சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 17, 18 தமிழில் பொருள் (15 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 17 and 18)
சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம்
फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो
प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् ।
कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां
निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥
ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴
ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் ।
கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம்
நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥
ன்னு ஒருஸ்லோகம்.விபோ – எங்கும் நிறைந்திருப்பவனே! ஸ்வாமி – என்னுடைய எஜமானனே. ஸ்வாமின்னா – உடையவன். நம்முடையஎஜமானன் ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி – நான் பண்ண ஏதோ போன ஜன்மத்து புண்யத்துனாலயோ மயி கருணயா வா – என் மேல இருக்கிற கருணையினாலயோ த்வயி ப்ரஸன்னேऽபி – நீங்கள்என்முன் தோன்றி காட்சி கொடுக்கிறீர்கள், ஆனாலும் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் – உன்னுடைய தூய்மையான திருவடித்தாமரைகளை யுகளம்னா இரண்டு. திருவடித்தாமரைகள் இரண்டையும் கத²ம் பச்யேயம் – நான் எப்படி தரிசனம் பண்றது? ஏன் ஸ்வாமியை பார்க்கும் போது பாதத்தை பார்க்க முடியாதான்னா ஸம்ப்⁴ரமஜுஷாம் – உன்னை நமஸ்காரம் பண்ணணும்ங்கிற ஆர்வத்துல நிலிம்பாநாம் ச்ரோணி – தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து உன்னை நமஸ்காரம் பண்ணிண்டு இருக்கா. அவாளுடய நிஜகனகமாணிக்யமகுடை: – அவா தலையில இருக்கிற மாணிக்கமகுடங்கள் எல்லாம் மாம் ஸ்த²க³யதி – எனக்கு உன்னுடைய பாததரிசனம் கிடைக்காத மாதிரி தடுத்துடறதுன்னு சொல்றார்.
உன்னுடைய பாத தரிசனம் வேணும். நந்தனார் எப்படி நந்தி மறைக்கறதுன்னு கேட்ட உடனே பகவான் சற்றே விலகியிரும் பிள்ளாய்னு சொன்னார். அந்த மாதிரி இந்த தேவர்கள் கூட்டம் உன்னை நமஸ்காரம் பண்றது என்கிற விஷயம் பகவானுடைய பெருமையை சொல்றது. பரமேஸ்வரனுடைய பாதத்தை எல்லா தேவர்களும் வணங்குகிறார்கள் என்று அவரோட பெருமையை சொல்லி எனக்கு பாத தரிசனம் வேணும்னு கேட்கறா.
இதுல விசேஷ அர்த்தம் என்னன்னா, நம்முடைய மனசு பகவானுடைய பாதத்துலயே நிலைச்சு இருக்கணும். ஏன்னா நமக்குள்ளயே மனசுக்குள்ள தேவர்கள் இருக்கா. இந்த தேவர்கள் பதவிக்கும், பணத்துக்கும், போகங்களுக்கும் ஆசைபடறவா. அந்த மாதிரி நம்ம மனசுக்குள்ள இருந்துண்டு பரமேச்வரனுடைய பாதத்துல பக்தி நிலைச்சு இருக்காமல் மத்த சித்திகள்ல மனசு சிதறி போகும்படி பண்ணிடுவா. அப்படி இல்லாம எனக்கு உன் பாதம்தான் வேணும்னு இங்க கேட்கறார். அந்த மாதிரி மத்த சித்திகள் எல்லாம் இடையூறு.
