பற்றுக பற்றற்றான் பற்றினை (8 min audio in Tamizh, same as the script above)
ஸ்வாமிகள் மஹா பெரியவா சன்னிதிதிக்கு போனா
विदिता न मया विशदैककला न च किंचन काञ्चनमस्ति गुरो |
द्रुतमेव विधेहि कृपां सहजां भव शंकर देशिक मे शरणम् ||
“விதிதா நமயா விஷதைக கலா” எனக்கு ஒரு படிப்பும் இல்ல
“நச கிஞ்சன காஞ்சனமஸ்திகுரோ” என்கிட்ட ஒரு பணமும் இல்ல
“த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்” உங்களோட கூட பிறந்ததான க்ருபையை எங்கமேல காட்டுங்கோ
“பவ சங்கர தேசிகமே சரணம்” அப்படிங்க்ற இந்த ஸ்லோகத்தை சொல்லி நமஸ்காரம் பண்ணிட்டுதான் உட்காருவாராம். மத்த பண்டிதர்களை எல்லாம் மஹா பெரியவா ஏதாவது கேள்வியெல்லாம் கேட்டு ஏதாவது சோதனை பண்ணி பார்ப்பார். ஸ்வாமிகள் கிட்ட ஒரு நாள் கூட அந்த மாதிரி பண்ணிணதில்லை. இந்த மாதிரி குழந்தையாட்டம் தன்னை மஹா பெரியவாகிட்ட ஒப்படைச்சதுக்கு மஹா பெரியவா கையை பிடிச்சு கூட்டிண்டு போயிருக்கா. அதுக்கு சில நிகழ்ச்சிகள் சொல்றேன்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு ன்னு
உலக பற்றை விடணும்னா ஏற்கனவே காம குரோதத்தையெல்லாம் தாண்டி போன ஒரு மஹானை பிடிச்சுக்கணும்.அப்படின்னு வள்ளுவர் சொல்றார். ஸ்வாமிகள் அந்த மாதிரி மஹா பெரியவாளை பிடிச்சுண்டார். மஹா பெரியவா ஸ்வாமிகள்கிட்ட தான் யாரை எல்லாம், எந்த ஞானிகளை எல்லாம் வணங்கறேன்னு சொல்லி சொல்லி, அவாளோட பெருமைகளையெல்லாம் சொல்லி இருக்கார். இன்னிக்கு தை ஹஸ்தம். ஸேஷாத்ரி ஸ்வாமிகளோட ஜெயந்தி. இந்த ஸேஷாத்ரி ஸ்வாமிகள் காஞ்சிபுரத்துல அவதாரம் பண்ணி ஞானமடைஞ்சு திருவாண்ணாமலை போய் திருவண்ணாமலையிலேயே இருந்து அங்க சித்தி ஆனார். ஸ்வாமிகள் என்னை திருவண்ணாமலை போனேன்னா “ஸேஷாத்ரி ஸ்வாமிகளோட அதிஷ்டானம் ரமணர் ஆஸ்ரமம் பக்கத்துலேயே இருக்கு. அங்கேயும் போய் நமஸ்காரம் பண்ணு”ன்னு சொல்வார். அப்பதான் சேஷாத்ரி ஸ்வாமிகள் என்ற பேரையே தெரிஞ்சுண்டேன். அப்புறம் ஸேஷாத்ரி ஸ்வாமிகளோட சரித்திரம் குழுமணி நாராயண ஸாஸ்திரிகள்னு ஒருத்தர் எழுதியிருக்கார். அந்த நாராயண சாஸ்த்ரிகள் தன்னை ரேணுன்னு (சேஷாத்ரி ஸ்வாமிகளின் பாதத்தில் ஒரு துகள்) என்று குறிப்பிட்டு கொள்வார்.அந்த புஸ்தகத்தை ஒரு பாமரன் படிச்சாகூட ஒரு ஞான ஒளி ஏற்படும். அவ்வளவு அழகான ஒரு கிரந்தம், இந்த சேஷாத்ரி ஸ்வாமிகள் சரித்திரம்.
யதேச்சையாக அந்த புஸ்தகத்தை வாங்கி ஸ்வாமிகள் கிட்ட குடுத்த உடனே, பெரிய புதையல் கண்ட மாதிரி சந்தோஷப் பட்டு அதை எத்தனை ஆவர்த்தி படிச்சுருக்கார் னு சொல்ல முடியாது. அவ்வளவு ஆவர்த்தி படிச்சு இருக்கார். தனக்கு சன்யாசம் கிடைக்க அந்த புஸ்தகம், அவரோட சரித்ரம், அதில் இருந்த உபதேசங்கள் ஒரு காரணம் என்று சொல்வார். அந்த சேஷாத்ரி ஸ்வாமிகள் பிறந்த க்ரஹத்தை மஹா பெரியவா பரணிதரனை கொண்டு கண்டு பிடிச்சு அதை மடத்தில் வாங்கி அதுக்கு “ஸ்ரீ காமகோடி சேஷாத்ரி விலாஸம்” னு பேர் வைத்து அங்க போயி நம்ம ஸ்வாமிகளை மூகபஞ்சசதி படீன்னு சொல்லி இருக்கார்.
