ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 51-60 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 51 to 60 meaning
ஸங்க்ஷேப ராமயணத்துல 50 ஸ்லோகங்கள் வரை அர்த்தம் பார்த்திருக்கோம். இன்னிக்கு 51 லேர்ந்து 60 பார்க்கலாம். நேத்திக்கு 50 வது ஸ்லோகத்துல
वार्यमाणः सुबहुशो मारीचेन स रावणः ||
न विरोधो बलवता क्षमो रावण तेन ते |
வார்யமாண꞉ ஸுப³ஹுஶோ மாரீசேன ஸ ராவண꞉ ||
ந விரோதோ⁴ ப³லவதா க்ஷமோ ராவண தேன தே |
ராமரோட நீ விரோதம் வளர்த்துக்காதே.. உனக்கு பெரும் ஆபத்து. உன் குலமே அழிஞ்சு போயிடும். அப்படின்னு மாரீசன் பலமுறை சொல்லி இவனை இந்த சீதாபஹரணம்ங்கற எண்ணத்துல இருந்து விலக்கி விடறான் ராவணனை. ஆனா ராவணன் கேட்கலை.
अनादृत्य तु तद्वाक्यं रावणः कालचोदितः ||
அநாத்³ருʼத்ய து தத்³வாக்யம்ʼ ராவண꞉ காலசோதி³த꞉ ||
ராவணனுக்கு யமனுடைய அழைப்பு வந்துடுத்து. “காலசோதி³த꞉” – அதனால இந்த மாரீசன் சொன்ன நல்ல வார்த்தைகளை “அநாத்³ருʼத்ய” – புறம் தள்ளிவிட்டு,
जगाम सहमारीचस्तस्याश्रमपदं तदा |
ஜகா³ம ஸஹமாரீசஸ்தஸ்யாஶ்ரமபத³ம்ʼ ததா³ |
மாரீசனோடு ராமாஸ்ரமத்துக்கு போறான். எப்படின்னா இவன் இவ்வளவு தூரம் வேண்டாம்னு மாரீசன் சொல்றானே அப்புறம் எப்படி மாரீசனோட போறான் அப்டின்னா, மாரீசன் சொல்றான் – நீ என்னை இந்த மாதிரி ராமர்கிட்ட அமிச்சா எனக்கு இன்னிக்கு முடிவு. உனக்கும் வெகு விரைவில் முடிவு. அதனால இந்த காரியத்துல இறங்காதே அப்டின்னு சொன்னாலும் ராவணன் சொல்றான், நான் உன்னை வந்து உபகாரம் கேட்டவுடனே நீ பெரியவனாட்டமும் நான் சின்னவனாட்டமும் உபதேசம் பண்ணறயே நான் உபதேசம் கேட்கவா வந்தேன் இங்க .. நான் ராஜா. ராஜாகிட்ட எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரியாதா. கைகட்டி வாய் பொத்தி சொன்ன பேச்சு கேட்கணும் அப்டிங்கறான். அதனால நீ எனக்கு உபதேசம் பண்ணாத. சொன்னதை செய் நீ. நான் சொன்னதை கேட்டு இப்ப ராமஸ்ரமத்துக்கு போனால் நான் உன்னை உயிரோட விடுவேன். உனக்கு உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பு இருக்கு. இல்லையென்றால் இங்கேயே உன்னை கொன்னு போட்டுடுவேன் என்கிறான். மாரீசன் என்ன பண்ணுவான் ? சரி உன்னிடம் உயிர் விடுவதை விட ராமர் கையிலாவது அடி பட்டு சாகறேன். போகலாம் வா அப்டின்னு சொல்கிறான். இரண்டு பேரும் போறா. அங்க ராமாஸ்ரமம் பார்த்தவுடனே, நான் சொன்ன மாதிரி செய். ‘மாயமானாய் போ’ ன்னவுடனே ஒரு மாயமான் உருவம் எடுத்துண்டு
तेन मायाविना दूरमपवाह्य नृपात्मजौ ||
தேன மாயாவினா தூ³ரமபவாஹ்ய ந்ருʼபாத்மஜௌ ||
மாய மானாய் போறான். சீதாதேவி அந்த மானை பார்த்தவுடனே தங்கமயமான மான் உடம்புல எல்லாம் ரத்தனங்களோட ஆச்சர்யமா இருக்கு .. அதை பார்த்தவுடனே ராமர்கிட்ட இந்த மான் வேணும். இதை புடிச்சுக்குடுங்கோ.. உயிரோடயாவது உயிரில்லைனாலும் பரவாயில்லை எப்படியாவது இந்த மானை புடிச்சுக்குடுங்கோ அப்டின்னு சொல்றா.. அபிராமனான ராமன் பக்கத்துல இருக்கும் போது ஒரு மான் மேல ஆசைப்படறா. அதனால ராமரையே பிரிஞ்சு கஷ்டப்படவேண்டியதாயிடறது. ராமரும், ஒண்ணுமே கேட்கலை இவ இது வரைக்கும் .. இந்த வன வாசத்துல கூட வந்து கஷ்டப்பட்டுண்டு எனக்கு சந்தோஷத்தை குடுக்கறா. அதனால, இவள் கேட்டதை நான் பண்ண போறேன் அப்டிங்கறார். லக்ஷ்மணன் சொல்றான் இது