இதை நாம எப்படி புரிஞ்சுக்கலாம்னா, மஹாபெரியவா அவதாரம் பண்ணி அவர் தரிசனம்கொடுத்தார். அப்போ நிறைய பேர் பெரியவாளை தரிசனம் பண்ணா. வேண்டிய வரங்கள் எல்லாம் பெற்று ரொம்ப சுகமா இருக்கா. இது நிறைய நாம கேள்விப்பட்டிருக்கோம். ஆனா உண்மையான பக்தர்கள்னு பார்த்தா சிவன்சார், நம்முடைய கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், மேட்டூர் ஸ்வாமிகள்,பொள்ளாச்சி ஜயம் பாட்டி, வீணை நீலா மாமின்னு இருந்தா. இவாள்லாம் உன்னிஷ்டம் என்னிஷ்டம்னு பெரியவாகிட்ட இருந்தா. எங்களுக்கு வேண்டியது மஹாபெரியவாளோட திருவடிதான். நீங்க என்ன சொல்றேளோ அப்படி, அப்படீன்னு இருந்தா.
தியாகு தாத்தா சொல்லியிருப்பார். ஒரு வாட்டி அவர் கிட்ட பெரியவா ‘சிவன் ஸாரை அழைச்சிண்டுவா. சதாசிவ சாஸ்திரிகளைக் கூட்டிக் கொண்டு வரவும்னு சொல்லியிருக்கார். சிவன் சார் வந்து நமஸ்காரம் பண்ணி இரண்டு பேரும் பேசிண்டு இருந்திருக்கா. பேசக் கூட இல்லை. ஒரு மணி நேரம் இரண்டு பேரும் ஒருத்தரைஒருத்தர் பார்த்துண்டு உட்கார்ந்திருக்கா. உத்தரவு வாங்கிக்கறேன்னு சிவன் சார் நமஸ்காரம் பண்ணிட்டு கிளம்பறார். இந்த கும்பகோணம் library யை பாத்துக்கோயேன்னு பெரியவா சொல்றார். சரின்னு சொல்லிட்டு சார் வந்துடறார். வர வழியில தியாகுத் தாத்தா கிட்ட சொல்றார். பாத்தியா, என்னை அழைச்சிண்டு போனியா! எனக்கு வேலை வந்துடுத்து. நான் சிவனேன்னு இருந்தேன். எனக்கு வேலை கொடுத்துட்டா பெரியவான்னு விளையாட்டா சொல்றா. அதாவது நிஜ ஸ்வரூப ஆனந்தத்துல திளைச்சு இருக்கிறவர் சிவன் சார். அவர் எல்லா வேலைகளையும் விரும்பி பண்ணுவார். இருந்தாலும் அவர் சும்மா இருக்கறதைக் காட்டிலும் வேலை பண்றதுங்கிறது அடுத்த பக்ஷம்ங்கிற மாதிரி சொல்றார். ஆனா பெரியவா இட்ட பணின்ன உடனே எத்துக்கறார். பெரியவா வந்து காமாக்ஷி. இந்த மஹேசசாலினி எங்கிற மாதிரி பரமேஸ்வரனை சலிக்கப் பண்ணுகிறவள் காமாக்ஷி. அதனால பெரியவாங்கிற காமாக்ஷி சிவன் சாரை library யை பார்த்துக்க சொல்லி அதன் மூலமா ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்தை எழுத வெச்சு நாமெல்லாம் பெரியவாளோட பக்தர்கள் எல்லாம் பயன்பெறவேண்டும் எங்கிற எண்ணத்துல பண்ணது. இதெல்லாம் தெரியும்ங்கிறதால சிவன் சார் உங்களுடைய இஷ்டம் என்னிஷ்டம்னு அந்த காரியத்தை எடுத்து பண்ணினார்.
அதே மாதிரிதான் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளும் தன்னுடைய ஸ்ரமங்கள் எல்லாம் நினைக்காம பெரியவா ஆசைப்பட்ட பாகவத சப்தாகம் பண்ணார். சிவன் சார் ஒருவாட்டி பாகவத சப்தாகம் கேட்கணும்னு ஆசை பட்டாராம். அப்ப சுவாமிகளுக்கு நல்ல வயசாகி ரொம்ப உடம்பு முடியாம இருந்தது. இருந்தாலும் பதினைந்து நாட்கள்ல இரண்டு இரண்டு மணி நேரமா சிவன் சார் கேட்கறதுக்கு பாகவத ப்ரவசனம் பண்ணார். அந்த மாதிரி குருவினுடைய இஷ்டம் என்னிஷ்டம்னு இருந்தார்.
