ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 32-40 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 32 to 40 meaning
சங்க்ஷேப ராமாயணத்துல இதுவரை 31 ஸ்லோகங்கள் பாத்திருக்கோம். இன்னிக்கு 32லேர்ந்து 40 வரைக்கும் பார்க்கலாம். ரொம்ப சோகமான ஒரு கட்டம்.
चित्रकूटं गते रामे पुत्रशोकातुरस्तदा ||32||
राजा दशरथः स्वर्गं जगाम विलपन् सुतम् |
சித்ரகூடம்ʼ க³தே ராமே புத்ரஶோகாதுரஸ்ததா³ ||32||
ராஜா த³ஶரத²꞉ ஸ்வர்க³ம்ʼ ஜகா³ம விலபன் ஸுதம் |
ராமன் சித்ரகூடம் சென்ற பிறகு தசரத மஹாராஜா புத்திர சோகத்தினால் “ஆதுர:” – மிகவும் வருத்தப்பட்டு, நோய் வாய்பட்டு “ஸ்வர்கம் ஜகாம” – ராமா ராமானு தன் புள்ளையையே நெனைச்சிண்டு அவனை பத்தியே புலம்பிண்டு ஸ்வர்கம் அடைந்தார். இது வந்து ஒரே ஸ்லோகத்தில சொல்லிட்டார். அதுக்கு நடுவுல வர காக்ஷிகள் என்னன்னா சுமந்திரர் ராமன் கங்கையை தாண்டி போனவுடனே சுமந்திரர் திரும்ப வரார். திரும்பி வந்து அவருக்கு அயோத்தியை பார்த்தபோது.. என்ன இது !
कच्चिन् न सगजा साश्वा सजना सजन अधिपा |
राम सम्ताप दुह्खेन दग्धा शोक अग्निना पुरी ||
கச்சின் ந ஸக³ஜா ஸாஶ்வா ஸஜனா ஸஜன அதி⁴பா |
ராம ஸம்தாப து³ஹ்கே²ன த³க்³தா⁴ ஶோக அக்³னினா புரீ ||
அப்டிங்கறார். இந்த அயோத்யா நகரமே யானைகளோடும் குதிரைகளோடும் ஜனங்களோடும் ராஜாவோடும் சேந்து “ராம சந்தாப துக்கேன” – ராமனை பிரிந்த அந்த துக்கம் எனும் நெருப்பில் எரிந்து போயிட்டா மாதிரி இருக்கே, தண்ணீர் கொதிக்கறது, மரங்கள் செடிகள் கூட வாடிடுத்து.. இவ்வளவு வருத்தப்படறாளே ஜனங்கள் அப்டின்னு நெனைச்சிண்டே வரார். ராமர் எங்கே என்றவுடனே, ராமர் இறங்கி படகிலே கங்கையை தாண்டி போய்ட்டார். தண்டகவனத்துக்குள்ள போய்ட்டார்னு சொன்னவுடனே, எல்லாரும் “ஹா ஹா”னு பெண்கள் எல்லாம் கூட பொலம்பறா. அந்த பெண்களுக்கு ராமர்கிட்ட இருந்த பக்தியை சொல்லணும்னா ராமர், ராவோட ராவா இவாளை ஏமாத்திட்டு சரயு நதியை தாண்டி போயிடறார். அப்போ, அந்த ஜனங்கள்ளாம் திரும்பி வந்த போது .. அந்த அயோத்தி தேசத்து பெண்கள் கேட்கறாளாம், என்ன இருக்குன்னு இங்கவந்தேள், ராமனோட போகாம அப்டின்னு கேட்கறா. அப்படி வைராக்யமும் அப்படி ராமபக்தியும்.. அவா சொல்றா, நாங்க காத்திருந்தோம் .. ராமன் கிளம்பி ராத்திரில போய்ட்டார்னு சொன்னதும் அவா சொல்றா.. இப்போவே கிளம்பி போயிடுவோம் .. சீதை எங்களை காப்பாத்துவாள். ராமர் உங்களை பாத்துப்பார்.. இங்க கசாப்புக்கடைக்காரன் கிட்ட பலியாடு மாதிரி பரதன் கிட்ட மாட்டிக்க வேண்டாம். இந்த கைகேயி புள்ளைக்கே இப்படி பண்ணினாள்னா யாருக்கு தான் என்ன பண்ண மாட்டா? கணவனையே கை விட்டவ.. எல்லாரையும் தான் கைவிடுவா.. நம்ப போகலாம். நம் க்ஷேமத்தை ராமன் தான் பாத்துக்க முடியும் அப்டின்னு அவ்வளவு ராமன் கிட்ட பக்தியா இருக்கா.. தன் பிள்ளையை காட்டிலும் ராமன்கிட்ட ப்ரியமா இருக்கா அப்டின்னு வர்ரது.. அந் த மாதிரி எப்போ ஒரு பெண் இருப்பாள்னா.. பிள்ளையை காட்டிலும் வேற ஒருத்தர்கிட்ட அன்பு அதிகமா யார்கிட்ட இருக்கும்..? தன் கிட்ட தான் இருக்கும். அந்த தான்ங்கற அந்தர்யாமியா இருக்கற பகவானே ராமன் அப்டின்னு அவாளுக்கு தெரியறது. அதனால தான் ராமன்கிட்ட அவ்வளவு பக்தி வைக்கறா. அதனால அவாள்ளாம் ராமனை விட்டுவந்துட்டார்னு புலம்பறா.. எப்படி இவர் போயி தசரதரை பாத்து என்ன பேசப்போறாரோ அப்டின்னு புலம்பறா. சுமந்திரர் போய் தசரதரை பார்த்து இதுமாதிரி ராமரை காட்டில விட்டுட்டு வந்தேன் அப்டின்னவுடனே தசரதர் மயக்கம் போட்டு விழுந்துடறார். அப்பறம் சமாதானம் ஆனவுடனே