மாரீசன், மாயை. இது பின்னாடி போகாதீங்கோ அப்டின்னு சொல்றான். அவனுக்கு அந்த ரொம்ப சத்ய நிஷ்டையா இருக்கறதால அவனுக்கு அந்த உண்மை தெரியறது. ஆனா ராமருக்கு என்னவோ மறைக்கறது. அதனால அவர் சொல்றார். எனக்கு சுக்கிர நீதியில அரிய ஒரு வஸ்து கிடைச்சதுன்னா எந்த ஆபத்தையும் பார்க்காம பின்னாடி போகணும் அப்டின்னு இருக்கு. அதனால இந்த மான் பின்னாடி போறேன் அப்டின்னு சொல்லிட்டு போயிடறார். லக்ஷ்மணன் கிட்ட சீதையை பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போறார். அந்த மாயமானான மாரீசன் பக்கத்துல இருக்கற மாதிரி இருக்கு. கிட்ட போனா அங்க தள்ளி தெரியறான் அவன். ஓடறார். இப்படியே ரொம்ப தூரம் இழுத்துண்டு போய்ட்டு .. அப்ப ராமருக்கு சந்தேகம் வரது. அம்பை போடறார். ஹான்னு கத்திண்டு பனைமரம் உயரத்துக்கு எம்பி விழும் போது ராவணன் சொன்ன வார்த்தை அவனுக்கு நியாபகம் வந்துடறது. மறக்ககூடாதோ ! ஞாபகம் வந்துடறது. ஹா லக்ஷமணா.. ஹா சீதான்னு சொல்லிண்டே உயிரை விடறான் அப்போ அந்த வார்த்தைகள் அது ராமரோட குரல் மாதிரி இருக்கு. இதை கேட்டவுடனே சீதை லக்ஷ்மணன் கிட்ட நீ போய் பாரு. ராமருக்கு எதோ ஆபத்துன்னவுடனே லக்ஷ்மணன் சொல்றான் ராமருக்கு ஒரு ஆபத்தும் வராது. இங்க உங்களை தனியாக விட்டுட்டு போறது தான் பெரிய ஆபத்து அப்டின்னு சொல்றான். கர வதத்துனால ராக்ஷஸர்கள் எல்லாம் ரொம்ப நம்பமேல ரொம்ப கர வச்சிண்டிருக்கா. அதனால நான் உங்களை விட்டுட்டு போக மாட்டேன். கொஞ்சம் தயவு பண்ணுங்கோ .. கொஞ்சம் பொறுமையாக இருங்கோ .. ராமரை எதிர்க்கறவன் இதுக்கு முன்னாடியும் பிறக்கலை.. இனிமேலும் பிறக்கப்போறதில்லை. அதனால ராமர் என்னை காப்பாத்துன்னு சொல்ல மாட்டார். என்னை காப்பாத்துன்னு சொல்றவாகிட்ட ராமர் அபயம் குடுப்பார். கொஞ்சம் பொறுமையா இருங்கோன்னவுடனே.. சீதை இல்லை.. நீ என்ன இப்படி கொடுமைக்காரனாக இருக்கியே நீ என்ன எண்ணத்துல என் பின்னாடி வந்தியோ.. பரதன் உன்னை அமிச்சானான்னு தெரியலையே அப்டின்னு பல விதமா அவதூறு பேசறா. நீ காமாத்மா.. உனக்கு அண்ணா ஆபத்தில இருக்கும் போது கூட உனக்கு காப்பாத்தணும்னு தோண மாட்டேங்கறது. அப்படியெல்லாம் சொன்னவுடனே லக்ஷ்மணனுக்கு தாங்கலை.. அம்மா !! நான் உங்களை எதிர்த்து எதுவும் பேசமாட்டேன். இவ்வளவு தூரம் சொல்றதால நான் போறேன். திரும்பவந்து உங்களையும் ராமனையும் சேந்து பார்ப்பேனான்னு சொல்லிட்டு போய்டறான். அவன் அந்தண்ட போனவுடனே இந்தண்ட ராவணன் ஒரு சன்னியாசி வேஷம் போட்டுண்டு வரான். வந்து பவதி பிக்ஷாம்தேஹின்னு கேட்கறான். சீதை எதோ பிராமண சன்னியாசி வந்திருக்கார். நாம உபசாரம் பண்ணலைனா சாபம் குடுத்துடுவார்னு சீதை உள்ள கூப்பிட்டு உட்கார வைத்து பழங்கள்ளாம் குடுக்கறா. என்னுடைய கணவர் வெளில போய்ருக்கார். அவர் வந்ததும் எதாவது மாம்சம் எதாவது கொண்டுவருவார். வந்ததும் அதையும் கொடுக்கறேன்னு பேசறா. அவ பேசறதை பார்த்தவுடனே ராவணனுக்கு சீதை ரொம்ப அழகி அவள் உன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என ஏற்கனவே சூர்ப்பணகை சொன்னது நினைவுக்கு வந்து தான் ராக்ஷச அரசன் ராவணன், உலகமே எனக்கு பயப்படும். என சொல்லி தன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லறான். சீதை கடுமையாக கோச்சுண்டு பேசறா. அவன் சீதையை தூக்கிண்டுடறான்.