மேட்டூர்ஸ்வாமிகள், பெரியவாகிட்ட உத்தரவு வாங்கிண்டு கங்கையில, ஹ்ரிஷிகேஷ், ஹரித்வார் அந்த மாதிரி ஜனங்கள் அதிகம் வராத இடத்துல 1௦௦௦ குடத்துல கங்கை ஜலத்தை பிடிச்சு சீல் பண்ணி ஒரு truck வெச்சு காஞ்சிபுரத்துக்கு கொண்டு வரார். பெரியவா பார்த்துட்டு அந்த truck ஐ பிரதக்ஷணம் பண்ணிட்டு இதை நீ கொண்டு போய் கங்கை கொண்டான் சோழபுரத்துல சிவலிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணுன்னு சொல்றா. இன்னொருத்தரா இருந்தா என்ன நினைப்பா. இவ்ளோ பாடுபட்டு நான் கொண்டு வந்திருக்கேன். நீங்க பெரியவா ஏத்துக்கணும்னு சொல்வா இல்லையா. அதெல்லாம் இல்ல. மேட்டூர் ஸ்வாமிகளுக்கு பண்ணியாச்சு. பெரியவாளுக்கு கங்கைஜலம் கொண்டு வரணுமா? கொண்டு வந்தாச்சு. பெரியவா சொன்னதை கேட்கணும்.அங்க போயி அபிஷேகம் பண்ணிட்டு ஒரு குடம் ஜலத்தை ப்ரசாதமா கொண்டு வரார். பெரியவா உட்கார்ந்துண்டு என் தலையில விடுங்கிறார். மேட்டூர் ஸ்வாமிகளே தன் கையால் அபிஷேகம் பண்றார். பகவானுடைய இஷ்டம் என்னிஷ்டம்னு. எனக்கு வேண்டியது உங்களோட திருவடின்னு இருந்திருக்கா.
பொள்ளாச்சி ஜயம் பாட்டி, அவாளோட அனுபவம் சொல்றா. மதுரையில கும்பாபிஷேகம் பண்றா பெரியவா. கும்பாபிஷேகம் பண்ணிட்டு பெரியவா மடத்துக்கு திரும்பி வரும்போது பெரியவாளுக்கு ஆரத்தி காண்பிக்கறதுக்கு யாருமே இருக்கமாட்டா. மடத்தை காலியா விட்டா என்ன பண்றதுன்னு சொல்லிட்டு இந்த மாமி இங்கேயே மடத்துலேயே இருக்கா. ஆரத்தியை வெச்சுண்டு உட்கார்ந்திருக்கா. அப்ப ஒரு பையன் இங்கேயிருந்து தெரியறது பாருங்கோன்னு மாடிக்கு கூட்டிண்டு போய் அந்த கும்பாபிஷேகத்தையும் தரிசனம் பண்ணி வைக்கிறான். அப்புறம் கீழ ஓடி வந்து பெரியவா திரும்பி வரும்போது பெரியவாளுக்கு ஆரத்தியும் எடுக்கறா. பெரியவாளே அதை mention பண்றா. எவ்ளோ ஞாபகமா திரும்ப மடத்துக்கு வரும்போது இருக்கணும்னு ஜயம் காத்துண்டு இருக்கா பாருன்னு சொல்றா. இப்படி பார்த்து பார்த்து பெரியவாளுக்கு பண்ணியிருக்கா, பொள்ளாச்சி ஜயம் பாட்டி. அந்த மாதிரி இவா வெச்ச அன்பு பெருசா, அவர் காட்டின கருணை பெருசான்னு சொல்ல முடியாது. ஒரு வாட்டி பெரியவா போயிண்டிருக்கா முன்னாடி. பாட்டி பின்னாடி போறா. ஒரு காளி அம்மன் கோயில். அந்த கோயில் போறதுக்குள்ள பெரியவாளை நாம பிடிச்சிடணும்னு அப்பதான் உண்மையான பக்தின்னு சொல்லிண்டு ஓடறா, இந்த பாட்டி. பெரியவா speed என்ன? அப்போ பெரியவா காளி அம்மன் கோயிலுக்கு முன்னாடி இருக்கிற கல்லுல உட்கார்ந்துடறா. இந்த அம்மாவோட மனசுல இருக்கிற பக்தியை புரிஞ்சுண்டு அப்படி விளையாடி