आसितम् शयितम् भुक्तम् सूत रामस्य कीर्तय |
ஆஸிதம் ஶயிதம் பு⁴க்தம் ஸூத ராமஸ்ய கீர்தய |
அவன் எங்க உட்கார்ந்தான்.. எங்க படுத்துண்டான், என்ன சாப்டான்.. என்ன பேசினான்
किम् उवाच वचो रामः किम् उवाच च लक्ष्मणः |
सुमन्त्र वनम् आसाद्य किम् उवाच च मैथिली ||
கிம் உவாச வசோ ராம꞉ கிம் உவாச ச லக்ஷ்மண꞉ |
ஸுமந்த்ர வனம் ஆஸாத்³ய கிம் உவாச ச மைதி²லீ ||
சீதை என்ன பேசினாள். லக்ஷ்மணன் என்ன பேசினான். ராமன் என்ன பேசினான். அதெல்லாம் சொல்லு. நான் அதெல்லாம் கொண்டு தான் அதை கேட்கற வரைக்கும் உயிரோட இருப்பேன். அந்த வார்த்தைகள் தான் எனக்கு மருந்து மாதிரி.. அப்டின்னு சொல்றார். சுமந்திரர் நடந்த விஷயம் எல்லாம் சொல்றார். பரதனை அழைச்சிண்டு வந்து பட்டாபிஷேகம் பண்ண சொல்லுங்கோ.. பரதனை தசரதருக்கு கௌரவம் கொடுத்து ராஜ்யத்தை பாத்துக்க சொல்லுங்கோ.. எங்கம்மாவை நன்னா பாத்துக்க சொல்லுங்கோ அப்டின்னெல்லாம் ராமன் சொன்னான்னு கேட்கும் போது தசரதருக்கும் கௌசல்யைக்கும் ரொம்ப வருத்தமா இருக்கு. கௌசல்யை படற கஷ்டத்தை பார்த்து சுமந்திரர் சமாதானம் சொல்றார்.
न शोच्याः ते न च आत्मा ते शोच्यो न अपि जन अधिपः |
इदम् हि चरितम् लोके प्रतिष्ठास्यति शाश्वतम् ||
ந ஶோச்யா꞉ தே ந ச ஆத்மா தே ஶோச்யோ ந அபி ஜன அதி⁴ப꞉ |
இத³ம் ஹி சரிதம் லோகே ப்ரதிஷ்டா²ஸ்யதி ஶாஶ்வதம் ||
அம்மா நீங்க அவாளை பத்தி வருத்தப்படாதீங்கோ.. இந்த மஹாராஜாவைபத்தியும் வருத்தப்படாதீங்கோ.. உங்களை பத்தியும் வருத்தப்படாதீங்கோ.. ஏன்னா இப்பேர்ப்பட்ட ஒரு நடத்தை.. இப்பேர்பட்ட ஒரு சரிதம் உலகம் எல்லாம் இருக்கறவரைக்கும் எல்லாரும் பேசிண்டிருப்பா. அப்பா கொடுத்த வரத்துக்காக ஒரு புள்ளை காட்டுக்குப் போனான். அவனோட, அவனுடைய தம்பியும் மனைவியும் அவனுக்கு ஸுஸ்ரூஷை பண்ணணும் அவனோட இருக்கணும்னு எல்லா சுகத்தையும் விட்டு காட்டுக்குப் போனா.. இதை வந்து அவம்மா பதிவ்ரதையா இருக்கறதனால அதை ஒத்துண்டா.. இப்படி ஒரு பிள்ளையை அன்பான பிள்ளையை சத்தியத்திற்கு கட்டுப்பட்டு காட்டுக்கு அமிச்சு ஒரு ராஜா உயிரையேவிட்டார்ங்கறது இதுக்கு முன்னாடியும் கிடையாது பின்னாடியும் கிடையாது .. அதனால இந்த ராம சரிதத்தை எல்லாரும் பேசண்டிருக்கப்போறா.. இன்னிக்கும் நம்ப பேசிண்டிருக்கோம் அப்டின்னு சொல்லி சமாதானப்படுத்தறார். ஸுயுக்ததவாதி அவர். பலவிதமா சமாதானப்படுத்தறார். ஆனாலும் கௌசல்யை சமாதானம் ஆகல.. சுமந்திரர் போன பின்னே தசரதர் கிட்ட எனக்கு நீங்களும் இல்லை, என் பிள்ளையும் இல்லை, என்னை இந்த மாதிரி ஆக்கிட்டேளே அப்டின்னு சொன்னவுடனே தசரதர், அம்மா நீ எதிரிக்கும் கருணை பண்ணுவே.. எங்கிட்ட தயவு பண்ணு.. என்னால தான் இவ்வளவு கஷ்டம்னு நானே ரொம்ப வருத்தத்துல இருக்கேன். நீ மேலும் என்னை புண்படுத்தாதேனு சொல்றார், கைகூப்பி கேட்கறார். உடனே அவ அய்யயோ நீங்க கைகூப்பக்கூடாது. நான் தப்பா பேசிட்டேன்..
