Categories
Bala Kandam

விஸ்வாமித்ரர் வருகை


13. ராம லக்ஷ்மண பரத சத்ருகனர்கள் வசிஷ்டரிடம் சதுர்தச வேத வித்யைகளையும் கற்றனர். தசரதர், சபையில் அரசகுமரர்களின் திருமணத்தை குறித்து பேசிக் கொண்டு இருக்கும் போது விச்வாமித்ர முனிவர் வருகிறார்.

[விஸ்வாமித்ரர் வருகை. (audio file. Transcript given below]

வால்மீகி பகவான் ராம ஜனனத்தை பற்றி சொல்லும்பொழுது

சைத்ரே நாவமிகே திதெள ||

நக்ஷத்ரேSதிதிதைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்சஸு |

க்ரகேஷு கர்கடே லக்னே வாக்பதாவிந்துனா ஸஹ |

என்று, ஒரு ஒன்றரை ஸ்லோகதினுள் ராமருடைய ஜாதகம் முழுக்க சொல்லிவிடுகிறார். அதாவது, சித்திரை மாதம் நவமி திதி புனர்வசு நக்க்ஷத்ரம், ஐந்து க்ரஹங்கள் உச்சத்தில் இருக்க, வாக்பதியான குருபகவானும் சந்திரனும் கற்கடக லக்னத்தில் இருக்கிறார்கள் என்று கூறி இதனை வைத்தே ராமருடைய முழு ஜாதகமும் எழுதிவிடலாம். இந்த ஸ்லோகமானது சமஸ்க்ருத பாஷையின் கருத்துச்செறிவினை எடுத்துக்காட்டும் விதமாக பல விஷயங்களை உள்ளடக்கி ஒரு ஸ்லோகத்தில் சொல்லும்படியாக அமைந்துள்ளது.

இராமாயணம் முழுக்கவே இப்படிபட்ட ஸ்லோகங்கள்தான், வள வள என்று நீட்டி முழக்குவது எதுவுமே இல்லாமல் இவ்விதமாகவே இந்த கதையினை சொல்லிக்கொண்டு செல்கிறார் வால்மீகி.

இராம லக்ஷ்மண பரத சத்ருகுனர்கள் பிறந்து வளர்ந்து அப்பா அம்மாவுக்கு வெகு சந்தோஷம் அளிக்கிறார்கள். வசிஷ்டர் அவர்கள் அனைவருக்கும் எல்லா வேத வித்தைகளையும் சொல்லி குடுக்கிறார். மேலும் அவர்கள் ராஜகுமரர்களாய் இருப்பதனால், யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வில் மற்றும் வாள் வித்தை என்று எல்லா வித்தைகளும் சொல்லி தருகிறார்கள்.

இதனை எல்லாம் கற்றுக்கொண்டு குழந்தைகள் நால்வரும் வளர்ந்து வருகிறார்கள். முக்கியமாக பித்ரு பக்தியுடன், பித்து ஷுச்ருஷை செய்கிறார்கள். இராமரிடம் லக்ஷ்மணர் “பஹி பிராணா இவ”,வெளியில் உள்ள இன்னொரு உயிர் போல, அதாவது இராமனுக்கு இன்னொரு உயிர் போல லக்ஷ்மணர் விளங்கினார். இராமர் இல்லாமல் லக்ஷ்மணர் எந்த ஒரு பண்டத்தையும் உண்ண  மாட்டார், ருசியான பண்டமாக இருந்தாலும் சாப்பிடமாட்டார். லக்ஷ்மணர் இல்லாமல், இராமர் தூங்கமாட்டார். லக்ஷ்மணர் இல்லாமல் எப்படி இராமரால் உறங்கமுடியும், லக்ஷ்மணர் தானே ஆதிசேஷன், இராமர் ஸ்ரீ விஷ்ணு பகவான், ஆதி சேஷனில் தானே படுத்து விஷ்ணு உறங்குவார். இது போல இராமரிடம் லக்ஷ்மணர் தனது உயிரையே வைத்திருந்தார்.

இதே போல, பரதனிடம் சத்ருக்னன் உயிராக இருந்தார் , அவருக்கு இராமர் கூட வேண்டாம், பரதன் போதும், பரதன் என்பவர் பக்தர், அந்த பக்தருக்கு சேவை செய்கிறார் சத்ருகுக்னன். அடியார்க்கு அடியராய் இருக்கிறார் என்று சத்ருக்னன் கொண்டாடபெற்றார்.

இப்படிப்பட்ட லக்ஷ்மணனையும் சத்ருக்னனையும் பெற்றெடுத்து குடுத்த அந்த சுமித்ரா தேவி, கைங்கர்யம் செய்வதற்காகவே இரண்டு குழந்தைகளை பெற்ற பாக்கியசாலி, அவர் பெரிய ஞானியுமாவார், அவரை பற்றி பின் வரும் படலங்களில் மேலும் பார்க்கலாம்.

