பெரிய சிவாலயத்தைத் திருப்பணி செய்துகொண்டு தவத்திரு காத்தையா சுவாமிகள் என்று ஒரு மகான் இருந்தார்.(சிவன்சார் ஏணிப்படிகளில் மாந்தர்கள் சாஸ்த்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் மகான் நிலை.காஞ்சி மஹாசுவாமிகளால் ஒருமுறை சுவாமி என்று அழைக்கப்பட்டதிலிருந்து தவத்திரு காத்தையா சுவாமிகள் என்ற திருநாமத்தால் மக்கள் போற்றிக் கொண்டனர்.)மக்கள் அவரிடம் முறையிட்டுக்கொண்டவண்ணம் இருந்தனர்.சுவாமிகள் கிராமத்து ஜனங்களை அழைத்து சிவாலயக்குளக்கரையில் அம்பாளை வழிபட்டு நாராயண நாம ஜபம் செய்துகொண்டிருங்கள் பகவான் கிருபை செய்வார் என்றருளினார்.கிராமத்தாரும் சிரமேற்கொண்டு அவ்வாறே பணிய மழை போதும்போதும் என்கிற அளவுக்குப் பொழிந்து ஏரிகுளங்களை நிறைத்தது.நாராயண!நாராயண!

Enjoyed reading about the experience of different devotees who believed in chanting Narayana Nama and Nama Sivaya Namas. Description of this type of bhakti enables even a non-believer turn into an intense bhakta. Thanks for sharing this inspiring Nama Mahimai.

நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும், வினைதான் என் செய்யும் நாம பாராயணம் நாவில் உள்ளவரை ?
சிவராமன், கெளரி தம்பதியினர் ஸ்ரீ சிவன் சாரின் பக்தர்கள் .
கெளரி நாவில் ஸதா நாம ஜபம் ! நாக்கில் கான்சர் என்று தெரிந்து அறுவை சிகிச்சை செய்யும் கட்டம் வந்த போது கெளரி நாம ஜபம் நாவில் அதற்குக் குந்தகம் வருவது போல் எந்த சிகிச்சையும் எனக்குத் தேவையில்லை என உயிரை விட்டவர்கள்.
பக்தியின் மேன்மை நாம ஜபம் !
அழகான தக்க மேற்கோள்கள் உடன் அருமையான விளக்கம் நாம ஜபம் பற்றி ,!!
ஓம் நமோ நாராயணாய….

நாராயணா என்னும் நாமம் நாவில் உள்ளவரை யாதொரு தீமையும் நம்மை அண்டாது !
அஜாமிளன் என்பவன் சிறு வயதில் பகவானிடம் நல்ல பக்தியுடன் இருந்து விதி வசத்தால் தீய பழக்கங்களுக்கு ஆளாகி பகவானையே மறந்தவன் !
ஆனால் இழைக்கும் வினை வழியே அடுங்காலன் வந்து அவன் உயிரைக் கவர்ந்து செல்ல வரும்போது நாராயணா என்று தன் மகனை அழைக்க, ஒரு முறை அழைத்தாலும் ஓடோடி வந்து அபாயம் அளிப்பவன் அல்லவா பகவான் ,?அதன்படி பகவான் எமகிங்கரர்களைத் தடுத்து உயிரைக் கவரா வண்ணம் தடுத்து ஆட்கொள்கிரார் என்கிறது பாகவதம் !
ஒரு முறை தவறி மகன் பேரைச் சொன்னதற்கே
இந்தப் பலன் என்றால் நித்ய ஜெபம் எப்படிப்பட்ட பலனளிக்கும் என்ற கருத்தை விளக்கவே மேற்படி ஸ்லோகங்கள் நமக்கு மகான்கள் மூலம் கிட்டியுள்ளது !
முகுந்தமாலை அற்புதமான ஸ்லோகம் கொர்வை ,!!
குடும்ப விஷயங்களைக் கோர்வையாக சொல்லி நாம பாராயணத்தை எளிமையாக விளக்கியுள்ளது கணபதி ஸ்பெஷல் !!
ஓம் நமோ நாராணா நம:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.