शोको नाशयते धैर्यम् शोको नाशयते श्रुतम् |
शोको नाशयते सर्वम् न अस्ति शोक समः रिपुः ||
ஶோகோ நாஶயதே தை⁴ர்யம் ஶோகோ நாஶயதே ஶ்ருதம் |
ஶோகோ நாஶயதே ஸர்வம் ந அஸ்தி ஶோக ஸம꞉ ரிபு꞉ ||
ஒருத்தருக்கு கவலை வந்துடுத்துன்னா, அது படிப்பென்ன தைரியம் என்ன எல்லாத்தையும் போக்கிடறது. அதனால என்னோட வருத்தத்துனால நான் பேசிட்டேன் என்னை மன்னிச்சிடுங்கோனு கால்ல விழறா. அப்பறம் தசரத மஹாராஜா இளமைல இருக்கும் போது சப்த வேதினு சப்தத்தை கொண்டு பானம் போடற அந்த வித்தை தெரிஞ்சது எனக்கு.. நான் எதோ யானை ஜலம் குடிக்கிறது என நினைச்சிண்டு அம்பை போட்டேன். அது ஒரு முனிகுமாரன் மேல பட்டுடுத்து. அவனுடைய அப்பா என்னை நீயும் கடைசி காலத்துல பிள்ளையை பிரிஞ்சு தவிப்பைனு சாபம் குடுத்தார். அந்த மாதிரி அது எனக்கு இன்னிக்கு வந்துடுத்து. வயசான காலத்துல அருமை பிள்ளையை பக்கத்துல வரவழைச்சு கூட இருத்திப்பா… நான் இப்ப போயி என் அருமை ராமனை அமிச்சேன். காட்டுக்கு போடானா போனான் பாருங்கோ அது அவன் குணம் அவனை காட்டுக்கு அமிச்சது என் குணம் அப்டின்னு புலம்பறார். “ஹா ராமா” னு தசரதர் ராமனையே நெனைச்சிண்டு ராமனை பிரிந்த துக்கம் தாங்காமல் உயிரை விட்டார்.
मृते तु तस्मिन् भरतो वसिष्ठप्रमुखैर्द्विजैः || 33||
नियुज्यमानो राज्याय नैच्छद् राज्यं महाबलः |
ம்ருʼதே து தஸ்மின் ப⁴ரதோ வஸிஷ்ட²ப்ரமுகை²ர்த்³விஜை꞉ ||33||
நியுஜ்யமானோ ராஜ்யாய நைச்ச²த்³ ராஜ்யம்ʼ மஹாப³ல꞉ |
தசரத மஹாராஜா இறந்தவுடன் “வஸிஷ்ட2ப்ரமுகை2ர் த்3விஜை” – வசிஷ்டர் முதலான பிராமணர்கள் பரதனை வரவழைச்சு நீ ராஜ்யத்தை எடுத்துக்கோ அப்டின்னு சொல்றா.. ஆனா “நைச்ச2த்3ராஜ்யம் மஹாப3ல: “ – அவன் ராஜ்யத்தை விரும்பவே இல்லை. இதுக்கு நடுவுலயும் சில காட்சிகள் இருக்கு. தசரத மஹாராஜா காலமானவுடனே ராஜ்யம்ங்றது ராஜா இல்லாமல் இருக்க கூடாது. என்ன பண்றதுன்னு சொல்லுங்கோனு வசிஷ்டரை மந்திரிகள் எல்லாம் கேட்கறா. பரதனை அழைச்சிண்டுவருவோம்னு தூதர்களை அமிச்சு தசரதர் காலமானதோ, ராமன் காட்டுக்கு போனதோ தெரியாம பரதன் கிட்ட பேசி மெதுவா அவனை அழைச்சிண்டு வரா.. இருந்தாலும் அவனுக்கு துர்ஸ்வப்னங்கள் ஏற்பட்டு அவனுக்கு மனசு தவிச்சிண்டு தான் இருக்கு. அவனுக்கு புரிஞ்சுடறது, எதோ ஆபத்துன்னு . இங்க வந்து பாத்தா தசரதர் காலமாகிட்டார். ராமன் காட்டுக்கு போய்ட்டான். நான் தான் உனக்காக உனக்கு ராஜ்யம் வேணும்ங்கறதுக்காக இப்படி எல்லாம் பண்ணிணேன்னு கைகேயி சொல்றா. கடும் கோபம் வரது அவனுக்கு. நீ இப்படி ஒரு காரியம் பண்ணுவியா. இந்த குலத்தினுடைய பெருமையை எல்லாம் கெடுத்துட்டியே.. கணவனுடைய இறப்புக்கும் பிள்ளைகளுடைய