ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 41-50 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 41 to 50 meaning
ஸங்க்ஷேப ராமாயணத்தில பத்து பத்து ஸ்லோகங்களா அர்த்தம் பார்த்துண்டு வரோம். இன்னிக்கு 41லேர்ந்து 50வது ஸ்லோகம் வரைக்கும்.
प्रविश्य तु महारण्यं रामो राजीवलोचनः |
विराधं राक्षसं हत्वा शरभङ्गं ददर्श ह ||
सुतीक्ष्णं चाप्यगस्त्यं च अगस्त्यभ्रातरं तथा |
ப்ரவிஶ்ய து மஹாரண்யம்ʼ ராமோ ராஜீவலோசன꞉ |
விராத⁴ம்ʼ ராக்ஷஸம்ʼ ஹத்வா ஶரப⁴ங்க³ம்ʼ த³த³ர்ஶ ஹ ||
ஸுதீக்ஷ்ணம்ʼ சாப்யக³ஸ்த்யம்ʼ ச அக³ஸ்த்யப்⁴ராதரம்ʼ ததா² |
இந்த 40 ஸ்லோகங்கள்ள அயோத்யா காண்டம் பூர்த்தி வரைக்கும் பார்த்தோம். ராமாவதாரம், ராமர் சீதா கல்யாணம், அப்பறம் ராமருக்கு யுவராஜ பட்டாபிஷேகம் பண்றதுக்கு தசரத மஹாராஜா தீர்மானம் பண்ணினது, கைகேயி வரம் கேட்டு அதை தடுத்தது, ராமர் வனவாசம் கிளம்பினது, பரத்வாஜரை தரிசனம் பண்ணி சித்ரகூடத்துல போயி ரம்யமான ஒரு ஆசிரமத்தை கட்டிண்டு சுகமாக வாழ்ந்தார்கள். அதுக்குள்ள தசரத மஹாராஜா புத்திர சோகத்தினால உயிரை விட்டுடறார். பரதன் வந்து இதெல்லாம் கேள்விப்பட்டு ரொம்ப வருத்தப்பட்டு நான் ராம லக்ஷமணரை பார்த்து அவனையே ராஜாவாக்குவேன்னு காட்டுக்கு போறான். எல்லாரையும் அழைச்சிண்டு சித்திரகூடத்துல போயி ராமர் தரிசனம் பண்ணி வேண்டிக்கறான். ராமர் அப்பா பேச்சை நான் எப்படி மீற முடியும் அப்டின்னு சொன்னவுடன், வசிஷ்டர் சொன்னபடி ராமர் பாதுகையை வாங்கிண்டு வந்து பரதன் பட்டாபிஷேகம் பண்ணி அவனும் ராமர் காட்டில எப்படி தபஸ்வியாக இருக்காரோ அதே மாதிரி ஜடாமுடி போட்டுண்டு காய்களையும் கனிகளையும் சாப்டுண்டு நந்திக்ராமம்ங்கற இடத்துல தபஸ்வியா இருந்துண்டிருக்கான். இது வரைக்கும் நேத்திக்கு பாத்தோம். இந்த ஒன்றரை ஸ்லோகத்துல, ராமர் மேலும் அந்த மஹாரண்யம், தண்டகாரண்யம் அப்டின்னா இருளோடு இருக்கற காடுன்னு அர்த்தம்.. அந்த அடர்த்தியான பெரிய காட்டுக்குள்ள ராமர் மேலும் உள்ளே சென்றார். அங்க “ராமோ ராஜீவலோசன꞉” – தாமரைக்கண்ணனான ஸ்ரீராமர் சீதாதேவியோடும் லக்ஷ்மணனோடும் தண்டகாரண்யத்துக்குள் நுழைந்தார்.
அப்ப ஒரு பயங்கரமான சப்தத்தோட தன்னுடைய சூலத்துல இரண்டு மான், நாலு புலி, ஒரு சிங்கம், எருமை, யானை எல்லாம் சொருகி வச்சிண்டுருக்கான். அப்பேர்பட்ட ஒரு மலைபோல உருவம் படைத்த விராதன்னு ஒரு ராக்ஷசன். அவன் வந்து சீதையை தூக்கிண்டுடறான். சீதையை தூக்கிண்டு என்னத்துக்கு முனி வேஷம் போட்டுண்டு பொம்மனாட்டி உங்களுக்கு ஓடிப்போங்கோ அப்டின்னு கத்தறான். உடனே சீதை பயப்படறா. ராமர் வருத்தப்படறார் லக்ஷ்மணங்கிட்ட… என் சீதையை இன்னொருத்தன் தொடறானே லக்ஷ்மணா நான் என்ன பண்ணுவேன் அப்டின்னு. அப்போ லக்ஷ்மணன் நீங்க ஏண்ணா கவலைப்படறேள் நான் இருக்கேனே அப்டின்னு சொல்லிட்டு அவன் மேல அம்பு போட ஆரம்பிக்கிறான். அப்போ சீதையை கீழ விட்டுட்டு இவா ரெண்டு பேரையும் தூக்கிண்டு ஓடறான். சீதை புலம்பி அழறா. அப்ப ராமர் இனி நம்ப கால தாமதம் பண்ண வேண்டாம் அப்டின்னு ரெண்டு பேரும் அவனோட ரெண்டு கையையும் வெட்டிடறா. உடனே அவன் நீங்க யாருன்னு கேட்கறான். லக்ஷ்மணர் சொல்றான் இது தசரத குமாரர் ராமர்னு சொன்னவுடனே, உங்களால தான் என்னோட சாபம் நிவர்த்தியாகணும். நீங்க என்னை வெட்டி வதம் பண்ண முடியாது. அதனால என்னை ஒரு குழி பண்ணி அதுக்குள்ள தள்ளிடுங்கோ அப்டிங்கறான். அந்த மாதிரி பண்ணினவுடனே அவன் சாபம் விமோசனம் அடைஞ்சு அவன் ஒரு யக்ஷணாகி திரும்ப போய்டறான். இந்த விராதன் படுத்தின பாட்டை பார்த்து ராமர் அப்பப்பா காடுங்கறது பயங்கரமான இடமா இருக்கப்பானு சொல்லும் போது விராதன் சொல்றான். இங்க சுதீக்ஷணர் ஆசிரமம் இருக்கு அவரை போயி பாருங்கோங்கறான். சரி சுதீக்ஷணரை நம்ப போய் பாப்போம் அப்டின்னு போறா. அங்க போனா இந்திரன் வந்து சுதீக்ஷணரை ப்ரஹ்ம்ம லோகத்துக்கு அழைச்சிண்டு போறதுக்கு வந்திருக்கான். தேவர்களோடும் முனிவர்களோடும் இந்திரனை பார்க்கறா