சிவானந்தலஹரி ஸ்லோகம் 26 தமிழில் பொருள் (13 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 26)
சிவானந்த லஹரில 25 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 26வது ஸ்லோகம்.
कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
அப்படீன்னு ஒரு ஸ்லோகம். பரமேஸ்வரனுடைய திருவடியை சேவிக்கறதோட பேரின்பத்தை வர்ணிக்கறார். “‘ஹே கி³ரிஶ’ – மலையில் வசிப்பவரே!, ‘த்வாம் த்³ருʼஷ்ட்வா’ – உங்களை தர்சனம் பண்ணி… ‘தவ ப⁴வ்ய அங்க்⁴ரியுக³ளம்’ – உங்களுடைய மங்களகரமான, சுபமான அந்த திருவடித் தாமரைகள் இரண்டையும்.. ‘ஹஸ்தாப்⁴யாம் க்³ருʼஹீத்வா’ – கைகளால் பற்றிக்கொண்டு… ‘ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந்’ – தலையிலயும், கண்கள்லயும், மார்புலயும் வெச்சுண்டு… ‘ஸமாஶ்லிஷ்ய’ – இறுகக் கட்டிண்டு, ‘ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலான் ஆக்⁴ராய’ – நல்ல மலர்ந்த தாமரைப் போன்ற அந்த பாதங்களுடைய வாசனையை முகர்ந்து, ‘ப்³ரஹ்மாத்³யைஹி அலப்⁴யாம்’ – பிரம்மாதி தேவர்களுக்கும் கிடைக்காததான.. ‘முத³ம்’ – இப்படி அந்த பாதத்தை அனுபவிக்கற அந்த சந்தோஷத்தை… ‘கதா³ வா அநுப⁴விஷ்யாமி’ – நான் எப்ப அனுபவிக்கப் போறேன்?” அப்படீன்னு சொல்றார்.
அப்படி அந்த பாத தரிசனம், பாதத்தை கட்டிண்டு கண் ஜலம் விடறது, அதை தலையில வெச்சுக்கறது, இது எல்லா மஹான்களும் பாடியிருக்கா. ஷண்மதங்கள்லேயும் வர்றதுங்கிறதுக்கு, ஒளவையார் ‘சீதக் களப செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பும் பல இசைபாட’ அப்படீன்னு அந்த பாதத்துல ஆரம்பிச்சு ‘வித்தக விநாயகா விரைகழல் சரணே’ அப்படீன்னு பாதத்துல முடிக்கறா.
அருணகிரிநாதர் ‘வருத்தா மற்றொப்பிலதான மலர்த்தாள் வைத்து எத்தனை ஆள்வாய்’, ‘முருக சரவண மகளிர் அறுவர் முலைநுகரும் அறுமுககுமர சரணம் என அருள்பாடி ஆடிமிக மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழிஅருவி முழுகுவதும் மணநாறு சீறடியே’ – அப்படீன்னு, அந்த மலர்த்தாள் தலையில் வைத்து இந்த எத்தனை ஆளணும், காப்பாற்ற வேண்டும் அப்படீன்னு வேண்டிண்டு, அநுபூதில,
‘சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே’
அப்படீன்னு, வேதத்துல கமழற அந்த கழலை சூடும்படி எனக்கு கொடுத்தானே, என்னால வர்ணிக்க முடியுமா இதோட சந்தோஷத்தை அப்படீன்னு முடிச்சுடறார்.
ஆச்சார்யாள் விஷ்ணு ஷட்பதில,
நாராயண கருணாமய ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ |
இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜே ஸதா வஸது ||
அப்படீன்னு, ‘ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ’ – உன்னுடைய பாதங்கள்ல சரணாகதி பண்ணுகிறேன், ‘ஹே நாராயண கருணாமய’ அப்படீன்னு சொல்றார். என்னன்னா ‘தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’ – அப்படீன்னு, இந்த உலகத்துல நாம வந்து பொறந்து, கொஞ்ச நாள்லேயே பலவிதமான பயங்கள், எல்லாத்துக்கும் மேலான பயம்.. நம்மகிட்டயிருந்தே நம்முடைய வாஸனா பலத்துனால உந்தப் பட்டு, நம்ம காரியங்கள் பண்றோம். அதனால துக்கப் படறோம். இந்த chainல இருந்து நம்மால வெளியில வரவே முடியலையே? நாம சந்தோஷப் படணும்னு விரும்பறோம். ஆனா, பண்ற காரியங்கள் துக்கத்துல போயி முடியறது. இதுலேயிருந்து எப்படி வெளியில வர்றதுன்னு பயந்துண்டு இருக்கும்போது, அந்த பயத்தைப் போக்கி அபயத்தை கொடுக்கறது பகவானுடைய திருவடி. அதுனாலதான் மஹான்கள் எல்லாரும் அந்த அபயம் கிடைச்சுடுத்துன்னா, பகவானுடைய திருவடி கிடைச்சு, அந்த அடியார் கூட்டத்துல நாம சேர்ந்துட்டோமானா, அதுக்கப்புறம் பயமே இல்லை. என்ன ஜன்மா வேணா எடுக்கலாம். அதுக்கப்புறம் ப்ராரப்த வசமா என்ன நடந்தாலும் நமக்கு ஒண்ணும் பண்ணாது. பகவான் இருக்கார். அவர் ஆட்டி வைக்கறார் அப்படீன்னு நாம இருக்க முடியும்ங்கிறதுனால தான், அந்த சரணத்தை எல்லாரும் பிரார்த்தனை பண்றா.