வனவாசத்துக்கும் காரணமாயிட்டியே.. கௌசல்யை படற துக்கத்தை கூட நீ நினைக்கலையே.. ஒரே பிள்ளையை பெத்திருக்கா.. அந்த கௌசல்யை எவ்வளவு கஷ்டப்படுவா. நீ நரகத்துக்கு தான் போவாய். உன் கணவன் போன நல்ல உலகத்திற்கு நீ போக மாட்டாய். உன் எண்ணம் நிரைவேற நான் விடவே மாட்டேன். நான் ராமனை அழைச்சிண்டு வந்து அவனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி வச்சு, அவனுக்கு அடிமையா இருப்பேன். நான் பொறந்ததுலேர்ந்தே ராமனுடைய அடிமை.. இப்பேர்பட்ட ராமரோட ராஜ்யத்தை நான் விரும்புவேனா. எனக்கு மீளாத கெட்டப்பெயரை அவப்பெயரை வாங்கி வச்சுட்டியே.. அப்டின்னு புலம்பறான். அப்புறம் கௌசல்யை சந்தேகப்படறா. கௌசல்யைட்ட அம்மா நான் ஒரு நாளும் ராமனுடைய சொத்துக்கு ஆசைப்படமாட்டேன். ராமன் மேல எனக்கு இருக்கற ப்ரியத்தை நீங்க உணர்ந்துகொள்ளவில்லையா. அப்டின்னு சொன்னவுடனே அவ சரிப்பா லக்ஷ்மணன் மாதிரி நீயும் ராமனிடம் பக்தியா இருக்க.. நல்ல மனசு. தர்மாத்மானு தெரிஞ்சுண்டுட்டேன்னு சொல்றா. இருந்தாலும், தசரதருடைய காரியங்கள் எல்லாம் பண்ணு என சொல்லி அந்த 13 நாள் காரியங்களை எல்லாம் பண்ணி முடிக்கிறான் பரதன். அப்புற வசிஷ்டர் ஒரு நாள் சபையை கூட்டி தசரதர் இருந்தா எப்படி அலங்காரம் பண்ணுவாரோ அந்த மாதிரி அலங்காரம் பண்ணி அந்த மாதிரி எல்லாரையும் உட்கார வச்சு, பரதனை சபைக்கு வரவழைச்சு, பரதன் கிட்ட இந்த ராஜ்யம் ராஜா இல்லாம தவிக்கறது. ராமன் காட்டுக்கு போய்ட்டான். அவன் அப்பா பேச்சை கேட்டு காட்டுக்கு போய்ட்டான். அவன் இப்ப திரும்பி வரமாட்டான். அதனால நீ ராஜ்யத்தை எடுத்துக்கோ அப்டின்னு சொல்றார். அப்ப பரதன் ரொம்ப வருத்தத்தோடயும் கோபத்தோடயும், நல்லது சொல்லித்தர வேண்டிய நீங்கள் எனக்கு இந்த மாதிரி உபதேசம் பண்ணலாமா..?
“தி³லீப நஹுஷோபம:” – எப்பேர்ப்பட்டவன் அவன் . ராஜ குணங்கள் எல்லாம் நிரம்பினவன். அவன் தான் ராஜா. ஒரு நாளும் நான் இந்த அயோத்தி ராஜ்ஜியத்தை எடுத்துக்கவே மாட்டேன்.
इहस्थो वन दुर्गस्थम् नमस्यामि कृत अन्जलिः ||
இஹஸ்தோ² வன து³ர்க³ஸ்த²ம் நமஸ்யாமி க்ருʼத அன்ஜலி꞉ ||
இங்க இருந்துண்டே நான் அந்த ராமனை கைகூப்பி வணங்கறேன். என் புத்தி சலிக்காமல் இருக்கணும். ஏன்னா, நானும் இந்த ராஜ்யமும் அவனோட சொத்து. நான் போய் அவனை அழைச்சிண்டு வர போறேன். அவனுக்கு பட்டாபிஷேகம் பண்ணி வைக்கப்போறேன். இங்கிருந்து ஏற்கனவே கங்கை கரை வரைக்கும் ரோடு போட சொல்லிட்டேன். எல்லா படைகளையும் அழைச்சிண்டு ஜனங்களையும் அழைச்சிண்டு போறேன். சுமந்திரரே, தேரை கிளப்புங்கோ.. படையை கிளப்ப சொல்லுங்கோங்கறான். எல்லாருமா ராமனை பாக்கறதுக்கு கிளம்பறா.