இவா. இவா வர்ரதை பார்த்தவுடனே இந்திரன் உத்தரவு வாங்கிண்டு கிளம்பிடறான். சுதீக்ஷணர் இவாளை வரவேற்று பூஜை பண்ணி, ராமா இந்திரன் வந்திருந்தான் என்னை ப்ரஹ்ம லோகத்துக்கு கூப்பிட்டான். நீ வரங்கறதால ப்ரியமான அதிதியான உன்னை பார்த்துட்டு அப்பறமா நான் ப்ரஹ்ம லோகம் வரேன்னு சொல்லிட்டேன். நான் உனக்காக காத்துண்டிருந்தேன் அப்டின்னு சொல்றார். ராமர் ரொம்ப அன்பு பாராட்டி எனக்கு இங்க தங்க ஒரு இடம் சொல்லுங்கோன்னவுடனே நான் நிரைய தபஸ்னால உலகங்களெல்லாம் ஜெயிச்சிருக்கேன். அதுல இருந்துக்கோ ராமா அப்டின்னு சொல்றார். அதுக்கு ராமர் நான் என்னுடைய சத்தியத்தினால உலங்களை ஜெயிச்சுக்கறேன். இங்க இந்த காட்டில தங்க இடம் சொன்னா போரும் அப்டினு சொல்றார். அப்ப சரபங்கர், சுதீக்ஷணர் இல்லை.. சரபங்கர் வந்து சுதீக்ஷணர்னு ஒரு முனிவர் இருக்கார். நீ அவரை போய் பாரு அவர் உனக்கு தங்க இடம் சொல்வார்னு சொல்றார். சரபங்கர் சொல்றார். நான் இந்த உடம்பை உதிர்த்துடப்போறேன். நீ அதை பார்க்கணும்னு சொல்லி தன்னோட உடம்பை அக்னியில கொடுத்து ஒரு பதினாறு வயது இளைஞனை போல ஒரு திவ்ய தேகம் எடுத்துண்டு ப்ரஹ்ம்மலோகம் கிளம்பறார். ப்ரஹ்மா அவரை சுஸ்வாகதம் அப்டின்னு சொல்லி வரவேற்கறார். அந்த காட்சியை இவா ஆச்சர்யமா பாத்துண்டிருக்கா. இதுல என்ன தத்வம்னா சரபங்கர் நிறைய தபஸ் பண்ணிருக்கார். அந்த தபஸெல்லாம் ராமர்கிட்ட ஒப்படைச்சு, ராமர் மூலமா அவர் முக்தியை வாங்கிக்கறார் அப்டின்னு, ராமர் அதை ஏத்துண்டு அவருக்கு முக்தியை குடுத்தார். சரபங்கருக்கு முக்தியை குடுத்தார். சுதீக்ஷணரை போய் பாருன்னு சொன்னதும் சுதீக்ஷணரை வந்து பாக்கறார். அதுக்கு முன்னாடி இந்த சரபங்கர் ஆஸ்ரமத்து வாசல்ல தான் ரிஷிகள் எல்லாம் வந்து ராமர்கிட்ட அபயம் கேட்டார்ங்கறது. ஆனா இந்த சங்க்ஷேப ராமாயணத்துல இரண்டு ஸ்லோகம் தள்ளி வர்ரது. சுதீக்ஷணரை போய் பாக்கறா. அவரும் அதே மாதிரி சொல்றார். என்னுடைய தபஸ்ஸுனால நிறைய உலகம் எல்லாம் ஜெயிச்சிருக்கேன். நீ அங்க இருந்துக்கோ ராமான்னவுடனே, இல்லை இந்த வனத்துல வசிக்க இடம் சொல்லுங்கோன்னவுடனே, அதுக்குள்ள அங்க நிறைய ரிஷிகள் வந்திருக்கா. அவாள்ளாம் எங்களோட வாங்கோ. எங்களோட வந்து எங்க பர்ணசாலையில இருங்கோ அப்டின்னு வேண்டிக்கறா. ராமர் சரின்னு சொல்றார். அப்படி அந்த சுதீக்ஷணர் ரொம்ப தானே தன் கையால சமைச்சு போட்டு அன்பு பாராட்டறார். அந்த ஆஸ்ரமத்துக்கு அருகில இருந்த குளத்துல குளிச்சு தெய்வங்களை எல்லாம் வேண்டி சூரியனுக்கு அர்க்யம் கொடுத்து காயத்ரி ஜபம் பண்ணி இந்த சுதீக்ஷணர்கிட்ட விடை பெற்று, இந்த ரிஷிகளோட போய் பத்து வருஷம் அந்த ரிஷிகளோட ஆத்துல ஆறுமாதம் ஒரு இடம் ஒரு வருடம் ஒரு இடம் இப்படின்னு பத்து வருஷம் ரொம்ப சுகமா ராமரும் லக்ஷ்மணரும் சீதா தேவியையும் ஒருத்தர்க்கு மேல ஒருத்தர் அதிக அன்பாக பார்த்துக்கறா. ரொம்ப சுகமா இருக்கா. அப்புறம் ஒரு நாள் சுதீக்ஷணர் சொன்னபடி பத்து வருஷம் கழிச்சு திரும்பி அவர் ஆஸ்ரமத்துக்கு வரார். சுதீக்ஷணர் ஆத்துல அவரோட சில நாட்கள் இருக்கார். ஒரு நாள் ராமர் கேட்கறார், நான் இந்த தெற்கு திக்குல அகஸ்திய பகவான் இருக்கார்னு கேள்விபட்டேன். அவரை போய் பார்த்து அவருக்கு சிஷ்ரூஷை பண்ணனும்னு ஆசைப்படறேன்னவுடனே, சுதீக்ஷணர் சொல்றார். அப்படியா நானே உனக்கு சொல்லணும்னு நெனைச்சிண்டிருந்தேன். உனக்கு இந்த எண்ணம் வந்ததோல்யோ .. இன்னிக்கே நீ கிளம்பு. ரொம்ப நல்ல காரியம் போய்ட்டு வா.. அப்டின்னு சொல்லி அகஸ்தியரை பாக்கறதுக்கு வழி சொல்லி அனுப்பறார். இப்படி நாலு யோஜனை போகணும்.. அங்க இன்னன்ன மாதிரி மரங்கள் இருக்கும். அங்க அகஸ்தியரோட தம்பி ஆசிரமம் இருக்கும். அங்க போய் தங்கிக்கோ. அப்புறம் அவர்கிட்ட வழி கேட்டு இன்னொரு யோஜனை போகணும். அங்க போய் அகஸ்தியரை நீ பாரு அப்டின்னு சொல்லி சுதீக்ஷணர் ஆசீர்வாதம் பண்ணி அனுப்பறார். ராமர் கிளம்பி “ப்ராதரம் அகஸ்தியம்” – அகஸ்தியர் இரண்டு பேரையும் தரிசனம் பண்றார்.
