கடாக்ஷ சதகம் 89வது ஸ்லோகம் – ஸ்யமந்தகமணி உபாக்யானம்
प्रौढीकरोति विदुषां नवसूक्तिधाटी-
चूताटवीषु बुधकोकिललाल्यमानम् ।
माध्वीरसं परिमलं च निरर्गलं ते
कामाक्षि वीक्षणविलासवसन्तलक्ष्मीः ॥
ப்ரௌடீ⁴கரோதி விது³ஷாம் நவஸூக்திதா⁴டீ-
சூதாடவீஷு பு³த⁴கோகிலலால்யமானம் ।
மாத்⁴வீரஸம் பரிமலம் ச நிரர்க³ளம் தே
காமாக்ஷி வீக்ஷணவிலாஸவஸந்தலக்ஷ்மீ: ॥ 89 ॥
இது கடாக்ஷ சதகத்துல 89வது ஸ்லோகம்.
ஹே காமாக்ஷி! ‘தே வீக்ஷண விலாஸ வஸந்த லக்ஷ்மீ:’ அப்டீன்னு சொல்றார். ‘வீக்ஷண விலாசம்’னா கடாக்ஷத்தினுடைய அழகு என்ற வசந்த கால லக்ஷ்மி. வசந்தம் வந்தவுடனே எங்கும் ஒரு சந்தோஷம், அழகு மிளிர்றது இல்லையா!
அந்த வசந்த லக்ஷ்மி வந்தவுடன், ‘விது³ஷாம் நவஸூக்தி தா⁴டீ’ – வித்வான்களுடைய புதிதான வாக்கு என்ற ‘சூதாடவீஷூ’ – ‘ஏக சூத பதேஹே’ னு சொல்ற மாதிரி ‘சூத:’னா மாமரம்னு நமக்கு தெரியும். ‘சூதாடவீ’- ‘அடவி’ – என்றால் காடு, மாந்தோப்பு. அதாவது, கவிகளுடைய வாக்கு என்ற மாந்தோப்பு அப்படிங்கறார். அம்பாளுடைய கடாக்ஷத்தை வசந்தத்தின் வரவாகவும், வித்வான்கள் வாக்கில் உண்டான புதிய கவிதைகள் என்ற மாந்தோப்பு.
அந்த மாந்தோப்பு – ‘பு³த⁴ கோகில லால்யமானம்’. புத்திமான்கள் என்ற ‘கோகிலம்’ என்றால் குயில்கள். மாந்தோப்புக்கு எப்ப நிறைய குயில்கள் வரும்னா, எப்ப பூக்களில் தேனும், பழங்கள்ல இனிமையும் நிரம்பியிருக்கும் போது தான் வரும்.
அப்படி புத்திமான்கள் என்ற ரசிகர்களான குயில்கள் விரும்பும் ‘லால்யமானம்’ – அவாள்லாம் மெச்சக்கூடிய, ‘மாத்⁴வீரசம்’ – தேனை போன்ற ‘பரிமளம்’ – நல்ல வாசனையும் கூடியதான ‘நிரர்க³ளம்’ – எந்த தங்குதடை இல்லாமல் அந்த வித்வான்களுடைய கவிதை என்ற மாந்தோப்பு, பூக்களையும் பழங்களையும் ‘ப்ரௌடி⁴கரோதி’ – நிறைய வெளிப்படுத்துகிறது அப்டீன்னு சொல்றார்.
அதாவது அம்பாளோட கடாக்ஷம் என்ற வசந்த லக்ஷ்மி வந்தவுடனே, வித்வான்களுடைய புதிய வாக்கு என்ற மாந்தோப்பில், ரசிகர்கள் என்ற குயில்கள் கொண்டாடகூடிய, வாசனையுள்ளதும் தேனுடைய பெருக்கும் கொண்ட பழங்கள் தங்கு தடையின்றி நிறைய வரது. நிறைய பூ பூக்கறது. நிறைய பழங்கள் வெளிப்படுகிறது அப்டின்னு சொல்றார்.
இந்த வாக்கே ஒரு மாந்தோப்பாகவும், அது ரொம்ப இனிமையானதாகவும், ரொம்ப வாசனையுள்ளதாகவும், தங்குதடையில்லாமல் பெருகுவதாகவும் சொல்லும்போது, வாக்குக்கு எங்க வாசனை அப்டின்னு எனக்கு அடிக்கடி தோணும்.. இந்த கவி நிறைய இடத்துல இப்படி சொல்றார். நிறைய கவிகளும் அப்படி சொல்றா.. அதுக்கப்புறம் தோணித்து.. என்னிக்கோ, எதோ யுகத்துல, வால்மிகியால பண்ணின ராமாயணத்தை, இன்னிக்கு எடுத்து படிக்கும்போது கூட அந்த காட்சிகள் எல்லாம் கண்முன்னாடி ஓடறதே! வாசனைக்கு என்ன விசேஷம்னா, அந்த வாசனை நமக்கு பழைய நியாபகம் எல்லாம் உண்டுபண்ணும். “ஓ! அந்த ஊர்ல போயிருந்தபோது, அங்க இந்த வாசனை வந்ததே!” அப்டின்னு தோணும்.. அப்ப நடந்ததெல்லாம் நியாபகம் வரும். அந்த மாதிரி இந்த வால்மிகியடைய வாக்கு, வ்யாசருடைய ஸூக்தி, இதெல்லாம் படிக்கும் போது, அந்த காட்சி நடந்த இடத்துக்கு நம்பள அந்த smells, sights, sounds அப்டினு சொல்லுவா.. அந்த மாதிரி அந்த காட்சிகள், அந்த சத்தங்கள், அங்க இருக்ககூடிய சாப்பாட்டை பத்தி வர்ணிச்சா, அதோட வாசனைகள் எல்லாமே நமக்கு வரும் அளவிற்கு ரொம்ப சக்தி வாய்ந்ததாக சிலகவிகளோட வாக்கு இருக்கு.