இருக்கா ஒருத்தரோடு ஒருத்தர். கடைசியில ‘பெரியவா கிட்ட பாதுகை வாங்கிக்கோ’ன்னு எல்லாரும் சொல்றா ஜயம் பாட்டிகிட்ட. அவா ‘இல்ல அவரே கொடுக்கட்டும்’ னு சொல்லிருக்கா. கடைசியில பெரியவா பாதுகையை கொண்டு வரச் சொல்லி கால்ல போட்டுண்டு ஜயம் பாட்டியை நீயே எடுத்துக்கோங்கிறா. பெரியவாளை பார்த்துண்டு பாட்டியே எடுத்துக்கறா. எடுத்து பார்த்தா, வலது பக்கம் பாதுகை பெருசா இருக்கு. இடது பக்கம் பாதுகை சின்னதா இருக்கு. இன்னொருத்தரா இருந்தாஎன்ன நினைப்பா. அடடாம்பா. ஆனா இந்த ஜயம் பாட்டி என்ன சொல்றா. அர்த்தநாரீஸ்வர பாதுகை! பெரியவா தான் காமாக்ஷி. பெரியவாதான் சந்திரமௌலீஸ்வரர். அர்த்தநாரீஸ்வர பாதுகை எனக்கு கிடைச்சிருக்குன்னு எடுத்துண்டு போறா. அதற்கப்றம் அந்த பாட்டி இன்னும் 20 வருஷம் இருக்கப் போறா. அதுக்கு பெரியவா பாதுகை கொடுத்திருக்கா. அப்படி உத்தம பக்தர்கள் பாதம்தான் வேணும்னு இருந்திருக்கா.
அது மாதிரி, வீணை நீலா மாமிங்கிறவா. பெரியவா கேட்ட போதெல்லாம் வீணையை எடுத்துண்டு வந்து ‘அம்பாளுக்கு வீணா கானம்னா பிடிக்கும். வாசி’ ன்னு பெரியவா சொல்லி வாசிச்சு இருக்கா. பெரியவா காட்டுப்பள்ளின்னு ஒரு தீவுல போயி உட்கார்ந்திருக்கா. அங்க இந்த மாமி போய் நமஸ்காரம் பண்ண உடனே வீணை கொண்டு வரலயான்னு கேக்கறா! எப்படி பெரியவா கொண்டு வர்றது. படகெல்லாம் வெச்சு கொண்டு வரணும்ன உடனே நான் ஆள் அனுப்பிச்சு கொண்டு வரேன்னு நீ இங்கேயே இருன்னு சொல்லி அந்தா வீணையை பெரியவா ஆளை அனுப்பிச்சு கொண்டு வர சொல்லி அடுத்த நாள் அங்க வாசிக்க சொல்றா. பெரியவா சொல்றா ‘இன்னிக்கு பௌர்ணமி. அம்பாளுக்கு வீணா கானம் இருக்கட்டுமேனு தான் ஆசைப்பட்டேன்’ னு சொல்றா. இன்னொரு occasionல பெரியவா வெளியில கோயிலுக்கு போயிட்டு வரா. இந்த மாமி கிட்ட ‘நான் சொல்ற வரைக்கும் நீ வாசிசிண்டு இரு’ ன்னு சொல்லியிருக்கா. இந்த மாமி நான்கு மணிநேரம் அஞ்சு மணி நேரம் வாசிச்சுண்டு இருக்கா. பெரியவா பெரிய ரோஜா மாலை கோயில்ல போட்டதை பெரியவா போட்டுண்டு வரா. ‘நீலா வா, வா. பெரியவாளை தரிசனம் பண்ணு. பெரியவா ரோஜாமாலை போட்டுண்டு காமாக்ஷியாட்டம் இருக்கா’ ன்னு எல்லாரும் கூப்படறா. இவா ‘இல்லை வரலை. என்னை பெரியவா நான் சொல்ற வரைக்கும் வாசி’ ன்னு சொல்லியிருக்கான்னு இந்த மாமி வாசிச்சிண்டு இருக்கா. பெரியவா நேரா இந்த மாமி கிட்ட வந்து 5 நிமிஷம் வாசிக்கறதை கேட்டுட்டு மாலையை கழட்டி அந்த மாலையை பெரியவா மாமி மடியில போட்டிருக்கா. அப்படி உன்னிஷ்டம் என்னிஷ்டம்னு இருந்தா பெரியவாளோட கருணையும் அலாதியா இருந்திருக்கு.