अगस्त्यवचनाच्चैव जग्राहैन्द्रं शरासनम् ||
खड्गं च परमप्रीतस्तूणी चाक्षयसायकौ |
அக³ஸ்த்யவசனாச்சைவ ஜக்³ராஹைந்த்³ரம்ʼ ஶராஸனம் ||
க²ட்³க³ம்ʼ ச பரமப்ரீதஸ்தூணீ சாக்ஷயஸாயகௌ |
அகஸ்தியர் சொல்படி இந்திரன் கொடுத்த “ஶராஸனம் “ – விஷ்ணு தனுசை “க²ட்³க³ம்ʼ ச” – ஒரு கத்தியையும் “ஜக்³ராஹா” – ராமர் வாங்கிண்டார்.. “தூணீ”னா – அம்புராத்தூணி. அம்புகள் வச்சுக்கற அந்த முதுகுல கட்டிண்டிருப் பாளே அது. அதுலேர்ந்து “அக்ஷயஸாயகௌ” – எடுக்க எடுக்க குறையாத அம்பராத்தூணியையும் அவர் கொடுக்கறார். “பரமப்ரீத: ராம: ஜக்ராஹ” – ராமர் இதை ரொம்ப ப்ரீதியோடு வாங்கிக்கறார். இதை குடுக்கும் போது அகஸ்தியர் சொல்றார். “ஜயாய ப்ரதிக்³ருʼஹ்ணீஷ்வ வஜ்ரம் வஜ்ரத⁴ரோ யதா² “ – எப்படி இந்திரன் வஜ்ரத்தை வச்சுண்டிருக்கானோ அந்த மாதிரி இந்த விஷ்ணு தனுசை நீ வச்சுக்கோ அப்டின்னு குடுக்கறார். அப்டின்னா என்ன அர்த்தம் வந்திருக்கறது சாக்ஷாத் விஷ்ணு பகவான் அப்டின்னு அவருக்கு தெரியறது. அவாளுக்கு உபசாரம் பண்றார். அப்பறம் அவரே சொல்றார். ராமா, நீ இங்க இருக்கணும், உன்னோட பாக்கி இருக்கற வனவாசத்துல கொஞ்ச நாள் என்னோட கழிக்கணும்ங்கற எண்ணத்துல நீ வந்திருக்க. ஆனா தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் எல்லாருக்கும் பெரிய ஒரு க்ஷேமத்தை முன்னிட்டு நான் சொல்றதை கேளு. அவர் ஒரு வழி சொல்றார். இந்த வழியா போனா பஞ்சவடின்னு கோதாவரி நதிக்கரைல ஒரு இடம் இருக்கும். அங்க போய் நீ பர்ணசாலை அமைச்சுக்கோ. ரொம்ப ரம்யமான இடம்னு சொல்றார்.
वसतस्तस्य रामस्य वने वनचरैः सह ||
ऋषयोऽभ्यागमन्सर्वे वधायासुररक्षसाम् |
வஸதஸ்தஸ்ய ராமஸ்ய வனே வனசரை꞉ ஸஹ ||
ருʼஷயோ(அ)ப்⁴யாக³மன்ஸர்வே வதா⁴யாஸுரரக்ஷஸாம் |
இந்த சரபங்கர் ஆஸ்ரமத்து வாசல்ல ரிஷிகள் எல்லாம் வந்து ராமர்கிட்ட ஹே ராமா, நீ ராஜகுமாரன். நாங்களெல்லாம் தபஸ்விகள். எங்களை இந்த காட்டுல கரதூஷணாள்னு பதினாலாயிரம் ராக்ஷசர்கள் இருக்கா. அவா ரொம்ப ஹிம்சை பண்றா. வதம் கூட பண்ணிடறா.. தோ பார் அப்டின்னு மலைபோல இருக்கற எலும்புக்கூடை காமிக்கறா. நாங்களே எங்க தபஸ்னால அவாளை தண்டிப்போம். ஆனா தபஸ் பண்றதே ரொம்ப கஷ்டம். அதுக்கு வர விக்னங்கள் பல. அப்படி சம்பாதிச்சு சேமிச்சு வச்சிருக்கற தபஸ்ஸை கோபிச்சிண்டு சாபம் கொடுத்து வீண்பண்ண நாங்க விரும்பவில்லை. நீ ஷத்ரியன். நீ இந்த ராக்ஷஸர்களை வதம் பண்ணினா எங்களோட தபஸ்ஸுல நாலுல ஒரு பங்கு உனக்கு கிடைக்கும் அப்டின்னு சொல்றார். அப்ப ராமர், நான் எங்கப்பா வனவாசம் போன்னு சொல்லி வந்தேன். அப்படி வந்த இடத்தில இந்த மாதிரி ரிஷிகளுக்கும் பிராமணர்களுக்கும் உபயோகமாக இருக்க முடியும்னா இதுக்கு மேல என்ன வேணும். நான் இருக்கேன். என் தம்பி இருக்கான்.. எங்ககிட்ட வில்லு இருக்கு. கட்டாயம் நாங்க உங்களை ராக்ஷஸர்களுடைய துன்பத்துல இருந்து காப்பாத்துவோம். அதற்காக தான் நான் கையில வில்லையே வச்சிண்டிருக்கேன். அப்டின்னு சொல்றார். அப்படி சொல்லி சத்யம் பண்ணிக்கொடுக்கறார்.