அதையே திருப்ப திருப்ப படிச்சா கூட, இப்ப மஹா பெரியவா ஸ்யமந்தகமணி உபாக்யானம்னு, தெய்வத்தின் குரல்ல நாலாவது பகுதில இருக்கு. பெரியவா சொல்லும் போது அது ஒரு ஆனந்தமா இருக்கு. அதே மாதிரி ஸ்வாமிகள் பாகவதத்துல அதே ஸ்யமந்தகமணி உபாக்யானம் சொல்லும் போது அதுவும் ஒரு ஆனந்தமா இருக்கு. இப்படி ஒவ்வொருவர் சொல்லும் போது ஒரே கதையை சொன்னா கூட, ‘நவஸூக்தி தா⁴டீ ’ னு, புதுமை ஒண்ணும் இல்ல ஆனாலும் புதுமையா இருக்கு. அவா அங்க இருக்கற ரிஷிகளின் வாக்குகளுக்கு மாறாக எதுவுமே சொல்ல மாட்டா. உத்தம பௌராணிகர்கள் யாருமே அங்க இருக்கற ரிஷிகளின் கருத்துக்கோ, அவாளுடைய வாக்குக்கோ மாறுதலா ஜனங்கள் ரசனைக்காக பேசமாட்டா. தர்மத்திலேர்ந்து சலிக்காம இருக்கறது தான் first goal ஆக இருக்கும். அதுக்காக தான் ரிஷிகள் வாக்கை எடுக்கறது. வேடிக்கை பேச்சு பேசறது இல்லையே.. அதனால அங்க இருக்கறதை தான் சொல்லுவா.. இருந்தாலும் ஒவ்வொருத்தர் சொல்லும் போது, அவாளோட குரல் இனிமையா, தபஸா அல்லது வாழ்கை அனுபவமா இப்படி எல்லாமா சேர்ந்து அவாளோட வார்த்தைல வெளிவரும் போது ஒரு புதுமையான கவிதை மாதிரி இருக்கு. கேட்கறத்துக்கு ஆனந்தமா இருக்கு. இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானம் நாலாவது பகுதியில இருக்கறதை நான் ஸ்வாமிகள்கிட்ட நிறைய வாட்டி படிச்சிருக்கேன். எனக்கு இன்னிக்கு அதை சொல்லலாம்னு ஆசையா இருக்கு. இந்த உபாக்யானம் ஸ்ரீமத் பாகவதம், ஸ்காந்தம் எல்லாத்துலயும் இருக்கு.
பெரியவா சொல்லும்போது நான் எல்லாத்தையும் அவியல் பண்ணிண்டு உங்களுக்கு சொல்றேன் அப்டின்னு சொல்றா. ஏன்னா இந்த க்ருஷ்ணர் பூஜை பண்ணின கணபதி என்பதை பெரியவா டாபிக்கா எடுத்துக்கறா. க்ருஷ்ணர் பூஜை பண்ணின கணபதிங்கறது ஸ்காந்தபுராணத்துல வர்றது. பாகவதத்துல அது வரலை. அதனால அதையும் சேத்துண்டு சொல்றா. இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை, பிள்ளையார் சதுர்த்தியன்னிக்கு படிக்கணும்னு பெரியவாளும் சொல்றா, ஸ்வாமிகளும் பாகவத ப்ரவசனத்துல அதான் சொல்றா. இதை பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு படிக்கிறது விசேஷம்னு சொல்றா.
முக்கியமா இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை படிச்சாலோ கேட்டாலோ மனசுல ஒரு தெளிவும் சந்தோஷமும் ஏற்படும். அபவாதம் போகும். அபவாதம் என்பது பண்ணாத தப்புக்கு ஏற்படற நிந்தை. Public figureஆ இருந்தா ஜனங்க மத்தில ஏற்படும். Privateஆவே யாராவது நம்பளை தப்பா நினைச்சா கூட, அந்த ஒரு person ரொம்ப importantஆ இருந்தா அது நம்ப மனசை வாட்டறது இல்லையா. அந்த மாதிரி யாரும் நம்பள தப்பா நினைக்க கூடாது அப்டிங்கறதுக்காகவும் இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை படிக்கலாம். இதுல நிரைய நீதிகள் இருக்கு. முக்கியமா பணம், பெண், பேராசை, மோகம் இருந்தா அது எவ்வளவு தூரம் மனசை கெடுக்கும்ங்றது இந்த கதைல வர்றது.