ஆதி சங்கரர் சொல்றமாதிரி, திருவாசகத்துல மாணிக்க வாசகரும் எத்தனை வாட்டி சரணத்தை போற்றுகிறார்! எடுத்த உடனேயே, ‘நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க’ அப்படீன்னு அந்த ‘தாள் வாழ்க’ன்னு ஆரம்பிச்சு,
‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க’
‘ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி’
அப்படீன்னு திருவடிகளை போற்றிண்டே இருக்கார். திருவெம்பாவை கடைசி பாட்டுல,
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்
அப்படீன்னு ஏழு வரியோட முடிவுலயும் அந்த பாதங்களை போற்றி போற்றி அவர் சந்தோஷப்படறார். அவருக்கு குருந்த மரத்தடியில குருவாக வந்து பரமேஸ்வரன், அந்த பாதங்களை கொடுத்ததுலேருந்து, அவருக்கு உலக பந்தங்கள் எல்லாம் விட்டுப் போயிடுத்து.
மூகபஞ்சசதியிலயும், இந்த பாதம் கிடைக்கறதுக்கு நாம என்ன பண்ணனும் அப்படீங்கிறது ஒரு process மாதிரி அழகான ஸ்லோகத்துல சொல்றார். பாதாரவிந்த சதகம் 86 வது ஸ்லோகத்துல,
गृहीत्वा याथार्थ्यं निगमवचसां देशिककृपा-
कटाक्षार्कज्योतिश्शमितममताबन्धतमसः ।
यतन्ते कामाक्षि प्रतिदिवसमन्तर्द्रढयितुं
त्वदीयं पादाब्जं सुकृतपरिपाकेन सुजनाः ॥ ८६
க்³ருʼஹீத்வா யாதா²ர்த்²யம் நிக³மவசஸாம் தே³ஶிகக்ருʼபா-
கடாக்ஷார்கஜ்யோதிஶ்ஶமிதமமதாப³ந்த⁴தமஸ: ।
யதந்தே காமாக்ஷி ப்ரதிதி³வஸமந்தர்த்³ரட⁴யிதும்
த்வதீ³யம் பாதா³ப்³ஜம் ஸுக்ருʼதபரிபாகேந ஸுஜநா: ॥ 86
அப்படீன்னு ஒரு ஸ்லோகம். ‘ஸுஜநாஹா’ ன்னா ஆத்ம குணங்கள், சத்யம், கருணை, புலனடக்கம், சந்தோஷம், த்ருப்தி இந்த மாதிரி குணங்கள் இருக்கிறவா ‘ஸுஜநாஹா’ – சாது ஜனங்கள். அவா ‘ஸுக்ருʼதபரிபாகேந’ – ஒரு மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், பகவானை சேவிக்கறது, புண்ய தீர்த்தங்கள்ல ஸ்நானம் பண்றது, திருவண்ணாமலை போயி கிரிவலம் பண்றது… இந்த மாதிரி புண்ய காரியங்கள் பண்ணி பண்ணி, ‘ஸுக்ருʼதபரிபாகேந’ -நல்ல புண்யத்தினுடைய பலனாக, ‘ஸுஜநாஹா’… அவா என்ன பண்றான்னா.. ‘க்³ருʼஹீத்வா யாதா²ர்த்²யம் நிக³மவசஸாம்’ – வேத வாக்குகளையுடைய உண்மை பொருள், ‘யாதா²ர்த்²யம்’ என்ன? அப்படீன்னு ‘க்³ருʼஹீத்வா’ – சாஸ்திரங்கள்லாம் படிச்சு, அதுலேருந்து அந்த வாழ்க்கையினுடைய பயன் என்ன? பண்ண வேண்டியது என்னன்னு படிக்கறா. ஆனா, அதை