स तेषां प्रतिशुश्राव राक्षसानां तथा वने ||
प्रतिज्ञातश्च रामेण वधः संयति रक्षसाम् |
ஸ தேஷாம்ʼ ப்ரதிஶுஶ்ராவ ராக்ஷஸானாம்ʼ ததா² வனே ||
ப்ரதிஜ்ஞாதஶ்ச ராமேண வத⁴꞉ ஸம்ʼயதி ரக்ஷஸாம் |
“ருʼஷயோ(அ)ப்⁴யாக³மன்ஸர்வே” – எல்லா ரிஷிகளும் ராமரிடம் வந்து, “வதா⁴யாஸுரரக்ஷஸாம்” – அசுரர்களின் வதத்தின் பொருட்டு ராமர்கிட்ட வந்து கேட்கறா. “ஸ தேஷாம்ʼ ப்ரதிஶுஶ்ராவ “ -ராமர் அவா சொன்னதை காதுல கேட்டுண்டார். அதாவது அவாளுடைய ப்ரார்த்தனையை ஏற்றுக்கொண்டார். “ராக்ஷஸானாம்ʼ ததா² வனே வத⁴꞉ ப்ரதிஜ்ஞாதஶ்ச” ராக்ஷஸர்களோடு “ஸம்யதி” – யுத்தம் பண்ணி நான் அவாளை வதம் பண்றேன் அப்டின்னு ப்ரதிக்ஞை பண்ணி குடுத்தார்.
ऋषीणामग्निकल्पानां दण्डकारण्यवासिनाम् ||
ருʼஷீணாமக்³னிகல்பானாம்ʼ த³ண்ட³காரண்யவாஸினாம் ||
யாருக்கு பண்ணினார்னா, அந்த தண்டகாரண்ய வனத்தில் வசிக்க கூடிய அக்னி போன்று ஜொலிக்கும் அந்த ரிஷிகளுக்கு இப்படி ராமர் சத்யம் பண்ணிக்குடுத்தார். இதுல என்னனா ரிஷிகளும் தபஸால ஜொலிக்கறா. அதனால அவாளே அவாளை காப்பாத்திக்க முடியும். அகஸ்தியர் மாதிரி சுதீக்ஷணர் மாதிரி இருக்கறவா ராமர்கிட்ட அபயம் கேட்கலை. அந்த நிலைக்கு முயற்சி பண்ணிண்டிருக்கறவா தான் கேட்கறா..அப்பேர்பட்ட அகஸ்தியர் ஆஸ்ரமத்துக்கு பக்கத்துல கூட துஷ்டர்களே வர முடியாது. இந்த ரிஷிகள், தபஸ் பண்ணிண்டிருக்கா.. அதனால அவா ராமன் கிட்ட கேட்கறா. ராமரும் அவாளுக்கு சத்யம் பண்ணிக்குடுக்கறார்.
ராக்ஷஸர்களை வதம் பண்ணி உங்களை அபயம் கொடுப்பேன் அப்டின்னு சத்யம் பண்ணிக்குடுக்கறார். இந்த இடத்துல சீதா தேவி கேட்கறா.. ஹே ராம, மனுஷாளுக்கு மூணு விதத்துல பாபம் வரும். பொய் சொல்றதால பாபம் வரும். மாற்றான் மனைவியை ஆசை பட்டா பாபம் வரும். எந்த தப்பும் பண்ணாதவாளை போய் ஹிம்சை பண்ணினா பாபம் வரும். நீ பொய் சொல்ல மாட்ட. என்னைத்தவிர வேறு ஒருத்தரிடம் உம் மனஸு போகாதுங்கறது எனக்கு தெரியும். உன்னிடத்தில் ஹிம்சை பண்ணாத ஒருவரை போய் நீ ஹிம்சை பண்ணினால் அந்த தோஷம் வந்துடுமோனு பயமா இருக்கு. நம்ப தபஸ்விகளாக இருக்கோம்னு காட்டுக்கு வந்திருக்கோம். ஆனா எப்பவும் கையில வில்லையும் அம்பையும் வச்சிண்டிருக்கறதால ராக்ஷஸர்களை வதம் பண்றேன்னு இப்படி சத்யம் பண்ணிக்குடுக்கறியே.. இப்படி தான் ஒரு தபஸ்வி காட்டுல இருக்கும் போது அவருடைய தவத்தை கெடுக்கறதுக்காக இந்திரன் அவர்கிட்ட ஒரு கத்தியை கொடுத்து இதை பாத்துக்கோங்கோ, அப்டின்னு ஒரு போர்வீரனாட்டம் வந்து குடுத்துட்டு போனான். அவர் எங்க போனாலும் அதை எடுத்துண்டு போனார். அப்பறம் அதை வச்சு புல்லெல்லாம் அறுக்கறேன்னு ஆரம்பிச்சார். அப்பறம் வதம் பண்ண ஆரம்பிச்சுட்டார். அவரோட தபஸெல்லாம் போய்டுத்து. அதனால க்ஷத்ரியர்களுக்கு கையில ஆயுதம்ங்கறது, நெருப்புல விறகு போடற மாதிரி. நீ தபஸ்வியா இருக்கலாம்னு வந்திருக்கியே..