இந்த ஸ்யமந்தக மணிங்கறது சூர்ய பகவான், யாதவ குலத்துல சத்ராஜித் அப்டின்னு ஒரு ப்ரபு இருக்கான். அந்த ப்ரபுக்கு சூர்ய பகவான் கொடுத்த மணி. அந்த சத்ராஜித் சூர்யபகவானை உபாசனை பண்ணி “என்ன வேண்டும்?” னு கேட்டவுடன், “அவர் போட்டுண்டிருக்கற ஸ்யமந்தமணி வேணும்!” னு கேட்கறான். “ஆஹா!”னு குடுத்துட்டு, “இதை போட்டுண்டிருந்தா, உடம்புலயும் மனசுலயும் எப்பவுமே சுத்தியாக இருக்கணும். அப்படி இருந்தா தினம் எட்டு பாரம் தங்கம் கொடுக்கும். அந்த மணி இருக்கும் இடம் ரொம்ப சுபிக்ஷமாக இருக்கும். ஆனா அதே நேரத்தில அசுத்தி ஏற்பட்டால் விபரீதம் விளையும்!” அப்டின்னு சொல்லிட்டு அவன்கிட்ட குடுத்துட்டு போய்ட்டார்.
அந்த சத்ராஜித் அதை போட்டுண்டு, அவனே ஒரு சூரியன் மாதிரி ஜொலிச்சுண்டு உக்ரசேன மஹாராஜாவுடைய சபைக்கு வரான். வந்தவுடனே எல்லாரும் “ஆஹா!”ங்கறா அப்போ க்ருஷ்ண பகவான் சொல்றார், “இது ரொம்ப அபூர்வமான ரத்னமாக இருக்கு. நிறைய தங்கம் கொடுக்கறது. இதை நீ உக்ரசேன மஹாராஜாகிட்ட குடு. ‘ரத்னஹாரி ராஜா’ அப்டின்னு உயர்ந்த வஸ்துக்கள் எல்லாம் ராஜாகிட்ட தான் இருக்கணும். ஏன்னா ஒரு ப்ரபு கிட்ட ராஜாவை விட ஜாஸ்தியான more valuable வஸ்து இருந்தா ஜனங்களுக்கு யார் ராஜா என சந்தேகம் வந்துடும். அதனால அதை ரஜாக்கு குடு!” னு ஒரு சஜஸ்ட் பண்றார்.
இந்த சத்ராஜித்துக்கு அதுல இஷ்டம் இல்லை. அதனால சொல்றேன்னு சொல்லிட்டு போய்டறான். ஆனா அவனுக்கு ரொம்ப பதற்றமாக போய்டறது. இந்த க்ருஷ்ணர் ரொம்ப பலசாலி. “முஷ்டிகாசூர சாணூர மல்லயுத்த விஷாரதாய நம:” அப்டின்னு ஒரு நாமாவளி. “மல்லர்களையும் யுத்தத்துல வதம் பண்ணினவன்”. அவனுடைய ஆசைக்கு மாறுதலாக இதை வச்சிருந்தா என்ன பண்ணுவானோ அப்டின்னு பயம் வந்துடறது. அதனால அவன் தன்னுடைய தம்பி ப்ரசேனஜித்திடம் கொடுத்து, “நீ பத்ரமா வச்சுக்கோ”னு சொல்லி குடுத்துடறான்.
அந்த ப்ரசேனஜித் அதை போட்டுண்டு காட்டுக்கு போகும் போது ஒரு இடத்தில் அசூசி ஆய்டறது. அவனால கைகால் அலம்ப முடியல. அந்த நேரத்துல ஒரு சிங்கம் வந்து, “இந்த மணி நன்னா இருக்கே!”னு, அவனை ஒரு அறை அறைஞ்சு, கொன்னு போட்டுட்டு கவ்விண்டு போய்டறது.
இதை ஜாம்பவான் பாக்கறார். ஜாம்பவான் வாமன அவதாரத்தின் போதே, வாமன மூர்த்திக்கு மத்தளம் கொட்டிண்டு ப்ரதக்ஷிணம் பண்ணி கைங்கர்யம் பண்ணினவர். ராமவதாரத்துல கேட்கவே வேண்டாம். நிறைய கைங்கர்யம் பண்ணினார். அதே ஜாம்பவான் ராமபக்தர். அவர் சிரஞ்சீவி. அதனால இன்னமும் உயிரோட இருக்கார். அவர் இப்போ இந்த க்ருஷ்ணாவதாரத்திலயும் உபகாரம் பண்ணப்போறார். அவர் இந்த சிங்கம் ரொம்ப பளபளன்னு ரத்னத்தை எடுத்துண்டு வரதை பார்த்தவுடன் அதை ஒரு அறை விட்டார். அது செத்து விழுந்துடறது.
அவர் அந்த மணியை எடுத்துண்டு போய் அவர்க்கு வயசான காலத்துல ஒரு குழந்தை இருக்கு. அந்த குழந்தையோட தொட்டிலுக்கு மேல அதை கட்டிடறார். அந்த குஹையே ரொம்ப சூரிய தேஜஸ் ஆகிடறது. அவருக்கு ஒரு பொண்ணு இருக்கா ஜாம்பவதின்னு!