जहार भार्यां रामस्य गृध्रं हत्वा जटायुषम् |
ஜஹார பா⁴ர்யாம்ʼ ராமஸ்ய க்³ருʼத்⁴ரம்ʼ ஹத்வா ஜடாயுஷம் |
ஜடாயு அப்டின்னு தசரதருடைய வயசு அவருக்கு. கழுகுகளுக்கு ராஜா. சம்பாதிக்கு தம்பி. அந்த தண்டக வனத்துக்குள்ள ராமர் லக்ஷ்மணர் சீதையோடு வரும்போதே, நான் உங்கப்பாவுடைய தோழன். உங்களுக்கு வாசஸஹாயமா இருக்கேன். இங்க உங்களுக்கு பக்கத்துல வசிச்சிண்டு நீயும் லக்ஷ்மணனும் இல்லாதபோதும் சீதையை பத்திரமா பாத்துக்கறேன் அப்படின்னு ஒரு வார்த்தை கொடுத்திருந்தார். இப்ப அந்த வார்த்தைக்காக ராவணனை எதிர்க்கறார். ராவணன் கையில கத்தி வச்சிண்டிருக்கான் அவன் ரொம்ப யுவா. இவரோ வ்ருத்தர். இருந்தாலும் என் கண் பார்க்க நீ சீதையை தூக்கிண்டு போக விட மாட்டேன் அப்டின்னு கடுமையாக யுத்தம் பண்றார். தன்னுடைய அலகால் அவனோட பத்து கைகளை கிள்ளி போடறார். ஆனா திரும்பி முளைச்சுடறது. வால்மீகி சொல்றார். புத்துலேர்ந்து பாம்பு முளைச்சது மாதிரி திரும்பி முளைச்சுடறது அப்டின்னு சொல்றார். அவன் அம்பாலயே இவரை சுத்தி ஒரு கூண்டு மாதிரி பண்றான். அதெல்லாம் பிளந்துண்டு வரார். அவனோட சாரதியையும், தேரையும் எல்லாத்தையும் உடைச்சு கடுமையா யுத்தம் பண்றார். ஆனா கடைசியில அவர் தளர்ந்து போன போது இவரோட இரக்கைகளை வெட்டி போட்டுட்டு சீதையை தூக்கிண்டு போய்டறான். ராமர் தேடிண்டு வரார். லக்ஷ்மணனை பார்த்ததும் கோச்சிக்கறார். உன்னை நம்பி தானே விட்டுட்டு போனேன். நீ ஏன் எங்கிட்ட வந்த அப்டின்னு கோச்சுக்கறார். சீதைக்கு என்ன ஆபத்தோ வா போய் பார்க்கலாம்னு அங்க போய் பார்த்த போது சீதையை காணும். புலம்பி அழறார். நான் என்ன பண்ணுவேன்னு கோதாவரில போய் தேடறார். பல இடத்துல தேடி எங்கும் கிடைக்காத நிலையில சீதா சீதா னு மானே கண்டியா, மயிலே கண்டியா, வாழை மரமே கண்டியா, சந்தனமரமே பார்த்தியா அப்டின்னு புலம்பிண்டே வரார் அப்படி வரும்போது ..
गृध्रं च निहतं दृष्ट्वा हृतां श्रुत्वा च मैथिलीम् ||
राघवः शोकसन्तप्त: विललापाकुलेन्द्रियः |
க்³ருʼத்⁴ரம்ʼ ச நிஹதம்ʼ த்³ருʼஷ்ட்வா ஹ்ருʼதாம்ʼ ஶ்ருத்வா ச மைதி²லீம் ||
ராக⁴வ꞉ ஶோகஸந்தப்த: விலலாபாகுலேந்த்³ரிய꞉ |
இந்த்ரியங்கள் தன் வசம் இல்லாமல் “விலலாப” – புலம்பி அழறார்.. “ராக⁴வ꞉ ஶோகஸந்தப்த:” – சோகத்துனால ராமர் புலம்பி அழறார். சீதையை காணமே அப்டின்னு அந்த ராமர் அழும்போது அங்க ப்ரஸ்ரவண மலைன்னு ஒண்ணு இருக்கு. அந்த மலைகிட்ட கேட்கறார். கோதவரி நதி கிட்ட கேட்கறார். அதெல்லாம் கூட ராவணங்கிட்ட பயந்துண்டு பதில் சொல்லாம இருக்கறது. அதை பார்த்து இவருக்கு ரொம்ப கோபம் வரது. இவர் அந்த மலையை பார்த்து சீதை எங்கேன்னு கேட்டதும் அதுவும் சீதை எங்கேன்னு எதிரொலிக்கறது. அதை பார்த்து கோபம் இன்னும் ஜாஸ்தியாகி உன்னை பொடியாக்கறேன் பாரு அப்டிங்கறார். ராமர் லக்ஷ்மணங்கிட்ட சொல்றார். நான் உலகத்தையே எரிக்க போறேன் பார் என் அஸ்த்ரத்தால அப்டின்னு கோபம் ஜாஸ்த்தியாகி சொன்னவுடன் லக்ஷ்மணன் ராமரோட இரண்டு பாதங்களையும் பற்றி, அண்ணா ஒருத்தன் பண்ணின தப்புக்காக உலகத்தை அழிக்க வேண்டாம். எல்லார்க்கும் கஷ்டங்கறது எவ்வளவு பெரியவாளுக்கும் வரத்தான் வரும். சூரிய சந்திராளுக்கே க்ரஹணம் புடிக்கறது. பூமிக்கு பூஹம்பம் வர்ரது. வசிஷ்டருக்கு புத்திர சோகம் வந்தது. பெரியவாளா இருக்கறவா துக்கத்தை பொருத்துக்கணும். சூறாவளி காற்றுல மரங்கள் விழலாம். மலை அசையுமா. அதனால நீங்க பொறுமையா இருங்கோ. நீங்க சர்வலோக சரண்யனா இருக்கேள். ராமன் கிட்ட போயி நம்ப சரணடையலாம்னு எல்லா உயிரினங்களும் நினைக்கும்போது தப்பு பண்ணாதவாளை நம்ப தண்டிக்கலாமா… எவ்வளவோ புண்ணியம் பண்ணி தசரதர் உங்களை பிள்ளையாய் பெற்றார். அதனால சீதையை எப்படியாவது தேடி கண்டுபுடிச்சிடலாம். தெய்வங்கள் நமக்கு சஹாயம்பண்ணும். பொறுமையா இருங்கோ அப்டின்னு காலை புடிச்சிண்டு லக்ஷ்மணன் வேண்டறான்.