இது வேணுமா அப்டின்னு கேட்கறா. அதை சொல்லும் போது ஜனகர் மகளாக சீதாதேவி ஒண்ணு சொல்றா. கஷ்டம்னு யாராவது வந்து கேட்கும் போது அவாளை காப்பாத்தறதுக்காக வில் அம்பு வச்சுக்கணும். மத்தபடி நம்ப தபஸ்வியா இருப்போம் அப்டின்னு சொல்றா. உடனே ராமர் சொல்றார். இந்த வார்த்தை சொன்னாய் இல்லையா யாராவது கஷ்டப்படறேன் காப்பாத்துன்னு கேட்டா அவாளை காப்பாத்த மட்டும் வில் அம்பு வச்சுக்கலாம்னு, இந்த பிராமணர்கள் என்னை சேர்ந்தவர்களாக நான் நினைக்கறேன். அதனால அவாளோட கஷ்டத்தை போக்கறதுக்காக நான் சத்யம் பண்ணி குடுத்திருக்கேன். என் உயிரை விட்டாலும் விடுவேன், உன்னை விட்டாலும் விடுவேன், லக்ஷ்மணனை விட்டாலும் விடுவேன் குடுத்த வாக்கை காப்பாற்றாமல் விட மாட்டேன் அப்டின்னு சொல்லிட்டு நீ ஜனகர் மகளல்லவா அதனால தான் என் மேல இருக்கற அன்பினால இப்படி சொல்ற அப்டின்னு சொல்லி முடிக்கறார். நடுவுல ஏன் பேசறன்னு கடுமையா சொல்லாம இது மாதிரி ஹிதமா சொல்றார். அவா ஒரு reasoning சொல்றா.. நம்ப அவளுக்கு புரியவைக்கணும்ங்கற மாதிரி அழகா சொல்றார். அப்பறம் அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு போற வழியில தர்மப்ருத் னு ஒரு முனிவர் கூட வந்துண்டிருக்கார். போயிண்டிருக்கும்போது ஒரு ஏரிக்குள்ளேர்ந்து பாட்டு நாட்டியம சத்தம் எல்லாம் கேட்கறது. அப்ப அந்த தர்மப்ருத் கிட்ட ராமர் கேட்கறார். என்ன ஆச்சர்யமா இருக்கே இப்படி ஏரிக்குள்ளேர்ந்து பாட்டு டான்செல்லாம் பண்றா மாதிரி ஒரு சத்தம் கேட்கறதேன்னவுடனே.. இங்க மாண்டகர்ணி ஒரு மகரிஷி இருந்தார். அவர் பத்தாயிரம் வருஷம் தபஸ் பண்ணினார். அவர் தபஸ்ஸை கெடுக்கறதுக்காக தேவர்கள் ஒரு ஐந்து அப்ஸரஸ் ஸ்த்ரீகளை அமிச்சா.. இந்த ஏரில ஸ்னானம் பண்ண வரும்போது அவாளை பார்த்து அவர் தபஸ்ஸால இளமை வரவெச்சிண்டு ஏரிக்குள்ள ஒரு மாளிகை கட்டிண்டு அவாளோட ரமிச்சிண்டிருக்கார் அப்டின்னு தர்மப்ருத் சொல்றார். அப்போ ராமர் ஆஹா அச்சர்யம் அப்டின்னு சொல்றார். இது Paranthetic ஆ ஒரு கதை மாதிரி தோணும். ஆனா ஸ்வாமிகள் என்ன சொல்வார்னா .. இந்த தண்ட காரண்யத்துக்கு வந்த போது ரிஷிகள் எல்லாம் ராமரை பார்த்து பார்த்து தங்களோட ஆசிரமத்திற்கு அழச்சிண்டு போயி ராமரோட பத்து வருஷம் இருந்து.. அவா இடத்துக்கே பகவான் வந்திருக்கார்.. அவாளுக்கு ஞானத்ருஷ்டி இருக்கறதால
रूपसंहननं लक्ष्मीं सौकुमार्यं सुवेषताम्।
ददृशुर्विस्मिताकारा रामस्य वनवासिनः।।
ரூப சம்ஹணணம் லக்ஷ்மீம் சௌகுமார்யம் சுவேஷதாம் |
தத்ருசு: விஸ்மிதாகரா: ராமஸ்ய வனவாஸின: ||
அந்த ரிஷிகள் ராமருடைய அழகு, அவருடைய தேஜஸ், அவருடைய இளமை அவருடைய இந்த வேஷம் இதெல்லாம் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு “விஸ்மிதாகரா:”- ரொம்ப ஆச்சர்யப்பட்டு உபசாரம் பண்ணினார் அப்டின்னு வர்ரது. இதுல வேஷதாம் அப்டின்னா நல்ல வேஷம், நல்ல மரவுரி, ஜடாபாரம், மாந்தோல் அந்த பெரிய கண்கள், அந்த வேஷம் அப்டின்னு ஒரு அர்த்தம். இன்னொண்ணு, பகவானே இந்த மாதிரி ஒரு வேஷம் போட்டுண்டு வந்திருக்காரே அப்டின்னு அவாளோட ஞானத்ருஷ்டியில பகவான் தெரிஞ்சதால அவரை அப்படி… கூட வந்திருக்கற லக்ஷ்மி தேவி தான் சீதாதேவியா வந்திருக்கா.. அப்படின்னு பார்த்து பார்த்து வியந்து அப்படி ஆனந்தமா அவருக்கு உபசாரம் பண்ணினா. அப்படி ரிஷிகளுடைய பாக்யம்.