இங்க என்ன ஆச்சுனா, இந்த ப்ரேசனஜித் போனவன் காணோம்ன உடனேயே, இந்த சத்ராஜித் ஒரே ஒருத்தர் கிட்ட, “உங்கிட்ட மட்டும் சொல்றேன். என்ன ஆச்சு தெரியுமோல்லியோ”னு ஆரம்பிச்சு, “நான் இந்த மணியை வச்சிருந்தேன்.. பகவான் கொடுத்தார்னு. அதை க்ருஷ்ணன் கேட்டான். நான் இல்லைன்னுட்டேன்! என் தம்பிகிட்ட கொடுத்தேன். அவன் காட்டுக்கு போனான். அவன் போயே போய்ட்டான். அவன் ஆளையும் காணோம்! மணியையும் காணோம்! இந்த க்ருஷ்ணன் தான் அதை எடுத்திருப்பான்! அவனுக்கு தான் இந்த சின்ன வயசுல இருந்தே வெண்ணை திருடறது இப்படி நிறையஉண்டே! நீ இதை யார்கிட்டயும் சொல்லாதே!” னு சொன்னானாம். உடனே அவன் அதை போய் எல்லாரிடமும் சொன்னனாம். அதாவது “குணம் இருப்பவர்கள் கிட்ட தோஷத்தை பேசறது ஜனங்களுக்கு பால் பாயசம் சாப்டற மாதிரி!”னு ஸ்வாமிகள் சொல்வார். இப்படி எல்லாரும் பேசி பேசி, க்ருஷ்ணருக்கு அபவாதம் வந்துடறது.
க்ருஷ்ணர் பார்த்தார் “என்னடா இது? என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணும்”னு ஜனங்களை எல்லாம் திரட்டிண்டு, ஒரு படையை கூட்டிண்டு எந்த காட்டுக்கு போனான் ப்ரசேனஜித் என தெரிஞ்சிண்டு அங்க போறார். போய் பார்த்தால் அந்த ப்ரசேனஜித், அவன் குதிரை எல்லாம் அடிபட்டு கிடக்கு. அந்த மணியை காணோம். கொஞ்ச தூரம் போனா ஒரு சிங்கம் அடிபட்டு கிடக்கு. அங்கயும் மணியை காணோம். அப்டியே தேடிண்டே ஜாம்பவன் பாதச்சுவடு பாத்துண்டே அவர் குஹைக்கு போறார்.. “அந்த குஹைக்குள்ள போய் பாக்கறேன்”னு சொன்னவுடன் ஜனங்கள் எல்லாம் வெயிட் பண்றா.
இவர் உள்ள போய் ஜாம்பவான் கூட இருபத்தோரு நாள் யுத்தம் பண்றார்! அதனால வெளில காத்துண்டிருந்த ஜனங்க எல்லாம் நாலஞ்சு நாள்ல வந்துடறா. “ஜனங்களோட நன்றி உணர்ச்சி அவ்வளவு தான்!” அப்டின்னு பெரியவா சொல்றா. ஏற்கனவே கோவர்த்தன கிரியை தூக்கி மக்களை எல்லாம் மழைலேர்ந்து காப்பாத்தினது போல பல உபகாரங்கள் பண்ணின க்ருஷ்ணரையே அபவாதம் பேசின ஜனங்கள்! அவங்களும் உள்ள போனவர் காணோம்னவுடனே வந்துடறா.
அங்க உள்ள ஜாம்பவான் குஹைக்கு போனா ஜாம்பவதியை பாக்கறார். அவளுக்கு க்ருஷ்ணர் மேல ப்ரேமை வந்துடறது. அவள் இதுமாதிரி “எங்க அப்பா வயசான காலத்துல தன் செல்லப்பிள்ளைக்கு இந்த மணியை வச்சுண்டிருக்கார். இதை எடுக்க வேண்டாம்” னு கேட்டுக்கறா. க்ருஷ்ணர் “நான் அந்த மணிக்காக தான் வந்திருக்கேன்”னு சொன்னவுடன், “வேண்டாம். நீங்க போய்டுங்கோ. உங்களுக்கு எதாவது ஆபத்து வரும்னு பயமா இருக்கு” அப்டின்னு சொன்னாளாம். க்ருஷ்ணர் அவளை சமாதானப்படுத்தி “பயப்படாதே! அந்த மணியை மீட்டுண்டு தான் நான் போகணும்”னு சொல்லிட்டு, தன் சங்கை எடுத்து பூம்பூம்ன்னு ஊதறார்.
அது கேட்டு ஜாம்பவான் வந்தப்பறம் ரெண்டு பேரும் கட்டி புரண்டு யுத்தம் பண்றா. அந்த ஜாம்பவான் குத்து எல்லாம், க்ருஷ்ணருக்கு பூமாலையால பூஜை பண்ற மாதிரி இருந்ததாம். ஜாம்பவான் “ராமா ராமா” னு சொல்லி குத்தினாலும் இவருக்கு எதுவும் ஆகாததை பார்த்த ஜாம்பவான், “என்னடா இது! நாம இப்படி குத்தியும் வந்தவனுக்கு ஒண்ணுமே ஆகலியே! நமக்கு எலும்பெல்லாம் நொறுங்கறது ஒரு அடி கொடுத்தாக்கூட!” என யோசிக்கையில, க்ருஷ்ணர் அடுத்த லீலை பண்ணனுமே! அதனால தான் யாருங்கிறதை புரிய வைக்கிறார்.
கண் திறந்து பார்த்தவுடனே, கோதண்டராமராக எப்படி ராமாவதாரத்தில தர்சனம் பண்ணினாரோ அதே மாதிரி, கோதண்டராமரா மார்பில மான் தோல், இடுப்புல மரவுரியோட, ஜடாபாரத்தோட காட்சி கொடுக்கறார். அவரை பார்த்தவுடனே, “ஆஹா! உங்களை அடிச்சுட்டேனே! ராமா!” ன்னு வருந்தினபோது, “இருக்கட்டும். இந்த மணியை நான் எடுத்துண்டு போகணும். இதை காமிச்சா தான் அபவாதம் போகும்”ன்னு சொன்னவுடன், “உங்களுக்கில்லாததா!” என சொல்லி அந்த மணியையும் கொடுத்து ஜாம்பவதி என்ற கன்யா ரத்னத்தையும் கிருஷ்ணருக்கு கன்னிகாதானம் பண்ணி கொடுக்கறார்.