நாம படிச்சா கூட நம்மால நம்ம கர்ம க்ரந்தியில இருந்து விடுபட்டு அதை பண்ண முடியறது இல்லை. அது எப்ப முடியும்னா, ‘தே³ஶிக க்ருʼபா கடாக்ஷார்க ஜ்யோதிஶ்ஶமித மமதா ப³ந்த⁴தமஸ:’… ‘தே³ஶிக க்ருʼபா கடாக்ஷம்’ – ஒரு குருவானவர், தான் இந்த தளைகள்லேருந்து விடுபட்டவராக, ஜீவன் முக்தராக விளங்கும்போது, அவரைப் போயி நாம நமஸ்காரம் பண்ணோம்னா, அவருடைய கடாக்ஷம் நம்ம மேல விழுந்தா, அந்த ‘க்ருʼபா கடாக்ஷம்’ ங்கிற ‘அர்க ஜ்யோதி’ – சூரிய ஓளியினால், ‘ஶமித மமதா ப³ந்த⁴ தமஸ:’ – உலகத்துல ஏன் காரியங்கள் பண்றோம்? இவா நம்மளோட மனுஷா… இவாளை காப்பாத்தணும், இது என்னுடைய பொருள்… இதை சம்பாதிக்கணும், காப்பாத்தணும். அந்த ‘மமதா ப³ந்த⁴ தமஸ:’ – இந்த அக்ஞான இருளை, ‘ஶமித:’ – குரு க்ருபா கடாக்ஷம் என்ற சூரிய ஒளியினால் இதைப் போக்கிக் கொண்டு, அப்புறம் ‘யதந்தே காமாக்ஷி ப்ரதிதி³வஸம் அந்தர்த்³ரட⁴யிதும் த்வதீ³யம் பாதா³ப்³ஜம்’ – ஹே காமாக்ஷி! ஒவ்வொரு நாளும், ‘ப்ரதி தி³வஸம் அந்தர் த்³ரட⁴யிதும்’ -உன்னுடைய பாதத்தை மனசுல கெட்டியா பிடிச்சு வெச்சுகிறதுக்கு, இந்த மஹான்கள் ‘யதந்தே’ – முயற்சி பண்ணுகிறார்கள் அப்படீன்னு சொல்றார்.
இன்னொரு ஸ்லோகத்துல,
वितन्वीथा नाथे मम शिरसि कामाक्षि कृपया
पदाम्भोजन्यासं पशुपरिबृढप्राणदयिते ।
पिबन्तो यन्मुद्रां प्रकटमुपकम्पापरिसरं
दृशा नानन्द्यन्ते नलिनभवनारायणमुखाः ॥ ५५
விதந்வீதா² நாதே² மம ஶிரஸி காமாக்ஷி க்ருʼபயா
பதா³ம்போ⁴ஜந்யாஸம் பஶுபரிப்³ருʼட⁴ப்ராணத³யிதே ।
பிப³ந்தோ யந்முத்³ராம் ப்ரகடமுபகம்பாபரிஸரம்
த்³ருʼஶா நாநந்த்³யந்தே நளிநப⁴வநாராயணமுகா²: ॥ 55
கம்பா நதியின் கரையில, காமாக்ஷி தேவி நடக்கறதுனால, அந்த மணல்ல, காமாக்ஷியினுடைய பாத முத்திரை இருக்காம். நன்னா பதிஞ்சிருக்கு. ‘நளிந ப⁴வ நாராயண முகா²ஹா’ – பிரம்மா, விஷ்ணுல்லாம் அதை பார்த்து ‘நாநந்த்³யந்தே’ – ரொம்ப சந்தோஷப் படறா, இன்னிக்கு இது கிடைச்சுதே நமக்குன்னு… அப்பேற்பட்ட உன்னுடைய திருவடிகளை, ‘க்ரு’பயா மம ஶிரஸி விதந்வீதா²ஹா’ – கருணையினால் என் தலையில வைம்மா. ‘விதந்வீதா² நாதே² மம ஶிரஸி காமாக்ஷி க்ருʼபயா பதா³ம்போ⁴ஜந்யாஸம் பஶுபரிப்³ருʼட⁴ ப்ராணத³யிதே’ – உயிர்களை காப்பவனுடைய, பரமேஸ்வரனுடைய மனைவியே! அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.