இந்த இடத்துல கூட ஒண்ணு சொல்லுவா.. ராமாயணத்துல அப்படி இல்லை. இந்த தண்டகாரண்ய முனிவர்கள் எல்லாம் ராமரை ஆலிங்கனம் பண்ணிக்கணும்னு ஆசை பட்டா ..ராமர் வந்து இந்த இப்பிறவியில் இருமாதரை சிந்தையாலும் தொடேன் சீதையை தவிர வேறு யாரையும் தொடமாட்டேன் அப்டின்னு சொன்னார். அதனால தான் அந்த தண்டகாரண்ய ரிஷிகள் தான் அடுத்த அவதாரத்துல கோபிகைகளாக பிறந்தா அப்டின்னு ஒண்ணு சொல்லுவா.. நன்னா இருக்கு இது.. அந்த கோபிகைகள் விஷயத்தை வந்து அந்த மாதிரி human touch ஏ இல்லாம ரிஷிகளுடைய தபஸ்னால அவா அடைந்த பாக்யம் அப்டின்னு above human னு புரிஞ்சுக்கறதுக்கு அது அழகா இருக்கு. இந்த மாதிரி அவாளோட பாக்யம் இருக்கும் போது அப்படி வாசல் வழியா ராமர் போகும் போது அந்த ராமரை பார்க்க முடியாம அந்த மாண்டகர்னி மன்மத வசமா மாட்டிண்டாரே அப்டிங்கறது இதுல விஷயம் அப்டின்னு ஸ்வாமிகள் சொல்வார். அடுத்து அகஸ்தியர் சொன்னபடி ராமரும் லக்ஷ்மணரும் சீதாதேவியும் பஞ்சவடிக்கு போய் அங்க ரொம்ப அழகான ஒரு பர்ணசாலையை லக்ஷ்மணன் கட்டறான். அதை பார்த்து ராமர் ரொம்ப வியந்து போய்டறார். அவனை கட்டிண்டு ஹே லக்ஷ்மணா என் மனசை புரிஞ்சு இவ்வளவு அழகா காரியம் பண்ற நீ, எங்கப்பா இல்லாத குறையை போக்கற லக்ஷ்மணா அப்டின்னு usual ஆ லக்ஷ்மணன், “லக்ஷ்மண: லக்ஷ்மிவர்த்தன:” அப்டின்னு வந்துண்டே இருக்கும். “லக்ஷ்மிவர்த்தன:”னா கைங்கர்யத்தை வளர்த்துண்டே போறான். ராமகைங்கர்யம் பண்ணி பண்ணி புண்யத்தை கட்டிக்கறான் லக்ஷ்மணன் அப்டின்னு வரும். இந்த இடத்துல “ராம: லக்ஷ்மிவர்த்தன:”னு வரும். அதாவது ராமர் இந்த மாதிரி அவனோட சிஷ்ருஷையை பாராட்டி அதன் மூலமா அவனோட கைங்கர்ய லக்ஷ்மியை வளர்க்கறார் அப்டின்னு அர்த்தம் சொல்லுவா அதுக்கு. அப்படி இந்த பஞ்சவடியில சுகமா மூன்று வருஷம் வசிக்கறா. ஹேமந்த்த ருது வர்ரது. அந்த ஹேமந்த்த ருதும்போது கோதாவரில போய் குளிக்கறா. அந்த ஹேமந்த்த ருதுவை லக்ஷ்மணன் அழகா வர்ணனை பண்ணிண்டே வரான். அப்போ ரொம்ப அழகான வர்ணனை 16வது சர்கம் ஆரண்ய காண்டம். அதோட முடிவுல சொல்றான். நானும் நீயும் சீதையும் இந்த குளிர்ல வந்து குளிக்கறோம் இந்த கோதாவரி நதியில.. அங்க அயோத்தியில பரதன் உன் மேல இருக்கற பக்தியினால இந்த விடியற்காலைல போயி சரயு நதியில குளிச்சிண்டிருப்பான். என்னே பக்தி அவனுக்கு அப்டின்னு சொல்லிட்டு, அப்பேர்பட்ட பரதனை பிள்ளையாக பெற்று தசரதருக்கு வாழ்க்கைபட்ட கைகேயிக்கு மட்டும் எப்படி க்ரூர புத்தியா இருக்காளோ அப்டின்னு சொல்லும் போது உடனே ராமர் பத்தியா பத்தியா பரதனை பத்தி பேசிண்டே வந்த.. அவன் அன்னிக்கு வந்து சித்திர கூடத்துல சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனசுல இருக்கு. எனக்கு ஒவ்வொரு நாள் அவனை பார்க்கணும் அயோத்தி போகலாம் அப்டின்னு அசடு தட்டறது. சத்தியம் பண்ணியிருக்கோமேன்னு காலை தடுத்து நிறுத்திண்டிருக்கேன். அந்த பரதனோட கதையையே பேசு அப்டின்னு கைகேயியை திட்டாதேனு அதை பொருக்காம அப்படி சொல்றார் ராமர். இப்படி ஆனந்தமா போயிண்டிருக்கு. அடுத்தது இந்த சங்க்ஷேப ராமாயணத்துல..
तेन तत्रैव वसता जनस्थाननिवासिनी |
विरूपिता शूर्पणखा राक्षसी कामरूपिणी ||
தேன தத்ரைவ வஸதா ஜனஸ்தா²னநிவாஸினீ |
விரூபிதா ஶூர்பணகா² ராக்ஷஸீ காமரூபிணீ ||
எல்லாம் இந்த மாதிரி ஆனந்தமா இருக்கா. ஒரு நாளைக்கு ராமன் ரிஷிகளோடு இருக்கும் போது ராவணனுடைய தங்கை ஶூர்பணகாங்கறவ ராமனை பார்க்கறா.. அவன் மீது மோக வசப்பட்டு அவ ராமங்கிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கோ அப்டின்னு கேட்கறா. இந்த இடத்துல ரிஷிகளோடு ராமன் இருக்கும் போது அப்டின்னு வர்ரதுக்கு ஸ்வாமிகள் சொல்வார். ரிஷிகள் உபநிஷத்து பாடம் எடுத்துண்டிருந்தாளாம்.. அதுல யாரோ ஒரு பையன் சந்தேகம் கேட்டானாம்.. சிஷ்யன்.. உடனே ரிஷி சொன்னாராம். உபநிஷத் எந்த பகவானை காமிக்கறதோ அந்த பகவானே இங்க இருக்கார். நம்ப எதுக்கு சந்தேகம் எல்லாம் வாங்கோ ராமரை பார்க்கலாம் அப்டின்னு எல்லாருமா ராமரை பார்க்க வந்துடுவாளாம். இப்படி பேசிண்டிருக்கும்போது ஶூர்பணகை