पूर्वजो अपि उक्त मात्रः तु लक्ष्मणेन सुभाषितम् |
सार ग्राही महासारम् प्रतिजग्राह राघवः ||
பூர்வஜோ அபி உக்த மாத்ர꞉ து லக்ஷ்மணேன ஸுபா⁴ஷிதம் |
ஸார க்³ராஹீ மஹாஸாரம் ப்ரதிஜக்³ராஹ ராக⁴வ꞉ ||
அண்ணாவாக இருந்தாலும் தம்பி சொன்ன அந்த வார்த்தைகள் ரொம்ப சாரமான அந்த வார்த்தைகள். ராமரும் சாரத்தை க்ரஹிப்பவர். சரி லக்ஷ்மணா என்ன பண்ணலாம்னு சொல்லு அப்டின்னவுடனே..இந்த தெற்கு திக்குல போகலாம் .. ஒரு மான் கிட்ட லக்ஷ்மணன் கேட்கறான் சீதை எங்கேன்னு. அது வானத்தை காமிச்சு தெற்கு திக்குல ஓடறது. உடனே தெற்கு திக்குல ஆகாச மார்க்கமா சீதையை யாரோ தேடிண்டு போயிருக்கா போல இருக்குன்னு அந்த பக்கத்துல வரும் போது அங்க ஜடாயு விழுந்து கிடக்கறது. உடனே ஜடாயுகிட்ட கேட்டவுடனே என் உயிரையும் சீதையையும் ராவணன்னு ஒருத்தன் அபகரிச்சிண்டு போய்ட்டான். உனக்கு திருப்பி கிடைப்பா அப்டின்னு சொல்லிட்டு ராமர் மடிலயே உயிரை விட்டுடறது ஜடாயு.
गृध्रं च निहतं दृष्ट्वा हृतां श्रुत्वा च मैथिलीम् ||
राघवः शोकसन्तप्तो विललापाकुलेन्द्रियः |
க்³ருʼத்⁴ரம்ʼ ச நிஹதம்ʼ த்³ருʼஷ்ட்வா ஹ்ருʼதாம்ʼ ஶ்ருத்வா ச மைதி²லீம் ||
ராக⁴வ꞉ ஶோகஸந்தப்தோ விலலாபாகுலேந்த்³ரிய꞉ |
சீதையை யாரோ தூக்கிண்டு போய்ட்டா அப்படின்னு சொல்லி இந்த காட்டுல ஏற்கனவே ராமர் நாட்டை இழந்து அம்மா அப்பாவை பிரிஞ்சு காட்டுக்கு வந்து சீதையை தொலைச்சு ரொம்ப கஷ்டத்துல இருக்கார். கூட இருந்து அன்பு பாராட்டின ஜடாயுவும் போனவுடனே ரொம்ப தவிக்கறார். நான் போய் கடல்ல குதிச்சா கடல் வத்தி போய்டும். நெருப்புல குதிச்சா நெருப்பு அணைந்துபோய்டு போல இருக்கு .. அவ்வளவு பாவம் பண்ணியிருக்கேன் போல இருக்குனு தாபப்படறார். ஜடாயு என் அப்பா போல எனக்காக உயிரையே குடுத்திருக்கு..
मम हेतोः अयम् प्राणान् मुमोच पतगेश्वरः ||
மம ஹேதோ꞉ அயம் ப்ராணான் முமோச பதகே³ஶ்வர꞉ ||
இந்த மாதிரி சாதுக்கள் கூட உலகத்துல இருக்கா. நான் எங்கப்பாவுக்கு பண்ணினா மாதிரி ஜடாயுவுக்கு சம்ஸ்காரம் பண்ணப்போறேன் அப்டிங்கறார். மந்திரங்கள் எல்லாம் சொல்லி ரிஷிகள் ஜபித்த மாதிரி ஜபம் பண்ணி, சிதைல வச்சு, குண்டம் எல்லாம் வைத்து ஜடாயு, ஏகபத்தினி விரதம், பூமி தானம் எல்லாம் பண்ணினவா எந்த உலகத்துக்கு போவாளோ அதுக்கெல்லாம் மெலான உலகத்துக்கு உன்னை நான் அனுப்பி வைக்கறேன்.. போய்ட்டுவா அப்டின்னு அனுப்பறார். இந்த இடத்துல சொல்வா.. வைகுண்டத்துக்கு ஜடாயுவை ஏத்தினார் அப்டின்னு. ஏன்னா வைகுண்டம் ராமரோட இருப்பிடம். அதோட சாவி அவர்கிட்ட தான் இருக்கு. அதனால நீ மேல போ எல்லாத்துக்கும் மேலான இடத்துக்கு போன்னு சொல்லி ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுத்தார். அதுக்கப்பறம் புலம்பிண்டே வரார் ராமர்.