இந்த குழந்தைகள் வளர்ந்து ஆளாகி ஒரு பன்னிரண்டு பதிமூன்று ப்ராயத்தின் போது, ஒரு நாள் சபையில் தசரத மஹராஜா, இவர்கள் நால்வருக்கும் தகுந்த பெண்களை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டியதன் பொருட்டு பந்துக்கள், உபாத்யாயர்களிடம் விவரித்து கொண்டிருந்தார், அந்த சமயத்தில் வாசலில் விஸ்வாமித்ரா மஹரிஷி வருகிறார்.

மஹரிஷி விஸ்வமித்ரர் பெரிய தபஸ்வி, அவர் அரசராக இருந்து தவம் செய்து பிரம்மரிஷியானவர். அவர் வாயிற்காப்போனிடம் உள்ளே சென்று “குசிக குலத்தில் பிறந்த விஸ்வாமித்திரன் வந்திருக்கிறேன் என்று உன் அரசரிடம் சொல்” என்கிறார்.

இவருடைய தேஜஸ் கண்டு அவர்கள் மெய்சிலிர்த்து, உள்ளே ஓடி சென்று தசரத மஹராஜாவிடம் விஸ்வாமித்ரர் என்று ஒரு மஹரிஷி வந்திருக்கிறார் என்று கூறிய உடனே, தசரதரும், வசிஷ்டரும், மற்ற எல்லாரும், உடன் ஜல பாத்திரத்தினோடும், ஆசனத்ததோடும் ஓடோடி வந்து மகரிஷியை வரவேற்று, உட்காரவைத்து அவருக்கு முறையாக அர்க்யம், பாத்யம், ஆசமநீயம், எல்லாம் செய்வித்து , தகுந்த முறையில் பூஜை செய்து அவரை சபைக்கு அழைத்து வந்து உயர்ந்த ஆசனத்தில் அமரசெய்து, தசரத மஹாராஜா அவரை வாயார போற்றுகிறார்.

தசரத மஹாராஜா அவரை பார்த்து “ஆஹா என்ன பாக்கியம், குழந்தை இல்லாதவற்க்கு, குழந்தை பிறந்த மாதிரியும், மழை இல்லாத க்ஷேத்ரத்தில் மழை கொட்டின மாதிரியும், தரித்திரனுக்கு பணம் கிடைத்த மாதிரியும், எனக்கு தங்களின் தரிசனம் அவ்வளவு சந்தோஷம்  தருகிறது. புண்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று வந்தது போல மனம் கூதுகலிக்கிறது, அஹோ பாக்கியம், தாங்களாகவே வந்து எங்களுக்கு தரிசனம் அளித்தீர்கள், தாங்கள் பிரம்மரிஷி ஆவதற்கு செய்த தவ முயற்சி பற்றியெல்லாம் நான் அறிந்ததுண்டு. தங்களுக்கு என்ன வேணுமோ அதை கூறுங்கள், தங்களை போன்ற மகான்களை தரிசனம் செய்து அவர்களுக்கு கைங்கரியம் செய்வதற்காகவே நான் அரசனாக இருக்கிறேன், தாங்கள் என்ன ஆணை இட்டாலும் நான் அதனை செய்கிறேன் என்று வணங்கி கூறுகிறார்.

“இதி ஹ்ருதய சுகம் சுருதி சுகம் வாக்கியம்”    என்று கூறுகிறார். மனதுக்கும் , காதுக்கும் இனிமையான வார்த்தைகளை தசரத மஹாராஜா பேசினார் என்று வால்மீகி கூறுகிறார்.

சிலர் பேசினால் கேட்பதற்கு நன்றாக இருக்கும், அனால் பிறகு என்ன சொன்னார் என்று யோசித்து பார்த்தால், சில சமயம் வருத்தத்தை கூட குடுக்கும்,அப்படி இல்லாமல், மனசுக்கும் காதுக்கும் இனிமையா பேசுவது மிகவும் ‘ஆர்ஜவம்”.(straight forward) வாயில் ஒன்று, மனதில் ஒன்று, காரியத்தில் ஒன்று என்று இருக்ககூடாது, வாய், மனம் மற்றும் காரியத்தில் ஒன்றாக இருப்பதற்கு பெயர் “ஆர்ஜவம்”.

இது போன்று ஆர்ஜவமாக இருப்பவர் பேசினால், கேட்பதற்கும் சந்தோசம் தருவதாக் அமையும், பின் அதனை நினைத்து பார்த்தாலும் சந்தோசமாக இருக்கும்.

இது போல தசரத மஹாராஜா விஷ்வாமித்ரரை போற்றி, வார்த்தைகள் சொல்லி அவரை உபசரித்த  உடனே, விஸ்வாமித்ரர் சொல்கிறார் – நீ  நல்ல குலத்தில் பிறந்தவனாகவும், வஷிஸ்டர் போன்ற மஹான்களின் சிஷ்யனாக இருப்பதினாலும், உனது குலத்திற்கு பொருத்தமான வார்த்தைகளை பேசினாய். நான் ஒரு காரியமாகத்தான் வந்திருக்கிறேன் என்று கூறுகிறார்.

Series Navigation<< ஸ்ரீ ராம ஜனனம்விஸ்வமித்ரர் தசரதரிடம் ராமனை தன்னோடு அனுப்ப வேண்டுதல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.