பார்த்து ராமருடைய அழகுல மயங்கி அவாள்ளாம் போனாவிட்டு ராமங்கிட்ட வந்து, ஹே ராமா, என்னை கல்யாணம் பண்ணிக்கோ .. இந்த மனுஷ்ய ஸ்த்ரீயை வச்சிண்டு நீ என்னபண்ண போற.. நம்ப ஆனந்தமா இருக்கலாம் அப்டின்னு சொல்றா. ராமருக்கு என்னமோ விளையாட்டு பண்ணனும்னு தோணறது… அவகிட்ட அதோ பாரு அந்த லக்ஷ்மணன் இருக்கான் பாரு அவன் மனைவி பக்கத்துல இல்லாம இருக்காங்கற அர்த்தத்துல அவனுக்கு கூட ஒரு பெண் இல்லை.. எனக்கு இந்த பெண்கிட்ட ஆசை ரொம்ப ஜாஸ்தி. அதனால நீ இவளுக்கு சக்களத்தியா இருக்க வேண்டாம். அதனால நீ அவனை போய் கேளு அப்டின்னு சொல்றார். அதை லக்ஷ்மணன் பாத்துண்டிருக்கான். அவளும் புத்தியில்லாம அவங்கிட்ட போய் கேட்க போறா.. எதா இருந்தாலு நீயே பார்த்து அனுக்ரஹம் பண்ணு னு ராமர்கிட்டயே கேட்டிருந்தா கூட எதாவது ஞான உபதேசம் பண்ணிருப்பார். அவள் அதெல்லாம் செய்யாம லக்ஷ்மணன் கிட்ட போய் கேட்கறா. அவனும் விளையாட்டு பண்றான்.. நீ என்னோட resume இன்னும் பாக்கலை போலருக்கு .. நான் ராமனுடைய அடிமை. நீ என்னை கல்யாணம் பண்ணிண்டா நானும் நீயும் சேர்ந்து துணி தோய்ச்சு போட்டுண்டிருக்கணும். அதனால நீ ராமனையே கேளு.. அவனை கல்யாணம் பண்ணிண்டா நான் உனக்கும் சேர்த்து துணி தோய்ச்சு போடுவேன் அப்டின்னு சொல்றான். நானே தாசன். நீயும் தாசியாயிடுவ.. அதனால நீ அங்கயே போய் கேளு.. அந்த பொண்ணு ஒண்ணும் அவ்வளவு அழகா இல்லை. நீ தான் ரொம்ப அழகா இருக்கறதால அவர் உங்கிட்ட ரொம்ப ஆசையா இருப்பார் அங்கயே போய் கேளு அப்டிங்கறான். உடனே திரும்ப போய் இந்த அசடு ராமன் கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கோ நீ என்றவுடனே ராமன் சிரிக்கறார். உடனே இந்த சீதை இருக்கறதாலே தானே கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கற.. இந்த சீதையை கொல்றேன் அப்டீனு அவளை கொல்ல போறா ராக்ஷஸி ரூபம் எடுத்துண்டு. உடனே ராமர் லக்ஷ்மணன் கிட்ட இந்த மாதிரி அசத்துக்கிட்ட எல்லாம் பரிகாசம் வேண்டாம். இவளுக்கு தண்டனை குடுன்னவுடனே லக்ஷ்மணன் கத்தியை எடுத்து ஶூர்பணகை காது மூக்கை வெட்டிடறான்.
“விரூபிதா ஶூர்பணகா² ராக்ஷஸீ காமரூபிணீ “ – எந்த வித ரூபத்தையும் எடுக்க கூடிய ஶூர்பணகை அழகான ரூபம் எடுத்துண்டு வந்தா , இப்பொழுது காதும் மூக்கும் அறுந்து கோர ரூபம் எடுத்து ஓடினாள்.
ततः शूर्पणखावाक्यादुद्युक्तान् सर्वराक्षसान् |
खरं त्रिशिरसं चैव दूषणं चैव राक्षसम् ||
निजघान रणे रामस्तेषां चैव पदानुगान् |
தத꞉ ஶூர்பணகா²வாக்யாது³த்³யுக்தான் ஸர்வராக்ஷஸான் |
க²ரம்ʼ த்ரிஶிரஸம்ʼ சைவ தூ³ஷணம்ʼ சைவ ராக்ஷஸம் ||
நிஜகா⁴ன ரணே ராமஸ்தேஷாம்ʼ சைவ பதா³னுகா³ன் |
இந்த ஶூர்பணகை பக்கத்துல இருக்கற ‘கரன்’ங்கற ராக்ஷசனிடம்(ராவணனோட சித்தப்பா பையன் மாதிரி) போய் முறையிடறாள். உடனே அந்த கரன் ஆஹா .. நான் இருக்கும் போது உன்னை ஒருத்தன் தொடறதாவது அப்படின்னு ஒரு பதிநாலு பேரை அனுப்பறான். ராமர் ஒரு வில்லுல பதிநாலு அம்பை போட்டு அவா எல்லாரையும் வீழ்த்திடறார். உடனே ஶூர்பணகை கரனிடம் போய் நீ ஓடிப்போய்டு அவன் ரொம்ப பெரிய வீரனா இருக்கான் அப்டின்னு உசுப்பேத்தி விடறா. உடனே கரன் தன்னோட பதிநாலாயிரம் ராக்ஷஸர்களையும் தூஷணன், த்ரிஶிரஸ்னு தன்னோட சேனாதிபதிகளையும் கூட்டிண்டு யுத்தத்துக்கு வரான்.
“உ த்³யுக்தான் ஸர்வராக்ஷஸான்” – கிளம்பி வந்த எல்லா ராக்ஷஸர்களையும், “க²ரம்ʼ த்ரிஶிரஸம்ʼ சைவ தூ³ஷணம்ʼ சைவ ராக்ஷஸம்” – இவா மூன்று பேர்தான் ரொம்ப முக்யம். இவா அத்தனை பேரையும் “நிஜகா⁴ன ரணே ராம:”– யுத்தத்தில் ராமர் வதம் பண்ணார் . “ராமஸ்தேஷாம்ʼ சைவ பதா³னுகா³ன் “ – இவா பின்னாடி வந்த அத்தனை பேரையும் ராமர் வதம் பண்ணார்.
वने तस्मिन्निवसता जनस्थाननिवासिनाम् ||
रक्षसां निहतान्यासन् सहस्राणि चतुर्दश |
வனே தஸ்மிந்நிவஸதா ஜனஸ்தா²னநிவாஸினாம் ||
ரக்ஷஸாம்ʼ நிஹதாந்யாஸன் ஸஹஸ்ராணி சதுர்த³ஶ |
பதிநாலாயிரம் ராக்ஷஸர்களையும் தனி ஒருவராகவே, லக்ஷ்மணன்கிட்ட சீதையை கூட்டிண்டு போயி ஒரு குஹைல பத்ரமா இருன்னு சொல்லிட்டு இவா அத்தனை பேரையும் தனி ஒருவராக ராமர் வதம் பண்ணினார்.