“இங்க ஜனங்கள் எல்லாம் க்ருஷ்ணரை காணோமேன்னு அவர் அம்மா அப்பா, யசோதை, நந்தகோபர் எல்லாரும் துர்காதேவி கிட்ட பூஜை பண்ணி வேண்டிண்டிருக்கா!” அப்படின்னு பாகவதத்துல வர்றது. இதை ஸ்வாமிகள் சொல்றார். அந்த மாதிரி வேண்டிண்டவுடனே க்ருஷ்ணர் அந்த ஸ்யமந்தக ரத்னத்தோடு, ஜாம்பவதி என்ற கன்யா ரத்னத்தோடு திரும்பி வந்துடறார். இந்த இடத்துல ஸ்வாமிகள் “ப⁴யாத் த்ராதும் தா³தும் ப²லமபி ச வாஞ்சா²ஸமதி⁴கம்” அப்டிங்கற ஸௌந்தர்யலஹரியை quote பண்ணி, நாம நினைச்சதுக்கு மேல வரங்களை தரக்கூடிய அம்பாள் கிட்ட, “க்ருஷ்ணர் திரும்ப வரணும்”னு தான் அவா வேண்டிண்டா. இங்க “க்ருஷ்ணனும் வந்தான்! ஸ்யமந்தக மணியும் திருப்பி கிடைச்சது! அதோட ஜாம்பவதிங்கர கன்னிகையும் கிடைச்சா க்ருஷ்ணருக்கு!”
சபைல நடந்ததெல்லாம் சொல்லி, அந்த ஸ்யமந்தக மணியை க்ருஷ்ணன் சத்ராஜித் கிட்ட திருப்பி கொடுத்துடறார். இந்த சத்ராஜித்க்கு வெட்கமா போய்டறது, இப்படி தப்பா அபவாதம் சொல்லிட்டோமே அப்டின்னு நினைச்சு, “இனிமே இந்த ஊர்ல இருக்கணும்னா எதாவது பெரிய இடத்து சம்பந்தம் பண்ணிக்கணும்”னு நினைச்சிண்டு, தன்னோட பெண்ணான சத்யபாமாவை, பூமாதேவியின் அவதாரமான அந்த சத்யபாமாவை, க்ருஷ்ணருக்கு கல்யாணம் பண்ணிகொடுக்கறார். க்ருஷ்ணர் சத்யபாமாதேவியை கல்யாணம் பண்ணிக்கறார். கொஞ்ச நாள் சௌக்யமா இருக்கார். அந்த ஸ்யமந்தக மணியையும் சத்ராஜித் கொடுக்கறார். ஆனா அதை க்ருஷ்ணர்,” இல்ல இல்ல! நீங்களே வச்சுக்கோங்கோ! இது பகவான் கொடுத்தது” அப்டின்னு திருப்பி கொடுத்துடறார்.
அந்த சத்யபாமா மேல அக்ரூரர், க்ருதவர்மா, சததன்வா அப்டின்னு மூணு பேரும் ஆசை பட்டு சத்ராஜித்கிட்ட கேட்டுண்டிருக்கா. அவரும் “இதோ அதோ!”னு காலம் தள்ளிண்டிருந்தார். இப்ப க்ருஷ்ணர் கிட்ட கொடுத்தவுடனே, இவா எல்லாருக்கும் பொறாமை. “ இந்த ஸ்யமந்தக மணி மேல இந்த மூணு பேரும் ஆசை பட்டுண்டு சததன்வாங்கற போக்கிரியை அவருக்கு எதிரா கிளப்பிவிடறா” அப்டின்னு சொல்றார்.
க்ருஷ்ணர் ஹஸ்தினாபுரம் போயிருக்கார். அரக்கு மாளிகையில் பாண்டவர் எல்லாம் எரிஞ்சு போய்ட்டானு கேள்விபட்டு துக்கம் விசாரிக்கறதுக்காக த்ருதராஷ்ட்ரரையும், பீஷ்ம த்ரோணாதிகளை பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு போயிருக்கார். அவர்க்கு தெரியும் தான் காப்பாத்திட்டோம் பாண்டவர்களை எல்லாம் என்று. இருந்தாலும் அவர் போறார்.
அந்த நேரத்தில, இந்த சததன்வா சத்ராஜித்தை வதம் பண்ணி, இந்த மணியை எடுத்துண்டு ஓடறான். சத்யபாமா ஹஸ்தினாபுரத்துக்கு வந்து, தன் அப்பா சமாச்சாரத்தை சொல்லி அழுதவுடன், க்ருஷ்ணர் ரொம்ப கோபத்தோடு தேரில ஏறி சததன்வாவை துறத்தறார். அவனுடைய குதிரை ரொம்ப களைச்சு போய் விழுந்து இறந்துடறது. கீழ இறங்கி அவன் ஓடறான். அப்ப க்ருஷ்ணர் தானும் கீழ இறங்கி அவன் பின்னாடி ஓடறார். சததன்வாவை வதம் பண்றார்.
