விநாயகர் அகவல் ஒலிப்பதிவு (Audio of vinayagar agaval)
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
One reply on “ஔவையார் அருளிய விநாயகர் அகவல் ஒலிப்பதிவு; vinayagar agaval audio mp3”
மிக அருமை👌🙏🌸
மஹாபெரியவா விநாயகர் அகவலை நிறைய இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். “வெள்ளிக்கிழமைதோறும் பக்கத்திலுள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாயகர் அகவல்” சொல்லி விக்நேச்வரனுக்கு அர்ப்பணம் பண்ணவேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதில் அதிக உரிமை உண்டு.
அர்த்தம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ‘அவ்வையின் வாக்குக்கே நன்மை செய்கிற சக்தி உண்டு’ என்று நம்பி அகவலைப் பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும்; அதனால் நாமும் க்ஷேமம் அடைவோம். நாடும் க்ஷேமம் அடையும்.
ரத்தினங்கள் நிறைந்த பெட்டியை சாவி இல்லாவிட்டாலும் பாதுகாப்போம்! அவ்வையார், யோக சாஸ்திர விஷயங்கள் என்கிற ரத்தினங்களை ‘விநாயகர் அகவல்’ என்ற பெட்டியில் அநுக்ரஹித்திருக்கிறாள். அவற்றைப் புரிந்துகொள்கிற புத்தி (சாவி) இப்போது நம்மிடம் இல்லாவிட்டாலும் அதைச் சொல்லிக்கொண்டிருப்போம். சொல்லச் சொல்ல, தானே அர்த்தமும் புரிய ஆரம்பிக்கும். பிள்ளையாரே அது புரிவதற்கான அநுக்கிரஹத்தைச் செய்வார்.” என்கிறார்.
மேலும், “பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள்.
ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி, அவள் நிவேதனம் பண்ணியிருந்த ‘நாலும் கலந்த’ நைவேத்யத்தை ரொம்ப ரொம்ப நிதானமாகச் சாப்பிட்டார். ஒனக்குக் கைலாஸத்துக்குத்தானே போகணும்? போறதுக்கு முன்னாடி, என்னைப் பத்தியே ஒரு முழுப்பாட்டும் நீ பாடிக் குடுக்கணும்.’ என்றவுடன், விநாயகர் அகவலைப் பாடினாள். பாடி முடித்ததும் அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயாசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.” என்கிறார்.🙏🌸