ततस्तेनैव शोकेन गृध्रं दग्ध्वा जटायुषम् ||
ததஸ்தேனைவ ஶோகேன க்³ருʼத்⁴ரம்ʼ த³க்³த்⁴வா ஜடாயுஷம் ||
அவ்வளவு சோகம் இருக்கு. ஆனாலும் ஜடாயுவுக்கு மோக்ஷம் குடுக்கறார்.
मार्गमाणो वने सीतां राक्षसं संददर्श ह |
மார்க³மாணோ வனே ஸீதாம்ʼ ராக்ஷஸம்ʼ ஸந்த³த³ர்ஶ ஹ |
தேடிண்டே வரும்போது க்ரௌன்ச ஆரண்யம்னு ஒரு வனத்துக்குள்ள வரா.. ஒரு கபந்தன். தலையில்லாத முண்டம். கோர ரூபம். இரண்டு நீள கைகள்.. ஒரு மைல் நீளம். அந்த இரண்டு கைகளால இவா ரெண்டு பேரையும் புடிச்சிடறது.
कबन्धं नाम रूपेण विकृतं घोरदर्शनम् ||
கப³ந்த⁴ம்ʼ நாம ரூபேண விக்ருʼதம்ʼ கோ⁴ரத³ர்ஶனம் ||
கோரமா இருக்கற அவன் இவாளை புடிச்சுக்கறான்.
तं निहत्य महाबाहुर्ददाह स्वर्गतश्च सः |
தம்ʼ நிஹத்ய மஹாபா³ஹுர்த³தா³ஹ ஸ்வர்க³தஶ்ச ஸ꞉ |
மிக பெரிய கைகளை கொண்ட அவன் இவாளை புடிச்சுக்கறான். ராமர் வருத்தப்படறார். நம்ப நிலமை இப்படி ஆய்டுத்து பாத்தியானு. அப்ப லக்ஷ்மணன் என்னை பலியா குடுத்துட்டு நீங்க தப்பிச்சு போங்கோன்னு.. ஏண்டா இப்படி சொல்ற மனசை தளர விடாத. நம்ப ரெண்டு பேரும் இந்த ரெண்டு கைகளையும் வெட்டிடலாம்னு ரெண்டு கையையும் வெட்டிடறா. அப்ப அந்த கபந்தன், தான் ஒரு கந்தர்வன் என்றும் சாபத்துனால இப்படி இருப்பதாகவும் அவனை எரித்தால் அவன் சாப மோக்ஷம் அடைந்து உங்களுக்கும் ஒரு வழி காமிப்பேன் அப்டின்னு சொல்றான். அந்த கபந்தனை எரிக்கறா. அதுக்குள்ளேர்ந்து திவ்ய ரூபத்தோட தனுங்கற கந்தர்வன் வரான். அவன் ஒரு விமானத்துல நின்னுண்டு நீங்கள் ரிஷ்யமூக மலைக்கு போங்கோ. அங்க சுக்ரீவன்னு ஒரு வானரம் இருக்கான். அவன் சீதையை கண்டுபுடிக்கறதுக்கு உங்களுக்கு சகாயம் பண்ணுவான். அவனுக்கு உங்களால ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கு. அதனால சுக்ரீவனை வானரம்னு ஒதுக்காம நீங்க சக்யம் பண்ணிக்கோங்கோ. வழில பம்பாங்கற ஏரிக்கறைல சபரின்னு ஒரு புண்யவதி இருக்கா. அவளும் உங்களுக்காக காத்துண்டிருக்கா. அவளையும் போய் பாருங்கோ
स चास्य कथयामास शबरीं धर्मचारिणीम् ||
श्रमणीं धर्मनिपुणामभिगच्छेति राघव |
ஸ சாஸ்ய கத²யாமாஸ ஶப³ரீம்ʼ த⁴ர்மசாரிணீம் ||
ஶ்ரமணீம்ʼ த⁴ர்மநிபுணாமபி⁴க³ச்சே²தி ராக⁴வ |
அந்த தர்மசாரியான சபரியை பாருங்கோ.