இவா ஒவ்வொருத்தரோட personal life எடுத்து பார்த்தா ஒரு miracle ம் இருக்காது. இதுதான் miracle. நாம பகவானோட பாதத்துல சலிக்காம நிக்கணும். அதுக்காக வரக் கூடிய எந்த ஒரு க்யாதி லாப பூஜையிலும் மனசு வைக்காம இருக்கணும்னு தெரிஞ்சுது இவாளுக்கெல்லாம். இவா தான் உத்தம பக்தர்கள். பெரியவா சொன்ன காரியத்தை பண்ணா அது ஒரு மாதிரி பெரியவா விரும்பின காரியங்களை கொடுத்த மாதிரி அந்த காரியம் சுலபமா நடக்கும். president வரைக்கும் கூட சுலபமா போயி பார்த்துட்டு முடிச்சுட்டு வந்துடலாம். அப்படி இல்லாம நம்ம காரியங்களை பெரியவா பக்தியினால இல்லாம பெருமைக்காக, எனக்கு தோணித்து. நாலு பேர் கேட்கறான்னு நம்ம காரியங்கள் எடுத்துண்டா அது வந்து ஒரு ரொம்ப முயற்சியா இருக்கும். அந்த மாதிரி பெரியவா பக்தி, சிவ பக்தி எல்லாம் ஞானத்துக்காக தான்.
ரமணர் மாதிரி உட்கார்ந்திருக்கனும். அருணாசலம் ஒண்ணுமே சொல்லாம இவரை சும்மா இரு சொல்லற. நீ ஒரு காரியமும் பண்ண வேண்டாம். உன் எண்ண ஓட்டங்களையும் நிறுத்திடு. அருணாச்சல மலை, அருணாசலேஸ்வரர் ஒண்ணும் சொல்லாமலேயே இவருக்கு சொல்லிட்டார். முத்துஸ்வாமி தீக்ஷிதர், அருணகிரி நாதருக்கெல்லாம் பகவான் வாய் விட்டு ஒரு உபதேசம் பண்ணா. இவருக்கு மலையா இருந்து உபதேசம் பண்ணியிருக்கார். அவர் உட்கார்ந்திருந்தார். அதுதான் அடைய வேண்டிய நிலைமை. உத்தம பக்தி. பக்திங்கிறதுக்கு ultimate goal பர சிவோல்லாஸம். அதை அடைய வேண்டிய நிலைமை னுவெச்சுண்டு பக்தி பண்ணா safe. இந்த பக்தி பண்றதுனால நம்ம கிட்ட வரவா நாலு பேர் அந்த ருசியை கண்டு அவா நம்மை புகழும்போதோ இல்லை ஏதாவது offer பண்ணும் போதோ நப்பாசையினால திரும்பியும் அவா carல கிளம்பி காரியங்கள் பண்றதுன்னு ஆரம்பிச்சுட்டா நமக்கு ultimate goal அந்த பக்தியினால ஏற்பட வேண்டிய சிவஞானம் கிடைக்காம போயிடும்னு இந்த ஸ்லோகத்துல தாத்பர்யம்.