ततो ज्ञातिवधं श्रुत्वा रावणः क्रोधमूर्छितः ||
ததோ ஜ்ஞாதிவத⁴ம்ʼ ஶ்ருத்வா ராவண꞉ க்ரோத⁴மூர்சி²த꞉ ||
இந்த அகம்பணன்னு ஒருத்தன் தப்பிச்சு ஓடி போயி ராவணன் கிட்ட இந்த மாதிரி ராமன்னு ஒருத்தன் வந்திருக்கான். அவன் பதிநாலாயிரம் பேரையும் தனி ஆளா வதம் பண்ணிட்டான் அப்டின்னு சொன்னவுடனே இதோ நான் கிளம்பறேன்.. நான் அவனை வதம் பண்ணறேன்னவுடனே அந்த அகம்பணன் சொல்றான். வேண்டாம் வேண்டாம், அவன் ரொம்ப பெரிய வீரனா இருக்கான். அவனோட மனைவி ரொம்ப அழகா அவனுக்கு பக்கத்துல இருக்கா. அவ மேல அவனுக்கு ரொம்ப ப்ரியம். அவளை நீ தூக்கிண்டு வந்துடு. அப்ப அந்த ராமன் உயிரே போன மாதிரி நொந்து போய்டுவான். அப்ப நீ அவனை வதம் பண்ணு அப்டின்னு துர்புத்தி சொல்லிக்குடுக்கறான் அந்த அகம்பணன். இது ராவணனுக்கு ரொம்ப புடிக்கறது. அவன் காமாத்மா.. உடனே அவன்
सहायं वरयामास मारीचं नाम राक्षसम् |
ஸஹாயம்ʼ வரயாமாஸ மாரீசம்ʼ நாம ராக்ஷஸம் |
மாரீசன்னு ஒரு ராக்ஷசன்.. நமக்கு தெரியுமே இந்த விஸ்வாமித்ரர் யாகத்துக்காக யுத்தம் பண்ணின போது மானவாஸ்திரத்துனால இந்த மாரீசனை அடிச்சு அவன் நூறு யோசனை தூரம் போய் கடல்ல விழுந்து தப்பிச்சா போதும்னு ஓடி வந்தான்னு.. அதே மாரீசன் தான். அவன் கிட்ட போயி சஹாயம் கேட்கறான். நீ மாய மானாக போ. எனக்கு சீதையை அபகரிக்கணும் அப்டின்னு கேட்கறான்.
वार्यमाणः सुबहुशो मारीचेन स रावणः ||
வார்யமாண꞉ ஸுப³ஹுஶோ மாரீசேன ஸ ராவண꞉ ||
அந்த மாரீசன் ராவணனை பல முறை அந்த எண்ணத்திலேர்ந்து “வார்யமாண꞉” – அப்புறப்படுத்த பார்க்கறான். இந்த சீதாபஹரணம்ங்கற எண்ணத்தை நீ விட்டுடு.. இது உனக்கும் உன் குலத்துக்கும் உன் பிள்ளைகள், அண்ணங்கள், தம்பிகள் எல்லாருக்கும் ஆபத்து. இந்த எண்ணம் உனக்கு வேண்டாம். சீதையை அபஹரணம் பண்ணனும்ங்கற எண்ணத்தை நீ விட்டுடு அப்டின்னு சொல்லி நான் சின்ன பையனா இருந்த போது அடிச்ச அடி இப்பவும் எனக்கு வலிக்கறது.. இப்ப தண்டகாரண்யத்துல நாங்க மூணு பேரும் மானாக ரிஷிகளை திங்கலாம்னு போனோம். ராமரை பார்த்ததும் அவர் கைல வில்லை பார்த்ததும் எனக்கு தெரியும் நான் ஓடிவந்துட்டேன்.. மத்த ரெண்டு பேரும் போய்ட்டா.. நான் ரா ன்னு சொன்னாலே ரதம், ரத்னம்னு சொல்ல யாராவது ரானு ஆரம்பிச்சாலே பயந்து நடுங்கறேன்.. அதனால தபஸ்வியா இருக்கேன்.. அதனால ராமர் பேச்சை எடுத்துண்டு இங்க வராதே அப்டின்னு சொல்றான். “ராமோ விக்ரஹவான் தர்ம:” – ராமன் தர்மமே வடிவானவன்.. நீ இந்த ராமன் கரதூஷணாள்ளாம் கொன்னுட்டான், என் தங்கை மூக்கை அறுத்துட்டான் அவா ஒரு தப்பும் பண்ணாதவா அப்டின்னு எல்லாம் சொல்லிண்டு வராதே.. ராமன் தர்மமே வடிவானவன்.. அவன் ஒருதப்பும் பண்ணாதவாளை எதுவும் பண்ண மாட்டான். “ராமோ விக்ரஹவான் தர்ம:” – ராமன் தர்மவான். அவன் ஒரு தப்பும் பன்ணலை நீ அவங்கிட்ட போய் மோதாதே அப்டின்னு சொல்றான். இந்த இடத்துல..
न विरोधो बलवता क्षमो रावण तेन ते |
ந விரோதோ⁴ ப³லவதா க்ஷமோ ராவண தேன தே |
பலசாலியான அந்த ராமரோடு உனக்கு விரோதம் ஆகாது அப்படின்னு மாரீசன் பலதடவை சொல்லி பார்க்கறான். இதை வந்து காதுல வாங்காம ராமஸ்ரமத்துக்கு போயி சீதாபஹரணம் பண்ணினான் என்பதை நாளைக்கு பார்ப்போம்.. ஐம்பது ஸ்லோகம் கிட்ட வந்தாச்சு.. இதோட இன்னிக்கு பூர்த்தி பண்ணிப்போம்…
ஜானகி காந்தஸ்மரணம் !! ஜய் ஜய் ராம ராமா !!!