இப்படியெல்லாம் பிரார்த்தனை பண்ணினதுனால அவருக்கு அந்த பாதம் கிடைக்கறது. அதைக் கொண்டாடறார்.
परस्मात्सर्वस्मादपि च परयोर्मुक्तिकरयोः
नखश्रीभिर्ज्योत्स्नाकलिततुलयोस्ताम्रतलयोः ।
निलीये कामाक्ष्या निगमनुतयोर्नाकिनतयोः
निरस्तप्रोन्मीलन्नलिनमदयोरेव पदयोः ॥ ७४
பரஸ்மாத்ஸர்வஸ்மாத³பி ச பரயோர்முக்திகரயோ:
நக²ஶ்ரீபி⁴ர்ஜ்யோத்ஸ்நாகலிததுலயோஸ்தாம்ரதலயோ: ।
நிலீயே காமாக்ஷ்யா நிக³மநுதயோர்நாகிநதயோ:
நிரஸ்தப்ரோந்மீலந்நலிநமத³யோரேவ பத³யோ: ॥ 74
ன்னு ஒரு ஸ்லோகம். 74வது ஸ்லோகம். உயர்ந்த வஸ்துக்கள் – இது ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு, இது ரொம்ப பிரமிக்கும்படியா இருக்குன்னா, அது எல்லாத்தைக் காட்டிலும் மேலானது காமாக்ஷி பாதங்கள் என்று உணரனும், ‘பரஸ்மாத் ஸர்வஸ்மாத³பி ச பரயோஹோ முக்திகரயோஹோ’ – முக்தியை கொடுக்கக் கூடியது அம்பாளுடைய சரணங்கள். அடுத்து ‘நக²ஶ்ரீபி⁴ஹி ஜ்யோத்ஸ்நா கலிததுலயோஹோ தாம்ரதலயோஹோ’- அந்த தலம், திருவடித் தலம் தாம்ரம் போல செக்கச்செவேல்னு இருக்கு. அம்பாளுடைய நகக் கிரணம் – ‘ஜ்யோத்ஸ்நா’, நிலவுக்கு துல்யமா இருக்கு. ‘நிலீயே காமாக்ஷ்யாஹா’- அதுலயே நான் லயிச்சிருக்கேன். எப்படி இருக்கேன்? ‘நிலீயே’ – நன்றாக லயிச்சிருக்கேன், ‘நிக³மநுதயோர் நாகிநதயோஹோ’ – தேவர்கள் வணங்கும் அந்த பாதங்கள், வேதங்கள் ஸ்தோத்ரம் பண்ணும் அந்த பாதங்கள், ‘நிலீயே காமாக்ஷ்யாஹா நிக³மநுதயோர் நாகிநதயோஹோ நிரஸ்தப்ரோந்மீலந் நலிந மத³யோரேவ பத³யோஹோ‘ – இந்த தாமரையுடைய அழகை பழிக்கறது உன்னுடைய பாதங்கள் அப்படீன்னு, அந்த பாதம் கிடைச்ச பின்ன அதை அப்படி கொண்டாடறார்.
அப்படி எல்லா மதங்கள்லேயும், சூரிய பகவானுக்கு நமஸ்காரம் தான் பிடிக்கும் அப்படீன்னு ‘மித்ராய நமஹ, ரவயே நமஹ’ ன்னு பண்றோம். சூரிய நமஸ்காரம் அப்படின்னே வேதத்துல இருந்து portion எடுத்து 131 நமஸ்காரம் பண்ணுவா. அந்த மாதிரி பகவான்னா, அவரை நமஸ்காரம் பண்ணணும், அவருடைய திருவடி கிடைக்கணும் அப்படீன்னு இந்த ஸ்லோகத்துல ஆச்சார்யாள் வேண்டற மாதிரி வேண்டணும். அது கிடைச்சுடுதுன்னா, நமக்கு மனக் கவலைக்கு மருந்து. அதற்கப்புறம், கவலைப்பட்டுண்டு இந்த உலகத்துல வாழலாம், anxiety யே இல்லாம வாழலாம்னா அது எவ்வளவு பெரிய பேறு.