அந்த இடத்தை வாங்கின ட்ரஸ்ட் காரா, அந்த காரியங்கள் பண்ற எல்லாரையும் வச்சுண்டு மஹா பெரியவா,சேஷாத்ரி ஸ்வாமிகள் யோகாசனத்துல்ல ஒரு போஸ் ல உட்காருவாராம். அப்படி உட்கார்ந்து காண்பித்து”இப்படித்தான் அவர் உட்காருவார். அவர் மாதிரி உட்காரமுடியும். ஆனா அவர் மாதிரி நிலை எனக்கு எப்ப வருமோ? எத்தனை ஜன்மாக்கு அப்புறம் வருமோ”னு சேஷாத்ரி ஸ்வாமிகளை கொண்டாடி இருக்கார். அவருக்கும்“மூகபஞ்சசதி” க்கும் என்ன தொடர்புன்னா, அவர் காஞ்சிபுரத்துல பொறந்து மூகபஞ்சசதி யை படிச்சு, காமகோட்டத்தை இராத்திரி 12 மணிக்கு மூகபஞ்சசதி சொல்லி கணக்கில்லாம பிரதஷணம் பண்ணுவார், கணக்கில்லாம நமஸ்காரம் பண்ணுவார், அப்படின்னு மஹா பெரியவா சொல்லியிருக்கா. அப்படி மஹா பெரியவாளே தன்னைக் காட்டிலும் ஒரு பெரியவர் அப்படின்னு சொன்னா ஸ்வாமிகளுக்கு அவரிடம் எவ்வளவு பக்தியும் ஸ்ரத்தையும் அது மூலமா ஞான வைராக்கியமும் ஏற்பட்டிருக்கும்!
அந்த மாதிரி ஆலங்குடி பெரியவான்னு ஒரு மஹான் இருந்தார். ஆலங்குடி பெரியவா அவதூத ஸ்வாமிகளா இருந்திருக்கார். அவருக்கு பாகவதம் படிக்கணும், பிரவசனம் பண்ணனும், அப்படின்னு மனசுல ஒரு பகவத் ப்ரேரணை. முடிகொண்டான் என்கிற ஒரு ஊருக்கு வந்து கேட்ட போது அங்க இருக்குற பெரியவா எல்லாம் நமஸ்காரம் பண்ணி “நீங்க அவதூதரா இருந்தா ஜனங்கள் கொஞ்சம் ஸ்ரமப் படுவா. நீங்க ஒரு கௌபீனமாவது கட்டிண்டு சொன்னேள்னா நாங்க சங்கோஜம் இல்லாம கேட்போம். ஜனங்களுக்கு ஒரு பயம் இல்லாம இருக்கும்” னு சொன்ன உடனே “அதுக்கு என்ன பண்ணலாமே” ன்னு சொல்லிட்டார். “கிம்போக்த்வயம் கிமபோக்த்வயம்” அப்படீன்னு, தாம் இப்படிதான் இருக்கணும்ணூ ஒண்ணும் இல்லயே. அப்படீன்னு அந்த படிகள்ல இரண்டு படி இறங்கி வந்து ஜனங்களுக்கு பிரவசனம் பண்ணி இருக்கார். அவ்வளவு பெரிய மஹான்.
நம்ம ஸ்வாமிகள் முடிகொண்டான் போய் ஆலங்குடி பெரியவா அதிஷ்டானத்தில் நாலு வருஷம் சப்தாஹம் பண்ணி இருக்கார். அப்பறம் ஸ்வாமிகள் அங்கிருந்து மிருத்திகை எடுத்துண்டு வந்து தினம் தன்னோட பூஜைல சாளக்கிராமத்துக்கும், குருவாயுரப்பனுக்கும் அபிஷேக ஆராதனைகள் பண்ற மாதிரி, அந்த ஆலங்குடி பெரியவாளோட அதிஷ்டான ம்ருத்திகைக்கும் பண்ணுவார். அந்த ஆலங்குடி பெரியவாளை பத்தி ஸ்வாமிகளுக்கு மஹா பெரியவா நிறைய சொல்லியிருக்கா. அந்த ஆலங்குடியில போய் ஸ்வாமிகள் பிரவசனம் பண்ணும்போது அங்க இருக்கும்வயசான பெரியவா எல்லாம் “எங்க ஆலங்குடி பெரியவாகிட்ட கேட்கற மாதிரியே இருக்கு உங்களோட பிரவசனம்”என்று சொல்லி இருக்கா. அப்பதான் ஸ்வாமிகளுக்கு நம்மளோட ஜன்மா இந்த சாதாரண உலக வாழ்க்கை இல்லை.இந்த கஷ்டங்களுக்கு எல்லாம் வேற meaning இருக்கு அப்படீன்னு அவர் மனசுல தோணி, கொஞ்சம் கொஞ்சமா அந்த வைராக்கிய நாட்டத்தை எல்லாம் ஜாஸ்தி பண்ணியிருக்கு.