இதற்கு நடுல இந்த சததன்வா என்ன பண்றான்னா அந்த மணியை அக்ரூரர் வீட்டுல போட்டுட்டு அவன் ஓடறான். அதனால அந்த சததன்வாவை வதம் பண்ணி பார்க்கும் போது அந்த மணி இல்லை. இதை எல்லாம் பலராமர் பார்த்துண்டிருக்கார். அவர்க்கே க்ருஷ்ணர் மேல சந்தேகம் வர்றது. “நீ திருடன்டா! நீ எதோ திரஸ்க்ருணி பண்ணி மறைச்சுடற! இந்த மணியை நீ தான் எங்கயோ வச்சிருக்க”னு சொல்லிட்டு, மிதிலாபுரிக்கு விதேக தேசத்துக்கு போய்டறார் கோச்சிண்டு.
திரும்பி வந்தா ஜனங்கள் எல்லாம் திரும்பவும் க்ருஷ்ணர் மேல சந்தேக பேச்சு பேசறா. க்ருஷ்ணருக்கு வருத்தமா இருக்கு. “என்னடா இது! நாம என்ன பண்ணினோம்? இப்படி செய்யாத குற்றத்துக்கு நம்ப மேல அபவாதம் வந்துண்டே இருக்கே!”னு யோசிச்ச போது நாரதபகவான் வந்து சொல்றாராம். “ஒரு வாட்டி நீ நாலாம் பிறை சந்திரனை பார்த்தாய். சந்திரலோகத்துக்கு கணபதி போயிருந்தார். அப்போ எல்லார்க்கும் கணபதியை பார்த்தா ரொம்ப ஆனந்தம். ஆனா இந்த சந்திரனுக்கு சிரிப்பா வந்ததாம். “இவ்ளொ குள்ள குள்ள கால். பெரிய தொப்பை வயறு. யானை மூஞ்சி!” அப்டீன்னு சிரிக்கறான் பிள்ளையாரை பார்த்து . எல்லாருக்கும் பிள்ளையாரொட ரூபம் ஆனந்தத்தை கொடுக்கும் போது இதை பார்த்த சந்திரன் மட்டும் சிரிக்கிறான். ஏன்னா, அவனுக்கு தான் ரொம்ப அழகு அப்டின்னு ஒரு எண்ணம். எல்லாரும் “சந்திரன் போல முகம்” அப்டின்னு தானே வர்ணிக்கறா. அதனால அவனுக்கு தான் ரொம்ப அழகுங்கறதால கணபதியை பார்த்து சிரிச்சானாம். உடனே பிள்ளையாருக்கு கோபம் வந்து “இனிமே உன்னை ஒருத்தரும் ஏறெடுத்து பாக்க மாட்டா. உன்னை பார்த்தா அபவாதம் வரும்” ன்னு சபிச்சுடறார். அதனால அவன் பயந்து போய் கடலுக்குள்ள ஒளிஞ்சுக்கறான். ஓஷதிகள் எதுவும் வளரலை. எல்லாருக்கும் ரொம்ப வருத்தமா இருக்கு.அதனால எல்லாரும் வந்து பிள்ளையாரை பார்த்து வேண்டிக்கறா. சந்திரனும் வந்து நமஸ்காரம் பண்ணி வேண்டிக்கறான். உடனே கணபதி சமாதானம் ஆகி, “சரி. நாலாம் பிறை சந்திரனை பார்த்தால் மட்டும் அபவாதம் வரும். அதுவும் கணபதி பூஜை பண்ணினா சரியா போய்டும். இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை யார் படிக்கறாளோ அவாளுக்கும் அபவாதம் போய்டும்” அப்டின்னு ஆசீர்வாதம் பண்ணி, இந்த மூணாம் பிறை சந்திரனை தூக்கி தலை மேல வச்சிண்டார். கணபதியுடைய கருணைக்கு அடையாளம் அது. இதை எல்லாம் நாரதபகவான் க்ருஷ்ணர்கிட்ட சொல்லி, “நீங்க இது மாதிரி நான்காம் பிறை பார்த்ததால, நாய் படாத பாடு! உங்களுக்கு அபவாதம் வந்திருக்கு”னு சொல்லி “இது மாதிரி கணபதி பூஜை பண்ணுங்கோ” னு சொல்ல, க்ருஷ்ணரும் கணபதி பூஜை பண்ணினார். அதுக்கப்பறம் அவருக்கு மனசு தெளிவாயிடுத்து.
இந்த அக்ரூரர் என்ன பண்ணினார்னா, அவர் அவ்வளவு பெரிய பக்தர் இந்த வைரத்தை க்ருஷ்ணர் கிட்ட கொடுக்க வேண்டாமோ வைரம்ங்கறது மனசுல வைர்யத்தை ஏற்படுத்திடறது. அதனால இந்த ஸ்யமந்தகமணி அவருக்கு கெட்ட புத்தியை கொடுத்துடறது. அதை எடுத்துண்டு காசிக்கு ஓடி போய்டறார். காசி க்ஷேத்ரத்தில இருக்கும் போது, அவருக்கு நல்ல புத்தி வரது. நிறைய கோவில்கள் எல்லாம் கட்டறார். நிறைய திருப்பணி எல்லாம் பண்றார். அந்த மணி கொடுக்கற தங்கத்திலேர்ந்து நிறைய நல்ல காரியங்கள் எல்லாம் பண்றார். சுபிக்ஷமா இருக்கு காசி.