मेघ श्यामम् महा बाहुम् स्थिर सत्त्वम् दृढ व्रतम् |
कदा द्रक्ष्यामहे रामम् जगतः शोक नाशनम् ||
दृष्टएव हि नः शोकम् अपनेष्यति राघवः |
तमः सर्वस्य लोकस्य समुद्यन्न् इव भास्करः ||
மேக⁴ ஶ்யாமம் மஹா பா³ஹும் ஸ்தி²ர ஸத்த்வம் த்³ருʼட⁴ வ்ரதம் |
கதா³ த்³ரக்ஷ்யாமஹே ராமம் ஜக³த꞉ ஶோக நாஶனம் ||
த்³ருʼஷ்டஏவ ஹி ந꞉ ஶோகம் அபனேஷ்யதி ராக⁴வ꞉ |
தம꞉ ஸர்வஸ்ய லோகஸ்ய ஸமுத்³யன்ன் இவ பா⁴ஸ்கர꞉ ||
சூரியன் வந்தா எப்படி இருட்டு போய்டறதோ.. அது மாதிரி நம்முடைய சோகம் ராமனுடைய முகத்தை பார்த்தா போய்டும். எப்ப ராமனை பார்க்க போறோமோ அப்டின்னு சொல்லிண்டு ஜனங்கள்ளெல்லாம் போறா. வழில கங்கைக்கரைல குஹன் பரதனை சந்தேகப்படறான். அந்த குஹன் கிட்டயும் என்னை சந்தேகப்படாதே. நான் ராமனை திருப்பி அழைச்சிண்டு போகத்தான் வந்திருக்கேன். நான் தம்பி இல்லையா. ஒரு ஃப்ரெண்டு நீயே ராமனுக்காக உயிரை குடுக்கவும் தயாராக இருக்க.. நான் ராமனுடைய தம்பின்னவுடனே குஹன் ரொம்ப சந்தோஷப்பட்டு கொண்டாடறான். உன் புகழ் உலகம் இருக்கற வரைக்கும் இருக்கும் பரதா.. கைல கிடைச்ச ராஜ்யத்தை அண்ணாவுக்கு கொடுக்கணும் அவன் கஷ்டப்படறான்னு வந்தியே.. நான் உன்னை அழைச்சிண்டு போறேன். அப்டின்னு சொல்லி கங்கை கரையை தாண்டி வைக்கறா. பரத்வாஜரை போய் பாக்கறா. பரத்வாஜரும், சந்தேகப்பட்டு பேசறா மாதிரி பேசறார். நீ எதுக்கு வந்திருக்க. எதுக்கு படையை அழைச்சிண்டு வந்திருக்க. ராமன்ட்ட எதாவது கெட்ட எண்ணத்தோட வந்திருக்கியா ? அப்டின்னவுடனே.. அவாள்ளாம் கேட்கலாம்.. நீங்க ஸர்வஞாள் .. நீங்க என்னை பார்த்து இப்படி கேட்கலாமா அப்டின்னு அழறான் பரதன். உடனே போனா போகட்டும் நீ வருத்தப்படாதே.. உன் மனசு உறுதியா இருக்கான்னு அசைச்சு பாக்கறதுக்காகத்தான் கேட்டேன். அப்டின்னு சொல்லிட்டு இன்னிக்கு இங்க இருன்னு ஒரு விருந்து குடுக்கறார். தேவர்களை எல்லாம் கூப்பிட்டு அப்சரஸ் ஸ்த்ரீகள் எல்லாம் கூப்பிட்டு ஒரு ஆச்சர்யமான ஒரு விருந்து கொடுக்கறார். எல்லாரும் அதுல ரமிக்கறா. ஜனங்கள்ளாம் எங்களுக்கு அயோத்தியும் வேண்டாம் சித்திரக்கூடமும் வேண்டாம். நாங்க இங்கயே ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இதுவல்லவோ வாழ்க்கை அப்டின்னு அந்த படைவீரர்கள் எல்லாம் சொல்றா. ஆனா பரதன் அது எதுலயும் மனசு வைக்காம.. பொழுது விடிஞ்சதும் ராமர்கிட்ட போகணும் எனக்கு அதுக்கு வழி சொல்லுங்கோ அப்டின்னு கேட்கறான். உடனே பரத்வாஜர் வழி சொல்றார்.
स जगाम वनं वीरो रामपादप्रसादकः ||
ஸ ஜகா³ம வனம்ʼ வீரோ ராமபாத³ப்ரஸாத³க꞉ ||
ராமனை திருப்திப்படுத்தவேண்டும். ராமனுடைய தயவு வேண்டும் அப்டின்னு அவன் காட்டுக்கு போறான்.
गत्वा तु स महात्मानं रामं सत्यपराक्रमम् |
अयाचद्भ्रातरं राममार्यभावपुरस्कृतः ||
க³த்வா து ஸ மஹாத்மானம்ʼ ராமம்ʼ ஸத்யபராக்ரமம் |
அயாசத்³ப்⁴ராதரம்ʼ ராமமார்யபா⁴வபுரஸ்க்ருʼத꞉ ||
அப்புறம் பரத்வாஜர் சொன்ன வழியில போயி மந்தாகினி நதியினிடத்தில சித்ரகூடத்தின் அடிவாரத்துல ராமருடைய பர்ணசாலையை கண்டுபுடிச்சு ராமருடைய பாதத்துல போயி விழுந்து நமஸ்காரம் பண்றான். ராமர் எடுத்து அவனை மடில வச்சி கொஞ்சறார், கொண்டாடறார். பரதா எங்க வந்த என்ன ஆச்சுன்னு கேட்கறார். அப்பா காலமாகிட்டார்னு சொன்னவுடனே ராமர் மயக்கம் போட்டு விழுந்துடறார். அப்பறம் தெளிஞ்சு அப்பாக்கு பிண்டம் வச்சு தர்பணம் பண்றார். அதுக்கப்பறம் எதுக்கு வந்தனு கேட்டவுடனே, ராமா நீதான் ராஜா. என்னால இந்த ராஜ்யத்தை எடுத்துக்க முடியாது. கைகேயி பண்ணினது எனக்கு கொஞ்சம் கூட ஒப்புதல் இல்லை. தசரதராவது இதை சரி பண்ணியிருக்கணும். யாராவது லக்ஷ்மணனாவது சரி பண்ணியிருக்கணும். இதுக்கு போயி ஒத்துண்டு எனக்கு இந்த மாதிரி கெட்ட பேர் வந்துடுத்து எனக்கு. இதை ஒரு நாளும் இதை ஏத்துக்க மாட்டேன். நீதான் ராஜாவாகணும்.. அப்டின்னு..