அவா “தர்மநிபுணாம் ஶ்ரமணீம்” அப்டின்னு அவ ஒரு வேடுவஸ்த்ரீ தான். ஒரு ப்ராஹ்மணனா பிறந்து வேதம் படிச்சு, அதுல இருக்கற கர்மா எல்லாம் பண்ணி, அதுக்கப்பறம் சித்த சுத்தி வந்து பக்தி பண்ணி ஞான விசாரம் எல்லாம் பண்ணி பகவானை அடையணும்.. ஆனா அந்த வேடுவஸ்த்ரீ எப்படி ராமனை அடைஞ்சா அப்டின்னா.. அவ பெரிய ஒரு புண்ணியம் பண்றா. என்னன்னா மதங்க முனிவருக்கும் அவரோட சிஷ்யர்களுக்கும் கைங்கர்யம் பண்றா. வேடுவகுலத்துல பிறக்கறா. எங்கும் ஹிம்சை பண்ணிண்டிருக்கறதை பார்த்தவுடனே நம்ப இப்படி இருக்கப்டாதுனு தோணி அந்த கூட்டத்துல இருந்து வெளிய வந்துடறா. மதங்க முனிவரை பார்க்கறா. அவர் ஸ்னானம் பண்றதுக்கு பம்பா ஏரிக்கு போற வழியில பெருக்கி அந்த மாதிரி கைங்கர்யம் பண்ண ஆரம்பிச்சு கைங்கர்யம் பண்ணியே அவரோட காலம் பூறாவும் பண்ணினவுடனே மதங்க முனிவர் நான் இப்ப மேல் உலகம் போறேன் .. நீ இங்க காத்துண்டிரு. ராமர் லக்ஷ்மணர் ரெண்டு பேர் வருவா.. அப்டின்னு அவாளோட ரூபத்தை வர்ணிக்கறார். அவாளை தர்சனம் பண்ணிட்டு நீயும் ஸ்வர்கம் அடைவாய்னு சொல்றார். அவ நித்யம் பழங்கள் எல்லாம் எடுத்து வச்சிண்டு ராமர் வரப்போறார் ராமர் வரப்போறார் அப்டின்னு காத்துண்டிருக்கா. தூங்கினா அந்த நேரத்துல வந்துடுவாரோன்னு தூக்கத்தை விட்டுடறா. நம்ப சாப்டுண்டிருக்கும் போது ராமர் வந்துட்டு போய்ட போராரோன்னு சாப்பாட்டையும் விட்டுட்டு ராமா ராமா னு பஜிச்சுண்டு அந்த ராமருடைய ரூபத்தையே த்யானம் பண்ணிண்டிருக்கா. இப்படி இந்த குரு சிஷ்ருஷை அவர் சொன்ன வார்த்தைகள்ள நம்பிக்கை வைத்து இந்த ராம நாம ஜபம் எல்லாம் பண்ணினதால ஒரு வேடுவஸ்த்ரீ உயர்ந்த இந்த தர்மத்தை அறிந்து ஸ்ரமங்களை எல்லாம் விடுத்து பசி பட்டினி மறந்து இதையே பண்ணினதால ஒரு சித்த புருஷர் போல ஆகிவிட்டாள்
श्रमणीं धर्मनिपुणामभिगच्छेति राघव |
सोऽभ्यगच्छन्महातेजाः शबरीं शत्रुसूदनः ||
ஶ்ரமணீம்ʼ த⁴ர்மநிபுணாமபி⁴க³ச்சே²தி ராக⁴வ |
ஸோ(அ)ப்⁴யக³ச்ச²ன்மஹாதேஜா꞉ ஶப³ரீம்ʼ ஶத்ருஸூத³ன꞉ ||
அந்த சபரியை ராமர் வந்து பார்க்கறார். அந்த சபரிகிட்ட உன்னோட தபஸ் பூர்த்தியாச்சா. உன்னோட காமக்ரோதங்கள் எல்லாம் போய்டுத்தா. குருமார்களுக்கு நீ பண்ணின கைங்கர்யத்துக்கெல்லாம் பலன் கிடைச்சதான்னு ராமர் கேட்கறார். சபரி சொல்றா. உன்னோட தரிசனத்துனால நான் தூய்மை அடைந்தேன் உன்னுடைய கடாக்ஷத்துனால இன்னிக்கு நான் பாக்யவதி ஆனேன் அப்டின்னு சொல்றா.
शबर्या पूजितः सम्यग्रामो दशरथात्मजः |
ஶப³ர்யா பூஜித꞉ ஸம்யக்³ராமோ த³ஶரதா²த்மஜ꞉ |
சபரியினால் மிக நன்றாக பூஜை செய்யப்பட்ட “த³ஶரதா²த்மஜ꞉ ராம:” அதென்ன ரொம்ப நன்னா பூஜைன்ன அடியார்க்கு பண்ற பூஜை தான் பகவானுக்கு பண்ற பூஜைலயே மேல அதனால மதங்க முனிவருக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் இந்த சபரி பண்ணின பூஜையினால ராமர் ரொம்ப த்ருப்தியாகி, இந்த ஆரண்ய காண்டத்தின் ஆரம்பத்துல ஷரபங்கர் சொல்றார். நான் என் உடம்பை விட்டுட்டு மேல் உலகம் போறேன். நீ காத்துண்டிருன்னு சொல்றார். அந்த மாதிரி இந்த சபரியும் நீ உத்தரவு குடுத்தா நான் மேல் உலகத்துக்கு போறேன் அப்டின்னு சொல்லி நெருப்பு மூட்டி அதுல இந்த தேகத்தை குடுத்து ஒரு திவ்ய தேகம் எடுத்துண்டு அவளுடைய குருமார்கள் எங்க இருக்காளோ அதே மேல் உலகத்துக்கு வைகுண்டத்துக்கு சபரியும் போனாள். அப்டின்னு முடியும். அதுக்கு அடுத்தது பம்பா ஏரியினுடைய
पम्पातीरे हनुमता सङ्गतो वानरेण ह ||
பம்பாதீரே ஹனுமதா ஸங்க³தோ வானரேண ஹ ||
அந்த மாதிரி ஹனுமாரோடு ராமர் சந்தித்தார் அப்டின்னு வால்மீகிக்கு ஒரு சந்தோஷம். “வானரேண ஹ” ஆஹா அப்டின்னு சொல்றார். அந்த பம்பா தீரத்துல வசந்த ருது வர்ரது ராமர் சீதையை நினைச்சு புலம்பிண்டிருக்கார். லக்ஷ்மணன் சமாதான படுத்திண்டே வரான். இவா ரெண்டு பேரும் வர்ரத்தை ரிஷ்யமுக மலைலயிருந்து சுக்ரீவன் தன் கூட இருக்கற நாலு மந்திரிகள் நலன் நீலன் தாரன் ஹனுமான் அவாளோட பார்க்கறான். பார்த்தவுடனே பயந்து ஓடறான். ஏன் இப்படி பயந்து ஓடற. அதோ பாரு அங்க ரெண்டு பேரு வராளே அவாளை பார்த்தா பெரிய மஹா புருஷர்கள் மாதிரி க்ஷத்ரியர்கள் மாதிரி இல்லையா அப்டின்னு சொல்றான். நீ வாலியை பார்த்து தானே பயப்படணும் யாரை பார்த்தாலும் பயப்படுவியானு கேட்கறான். வாலி அமிச்ச ஆளா இருந்தா என்ன பண்ணறதுன்னு சொல்றான். நீ வேணா போய் பேசு. நீ தைரியமா இருக்க. நீ வேணா பிக்ஷு ரூபம் போட்டுண்டு அவாகிட்ட போய் பேசு அப்டின்னு சொல்றான். ஹனுமார் ஒரு பிக்ஷு ரூபம் போட்டுண்டு ராம லக்ஷ்மணாள்ட வந்து நமஸ்காரம் பண்ணி பேச்சு குடுக்கறார். நீங்க ரெண்டு பேரும் யாரு. உங்களை பார்த்தாலே சந்த்ர சூர்யாள் மாதிரி இருக்கே..