இதை கேள்விபட்டதும் க்ருஷ்ணருக்கு புரிஞ்சுடறது. க்ருஷ்ணர் காசிக்கு போய் அவரை பார்த்து, “உங்ககிட்ட தான் அந்த மணி இருக்கு என்பது எனக்கு தெரியும். எங்க அண்ணாவே என்னை சந்தேகப்படறார். அதனால நீங்க திரும்ப த்வாரகைக்கு வாங்கோ. அங்க ரொம்ப துர்பிக்ஷம் வந்துடுத்து. அதனால நீங்க அங்க வாங்கோ. என் மேல இருக்கற அபவாதத்தை சரிபண்ணினா போதும் . நீங்களே அந்த மணியை வச்சுக்கோங்கோ!”னு சொன்னதும், அவரும் நமஸ்காரம் பண்ணி மன்னிப்பு கேட்டுண்டு த்வாரகைக்கு வரார். அங்கும் திரும்பவும் சுபிக்ஷம் ஏற்பட்டது. க்ருஷ்ணர் மேல இருந்த அபவாதம் போய்டுத்து அப்டின்னு ஸ்யமந்தக மணி உபாக்யானம்.
“சித்தி விநாயகம் அனிஷம்”ங்கற பாட்டில, “ரௌஹினேயா நுஜார்சிதம்” அப்டின்னு வரும். அதுல, “ரோஹினியினுடைய பிள்ளையான பலராமனுடைய தம்பியான க்ருஷ்ணனால் பூஜிக்கப்பட்டவரே” அப்டின்னு கணபதி மேல பாடறார் முத்துஸ்வாமி தீக்ஷிதர். வேற எப்படியாவது பாடியிருக்கலாமேனா இந்த ரோஹிணிங்கற வார்த்தையை கேட்டவுடனே, “ரோஹிணியினுடைய கணவனான சந்திரன். அவனுக்கு ஏற்பட்ட சாபம். அதோட நிவர்த்தி. அந்த சந்திரனை பார்த்ததால க்ருஷ்ணருக்கு ஏற்பட்ட அபவாதம். கணபதி பூஜை பண்ணினதால அதோட நிவர்த்தி!” இது எல்லாமே நியாபகம் வரும்ங்கறதுக்காக “ரௌஹினேயா நுஜார்சிதம்”ன்னு பாடிருக்கார்னு பெரியவா சொல்றார்.
இந்த ஜாம்பவான் குஹையில போன போது, அந்த ஜாம்பவதி அந்த குழந்தைக்கிட்ட ஒரு ஸ்லோகம் சொல்றா.
सिंह: प्रसेनमवधीत् सिंहो जाम्बवता हत:। सुकुमारक मा रोदी: तव एषस्स्यमन्तक:।।
ஸிம்ஹ: ப்ரஸேனமவதீ4த் ஸிம்ஹோ ஜாம்ப3வதா ஹத: | ஸுகுமாரக மாரோதி3: தவ ஏஷஸ்ஸ்யமந்தக: ||
அப்டின்னு ஒரு ஸ்லோகம்.
ஸ்யமந்தக மணி உபாக்யானத்தை முழுக்க படிக்க முடியலைனா இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொன்னாலே அபவாதம் போகும் அப்டின்னு ஸ்வாமிகள் சொல்லியிருக்கார். இதை வந்து பெரியவா சன்னிதியில சொன்ன போது, பெரியவா “இதை நீ சொல்லு எல்லாரும் திருப்பி சொல்லட்டும். எல்லாரையும் மூணு வாட்டி சொல்ல வை!” அப்டின்னு மூன்று வாட்டி சொல்ல சொல்லியிருக்கா. இரண்டு வாட்டி இரண்டு occasionல சப்தாகம் சொன்ன போது, இந்த கட்டம் வந்த போது, இது மாதிரி மூன்று முறை சொல்ல வச்சிருக்கா பெரியவா ஸ்வாமிகளை கொண்டு! நம்பளும் இதை மூன்று முறை சொல்லி ஸ்யமந்தகமணி உபாக்யானத்தைப் பூர்த்தி பண்ணிப்போம்.
ஸிம்ஹ: ப்ரஸேனமவதீ4த் ஸிம்ஹோ ஜாம்ப3வதா ஹத: |
ஸுகுமாரக மாரோதி3: தவ ஏஷஸ்ஸ்யமந்தக: ||
ஸிம்ஹ: ப்ரஸேனமவதீ4த் ஸிம்ஹோ ஜாம்ப3வதா ஹத: |
ஸுகுமாரக மாரோதி3: தவ ஏஷஸ்ஸ்யமந்தக: ||
ஸிம்ஹ: ப்ரஸேனமவதீ4த் ஸிம்ஹோ ஜாம்ப3வதா ஹத: |
ஸுகுமாரக மாரோதி3: தவ ஏஷஸ்ஸ்யமந்தக: ||
கதைகள் எதோ ஒரு யுகத்துல நடந்திருந்தா கூட, இன்னிக்கு படிக்கும் போது நமக்கு ஒரு சந்தோஷத்தையும், அது மூலமா பாடத்தையும், அது மூலமா மஹா பெரியவா, ஸ்வாமிகள் அவா அந்த கதை சொல்ற ஷைலி இதெல்லாம் நியாபகப்படுத்தறது.