भृशं संप्रार्थयामस राममेव प्रियंवद:
ப்ருஷம் சம்ப்ரார்த்யாமாச ராமமேவப்ரியம் வத:
அப்டி ரொம்ப வேண்டிண்டான். சம்ப்ரார்த்யயாமாச – ரொம்ப நைச்சியமா வேண்டிண்டான். ராமமேவ ப்ரியம்வத – ராமனையே ரொம்ப ப்ரியமான வார்த்தைகளை சொல்லி அவ்வளவு கனிவா அவ்வளவு தயவா வேண்டிண்டான். மீண்டும் மீண்டும் கேட்டுண்டே இருக்கான். ஜனங்களை எல்லாம் நீங்களும் கேளுங்கோனு சொல்றான். ஜாபாலிங்கறவர், “ கண்டதே காட்சி கொண்டதே கோலம் “ கைல கிடைச்சதை அனுபவி ராமா.. என்னத்துக்கு அப்பா சத்தியம்னு கஷ்டப்படறனு சொன்னவுடனே ராமன், கடும் கோபப்படறார். இந்த நாஸ்திக பேச்சு பேசாதீங்கோ அப்டிங்கறார். அப்புறம் வசிஷ்டர் நான் சொல்றதை கேட்டா தப்பில்லை.. உனக்கே குரு. உங்கப்பாக்கும் குரு. என் பேச்சை கேட்டா தப்பில்லைனவுடனே.. அப்பா பேச்சை பொய்யாக்கி எப்படி உங்க பேச்சை நான் கேட்க முடியும் .. மன்னிச்சிடுங்கோ னு சொல்றார். அது மாதிரி ராமர்
त्वमेव राजा धर्मज्ञ इति रामं वचोऽब्रवीत् |
रामोऽपि परमोदारः सुमुखः सुमहायशाः ||
न चैच्छत्पितुरादेशाद्राज्यं रामो महाबलः |
த்வமேவ ராஜா த⁴ர்மஜ்ஞ இதி ராமம்ʼ வசோ(அ)ப்³ரவீத் |
ராமோ(அ)பி பரமோதா³ர꞉ ஸுமுக²꞉ ஸுமஹாயஶா꞉ ||
ந சைச்ச²த்பிதுராதே³ஶாத்³ராஜ்யம்ʼ ராமோ மஹாப³ல꞉ |
ஆனால் ராமன் பரம உதாரன். பெரிய தயாள குணம் கொண்டவன் தான். அவன் எப்பவும் யார் எது கேட்டாலும் சிரிச்சிண்டே கொடுப்பான் என்ற பெருமை படைத்தவன். அவனுக்கு அப்பேர்பட்ட புகழ் இருக்கு. ஒரு நாளும் ராமனை போய் கேட்டால் அவன் கை விட மாட்டான். தன்னை சேர்ந்தவனா எடுத்துப்பான். சரணாகதி பண்ணினவாளுக்கு கேட்டதை கொடுப்பாங்க்றது இருக்கு. அப்படி இருந்தும்….
न चैच्छत्पितुरादेशाद्राज्यं रामो महाबलः |
ந சைச்ச²த்பிதுராதே³ஶாத்³ராஜ்யம்ʼ ராமோ மஹாப³ல꞉ |
ராமர் அப்பா வார்த்தையை மீறக்கூடாது என்பதனால் அந்த ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இப்ப என்ன பண்றது. ஒரு stalemate ஆயிடுத்து. அப்ப வசிஷ்டர் சொல்றார். ராமன் பாதுகையை வாங்கிண்டு போப்பா அப்டின்னு சொல்றார்..
पादुके चास्य राज्याय न्यासं दत्त्वा पुनः पुनः ||
निवर्तयामास ततो भरतं भरताग्रजः |
பாது³கே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம்ʼ த³த்த்வா புன꞉ புன꞉ ||
நிவர்தயாமாஸ ததோ ப⁴ரதம்ʼ ப⁴ரதாக்³ரஜ꞉ |
தன்னையே அந்த பாதுகையில் ஏற்றி அந்த பாதுகையை பரதன் கிட்ட ராமன் கொடுக்கறார்.
அப்போ ராமன் அப்டி சொன்னவுடனே பரதன்.. பக்தின்னா என்ன நம்ப நெனைச்சபடி நடக்கறது பக்தி கிடையாது. பகவான் என்ன நினைக்கிறாரோ அவருடைய திருவுள்ளப்படி நடக்கட்டும் அப்டின்னு நினைக்கறது தான் பக்தி. அதனால ராமன் பாதுகையை கொடுத்து இதை எடுத்துண்டு போய் ராஜ்யம் பண்ணுனு சொன்னவுடன் சரின்னு சொல்லிட்டான். ராமரே வருத்தப்படறார். இவன் கேட்டதை நம்பளால கொடுக்க முடிலனு இருந்தாலும் பரதன் ராமர் சொன்னதை கேட்டுக்கறான்.
பரதம் பரதாக்ருஹஜ: பரதனை பரதனுடைய அண்ணா திருப்பி அமிச்சான். ஏன்னா அவன் தானே அண்ணா. பெரியவன் பேச்சை கேட்டுக்கறான். திரும்ப வந்து..