அந்த மாதிரி மஹா பெரியவா சிவன் சாரை பத்தி “சாச்சு பிறவியிலேயே ஞானி. நானாவது ஒரு ‘மடம்’ ன்னு இதுல மாட்டிண்டு இருக்கேன். அது எல்லாம் இல்லாம பேரானந்தத்துல இருக்கார் அவர்” அப்படீன்னு நிறைய பேர் கிட்ட சொல்லி இருக்கா. அப்பேற்பட்ட சிவன் சாரை ஸ்வாமிகள் தரிசனம் பண்ணினார். மஹா பெரியவா மௌனம் கொண்ட நாள்லேருந்து சிவன் சார், ஸ்வாமிகளை guide பண்ணியிருக்கார்
சிருங்கேரில சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள்னு ஒரு மஹான். ஜீவன் முக்தர் இருந்தார். ஒரு தம்பதிகளுக்கு 11குழந்தைகள் பிறந்து தவறி போயிடுத்து. “நரசிம்ம பாரதின்னு” அதுக்கு முன்னாடி இருந்து ஆச்சார்யாள். அவர் சுவாசினி பூஜைல அனுக்ரஹம் பண்ணி “உனக்கு ஒரு பிள்ளை குழந்தை பொறப்பான், அவனை எனக்கு கொடுன்”னு அந்த 12 வது குழந்தையை வாங்கிண்டு மடத்துலேயே வளர்த்து இருக்கார். பிறந்ததுலே இருந்து யோகி. அந்த குழந்தைக்கு நரசிம்மன் னு பேர் வெச்சுருக்கா. அந்த”சந்திரசேகர பாரதி” ஸ்வாமிகள் ப்ரம்மசாரியா இருக்கும்போது‘மூக பஞ்சசதி’ யில அவருக்கு ரொம்ப ப்ரியம் இருந்திருக்கு. ஒரு முறை ஏதோ பொருட்கள் வாங்கிண்டு வான்னு பணம் கொடுத்திருக்கா. அவர் மூக பஞ்சசதி யை சொல்லிண்டு இந்த 500 ஸ்லோகமும் முடியிற வரைக்கும் அப்படியே சமாதி நிஷ்டைல கூடி சிருங்கேரி எல்லாம் தாண்டி ஒரு 10 கிராமம் தள்ளி எங்கயோ போயிட்டார்.எங்கேயோ நின்னுண்டு எதுக்கு வந்தோம்னு யோசிச்சாராம். திரும்பி வந்து ‘என்னமோ சொன்னேளே என்ன?’ ன்னு கேட்கிறராராம். அப்படி இருந்தார். அவருக்கு ராமாயணத்தில் நிறைய பக்தி இருந்தது. ஆஞ்சநேயருக்கு பலகை போட்டு சின்ன வயசுல இருந்து ராமாயணம் படிச்சுண்டு இருந்திருக்கார்.
அவர் சன்னியாசம் வாங்கிண்டு, பீடாதிபதியா சந்தரமௌலீஸ்வரர் பூஜையை முடிச்ச பின்ன, “கொஞ்சம் ராமாயணம் கேளுங்கோ” அப்படீன்னு ஆரம்பிப்பாரம். கூட இருக்கிறவா சிப்பந்திகள் எல்லாம் “பிஷை பண்ணிடலாமே”என்பார்களாம். ஏன்னா அவாளுக்கு தெரியும். ஆரம்பிச்சார்ன்னா அவரால நிறுத்தவே முடியாதுன்னு. இருக்கட்டும் இருக்கட்டும் னே சொல்லி அந்த அஸ்தமன காலம் கூட முடிஞ்சுருமாம், 5, 6 மணி நேரம் பிரவசனம் பண்ணுவாராம். “சாப்பிடலைனா என்ன? ராமாயணத்துக்கு மேல அன்ன பிஷை வேற வேணுமா?” அப்படீன்னு சொல்லுவாராம். இதெல்லாம் சிருங்கேரியில போட்ட புஸ்தகத்துல அவருடைய சரித்திரத்துல இருக்கு. அப்பேற்பட்ட மஹான்.
மஹா பெரியவா அவரை பத்தி குறிப்பிடும்போது “நான் ஏதோ தர்ம பிரச்சாரம் னு அங்க இங்க போயிண்டு இருக்கேன். அந்த மாதிரி சிருங்கேரி பெரியவா சந்திரசேகர பாரதீ ஸ்வாமிகளைப் மாதிரி ஒருத்தர் இருந்தாலே போதும். அந்த மாதிரி ஜீவன் முக்தர்கள் இருந்தாலே உலகமே பிரகாசிக்கும்” அப்படீன்னு கொண்டாடி இருக்கா. இந்த மஹான்களோட சரித்திரத்தை எல்லாம் மஹா பெரியவாளே ஸ்வாமிகளுக்கு சொல்லி ஞான வைராக்கியத்தோட பெருமையை ஸ்வாமிகளுக்கு ஊட்டி அவரை அந்த வழியில கொண்டு வந்திருக்கார். அதுதான் குருவோட கடாக்ஷம்.குருவோட ஆச்ரயம் பண்ணகூடிய மஹிமை.
கோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா! கோவிந்தா!