எப்படி “மாத்⁴வீரஸம் பரிமலம் ச நிரர்க³ளம் தே” அப்டின்னு மாந்தோட்டம் பூத்து குலும்கும் போது, அந்த இனிமையான வாசனையும், இனிமையான தேனுடைய சுவையும், குயில் கூட்டங்களை சந்தோஷ படுத்தறாதோ, அது மாதிரி நம்மையெல்லாம் இந்த ஸ்வாமிகள், மஹாபெரியவா எல்லாரும் சொன்ன இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானம் சந்தோஷப்படுத்தித்து. அதை உங்களோட பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன்..
நம: பார்வதி பதயே… ஹர ஹர மஹாதேவா…
16 replies on “ஸ்யமந்தகமணி உபாக்யானம்”
Thank you very much. Heard this Upakyanam. Well explained. Haraye Namaha.
Thank you. Could you please provide , the sanskrit text of “Simha: Prasena mavadheeth..”
सिंह: प्रसेनमवधीत्, सिंहो जाम्बवता हत:। सुकुमारक! मा रोदी:, तव एष स्यमन्तक:।।
Thank you so much !!!!
Anna,
Wonderful and detailed explanation about Syamnanthakamani. Kannukku munnadi katchigal viriyardhu nu solluvale, i experienced this in your upanyasam.
Is there any separate dasakam for syamathakamani upakyanam in Narayaneeyam?
Also please mention the skandham and chapter in Bhagavatham too.
Thank you.
Bhagavatham 10th Skandam – 56, 57
Narayaneeyam 80th dasakam
Thank you Anna🙏
குரு மூர்தே த்வாம் நமாமி காமாக்ஷி
கோவிந்தா தாமோதர சுவாமிகள் திருவடிகளுக்கு நமஸ்காரம் 🙏🙏
இதை கேட்டவுடன் மனத்திற்கு தெளிவு கிடைத்தது .. கணபதி சார் பதிவுகள் எல்லாமே கிளி பிள்ளைக்கு சொல்ற அட்வைஸ் மாதிரி இருக்கும். அவ்ளோ பொறுமையோ தெளிவா மெசேஜ் டெலிவெர் பண்ணுவாங்க. எப்பவுமே 4 பிறை பாத்தா மனசுல என்ன கஷ்ட பட போறம்னு தெரியாலயனே யோசிப்போம்..ஆனா மஹான்கள் ஒரு கதை வடிவுல நமக்கு அதை எடுத்து சொல்லி இதற்கு எல்லாத்துக்கும் தீர்வு இருக்குனு ஒரு ஹோப் குடுக்கறாங்க. அன்பர்கள் எல்லாரும் இதை ஆடியோவா கேட்டு பயன்பெறனும் வேண்டிக்குறேன். அதுமட்டும் இல்லாம நமக்கு எந்த ஒரு காரியம் புதுசா செய்யணுன்னு தோணினாலும் இதை படிச்சா மனசுல இருக்க அழுக்கு எல்லாம் சுத்தமாகி ஒரு good fortune நடக்கும் அப்டினு ஒரு தெளிவு கிடைச்சுது.
அதி அத்புதமான விளக்கம். கேட்க ரம்யமாக உள்ளது. நன்றிகள் பல.🙏🏻
As I am getting the audio for ஸ்யமந்தகமணி உபாக்யானம்” please provide the mp3 format
It is in mp3 format. You can right click and download if that’s what you want.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
நாலாம் பிறை பார்ப்பதனால் வரும் தோஷநிவ்ருத்தி இந்த ஸ்யமந்தகமணி உபாக்யானம் கேட்பதால் தீரும்.
மூன்றாம் பிறை கண்ணுக்கு அகப்படுவது வெகு கஷ்டம்.ஆனால்
நாலாம் பிறை சுலபமாக காட்சி கொடுக்கும். இதனால் ஒவ்வொரு 4ஆம் பிறையிலும் இந்த ஒலி வடிவத்தில் உங்கள் ஸ்யமந்தகமணி உபாக்யானம் உரையுடன், இந்த ஸ்ரீமத் பாகவத ஸ்லோகமும் சொல்லி அபவாதம் ஏதும் வராமல் தடுக்க ப்ரார்த்திப்போம்.
இன்று ஏகாதசி ஸ்ரீ கிருஷ்ண தியானம் செய்ய ஓர் சந்தர்ப்பம். 🙏🙏🌼🌹
ரொம்ப அழகான வியாக்யானம் ! அந்தக் காலத்துக்கே் இட்டுச் செல்லும்.விளக்கம்!
கடாக்ஷ் சதகம் ஸ்லோகம் ஒர் இடைச் செருகல் !
காமாக்ஷியின் பார்வை என்னும் வசந்த காலத்துக் காந்தி புதிதான காவிய சொல் என்னும்.மாந்தோப்பில் அறிஞர்களான குயில்களால் கொண்டாடப்பட்டு,தேனின் மணத்தையும் பொறாமை கொள்ளச் செய்கிறது என வர்ணிக்கப் படுகிறது என்ற விளக்கம் அற்புதம்!
பெரியவா தெய்வத்தின் குரலில் சொன்ன ஸ்யமந்தகமனி விரிவுறைச் சொல்லி தங்கள் வழியில் அழகான உதாரணத்துடன் சொன்னது அற்புதம்!! தகுந்த சித்ரத்துடன் !!
So beautiful! Namaskarams
Arputham 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful rendition