स काममनवाप्यैव रामपादावुपस्पृशन् || 38 ||
नन्दिग्रामेऽकरोद्राज्यं रामागमनकाङ्क्षया |
ஸ காமமனவாப்யைவ ராமபாதா³வுபஸ்ப்ருʼஶன் ||38||
நந்தி³க்³ராமே(அ)கரோத்³ராஜ்யம்ʼ ராமாக³மனகாங்க்ஷயா |
அவனுடைய காமம் நிறைவேறவில்லை.. அவனுடைய ஆசை ராமனை திரும்ப அழச்சிண்டு போகணும். ராமனை ராஜாவாக்கணும்ங்கற ஆசை நிறைவேறலை என்றாலும் ராமர் பாதுகையை எடுத்துண்டு.. அந்த பாதுகையை எடுத்துண்டு வந்து ராமர் இல்லாத அயோத்தியில என்னால இருக்க முடியாது அப்டின்னு பக்கத்துல நந்திக்ராமம்னு ஒரு இடத்துல அந்த பாதுகையை சிம்ஹாசனத்துல வச்சு குடை புடிச்சு பட்டாபிஷேகம் பண்ணி இந்த ராமபாதுகை தான் ராஜ்யத்தை பாத்துக்கறது. நான் வெறும் ட்ரஸ்டி தான் அப்டின்னு சொல்லி நான் எப்படி ராமன் காட்டுல கஷ்டப்படறானோ, குஹன் கிட்ட கேட்கறான் பரதன், ராமர் என்ன பண்ணினார். எங்க படுத்துண்டார். என்ன சாப்டார்னு கேட்ட போது.. தோ இந்த புல்தரையில தான் படுத்துண்டார், ஜலம் தான் சாப்டார் னு கேட்டபோது புலம்பறான். எப்படி வாழவேண்டிய ராமர் என்னால இப்படி கஷ்டப்பட்டிருக்காரே அப்டின்னு புலம்பறான். அதனால நானும் பதினாலு வருஷம் ஜடை போட்டுண்டு மரவுரி உடுத்திண்டு, தபஸ்வியா இருப்பேன். அப்டின்னு எல்லா போகங்களையும் விலக்கி, ராமனை காட்டிலும் ரொம்ப கடுமையா சன்னியாசி போல விரதங்களை அனுஷ்டிச்சிண்டு, பக்கத்துல எல்லா சுகமும் இருக்கு. ராமர் காட்டுல இருக்கார் கிடைச்சதை தான் சாப்பிடணும்.. பரதனுக்கு அறுசுவை உண்டியும் பரிமார ஜனங்களும் எல்லாம் காத்துண்டிருக்கு.. ஆனா அது எல்லாத்தையும் விட்டுட்டு ராமா ராமானு ராமனையே நெனைச்சிண்டு ராமபாதுகைக்கு பூஜை பண்ணிண்டு அந்த கடமையா அவர் சொன்னாரேங்கறதுக்காக ராஜ்யத்தை பாத்துக்கணுங்கற கடமையை ஒவ்வொண்ணும் சின்னதோ பெருசோ இந்த வரவு இந்த செலவு அப்படி எல்லாத்தையும் ராமர் பாதுகைக்கிட்ட ஒப்படைச்சிண்டு, ஜனங்கள்லாம் ராமரை ஒரு க்ஷணமும் மறக்காத மாதிரி அந்த ராமர் பாதுகையை ராஜாவாக்கி பாதுகா பட்டாபிஷேகம் பண்ணி தன் மேல் விழுந்த கறையை அந்த பரதன் தொடைச்சிண்டான்.
गते तु भरते श्रीमान् सत्यसन्धो जितेन्द्रियः ||39||
रामस्तु पुनरालक्ष्य नागरस्य जनस्य च |
तत्रागमनमेकाग्रो दण्डकान्प्रविवेश ह |40||
க³தே து ப⁴ரதே ஶ்ரீமான் ஸத்யஸந்தோ⁴ ஜிதேந்த்³ரிய꞉ ||39||
ராமஸ்து புனராலக்ஷ்ய நாக³ரஸ்ய ஜனஸ்ய ச |
தத்ராக³மனமேகாக்³ரோ த³ண்ட³கான்ப்ரவிவேஶ ஹ |40||
பரதன் போன பின்னர் சத்யசந்தரும், இந்த்ரியங்களை ஜெயித்தவருமான ராமர் திரும்பவும் ஜனங்கள் இந்த இடத்துல தான் ராமர் இருக்கான்னு தெரிஞ்சிண்டு வந்துடுவாளோ என்று எண்ணி அங்கிருந்து மேலும் தண்டகவனத்துக்குள்ள ப்ரவேசம் பண்ணினார்.. அப்டின்னு இந்த 40வது ஸ்லோகம் வரைக்கும் சொல்றார். இந்த இடத்துல வால்மிகி ராமாயணம் அயோத்தி காண்டம் பூர்த்தியில பரதன் வந்துட்டு போன பின்னே, ராமருக்கு பரதன் வந்தான்.. அம்மால்லாம் வந்து இங்க கண்ஜலம் விட்டா.. இந்த யானை குதிரைகள்ளாம் வந்து அதோட சாணியெல்லாம் போட்டிருக்கு.. என்னமோ முன்ன மாதிரி இல்ல லக்ஷ்மணா.. நம்ப இங்கேர்ந்து கிளம்பலாமா.. அப்டின்னு கேட்கறான். அதே நேரத்துல ரிஷிகள்.. அங்க இருக்கறவாளும் கரதூஷணாள்னு பதினாலாயிரம் ராக்ஷசர்கள் இருக்கா.. அவா எங்களை ரொம்ப ஹிம்சை பண்றா.. அதனால நாங்க