सर्व भूषण भूषार्हाः किम् अर्थम् न विभूषिताः |
ஸர்வ பூ⁴ஷண பூ⁴ஷார்ஹா꞉ கிம் அர்த²ம் ந விபூ⁴ஷிதா꞉ |
உங்களுடைய தோள்கள் எல்லா அணிகலன்களையும் ஆபரணங்களையும் போட்டு அழகு பார்க்க வேண்டிய தோள்கள்..
उभौ योग्यौ अहम् मन्ये रक्षितुम् पृथिवीम् इमाम् ||
உபௌ⁴ யோக்³யௌ அஹம் மன்யே ரக்ஷிதும் ப்ருʼதி²வீம் இமாம் ||
இந்த உலகத்தையே காப்பத்தக்கூடிய சக்ரவர்த்திகள் போல இருக்கேள். அந்த நீண்ட கைகள், வில்லு இதெல்லாம் பார்த்தால் சக்ரவர்த்திகுமாரர்கள்னு தெரியறது. ஆனா ரிஷிகளை போல வேஷம் போட்டுண்டிருக்கேள். எதையோ அங்க இங்க தேடிண்டே வரேள். நீங்க யாரு. நான் சுக்ரீவனுடைய மந்திரி ஹனுமான்னு பேரு. அவன் விருப்பத்தின் பேரில் பிக்ஷு ரூபத்துல வந்திருக்கேன். சுக்ரீவன் உங்களுடைய சக்யத்தை விரும்புகிறான் அப்டின்னு சொல்லி முடிச்சிடறார். ராமருக்கு ரொம்ப சந்தோஷம். ஹே லக்ஷ்மணா எந்த சுக்ரீவனை நாம் பார்க்க விரும்பினோமோ அந்த சுக்ரீவன் கிட்டேர்ந்தே இவர் வந்திருக்கார் அப்டிங்கறார்.
संस्कार क्रम संपन्नाम् अद्भुताम् अविलम्बिताम् |
उच्चारयति कल्याणीम् वाचम् हृदय हर्षिणीम् ||
ஸம்ʼஸ்கார க்ரம ஸம்பன்னாம் அத்³பு⁴தாம் அவிலம்பி³தாம் |
உச்சாரயதி கல்யாணீம் வாசம் ஹ்ருʼத³ய ஹர்ஷிணீம் ||
மனதை கொள்ளை கொள்ளும் மங்களகரமான பேசறார். நல்ல வேதங்களெல்லாம் அத்யயனம் பண்ணி ருக் யஜுஸ் சாமத்தை நன்றாக அத்யயனம் பண்ணியிருக்கார். வ்யாக்ரணத்தை பல வாட்டி கேட்டிருக்கார். இவ்வளவு நேரம் பேசினதுல ஒரு அபவார்த்தை கூட பேசலை. ஒரு mistake கூட பண்ணலை. இந்த சம்ஸ்காரத்தோட கூடிய culture ஓடகூடிய இவரோட பேச்சு. விறு விறுன்னு பேசலை. ரொம்ப மெதுவாகவும் பேசலை. ரொம்ப high pitch லயும் பேசல.. மத்யம ஸ்வரத்துல பேசறார்… இந்த மாதிரி ஒரு தூதன் கிடைச்சா அந்த ராஜாவால எந்த காரியம் தான் நடக்காது. இந்த மாதிரி ஒரு தூதன் இல்லைனா எப்படி காரியம் நடக்கும் அப்டின்னு பார்த்தவுடனே ஹனுமார்க்கு ராமதூதன் ங்கற வேலையை போட்டு குடுத்துடறார். இவன் கிட்ட நீ பேசுன்னவுடனே லக்ஷ்மணன் தன் கதையை சொல்றார். இந்த மாதிரி நாங்க காட்டுக்கு வந்தோம். சீதையை தொலைச்சிட்டு வருத்தப்படறார் ராமர். எங்களுக்கு சுக்ரீவனுடைய தயவு வேணும்னு சொல்லும்போது ஹனுமார் சொல்றார் இல்லை இல்லை உங்களை மாதிரி உயர்ந்த குலத்தில பிறந்தவர்களும், ஜிதேந்திரியர்களும், ஜிதக்ரோதர்களும், கோபத்தையும் இந்த்ரியங்களையும் ஜெயித்தவரான மஹாத்மாக்கள் சுக்ரீவனுக்கு இந்த நேரத்துல ஒரு சக்யம் friend ஆக கிடைக்கறது அவன் பண்ணின பாக்யம் அதனால நீங்க வாங்கோ உங்களை சுக்ரீவன்கிட்ட அழைச்சிண்டு போறேன்.. யாராவது தயவு பண்ணுங்கோனு ஹெல்ப் கேட்கும் போது அவாளோட பெருமையை நினைக்க மாட்டோம். Advantage எடுக்கத்தான் பார்ப்போம். அப்படி இல்லாம ஹனுமார் ராமருடைய பெருவையை சொல்லி…