இந்த திருவடியை எப்படி ஆச்சார்யாள் அனுபவிக்கறாரோ, அதுக்கு துல்யமான ஒரு அனுபவம்னா, அந்த திருவடிகளையே நினைச்சுண்டு அதை மனசுல இறுக்கப் பிடிச்சு வெச்சிண்டிருக்கிற மஹான்களுடைய சங்கம் இந்த திருவடி சேவைக்கு துல்யமா இருக்கும். அப்படி ஒரு மஹானை பார்த்து, அவாளோட பழகினோம்னா, அவாளுடைய அந்த சங்கம் தான் நமக்கு அபயத்தைக் கொடுக்கும். நம்முடைய காலத்தை பயப்படாம தள்ளலாம்ங்கிற தைர்யம், அந்த சாது சங்கதுனால கிடைக்கும். ‘ஸாது ஸமாகம ஸங்கீர்ணானாம் சிந்தா நாஸ்தி கில’னு பாடினார் பிரம்மேந்த்ராள். அந்த மாதிரி, அதுக்கப்புறம் கவலையே இல்லை வாழ்க்கையில. அந்த ஒரு state அடையறதுக்கு இந்த பிரார்த்தனை.
कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யா ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
இந்த ஒரு சந்தோஷம்தான் வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்கக் கூடிய சந்தோஷம். இதைத்தான் நாம வேண்டிக்கணும். அந்த திருவடி சேவை கிடைக்கணும். ஸாதுக்கள் சங்கம் கிடைக்கணும் அப்படீன்னு வேண்டிப்போம்.
நம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ
6 replies on “சிவானந்தலஹரி 26வது ஸ்லோகம் பொருளுரை”
மஹாபெரியவா மலரடி சரணம்..
Shivananda lahari tamil meaning arputam pl,share to my Email id
Thank you Sir. There is a way to subscribe to this blog with your email. Find it on the right side of the blog posts.
சௌந்தர்ய லஹரி 25 வது ஸ்தோத்ரம் அம்பாள் திருவடித் தாமரைகளைப் பற்றி க்கொண்டால் முக்குணங்களை அனுசரித்து த் தோன்றிய மூர்த்தி களையும் பூஜித்த பலன் என்னும் அர்த்தத்தில் வரும்! திருவடி என்பது அவ்வளவு சிறப்பு!
ஆசார்யாள் சொல்றார் ” ஹே பரமேஸ்வரா தங்களைப் பார்த்து, ஷேமத்தை அளிக்க வல்ல தங்கள் இரு பாதங்களையும் இறுக்கப்.பிடித்துக் கொண்டு தலையிலும்,நேத்ரத்திலும்,மார்பிலும் ஒத்திக்கொண்டு, ஆலிங்கனம் செய்து, சிறந்த தாமரை புஷ்பத்தின்
வாசனை போன்ற சிறந்த வாசனைகளை முகர்ந்து பார்த்து , பிரம்மா முதலிய தேவர்கள் அடையாத சந்தோஷத்தை நான் எப்போது அடையப் போகிறேன்” என ஆசார்யாள் இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரணிடம்.கேட்கிறார் .
மூக பஞ்ச சதியில் ஸத் குருவின் கிருபா காக்ஷம் என்ற ஞான சூரியன் அகந்தையால் ஏற்பட்ட அஞ்ஞானம்.என்னும் கண்களைத் திறந்துஞானம் என்னும் மையை இட்டுவிடுகிறது ! என்பதாக பாதாறவிந்த ஸ்லோகம் நமக்கு எடுத்துரைக்கிறது!
திருப்புகழில் ஈசன் இணையடி நீழலை சீர் பாத வகுப்பு என்றதிருப்புகழில் நயம்பட ச் சொல்கிறார் அருணகிரியார்!
இன்று ஆணித் திருமஞ்சனம்
ஒரு நல்ல பதிவைப் படித்த சந்தோஷம் ! நன்றி கணபதி.
நம சிவாய நம சிவாய
எண்ணற்ற உவமைகளுடன் சிவானந்த லஹரி ஸ்லோக விளக்கம் மிக ப்ரமாதம்.
பரமனின் பாதத்தை பற்றிக்கொண்டு சரணாகதி செய்வதே பக்திக்கு ஒரு படி.
நவ வித பக்திகளில் நான்காவது பாத சேவனம்.
தலை,கண்கள்,நெஞ்சம் இவைகளில் பாதங்களை அணைத்து தேவர்களுக்கும் கிடைக்க அறியதான ஆனந்தத்தை இறைவன் சரணங்களை பிடித்துக்கொள்வதனால் அந்த எல்லை இல்லா நிறைந்த பேரானந்தத்தை அடையலாம்
ஒவ்வொரு அக்ஷரமும் பக்தி உணர்வை தூண்டும் விதமாக உள்ளது.
தங்களின் விளக்கம் ஆனந்த கண்ணீரை பெருக்குகிறது.
அற்புதம. மனசுக்கு மிக சந்தோஷத்தை தந்தது. மிக்க நன்றி