வேற இடம் போறோம் அப்டின்னு ஒரு குலபதியா இருக்கற முனிவர் சொல்லிட்டு ஆயிரக்கணக்கான சிஷ்யர்களை கூட்டிண்டு அந்த சித்ரகூடத்திலேர்ந்து வேற இடம் போயிடறார். அதனால அவாளும் போயிட்டா.. நம்ப தண்ட காரண்யத்துக்குள்ள போலாமே அப்டின்னு சொன்னவுடன் லக்ஷ்மணன் ஆஹா கிளம்பலாம்னு சொல்றான். அந்த தண்டகாரண்யத்துக்கு உள்ள இன்னும் போறதுக்கு முன்னாடி அத்ரி அனுசூயா அப்டின்னு அவாளை பாக்கறார். அவா ராமனை சொந்த புள்ளை மாதிரி வரவேற்று உபசரிக்கிறா.. அத்ரி அனுசூயாக்கு புள்ளையாத்தான் தத்தாத்ரேயர் அவதாரம் பண்ணினார். அதனால விஷ்ணு பகவான் அவதாரமான ராமரும் அவா புள்ளை தான். அதனால அவாபுள்ளையாட்டம் வரவேற்று உபசாரம் பண்றார் அத்ரி. அந்த அனுசூயா தேவியை சீதையை நமஸ்காரம் பண்ணிக்க சொல்லுங்கறார் அத்ரி. சீதை போய் நமஸ்காரம் பண்றா. அந்த அனுசூயா தேவி அவளை அன்பு பாராட்டி, உன்னோட கல்யாண கதையை சொல்லேன் கேட்போம் அப்டின்னதும் சீதை ரொம்ப சுவாரஸ்யமா நான் ஜனகருக்கு மகளாக வளர்ந்துண்டிருந்தேன். எனக்கு தகுந்த மாப்பிள்ளை வேணும்னு சொல்லி எங்கப்பா சிவதனுசை யார் நாணேற்றுகிறார்களோ அவாளுக்கு என் பொண்ணை கொடுப்பேன்னு சொல்றார். ரொம்ப நாளா யாருமே வரலைனு கவலைப்பட்டுண்டிருந்தார். பெண்ணை பெத்தவாளுக்கு நல்ல மாப்பிள்ளை வரணும்ங்கற கவலை இருக்கத்தானே இருக்கும். ரொம்ப நாளுக்கப்புறம் ராமர் வந்தார். விளையாட்டாக மத்தவாளால கனவுல கூட நினைக்க முடியாத விஷயத்தை, அந்த சிவதனுசை எடுத்து படக்குன்னு உடைச்சுட்டார் அந்த வில்லை. உடனே எங்கப்பா ஜலபாத்திரத்தை எடுத்து என்னை கன்னிகாதானம் பண்ணிக்கொடுக்கறேன்னு கிளம்பினார். அப்போ விஸ்வாமித்திரர் இருங்கோ.. ராமர் வந்து அவப்பா தசரத மஹாராஜாவை கேட்கணும் அப்டின்னு சொல்லி அவர் சம்மதித்தால் தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றார். உடனே தசரதரை வர வழைச்சு எனக்கும் ராமனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சார்.. அப்டின்னு ஸ்வாரஸ்யமாக சொல்றா.. இவ்வளவு அழகா பேசறயே குழந்தை அப்டின்னு அந்த அனுசூயா ரொம்ப சந்தோஷப்பட்டு உனக்கு என்ன வேணுமோ கேளு என் தபஸ்னால உனக்கு நான் என்ன வேணாலும் பரிசுகள் கொடுக்கறேன்னவுடனே .. இருக்கட்டுமே.. உங்களை பார்த்ததே போதுமே அப்டின்னு சொல்றா அவ.. இவ்வளவு சமத்தா இருக்கியே னு சொல்லி நான் உனக்கு காயாத சந்தனம், வாடாத மாலைகள், கருக்காத நகைகள், பூச்சுக்கள் எல்லாம் தரேன்னு சொல்லி நன்னா அலங்காரம் பண்ணிக்கோன்னு சொல்லி லக்ஷ்மி தேவி விஷ்ணுகிட்ட இருக்கறாப்போல அலங்காரம் பண்ணிண்டு ராமர்கிட்ட இருக்கா.. அப்டி அன்னிக்கு சுகமாக அங்கு கழித்தார்கள். அடுத்த நாள் கிளம்பி தண்டகாவனத்துக்குள்ள போறா… ரிஷிகள் எல்லாம் வணங்கினார்கள் அப்டின்னு வர்ரது. ரிஷிகள் எல்லாம் சாதாரண ராஜகுமாரனை வணங்குவாளா. அவாளுக்கு இவர் அவதாரம்னு தெரிஞ்சு வணங்கினா.. இது வரைக்கும் அயோத்யா காண்டம் பூர்த்தி. இதோட 40வது சுலோகம் முடியறது.. நாளைக்கு 41வது ஸ்லோகத்துலேர்ந்து பார்க்கலாம்..
ஜானகி காந்தஸ்மரணம் !! ஜய் ஜய் ராம ராமா !!
One reply on “ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 32-40 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 32 to 40 meaning”
கேட் க கேட்க ஆனந்தம். நன்றி