அடுத்த ஸ்லோகத்துலயும் அதே மாதிரிதான் சொல்றார்
त्वमेको लोकानां परमफलदो दिव्यपदवीं
वहन्तस्त्वन्मूलां पुनरपि भजन्ते हरिमुखाः ।
कियद्वा दाक्षिण्यं तव शिव मदाशा च कियती
कदा वा मद्रक्षां वहसि करुणापूरितदृशा ॥
த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³ தி³வ்யபத³வீம்
வஹந்தஸ்த்வன்மூலாம் புனரபி ப⁴ஜந்தே ஹரிமுகா:² ।
கியத்³வா தா³க்ஷிண்யம் தவ சிவ மதா³சா ச கியதீ
கதா³ வா மத்³ரக்ஷாம் வஹஸி கருணாபூரிதத்³ருʼசா ॥
ன்னு ஸ்லோகம். என்ன அர்த்தம்னா பரமேஸ்வரா! த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³ – இந்த உலகத்துல எல்லாருக்கும் நீ ஒருவர் தான் பரமபலம்னா மோக்ஷம். அந்த மோக்ஷ பதத்தை உங்க ஒருத்தரால தான் கொடுக்க முடியும். ஆனா மத்த பலங்கள் எல்லாமும் நீங்க தான் கொடுக்கறேள் த்வன்மூலாம் – உன்னுடைய அனுக்ரஹத்துனால தி³வ்யபத³வீம் வஹந்த: – தெய்வ பதவிகளை பெற்றவர். விஷ்ணு முதலியவர்கள் ஹரிமுகா:² – விஷ்ணு பதவி வரைக்கும் எல்லா பதவியையும் சிவன் கொடுத்தது தான்.அந்த பதவி வரைக்கும் எல்லா பதவியில இருக்கிறவர்களும் புனரபி ப⁴ஜந்தே – மீண்டும் மீண்டும் உன்னை பஜித்து கொண்டிருகிறார்கள். அந்த பதவி நிலைச்சு இருக்கணும். இன்னும் மேல பதவி கிடைக்கணும்னு உயர்வை நாடி ஜனங்கள் உன்னை பஜிக்கறா. நீ கேட்டதெலாம் கொடுக்கற.
ஆசைக்கோர் அளவில்லைன்னு அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்! – இந்த பூமிக்கே நீ ராஜான்னு சொன்னா,கடலுக்கு யார் ராஜா? நான் கடல் மேல் படை எடுக்கப் போறேம்பா அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பெரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்! – குபேரனுடைய செல்வம் எல்லாம் உனக்கு கொடுப்பேன்னு சொன்னா கூட ஆனா இரும்பை தங்கமாக்கற ரசவாத வித்தை என்ன?அதை கத்துக்கறேன்பாளாம். அப்படி மனசோட ஆசைக்கு அளவே கிடையாது. கியத்³வா தா³க்ஷிண்யம் தவ சிவ மதா³சா ச கியதீ – நீ தாட்சண்யம் பண்ற. எனக்கும் என்னுடைய ஆசை அளவில்லாம இருக்கு. உன்னுடைய தாட்சண்யமும் அளவில்லாம இருக்கு. அதனால கேட்கற பதவியெல்லாம் கொடுக்கற. சுகங்கள் எல்லாம் கொடுக்கற. ஆனா நிஜமா என்கிட்ட தாட்சண்யம் பண்றதா இருந்தா கதா³ வா மத்³ரக்ஷாம் வஹஸி கருணாபூரிதத்³ருʼசா – உன்னுடைய கருணை நிறைந்த கடாக்ஷத்தை என் மேல காண்பிச்சு என்னை எப்ப நீங்க காப்பாத்தப் போறேள்? ன்னு கேட்கறார். ஆடினது போதுமென்று ஓய்வளிக்க உன்னையல்லால் வேறே கதியில்லை அம்மா. உலகெலாம் ஈன்ற அன்னைன்னு கல்யாணியில பாபநாசம் சிவன் பாடல் இருக்கு. அந்த மாதிரி பதவிகள் எல்லாம் இருக்கு. சுகமெல்லாம் இருக்கு. ஆனா எல்லாம் ஒய்ஞ்ச நிலைமை சிவனேன்னு இருக்கறது. அந்த நிலைமையை கொடுக்கக் கூடியவர் பரமேஸ்வரன் த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³ – அந்த உயர்ந்த பலனை உங்களால கொடுக்க முடியும். அது மோக்ஷம், ஞானம், ஜீவன் முக்தி. அந்த பலனை, ஞான வைராக்யத்தை எப்ப தரப் போறேன்னு ஒரு ஸ்லோகம். அந்த தாட்சண்யத்தை பண்ணுங்கோன்னு வேண்டிக்கறார்.