हनुमद्वचनाच्चैव सुग्रीवेण समागतः |
ஹனுமத்³வசனாச்சைவ ஸுக்³ரீவேண ஸமாக³த꞉ |
சுக்ரீவன் கிட்ட அழைச்சிண்டு போறார். சுக்ரீவன் கிட்ட சொல்றார். சக்கரவர்த்தி குமாரர்கள். ராமன், லக்ஷ்மணன்னு பேரு.. எத்தனையோ ஆயிரக்கணக்கான பசுக்களை தானம் பண்ணி யாகம் எல்லாம் பண்ணினவர்கள். படித்தவர்கள். வேதம் வேதாந்தம் எல்லாம் படிச்சவர்கள். இவாளோட நீ சக்யம் பண்ணிக்கோ..அப்படின்னு சொல்றார். உடனே சுக்ரீவன் கையை நீட்டி நான் ஒரு வானரம் தான். என்னை நீ நண்பனாக ஏத்துக்கொள்வாய்னா என்னோட கையை பற்றிக்கொள்னு சொல்றான். உடனே இரண்டு பேரும் கையை பற்றிக்கறா.. உடனே ஹனுமார் ஒரு அக்னி மூட்டறார். அக்னி சாக்ஷியாக இவா இரண்டு பேரும் பேரும் வலம் வந்து நானும் நீயும் இனி நண்பர்கள் உன் கஷ்டம் என் கஷ்டம். உன் சுகம் என் சுகம் அப்டின்னு சத்யம் பண்ணிக்கறா. அக்னி சாட்சியாக Friendship பண்ணிக்கறா. அப்ப சுக்ரீவன் சீதாதேவியை ராவணன் தூக்கிண்டு போகும் போது சீதை சில நகைகளை போடறா. அதை சுக்ரீவன் எடுத்து வச்சிருக்கான். அதை கொண்டு வந்து காட்டறான். அதை காமிச்சவுடனே ராமர் புலம்பி அழறார். இதை பார்க்கறேன் என்னோட சீதையை பார்க்கலையே அப்டின்னு அழறார். உடனே சுக்ரீவன் சொல்றான் இப்படி புலம்பி தவிக்காதே.. உயிரே போய்ட போறது. நான் சீதையை ஆகாசத்தில இருந்தாலும் சரி பாதாளத்துல இருந்தாலும் சரி எப்படியாவது சீதையை உனக்காக தேடித்தறேன் அப்டின்னு சொல்ற வார்த்தை ராமருக்கு அவ்வளவு ஆறுதலாக இருக்கு.
सुग्रीवाय च तत्सर्वं शंसद्रामो महाबलः ||
आदितस्तद्यथावृत्तं सीतायाश्च विशेषतः |
ஸுக்³ரீவாய ச தத்ஸர்வம்ʼ ஶம்ʼஸத்³ராமோ மஹாப³ல꞉ ||
ஆதி³தஸ்தத்³யதா²வ்ருʼத்தம்ʼ ஸீதாயாஶ்ச விஶேஷத꞉ |
தான் காட்டுக்கு வந்தது, சீதையை தொலைச்சது அந்த விஷயங்கள் எல்லாத்தையும்
सुग्रीवश्चापि तत्सर्वं श्रुत्वा रामस्य वानरः ||
चकार सख्यं रामेण प्रीतश्चैवाग्निसाक्षिकम् |
ஸுக்³ரீவஶ்சாபி தத்ஸர்வம்ʼ ஶ்ருத்வா ராமஸ்ய வானர꞉ ||
சகார ஸக்²யம்ʼ ராமேண ப்ரீதஶ்சைவாக்³நிஸாக்ஷிகம் |
சுக்ரீவன் அதெல்லாம் கேட்டுக்கறான். தன்னுடைய கஷ்டங்களெல்லாம் சொல்றான். இரண்டு பேரு அக்னி சாக்ஷியாக சக்யம் பண்ணிக்கறா அப்டின்னு 60வது ஸ்லோகம் வரைக்கும் இன்னிக்கு பார்த்திருக்கோம். அதுக்கப்பறம் சுக்ரீவன் தன் கஷ்டத்தை சொல்றான். ராமரை பரிக்ஷை பண்றான். அப்பறம் வாலி வதம். சுக்ரீவ பட்டாபிஷேகம் அதெல்லாம் நாளைக்கு பார்ப்போம்.
ஜானகி காந்தஸ்மரணம் !! ஜய் ஜய் ராம ராமா… !!