ரொம்ப அழகான 2 ஸ்லோகங்களை இன்னிக்கு பார்த்தோம்.
நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ
2 replies on “சிவானந்தலஹரி 17, 18 ஸ்லோகங்கள் பொருளுரை”
ஏ பரமேஸ்வரா! தங்கள் திருவடிகளை நான் தரிசனம் ஏது விட்டால் தங்கள் கடாக்ஷம் என்மேல் விழுந்துவிடும். அதற்குமேல் எனக்கு யாதொரு கவலையும் இராது. அந்தத் திருவடிகளில் தரிசனமே அரிதாக இருக்கிறதே! நான் என்ன செய்யலாம் ? என சிவனிடம் அரற்றும் காட்சி இது !
நான் பல ஜன்மாவில் பண்ணிய புண்ணியத்தால் தாங்கள் எண்ணிடமுள்ள கருபையாலோ தாங்கள் என் முன் ஆவிர்பவித்தபோதிலும் தங்கள் தரிசனத்துக்கு போட்டி போட்டுக்கொண்டு எனக்கு முன் நிற்கும் தேவர்களின் வரிசை, நான் தங்களின் சரணங்களை தரிசனம் செய்ய முடியாதபடி என்னை மறைத்து விடுகிறதே, நான் என் செய்வேன்? என்று மனதின் நினைப்பை இங்கு அரற்றுகிரார் !!
சுகாஸ்வரோபியான ஏ பரமேஸ்வரா, ஜனங்களுக்கு தாங்கள் ஒருவரே யாவற்றையும் விட சிறந்த மோக்ஷம் என்ற பழத்தைக் கொடுக்கக் கூடியவராவீர்! ஏனென்றால் விஷ்ணு முதலிய தேவர்கள் தங்கள் மூலமாகவே கிடைத்த வைகுண்டம் முதலிய உயர்ந்த ஸ்தானத்தை, பெற்றவர்களாக இருந்து கொண்டு மறுபடியும் தங்களையே வணங்குகிறார்கள் ! தங்களுக்கு பக்தர்களிடையே அபிப்ராயத்தை அனுசரித்து இருக்கும் தன்மைதான் எவ்வளவு ? அடை அளவிடவே முடியாது ! எப்போழுதுதான் , கருணை ததும்பும் விழிகளால் அஹங்காரத்திலிருந்து என்னைக் காத்தருளுவீர்?
என்ற அழகான பிரார்த்தனை !
ஓம் நம: சிவாய
பரமேஸ்வரனின் பாத தியானத்தால், அடைய முடியாத மோக்ஷமும் சித்திக்கும், மற்றும் ஏனைய க்ஷேமங்களும் கை
கூடும்.
பெரியவாளின் அத்யந்த பக்தர்கள், சார், ஸ்வாமிகள் இவர்களின் ஆழ்ந்த தபசும், பக்தியும் practical examples, ரமணரின் காரியமற்ற மன நிலையும் அதனால் சிவஞானம் அடையும் மனோ நிலை போன்ற விளக்கங்களுடன்
அதி அற்புதமான பல பொக்கிஷங்கள் அடைத்த பேழையாக திகழ்கிறது.
🙏🙏